PunnagaiMannan-7

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 7

அர்ஜூன் ஆஃபீஸில் அமர்ந்திருந்தான். மனம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு மதுராவைச் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்துக் கிறுக்கே பிடித்துவிடும் போல இருந்தது.

ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான். அவனின் தொலைந்து போன சுவர்க்கம் அவள். மனைவியைத் தேடி அலைந்தவனுக்குப் பரிசாக மகளையும் கொண்டு வந்த தேவதை அவள்.

இரவு முழுவதும் அவன் தூங்கவே இல்லை.‌ மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிய, தூக்கம் காணாமற் போயிருந்தது.

டெல்லியில் அவன் பார்த்த அதே மதுரா நேற்று அவனுக்குத் தரிசனம் கொடுத்திருந்தாள். அந்தக் குறும்புகளும், சேட்டைகளும் கொஞ்சமே கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தன.

பிரிய மனமின்றி வெட்டிக்கதை பேசியபடி சிறிது நேரம் நின்றுவிட்டுத்தான் கிளம்பி இருந்தார்கள். அந்தப் பொழுதில் கூட அவனை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் போனாள்.

‘என்ன அர்ஜூன்! சிக்ஸ் பாக் எல்லாம் மெயின்டெயின் பண்ணுற மாதிரித் தெரியுது?’

‘கல்யாணம் ஆகாத கட்டிளங்காளை இல்லையா மதுரா. இதெல்லாம் பண்ணினாத்தானே பொண்ணுங்க திரும்பிப் பார்ப்பாங்க?’ அவளைப் பற்றி நன்கு தெரிந்ததால் வேண்டுமென்றே அவிழ்த்து விட்டான் அர்ஜூன்.

முகம் சிவந்து போக நடந்துவிட்டாள் பெண். அர்ஜூன் சத்தமாகவே புன்னகைத்திருந்தான். அது இன்னுமே அவளைக் கடுப்பேற்றி இருக்க, திரும்பி முறைத்தவள் அப்படியே போய்விட்டாள்.

அவளும் என்னிடம் வரமாட்டாளாம். ஆனால் யாரும் என்னைப் பார்த்துவிடவும் கூடாதாம். இது என்ன நியாயம் ஆண்டவா? சிரித்தபடி இருந்த அர்ஜூனைக் கலைத்தது தயாளனின் குரல்.

“என்ன அர்ஜூன்? உலகம் மறந்து சிரிக்கிற? கதவைத் தட்டினேன் சத்தமே இல்லை?”

“ஓ… அப்படியா! வா வா…” இப்போதும் சிரித்தான் அர்ஜூன்.

“அடேங்கப்பா! ரொம்ப நாளைக்கு அப்புறமா உன்னோட முகத்துல பழைய சிரிப்பைப் பார்க்க முடியுது.”

“அதான் வந்துட்டா இல்லை. இனி அடிக்கடி பார்ப்பே.”

“ஓ… சங்கதி அப்படிப் போகுதா? வீட்டுல தெரியுமா?”

“ம்ஹூம்… இன்னும் சொல்லலை.”

“சரி… இப்போ என்னை எதுக்கு அவசரமா வரச்சொன்னே?”

“தயா… இந்த சஞ்சீவ் இருக்கான் இல்லை?”

“யாரு? மதுராவோட அத்தை பையனா?”

“ம்… அவன் மேல எனக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் வரமாட்டேங்குது.” அர்ஜூன் சொல்லவும் தயாளன் இப்போது கேலியாகச் சிரித்தான்.

“பொறாமை வரத்தானே செய்யும் அர்ஜூன்.”

“அப்படி இல்லை தயா. நான் பொறாமைப் படுற அளவுக்கு அவங்கிட்டே எதுவுமே இல்லை. என்னோட பொண்டாட்டியையும், மகளையும் தவிர.”

“ம்ஹூம்… மேலே சொல்லு.”

“ஏதோ மதுராக்கு நல்லது பண்ணுற மாதிரி நடிச்சுக் கல்யாணம் பண்ணி இருக்கான். பின்னாடி வர்றதை அப்புறமாப் பார்த்துக்கலாம்… இப்போ நான் சொல்லுறதுக்குத் தலையை ஆட்டுன்னு சொல்லி இருக்கான்.”

