SST–EPI 27
SST–EPI 27
அத்தியாயம் 27
புலாவ் டாயாங் புந்திங்(Pulau Dayang Bunting) கெடா மாநிலத்தில் இருக்கும் ஒரு தீவாகும். புந்திங் என்றால் கர்ப்பம் என பொருள்படும். இந்த தீவின் அமைப்புக் கூட ஒரு கர்ப்பிணி பெண் படுத்திருப்பது போலவே இருக்கும். இந்த தீவின் நீரில் முழுகி அந்த தண்ணீரைப் பருகினால் கர்ப்பம் அடையாத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் எனும் ஐதீகம் உள்ளது. இது இன்று வரை நிரூபிக்கப் படாவிட்டாலும் பலர் இதை இன்னும் நம்புகிறார்கள்.
ஒருவரை ஒருவர் அணைத்தப்படி அப்படியே படுத்திருந்தனர் மிருவும் குருவும். விடிந்த உடனேயே முதல் வேலையாக டாக்டரை சந்திக்க வேண்டும் என போய் நின்றான் குரு. அவர் வரும் வரை காத்திருந்து, மிருவின் இடுப்பு மற்றும் முதுகு வலிக்கு என்ன செய்வது என ஆலோசனைக் கேட்டுக் கொண்டான். அவர் சொன்ன உடற்பயிற்சி, பேக் சப்போர்ட் கொடுக்கும் சரியான உள்ளாடைகள், ரொம்பவும் வலி இருந்தால் எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டான் குரு.
பின்பு நிதி நிர்வாக அறைக்கு சென்று டிஸ்சார்ஜ் பிராசிடரைப் பற்றி பேசினார்கள். கட்டிய பணம் கட்டியதுதான், திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என நிர்வாகம் சொல்லிவிட, வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனாள் மிரு. அவளைக் கோழி அமுக்குவது போல அமுக்கி தன் கைவளைவிலேயே அழைத்து வந்தான் குரு.
“அஞ்சாயிரம் கட்டியிருக்கேன் பாஸ்! அப்படியே விட்டுட்டு வர சொல்லுறீங்க?” இவனிடமும் ஆத்திரப்பட்டாள்.
“மொத்த அஞ்சு லட்சத்தையும் நீ இங்கயே கட்டி இருந்தா கூட, நான் அவங்க கிட்ட திருப்பிக் கேட்டுருக்கப் போறது இல்ல மிரு. நீ எடுத்த முடிவுல நான் அந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். உன் மேல அவங்க கத்தி வைக்காம விட்டதுலயே என் மொத்த சொத்தையும் எழுதி வைப்பேன் இந்த ஹாஸ்பிட்டலுக்கு”
“போதும் பாஸ்! ஏற்கனவே நம்ம அஞ்சாயிரத்த ஆட்டைய போட்டுட்டானுங்க! இதுல மொத்த சொத்துமா? அப்புறம் நீங்க பூவாக்கு என்ன பண்ணுவீங்க?”
“நீ கிரேப் ஓட்டி எனக்கு ரப்பாத்தி போட மாட்டியா மிரு?”
“மிருவ நம்பி வந்துட்டா ரப்பாத்தி என்ன, ரசை(ரசம்+தோசை), ரட்லி(ரசம்+இட்லி), ரப்மா(ரசம்+உப்புமா) இப்படி விதம் விதமா போடுவா”
“அதுல ரமிருவையும் சேர்த்துக்கோ மிரும்மா”
பேசியபடியே காரின் அருகே வந்திருந்தார்கள்.
“ரமிருவா? யூ மீன் ரசம் ப்ளஸ் மிரு?”
