anbin mozhi 9

அன்பின் மொ(வி)ழியில்- 9

மாலை கதிரவனின் செந்நிற ஒளி அந்த இடத்தை ரம்யமாக மாற்றிக் கொண்டு இருந்தது, சென்ற வாரம் நட்டு முடித்த நாத்து எல்லாம் நன்கு ஒரே சீராக வளர்த்து நில மங்கைக்கு பச்சை பட்டு உடுத்தியது போல அழகாக காட்சியளித்தது.

ராமின் அழகிய நீல நிற விழிகள் அனைவரும் அன்னையாய் இருந்து பசியாற்றும் பூமி தாயினை ஆசையோடு நோக்கியது.

ஜாஸ்ஸின் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளானோ, அதே அளவு இந்த மண்ணின் மீது மிகுந்த அன்பு கொண்டுஇருக்கிறான்.

ராமுக்கு நெய்வாசல் விட்டு கிளம்பிய போது மனதுக்கு தவிப்பாக இருந்தது. என்னதான் ராஜின் ஆசைக்காக கிளம்பினாலும் அவனுக்கு விருப்பமான இடம் சொந்த ஊர் தான்.

வயலின் பாதியில் இருந்த கதிர்களை அறுவடை செய்த பிறகு உள்ள மற்ற வேலைகளை நம்பிக்கையான ஆள்களிடம் ஒப்படைத்து விட்டு, பூம்பொழில் செல்ல தயாராகினான்.

செல்வம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனையும் தன்னுடன் நிலகிரிக்கு வர சொன்ன ராமிடம், “நான் எதுக்குலே அங்கனக்குள்ள வரணும்? , இங்கே அவ்வளவு சோலி கிடக்கு, நீ என்னமோ என்னையும் உன் மனைவி மாதிரி கூட்டி சுத்த பாக்குற” என்று கேலி செய்த அத்தை மகனிடம் தன் முறைப்பை பரிசாக கொடுத்தவன்.

“நீ என்கூட வரலே அவ்வளவு தான், தடுத்து எதுவும் என்கிட்ட பேசாத” என்றவன்.  ராஜை பாத்தியாலே இந்த முறை, எப்பவும் விட வித்தியாசமா இருந்தான் வரும் போது” என்ற ராமிடம்.

செல்வம் -“பொன்னிய அவன் பார்த்த பார்வைய சொல்லுறியா மச்சான்?” என்றான் குறும்பாக கண்களை சிமிட்டி.

ராம்- “அதானே பாத்தேன் உன் ஆந்தை கண்ணுல எதுவும் தப்பும்மா, அது எப்படியோ பொன்னிய மாமன் வீட்டுல கட்டணும் அப்படிங்குற உங்க ஆசை தீர போகுது” என்றவனிடம்.

“அவனோட பழக்கவழக்கத்துக்கு எங்க தங்கச்சி சரிப்பட்டு வருவாளா மச்சான், அதோட பொன்னி மனசுல என்ன இருக்குனும் பாக்கணும்” என்றான் செல்வம் யோசனையாக.

“அதெல்லாம் சரியாவரும், ராஜ் குணத்துக்கு பொருத்தமா தான் இருக்குமுலே, நம்ம பொன்னியோட அமைதியான சுபாவம், நீ கவலைப்படுறது கூட அவசியம் இல்லை அப்படின்னு தான் நான் சொல்லுவேன் செல்வம்” என்றான் உறுதியான குரலில் தன் உடன்பிறப்பின் மீது உள்ள நம்பிக்கையில்.

அதன் பின்னர் அவர்கள் ஊருக்கு கிளம்பும் வேலைகள் மும்மரமாக நடந்தது.

நிலாவுக்கு கல்லூரி விடுமுறை என்பதால் அவளுக்கு புறப்படுவதில் எந்த சிக்கலும் இல்லை, பொன்னியை விட்டு தனியே செல்ல வருத்தமாய் இருந்தாலும், சிறுவயதில் இருந்த தன்னுடைய தோழியை காண போகும் ஆர்வம், அந்த வருத்தத்தை பின்னுக்கு தள்ளியது.

பொன்னிக்கு தான் கஷ்டமாக இருந்தது, நிலாவினை விட்டு தனித்திருப்பது இருப்பினும் அதை காமித்து கொள்ளவில்லை, புன்னகையுடன் தோழிக்கு விடைகொடுத்தாள்.

