PunnagaiMannan-4

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 4

மதுரா ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமில் அமர்ந்திருந்தாள். உதய நாராயணனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகளைப் பார்த்த சந்தோஷமா, இல்லை மருத்துவத்தின் முன்னேற்றமா? ஏதோ ஒன்று அவரை நிமிர்த்தி இருந்தது.

உதய நாராயணன் அப்படி ஒன்றும் மகளிடம் பாசத்தைக் கொட்டும் அப்பா இல்லை தான். சொல்லப்போனால் கண்டிப்பை மட்டுமே காட்டும் அப்பா.

அதற்குக் காரணம் சமுதாயத்தில் அவரிருந்த நிலை, அவருக்கிருந்த மரியாதை. மகளின் ஒரு சிறு தவறான அசைவுமே தனக்கு அவப்பெயரை ஈட்டித்தரும் என்பதால் மிகவும் கவனமாக இருப்பார்.

ஆனால் அம்மா மலர் அப்படி இல்லை. பாசக்கார அம்மா தான். மகளை இலகுவாகப் புரிந்து கொள்ளும் அம்மா. அப்பா காட்டாதப் பாசத்தை அம்மாவிடம் சேர்த்து வாங்கிக் கொள்வாள் மகள்.

ஒற்றை மகள். ஆண் வாரிசுகள் இல்லாததால் அவர்கள் வீட்டில் மதுரா தான் மகள், மகன் எல்லாமே. குறும்புகளின் சொந்தக்காரியாக அவள் மாறிப்போன ரகசியமும் அதுதான்.

உதய நாராயணன் நல்ல தூக்கத்தில் இருந்தார். இவ்வளவு நேரமும் தன் பேத்தியைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கதை பேசியபடி இருந்தவரை டாக்டர் தான் எச்சரித்துவிட்டுப் போயிருந்தார்.

உடம்பு முழுதாகத் தேறாத நிலையில் அதிகம் உணர்ச்சி வசப்படுவது அத்தனை நல்லதல்ல தானே. மலர் ஆதர்ஷினியை அழைத்துக் கொண்டு வெளியே போய் விட்டார்.

மதுரா தான் அமர்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள். மனதில் லேசான சாரல் அடித்ததுப் போல ஒரு குளிர்ச்சி.

அர்ஜூனை இன்றுப் பார்த்திருந்தாள். அதை நினைக்கும் போதே மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி. சந்திக்க ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அமுல்படுத்த எப்போதுமே முயற்சித்ததில்லை.

அடேங்கப்பா! என்ன கம்பீரமாக இருக்கிறான்! தான் அன்று டெல்லியில் பார்த்த அர்ஜூன் போலவா இருக்கிறான்? ஆண்களின் கம்பீரம் முப்பதுகளின் பிறகு தான் என்று சொல்வது உண்மை தான் போலும்.

அவனை நினைத்த மாத்திரத்தில் முகம் மலர்ந்து போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பினாள் மதுரா. மலர் நின்றிருந்தார். மகளை வெளியே வருமாறு ஜாடை காட்டியவர் ஹாஸ்பிடல் வளாகத்தில் அமைந்திருந்த பூங்காவில் போய் உட்கார்ந்துக் கொண்டார்.

மகள் இந்தியா வந்து இத்தனை நாட்களில் அம்மாவும் மகளும் தனித்து ஒரு வார்த்தை பேசமுடியவில்லை. கூடவே யாராவது இருந்த படிதான் இருந்தார்கள். மதுராவும் அம்மாவைத் தொடர்ந்து வந்தவள் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“சின்னவ எங்கம்மா?”

“அத்தை கூட்டிக்கிட்டுப் போறாங்க.”

“எப்படி இருக்கம்மா?”

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீ எப்படி இருக்க மதுரா?” அம்மாவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் மகள் புன்னகைத்தாள்.

“என்னம்மா திடீர்னு இப்படிக் கேக்குறே?”

“மதுரா… உண்மையைச் சொல்லு. நீ சந்தோஷமாத்தானே இருக்கே?”

“சந்தோஷமா இருக்கேனான்னு கேட்டாத் தெரியாது… ஆனா நிம்மதியா இருக்கேன்.”

“உனக்கும் சஞ்சீவுக்கும் இடையில…” அம்மா கேள்வியாக நிறுத்தவும் மதுரா புன்னகைத்தாள்.

“அம்மாக்கிட்ட எதுவும் மறைக்கிறியா மதுரா?”

