PunnagaiMannan-10

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 10

அர்ஜூன் காலையில் கண்விழித்த போது அம்மாவும் மகளும் கன்னத்தில் கை வைத்தபடி இவனருகில் இவனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அர்ஜூன் திடுக்கிட்டுப் போனான்.

“ஹேய்! குட்மார்னிங். சின்னக்குட்டி என்ன நைட் அப்பா வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டீங்க?” மகளை அள்ளிக்கொண்டான் அர்ஜூன்.

குழந்தையும் சிரித்துக்கொண்டு அப்பாவுக்கு முத்தம் வைத்தது. மதுராவின் முகம் கொஞ்சம் கடுகடுத்ததை அர்ஜூன் பாராமல் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

“பட்டு… நீங்க மட்டும் தான் அப்பாக்குக் கிஸ் குடுத்தீங்க. அம்மா குடுக்கலை.” சொல்லிவிட்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். குழந்தையும் நம்பிக்கொண்டது.

“அப்பா பாவம் செர்ரி. ஒரேயொரு கிஸ் குடுக்கலாமில்லை.” சின்னவள் மதுராவைச் செர்ரி என்று அழைத்தபோது அர்ஜூனுக்கு அத்தனைப் பரவசமாக இருந்தது. மகளுக்குத் தெரியாமல் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“நீங்க நைட் தூங்கினதுக்கு அப்புறம் அப்பா நிறைய கிஸ் எங்கிட்ட இருந்து வாங்கினாங்க செல்லம்.” இது மதுரா.

“ஏய்! என்னடி பேச்சு இது குழந்தைக்கிட்ட.” அர்ஜூன் பதட்டத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டான்.

“ஆ…‌ இந்தப் பயம் இருக்கணும். ஹ… யாருக்கிட்ட…‌ மதுராக்கிட்டேவா?” அவள் மிரட்டியபடி நகரவும்,

“ரவுடி…‌ கடைஞ்செடுத்த ரவுடி!” என்றான் அர்ஜூன்.

“காஃபி கொண்டு வர்றேன். சீக்கிரம் ப்ரஷ் பண்ணுங்க.” மீண்டும் மிரட்டி விட்டுப் போனாள் மதுரா. ஆனால் அர்ஜூன் அதைக் கண்டு கொள்ளவில்லை. மகளோடு ஐக்கியமாகிவிட்டான்.

அவர்கள் இருவருக்கும் பேச ஆயிரம் கதைகள் இருந்தது. குழந்தையின் மழலையை ரசித்தபடி அமர்ந்திருந்தான் அர்ஜூன். கையில் காஃபியோடு வந்த மதுரா மீண்டும் சத்தம் போட்டாள்.

“இன்னும் பேசி முடிக்கலையா நீங்க? குட்டி…‌ அப்பாவை பாத்ரூம் போக விடாம இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பீங்களா?” இப்போது குழந்தை அம்மாவைக் கெஞ்சும் பார்வை பார்த்தது.

அர்ஜூன் அந்தச் சூழலை வெகுவாக ரசித்தான். காலைப்பொழுது… கையில் காஃபியோடு மிரட்டும் மனைவி… ஓயாமல் கதை பேசியபடிப் பக்கத்தில் குழந்தை. அம்மாவும் அப்பாவும் இதைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப் படுவார்கள். இதையெல்லாம் நான் அனுபவிக்கவில்லை என்பதுதானே அவர்கள் ஏக்கமும்.

“அர்ஜூன்! என்ன ஆச்சு?” அர்ஜூனின் திடீர் மௌனம் மதுராவைக் கலவரப்படுத்தியது.

“ம்ஹூம்… ஒன்னுமில்லை.” நகரப்போனவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் மதுரா. அவன் வசியப் புன்னகையை அவள் மீது தெளித்தவன் அந்தக் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.

“மதுரா! ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க.” உள்ளிருந்த படியே குரல் கொடுத்தான்.

“எங்க போறோம் அர்ஜூன்?”

“கோயிலுக்குப் போறோம். நீ புடவை கட்டு.”

“புடவையா?” மதுராவிற்கு ‘ஐயையோ’ என்றிருந்தது. புடவை கட்டினால் அத்தனை வசதியாக உணரமாட்டாள் பெண். அது அவனுக்கும் தெரியும்.

“அர்ஜூன்…”

“சொன்ன பேச்சைக் கேளு மதுரா.” அவன் அத்தோடு முடித்துக் கொண்டான்.