ஜாஸ்ஸும், நிலாவும் கல்லூரி விடுமுறை வரை அங்கு இருந்து விட்டு பின் ஊருக்கு திரும்பிவிடவும், ராஜ் வேலைகள் ஆரம்பித்த உடன் ராமிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்னை சென்றுவிட்டு , வாரம் ஒரு முறை இங்கு வருவதாகவும்.

ராம், செல்வம் இருவரும் ரிசார்ட், மருத்துவமனை வேலை முடியும் வரை பூம்பொழிலில் இருப்பது போல் வேந்தனின் மைந்தர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

அதற்கு ஏற்ப ராஜ் சென்னையில் கிளம்பிய சிறிது நேரத்தில், நெய்வாசலில் இருந்து இவர்கள் அனைவரும் கிளம்பினர்.

ராம் காரை ஓட்ட செல்வம் அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.

நிலாவோ தன் அன்னையின் மடியில் தலை வைத்து உறங்கிக்கொண்டு வந்தாள்.

தன் குடும்பத்துடன் செல்லும் இந்த பயணம், திரும்பும் போது எத்தகைய பொக்கிஷ குவியலுடன் ஆரம்பமாகும் என அறியாமலே!, வண்டியினை ஒட்டிக் கொண்டிருந்தான், ராம் வில்லியம்ஸ்.

கயல் மயங்கி சரிந்த உடன், காரிலிருந்து இறங்கி வந்தவர்கள் , ராஜ், என அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர்.

ரம்யாவுக்கு ராம் அண்ணனை பார்த்த மறுநொடி மயங்கிவிழுந்த கயலை கண்டவுடன், அவள் மண்டையில் ஓடிய நண்டை பிடித்து நல்ல உப்பு காரம் சேர்த்து மிளகுபொடி தூவி வைத்த சூப்பை குடித்தது போல் குஷியாக இருந்தது.

ஆனாலும் கயலின் நிலைக்கு காரணம் ராம் தான் என்று நம்பமுடியவில்லை அவளுக்கு, அப்பாவை போல் பொறுப்பான, பெண்களை தவறான எண்ணங்கள் கொண்டு ஒரு நொடி கூட பார்க்காதவன் எப்படி இப்படி என்ற யோசனை தோன்றியது.

அவளின் யோசனைக்கு யாரும் காத்திருக்கவில்லை அனைவரும் திகைத்து போய் நின்ற நிலையில், ராம் விரைந்து வந்து வந்து தரையில் கொடியென விழுந்திருந்தவளை கண்டு, “ என்ன எல்லாரும் அடைச்சுபோய் நிக்குறீங்க?, இந்த புள்ளவேற இப்படி பொசுக்குன்னு சரிஞ்சு விழுந்துடுச்சு” என்று கேட்டு கொண்டே மயங்கிய மங்கையவளை கைகளில் ஏந்தி கொண்டவன், “ரம்யா அங்கன மரத்துகிட்ட இருக்க மேடையில் இவுங்கல ஏடுத்தாருறேன் , நீ போய் தண்ணி எடுத்துவாமா” என்றவன் அவளை மாமரத்தின் அடியில் கொண்டுவந்து விடும் போது தான் அவளின் முகத்தினை கண்டான்.

ஒருநொடி தான் காணுவது கனவோ, என நினைத்தவன் ராஜின் குரலின் நிதர்சனம் உணர்ந்தான்.

தன் மனதில் வாழும் கற்பனை தேவதையை இவ்வாறு நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து அவனால் அவ்வளவு எளிதில் வெளிவர முடியவில்லை.

ராஜ்-“ இவலோ நேரம் நல்ல தான் பேசிட்டு இருந்தாங்க, என்னன்னு தெரியல இப்படி திடீர்னு மயங்கிட்டாங்க மாம்” என்று ஜாஸ்ஸிடம் கூறியவன்.

தன் அண்ணன் முகத்தினை பார்த்தான் மற்றவர்களை விட ராம் பற்றி நன்கு அறிந்தவன் அவனின் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டு, “என்ன ராம் ஒரு மாதிரி இருக்க?” என்றான். அதில் சட்டென்று சுதாரித்துக்கொண்டு தம்பியிடம் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தவன், ரம்யா எடுத்து வந்த நீரினை,தன் அருகில் கலைந்த ஓவியமாய் கிடைந்தவள் முகத்தில் தொளித்தான் .

