En Jeevan neyadi 6

6
சுபத்ராவுக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? இத்தனை வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒருத்தி திடீரென்று வந்ததும் அனைத்து சொத்துக்களையும் சரிபாதியாகப் பிரித்துத் தரச் சொல்கிறார் பாட்டி.

இத்தனை வருடங்களாக உழைத்துப் பாதுகாத்த சொத்துக்களை பாட்டி சொன்னதும் மறுபேச்சுப் பேசாமல் பிரித்துத் தர சம்மதம் சொல்கிறான் பேரன். அதுவும் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை.

தனது தந்தையும் அவனது தந்தையுமே இன்று உயிரோடு இல்லை. அவர்களுடைய நட்பை இத்தனை வருடங்கள் கழித்தும் காப்பாற்ற நினைப்பவனைப் பார்த்து வியப்புதான் மேலோங்கியது.

பிறகு எதற்காக தாய் அங்கு அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, தன்னையும் வைத்துக்கொண்டு அவ்வளவு சிரமப்பட்டு தனித்து இருந்தாள், என்று எண்ணிக் கொண்டாள்.

மணிவாசகம் பற்றிய செய்திகள் அவளுக்குத் தெளிவாக சொல்லப்படவில்லை. அவள் மொத்தமாக அனைவருமே மோசமானவர்கள் என்று எண்ணியிருந்தாள். இன்று அவளது எண்ணங்கள் மாறுவதாய்…

சொத்தெல்லாம் எதுவுமே தேவையில்லை. இவ்வளவு நல்ல மனிதர்களின் பாதுகாப்போடு, ஒரு நல்ல வேலையும் கிடைத்துவிட்டால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவளுடைய கைகளை விடவே இல்லை அலர்மேல்மங்கை. ஆதரவாக அவரது அருகில் அமர்ந்து அவரது கரங்களை வருடியபடி இருந்தாள். மூதாட்டி கண்ணயர்ந்ததும் எழுந்து வெளியே வந்து சரஸ்வதி அருகே அமர்ந்தாள். சற்று தொலைவில் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

ஸ்ரீராமும் உடன் நின்றிருந்தான்.
அலைபேசி உரையாடலை முடித்தவன் அமர்ந்திருந்தவர்கள் அருகே வந்து, “நம்ம லாயர்கிட்ட பேசிட்டேன் பெரியம்மா… நாளைக்கே வர்றேன்னு சொல்லியிருக்காரு. முறையா எல்லாமே சரிபாதியா பிரிக்கலாம்னு சொல்லியிருக்காரு.”
சற்று மறுப்பை வெளியிட்ட முகத்தோடு, “எனக்கு சொத்துலாம் எதுவுமே வேண்டாம். நான் அதுக்காக வரலை. ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைச்சாகூட போதும். நான் ஹாஸ்டல்லகூட தங்கிப்பேன்” என்றாள் சுபத்ரா.

அவளை விநோதமாகப் பார்த்தவன், “உன்னோட மதிப்பு தெரியாம பேசிகிட்டு இருக்கற நீ. இன்னைக்கு என் பேருல இருக்கற எல்லா சொத்துக்கும் சரிபாதி சொந்தக்காரி நீதான். நியாயமா உனக்குச் சேரவேண்டியதை உன்கிட்ட குடுக்கத்தான் பாட்டி இருபது வருஷமா உங்களை தேடிகிட்டு இருந்திருக்காங்க.

ஹாஸ்டல்ல தங்க போறியா? அங்க நம்ம வீட்டை வந்து பாரு. உங்க அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த வீட்டை இதுவரைக்கும் எவ்வளவு பத்திரமா பாட்டி பாதுகாத்து வச்சிருக்காங்கன்னு.

அதெல்லாமே உனக்குச் சேரவேண்டியது. இதுவரைக்கும் எப்படியோ இனி நீ எங்க வீட்டு பொண்ணு. உனக்கு எல்லாமே செய்ய வேண்டியது என் பொறுப்பு புரியுதா?”