“அப்படியெல்லாம் இல்லைம்மா.”

“அப்போ உண்மையைச் சொல்லு.”

“என்ன உண்மையை இன்னும் எங்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறீங்க ம்மா. அர்ஜூனைப் பத்தி அத்தனை உண்மையையும் அன்னைக்கு உங்ககிட்டத் தானே சொன்னேன். என்ன ஆச்சு?”

“மதுரா… உன்னோட நன்மைக்காக வேண்டித்தான் எல்லாத்தையும் நான் அப்பாக்கிட்டச் சொன்னேன். எப்படி இருந்தாலும் அப்பாக்கு இது தெரியத்தானே வேணும்? யாரோ சொல்லித் தெரியுறதை விட நாமளே சொல்லித் தெரியுறது பெட்டர்னு தோணிச்சு. நீ அம்மாவைத் தப்பா நினைக்காத மதுரா.” மலரின் கண்கள் கலங்கவும் அவர் கையில் தட்டிக் கொடுத்தாள் மதுரா.

“விடுங்கம்மா. அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே. இனி அதைப்பத்திப் பேசி என்னப் பிரயோஜனம்.”

“ரொம்பவே சலிச்சுக்கிற மதுரா.”

“ம்… இன்னைக்கு அர்ஜூனைப் பார்த்தேன்.” எங்கோ பார்த்தபடி சொன்னாள் மகள்.

“என்ன? என்ன சொல்லுறே நீ?” மலருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ம்… கோயிலுக்குப் போயிருந்தேன் இல்லை. அப்போ.”

“என்ன சொன்னாரு?”

“நான் இங்க உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். நீ ரொம்பக் கூலா கையில குழந்தையோட வந்து நிக்குறேன்னு கேட்டார்.” மகள் சொல்லவும் மலர் எழுந்து நின்று விட்டார்.

“மதுரா! ஆதர்ஷினி பத்தி அர்ஜூனுக்கு…”

“ம்ஹூம்… எதுவும் தெரியாது.”

“தெரிய வந்தா?”

“கடவுள் விட்ட வழி. என்னை என்னப் பண்ணச் சொல்லுறீங்கம்மா? இத்தனை நாளும் நீங்கெல்லாம் சொல்லுற படிதானே கேக்குறேன். என்னோட வாழ்க்கையை நீங்க சொல்லுறபடி தானே வாழுறேன். இன்னும் என்னம்மா இருக்கு?” சலிப்போடு சொன்னவள் எழுந்து உள்ளே போய்விட்டாள்.

மலர் மகளையே பார்த்திருந்தார். எத்தனைத் துள்ளலான பெண்! இப்போது எப்படி ஓய்ந்து போய்விட்டாள். அப்படி என்னப் பெரிய குற்றம் செய்து விட்டாள்? காதலித்தாள். அவ்வளவு தானே?

பணக்காரன், ஏழை இதெல்லாம் பார்த்தா காதல் வரும்? அவனும் நல்ல குடும்பத்துப் பையன் தானே? என்ன? இவர்கள் போல அத்தனைப் பின்புலம் கிடையாது. அதற்காக? அவனை அடித்து நொறுக்கி… ஹாஸ்பிடலில் ஒரு மாதம் படுக்க வைத்து.

இதற்குத் தன் கணவரின் தங்கை குடும்பமும் கூட்டு. உதய நாராயணனின் தங்கை தான் அன்னபூரணி. அண்ணனைப் போலவே ஜாதிவெறி, பணக்காரத் திமிர் எல்லாம் உண்டு. அதற்கு ஏற்றாற் போல அவர் கணவர் மதிநிலவன்.

நல்ல மனிதர்கள் தான். குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால்… தங்கள் மட்டத்தில் உள்ளவர்களோடு மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள நினைப்பார்கள். அந்தஸ்து பார்த்துப் பழகும் மனிதர்கள்.

இவர்களின் ஒற்றைப் பையன் தான் சஞ்சீவ். மதுராவும் அவனும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மதுராவை விட இரண்டு வயது மூத்தவன். மாமன் மகளின் மேல் பாசம் அதிகம். அவளுக்கு ஒன்றென்றால் இவனுக்கு வலிக்கும்.

**************

கண்களை மூடி பெட்டில் சாய்ந்திருந்தாள் மதுரா. பக்கத்தில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. மனம் அலைபாய்ந்த படியே இருந்தது. காரணம் அர்ஜூன்.

