PunnagaiMannan-8

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 8

சஞ்சீவ் அந்த நட்சத்திர ஹோட்டலில் அமர்ந்திருந்தான். வெளியே அமைதியாக உட்கார்ந்திருப்பது போலத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

முழுதாகத் தொலைந்து போய்விட்டான் என்று தான் எண்ணியிருந்த அர்ஜூன் தன் கண் முன்னாலேயே இப்போது கண்ணாமூச்சி காட்டுவது அவனுக்கு ஜுவாலையைக் கிளப்பி இருந்தது.

மதுராவும் அவனும் சின்ன வயது முதல் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள். இரண்டு வயதுதான் வித்தியாசம். உதய நாராயணனின் சொத்துக்கள் மேல் அவனது பெற்றோருக்கு அலாதியான காதல் இருந்தாலும், அவன் ஆசைப்பட்டது மதுராவைத்தான்.

கட்டுக்குள் அடங்காத காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது. மதுராவைப் பிடிக்கும். அவள் தன்னுடைய சொத்து என்பது போலவே ஒரு எண்ணம் அவன் மனதில் விழுந்துவிட்டது.

அவள் மேல் எப்போதும் ஒரு அக்கறை உண்டு. கல்லூரிக் காலத்தில் கூட அத்தை மகன் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நண்பனாக அவளைப் பாதுகாப்பான். எல்லாம் அர்ஜூன் என்ற பெயர் அடிபடும் வரைதான்.

சஞ்சீவைப் பொறுத்த வரை மதுரா சின்னப்பெண், குறும்புக்காரி. இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் அவளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. ஆனால் அந்த எண்ணத்தைப் பெண் பொய்யாக்கிய போது கொஞ்சம் நிலைகுலைந்து போனான்.

டெல்லியில் மாமாவின் பெண் தனி ஃப்ளாட்டில் இருந்து படிப்பதெல்லாம் அவர்கள் மட்டத்தில் புதிதல்ல. சாதாரணமான விஷயம்தான். ஏனென்றால் அவர்கள் வாழ்க்கைத் தரம் அப்படி இருந்தது.

ஆனால் அர்ஜூன் என்ற பெயர் தன் மாமன் மகள் பெயரோடு அடிபடும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. எப்படியோ அவர்கள் வீடு வரை விஷயம் வந்திருந்தது.

மதுராவை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகள் ஆக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவன் பெற்றோருக்கும் இது பேரிடியாகத்தான் இருந்தது.

இதுவரை தனக்கு மட்டுமே சொந்தம் என்று தான் இறுமாந்திருந்த பொருள் தனக்கில்லை என்று ஆனபோது சஞ்சீவ் மிகவும் நொறுங்கிப் போனான். ஆனால் அவன் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அழகாக வீசியது.

வீட்டில் அதிரடியாக மாமா மாப்பிளை பார்க்க ஆரம்பித்த போதுதான் மதுராவின் கர்ப்பம் தெரிய வந்தது. அந்தத் தகவல் கிடைத்த போது அன்னபூரணி கொஞ்சம் பின்வாங்கி விட்டார். ஆனால் சஞ்சீவ் தயங்கவில்லை. அவனுக்கு அதுவெல்லாம் பெரிதாகவும் தெரியவில்லை. இவன் தன் விருப்பத்தைச் சொன்ன போது மாமா உதய நாராயணன் மருமகனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தான் காணாது கண்ட மாணிக்கம் அவனெனச் சீராட்டினார்.

ஆனால் அது சஞ்சீவிற்குப் போதவில்லை. அவனுக்கு முழுதாக மதுரா அவன் பக்கம் சாய வேண்டும்.‌ அது நடக்கவேண்டும் என்றால் அர்ஜூன் என்ற பெயரை அவள் மறக்க வேண்டும்.

அழகாகக் காய் நகர்த்தி அவளைக் கனடா கூட்டிக்கொண்டுப் போனான். உதய நாராயணன் மருமகன் காலால் இட்டதைத் தலையால் செய்து முடித்தார்.

