Puthu Kavithai 23

23

வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம்.

அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு செய்தார் வினோதகன். வேலை பார்க்க பங்காளிகள் உண்டென்றாலும் வருபவர்களை வாவென்று அழைப்பதே அத்தனை மகிழ்ச்சி அல்லவா!

“அவருக்கு என்ன? மச்சானுக்கு மச்சான்… மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை… எல்லாம் கொடுப்பினை தான்…” என்று வினோதகனை கேலி செய்தவர்கள் தான் அதிகம்.

அனைத்தையும் தாண்டி, பார்த்திபனின் வாழ்க்கை அபஸ்வரமாகியதற்கு காரணம் தானே என்ற யாரும் அறிந்திடாத குற்ற உணர்வு அவருக்கு அதிகம். அஞ்சலியால் பழுதுபட்ட அவனது வாழ்க்கையை இப்போது தன்னுடைய பெண்ணைக் கொண்டு சரியாக்கிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்பினார்.

அந்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, விநோதகனை கையால் பிடிக்க முடியவில்லை.

“என்னங் மாமா? வாயெல்லாம் பல்லாவே சுத்தறாப்ள போல…” மச்சினர் ஒருவர் இழுத்து வைத்து வம்பிழுத்ததற்கும் சிரித்தே சமாளித்தபடி வந்தார் வினோதகன்.

அத்தனையும் தாண்டி, மணமேடையில் பாத பூஜைக்காக தனது சகதர்மிணியோடு நின்ற போது அத்தனை நிறைவாக இருந்தது.

மணக் கோலத்தில் அவர் பெற்ற மகள்! உடன் அவரது மருமகனாக பார்த்திபன்!

கண்கள் பனிக்க பானுமதியோடு சேர்ந்து நின்று மகளது பாத பூஜையை ஏற்ற போது உலகை வென்ற உணர்வு!

இத்தனை நாட்கள் தன்னுடைய வீட்டில் பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்த மகள் இனி, கொண்டவனோடு மனையாளாக, இல்லத்து அரசியாக, பார்த்திபனின் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக கொலுவிருக்க போகின்ற மகிழ்ச்சி தம்பதியரின் முகத்தில் வெளிப்படையாக தென்பட, அம்மாச்சிக்கு அம்மாச்சியாய், மாமியாருக்கு மாமியாராக, தன்னுடைய பேத்தியே தனக்கு மருமகளாக வந்த சந்தோஷத்தில் சகுந்தலா!

இத்தனை பேரின் மகிழ்ச்சிக்கு காரணமான அந்த இருவரின் மனதிலும் சற்றும் மகிழ்ச்சியில்லை.

காதலே இல்லாமல் அவளை திருமணம் செய்து கொள்ள நேரிட்டு விட்டதே என்று அவனும்,

தன்னால் தானே அவனுக்கு இந்த நிலை என்ற குற்ற உணர்வில் அவளுமிருக்க, மங்கல நாண் பூட்டி மதுவந்தியை தன்னுடைய மனையாளாக்கிக் கொண்டான் பார்த்திபன்!

மதுவை பொறுத்தவரை அவளது குற்ற உணர்வோடு கோபமும் சேர்ந்திருந்தது.

அவள் தொலைகாட்சியை பார்த்து பயந்து தடுமாறிய அடுத்த நாள் மருத்துவரின் முன் இருந்தார்கள் பார்த்திபனும் மதுவும்! கொஞ்சமும் தாமதிக்கவில்லை அவன்.

வெறித்துப் பார்த்தபடி இருந்த இருந்த மதுவை கிளப்புவதுதான் சற்று கடினமாக இருந்தது.

“ப்ச்… லேட் பண்ணாதம்மா… கிளம்பு…” எழுந்தது முதல் தலையை பிடித்தபடியே அமர்ந்திருந்தவளை பார்த்திபன் அழைக்க, மது நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“மது… டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு…” பார்த்திபன் குரலை சற்று உயர்த்த, அவளுக்கு விலுக்கென்று உடல் தூக்கி வாரிப் போட்டது.

வர முடியாது என்று தலையை இடம் வலமாக அசைத்தாள்.

“பார்த்தி சொல்றதை கேளு மது…” பானுமதி கண்களில் கலக்கத்தோடு மதுவை எழ செய்ய, முடியாதென பிடிவாதமாக தலையாட்டினாள்.