கொஞ்ச நேரத்திலெல்லாம் அவர்களின் சின்னக் குடும்பம் கோவிலுக்குப் போக ரெடியாகி நின்றிருந்தது. அர்ஜூனும் வேஷ்டி சட்டையில் இருந்தான். மதுராவின் பார்வை அவனையே அடிக்கடித் தொட்டு மீண்டது. மகள் சற்று அந்தப் புறம் நகரவும் மனைவியைத் தன்னருகே இழுத்துக்கொண்டான்.

“என்ன… சைட் அடிக்கிறயா?”

“ம்… ஆமா.” தயக்கமே இல்லாமல் ஒத்துக்கொண்டது பெண்.

“புதுசாத்தான் எனக்கு இப்போ நீ தெரியுற அர்ஜூன்.‌ டெல்லியில நான் பார்த்த அர்ஜூன் இல்லை இது.” அவள் கண்கள் அவனை ஆசையாக மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டது.

“அப்போ யாராம்?”

“இப்போ நீ மாறிட்டே. ஏன் அர்ஜூன்? உனக்கு நான் பொருத்தமா இருக்கேனா?” புடவையில் எழிலே உருவாக நின்று கொண்டு அவள் கேட்க அவன் கண்களில் மயக்கம் தெரிந்தது.

“நான் முன்ன மாதிரி இல்லையே அர்ஜூன். ஆறு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. நான் அழகா இருக்கேனா?” அவள் கேள்வியில் அவன் சிரித்தான்.

“சிரிக்காத அர்ஜூன். நான் அழகா இருக்கேனான்னு சொல்லு.”

“நீ எத்தனை அழகா இருக்கேன்னு நேத்து ராத்திரி நான் சரியாச் சொல்லலை போல இருக்கு.” அவன் கண்ணடித்துச் சிரிக்கவும் முறைத்தபடிப் போனாள் மதுரா.

அந்தச் சின்ன கிராமத்தைக் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தார்கள் மூவரும். மகளைத் தூக்கிக் கொண்டு மனைவியின் தோள் உரச நடப்பது அத்தனை சுகமாக இருந்தது அர்ஜூனுக்கு.

அன்று மதியம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அவர்கள் பயணம் சென்னையை நோக்கி ஆரம்பித்தது. மதுரா அர்ஜூனின் கையைப் பற்றிக்கொண்டாள்.

“அர்ஜூன்… எனக்கு மனசுல… கொஞ்சம் பயமா இருக்குடா.”

“ஏன் செர்ரி?”

“சஞ்சு கெட்டவன் கிடையாது. ஆனா மாமா…” அவள் இழுக்கவும் ஃபோனை எடுத்து அவளிடம் நீட்டினான் அர்ஜூன்.

“இதைக் கேளு.” அன்று அவனும் சஞ்சீவும் ஹோட்டலில் பேசியது அத்தனையும் பதிவாக்கி இருந்தான் அர்ஜூன். அவனுக்குத் தெரியும். மதுராவிற்கு சஞ்சீவ் மேல் எப்போதுமே சந்தேகம் வராது என்று. அதை அவளுக்கு நிரூபிக்க ஆதாரம் தேவையாக இருந்தது. அதனாலேயே அதைப் பதிவு பண்ணி இருந்தான். வேறு காரணங்களுக்கும் அது பிரயோஜனப்பட்டது.

‘குடும்பம் நடத்தாதது தான் உன்னோட பிரச்சனைன்னா அதையும் நான் பண்ணுறேன்.’ சஞ்சீவின் வார்த்தைகளில் மதுராவின் முகம் கசங்கியது.

“இங்கப்பாரு செர்ரி. சஞ்சீவ் கெட்டவன்னு இப்பவும் நான் சொல்லலை. ஆனா அவனுக்கு உம்மேல ஆசை இருக்கு. லவ் இருக்கு. அதை நீ புரிஞ்சுக்கணும். எப்பவும் சுதாரிப்பா இருந்துக்கோ. உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட்டும் இப்போ எங்கிட்டத்தான் இருக்கு. உங்கம்மா கொண்டு வந்து குடுத்தாங்க. அதனால வெளிநாட்டுக்கு எங்கேயும் போகமுடியாது. ஆனா நாட்டுக்குள்ள எங்கேயாவது மறைச்சு வெக்க நிச்சயம் ட்ர்ரை பண்ணுவான். கவனமா இருந்துக்கோ.”

“அர்ஜூன்!” பயந்து போய் அவனைக் கட்டிக்கொண்டாள் பெண்.