தமிழ் வாடையே அடிக்காத கனடாவின் அழகிய கிராமப்பகுதி ஒன்று தெரிவு செய்யப்பட்டு, அங்கு சஞ்சீவும் மதுராவும் குடி பெயர்ந்தார்கள். தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயவலையை அறிந்து கொள்ளாமல் அர்ஜூனின் உயிர் ஒன்று மட்டுமே முக்கியமென நினைத்து வாழப் பழகினாள் பெண்.

மதுராவை ஏமாற்றுவது சஞ்சீவிற்கு வெகு சுலபமாக இருந்தது. அர்ஜூனின் உயிருக்கு ஆபத்து வரும் என்ற ஒரு ஆயுதமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

நண்பன் என்பதைத் தாண்டி அவளைப் பொறுத்தவரை  பெயருக்குக் கட்டிய தாலி என்றாலும் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளாத சஞ்சீவ் மகான் ஆகிப்போனான்.

கண்ணியமாக நடந்து கொண்ட நண்பனை இன்று வரை அவள் சந்தேகிக்கவில்லை. ஆனால் மதுராவின் அம்மா மலரிற்கு இந்த நாடகங்கள் போகப் போகக் கொஞ்சம் பிடிபட்டுவிட்டது.

அன்னபூரணியும் மதிநிலவனும் தங்கள் மகன் இல்லையென்றால் உங்களுக்கு ஏது விமோசனம் என்ற ரீதியிலேயே பேச ஆரம்பித்திருந்தார்கள். மலருக்குப் புரிந்தது போல இது உதய நாராயணனுக்கும் புரிந்திருக்க வேண்டும். ஆனால் மனிதர் வாயைத் திறக்கவில்லை. தன் தங்கையை மனைவியிடம் விட்டுக்கொடுக்க அவர் கவுரவம் இடம் கொடுக்கவில்லை.

நாற்காலியின் சத்தம் கேட்கவும் கவனம் கலைந்தான் சஞ்சீவ். எதிரே அர்ஜூன் உட்கார்ந்திருந்தான். பார்வைகள் கூராக மோதிக்கொண்டன.

“என்ன விஷயம்?” கேட்ட சஞ்சீவின் முகத்தில் கனல் தெறித்தது. அர்ஜூன் தான் அவனை இங்கே வரச்சொல்லி இருந்தான். சஞ்சீவாலும் மறுக்க முடியவில்லை.

அழைப்பது அர்ஜூன் என்பதால் விஷயம் நிச்சயமாக மதுரா சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். மான ரோஷம் பார்க்கும் சமயம் இதுல்ல என்று புரிந்து வந்திருந்தான்.

அர்ஜூன் எதுவுமே பேசவில்லை. ஒரு காகிதத்தை சஞ்சீவ் முன் அவன் பார்வைக்கு வைத்தான். அவ்வளவுதான். படித்துப் பார்த்த சஞ்சீவிற்கு ரத்தம் கொதித்தது. கொத்தாக அர்ஜூனின் சட்டையைப் பிடித்தான்.

“யூ… ஸ்கௌன்ட்ரல், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்கிட்டயே இதை வந்து நீட்டுவே?” தான் இருக்கும் இடம் மறந்து வார்த்தைகள் தெறிக்க சஞ்சீவ் தன்னை மறந்திருந்தான்.

சட்டென்று அங்கே வந்த இரு ஆஜானுபாகுவான உருவங்கள் சஞ்சீவை அர்ஜூனிடம் இருந்து பிரித்தார்கள். அர்ஜூன் ஷர்ட்டை சரிபண்ணிக் கொண்டு மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.

“சைன் பண்ணிக் குடுத்தா நான் பாட்டுக்குக் கிளம்பிக்கிட்டே இருப்பேன் சஞ்சு.” இது அர்ஜூன். வேண்டுமென்றே மதுரா சொல்வது போல அவனை சஞ்சு என்று அழைத்தான்.