“இப்ப கிளம்பறியா? இல்லையா?” உச்சபட்ச குரலில் பார்த்திபன் கத்த, மதி அரண்டு போய் பார்த்தார்.

தானாக கனியாதது தடியால் கனியுமாம்!

அதுபோலத்தான், பார்த்திபனின் கோபமுகம் மதுவிடம் வேலை செய்தது.

பதில் பேசாமல் ஒரு த்ரீ ஃபோர்த்தை அணிந்து கொண்டு அவன் பின்னே வந்தாள்.

“சுடிதார் போடு மது…” பானுமதி கண்டிப்பான குரலில் கூற,

“போர்ஸ் பண்ணாத… விடுக்கா…” என்று இன்னமும் இறுக்கமாக தமக்கையை கண்டித்தான் பார்த்திபன்.

‘செய்ய வேண்டிய நேரத்தில் எல்லாம் விட்டுவிட்டு, செய்ய கூடாத நேரத்தில் தான் கண்டிப்பை காட்ட தெரியும் இவர்களுக்கு!’ என்ற எரிச்சல் அவனுக்கு!

அதனாலேயே உடன் வருவதாக கூறிய மதியையும் சகுந்தலாவையும் முறைத்தே தவிர்த்திருந்தான்! எப்படி இருந்தாலும் அவர்கள் மருத்துவமனையிலேயே ஏதேனும் செண்டிமெண்ட் சீனை வைக்க பார்ப்பார்கள் என்பது அவனது எண்ணம்!

“போதும்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண கூத்தெல்லாம்! நானே கூட்டிட்டு போயிட்டு வரேன். நீங்க வீட்ல இருங்க.” என்று அவன் பல்லைக் கடித்தபடி கூற,

“இல்லடா தம்பி… பிள்ளைக்கு என்னாச்சுன்னு கேட்டியான்னு மாமா கேப்பாப்ள…” என்று தயங்கிய தமக்கையை,

“அப்படீன்னா அவரை எனக்கு கால் பண்ண சொல்லு…” என்று இறுக்கம் தளரவில்லை.

அவனது தலை மேல் இன்னொரு சுமையாக தன் மகளை ஏற்றி வைக்கிறோமோ என்ற கவலை வேறு அவருக்கு வந்துவிட்டது!

மது, எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று புரியாமல் இருந்தார் அவர்!

என்னதான் தன் மகள் என்றாலும், தனது சகோதரனுக்கு இப்படியொரு வாழ்க்கையை தான் பரிசளிக்க வேண்டுமா என்ற தயக்கம் வேறு!

அவன் அழைத்து சென்றது தன்னுடைய தோழியான கோவையின் பிரபலமான மனநல மருத்துவரிடம்!

முன்தினம் நடந்தவற்றை எல்லாம் கூறியவனின் கூற்றை கேட்டவள்,

“கொஞ்ச நேரம் வெளிய வெய்ட் பண்ணேன் எஸ்பி…” என்று அவனை வெளியே இருக்க சொல்ல, இடக்கையை மதுவின் கை மேல் வைத்து லேசாக அழுத்தியவன்,

“பூஜா கிட்ட மனசு விட்டு பேசு மது. உனக்கு என்ன வேணும், வேணாம்ன்னு சொல்லு… என்ன கஷ்டம்ன்னு என்கிட்ட பேச முடியாததை எல்லாம் நீ பூஜா கிட்ட பேசலாம். சரியா?” என்று அவளது தலையாட்டலை எதிர்பார்த்து அவளது முகத்தை பார்க்க, மதுவோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“நான் பார்த்துக்கறேன் எஸ்பி…” என்று பூஜா கூறியதை கேட்டவன், சிரித்தபடியே,

“ஓகே பூஜா… ஐ ல் வெய்ட் அவுட்சைட்…” என்று வெளியேற, மதுவை நேராக பார்த்தாள் பூஜா!

சிறு பெண்! பார்த்திபன் கூறியதை போல, இன்னமும் முதிராத இளம் மொட்டு! இந்த பூவை கசக்க முயன்றவர்களை நினைத்து கோபம் வந்தாலும், மதுவின் மனநிலை என்ன என்று ஆராய்ந்தாள் பூஜா!