ஆச்சர்யமாக இருந்தது அர்ஜுனுக்கு. ‘பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் இந்த காலத்தில் வறுமையில் உழலும் போதும் இவ்வளவு சொத்துக்களை வேண்டாம் என்று சொல்கிறாளே!’
மேலும் மேலும் மறுத்தவளை, “இது வெறும் சொத்து பிரச்சனை மட்டுமில்ல. எங்கப்பா மேல உங்கப்பா வைத்த நம்பிக்கையும் நட்பும். . அதை காப்பாத்த வேண்டியது என்னோட கடமை. மறுத்து எதுவுமே பேசாத சுபத்ரா.”

திட்டவட்டமாக அவன் கூறிய பிறகு வேறெதுவும் பேசவில்லை சுபத்ரா. மருத்துவமனையில் யாரும் தங்க முடியாது ஆகையால் அனைவருமே வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கு ஒளியில் ஜொலித்த இரட்டை மாளிகையைப் பார்த்ததும் அவளுக்கு சிலிர்த்தது. மாதவன் சேதுபதி நட்புக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக நிமிர்ந்து நின்றன அந்த மாளிகைகள்.

இவ்வளவு வசதியான வாழ்க்கையை துச்சமாக மதித்து தன் தாய் வெளியேற என்ன காரணமாக இருக்கக் கூடும் என்று அவளது உள்ளம் சிந்தித்தபடி வந்தது. வீட்டின் வாசலில் கார் நின்றதும், பல வருடங்களாக அந்த வீட்டில் பணிபுரியும் செங்கமலம் ஆரத்தித் தட்டோடு வந்து நின்றார்.

அவருக்கு சரஸ்வதி ஏற்கனவே தகவல் கொடுத்திருக்க, அவளது வருகையை எதிர்பார்த்து தயாராக காத்திருந்தார். அவளைப் பார்த்ததும் அவருக்குமே கண்கள் கலங்கியது. அப்படியே கோமதியின் மறுபதிப்பாக நின்றவளை வாஞ்சையாகப் பார்த்தபடி ஆரத்தி சுற்றியவர்,

“உள்ள போ கண்ணு. ஏதோ கெட்ட நேரம். இத்தனை வருஷம் இந்த வீட்ட விட்டு உன்னை விலக்கி வச்சிருச்சி. இனி எல்லாமே நல்லதா நடக்கும்.” என்று கன்னம் கிள்ளி முத்தமிட சிரித்தபடி உள்ளே வந்தாள்.

“அர்ஜுன்… ஆடிட்டர் வீட்டுக்கு அந்த முக்கியமான ஃபைலை குடுக்கனும். அதுல கொஞ்சம் கரெக்ஷன் பார்த்துட்டு, நீ சைன் பண்ண வேண்டியது இருக்கு. அதை முடிச்சு குடு. நான் வீட்டுக்குப் போற வழியில அவர் வீட்டுக்குப் போய் குடுத்துடறேன்.”

“டேய்… மணி இப்பவே பத்தரை. இதுக்கு மேலயா அவர் வீட்டுக்குப் போய் ஃபைலைக் குடுக்கப் போற?”

“நேத்தே குடுத்திருக்க வேண்டிய ஃபைல். அதுக்குதான் நான் இன்னைக்கு காலையிலயே வீட்டுக்கு வந்தேன். நாம உடனே ஊருக்கு கிளம்பிட்டோம். இப்பதான் அவர்கிட்ட பேசினேன். எந்நேரமா இருந்தாலும் வெயிட் பண்றாராம். என்னைக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்றார்.”

ஸ்ரீராமும் அர்ஜுனும் ஆடிட்டரிடம் சேர்க்க வேண்டிய ஃபைலைப் பற்றி பேசிக் கொண்டே மாடிக்குச் சென்றுவிட, வரும் வழியிலேயே அனைவரும் உணவு உண்டிருந்ததால், அவளுக்கு விருந்தினர் அறையைக் காட்டி தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, சரஸ்வதியும் படுக்கச் சென்றார்.

சற்று நேரம் அறையைக் கண்களால் அளந்தவள், தான் இருந்த எட்டையபுரம் வீட்டின் மொத்த அளவில் ஒரு அறையே இருப்பதைப் பார்த்து வியந்தாள்.

இன்னும் கீழே சில அறைகள் இருந்தன. ‘மாடியிலும் அறைகள் இருக்கக்கூடும். அர்ஜுன் மாடிக்குத்தானே சென்றான். அந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய வீட்டை ஒன்று போல நண்பர்கள் இருவரும் கட்டி ஒற்றுமையாக இருந்திருக்கின்றனர்’ என்று எண்ணிக் கொண்டாள்.