கலாசாலையின் அன்றைய கதாநாயகன் அவன்.‌ தோற்றத்திலும் சரி, கல்வியிலும் சரி… அவனுக்கென்றொரு தனி இடம் இருந்ததால் இளவட்டங்கள் எப்போதும் அவனைச் சுற்றி இருக்கும்.

பெண்கள் மட்டுமல்ல… பையன்களுக்குமே அர்ஜூனை அவ்வளவு பிடிக்கும். பழக அவ்வளவு இனிமையான மனிதன் அவன். அதனாலேயே மதுராவிற்கும் அவனுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் வரும்.

பல நேரங்களில் சிரித்துக் கொண்டே இருப்பவனுக்குக் கோபம் வந்தால் மதுராவால் கூட அவனைச் சமாளிக்க முடியாது. இப்போது நினைக்கும் போதும் பெண்ணுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவனை அத்தனை பாடுபடுத்தி இருக்கிறாள் மதுரா.

‘அர்ஜூன்… அந்த ப்ரீத்தி இன்னைக்கு என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?’

‘என்ன பண்ணினா? சும்மா எங்கூடப் பேசிக்கிட்டு நின்னா. அவ்வளவுதான்.’

‘அது எனக்கும் தெரியும்.‌ ஆனா அதுக்கப்புறமா என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?’

‘ம்ஹூம்… என்ன பண்ணினா?’ அவன் தலையை ஆட்டியபடி உதட்டைப் பிதுக்கினான்.

‘நீ போகும் போது உன்னோட ஷர்ட்டுல ஒரு இலை மரத்தில இருந்து விழுந்துச்சு.’

‘ஓ… நீ அதைச் சொல்றியா. ஆமா… அதைத் தட்டி விட்டா.’

‘அவ அதைத் தட்டி விடலை. யாரும் பார்க்கலைன்னு நினைச்சுக்கிட்டு அவ கையில இருந்த புக்குக்குள்ள அதை நைஸா பத்திரப்படுத்திக்கிட்டா.’ அபிநயங்களோடு அவள் சொல்லி முடிக்க அர்ஜூனுக்கு அபாய மணி அடித்தது.

‘ஆஹா! இவ ஆரம்பிச்சுட்டாடா!’ தலையில் கைவைக்காதக் குறையாக மதுராவைப் பார்த்தான்.

‘அர்ஜூன்! எனக்குப் பயமா இருக்கு அர்ஜூன். இவளுங்க யாராவது உன்னை எங்கிட்ட இருந்து பறிச்சுக்கிட்டுப் போயிடுவாளுங்கன்னு எனக்குப் பயமா இருக்கு அர்ஜூன்.’ மாலை மங்கிய அந்தப் பொழுதில் அவள் ஃப்ளாட்டில் உட்கார்ந்து கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் இந்தப் பேச்சு எழுந்தது.

‘மதுரா… சின்னப் புள்ளை மாதிரி பிஹேவ் பண்ணாத.’

‘அர்ஜூன் ப்ளீஸ்! நீயும் சின்னப்புள்ளை மாதிரி என்னை நடத்தாதே.’

‘இப்போ நான் என்னதான் பண்ணணுங்கிறே?’

‘எனக்கு ப்ரூஃப் பண்ணு அர்ஜூன். நீ எனக்கு மட்டும்தாங்கிறதை இப்போ, இங்க ப்ரூஃப் பண்ணு அர்ஜூன்.’ மதுராவின் வார்த்தைகளில் அர்ஜூன் குழம்பிப் போனான்.

‘என்ன சொல்லுற நீ? நான் உனக்கு மட்டும்தானே சொந்தம் மதுரா. இதை எதுக்கு நான் ப்ரூஃப் பண்ணணும்?’

‘பார்த்தியா பார்த்தியா… நீ தயங்குறே. எதுக்கு உனக்கு இத்தனைத் தயக்கம்?’ அவள் கண்கள் இப்போது கலங்கி விட்டது. அர்ஜூன் கண்களை ஒரு முறை மூடித் திறந்தான்.

‘இப்போ என்னை என்ன தான் பண்ணச் சொல்லுற மதுரா?’ அவன் சலிப்போடு கேட்க அவள் அசால்ட்டாக அவன் செய்ய வேண்டியதைச் சொல்லி முடித்தாள்.