“அப்போ நல்லதுதானே பண்ணி இருக்கான் அர்ஜூன்?”

“எப்படி தயா? நல்லது பண்ண நினைச்சவன் பின்னாடி எதுவுமே பண்ணலையே?”

“உன்னோட உயிருக்கு ஆபத்து வரும்னு நினைச்சிருக்கலாம் இல்லையா?”

“ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி மதுரா எங்கிட்டத்தான் இருக்கான்னு சொல்லக் கூடவா முடியாது?”

“சொன்னா நீ சும்மா இருப்பியா? இப்போ கிளம்பின மாதிரித்தான் அப்பவும் கிளம்பி இருப்ப.”

“சரி… நீ சொல்ற மாதிரியே இருந்தாலும், ஆரம்பத்துல சொல்லாம விட்டாலும் நான் கால் ஊன்றினதுக்குப் பிறகு சொல்லி இருக்கலாம் இல்லை. அப்பவும் ஏன் சொல்லலை?”

“ம்… இது நியாயமான கேள்விதான்.”

“அப்பனும், மகனும் தான் ஏதோ பண்ணுறானுங்க. அது எனக்கு நல்லாவே புரியுது. எனக்கு ரெண்டு பேர் பத்தியும் ஃபுல் டீடெயில்ஸ் வேணும் தயா. அதுவும் அந்த மதி நிலவன் பத்தி எனக்கு முழுசாத் தெரியணும் தயா. ஏற்பாடு பண்ணு. அவன் பண்ணுற பிஸினஸ் முதற்கொண்டு அவனோட ஜாதகமே என்னோட கைக்கு வரணும்.”

“டன்! கொஞ்சம் டைம் குடு. பக்காவா ரெடி பண்ணுறேன்.”

“ம்…”

“கவனம் அர்ஜூன். எதுக்கும் தயங்காத ஆளுங்க அவனுங்க.”

“இந்த முறை தைரியம் இருந்தாக் கை வெச்சுப் பார்க்கட்டும். நான் யாருன்னு காட்டுறேன்.” அர்ஜூன் கறுவிக்கொள்ள தயாளன் நண்பனின் தோளைத் தட்டிக்கொடுத்தான்.

“அப்படி என்னதான் இருக்கோ இந்த லவ்வுல?‌ நீங்கெல்லாம் இந்த ஆட்டம் போடுறீங்க.”

“அதெல்லாம் அனுபவிச்சுப் பார்க்கணும் தயா.” புன்னகைத்தபடி இவன் சோம்பல் முறிக்க தயாளன் நகர்ந்து விட்டான்.

*************

ஃபோன் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள் மதுரா. மகளுக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள். வேலை தடைப்பட்ட எரிச்சலோடு ஃபோனைப் பார்த்தவள் முகம் மலர்ந்து போனது.

அர்ஜூன் அழைத்துக் கொண்டிருந்தான். அவன் நம்பரைக்கூட வேறு பெயரில் தான் சேவ் பண்ணி வைத்திருந்தாள். எந்தவகையிலும் அவனை வெளிப்படுத்த அவள் முயற்சிக்கவில்லை.

“அர்ஜூன்!”

“என்ன பண்ணுற செர்ரி?”

“உங்க பொண்ணுக்கு மெஹந்தி போடுறேன். சொல்லுங்க. ஏதாவது அவசரமா?”

“ஏய்! ஏதாவது அவசரம்னாத்தான் நான் கூப்பிடணுமா?”

“அப்படியில்லை… சொல்லுங்க அர்ஜூன்.” ரூமின் கதவு லாக் பண்ணியிருந்த தைரியத்தில் சாவகாசமாகப் பேசினாள் மதுரா.

“பொண்ணுக்கு சீக்கிரமா மெஹெந்தியைப் போட்டுட்டு வா செர்ரி. உங்கூட நான் கொஞ்சம் பேசணும்.” அவன் குரலில் இருந்த குழைவு மதுராவிற்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.

“ஏன்? பொண்ணு பக்கத்துல இருந்தா நீங்க பேசமாட்டீங்களா? கை தான் மெஹந்தி போடுது. வாய் உங்கக் கூடத்தானே பேசுது. நீங்க அதனால தாராளமாப் பேசலாம்.”