சற்று நேரம் உறக்கம் வராமல் விழித்திருந்தவள், தண்ணீர் குடிக்கலாம் என்று வெளியே வந்தாள். வீட்டின் கதவு திறந்திருக்கவும் சற்று பயமாக இருந்தது. மெதுவாக வெளியே எட்டிப் பார்க்க, அர்ஜுன்தான் போர்டிகோவை ஒட்டியுள்ள புல்தரையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

இவளது மெல்லிய கொலுசொலியில் நிமிர்ந்தவன் புன்னகையுடன், “என்ன சுபத்ரா… தூக்கம் வரலையா?”
ஆமாம் என்று மெல்லத் தலையசைத்தவளை வரச் சொன்னவன் அவளுக்கும் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமரச் சொன்னான்.

சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி அமர்ந்தவள், “பயமா இல்லையா? இங்க தனியா உட்கார்ந்திருக்கீங்க.”
சத்தமாக நகைத்தவன், “பயமா? நம்ம வீட்டுக்குள்ள என்னம்மா பயம்? வீட்டு வாசல்ல செக்யூரிட்டீஸ் இருக்காங்க.

பின்பக்கம் சர்வென்ட்ஸ் வீடுங்க இருக்கு. அதுவுமில்லாம இப்பதான் ஸ்ரீராம் கிளம்பினான். அவனை அனுப்பிட்டு, காற்று நல்லா வீசவும் அப்படியே இங்க உட்கார்ந்தேன்.”
மின் வெளிச்சமும் நல்ல காற்றும் அவளது பயத்தை சற்று போக்கிவிட நன்கு வசதியாக அமர்ந்து கொண்டாள்.

சிறுவயதில் விபத்தில் தனக்கு அடிபட்டு பழையவை அனைத்தையும் மறந்து விட்டதைச் சொன்னான். தானாக நினைவு வரட்டும் என்று மருத்துவர் கூறியதால் அவளைப் பற்றி தகவல் கிடைக்கும் வரை எதுவுமே தனக்கு பாட்டி சொன்னதில்லை என்றும் கூறினான்.

பாட்டியைப் பற்றி கூறினான். பெற்றோர் இல்லாத போதும் அந்தக் குறையே தெரியாமல் வளர்த்த பாட்டியைப் பற்றியும் சரஸ்வதியைப் பற்றியும் கூறினான். அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

பாட்டியின் தற்போதைய உடல்நிலை குறித்து பகிர்ந்து கொண்டான். அவருடைய இறுதி காலங்கள் எந்த சஞ்சலமும் இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு அவளுடைய வருகையும் ஒரு காரணம் என்று நெகிழ்ந்து போனான்.

மணிவாசகத்தைப் பற்றி ஸ்வேதாவைப் பற்றியும் கூறினான். ஸ்வேதாவைப் பற்றி பேசும் போது அவன் கண்களில் மின்னிய காதலைக் கண்டவளுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

பாட்டியிடம் அவனது வாழ்க்கையைப் பற்றி பேசும் போதே அவன் வேறு யாரையோ விரும்புவது புரிந்தது அவளுக்கு. ஆர்வத்தோடு ஸ்வேதா பற்றி அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டாள்.

“உனக்கு ஸ்வேதாவ நியாபகம் இல்லைல்ல. நீ ரொம்ப சின்ன குழந்தையாம் அப்ப. அதனால உனக்குத் தெரியாது. ஸ்வேதாவுக்குத் தெரியுமான்னு தெரியல…. நாளைக்கு வருவா. ஆல் இந்தியா டூர் போயிருக்கா. முடிச்சிட்டு டெல்லியில இருந்து நாளைக்கு காலையில சென்னை வர்றா.
இன்னைக்கு முழுக்க நான் ஃபோன் போடலைன்னு அம்மணிக்கு ரொம்ப கோவம். இப்ப ஃபோன் போட்டா எடுக்கவே இல்லை.”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அலைபேசி சினுங்கியது. ஸ்வேதாதான் அழைத்துக் கொண்டிருந்தாள். சுபத்ராவை எதுவும் பேசாதே என்று சைகை செய்தவன், அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்ததும்,

“நான் கோபத்துல ஃபோனை எடுக்கலைன்னா, உடனே அதுக்கப்புறம் ஃபோன் பண்ணமாட்டீங்களோ… இன்னைக்கு முழுக்க என்கூட பேசலை. எங்க போனீங்க மாமா?”