சஞ்சீவிற்கு மீண்டும் அப்படியொரு கோபம் வர அர்ஜூன் கொண்டு வந்திருந்த அந்த விவாகரத்துப் பத்திரத்தைக் கிழித்து வீசினான்.

அர்ஜூன் அப்போதும் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான். அவன் வேகம் எப்போதும் மதிநுட்பமான விஷயங்களில் தான் இருக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் எப்படி நடக்க வேண்டும் என்று அவனுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்திருந்தது.

“எனக்கு என்னோட மதுரா வேணும் சஞ்சீவ்.”

“ஷி இஸ் மை வைஃப்.”

“ம்… தாலி கட்டியும் குடும்பம் நடத்தாத வைஃப். ஆனா நான் யாரு தெரியுமா?”

“குடும்பம் நடத்தாதது தான் உன்னோட பிரச்சனைன்னா நான் அதைப் பண்ணுறேன்.”

“ஹா… ஹா… நீ இன்னும் அதுக்கு முயற்சி பண்ணாததால தான் அந்த முட்டாள் இன்னும் உன்னை நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கா. கையை வெச்சுப் பாரு. அதுக்கப்புறமாத் தெரியும் உனக்கு, அர்ஜூனோட மதுரா யாருன்னு.”

“ஏய்!” சஞ்சீவ் கொதித்துக் கொண்டிருந்தான்.

“கத்திக் கூப்பாடு போடுறதுல எந்த அர்த்தமும் இல்லை சஞ்சீவ். எனக்கு உங்கிட்ட இருந்து மதுராக்கு விவாகரத்து வேணும் அவ்வளவுதான்.”

“அது நடக்காது.”

“அப்ப ஓகே. பின்விளைவுகளைச் சந்திக்க நீ தயாரா இருந்துக்கோ.”

“நேத்துப் பணத்தைப் பார்த்தவன் நீ! உனக்கே இவ்வளவு இருந்தா… எனக்கு எவ்வளவு இருக்கும்?”

“உன்னோட இஷ்டம்.” அர்ஜூன் தோளைக் குலுக்கிக் கொண்டான். அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டிருந்தான். இவனோடு விவாதித்துப் பலனில்லை என்று புரிந்தது.

***************

மதுரா அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். காரணம் என்னவென்றுப் புரியாமலேயே மனது சந்தோஷித்தது. தினமும் அர்ஜூனோடு பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த விஷயத்தை அர்ஜூன் சாதித்து விடுவான் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கி இருந்தது. மலருக்கும் மகளின் ஆசை லேசாகப் புரிந்தது. எந்தத் தயக்கமும் இல்லாமல் மறைமுகமாக மதுராவை ஆதரித்தார். பேத்தியின் வாழ்க்கைக்கும் அதுதானே நல்லது.

‘இங்கப்பாரு மதுரா. நீ கிளம்பி கனடா போனதுக்கு அப்புறமா உன்னோட அத்தை மாமாவோட நடவடிக்கைகள் ரொம்பவே மாறிப் போச்சு.‌ ஏதோ அவங்க உனக்கு வாழ்க்கைப் பிச்சை போட்ட மாதிரித்தான் நடந்துக்கிறாங்க. நான் சொல்லியிருந்தா உங்கப்பா ஏத்துக்கிட்டிருக்க மாட்டார். அவர் என்னைக்குத் தன்னோட தங்கையை விட்டுக் குடுத்திருக்கார்? ஆனா இப்போ அவருக்கே அது லேசாப் புரியுது. தன் தங்கையோட உண்மையான முகம் என்னன்னு புரியுது. தங்கையோட புருஷன் அத்தனை சொத்துக்காகவும் தான் இதையெல்லாம் பண்ணி இருக்காருன்னு இப்போப் புரியுது அவருக்கு.’ மலர் மகளை உட்கார வைத்து நிறையப் பேசி இருந்தார்.

‘நீ கனடா போனதுக்கு அப்புறமா சில சொத்துக்கள் உன் அத்தையோட பெயருக்கு மாறிடுச்சு.‌ அது தெரியுமா உனக்கு?’