விழிகளை மலர்ந்து எதிரில் இருந்தவனை பயத்துடன் நோக்கியது கயலின் பார்வை.

மெல்ல விழிகளை திறந்தவளின் மருண்ட நயனங்களில் விழுக துடித்த தன் மனதினை கட்டுப்படுத்தியவன்.

“இப்ப உங்களுக்கு பரவாயில்லையா?” என கயலிடம் மென்மையாக கேட்டவன், ரம்யாவின் புறம் திரும்பி “இவங்க?” என்றான் கேள்வியாக.

ராமின் அந்த கேள்வியில் அதுவரை அச்சத்துடன் நோக்கிய கயலின் விழிகளில் சிறு நிம்மதி வந்தது என்றால், ரம்யாவின் கண்களில் இருந்த மகிழ்வு மறைந்து குழப்பம் வந்தது.

‘அடகடவுளே! இது என்ன என் மண்டைக்கு வந்த சோதனை?. ஆதி, ரவியாவது மண்டையில் நண்டதான் ஓட விட்டானுங்க, ஆனா இவுங்க இரண்டு பேரும் அனகொண்டா பாம்பையே! உருள விடுவாங்க போல’ என அப்போது உண்மையில் அதிர்ந்து தான் போனாள் ரமி.

ரம்யா அமைதியாக இருந்து ஜாஸ்ஸுக்கு வித்தியாசமாக தோன்றிய போதும் அதை விடுத்து, இவுங்க கயல்விழி நம்ம மலைகுடிலோட நிர்வாகி என்றார் தன்னுடைய கம்பீரமான குரலில்.

பின் ராம் கயலின் அருகில் இருந்து எழுந்து விட, கயலும், ஜாஸ்ஸின் அந்த குரலில் தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு எழுந்து நின்று மனதின் நடுக்கத்தினை மறைத்து “ சாரி மேம், வெல்கம் டு மலைகுடில்” என்றாள் மரியாதையாக.

அவளை கண்டது ராமிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இது எப்படி சாத்தியம் என்று அவனுக்கு புரியவில்லை.

கற்பனை காதலி இப்போது எதிரில். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் அவனுக்கு, மனதினுள் தற்போது அடுத்து என்ன என்ற தடுமாற்றம் வந்து அமர்ந்தது.

பெண்ணவளின் செயலினை கண்டு மெல்ல புன்னகைத்து “பரவாயில்ல கயல்விழி உங்களுக்கு உடம்புக்கு என்ன?” என்றார் ஜாஸ்.

அதற்கு தயக்கமாக ஆனால் தன்னை சமாளித்து கொண்டு ஒரு வித நிமிர்வுடன் “ஒன்னும் இல்லை மேம், திடீர்ன்னு தான் ஒருமாதிரி தலை சுத்திடுச்சு, இப்போ ஓகே” என்றவள், அனைவரையும் மலைகுடில் ஆஃபீஸ் ரூமிற்க்கு அழைத்து சென்று அமரவைத்து, சூடாக டீயை தானே தயாரித்து கொடுத்தாள்.

விஷ்ணு, செல்வம், ரவி மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றால், ராம் அமைதியாக கயலினை யாரும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். காதல் வந்தால் துணைக்கு கள்ளதனமும் சேர்ந்து வந்துவிடும் போல.

அவனின் பார்வையினை உணர்த்தவள், அவனின் அன்னையிடம் மட்டுமே தன் கவனத்தை முயன்று திருப்பிக் கொண்டிருந்தாள்.

ஜாஸ் , கயல் இருவரும் மலைகுடில் பற்றி சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதில் எந்த வகையிலும் சேராமல் அதிர்ந்து சிலை என நின்ற ரம்யாவை தன்னுடைய பலத்தை எல்லாம் திரட்டி அடித்த அடியில் இப்பூவுலகிற்கு கொண்டு வந்தாள் வெண்ணிலா.

முதுகில் விழுந்த பலமான அடியில் தன்னிலை மறந்து இருந்தவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கே ஏதும் அறிய பால் வடியும் முகத்துடன் நின்றிருந்த நிலாவிடம் “ஹைய் குட்டி! நீ எப்படி இருக்க பாத்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று சிறு வயது தோழமையை கண்ட மகிழ்வுடன் பேசியவள் திடீர்ரென, “நீ என்னை அடிச்சியா?” என்றாள் சந்தேகமாக.