“அடிதான் வாங்கப்போற மதுரா.”

“ம்ஹூம்… நீங்க பேசுங்க அர்ஜூன்.”

“ஏய்… ப்ளீஸ்டீ… இதுக்குக் கூடவா எனக்குக் குடுத்து வெக்கலை?” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே குழந்தையின் குரல் கேட்டது.

“யாரு செர்ரி ஃபோன்ல?” அப்பாவும் மகளும் ஒன்று போலத் தன்னை அழைக்கவும் சிரித்தாள் மதுரா. ஆனால் அர்ஜூன் மதுராவின் பதிலை ஆவலாக எதிர்பார்த்தபடி இருந்தான்.

“அதான் எம் பொண்ணு கேக்கிறா இல்லை. பதில் சொல்லு செர்ரி.”

“சின்னக்குட்டி பாட்டிக்கிட்டப் போறீங்களா? அம்மா ஃபோன் பேசிட்டு வந்திர்றேன்.”

“ம்…” குழந்தை நகரும் சத்தம் கேட்கவும் அர்ஜூனுக்குக் கோபம் வந்தது.

“எம் பொண்ணு கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலை மதுரா.” அவன் செர்ரி காணாமற் போயிருந்தது.

“அதுக்கான நேரம் இன்னும் வரலை அர்ஜூன். அது சரி… என்ன பாட்டுச் சத்தம் கேக்குது?”

“ம்… கார்ல இருக்கேன். உனக்குப் பிடிச்ச பாட்டுத்தான், கேக்குறியா?” கேட்டபடியே சத்தத்தைக் கூட்டினான் அர்ஜூன். சுஜாதாவின் குரல் சுகமாக வந்து கொண்டிருந்தது.

‘கடவுள் இல்லையென்றேன் தாயைக் காணும் வரை… கனவு இல்லையென்றேன் ஆசை தோன்றும் வரை… காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக் காணும் வரை…’

அந்தப் பாடல் வரிகளுக்குள் மதுரா கரைந்து போனாள். அவனோடு ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு திரிந்த டெல்லி நாட்கள் ஞாபகம் வந்தது. அவனோடுப் பகிர்ந்து கொண்ட இதழ் முத்தங்கள் இப்போதும் தித்தித்தது.

“அர்ஜூன்!” அந்தக் குரலிலேயே அவள் மனம் படித்தான் அர்ஜூன்.

“கிளம்பி வர்றியா, ஒரு ட்ரைவ் போகலாம்.” அவன் ஆசையாகக் கேட்கத் தலையாட்டினாள் மதுரா… இல்லையென்று.

“ஏன் செர்ரி?”

“யாராவது பார்த்திட்டாப் பிரச்சனை ஆகிடும்.”

“இன்னும் எத்தனை நாளைக்கு செர்ரி?”

“அது தெரியலை.”

“நான் இப்போ எங்க நிக்கிறேன் சொல்லு?”

“எங்க? ஆஃபீஸ்லயா?”

“ம்ஹூம்…‌ உன் வீட்டு முன்னாடி.”

“அர்ஜூன்!”

“ரூம்லயே இரு. வெளியே வந்திடாதே.‌ உன்னைப் பார்த்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“அர்ஜூன்… நான்…” அவள் முடிக்கும் முன் ஃபோனை நிறுத்தி இருந்தான் அர்ஜூன். அவள் நிச்சயம் இதற்குச் சம்மதிக்க மாட்டாள் என்று தெரியும்.

ஆனால் மதுரா தவித்துப் போனாள். அர்ஜூன் பண்ண நினைக்கும் காரியம் அவளுக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் இது சாத்தியப்படுமா? அப்போது அந்தஸ்து பேதம் பார்த்த தன் குடும்பம் இப்போதும் கவுரவம் பார்க்கும் தானே. ஆனால் இதைப் பற்றியெல்லாம் அர்ஜூன் கவலைப்படவே இல்லை.

அர்ஜூன் உள்ளே நுழையும் போது முதலில் பார்த்தது மலர் தான். மதுராவின் அம்மா. இவனைப் பார்த்ததும் அந்தப் பெண்மணி கொஞ்சம் ஆடிப்போனாற் போலத்தான் தெரிந்தது.