‘அம்மா!’

‘ம்… இனியும் தெரியாத மாதிரியே இருந்துக்கோ. சஞ்சுக்கிட்ட ரெண்டு மூனு தரம் உன்னையும் குழந்தையையும் இந்தியா கூட்டிக்கிட்டு வரச்சொல்லி அப்பா கேட்டாங்க. ஆனா சஞ்சு மறுத்திட்டான்.’

‘ஏன்?’

‘நீ இந்தியாக்கு வர்றதை அவன் விரும்பலை.’

‘அப்போ எனக்கு உதவி பண்ணுவேன்னு சொன்னது…’

‘இங்கப்பாரு மதுரா… சஞ்சுவை என்னால தப்பாப் பார்க்க முடியாது. ஏன்னா நான் பார்க்க வளர்ந்த பையன் அவன். ஆனா அவனுக்கு உம்மேல ஒரு அபிப்பிராயம் இருக்குன்னு யாராவது சொன்னா… அதை நான் மறுக்க மாட்டேன்.’

‘சீச்சீ… சஞ்சு அப்படி இல்லைம்மா.’

‘இல்லாட்டி எதுக்கு இத்தனை நாளும் அர்ஜூனைத் தள்ளி வெக்கணும்? நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக் குடும்பம் நடத்தி இருந்தா பரவாயில்லை. அதுதான் இல்லேங்கும் போது எதுக்கு உன்னோட வாழ்க்கையையும் குழப்பி, அவனுக்கும் ஒரு துணையை இதுவரைக்கும் தேடிக்காம… எதுக்கு மதுரா?’

‘அம்மா! எனக்கு ஒன்னும் புரியலை.’ மதுரா திகைத்துப் போனாள். அர்ஜூனும் இதைத்தான் சொல்கிறானே!

‘அர்ஜூன் சொல்லுறபடி கேளு மதுரா. அதுதான் எல்லாருக்கும் நல்லது. நான் சஞ்சுவையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். அவனும் எனக்குப் புள்ளை மாதிரித்தானே.’

மதுராவிற்கும் அம்மாவின் வார்த்தைகளில் இருந்த நியாயம் ஓரளவு பிடிபட்டது. மனதை ஒரு வாரமாக அழுத்திய பாரம் இன்று சற்று வடிந்தாற் போல இருக்க மகளோடு வெளியே புறப்பட்டாள். ஷாப்பிங் பண்ணினால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

“செர்ரி… அப்பாவும் வர்றாங்களா?” மகள் அம்மாவின் காதில் கிசுகிசுத்தாள்.

“நான் இன்னும் சொல்லலை. மால் போயிட்டு அங்க இருந்து அப்பாக்குக் கால் பண்ணலாம் என்ன?”

“ம்… சஞ்சுவையும் கூட்டிக்கிட்டுப் போவோமா?”

“அடியேய்!” மதுரா வாய்விட்டுச் சிரித்தேவிட்டாள்.

“இல்லைடா குட்டி. நமக்குத்தான் அப்பா வர்றாங்க இல்லை. சஞ்சு வீட்டுல இருக்கட்டும். அம்மாவும் ஆதர்ஷினியும் இனி எங்க போறதுன்னாலும் அப்பாவோட தான் போகணும் சரியா?” அம்மா சொன்னதைக் குழந்தை சட்டென்று ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்பா என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதுவரை கூட இருந்த சஞ்சுவைச் சட்டென்று விட்டுக்கொடுக்க அந்தப் பிஞ்சிற்கு மனம் வரவில்லை. மகளின் முகச்சுணக்கம் மதுராவிற்கும் புரிந்தது.

கொஞ்ச காலம் இப்படித்தான் இருக்கும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

“எங்கே கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்?” இது சஞ்சீவ். குழந்தை எதையும் உளறிவிடும் முன் முந்திக் கொண்டாள் மதுரா.

“ஷாப்பிங் சஞ்சு.”

“தனியாப் போக வேணாம். நானும் வர்றேன்.” மதுராவிற்குப் புஸ்ஸென்று ஆனது. அத்தனையும் வடிந்து போகக் காரிற்குள் ஏறினாள்.