மதுவை திருமணம் செய்ய சொல்லி பார்த்திபனை வீட்டினர் நெருக்குவதையும் அவன் கூறியிருந்தான். அதில் அவனுக்கு அத்தனை சங்கடம், பதினெட்டு வயது பெண்ணை போய் திருமணம் செய்துவிக்க நினைக்கிறார்களே என்ற கோபமும் கூட!

ஆனால் ஒரு பெண்ணாக பார்த்திபனின் கோபத்தில் அர்த்தமிருப்பதாக பூஜாவுக்கு படவில்லை. முப்பது வயது என்பது ரொம்பவும் அதிக வயதில்லை என்று தான் நினைத்தாள். பதினெட்டு வயது என்பது சிறு வயது தான் என்றாலும், திருமண பந்தத்தில் இருவரின் புரிதல் மட்டுமே முக்கியம் அல்லவா!

தன்னுடைய மனைவியை பாதுகாக்க தெரிந்தவனே சிறந்த கணவன், நல்ல ஆண்மகன்!

இந்த நேரத்தில் மதுவுக்கு பார்த்திபனை காட்டிலும் வேறு யாரும் அந்த பாதுகாப்பை கொடுத்து விட முடியாது என்று தீர்க்கமாக நம்பினாள் பூஜா!

அதனால் தான் அவன் தயக்கமாக திருமணம் பற்றி உரைத்த போதும் கூட,

“நான் பார்த்துக்கறேன் எஸ்பி… மது என்னோட பொறுப்பு… போதுமா?” என்று பேசியில் அவனுக்கு ஆறுதல் கூறியிருந்தாள்.

“சொல்லுங்க மது… எப்படி இருக்கீங்க?” பூஜா அவளை கேட்க,

“ம்ம்ம்…” கீழே பார்த்தபடியே பதில் கொடுக்க,

“நிமிர்ந்து என்னை பாருங்க மது…” என்றாள் பூஜா.

அதற்கு எந்த பதிலும் கூறாமல் தரையை பார்த்தபடியே, மோதிரத்தை திருகினாள் மது.

அவளது தன்னம்பிக்கையும் துணிச்சலும் அவளிடமிருந்து எப்போதோ விடைபெற்று இருந்தது.

“என்ன படிக்கறீங்க மது?” என்ற பூஜாவின் கேள்விக்கு கொஞ்சமும் மாற்றமில்லை, பதிலில்லை.

“சென்னைல இருக்கீங்களா?”

நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“நீங்க ஒரு மாடலா?”

பதிலில்லை. ஆனாலும் பூஜா விடவில்லை. என்ன பேசினால் இவளது வாயை திறக்க வைக்க முடியும் என்று யோசித்தாள்.

“எனக்கும் படிக்கும் போது அந்த ஆசை இருந்துது மது… ஒன்றெண்டு ஆட்ஸ் பண்ணிருக்கேன்..” என்று சிரித்தபடி பூஜா கூற,

நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள் மது.

“சின்னதுல இருந்தே எனக்கு மாடலிங் மேல ஒரு கிரேஸ்…” என்று அவள் தடுமாற,

“அக்கான்னு சொல்லு மது… நானும் எஸ்பியும் கிளாஸ் மேட்ஸ் தான்…” என்று கூறவும் இன்னுமே சற்று புன்னகைத்தாள் மது.

அவளது புன்னகையை ரசித்த மது, “எஸ்பிய சைட் அடிக்க ஸ்கூல்ல ஒரு கிரேஸி கேங் இருக்கும். நானெல்லாம் அந்த கேங்ல ஒருத்திதான்…” என்று பூஜா சிரிக்க, மதுவின் புன்னகை இன்னுமே விரிந்தது.

“பார்த்தி மாமா கிட்ட என்ன இருக்குன்னே தெரியல?! என் ப்ரென்ட் ஒருத்திக்கு மாமான்னா அப்படியொரு க்ரஷ்…” என்று மது சற்று வாய் திறக்க ஆரம்பித்தாள்.

“ஏன் உனக்கு பிடிக்காதா மது?” தூண்டிலிட்டாள் பூஜா!