“என்ன இது அர்ஜூன்? ஏதோ ஜேம்ஸ் பாண்ட் மூவி பார்க்குற மாதிரி இருக்கு.” அவள் பேச்சில் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“அடியேய்! இப்படிப் பேசிப் பேசித்தான்டி உங்கூடத் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்த வெச்சே.”

“ஏன்? இப்போ அதுல ஐயாவுக்கு என்ன குறைஞ்சு போச்சாம்?”

“திடீர்னு ஆறு வயசுக் குழந்தையோட போய் நின்னா என்னை சைட் அடிக்கிற ஃபிகர் எல்லாம் திரும்பிப் பார்க்குமா மதுரா?”

“ஓஹோ! ஐயாவுக்கு அந்த ஐடியா வேற இருக்கோ? உங்க மனசுல என்ன சார் நீங்க நினைச்…” மேலே அவளைப் பேசவிடாமல் அடாவடியாக இழுத்து, பேசிய அந்த இதழ்களை மூடி இருந்தான் அர்ஜூன். மதுராவை எத்தனை தூரம் அவன் உள்ளும் புறமும் தேடியிருக்கின்றன என்று சிறுகச் சிறுக அவளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். சண்டை ஒன்றிற்குத் தயாரானவள் அவனிடமே சரணடைந்திருந்தாள்.

“செர்ரி…” குழந்தையின் அழைப்பில் சட்டென்று இருவரும் விலகிக் கொண்டார்கள். அப்போதும் அர்ஜூன் அவளை முற்றாக விலக விடவில்லை.

“செர்ரி… கோர்ட்ல எல்லாம் முடிவாகிறதுக்குக் கொஞ்ச நாள் எடுக்கும். என்னால முடிஞ்ச வரை சீக்கிரமா முடிக்க ட்ர்ரை பண்ணுறேன். அதுவரைக்கும் கவனமா இரு. குழந்தை பத்திரம். உங்கம்மாக்கும் எல்லாம் தெரியும். அவங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சஞ்சீவ் எதுலயாவது சைன் பண்ணச் சொன்னாப் பண்ணாதே. உன்னால சமாளிக்க முடியலைனா எனக்குக் கால் பண்ணு. சரியா?” அவளுடைய ஃபோனை அவளிடமே திருப்பிக் கொடுத்தான் அர்ஜூன்.

“அர்ஜூன்! பயமா இருக்கு.” அவள் குரல் கலங்கி இருந்தது.

“பயப்படாதே. நான் இருக்கேன்.” இப்படிச் சொன்னவன் தான் அன்று இரவே அடிபட்டு ‘ஐஸியூ’ல் கிடந்தான்.

*************

வந்தது போலல்லாது போகும் போது ஃப்ளைட்டையே தெரிவு செய்திருந்தார் அர்ஜூன். அன்று மாலையே சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் மூவரும்.

வீடுவரை அவனே காரில் கொண்டு வந்து ட்ராப் பண்ணி இருந்தான் அர்ஜூன். அப்போதும் அவள் கண்கள் அவனைத்தான் கலங்கியபடி பார்த்தது.

“அர்ஜூன்! கவனமா இருந்துக்கோ பி.எம்.”

“நீ என்னைப்பத்திக் கவலைப்படாத செர்ரி. நான் எப்பவுமே அலர்ட்டாத்தான் இருக்கேன். எப்பவும் குழந்தையை உன்னோட பக்கத்துலயே வெச்சுக்கோ. சமாளிக்க முடியலைன்னு தோணினா கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்திடு. புரியுதா? புதிய வீடு தெரியுமில்லை?”

“ம்…”

“தைரியமா இரு. நான் இருக்கேன்.” இப்படிச் சொல்லிவிட்டுத்தான் கிளம்பிப் போனான் அர்ஜூன். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் டீவியில் காட்டிய நியூஸில் வாய்விட்டுக் கதறினாள் மதுரா.

‘இளம் தொழிலதிபர் அர்ஜூன் பார்த்தசாரதி இன்று விபத்துக்குள்ளானார்.’ நியூஸ் இப்படி இருக்க அந்த ப்ளாக் ஆடி லேசாக நொறுங்கி இருந்தது. காரை வீதியிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“சஞ்சு!” வீடே ரெண்டு பட அலறினாள் மதுரா. குழந்தை தன் பாட்டியிடம் பயந்து போய் ஒட்டிக் கொண்டது. மலரும், உதய நாராயணனும் கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

கேட்டதையெல்லாம் கொடுத்தாகிவிட்டது. இனித் தன் பெண் வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள் என்று தான் நினைத்திருந்தார்கள். ஆனால் நடப்பு வேறாக இருந்தது.