நிலவோ அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு “நீ ரொம்பவும் யோசனையா இருந்த ரமி அதான் லேசா தட்டி எழுப்பி விட்டேன்லே” என்றவளின் கள்ளதானத்தை அவளின் கண்கள் காட்டி கொடுத்தன.

ரம்யா-“உன்னை என்ன பண்ணறேன் பாரு” என நிலாவிடம் சொன்னவள் கைகளில் சிக்கும் முன்னே சிட்டாக பறந்துவிட்டாள் நிலா.

சிறு பிள்ளைகள் போல் ஓடிவந்த இருவரும் கயலின் அலுவலக அறைக்குள் வந்ததும் அமைதியாகி விட்டனர்.

நிலா- ரம்யாவின் காதில் “சாயந்திரம் தோட்டத்துக்கு வா ரமி” என்றவள் அமைதியாக ராமின் அருகில் சென்று அமர்ந்துவிட்டாள்.

ஜாஸ்ஸிற்கு கயலை பார்த்தவுடன் பிடித்து விட்டது. பார்க்க மென்மையாக இருக்கும் பெண் வேலை தொடர்பாக பேசும்போது காண்பிக்கும் நிமிர்வு அவரின் மனதினை கவர்ந்தது.

“சரி கயல் மத்ததெல்லாம் நாளைக்கு பாக்கலாம்” என்று கூறியவர் அவர்கள் எப்பொழுதும் தங்கும் வீட்டிற்கு கிளம்பினர்.

அனைவரும் அவருடன் கிளம்பி விட்டனர், இவ்வளவு தொலைவு வந்த பயண களைப்பு நீங்க ஓய்வு எடுக்க சென்றனர்.

ராம் மட்டும் சிறு யோசனையுடன் கயலை பார்த்தவாறு இருந்தான்.

ரம்யாவின் குறும்பு தலை தூக்க “ என்ன அண்ணா நீங்க கிளம்பளையா, இல்ல கிளம்ப முடியலையா?” என்றவள்.

பின் அவனிடம் “எங்க கயலை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்றாள்.

அவளின் கேள்வியில் திகைத்தவன் , மெல்லிய புன்னகையுடன் “இல்ல ரம்யா இப்பதான் அவுங்களை பாக்குறேன்” என்றான்.

அந்த பதிலில் திகைத்து, அவனை கூர்மையாக பார்த்த ரம்யாவுக்கு அவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்தது.

‘பின் எப்படி இப்படி இல்ல நான் தான் அப்படி அப்படி யோசிக்கிறேன் போல, இது எப்படி, இப்படி எல்லாம் இருக்க முடியும் ஒரு வேளை அப்படி இல்லையோ’ என்று தன் மனசாட்சியிடம் கேட்டவளை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு, ‘உன் டைரில குறிச்சு வச்சுக்கோ ரமி, நீ முழுசா பைத்தியமா கூடிய நாள் வெகு விரைவில்’ என சொல்லிவிட்டு அவள் துரத்துவதற்குள் அது ஓடிவிட்டது.

ரம்யாவும், ராமும் பேசுவதை கவனித்தாலும் அதை கண்டுகொள்ளாமல், மற்றவர்களை வழியனுப்ப வெளியில் வந்து விட்டாள் கயல்.

அனைவரும் கிளம்பிய பிறகு அலுவலகத்தின் கதவுகளை மூடி விட்டு, அன்று விடுமுறை என்பதால் ரம்யாவுடன் தன் வீட்டுக்கு வந்து விட்டாள் கயல்.

ஆதி, ரவி இருவரும் அவர்களினை பார்த்துக்கொள்ள வந்திருந்த வேணியினை ( பிள்ளைகளை பள்ளியில் பார்த்துக்கொள்ளுபவர்) படுத்தாமல் அமைதியாய் காலை உணவை உண்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் குறும்பு பெரும்பாலும் வெளிவருவது ரம்யாவிடம் மட்டும் தான்.

வரும் வழி முழுவதும் அமைதியாக வந்தவள், உள்ளம் முழுவதும் ஒரே தவிப்பாக இருந்தது எதை எதிர்நோக்க அஞ்சி இங்கு வந்தாளோ! அதன் அடிப்படையே ஆட்டம் காண போகிறது, தன்னுடைய ஒழுக்கத்தினை இது வரை யாரையும் தவறாக பேசும் நிலை அவளுக்கு ஏற்படவில்லை.