“என்னோட அப்பாவுக்கு அப்புறம் மாமா தான் என்னோட ஹீரோ. ஆனா அதுக்கு மேல இல்ல. மாமா கூட இருந்தா நான் ரொம்பவே செக்யுர்ட்டா பீல் பண்ணுவேன். மாமா எவ்வளவு சொல்லியிருக்காங்க… அந்த பசங்க நல்ல மாதிரி தெரியலன்னு… ஆனா எதையுமே நான் கேக்கலக்கா… ஏமாந்துட்டேன்…” என்றவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“ஏமாந்தன்னு சொன்னா என்ன மீனிங் மது?” என்று பூஜா கேட்க, மது பதில் கூறாமல் கீழே பார்க்க, அவளது கண்களிலிருந்து அவளையறியாமல் கண்ணீர் வழிந்தது.

“மது… அழறது தப்பு கிடையாது… ஆனா நீ எவ்வளவு தைரியமா அந்த சிச்சுவேஷனை ஃபேஸ் பண்ணன்னு எஸ்பி சொன்னாப்ல. வேற யார் இருந்திருந்தாலும் மது அளவுக்கு தைரியமா இருந்திருப்பாங்களான்னு தெரியாதுன்னு அவன் அவ்வளவு பெருமைப்பட்டுக்கறான், உன்னை பத்தி… ஆனா நீ என்னடான்னா…” என்று பூஜா கூற, அது மதுவிடம் மிக சரியாக வேலை செய்தது.

கண்களை துடைத்தபடி ஆர்வமாக மது நிமிர்ந்து பார்க்க, “அட நிஜமா தான் மது. உன்னோட தைரியத்தையும் துணிச்சலையும் அவன் சொல்லாத நாளே கிடையாது. அவ்வளவு பெருமை…” என்று பூஜா சிரிக்க, மதுவின் முகத்திலும் மெல்லிய புன்னகை படர்ந்தது.

“அவங்க பெருமைப்பட்டுக்கற மாதிரியெல்லாம் கிடையாதுக்கா. என்னோட ஆப்ஷன் தப்பு. என்னோட சாய்ஸ் தப்பு. என்னோட குறிக்கோள் கூட தப்பு தான். மொத்தத்துல நானே தப்பாத்தான் இருக்கேன்.” என்று வலியோடு அவள் உரைக்க,

“என்ன ஆச்சு? ஒண்ணுமே ஆகல மது…”

“இல்லக்கா… அந்த வீடியோவ பார்த்தப்ப தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு புரியுது. அப்ப மட்டும் மாமா வரலைன்னா, அந்த இடத்துல நான் இருந்திருப்பேன்…” என்று அவளாகவே வீடியோவை பற்றி கூற,

“அதுதான் ஒன்னும் ஆகலைல்ல மது…”

“அப்படி ஆகியிருந்தா?”

“அப்படியே ஆகியிருந்தாலும் அது ஜஸ்ட் ஆக்சிடென்ட்ன்னு தான் உன்னோட மாமன் என்கிட்டே சொன்னான். உன்னை சுத்தி இருக்க எல்லாருமே இவ்வளவு உனக்கு சப்போர்ட்டா இருக்கும் போது உனக்கு என்னடா கவலை?” என்று ஆதூரமாக கேட்க,

“அதான் எனக்கு அவ்வளவு குற்ற உணர்வை தருதுக்கா. என்னை ரெண்டு அடி அடிச்சுருந்தா கூட பரவால்ல. நான் பண்ண தப்புக்கு இப்ப மாமா மாட்டிகிட்டாங்க…” என்றவளின் குரலில் அத்தனை கவலை!

“ஏன்? எஸ்பி எங்க மாட்டினாப்ல?”

“இப்ப வேற வழி இல்லாம என்னை மாமா தலைல கட்றாங்கல…” சொல்லும் போதே அவளது குரல் கம்மியது.

“வேற வழி இல்லாமல்லாம் இல்ல மது. வீட்ல இருக்கவங்களுக்கு எஸ்பி பெஸ்ட் சாய்ஸ்… அதுவும் இல்லாம உன்ர மாமன அவ்வளவு ஈசியா ஏமாத்தி, அவன் தலைல கட்டி வைக்க முடியுமா? அப்படி ஏமாறக் கூடிய ஆளா அவன்?” சிரிப்போடு ஆரம்பித்து நக்கலாக முடித்தாள் பூஜா. அதை கேட்ட மதுவின் முகத்திலும் லேசான தெளிவு! புன்னகை விரிந்தது!