“ஏன் இப்படிப் பண்ணினே சஞ்சு? ஏன் இப்படிப் பண்ணினே?” அவன் ஷர்ட் காலரைப் பிடித்து அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள் மதுரா. மதிநிலவன் மதுராவை மகனிடமிருந்து பிரித்துவிட்டார்.

“சஞ்சு இப்படிப் பண்ணி இருப்பான்னு நீ நம்புறியா மதுரா?”

“வேற யாரு பண்ண முடியும் மாமா?”

“ஏன்? அந்த அர்ஜூன் அத்தனை நல்லவனா என்ன? தொழில் பண்ணுறான். இந்தக் கொஞ்ச காலத்துல இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கான். எத்தனை தில்லுமுல்லுப் பண்ணி இருப்பான். அதுல எவன் தூக்க நினைச்சானோ?”

“மாமா!” மதுராவின் அதட்டலை மதிநிலவன் கண்டு கொள்ளவில்லை. மகனைச் சற்று அப்பால் கூட்டிக்கொண்டு போனார்.

“எதுக்கு உனக்கு இந்தத் தேவையில்லாத வேலை சஞ்சு? நான்தான் உங்கிட்டப் படிச்சுப் படிச்சுச் சொன்னேன் இல்லை? முக்கியமான சொத்து அத்தனையும் நம்ம பேருக்கு வந்தாச்சு, இனி அந்தச் சனியனை விட்டுத் தொலைன்னு. அதுக்குள்ள ஏன் இப்படி மடத்தனமாப் பண்ணினே சஞ்சு?”

“சொத்து… சொத்து… சொத்து… அது மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுமா? அவளை எங்கிட்ட இருந்து அவன் பிரிச்சிட்டான். அது எனக்கு எவ்வளவு வலிக்குது. அதைப்பத்தி நீங்க கவலைப்படலை.‌ உங்களுக்கு முக்கியம் சொத்துத்தான் இல்லை?”

“சஞ்சு!‌ முட்டாளாடா நீ?”

“ஆமா! முட்டாள்தான். இந்தச் சொத்தையெல்லாம் நீங்களே அனுபவிங்க. எனக்கு அவதான் வேணும்.” சஞ்சீவ் குரலை உயர்த்தும் போதே மதுரா வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். ஆனால் சஞ்சீவ் அதை அனுமதிக்கவில்லை.

“சஞ்சு… விடு என்னை.” அவள் தோள்களை இறுகப் பிடித்தவனை உதறித் தள்ள முயன்று கொண்டிருந்தாள். ஆனால் சஞ்சீவ் அவளை விடவேயில்லை.

“சஞ்சு… என்னை விடு. இல்லேன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“நீ என்ன வேணும்னாலும் பண்ணு மதுரா.‌ ஆனா அவனை இனிமேல் நீ பார்க்க முடியாது. நான் பார்க்கவும் விடமாட்டேன்.”

“நீ யாரு என்னைத் தடுக்க?”

“உம் புருஷன் மதுரா?”

“பொடலங்கா! இன்னொரு தரம் அப்படிச் சொன்னே! நான் மனுஷியா இருக்க மாட்டேன். கல்யாணம் பண்ணும் போது என்ன சொல்லிக் கல்யாணம் பண்ணினே? எல்லாம் மறந்து போச்சா?”

“உன்னை அவனுக்குத் தாரை வார்த்துக் குடுத்துட்டுப் போக என்னை என்ன ஏமாளின்னு நினைச்சியா?”

“நீ யாரு என்னைத் தாரை வார்த்துக் குடுக்க?”

“நீ எனக்குத்தான் சொந்தம் மதுரா.”

“ச்சீ… வாயை மூடு. உனக்கு நான் சொந்தமா? இப்படியெல்லாம் உம்மனசுல எண்ணம் இருக்கா? என்னைக்காவது இதையெல்லாம் நீ எங்கிட்ட சொல்லி இருக்கியா?”

“அங்கதான் நான் தப்புப் பண்ணிட்டேன். நம்ம மதுரா தானேன்னு அசால்ட்டா இருந்துட்டேன். அவனைப் போல உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கணும். அவனைப் போல உங்கூடத் தாலி கட்டாமக் குடும்பம் நடத்தி இருக்கணும். குழத்தை பெத்திருக்கணும்.” சஞ்சீவ் பேசி முடித்தபோது மதுராவின் கை அவன் கன்னத்தில் இறங்கி இருந்தது.