“வா…ங்க…” அந்தக் குரலில் அத்தனைத் தயக்கம். அவனை வரவேற்பதா இல்லையா என்று கூட அவருக்குத் தெரியவில்லை.

“யாரு அத்தை?” கேட்டபடியே வந்த சஞ்சீவ் இவனைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொன்னது. அவனைப் பார்த்த போது அர்ஜூனுக்குக் கோபம் கிறுகிறுவென்று ஏறியது. அடக்கிக் கொண்டான்.

“என்ன வேணும் உங்களுக்கு?” அவன் கேட்ட தோரணையில் அர்ஜூன் அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்.

“ஏன்? நான் எனக்குத் தேவையானதைக் கேட்ட உடனேயே நீங்க தூக்கிக் குடுக்கப் போறீங்களா?” முதற் பார்வையிலேயே அங்கு வார்த்தைகள் மோதிக் கொண்டன.

“சஞ்சீவ்… கொஞ்சம் பொறுமையா இருங்க.” இது மலர்.

“நான் மதுராவோட அப்பாவைப் பார்க்க வந்தேன்.” வேண்டுமென்றே மதுராவில் ஒரு அழுத்தம் கொடுத்தான் அர்ஜூன்.

“இப்போ மாமா யாரையும் பார்க்குற கன்டிஷன்ல இல்லை.”

“அர்ஜூன்… அர்ஜூன் பார்த்தசாரதி வந்திருக்கேன்னு சொல்லுங்க. அதுக்கப்புறமா பார்க்கிறதா இல்லையான்னு அவர் முடிவு பண்ணட்டும்.” அர்ஜூனும் பிடிவாதமாகவே நின்றிருந்தான்.

“அர்ஜூன்… அவர் இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து பொழைச்சு வந்திருக்கார். இந்த நிலைமையில வீணான வாக்குவாதங்கள் வேணாம்பா.” மலரின் குரல் கெஞ்சியது.

“உங்க வீட்டுக்காரர் இதுக்கெல்லாம் நொந்து போற அளவுக்கு அவ்வளவு லேசுப்பட்ட ஆளில்லை அத்தை. நீங்க பயப்படாதீங்க.” அவன் மலரை அத்தை என்று அழைக்கவும் சஞ்சீவின் முகம் தணலானது.

இவர்கள் இருவரையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது உள்ளே போனான் அர்ஜூன். சோஃபாவில் காலை நீட்டிச் சாய்ந்த படி டீவி பார்த்துக் கொண்டிருந்தார் மனிதர்.

அர்ஜூன் அங்கிருந்த ரிமோட்டை எடுத்தவன் டீவியை ஆஃப் பண்ணினான். இவனை எதிர்பார்க்காத அவர் முகம் கேள்வியாகப் பார்த்தது.

“எப்படி இருக்கீங்க சார்?” மலரை இலகுவாக அத்தை என்று அழைக்க முடிந்தவனால் உதய நாராயணனை மாமா என்று அழைக்க வாய் வரவில்லை.

“இப்போ வரைக்கும் நல்லாத்தான் இருந்தார். இனி என்ன ஆகப்போகுதுன்னு தெரியலையே?” பதில் சொன்னபடி வந்தார் அன்னபூரணி. மதுராவின் அத்தை.

“சஞ்சீவ்! வாசல்ல நின்ன நாய் என்ன ஆச்சு? ஒழுங்கா வேலை பார்க்குதா இல்லையா?” அந்தக் குரலில் இருந்த நையாண்டியில் மலரே ஒரு கணம் ஆடிப்போனார். ஆனால் அர்ஜூன் நிதானமாகத்தான் இருந்தான்.

“என்னோட பொருள் ரெண்டைத் தொலைச்சிட்டு ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு அலையுறேன். அது உங்க வீட்டுல தான் இருக்கிறதா இப்போதான் தகவல் கிடைச்சுது. அதை எங்கிட்டயே திருப்பிக் குடுத்துட்டீங்கன்னா வசதியா இருக்கும்.”