“சஞ்சு எங்கக் கிளம்பிட்ட?” இது மதிநிலவன்.

“மதுராவும் சின்னதும் ஷாப்பிங் போறாங்க. அதுதான் நானும் கூடப் போறேன்.”

“இல்லையில்லை… இன்னைக்கு முக்கியமான ஒருத்தரை மீட் பண்ணப் போறோம். நீ கண்டிப்பா எங்கூட இருக்கணும். அவங்க தனியாவே போகட்டும்.” அப்பாவின் பேச்சில் சஞ்சீவிற்கு எரிச்சல் வந்தது. இருந்தாலும் சம்மதித்தான்.

மதுராவிற்கு ‘அப்பாடி’ என்றிருந்தது. சட்டென்று காரைக் கிளப்பச் சொன்னவள் விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள்.

“என்னப்பா நீங்க? இன்னைக்குத்தான் நடந்ததை எல்லாம் உங்ககிட்ட சொல்லி இருக்கேன். இப்பப் போய் அவளைத் தனியா அனுப்புறீங்களே?” அப்பா மேல் பாய்ந்தான் மகன்.

“காரணமாத்தான் உன்னைத் தடுத்தேன் சஞ்சு.”

“ஏன்? என்னாச்சு?”

“மதுரா மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியணும். இப்போ வெளியே போறவ அந்தப் பரதேசியை மீட் பண்ணுறாளா இல்லையான்னு பார்ப்போம்.” இதை மதிநிலவன் சொன்ன போது சஞ்சீவின் முகம் கொடூரமாக மாறியது.

“விட்டுத்தள்ளு சஞ்சு. முக்கியமான சொத்துக்கள் உங்கம்மா பெயருக்கு ஏற்கெனவே மாறிடுச்சு.”

“அப்பா!”

“அடப்போடா… இவளை விட்டா வேற ரதியே இல்லேங்கிற மாதிரி சீன் போடுற. வாழ்ற வழியைப் பாருடா.” மதிநிலவன் நகர்ந்து விட சஞ்சீவ் பக்கத்தில் இருந்த சுவரில் ஓங்கிக் குத்தினான்.

***************

மதுரா மாலுக்கு வந்தவள் குஷியாக மகளையும் அழைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் பார்லருக்குப் போனாள்.‌ அர்ஜூனை அழைக்க அவனது ஃபோன் பிஸியாக இருந்தது.

சரி… கொஞ்சம் கழித்துக் கூப்பிடலாம் என்று எண்ணியவள் இரண்டு ஐஸ்கிரீம்களை ஆர்டர் பண்ணி உண்டு முடித்தார்கள். மீண்டும் அர்ஜூனை அழைத்தாள் பெண்.

“செர்ரி! என்ன இந்த நேரத்துல?”

“அர்ஜூன்… நாங்க ரெண்டு பேரும் மாலுக்கு வந்திருக்கோம். நீங்களும் ஃப்ரீயா இருந்தா வாங்களேன்.” ஆசையாக அழைத்தாள் மதுரா. அர்ஜூன் சிரித்துக் கொண்டான்.

“யாரோ பார்க்குறதுக்கே பயப்பட்டாங்களே… இப்போ என்னடான்னா…”

“அர்ஜூன்… ப்ளீஸ். கேலி பண்ணாதீங்க. ஒரு அஞ்சு நிமிஷம். சட்டுன்னு வந்திட்டுப் போயிடுங்க. உங்க நேரத்தை நான் ரொம்ப எடுக்க மாட்டேன். பார்க்காம ரொம்பக் கஷ்டமா இருக்கு அர்ஜூன்.” முடிக்கும் போது அவள் குரல் தேம்பியது.

அர்ஜூன் தன்னை மிகவும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான். யார் யாரையெல்லாமோ அடித்து நொறுக்கத் தோன்றியது.

“அர்ஜூன்?”