“அதை விட என்னன்னா உன்னோட கான்பிடன்ஸ் லெவலை பார்த்து செமையா இன்ஸ்பையர் ஆனதா எஸ் பி சொல்லி இருக்கானே. அதிலும் அந்த பியுட்டி காண்டஸ்ட்ட வேண்டாம்ன்னு சொல்லி, அவ்வளவு தெளிவா நீ நின்னதை பத்தி அவன் சொல்லாத நாளே கிடையாது மது…”

பூஜா சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால் என்ன? பேச்சுவாக்கில் சிறு நிகழ்வாக கூறிவிட்டு அவன் நகர்ந்ததை எல்லாம் பெரிய விஷயமாக்கி மதுவை தன் வழிக்கு கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

“மாமா இன்ஸ்பயர் ஆகறதா? சான்சே இல்ல. அவரை யாருமே இன்ஸ்பயர் பண்ணமுடியாது க்கா.” உண்மையை கூறினாள் மது.

“எதுக்குமே முதல் முறைன்னு ஒன்னு இருக்குமே மது! உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாகன்னு…” என்று பூஜா சிரிக்க, உடன் மதுவும் சிரித்தாள்.

“சான்ஸே இல்ல. கல்யாணம் பேசின நாள்ல இருந்து உர்ருன்னு இருக்காங்க. அப்படி இன்ஸ்பயர் ஆகியிருந்தா, இப்படியா இருப்பாங்க?”

“உனக்காக என்னவெல்லாம் பண்ணினான்னு உனக்கு தெரியுமா மது?” என்று அவளிடம் பூஜா கேட்க, அவள் கேள்வியாய் பார்த்தாள்.

“அவன் தான் அந்த பசங்களோட செல்போனை மீடியாவுக்கு கொடுத்தான். அதனால தான் அந்த வீடியோ ஆதாரம் எல்லாம் வெளிய வந்தது. இப்ப ஒரு பெரிய நெட்வொர்க்கை பிடிக்க முடிஞ்சு இருக்கு. ஆனா உன்கிட்ட பேச அவனுக்கு சில பாட்டில்நெக்ஸ் இருக்கலாம் மது. வேண்ணா நீ பேசி பார்க்கலாம்ல. உன்னோட வுட்பி தானே?” என்றவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை மெல்ல தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்து மனம் விட்டு பேச வைத்தாள் பூஜா.

நடந்த சம்பவங்களை சிறு விபத்து என்று உணர வைத்தவள், அதை எளிதாக மறக்க பார்த்திபனை பகடைக் காயாக உபயோகித்தாள்.

பார்த்திபனின் மேல் மது கொண்ட நல்ல அபிப்ராயம் அதற்கு உதவி செய்ய, அவள் நினைத்த காரியம் மெல்ல மெல்ல நிறைவேறியது.

அவளுக்கு சில மருந்துகளையும் எழுதியவள்,

“உன்ர மாமன உள்ள வர சொல்லிட்டு நீ வெய்ட் பண்ணு மது…” என்று பூஜா சிரித்தபடியே கேலியாக கூற, புன்னகையோடு தலையாட்டினாள் மது.

உள்ளே நுழைந்து தன் முன்னே அமர்ந்த பார்த்திபனிடம்,

“எஸ்பி… ஐ நீட் எ டைரக்ட் ஆன்சர்…” என்று இடைவெளி விட்டவள், “நீ இப்ப மதுவ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு பெரியவங்க ப்ரெஷர் மட்டும் தான் காரணமா? இல்லைன்னா உனக்கே அப்படியொரு அபிப்ராயம் இருக்கா?” என்ற பூஜாவை புருவத்தை சுருக்கியபடி யோசனையாக பார்த்தான்.

“இதுவரைக்கும் இல்ல பூஜா. ஆனா இந்த சிச்சுவேஷனை யூஸ் பண்ணிக்கிட்டு அந்த சின்ன பொண்ணோட லைப்ப நான் கெடுக்க கூடாதுன்னு நினைக்கறேன்…”

அதை கேட்ட பூஜாவின் முகம் யோசனையாக சுருங்கியது.