“இங்கப்பாரு தம்பீ… இங்க உன்னோட பொருள்னு எதுவுமே இல்லை. உன்னோட பொருளை வெச்சிருக்கிற அளவுக்கு நாங்க தரம் தாழ்ந்தும் போகலை. புரியுதா?”

“மிஸ்டர்.உதய நாராயணன்… என்னோட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை. உங்க சார்பா மத்தவங்க தான் பேசிக்கிட்டு இருக்காங்க. இதுதான் உங்களோட முடிவா?”

“ஆமா! நான் பேசினாலும் எங்கண்ணன் பேசினாலும் எல்லாமே ஒன்னுதான்.” சற்று ஆங்காரமாகவே வந்தது அன்னபூரணியின் பதில்.

அர்ஜூன் சற்று நேரம் மதுராவின் அப்பாவைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவர் முகத்தில் சின்னதாக ஒரு தயக்கம் தெரிந்த போதும் வாய் திறக்கவில்லை.

“விளைவுகள் விபரீதமா இருக்கும் சார். சந்திக்கத் தயாரா இருங்க.” என்றவன் விடுவிடுவென வெளியேறிவிட்டான். அதிர்ச்சியாக நின்றிருந்த மலரிடம் வந்தவன்,

“பொண்ணு இனிமேலாவது சந்தோஷமா இருக்ணும்னு நினைச்சீங்கன்னா எங்கூட நில்லுங்க.” என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.

மலர் சட்டென்று திரும்பித் தன் கணவரைத் தான் பார்த்தார். அவரும் போகும் அர்ஜூனைத்தான் பார்த்திருந்தார். ஆனால் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

****************

அன்று இரவு தன் ரூமில் மகளைத் தூங்க வைத்தபடி தானும் படுத்திருந்தாள் மதுரா. இப்போதுதான் டின்னரை முடித்துவிட்டு ரூமிற்கு வந்திருந்தாள்.

அர்ஜூன் வந்தது பற்றி அங்கு யாரும் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளும் தெரியாத மாதிரியே காட்டிக் கொண்டாள். ஆனால் மலர் அனைத்தையும் மகளிடம் ஒப்புவித்து இருந்தார். மகளின் தலையை வருடியபடி இருந்தது அவள் கை.

“செர்ரி.” அந்தக் குரலில் கலைந்தவள் குனிந்து மகளைப் பார்த்தாள். அர்ஜூன் அவளை அழைத்தது போலவே இருந்தது.

“என்னடா குட்டி?”

“ஏதாவது ஸ்டோரி சொல்லுங்களேன்.”

“இன்னைக்கு ஸ்டோரி வேணாம்டா. அம்மா உங்கக்கூட கொஞ்சம் பேசணும்.”

“பேசுங்க.” பெரிய மனுஷி போல வந்தது பதில்.

“இன்னைக்கு ஃபோன்ல யாருன்னு நீங்க கேட்டீங்க இல்லை.”

“ஆமா.”

“அம்மாக்கூட பேசினது யாரு தெரியுமா?”

“யாரு?”

“ஆதர்ஷினியோட அப்பா.”

“அப்போ சஞ்சு யாரு?” இந்தக் கேள்வியில் மதுரா கொஞ்சம் திணறிப் போனாள்.

“சஞ்சு அம்மாவோட குட் ஃப்ரெண்ட். அவ்வளவுதான்.”

“அப்போ என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சஞ்சுதான் உன்னோட டாடின்னு சொன்னாங்களே?”

“இல்லையில்லை… குட்டியோட அப்பா யாருன்னு உங்க ஃப்ரெண்ட்ஸுக்குத் தெரியாது இல்லையா? அதுதான் அப்படிச் சொல்லி இருக்காங்க. ஆனா அம்மாக்குத் தெரியும் இல்லையா?”

“ஓ…”

“குட்டிம்மா… ஆனா இதை நீங்க இப்போ யாருக்கிட்டயும் சொல்லக் கூடாது சரியா?”

“அப்பா எப்படி இருப்பாங்க?” அந்தக் கேள்வியில் மதுராவின் கண்கள் கலங்கிப் போனது. எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

எழுந்து கதவு லாக்காகி இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் அர்ஜூனை அழைத்தாள். வீடியோ காலில் அழைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் ஆஃபீஸிருந்து வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் அர்ஜூன். வெளிநாட்டுக் காரர்கள் ஒரு சிலரோடு முக்கியமான ஒரு மீட்டிங் அப்போது தான் முடிவடைந்திருந்தது.