“ஹேய் கூல்… கூல்… டைம் ஆகிடுச்சே நீ தூங்கிட்டியோன்னுதான்டா ஃபோன் போடலை. இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போயிருந்தேன்.

ஹேய் மேடம்… நாளைக்கு நீங்க இங்க வீட்டுக்கு வரும் போது மாமா உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்னு வச்சிருக்கேன்.”

“கிப்ட்டா… என்னது மாமா? இப்பவே சொல்லுங்க…”

“ம்கூம்… நாளைக்கு நீ வந்ததும் தெரியப் போகுது. நான் சொல்ல மாட்டேன். என்னன்னு நைட் ஃபுல்லா யோசி.”

“மாமா…” என்று சினுங்கியவள், மேலும் பல கதைகளைப் பேசிவிட்டு, மறுநாள் அவன் ஏர்போர்ட் வருவதை உறுதி செய்துகொண்டு பிறகு அலைபேசியை வைத்தாள்.
மெல்லிய விளக்கொளியில் முகமெல்லாம் புன்னகையில் விகசிக்க, கண்களில் வழிந்த காதலோடு அவன் அவனது மாமன் மகளுடன் பேசும் அழகை ரசித்திருந்தவள், “ஏன் என்னை பேச வேண்டாம்னு சைகை பண்ணீங்க? அவ்வளவு பயமா ஸ்வேதாவுக்கு?”

“ஹா… ஹா… பயமா? அதெல்லாம் இல்லை. பாட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க இல்ல. அது அவளுக்கு சர்ப்ரைஸ் ஷாக்கிங்கா இருக்கட்டும்னுதான். உன் குரல் கேட்டா உன்னை யாருன்னு கேட்பா… அப்புறம் எல்லாத்தையும் இப்பவே சொல்லனும் அதான்.”
தன் காதல் நிறைவேறப் போகும் சந்தோஷம் சற்று கூடுதலாகவே தெரிந்தது அவன் முகத்தில். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், சற்று நேரத்திலேயே வெகுநாள் பழகியவர்கள் போல இயல்பாகப் பேசிக் கொண்டனர். இருவருக்குமே சற்று நேரத்தில் தூக்கம் வரவும் எழுந்து உள்ளே சென்றனர்.

அர்ஜுன் வீட்டிலிருந்து கிளம்பிய ஸ்ரீராம் ஆடிட்டர் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தை விரைவாகச் செலுத்தினான். ஆடிட்டர் வீட்டை நெருங்கும் போது மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

அது வசதியான நான்கு தனித்தனி வீடுகளை கொண்ட அடுக்கு மாடி. ஆடிட்டர் வீடு கீழ்த்தளம். இவனுக்காக காத்திருந்தார் ஆடிட்டர் பரமசிவம். அவர் அந்த ஃபைலைப் பற்றிய சில விபரங்களைக் கேட்க… அவரிடம் அதைப் பற்றி விளக்கிச் சொல்லிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தான்.

ஏதோ சப்தம் வித்தியாசமாக கேட்கவும், குரல் வந்த திசையை நோக்கியவன் அதிர்ந்து போனான். இவனுடைய வண்டி சென்டர் ஸ்டான்ட் போட்டு நிறுத்தப் பட்டிருக்க அதன் மீது ஏறி நின்றிருந்தாள் ஒரு பெண். சன்ன குரலில், கையிலிருந்த அட்டை பெட்டியை வாங்கும்படி அவளுக்கு முன்னே காம்பௌண்டு சுவரில் ஏறியிருந்த பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சீக்கிரம் சன்ஷேட்ல காலை வச்சு ஏறிட்டு இந்த பாக்ஸைப் பிடி. இந்த வண்டிக்கு சொந்தக்காரன் வந்துடப் போறான். அவன் வண்டி மேல ஏறி நிக்கறத பார்த்தா தொலைச்சிடுவான். நானும் டக்குன்னு மேல ஏறிடறேன்” என்க… மேலே ஏறிய பெண்ணோ லேசாக நடுங்கிக் கொண்டிருந்தாள்.