‘உனக்குப் பைத்தியமாடி பிடிச்சிருக்கு?’ ஆத்திரத்தில் அர்ஜூன் சத்தம் போட அவனுக்கு மேலாக அவள் சத்தம் போட்டாள்.

‘ஆமா! எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. அர்ஜூன் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதுக்கு இப்போ என்னை என்ன பண்ணச் சொல்லுறே? நான் சொல்லுறதை நீ பண்ணு அர்ஜூன். அதுல உனக்கு என்ன தயக்கம்?’

அர்ஜூன் அமைதியாக மதுராவின் பக்கத்தில் வந்தான். முகத்தைத் திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்தாள் பெண். பக்கென்று சிரித்தவன் அந்த அழகான முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.

‘மதுரா! இது தப்புடா.’

‘எனக்குத் தப்பாத் தோணலை. என்னைக்கு இருந்தாலும் உனக்கு நான்தான்னு நீ நினைச்சா உனக்கு இது தப்பா தோணாது அர்ஜூன். என்னைக்கும் எனக்கு நீ மட்டும்தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. எனக்கு இன்னைக்கும் இதுதான் வாழ்க்கை. பத்து வருஷம் கழிச்சும் இதுதான் வாழ்க்கை. ஏன்… நான் சாகுற வரைக்கும் இதுதான் வாழ்க்கை.’

உறுதியாகச் சொன்ன அந்தக் குழந்தை முகம் அவனை லேசாக ஆட்டம் காண வைத்தது. லேசாகக் கோடு தாண்டியவனை முழுதாக வாழ்ந்து பார்க்கத் தூண்டியதும் அவள் தான்.

கண்களை இறுக மூடிக்கொண்டாள் மதுரா. இப்போது நினைத்துப் பார்த்த போதும் அந்தப் பொழுதுகள் இனித்தன.

தனக்குள் புதைந்து போனவனை இம்மியளவும் விலக அனுமதிக்காமல் ஆட்கொண்டது பெண்மை. அன்றைய இளம் பெண்களின் கனவு நாயகன் தனக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அவள் நெஞ்சம் விம்மியது.

அவள் கன்னங்களில் முகத்தைப் புரட்டியபடி ‘இது கன்னங்களா… இல்லை தென்னங்கள்ளா…’ என்று அவன் பிதற்ற…

‘என் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா…’ என்று அவளும் சேர்ந்து மிழற்ற… இருவரும் உலகை மறந்து சிரித்தது இப்போதும் நினைவில் நின்றிருந்தது மதுராவிற்கு.

எத்தனை உறுதியாக இருந்தாள். அர்ஜூன் தான் தன் வாழ்க்கை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது அவளுக்கு.

ஆனால் அத்தனையையும் அழித்துப் போட்டார் அப்பா. அவள் கதறல்கள் எதுவும் எடுபடவே இல்லை. அர்ஜூனிடம் முதலில் பேசிப்பார்த்தார். அவன் மசியவில்லை என்றதும் ஆட்கள் வைத்து அவனைப் பந்தாடிவிட்டார்.

கேள்விப்பட்டதும் துடித்துப்போனாள் மதுரா. ஹாஸ்பிடலுக்கு ஓடிப்போன போது பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. ‘ஐசியூ’இல் வைத்திருந்தார்கள். அதன்பிறகு அந்தப் பக்கமே போக அப்பா அனுமதிக்கவில்லை.

எல்லாம் கனவாகிப் போனது. கானல் நீர் போல மறைந்து போனது அவள் காதல்!

கண்களைத் துடைத்துக் கொண்டாள் பெண். இடது கை மகளின் தலையை வருடிக் கொடுத்தது. இன்று அர்ஜூனின் உயரம் பார்த்த போது கூரையின் மேல் ஏறி நின்று கத்த வேண்டும் போல இருந்தது.

‘இப்போது இவர்களால் அவனோடு மோத முடியுமா? அவன் சுண்டுவிரல் நகத்தைக் கூடத் தொட முடியுமா? அந்தத் தைரியம் இருக்கிறதா இவர்களிடம்?’

இவர்கள் தேடிய அந்தஸ்தையும் பணத்தையும் சேர்த்து வைத்திருக்கிறானே! அவன் இழந்ததை எல்லாம் இவர்களால் கொடுக்க முடியுமா? கடந்து போன நாட்களைத் திரும்பக் கொடுக்க முடியுமா?‌

‘அர்ஜூன்… அர்ஜூன்…’‌ அவள் உள்ளம் கிடந்து அரற்ற கண்ணீரோடுத் தூங்கிப்போனாள் மதுரா.