“செர்ரி… ரொம்ப முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்குடா. அதுக்குத்தான் இப்போ ரெடியாகிட்டு இருக்கேன். என்னால இப்போ வர முடியாதுடா.”

“ஓ… பரவாயில்லை விடுங்க. நான் கொஞ்சம் முன்னாடியே உங்ககிட்டச் சொல்லி இருக்கணும். அப்போ அதுக்கேத்த மாதிரி நீங்களும் ப்ளான் பண்ணி இருப்பீங்க.”

“செர்ரி…”

“ம்…”

“ரெண்டு நாள் டைம் குடுடா. நான் எல்லாத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வர்றேன்.”

“அர்ஜூன்… என்ன சொல்றீங்க? அதென்ன ரெண்டு நாள் கணக்கு?”

“தப்பா எதுவும் பண்ணலை… நீ என்னை நம்புற தானே.”

“கண்டிப்பா… ஆனா நீங்க கவனமா இருங்க அர்ஜூன்.”

“ம்… சீக்கிரம் கிளம்பு செர்ரி.”

“ம்…” ஃபோனை அணைத்தவள் மகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அர்ஜூனோடு அடிக்கடி பேசுகிறாள். ஆனால் பார்க்க முடிவதில்லை. மனது கனத்துப்போக கார் பார்க்கிங்கிற்கு வந்து கொண்டிருந்தாள். யாரோ அவள் மீது திடீரென்று மோதவும் மதுராவின் கைப்பை கீழே விழுந்தது.

“ம்ப்ச்…” எரிச்சலோடு குனிந்தாள் பெண்.

“சாரி மேடம்.” இடித்தவனும் கீழே குனிந்து பொருட்களை எடுக்க உதவினான். ஆனால் அந்த நெருக்கம் மதுராவை மிரள வைத்தது.

“மேடம்… சத்தம் எதுவும் போடாம நான் சொல்றபடி செய்யுங்க.” அந்தக் குரலில் அதிகாரம் இருந்தது.

“எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான். உங்க காருக்குப் பக்கத்துல இருக்கிற ரெட் கலர் கார்ல எதுவும் பேசாம பாப்பாவோட போய் ஏறுங்க.”

“யாரு நீங்க?” மதுரா பதறினாள்.

“அது எதுக்கு உங்களுக்கு? சொன்னபடி மட்டும் செய்யுங்க. கத்தியையோ துப்பாக்கியையோ காட்டி உங்களை மிரட்டக் கூடாதுன்னு உத்தரவு. அதைப் பண்ண வெச்சிடாதீங்க மேடம்.”

“யாரோட உத்தரவு?”

“சொல்ல அனுமதி இல்லை?‌ கார் பார்க்கிங்ல சிசிடிவி இருக்கு. அதனால உங்க கார்ல ஏர்ற மாதிரி பக்கத்துக் கார்ல ஏறணும். எங்கேயாவது சொதப்பினீங்கன்னா…” அவன் கோணல் சிரிப்பு மதுராவிற்குக் கிலியை உண்டு பண்ணியது. சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“மேடம்!” இப்போது அவன் குரல் கடினமாக வந்தது.‌

என்ன நடக்கிறது இங்கே? ஒரு வேளை அன்றைக்குப் போல இவன் அர்ஜூனின் ஆளோ? தன்னைச் சந்திப்பதற்காக வேண்டுமென்று இப்படிப் பண்ணுகிறானோ?

“ம்… சீக்கிரம்!” இவள் தயக்கம் பார்த்து அவன் கை பாக்கெட்டிற்குள் போனது.

‘ஐயையோ! பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறானோ!’

அவசரமாக எழுந்த மதுரா குழந்தையையும் கூட்டிக்கொண்டு விறுவிறுவென நடந்தாள். சந்தேகம் வராதபடி இவர்களைத் தொடர்ந்தவன் அந்த சிவப்புக் காரின் கதவைத் திறந்து விட்டான். குழப்பத்துடனேயே குழந்தையோடு காரில் ஏறி உட்கார்ந்தாள் மதுரா.