“இருடி… அவசரப்படுத்தாத. கீழ விழுந்து வச்சிடப் போறேன். அந்த சன்ஷேட்ல ஏறிட்டா பால்கனிக்கு தாவிடலாம்.” என்றபடி ஏற முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“ஹலோ… இங்க என்ன நடக்குது? என் வண்டிமேல ஏறி என்ன பண்றீங்க?” அந்த அமைதியான தெருவில் அவனது குரல் ஆளுமையோடு வரவும் சட்டென்று பயந்து பேலன்ஸ் தடுமாறியவள், ஒரு நொடியில் காம்பௌண்டு சுவரைப் பிடித்து சுதாரித்தாள்.

‘ஹைய்யையோ… வண்டிக்கு சொந்தக்காரன் வந்துட்டானே…’ என்று உள்ளுக்குள் உதறினாலும்… சரி சமாளிப்போம் என்று எண்ணியவள், “ஏன் சார் கத்துறீங்க? உங்க மேலயா ஏறி நிக்கறேன்? வண்டி மேலதான…” என்றபடி ஸ்ரீராமைப் பார்க்கவும் வியப்பில் அவளது புருவங்கள் மேலேறியது.

‘எவ்வளவு திமிர்? என் வண்டி மேல ஏறி நின்னதுமில்லாம… என் மேல வேற ஏறி நிப்பாளாமே…’ பல்லைக் கடித்தவன்,
“நடு ராத்திரியில சுவர் ஏறிக் குதிச்சிட்டு இருக்கீங்க? திருட்டு கும்பலா…” என்றபடி தனது அலைபேசியை எடுக்க,

மேலே நின்றிருந்த பெண், “சார் எங்களைப் பார்த்தா திருடற மாதிரியா தெரியுது? முதல் மாடி வீடு எங்க ப்ரெண்டு வீடு சார்.

அவங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள். சர்ப்ரைஸ்ஸா கொண்டாடலாம்னு பிளான் பண்ணி வந்தோம். காம்பௌண்டு ஏற உங்க வண்டி வாட்டமா இருந்துச்சு. அதான் ஏறிட்டோம். சாரி சார்.”

“நீ ஏன்டி பயப்படற? அதெல்லாம் சார் ஒன்னும் சொல்ல மாட்டாரு. சார் ரொம்ப நல்லவருடி.” என்றவளின் குரலில் வழிந்த நக்கலில் அவளை நன்றாக கவனித்தான்.

‘எவ்வளவு திமிராகப் பேசுகிறாள்? எங்கேயோ பார்த்த மாதிரி வேறு இருக்கிறதே…’ அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவனை,

“என்ன சார் இன்னும் பல்ப் எரியலையா? இன்னைக்கு விடிய விடிய யோசிங்க அப்பவாவது நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா பார்க்கலாம்” என்றவள் முன்னவள் சன்ஷேடில் ஏறியிருக்கவும், அட்டைப் பெட்டியை அவளிடம் தந்து விட்டு, இவளும் லாவகமாகத் தாவி காம்பௌண்டில் ஏறி சன்ஷேடில் தாவினாள்.

“மங்கிக்கே செம டஃப் குடுப்பா போலவே… இப்படித் தாவுறா… நம்மள வேற தெரிஞ்ச மாதிரி பேசறா… யாருன்னே நமக்குத் தெரியலையே…’ என்ற யோசனையோடு தாடையைத் தடவியபடி அவளையே பார்த்திருந்தான்.

அடர் நீல ஜீன்ஸ்… வெளீர் ஊதா நிற டாப்ஸ். குட்டையான முடியை பிரெஞ்சு பின்னல் பின்னியிருந்தாள். காதுகளில் வளையம் ஊஞ்சலாடியது. நல்ல வனப்பான உடல்வாகும் வெளீர் மஞ்சள் நிறமும் கொண்டு ஜொலித்தாள்.

அதற்குள் பால்கனியில் ஏறிக் குதித்திருந்தவள், எட்டி இவனுக்கு கைகாட்ட… சுத்தமாகக் குழம்பிப் போனான்.