************

“அர்ஜூன்… இன்னும் தூங்கலை?” கேட்டபடி வந்த அபிராமியைத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றினான் அர்ஜூன்.

“ஏய்… ஏய்… அர்ஜூன்! என்ன பண்ணுற நீ!” அபிராமி சத்தம்போட ஊரே அதிரும் வண்ணம் சிரித்தான் அர்ஜூன்.

“கீழே விடு அர்ஜூன்.” அபிராமி கெஞ்சவும் அவரைக் கீழே இறக்கி விட்டவன் இப்போதும் சிரித்தான்

“என்ன அர்ஜூன்? ரொம்ப சந்தோஷமா இருக்க போல?”

“ம்… ஆமாம்மா.” அவன் வாயில் அம்மா என்ற வார்த்தை இலகுவாக வந்தது. அபிராமி பூரித்துப் போனார்.

“என்னாச்சு அர்ஜூன்?”

“என்னோட சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படுங்க ம்மா. ஆனா அதுக்குக் காரணம் கேக்காதீங்க. அதுக்கப்புறம் உங்க சந்தோஷம் காணாமப் போயிடும்.” அர்ஜூன் பேசிய பேச்சில் அபிராமியின் நெற்றி சுருங்கியது.

“உன்னோட சந்தோஷத்துக் காரணம் அந்த மதுராவா அர்ஜூன்?”

“என்னோட சந்தோஷங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமான ஒரே காரணம் அவதானேம்மா.” அவகாசமே இல்லாமல் அவசரமாகப் பதில் சொன்னான் அர்ஜூன்.

“அர்ஜூன்!”

“வேணாம்மா… எதுவும் சொல்லிடாதீங்க.‌ ரொம்ப நாளைக்கு அப்புறமா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை இன்னும் கொஞ்ச நேரம் அனுபவிச்சுக்கிறேன். அதை எங்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சிடாதீங்கம்மா.” அர்ஜூனின் குரல் கெஞ்சியது.

அபிராமி எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டார். ஆனால் முகத்தில் அத்தனை குழப்பம் தெரிந்தது.

அர்ஜூன் அமைதியாக வானத்தைப் பார்த்தபடி இருந்தான். இன்று அவளைப் பார்த்தது, அவளின் அழகிய கோலம் எல்லாமாக அவனைப் பித்துப் பிடிக்கச் செய்திருந்தது.

தன்னைப் பார்த்த போது சட்டென்று அவள் கண்களில் தோன்றி மறைந்த ஒளியை அவனும் கவனித்திருந்தான். டெல்லியில் இருக்கும் போது யூனிவர்ஸிட்டியில் ஒரு பெண் அவனைப் பார்த்திடக் கூடாதே! அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வரும்.

அவர்களையெல்லாம் விட்டு விட்டு ஓடி வந்து இவனோடு தான் சண்டை போடுவாள். நீ எனக்கு மட்டும் தான்… எனக்கு மட்டும் தான் என்று புலம்பித் தீர்ப்பாள். அர்ஜூனுக்கு அவள் சிறுபிள்ளைத் தனங்களைப் பார்க்கும் போது சிரிப்பாக வரும். சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று அவளோடு இழைந்து கொள்வான்.

இப்போது நினைத்த போதும் சிரிப்பாக இருக்கிறது. வயதுக்கேற்ற முதிர்ச்சி அவளிடம் சற்றும் இல்லை. எல்லோர் முன்னாலும் பெரிய மனுஷி போல நடந்து கொள்பவள் அர்ஜூன் என்று வந்து விட்டால் குழந்தையாகிப் போவாள்.

‘ஹேய் செர்ரி!’ அவன் அவளை அப்போதெல்லாம் அப்படித்தான் அழைப்பான்.

‘ம்…’

‘என்ன பலமா யோசனை பண்ணுற?’

‘இல்லை… என்னை அடிக்கடி இப்படி ‘செர்ரி’ன்னு கூப்பிடுறீங்களே… உங்களுக்கு என்ன பெயர் வெக்கலாம்னு யோசிக்கிறேன்.’

‘ஓஹோ! தங்கள் ஆராய்ச்சியின் முடிவு என்னவோ?’

‘நல்லதா ஒன்னும் மாட்டலை.’