இங்கு அவள் வரும்போது அவளின் சொந்த வாழ்க்கை பற்றி யாரும் எதுவும் கேட்டது இல்லை, அவளிடம் தோன்றும் நிமிர்வே பார்ப்பவர்களினை மரியாதை செலுத்த போதுமானதாக இருந்தது.

மேலோட்டமாக தன் வாழ்வினை பற்றி ரம்யாவிடம் சொல்லியிருந்தாலும், அவளிடம் கூட சில விடையங்களை சொன்னதில்லை.

தற்போது தான் பூதம் போல் மனதில் பூட்டி வைத்திருந்த ரகசியம் முழுதும் வெளிவரப் போக்கும் நிலையினை கண்டு அஞ்சினால் கயல்.

தன் மனதில் ஓடிய சிந்தனைகளுடன் வீட்டின் அருகில் வந்தவள், பிள்ளைகள் ஆவலுடன் வருவதை கண்டும் அதை கவனிக்காதது போல், “என்னன்னு தெரியல ரமி ஒரு மாதிரி இருக்கு, நீ கொஞ்சம் பசங்களை கவனி என்றவள், ரம்யாவின் பதிலை கூட பெறாமல் தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.

செல்லும் அவளை வினோதமாக பார்த்துக்கொண்டே ‘எப்படி இருந்தாலும் உண்மைய அதிக நாள் மறக்கமுடியாது’ என்று நினைத்தவாறு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்துவிட்டாள் ரம்யா.

அறைக்குள் வந்த கயலுக்கு தோன்றியது பயம் மட்டுமே, எங்கே தன் பிள்ளைகளை அவன் கண்டுகொண்டு விட்டால் பழைய படி யாரும் அற்று வாழ வேண்டியது வந்து விடுமோ என்று…

இவ்வளவு வளர்ந்து தற்போது ஒரு அமைப்பை திறன்பட நிர்வகித்துக் கொண்டிருந்த போதும், தனிப்பட்ட வாழ்வில் மட்டும் அவள் மனம் யாருமற்ற , அச்சம் நிறைந்த அனாதை சிறுமியாகவே யோசித்தது.

அவளின் உள்ளத்தின் துடிப்பு கண்களில் பெருகியது.

இந்த நிமிடத்தில் தனித்திருந்த அவளில் கண்களில் கண்ணீர் மட்டுமே அவளுடன் துணையாக அப்போது அந்த அறையின் இருந்தது.

மதிய உணவிற்கு அழைத்த போது கூட, ‘எனக்கு பசியில்லை ரமி’ என்றவளிடம் “சரி கொஞ்ச நேரத்தில் வெளில வா, பசங்களோட விளையாடலாம்” என்ற ரம்யாவிடம் ‘இப்போது வரமுடியாது’ என்று விட்டாள், கயலின் நிலையினை உணர்ந்து ரம்யாவும் எதுவும் சொல்லாமல் பிள்ளைகளை கவனித்துக் கொண்டாள்.

அங்கு பெரிய வீட்டில் அனைவரும் நன்கு ஓய்வு எடுத்து விட்டு மதிய உணவினை முடித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

ராஜ் தனது அண்ணனிடமும், அத்தை மகன்களிடமும் ரிசார்ட் தொடர்பாக கூறிக் கொண்டு இருந்தான்.

ராமின் கவனம் தனது சொற்களில் பதியவில்லை என்பதை உணர்த்த ராஜ் பேசுவதை நிறுத்தி விட்டு அமைதியாக தன் தமையனை பார்த்தான்.

விஷ்ணுவும் , செல்வமும் கூட ராமினை விசித்திரமாக பார்த்தனர். எனெனில் ராம் இப்படி இருப்பவன் அல்ல, செய்யும் வேலை எதுவென்றாலும் அதில் தனித்து தெரிபவன், எப்போதுமே, அவனின் ஆளுமையின் தான் அன்னைவரும் இருப்பார்கள், ஏன் ராஜின் முடிவுகள் கூட ராமின் வார்த்தைகளை பொறுத்தே அமையும்.

நண்பனின் நிலை கண்ட செல்வன் அவனை அழைப்பதற்கு முயன்ற பொழுது, ராஜின் சிறு விழி அசைவு அவனின் செயலை நிறுத்தியது.

ராஜ் தன் அன்னையை அழைத்தவன், “ மாம் வாங்க நம்ம தோட்டத்து பக்கம் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம், எனக்கு இந்த கிளைமேட்ல இங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவன், ராமையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

ராமின் முகத்தினை தெரிந்த குழப்பத்தை இந்த அழகிய இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலை மாற்றும் என்பது அவனின் எண்ணம்.