“பொறுக்கி… உம்மனசுல இவ்வளவு அழுக்கு இருக்கா? அவங்கிட்டக் காதல் சொன்னது நான். அவங்கூடக் குடும்பம் நடத்தணும்னு ஆசைப்பட்டது நான். கடைசியில அவனை அம்போன்னு நடுரோட்டுல விட்டுட்டுப் போனதும் நான். என்னோட அந்தஸ்தைப் பார்த்துத் தயங்கினவனை விடாமத் துரத்தினது நான். அத்தனையும் பண்ணினது நான். இதுல நீ எங்க வந்தே?”

“வந்திருக்கணும். அங்கதான் எல்லாமே தப்பாப் போச்சு. நம்ம மாமா பொண்ணு இன்னும் சின்னப்பொண்ணு. அவளுக்குப் படிப்பைத் தவிர வேற ஒன்னும் தெரியாதுன்னு தள்ளி இருந்ததுதான் தப்பாப் போச்சு.” பேச்சு இப்படிப் போய்க் கொண்டிருக்க மதுரா மீண்டும் வாசலை நோக்கிப் போனாள். இப்போதும் அவள் வழியை மறித்தான் சஞ்சீவ்.

“சஞ்சீவ்! தள்ளிப்போயிடு. இல்லைன்னா நான் போலீசைக் கூப்பிடுவேன்.”

“யாரை வேணும்னாலும் கூப்பிடு. எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. ஆனா இனி நீ அவனைப் பார்க்க முடியாது.”

“அதைச் சொல்ல நீ யாரு? உனக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு?” மதுரா கத்திக்கொண்டிருக்கும் போதே போலீஸ் உள்ளே நுழைந்தது.‌ இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இங்க மதிநிலவன் யாரு?” அந்த அதிகாரி கேட்கவும் மனிதர் பதறிப்போய்த் தன் மனைவியைப் பார்த்தார்.

“நான்தான்… எதுக்கு சார் கேக்குறீங்க?”

“உங்க பிஸினஸ் பத்தின தகவல்கள் கொஞ்சம் டிபார்ட்மெண்ட்டுக்குக் கிடைச்சிருக்கு.‌ அது சம்பந்தமா உங்களை விசாரணை பண்ணனும். கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.”

“சார்… நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலை.”

“ம்… அதைத்தான் நானும் சொல்றேன் மிஸ்டர்.மதிநிலவன். எங்களுக்கும் எதுவும் புரியலை.‌ அதனாலதான் உங்களை விசாரிக்கக் கூப்பிடுறோம்.”

“சஞ்சு… என்னடா இது?”

“சார்… எங்கப்பா பிஸினஸ் பத்தி உங்களுக்கு என்ன தகவல் கிடைச்சுது? கொஞ்சம் தெளிவாச் சொன்னா நல்லா இருக்கும்.”

வாக்குவாதம் திசை திரும்பி இப்படிப் போய்க் கொண்டிருக்க மதுரா சாலைக்கு வந்திருந்தாள். போய்க்கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறியவள் டீவியில் காட்டிய வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள். கொடுப்பதற்குக் கையில் காசும் இருக்கவில்லை. தலையில் கையை வைத்தபடி சுற்றும்முற்றும் பார்த்தாள். இங்கு யாரைத் தெரியும் அவளுக்கு!

“மதுரா!” அந்தக் குரலில் விலுக்கென்றுத் திரும்பினாள் பெண். அபிராமி நின்றிருந்தார். தெய்வம் அவ்வப்போது தன் இருப்பைக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

“ஆன்ட்டி… எங்கிட்டக் கையிலப் பணம் இல்லை.‌ ஆட்டோக்கு நீங்க பணம் குடுக்குறீங்களா ப்ளீஸ்.” கோடீஸ்வரர் உதயநாராயணனின் சீமந்த புத்திரி இருநூறு ரூபாய்க்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றிருந்தாள்.

“சரிம்மா.” அவர் சம்மதிக்கவும் அத்தோடுப் பேச்சு முடிந்தது என்று உள்ளே ஓடிவிட்டாள் மதுரா. அவசர சிகிச்சைப் பிரிவை அவள் தேடிக்கொண்டு போனபோது பார்த்தசாரதி தான் அங்கு நின்றிருந்தார். மதுராவிற்கு என்ன செய்வதென்றுப் புரியவில்லை. தடுமாறிய படி நின்றவளின் அருகில் வந்தான் தயாளன்.