கழுத்து டையை லேசாகத் தளர்த்திவிட்டுக் கொண்டவன் ஃபோனைப் பார்த்தான். வீடியோக் கால். அதுவும் மதுரா. பதட்டமாகவே அழைப்பை ஏற்றவனுக்குத் தரிசனம் கொடுத்தது அவன் அழகு தேவதை.

“ஹேய் மை ப்ரின்ஸஸ்!” ஆனந்தக் குரலில் அவன் அழைக்கத் தன் தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தது குழந்தை.

“அர்ஜூன்…” இது மதுரா.

“ஷ்…‌ தள்ளிப் போ.” அவளைப் பேச விடாமல் தடுத்தான் அர்ஜூன்.

“ஆதர்ஷினி…” அவன் குரல் கண்ணீரோடு வர மதுராவுமே கண்ணீர் விட்டாள். குழந்தை பேச மறந்து தன் புதிய அப்பாவைப் பார்த்திருந்தது.

“அப்பாக்கூட பேசமாட்டீங்களா?”

“நாம அன்னைக்கே பேசியிருக்கோம் அங்… அப்பா.” சட்டென்றுக் குழந்தை தன்னைத் திருத்திக் கொண்டது.

“இப்போ என் பட்டுக்குட்டி என்னை என்ன சொல்லிக் கூப்பிட்டீங்க?”

“அப்பா…” குழந்தை லேசாக வெட்கப்பட அர்ஜூனிற்குச் சிலிர்த்தது.

உலகம் மறந்து சிரித்தான் அர்ஜூன். அப்பாவும் மகளும் அடுத்து வந்த கொஞ்ச நேரம் ஏதேதோ பேசியபடி இருந்தார்கள். குழந்தைக்குக் கண்கள் அயரவும் மதுரா ஃபோனை வாங்கிக் கொண்டாள்.

“அர்ஜூன் போதும்.”

“போதாதே மதுரா.”

“நாளைக்கு எங்கேயாவது மீட் பண்ணலாம். அப்போப் பேசுங்க.”

“என்ன திடீர்னு அர்ஜூன் மேல இவ்வளவு பரிதாபம்.’

“என்ன அர்ஜூன் வார்த்தை இது?”

“இன்னைக்கு என்னெல்லாமோ நடக்குதே மதுரா.”

“அர்ஜூன்… அம்மா சொன்னாங்க. அத்தை ரொம்பப் பேசினாங்களாமே. சாரி… சாரி அர்ஜூன்.”

“உங்கத்தையைப் பத்தி எனக்கென்ன கவலை? என்னோட அத்தை என்ன சொன்னாங்க? முதல்ல அதைச் சொல்லு.”

“உங்களைக் கொஞ்சம் கவனமா இருக்கச் சொன்னாங்க.”

“அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அது ஒரு காலம்னு சொல்லு மதுரா அவங்கக்கிட்ட.”

“அர்ஜூன்…”

“ம்…”

“ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களோ?”

“ம்… ரொம்ப… இன்னைக்குத் தூக்கம் கண்டிப்பா வராது.”

“சாரி அர்ஜூன்… தப்பெல்லாம் எம்மேலதான். நான் தான் உங்களை உங்க பொண்ணுக்கிட்ட இருந்து பிரிச்சிட்டேன்.”

“அதுக்கெல்லாம் உனக்குத் தண்டனை நிச்சயம் உண்டு மதுரா. நீ என்னோட இருந்த காலத்துல என்னோட இரவுகளும், பகல்களும் உனக்காக மட்டும் தான் இருந்திருக்கு. அதுல நீ ரொம்பவே அடாவடியா இருந்திருக்க. ஆனா இனி என்னோட பொழுதுகள் எல்லாமே என்னோட பொண்ணுக்குத்தான் சொந்தம். இனி நாங்களாப் பார்த்து உனக்குக் கொடுக்கிற மிச்சம் மீதி தான் உனக்கு.”

“அந்த மிச்சம் மீதிக்காக நான் காத்திருக்கேன் அர்ஜூன்.”