அவர்களுக்கு தனிமையை பரிசாக வழங்க எண்ணி செல்வன், விஷ்ணு இருவரும் தாங்கள் இங்கேயே இருப்பதாக சொல்லிவிட்டனர்.

மற்ற மூவரும் வெளியின் வந்தனர்

ஜாஸ்ஸிற்கு இங்கு வந்த பிறகு வேந்தனின் நினைவுகள் அலையென கிளம்ப, ஒரு வித மோன நிலையில் இருந்தவர் ராஜ் கூப்பிடவும் மனதினை மாற்ற எண்ணி அவனுடன் வந்து விட்டார்.

ராஜும் ,ஜாஸ்ஸும் பேசிக்கொண்டு வந்தனர் என்றால், ராம் இவர்களுக்கு பின்னே மெதுவாக அதேநேரம் அமைதியாக நடந்து வந்தான்.

ஜாஸ்ஸின் மனம் ஒரு நிலையில் இல்லை அதனால் ராமின் அமைதியை அவர் கவனிக்கவில்லை, ஆனால் ராஜ் பார்த்துக் கொண்டு தான் இருந்தான், ஆனால் அவனுக்கும் அதன் காரணம் தெரியவில்லை.

தோட்டத்தில் தான் ரம்யா பிள்ளைகளுடன் இருந்தாள். அவளை இவர்கள் யாரும் கவனிக்க வில்லை.

ரம்யாவும் பிள்ளைகளுடன் பந்து விளையாடிக் கொண்டு இருந்தாலும் மனம் முழுவதுமே வேறு சிந்தனையோடு இருந்தவளினை கண்ட ஆதியின் குறும்பு தலைதூக்கியது.

பந்தினை ஓங்கி ரம்யாவினை நோக்கி அடிக்க, அது அவளை தாண்டி நடந்து வந்துகொண்டிருந்த ராஜின் மீது விழுந்தது.

புதியவர்களை கண்டு பயந்து ஆதி, ரவி இருவரும் ரம்யாவின் பின்னே மறைந்து கொண்டனர்.

ரம்யாவும் இரட்டையர் இருவரும் தன்பின்னே ஒளிவதை கண்டு “என்னடா பட்டூஸ்?” என்றாள் கேள்வியாக.

அதற்குள் “அசையாத ரமி பேபி நாங்க பந்தை அந்த அங்கிள் மேல அடிச்சிட்டோம்” என்ற ரவியின் குரல் தவறு செய்த சிறிது பயத்துடன் ஒலித்தது.

ஆனால் பந்தை எறிந்த, ஆதி அப்படி ஒன்னும் பயந்து விடவில்லை. இருந்தாலும் அவனும் ரம்யாவின் பின்னே தான் மறைந்து நின்றிருந்தான் தெரியாத நபர்களை கண்டதால்.

ராஜ் தன் மீது விழுந்த பந்தினை கண்டவன் அது வந்த திசையில் நின்ற ரம்யாவை கண்டு தன் அன்னையுடன் அவள் அருகில் சென்று,

“எவ்வளவு நாளா வேண்டுதல் ரமிகுட்டி, இப்படி பந்துல என் தலைய உடைக்க?” என்றான் குறும்புடன்.

“நான் பந்தை போட்டேன்னு தெரியுமா ராஜ் அண்ணா?” என்றவள் பின் திருதிரு என முழித்தாள்.

அவளின் பாவனையில் ராஜிற்கு சிரிப்பு வந்தது. அவளின் தலையை பிடித்து “பொய் சொல்லாத ரமி குட்டி” என்றான்.

அவன் பேசும் விதம் தன் அண்ணனை போல் இருக்க மெல்ல ரம்யாவின் பின்னிருந்து எட்டி பார்த்தது அந்த சின்ன சிட்டு.

அதுவரை ராஜ் , ரம்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததை ரசித்திருந்த ஜாஸ், அப்போது ரமியின் பின்னால் இருந்து எட்டி பார்த்த அந்த அழகிய முகத்தினை கண்டவர் திகைப்பூண்டை மிதித்து போல் நின்றுவிட்டார். அவரின் அகன்ற பெரிய நீல நிற விழிகளில் காண்பதை நம்பமுடியாத அதிர்வு தோன்றியது.