‘ஹா… ஹா…’

‘எதுக்கு இப்போ இப்படியொரு சிரிப்பு? ராட்சசன் மாதிரி.’

‘ஆமா… ராட்சசன் தான். உன்னை அப்படியே ஸ்வாஹா பண்ணப் போறேன்.’ அவன் வேண்டுமென்றே அவள் பக்கத்தில் போக, பிடித்துத் தள்ளிவிட்டாள் மதுரா.

‘இன்னும் ஸ்வாஹா பண்ண இங்க என்ன இருக்காம்?’ அவள் நொடித்துக் கொள்ளவும் அவன் முகத்தில் ஒரு சங்கடம் தெரிந்தது.

‘சாரி மதுரா.’

‘எதுக்கு?’

‘அது… அது வந்து…’ அவன் தடுமாறவும் இவள் புன்னகைத்தாள். தலையைக் கோதிக்கொண்டு அவன் திருதிருவென்று முழிப்பது பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

‘மதுரா… நாம இங்க இருக்கிற கோயில்ல வச்சுத் தாலி கட்டிக்கலாமா?’

‘எதுக்கு அர்ஜூன்?’

‘எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு மதுரா.’

‘எனக்கு அது அவசியம்னு தோணலை. தாலி கட்டினாத்தான் நீங்க எனக்குப் புருஷனா அர்ஜூன்? இல்லைன்னாலும் புருஷன் தான்.’ அவள் உறுதி பார்த்து அன்று அவன் ஆச்சரியப்பட்டிருக்கிறான்.

‘அர்ஜூன்… நாளைக்கே நமக்கொரு பொண்ணு பொறக்குமில்லே?’

‘ஏன்? பையன் பொறக்காதா?’

‘இல்லையில்லை… ஃபர்ஸ்ட் பொண்ணுதான். அப்புறம் வேணுமின்னாப் பையன். என்னைப் பேச விடுங்க அர்ஜூன்.’

‘நான் ஒன்னுமே பண்ணலையே செர்ரி.’

‘இதான்… இதைத்தான் சொல்ல வந்தேன். நாளைக்கு நமக்குப் பொறக்கப் போற பொண்ணுக்கும் இது மாதிரித்தான் சொல்லிக் குடுப்பேன்.’

‘என்னன்னு?’

‘என்னைச் செர்ரின்னு கூப்பிடச் சொல்லி.’

‘ஹேய்! இல்லையில்லை… இது நியாயம் இல்லை. அது நான் உனக்கு வெச்ச பெயர் மதுரா. அதை நான் மட்டும்தான் கூப்பிடுவேன். வேற யாரும் கூப்பிடக் கூடாது.’

‘வேற யாருமில்லையே அர்ஜூன்? உங்க பொண்ணுதானே?’

‘ம்ஹூம்.’

‘அடிக்கடி இப்பல்லாம் அந்த வயலினைத் தூக்கிட்டுப் போய்ப் பொண்ணுங்க முன்னாடி வாசிக்கிறேல்ல?’

‘அது ஃபங்ஷனுக்கு ரிஹர்சல் பார்க்குறோம் செர்ரி.’

‘என்னமோ, எனக்குத் தெரியாது. உன்னைச் சுத்தி நாலு பொண்ணுங்க நிக்கிற மாதிரி பாத்துக்கிறே!’ ஒரு தினுசாக அவனைப் பார்த்தபடி அவள் சொல்ல அர்ஜூன் வாய்விட்டுச் சிரித்தான்.

‘ஏன்டீ உம் புத்தி இப்படிப் போகுது.’

‘பெயர் வெக்கிறியா பெயர் எனக்கு… கூடிய சீக்கிரமே உனக்குப் போட்டியா அப்படிக் கூப்பிட ஆள் வரும்.’

‘போற போக்கைப் பார்த்தா நீ சொல்லுற விஷயம் நடக்கிற நாள் அத்தனைத் தொலைவில இல்லை மாதிரித்தான் தெரியுது செர்ரி.’ அவள் காதுக்குள் அவன் சொல்ல அவள் முகம் இப்போது செர்ரி போலவே ஆனது.

ஒன்றிரண்டுப் பெண்கள் என்னை அப்போது ஆர்வமாகப் பார்த்ததற்கே அன்று அத்தனை சண்டை போட்டவள் இப்போது என்ன சொல்லுவாளாம்! முகம் நிறையப் புன்னகையோடு படுக்கைக்குப் போனான் அர்ஜூன்.