“ஆமா! உன் உள்ளங்கையில ரசம் ஊத்தி அப்படியே குடிச்சிக்குவேன். சைட் டிஸ்கு அப்படியே உன் விரல கட்டிச்சுக்குவேன்! பசி கப்புன்னு அடங்கிரும். யூ க்நோ மிரு, நாக்குக்கு அப்புறம் விரல் நுனிதான் நம்ம உடம்புல சென்சிடிவ் ஆன பாகமாம்! சோ எனக்கு தினமும் ரமிரு மட்டும் போதும். வயிறு மனசு எல்லாம் நிறைஞ்சிரும்” என கண்ணடித்தான்.
“இதுல டபூள் மீனிங் எதாச்சும் இருக்கா பாஸ்?”
“இவ்ளோ நாளா என் கூட பழகனதுல ரீடிங் பிட்வீன் லைன்ல எக்ஸ்பேர்ட் ஆகிருப்பன்னு நினைச்சேன்! அப்படி இல்லையா மிரு?”
“அதாவது விரல கடிச்சா ஷாக் அடிக்கும்! ஷாக் அடிச்சா தீ பத்திக்கும்! உடனே நீங்க ஷாக் அடிக்குது சோனான்னு பாட, நான் ஐயோ ஐயோயோனு பதில் போட, ஒரே ஜில்பான்ஸா இருக்கும்! அப்படித்தானே பாஸ்?”
“கரேக்டா கண்டுப்புடிச்சுட்டியே கள்ளி! இத்தனை நாளா நான் குடுத்த ஹிண்ட்லாம் புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிச்சிருக்க! வெல் ப்ளேய்ட் மிரு, வெல் ப்ளேய்ட்! நானும் என் மிருது பச்சைப் பாப்பா, அவள நீல பாப்பாவா மாத்த என்னலாம் கஸ்டப்படனுமோன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா?” என சிரித்தான் குரு.
“இப்ப நீங்க பேசறதுக்குப் பேருதான் வண்ண வண்ணமா பேசறதா பாஸ்? இதுக்கும் மேல இப்படி பேசுனா வாய் சிவப்பு கலர்ல வெத்தலைப் பாக்குப் போட்டுக்கும். ஓகேவா?” என மிரட்டியவளை புன்னகையுடன் தோளோடு அணைத்துக் கொண்டான் குரு.
“கீ குடுங்க, நான் கார் ஓட்டறேன்” என்றாள் மிரு.
“பரவாயில்ல மிரு! ஐ கென் மேனேஜ். நீ பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியற! பேசாம சாஞ்சு படுத்துக்க!” என்றவன் அவளை வசதியாக அமர்த்தி காரை ஓட்ட ஆரம்பித்தான்.
பாதி வழியில் தொடையில் ஏற்பட்ட குறுகுறுப்பில் மிருவைத் திரும்பிப் பார்த்தான் குரு. அவன் தொடையை சுரண்டிக் கொண்டிருந்தாள் அவள்.
“என்னம்மா?”
“இப்போ பேசலாமா பாஸ்?”
ஏற்கனவே இதே மாதிரி சுரண்டலும் அதற்கு பிறகு வாக்குவாதமும் நடந்ததை நினைத்து இருவருக்குமே சிரிப்பு வந்தது.
“பசிக்கிது பாஸ்! கொஞ்ச நாளாவே கவலைல சரியா சாப்பிடல. சர்ஜரி போறதுக்கு நேத்து நைட்ல இருந்து புவாசா (உண்ணாவிரதம்) வேற போட்டுட்டாங்க” என பாவமாக சொன்னாள் மிரு.
“டெலிப்ரான்ஸ் போகலாம்டா மிரு! காலை உணவு அங்க ருசியாவும் ஹெல்த்தியாவும் இருக்கும்”
“ஹ்கும்! எனக்கு வேணா! காலாங்காத்தாலேயே இலைதலைலாம் ப்ரேப்கஸ்டா சாப்பிட நான் என்ன ஆடா மாடா? மிரு பாஸ், தி கிரேட் மிரு!”
“அங்க ப்ரேக்பஸ்ட் சமர்த்தா சாப்பிட்டா, கடைசில பேஸ்ட்ரிஸ் வாங்கி தரேன் மிரு! ரொம்ப நல்லா இருக்கும்” என ஆசைக் காட்டினான் குரு.