‘யாரிவள்? சுத்தமாக நினைவுக்கு வரவில்லையே…’ என்று எண்ணியபடியே வண்டியைக் கிளப்பியவன் மீண்டும் திரும்பி பால்கனியைப் பார்க்க, அங்கே நின்று வேகமாகக் கையாட்டியவளைக் கண்களில் நிரப்பிக் கொண்டு போக்குவரத்தில் கலந்தான்.

மறுநாள் விடியலில் வழக்கம் போல எழுந்து காலைக்கடன்களை முடித்து குளித்து எளிமையான உடையில் வெளியே வந்த சுபத்ரா, சமையலறையில் அரவம் கேட்கவும் அங்கே சென்றாள்.

செங்கமலம் காலை உணவுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்க, பின்புறமாக இருந்த தோட்டத்தில் பூஜைக்குப் பூ பறித்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி.

“காலையில என்ன கண்ணு குடிப்ப?”

எதுவேணும்னாலும் குடுங்கமா” என்றவள் சரஸ்வதி பறித்து வந்த பூக்களை அழகாக தொடுக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் உடற்பயிற்சி முடித்து வந்த அர்ஜுன் இலகுவாக காலை வணக்கம் சொல்ல, அதைவிட இலகுவாக பதில் வணக்கம் சொன்ன சுபத்ராவை ஆச்சர்யமாகப் பார்த்தார் சரஸ்வதி.

“நேத்து எனக்குப் புது இடம்னு தூக்கமே வரலை அத்தை. அப்ப நானும் அவங்களும் பேசிகிட்டு இருந்தோம்.” என்றபடி அர்ஜுனுக்குத் தயாரித்திருந்த தேநீரை எடுத்து சென்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தாள்.

“தேங்க்ஸ்… சீக்கிரம் கிளம்பிட்டீன்னா, கோவிலுக்குப் போயிட்டு அப்படியே ஹாஸ்பிடலுக்குப் போகலாம். பாட்டி எழுந்ததும் உன்னைத் தேடுவாங்க. உங்களை அங்க விட்டுட்டு நான் ஏர்போர்ட் போகனும் ஸ்வேதாவைக் கூப்பிட.”

“ம்ம்… சரி.” என்றவள் சரஸ்வதியிடமும் விபரம் கூற, அதன்பின் விரைவாக கிளம்பினர். காலை உணவை முடித்ததும் மூவரும் பெசன்ட்நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வழிபட்டதும் மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவர்களை அங்கு விட்டுவிட்டு, பாட்டியைப் பார்த்தவன், அவருடன் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு ஸ்வேதாவை அழைத்து வருவதற்காக ஏர்போர்ட்டுக்குச் சென்றான்.

அவன் போக்குவரத்து நெரிசலில் நீந்தி விமான நிலையம் செல்வதற்குள், ஸ்வேதா வந்த விமானம் தரையிரங்கி அவர்கள் அனைவரும் வெளியே வந்து அர்ஜுனுக்காக காத்திருந்தனர். சற்று தாமதமாக வந்தவனை வெகுவாக முறைத்துக் கொண்டாள் ஸ்வேதா.

“நேத்து அவ்வளவு தூரம் சொல்லியும் லேட்டா வந்திருக்கீங்க மாமா” வெகுவாக முறுக்கிக் கொண்டாள்.

“ஹேய்… பாட்டியைப் போய் ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு அப்படியே நேரா இங்கதான் வரேன். சாரிடா… ட்ராபிக்ல கொஞ்சம் லேட்டாகிடுச்சி.”

“அம்மாவுக்கு எப்படி இருக்கு மாப்ள?” என்று நிதானமாக மணிவாசகம் கேட்கவும்,

“ம்ம்… அப்படியேதான் மாமா இருக்காங்க. வயசாகிடுச்சி. எந்த ட்ரீட்மெண்ட்டையும் உடம்பு ஏத்துக்க மாட்டேங்குது. ஆனா இன்னைக்கு காலையில கொஞ்சம் தெளிவா இருந்தாங்க.” என்று பதில் கொடுத்தவன், இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல நின்றிருந்த லோகேஸ்வரியைப் பார்த்து நொந்து போனான்.