“கோபம் வரலையா என் செர்ரிக்கு?”

“ம்ஹூம். இப்போ போட்டி போடுறது ப்ரீத்தி இல்லை… எம் பொண்ணு.”

“ஹா… ஹா… அந்தப் ப்ரீத்தி குடுத்த லவ் லெட்டரை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன் செர்ரி.”

“அர்ஜூன்… வேணாம். எனக்குக் கோபம் வந்திச்சு… இப்பவே கிளம்பி வந்து அடிப்பேன்.”

“வா வா… வா செர்ரி… எத்தனை நாளா அந்தப் பொழுதுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.‌ தைரியம் இருந்தா வா. சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை.”

“அது சரி… அதென்ன? கம்பெனி பெயரை ‘பி.எம்’னு வெச்சிருக்கீங்க?” அவள் குரலில் அடக்கமுடியாத சிரிப்பிருந்தது.

“நீ சொல்லேன் செர்ரி. நான் அம்மா அப்பாவோட பெயர்னு சொல்லி இந்த உலகத்தைச் சமாளிச்சு வச்சிருக்கேன்.”

“ஹேய் பி.எம். இப்பவும் அந்தச் சிரிப்புல வசியம் இருக்குத்தான்டா.”

“ம்ஹூம்… இப்படியான விஷயங்களை ரொம்ப சேஃபாத் தள்ளி இருக்கும் போதுதான் சொல்லுற செர்ரி.”

“அனுபவம் பி.எம்… அனுபவம்.”

“ரொம்பத் தாங்ஸ் செர்ரி.”

“எதுக்கு?”

“சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கேன்.”

“அர்ஜூன்…‌ கவனமா இருங்க.”

“அதை உன்னோட சஞ்சுக்கிட்டச் சொல்லு.‌”

“அர்ஜூன்… ப்ளீஸ். அத்தை குணம் இப்படித்தான். அது எனக்குத் தெரியும். ஆனா சஞ்சு நல்லவன்.”

“சரி சரி விடு. நான் நல்ல மூட்ல இருக்கேன். வேற பேசலாம்.”

“உங்க வீட்டுல தெரியுமா?”

“அம்மாக்குப் புரிஞ்சிடுச்சு.”

“என்ன சொன்னாங்க?”

“எதுவும் சொல்லாதீங்கம்மான்னு சொல்லிட்டேன். அமைதியாகிட்டாங்க.”

“எம்மேல கோபமா இருப்பாங்க இல்லை?”

“அது தெரியலை. ஆனா நான் சந்தோஷமா இருந்தா அதுக்குக் காரணம் மதுராதான்னு அவங்களுக்குத் தெரியும்.”

“அதுல உண்மை இருக்கா அர்ஜூன்?”

“அதுல உனக்குச் சந்தேகம் இருக்கா செர்ரி. எவ்வளவு டயர்டா வீட்டுக்குக் கிளம்பினேன். ஆனா இப்போ எப்படி இருக்குத் தெரியுமா?”

“ஐ லவ் யூ அர்ஜூன்.”

“ம்… இதைச் சொல்லிச் சொல்லித் தானே என்னைப் பைத்தியம் ஆக்கினே மதுரா.”

“அர்ஜூன்… நான் ஒன்னு கேக்கட்டுமா?”

“ம்… கேளு.”

“மனசுல இப்போ என்ன ஓடுது அர்ஜூன்? ப்ளீஸ்… எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க. காயப்பட இனி மனசுல தெம்பில்லை அர்ஜூன்.”

“மதுரா! நிம்மதியாத் தூங்கு. என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். எம் பொண்டாட்டியையும் பொண்ணையும் எங்கிட்ட எப்படிக் கொண்டு வரணும்னும் எனக்குத் தெரியும்.‌”

“அர்ஜூன்!” கலவரமாக அழைத்தவள் காதில் முத்தச் சத்தம் ஒன்று வந்து ஒட்டிக் கொண்டது.

“தூங்கு செர்ரி. குட் நைட்.” என்றான் அர்ஜூன். நாளைய பொழுது நமக்காகவே விடியப் போகிறது என்று அவன் ஆழ்மனது அடித்துச் சொன்னது.