“நான் தானே ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு பசியோட வரேன்! சோ இன்னிக்கு என் சாய்ஸ் தான். நாளைக்கு உங்க சாய்ஸ்”
“சாப்பாட்டு விஷயத்துல இந்த டீல் பக்காவா இருக்கு மிரு! ஆனா மத்த விஷயத்துல எல்லாம் ஒரு நாளைக்கு என் சாய்ஸ், மறு நாளைக்கு மை சாய்ஸ்னு வச்சிக்கலாம். சிறப்பா போகும் நம்ம வாழ்க்கை”
மிரு முறைக்கவும் அழகாக புன்னகைத்தான் குரு.
“சரி சொல்லு மிரு, என்ன வேணும் சாப்பிட?” என விட்டுக் கொடுத்தான் அவன்.
“முட்டை ரொட்டி(முட்டை பரோட்டா) வேணும்”
“ஆவ்வ்வ்வ் மிரு! எண்ணெய்மா அது! 414 கலோரி இருக்கு அதுல!”
“இருந்துட்டுப் போகுது பாஸ்”
“சரி, சாப்பிடு. நைட் அந்த கலோரிய குறைக்க நாலரை ஹவர் கிஸ் குடுக்கறேன்! சரியாப் போயிரும்”
“நாலரை ஹவரா? அப்படிலாம் யாராலயும் குடுக்க முடியாது! போங்க பாஸ்!”
“ஹேய்! கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ல 58 ஹவர் கிஸ் அடிச்சிருக்காங்க தாய்லண்ட் கப்பிள்! நம்மாளால அட் லீஸ்ட் 4 ஹவர் குடுத்துக்க முடியாதா மிரு?”
“முட்டை ரொட்டி கான்சல்! சாதா ரொட்டியே சாப்பிடறேன் நான்!”
சிரித்தப்படியே அவள் முன்பு கேட்ட முட்டை ரொட்டியையே வாங்கிக் கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் குரு.
வீட்டிற்கு வந்தவளை கணே பிடிபிடியென பிடித்துக் கொண்டான். அக்காவும் தம்பியும் சண்டைப் போட்டுக் கொள்வதை இனி இதுவும் தன் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்பது போல பார்த்த குரு, சிரிப்புடன் குளிக்கப் போய் விட்டான்.
அவன் திரும்பி வந்தப் போது, மிரு அவள் அறையில் தூங்கி இருந்தாள்.
“கணே, இன்னிக்கு நான் ஈப்போ போக வேண்டியது! அக்காவுக்காக டிக்கேட் கான்சேல் பண்ணிட்டேன்! நாளைக்குக் கண்டிப்பா போகனும். நீ இங்க இருந்து அக்காவ பத்திரமா பார்த்துக்கறியா?” என அவனைப் பெரிய மனிதனாக்கிப் பொறுப்பை ஒப்படைத்தான்.
ஆனந்தியை சந்திக்கப் போகும் போது, மிருவை அழைத்துப் போவது உசிதமாகப் படவில்லை அவனுக்கு. அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அம்மா என்பதால் எதையும் இவன் தாங்கிக் கொள்வான். தனக்கு மனைவியாய் ஆவதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள் என மிருவிடம் கேட்பதில் நியாயமே இல்லை எனும் முடிவில் இருந்தான் குரு. மிரு இருக்கும் மனநிலையில் அவளைத் தனித்து விடவும் பயம் அவனுக்கு.