ஸ்வேதாவுமே அவனுடன் பேச காட்டிய அக்கறையில் பாதியைக் கூட உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் பாட்டியை விசாரிப்பதில் காட்டவில்லை. சரி நேரில் பார்க்கட்டும், பாட்டியும் மகனை பார்க்க ஆசைப்படுவார்கள் என்று நினைத்து அவர்களை நேராக மருத்துவமனைக்கு அழைத்துவந்தான்.

“என்ன மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போகாம ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?”
“பாட்டியை இங்கதான் அட்மிட் பண்ணியிருக்கு ஸ்வேதா. அவங்களைப் பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்.”

“ஹைய்யோ… பதினைஞ்சு நாள் டூர் சுத்தினது அலுப்பா இருக்கு. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன். அதுவுமில்லாம எனக்குதான் மருந்து ஹாஸ்பிடல் வாடையெல்லாம் அலர்ஜியில்ல. நான் கார்லயே இருக்கேன். நீங்க போய் பார்த்துட்டு வாங்க.”

அவள் பேசியதில் கடுப்பாகி அர்ஜுன் முறைக்க, அவனை முந்திக் கொண்ட மணிவாசகம், “அட என்னம்மா நீ… பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு மாப்ள அவ்வளவு கவலைப்படறாரு. நீ இப்படி பண்ற. எதுவும் பேசக்கூடாது. உள்ள வந்து பாட்டியைப் பாரு.”

“நல்லா சொல்லுங்க மாமா. எப்ப எப்படி நடந்துக்கனும்னு இன்னும் தெரியலை உங்க பொண்ணுக்கு. பாட்டி எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. அவங்ககிட்ட ஜோடியா ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்னு நினைச்சுதான் நேரா இங்க கூட்டிட்டு வந்தேன்.”
அவன் கூறியதைக் கேட்டதும் வெகுவாக மகிழ்ந்து போயினர் மூவரும்.

“நிஜமாவா… மாப்ள?”

“நிஜமாவா மாமா? அதுதான் நேத்து சர்ப்ரைஸ் கிப்ட்னு சொன்னீங்களா? ஹைய்யோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா” என்று குதித்தவளைப் பார்த்து அவனுக்கும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

“நிஜமாதான். மனப்பூர்வமா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.” என்றபடி நடந்தவனை பின்தொடர்ந்தனர் மூவரும்.
மணிவாசகத்தின் மனதுக்குள்,

‘எப்படி தாய்க்கிழவி ஒத்துக்கிச்சி…? உயிரோட இருக்கற வரை ஒத்துக்காதுனு நினைச்சேன். பரவாயில்லையே, படுக்கையில கிடக்கும்போது பேரன் கல்யாணத்தைப் பார்க்க நினைச்சிருக்கு போல… எது எப்படியோ நம்ம நெடுநாளைய கனவு நிறைவேறப் போகுது. இனி அந்த வீடு சொத்து தொழில் எல்லாத்துலயும் உரிமையோட வலம் வரலாம்’ என்று மகிழ்ந்தபடி வந்தவர் அந்த மருத்துவமனை ஐசியுவின் வாயிலில் நின்றிருந்த சுபத்ராவைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தபடி, “மாப்ள… இது…?”

“இவ சுபத்ரா… மாதவன் மாமா கோமதி அத்தை பொண்ணு. இத்தனை நாள் எங்க இருந்தாங்கன்னே தெரியாம இருந்தாங்க. இப்பதான் இவங்க இருக்கற இடத்தோட தகவல் தெரிஞ்சதும் போய் கூட்டிட்டு வந்தோம் மாமா.”

“…”

“சுபத்ரா… இது எங்க மாமா மணிவாசகம். இவங்க எங்க அத்தை லோகேஸ்வரி. இவதான் என் குயின் ஸ்வேதா.”

அர்ஜுன் அறிமுகப்படுத்தவும் புன்னகையோடு கரம் குவித்து வணக்கம் சொன்னவளை மூவரும் பார்த்த பார்வைகள்…

லோகேஸ்வரியும் ஸ்வேதாவும் ஆராய்ச்சியாக பார்க்க, மணிவாசகத்தின் பார்வையிலோ குரோதம் பொங்கி வழிந்தது.

தொடரும்…

error: Content is protected !!