“ஏன் அப்படி நினைக்கற?”

“எனக்கும் அவளுக்கும் இருக்க வயசு வித்தியாசம் அதிகம். பதினோரு வருஷம். அதுவுமில்லாம என் அக்கா பொண்ணு. எப்படி நான் அவளை?” என்று பார்த்திபன் தயங்கியபடி நிறுத்த,

“உன் அக்காவும் அவங்க மாமாவ தான கல்யாணம் பண்ணாங்க? அவங்க சந்தோஷமா இல்லையா எஸ்பி?”

“இருக்கலாம்… அதெல்லாம் அந்த காலம். இப்ப? என்னால இந்த விஷயத்தை டைஜஸ்ட் பண்ணவே முடியல பூஜா…”

“ஓபனா நான் ஒன்னு சொல்லட்டா எஸ்பி?” என்று புருவத்தை உயர்த்தியபடி பூஜா கேட்க,

“ம்ம்ம்… சொல்லு…” என்றான் பார்த்திபன்.

“நீ ஒரு பையன், நல்ல பையன். மது ஒரு பொண்ணு, நல்ல பொண்ணு… ஏன் உன்னால இப்படி பார்க்க முடியல?” என்ற பூஜாவின் கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.

“உன்னால அப்படி பார்க்க முடியனும். ட்ரை பண்ணி பாரு எஸ்பி… அப்படியும் முடியலைன்னா இந்த கல்யாணம் வேண்டாம். அப்படியும் மீறி பண்ணினா உன்னால வாழ முடியாது. அந்த பொண்ணோட வாழ்க்கை அதோ கதி தான். ஆனா உன்னை அந்த பொண்ணு ஹீரோவா நினைக்கறா. என் மாமா தலைல என்னை கட்றாங்கன்னு ரொம்ப வருத்தப்படறா. இப்ப ரொம்ப பெரிய தாழ்வு மனப்பான்மைல இருக்கா. ஆனா உன் கூட இருந்தா மட்டும் தான் பாதுகாப்பா உணர முடியுதுன்னு சொல்றா. அப்படிப்பட்ட பொண்ணை நீ லூஸ் பண்ணனுமா? நீயே யோசிச்சு முடிவு பண்ணு எஸ்பி…” என்று இவள் முடிக்க,

“சரி, இதை விடு பூஜா… இப்ப மது சரியாக என்ன பண்றது?”

“சரியாகனும்ன்னா ஒரே மருந்து நீ மட்டும் தான்…” என்று ஒரே வார்த்தையில் முடிக்க, குழப்பமாக பார்த்தான்.

“என்னப்பா சொல்ற?”

“ம்ம்ம்… ஆமா… அந்த விஷயத்துக்குள்ளயே தன்னை தொலைக்க பார்க்கறா மது. அந்த கவனத்தை வலுகட்டாயமா இன்னொரு விஷயத்து மேல வைக்கணும். அதை இந்த கல்யாணம் ஈசியா பண்ண முடியும். நீ மனப்பூர்வமா அவளை ஏத்துக்கற பட்சத்துல, அவ உன்னோட சரி பாதின்னு உணர வைக்கணும். ஆனா உன்னால மதுவ மனசார ஏத்துக்க முடியாதுன்னு தோணினா தயவு பண்ணி கல்யாணத்தை நிறுத்திடு. ஏன்னா அவ மனசு இன்னும் டிப்ரஷன்குள்ள போக அதுவே காரணமாகிடும்…” தெளிவாக கூறிய தோழியை ஆழ்ந்து பார்த்தவன், இரு கைகளாலும் முகத்தை அழுத்தமாக தேய்த்து முடியை கோதினான்.

“யோசனை பண்றேன் பூஜா…” என்றவன், மேலும் அவளிடம் மாத்திரைகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

மனம் இன்னுமே குழம்பியது.

கையை தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தாள் மது.

‘நான் இவளது வாழ்வை காப்பேனா? இல்லை அழிப்பேனா?’ தனக்கு தானே கேட்டுக் கொண்டான் பார்த்திபன்.

‘நீ மட்டும் தான் அவளோட மருந்து எஸ்பி…’ பூஜா கூறியது காதில் அறைந்தது.