“நான் பத்திரமா பாத்துப்பேன் மாமா! நீங்க போய்ட்டு வாங்க! அக்கா கெடால இருக்கான்னு அம்மா நம்பிட்டு இருக்காங்க. இப்போத்தான் அவங்களுக்குப் போன் பேசிட்டுப் படுத்தா அக்கா! நாங்க எதையும் சொல்லி அவங்கள கலவரப் படுத்தல. இப்போ நானும் அம்மா பக்கத்துல இல்லைனா அவங்க லோன்லியா பீல் பண்ணுவாங்க! இன்னைக்கு நைட் நான் அம்மா கூட இருக்கேன். காலைல வந்துருவேன். அக்கா எழுந்ததும் அவ கிட்ட சொல்லிருங்க”
“ஓகே கணே! இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீ, நான், அக்கா, ரதிம்மா எல்லாம் ஒரே வீட்டுல இருக்கலாம்!” என சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தான் குரு.
குரு ஹாலில் அமர்ந்து வேலைப் பார்க்க மிரு தூங்கினாள், தூங்கினாள், தூங்கிக் கொண்டே இருந்தாள். முதல் முறை சாப்பிட அழைக்க, இன்னும் கொஞ்ச நேரம் என்றவள் எழவேயில்லை. மணி மூன்றாக மறுபடியும் எழுப்ப, அவன் மேலேயே சரிந்துத் தூங்கினாள் அவள். இத்தனை நாளாய் இருந்த கவலை, பயம், பிரிவு எதுவும் இல்லையென ஆக மனம் லேசாகி இருக்க அவளால் எழவே முடியவில்லை. நிம்மதியாக தூங்கும் அவளையே மனதில் வலியுடன் பார்த்திருந்தான் குரு. இனிமேலாவாது எந்த துன்பமும் அவளை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சத்யப்ரமாணமே மனதில் எடுத்துக் கொண்டான். தூக்க மயக்கத்தில் திட உணவு எதுவும் அவளுக்கு இறங்காது என முடிவெடுத்தவன், கொஞ்சமாக பம்ப்கின் சூப் செய்து, அவளை தன் தோளில் சாய்த்தப்படியே புகட்டி விட்டான்.
தன் தாயையும் தம்பியையும் இவள் எப்படி கவனித்துப் பார்த்துக் கொள்வாள் என கணே வாய் வழியாக அறிந்திருந்தவன், தன்னிடம் குழந்தையாய் மாறி நிற்கும் மிருவை தாயாய் அரவணைத்துக் கொண்டான். வாய் துடைத்து மறுபடியும் படுக்க வைத்தவன், அவள் அருகிலேயே அமர்ந்து சற்று நேரம் பார்த்திருந்தான்.
பின் எழுந்து தனது விட்ட ஆபிஸ் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். இரவில் ஹால் சோபாவிலேயே படுத்துக் கொண்டான் குரு. மிரு எழுந்து வந்தால் அவளுக்குத் தேவையானதை செய்து கொடுக்க வெளியே படுப்பது தான் வசதி.
நடுநிசியில் சோபாவில் தன்னை இடித்துக் கொண்டு படுத்த உருவத்தை தூக்கத்திலும் உணர்ந்து கைப்போட்டு அணைத்துக் கொண்டான் குரு.
“எழுந்துட்டியா ஸ்லீப்பிங் பியூட்டி?”
“ஹ்ம்ம்! ஸ்லீப்பீங் பியூட்டிக்கு கிஸ் குடுத்து முன்னயே எழுப்பிருக்கலாம் பாஸ்! பாருங்க எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்”
“ரெண்டு தடவை குடுத்தனே! அப்பவும் எழுந்துக்கல நீ!” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தவனின் குரல் கரகரப்பாக இருந்தது.
“நெஜமாவா? கிஸ் குடுத்தும் நான் எழுந்துக்கலியா? நீங்க ப்ரின்ஸ் பிலிப் மாதிரி குடுக்காம, பிப்டி இயர்ஸ் கிழவன் மாதிரி குடுத்துருப்பீங்க! அதான் எழாம தூங்கிருப்பேன்” என குருவைக் கலாய்த்தாள் மிரு.