“தயாளன் அர்ஜூனுக்கு என்ன ஆச்சு? கார் ரொம்ப சேதமா இருக்கே… அர்ஜூனுக்கு அடி ஏதும் பலமாப் பட்டுடுச்சா?” பதறினாள் மதுரா.

“சிஸ்டர்…‌ சிஸ்டர்… கொஞ்சம் அமைதியா இருங்க. அர்ஜூனுக்கு ஒன்னுமே ஆகலை. டாக்டர் பார்த்திட்டு ஒரு ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டார்.”

“அப்போ எதுக்கு இன்னும் அர்ஜூனை ‘ஐஸியூ’ல வெச்சிருக்காங்க?” அவள் கேட்கவும் சுற்றும்முற்றும் பார்த்தான் தயாளன்.

“காரணமாத்தான்… அதை நாம இங்க பேச வேணாம். உங்களையும் குழந்தையையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அர்ஜூன் சொல்லிட்டான் ம்மா.”

“நான் முதல்ல அர்ஜூனைப் பார்க்கணும் தயாளன். அதுக்கப்புறமா மத்ததை எல்லாம் பார்த்துக்கலாம். ப்ளீஸ்… என்னை அர்ஜூன்கிட்டக் கூட்டிட்டுப் போங்க.” அழவே ஆரம்பித்திருந்தாள் மதுரா.

“கொஞ்சம் பொறுமையா இருங்க சிஸ்டர். இங்க வெச்சு எதையும் நாம பேச வேணாம். டாக்டர்கிட்டக் கேட்டுட்டு அர்ஜூனைப் பார்க்கலாம்.” தயாளனால் எதையும் வெளிப்படையாகப் பேச முடியவில்லை.‌ ஆனால்… மதுரா அழுவதையும் அவனால் தாங்க முடியவில்லை.

முடிந்தவரைத் துரிதமாகச் செயற்பட்டு மதுராவை ‘ஐஸியூ’விற்குள் அனுப்ப ஏற்பாடுப் பண்ணி இருந்தான்.

அர்ஜூனுக்குப் பெரிதாக ஒன்றும் அடிபட்டிருக்கவில்லை. நெற்றியில் ஒரு பான்டேஜ் போடப்பட்டிருந்தது. முழுதாக ஒரு நாள் அவதானிப்பில் இருப்பது நல்லது என்று டாக்டர் பிரியப்பட்டிருந்தார்.

“அர்ஜூன்!”

“ஹேய்! செர்ரி… எதுக்கு இப்போ நீ அழுற?” அவன் ஷர்ட்டில் லேசாகப் படிந்திருந்த ரத்தக் கறையை அவள் கண்கள் ஆராய்ந்தது.

“அர்ஜூன்!” மதுராவின் உதடுப் பிதுங்கியது.

“பார்க்க சகிக்கலை… அடிக்கடி அந்த ப்ரீத்தியோட அட்ரஸை நீ தேட வைக்குற மதுரா.”

“கரெக்ட் அர்ஜூன். நான் உன்னைப் பார்த்திருக்கக் கூடாது. பழகியிருக்கக் கூடாது. உனக்கு அந்தப் ப்ரீத்தி மாதிரி யாராவது ஒரு பொண்ணு பொண்டாட்டியா வந்திருந்தா நீ சந்தோஷமா இருந்திருப்ப. நான் தான் எல்லாத்தையும் கெடுத்துட்டேன்.” அவள் அழுதுகொண்டே புலம்பினாள்.

“என்ன மதுரா? இப்படி பொசுக்குன்னு என்னை விட்டுக் குடுத்திட்டே!”

“நான் உனக்கு செட் ஆகமாட்டேன் அர்ஜூன். என்னால நீ பட்டதெல்லாம் கஷ்டம் தான் அர்ஜூன்.”

“இதை நமக்கு இன்னொரு குழந்தை பொறந்ததுக்கு அப்புறமாச் சொல்லு செர்ரி.”

“வேணாம். எதுவும் வேணாம். நீ எங்கூட இல்லைன்னாலும் எங்கேயாவது சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்.”

“அப்போ அடுத்ததா இன்னொரு பையன் வேணாமா செர்ரி?” அர்ஜூன் கேட்கவும் அவன் கைகளைக் கண்களில் ஒற்றிக் கொண்டு ஓவென்று அழுதுத் தீர்த்தாள் மதுரா.