தலைகுனிந்து அமர்ந்திருந்த மதுவுக்கு எல்லாவற்றையும் தாண்டி சில கோபங்கள்.

அந்த வீடியோ பதிவை, வெளிப்படையாக்கியது பார்த்திபன் தான் என்பது அவளுக்கு புதிய செய்தி!

“கிளம்பு மது…” என்று கூறியபடி நடந்த பார்த்திபனை முறைத்துப் பார்த்தாள்.

“ஏன் அந்த அந்த வீடியோவ மீடியாவுக்கு கொடுத்தீங்க?”

“என்ன திடீர்ன்னு?”

“ஏன் கொடுத்தீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க?”

“யார் சொன்னா?”

“யாரோ சொல்றாங்க? பதில் சொல்ல மாட்டீங்களா?” அவனுக்கு முன் வந்து நின்று கொண்டு பிடிவாதமாக கேட்க, பார்த்திபனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. இத்தனை நேரம் பேசாமடந்தையாக எதையோ பார்த்து வெறித்தபடி இருந்தவளா இவள்?

“பூஜா தான சொன்னாப்ல?” என்று சிறு புன்னகையோடு கேட்க,

“ஆமா… சொல்லுங்க…” வார்த்தைகளில் அப்படியொரு பிடிவாதம்.

“என்ன சொல்லணும்?”

“ஏன் அந்த வீடியோவ கொடுத்தீங்க. என்னை மாதிரிதான மத்த பொண்ணுங்களும்? அந்த நேரத்துல எவ்வளவு கஷ்டமா இருந்துது தெரியுமா? அதை திரும்ப ரிவைண்ட் செஞ்சு பார்க்கனும்ன்னா எவ்வளவு கஷ்டம்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது?” பாவமாக அவள் கேட்க, பார்த்திபனோ,

“அந்த வீடியோஸ்ல எங்கயாவது ஒரு பொண்ணோட முகமாவது தெரியுதா?” என்று கேட்டான்.

மறுத்து தலையாட்டியவள், “ஆனா குரல் எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கே?”

“சோ? அதனால என்ன? பாதிக்கப்பட்ட பொண்ணுங்களை காப்பாத்தணும்ன்னு நினைச்சு இதையெல்லாம் மறைச்சு வெச்சுகிட்டே இருந்தா இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திமிரா தெனாவெட்டாத்தான் சுத்திட்டு இருப்பாங்க. அந்த பொண்ணுங்க முன்னாடியே, அவங்களுக்கு இப்படி அநியாயம் நடந்ததை வெளிய சொல்லியிருந்தா மத்த பொண்ணுங்களை காப்பாத்தி இருக்கலாம்ல? அவங்களுக்கு அவங்களோட சுயநலம் மட்டும் தான் முக்கியம்ன்னு இருந்ததனால தான் இத்தனை பொண்ணுங்க பாதிக்கப்படறாங்க. என்னை பொறுத்தவரைக்கும் அந்த பொண்ணுங்களும் குற்றவாளிங்கதான்…” என்று கடுகடுப்பாக அவன் முடித்தான்.

“அப்படின்னா நானும் குற்றவாளிதான?” என்று மது கேட்க,

“உனக்கு நான் பொறுப்பு… அப்படின்னா நீ குற்றவாளி கிடையாது. நான் தான்…” என்று கூறிவிட்டு வெளியே போக முயல, அவசரமாக அவனுக்கு முன்னே போனவள், அவன் காரில் ஏறும் முன்,

“நீங்க சொல்றது புரியல…” என்று முறைத்தாள்.

“பொண்டாட்டி பாவம் பண்ணினா, அது புருஷன் கணக்குல தான் வருமாம்… அதனால நீ கவலைப்படாத…” என்று கூறியவன், அதற்கும் மேல் அவளிடம் பதில் பேசாமல் காரை கிளப்ப,

“இந்த மாமா என்ன சொல்லுது?” என்று மண்டையை தட்டியபடி யோசித்தாள் மதுவந்தி.

எப்படி யோசித்தாலும் அவளுக்கு விடை தெரியவில்லை.

அதே குழப்பத்தோடு அவனோடு இல்லறத்தில் அடியெடுத்து வைத்தாள் மதுவந்தி, திருமதி மதுவந்தி பார்த்திபனாக!

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாராயணன் நம்பி

செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்