“ஓஹோ! தேட் டே அங்கிள் கேட்டகரின்னு சொன்ன, இன்னிக்கு பிப்டி இயர்ஸ் கிழவன்னு சொல்லுற! அங்கிள் ஆங்கிரியான என்னாகும் தெரியுமா?” என சொல்லியவன் அவளை மூச்சுமுட்ட முத்தமிட்டான்.
“போதும் விடுங்க பாஸ்! நீங்க அங்கிள் இல்ல யங்கிள்னு(யங்) ஒத்துக்கறேன்! ப்ளீஸ், ப்ளீஸ் விடுங்க” என தன்னை விடுவித்துக் கொண்டவள், அவன் நெஞ்சிலேயேப் படுத்துக் கொண்டாள். பின் அமைதியான குரலில்,
“உங்கம்மா நம்ம காதல ஒத்துக்குவாங்களா பாஸ்?” என கேட்டாள். அந்தக் குரலில் இருந்த வலி குருவை அசைத்துப் பார்த்தது. அவளை நகர்த்தி சோபாவில் அமர வைத்தவன்,
“இரு மிருது வரேன்” என தனதறைக்குப் போனான்.
திரும்பி வரும் போது அவன் கையில் சின்ன வெல்வெட் பெட்டி இருந்தது. சோபாவில் அமர்ந்தவன், மிருவை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
“பிரிச்சுப் பாரு மிரு” என பெட்டியை அவளிடம் கொடுத்தான்.
பிரித்துப் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன. அதில் ப்ளாட்டினத்தில் இரு மோதிரங்கள் குரு லவ் மிரு என எழுத்துப் பொரிக்கப்பட்டு இருந்தன. ஒரு மோதிரத்தில் பாதி ஹார்ட்டும் இன்னொரு மோதிரத்தில் மறுபாதி ஹார்ட்டும் இருந்தன.
“நீயும் என்னை லவ் பண்ணறன்னு தெரிஞ்சப்ப ஆர்டர் குடுத்து செஞ்சேன் மிரு.”
“நான் லவ் பண்ணறேன்னு எப்படி தெரியும்?”
“இதுக்கு என்ன மைப்போட்டா பார்ப்பாங்க? ஆரம்பத்துல நான் எது சொன்னாலும் எகிறுவ! போக போக அப்படியே குறைஞ்சிருச்சு. நான் எதாச்சும் வம்பிழுத்தா சிரிச்சு, ரசிக்க ஆரம்பிசிட்ட! நான் பார்க்காதப்போ அப்படியே என்னையும் என் பல்லையும் சைட்டடிச்ச! பிரச்சனைன்னு வந்தப்போ என்னைத்தானே கூப்பிட்ட! கேம்ப் அப்போ கைப்பிடிச்சப்பவும் சரி, கிஸ் பண்ணப்பவும் சரி உன் கிட்ட நடுக்கம் இருந்துச்சே தவிர மறுப்பு வரல! அப்பவே எனக்கு உன் மனசு நல்லா புரிஞ்சுருச்சு. ஆனா கல்யாணத்துக்கு அது மட்டும் போதாதே! வாய் வார்த்தையா உன் சம்மதம் வேணுமே! அதுக்கு நான் வெய்ட் பண்ணறதுக்குள்ள அந்த அருள் வந்து கெடுத்துட்டான்”
அருள் பெயரைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது மிருவுக்கு.
“நல்லா சிரி! அவன நீதான் வர வச்சன்னு எனக்குத் தெரியும்”
“கண்டுப்பிடிச்சிருவீங்கன்னு தெரியும்! ஆனா இவ்ளோ லேட்டா கண்டுப்பிடிப்பீங்கன்னு நான் நெனைச்சுப் பார்க்கல பாஸ்”
“உடம்பு முழுக்க கொழுப்புடி உனக்கு! அப்போ இருந்த ஸ்ட்ரேஸ்ல கண்டுப்பிடிக்கல. ஆனா அம்மா வந்த விஷயம் தெரிஞ்சப்போ, எல்லாத்தையும் கனேக்ட் பண்ணி யோசிச்சப்போ புரிஞ்சுகிட்டேன். நீதான் கீழ செக்குரிட்டி கிட்ட சொல்லி, அவன் மேல வர பர்மிஷன் குடுத்துருக்கன்னு. இல்லைனா அக்சேஸ் கார்ட் இல்லாம லிப்ட்ல மேல நம்ம அபார்ட்மெண்டுக்கு வர முடியாதே”
“ஆமா, அந்த நேபாள் செக்குரிட்டி அண்ணாட்ட எனக்கு அருள்னு கெஸ்ட் வருவாங்கன்னு சொல்லி மேல அனுப்பி விட சொன்னேன்”
“அம்மா சொன்னாங்கன்னு பிரிய முடிவெடுத்த, ஆனா வேற ஆளே கிடைக்கலியா உனக்கு! பாவி! உன்னை அவன் அறைஞ்சதும் நான் எப்படி பதறிட்டேன் தெரியுமா?”
“ஆக்சுவலி எங்கம்மாட்ட பேசறப்பலாம் என் கிட்டயும் பேசுவாங்க அருள்! அவருக்கு என் மேல ஒரு இது போல. ஆனா எனக்குத்தான் உங்க மேல ஒரு இதுவாச்சே! நம்ம ரெண்டு பேரோட அந்தஸ்த்து வேற்றுமையப் பார்த்து நான் என்னை அடக்கி வச்சிருந்தேன். அம்மாக்கு உடம்பு முடியலன்னு பார்க்க வந்தவர் கிட்ட உண்மைய சொல்லி ஹெல்ப் கேட்டேன்! எனக்கு ஹேல்ப் பண்ண ஒத்துக்கிட்டார். உங்கள பிரிஞ்சி கொஞ்ச நாளுல மனச தேத்திக்குவேன். அதுக்குப் பிறகு அவருக்கு சான்ஸ் இருக்குன்னு நினைப்பு அவருக்கு. அதான் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம்னு அவர் வர நேரம் பார்த்து உங்கள கிஸ் பண்ணேன்! என்னை அந்த மாதிரி கோலத்துல பார்த்தா அவர் விலகிடுவாருன்னு திட்டம் போட்டேன். நீங்க வேற கிஸ் பண்ணறேன்னு என் முடியெல்லாம் கலைச்சு விட்டுடீங்க! அந்த கோபத்துல தான் ஓவரா பேசி உங்கள அடிச்சிட்டாரு அருள். தன் பொருள் கைவிட்டுப் போச்சுன்னு கடுப்பு அவருக்கு! சாரி பாஸ்”
“கெடால வேலை வாங்கிக் குடுத்ததும் அந்தப் பெரிய மனுஷன் தானா?”
“ஆமா பாஸ்”
“இந்த ஆபரேஷன் பத்தி தெரியுமா?”
“சீச்சீ இல்ல பாஸ்! உங்களுக்கே சொல்லல! அவருக்குப் போய் சொல்லுவனா!” என யார் தனக்கு முக்கியம் என அந்த வார்த்தைகளில் நிரூபித்தாள் மிரு.
முகம் மலர்ந்துப் போனது குருவுக்கு.
“சரி, மோதிரம் பிடிச்சிருக்கா?”
“ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கு பாஸ்!” மெல்லிய நீர்ப்படலம் மிருவின் கண்களில்.
“நீ என் கிட்ட காதல ஒத்துக்கறப்போ போட்டு விடனும் நினைச்சேன்! ஆனா அது மட்டும் இன்ன வரை நடக்கவே இல்லை” பெருமூச்சு விட்டான் குரு.
“காதல் இல்லாமத்தான் இப்படி மடியில உட்கார்ந்து இருக்கனா பாஸ்?”
“உன் காதல என் கண் தெரிஞ்சுகிச்சு, என் வாய் அறிஞ்சுகிச்சு, என் மூக்கு முகர்ந்துகிச்சு, கை உணர்ந்துகிச்சு! காது மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு மிரும்மா? அதுக்கு முக்தி குடுக்க மாட்டியா?”
மெல்லிய புன்னகை மலர்ந்தது அவள் முகத்தில். அவன் காதருகே நெருங்கியவள்,
“மஐ மலவ் மயூ மகு மரு” என தவிப்புடன் சொன்னாள்.
அவள் சொல்லி முடித்த நொடி குருவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மிரு.
“மஐ மலவ் மயூ மமி மரு” என சந்தோஷமாக ஆர்ப்பரித்தவன்,
“லெட்ஸ் கெட் ஹிட்ச்ட்(hitched)”(திருமணம் செய்து கொள்ளலாம்) என அவள் கையைப் பற்றினான்.
அவள் கலக்கத்துடன் பார்க்க,
“மிரும்மா! நாளைக்கு என் அம்மா எந்த மாதிரியான முடிவும் எடுக்கலாம். என்னை மகனே இல்லைன்னு சொன்னாலும் சொல்லலாம்! இல்ல நம்ம கல்யாணத்த எந்த மறுப்பும் இல்லாம கூட ஒத்துக்கலாம்! அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் மிரு. அம்மா நோ சொல்லி நான் உனக்கு மோதிரம் போட்டா, நம்மால தானே பாஸ் அம்மாவ எதிர்த்துகிட்டாங்கன்னு உனக்கு ஒரு உறுத்தல் இருக்கும். அதே யெஸ் சொல்லி நான் மோதிரம் போட்டா, அவங்க சொல்லித்தான் நான் உன்ன ஏத்துக்கிட்டதா தோணும். அதனால எந்த முடிவும் தெரியாத இன்னைக்கு, நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணத்த நிச்சயம் செஞ்சுக்கலாம். அதுக்குப் பிறகு அம்மாவோட முடிவைப் பொறுத்து எப்படி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம். என்ன நடந்தாலும் நான் உனக்கு ஹஸ்பண்ட் நீ எனக்கு வைப். காட் இட்?”
ஆமென தலையாட்டினாள் மிரு.
“இந்த பியூட்டிபுல் மோமெண்ட்கு நான் ஒரு பாட்டு செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் மிரு”
“பீட்டர் பாட்டா?”
“இல்லடி, தமிழ் பாட்டுத்தான். இப்போலாம் நெறைய தமிழ் சாங் கேக்கறேன். அதுதான் யூ டியூப்ல ஒரு சாங் செலெக்ட் பண்ணா அதுப்பாட்டுக்கு ஓடுமே! அதுல உனக்கு ஏத்த பாட்டு ஒன்னு கேட்டேன். தமிழ்ல நான் பாடனா கேவலமா இருக்கும். சோ போட்டு விடறேன் அந்த சாங்” என்றவன் டீவியை ஆன் செய்து பாடலை ஒலிக்கவிட்டான்.
“கூந்தல் முடிகள் நெற்றிப்பரப்பில்
கோலம் போடுதே அதுவா
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ உன்னிடம் இருக்கிறது…”
என பாடலுடன் சேர்ந்து பாடியவனின் ஆங்கிலேய தமிழில் சொக்கிப் போனாள் மிரு.
பாடல் முடிவில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.
“வெல்கம் டூ மை லைப் மிசஸ் குரு”
“வெல்கம் டூ மை லைப் மிஸ்டர் மிரு”
என இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். நாளை வருவதை நாளைப் பார்ப்போம், இன்று இந்த நிமிடம் தங்களுக்கானது என உணர்ந்து விடிய விடிய(நோ, நோ , நோ தப்பா நினைக்கக் கூடாது) முத்தமிட்டு முத்தமிட்டுப் பேசித் தீர்த்தார்கள்.
நாளைய தினம் ஆனந்தி ஆனந்தம் தருவாரா?
(சிக்கிக் கொண்டார்கள்)