Kadhal ninaivalai

காதலின் நினைவலைகள்…

அவளை நோக்கி நடந்துவிட்டேனேயொழிய, அவளிடம் பேசப் பெரும் தயக்கம்தான் எனக்கு. என் உலகமே அவள்தான் என்று முடிவு செய்ய எனக்கு ஒற்றை நாள் போதுமாயிருந்தது. அவளுக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

என்னை மறுத்துவிட்டால் என்ன செய்ய என்று யோசித்த மனம், ‘சிறுபிள்ளையென கோபித்துக்கொண்டு தன் பெற்றோரிடம் கூறிவிட்டால் என்ன செய்ய?’ என்று யோசிக்கையில் விதிர்விதிர்த்துப் போனது எனக்கு.

‘என்னால் மாதவியின் திருமணத்துக்கு பிரச்சனை ஏதும் வருமோ?’ யோசித்தபடி நடந்த என் கால்கள் லேசாகத் தேங்க… அவள் விருப்பம் மட்டும் போதும்,

எதுவந்தாலும் சமாளிக்கும் தைரியம் உள்ளது என்ற என் உள்ளத்தின் உறுதி உந்தித் தள்ளியது என்னை.
அருகே நெருங்க, தனித்து இருப்பவளிடம் மனதை திறக்க எண்ணிய என் மனதில் மெல்லிய ஏமாற்றம் படிந்தது. மேலேயிருந்து பார்க்கையில் என் பார்வைக்கு அவள் மட்டுமே தெரிந்தாள் ஆனால், தனியே நின்று கோபத்தோடு முனுமுனுத்துக் கொண்டிருந்தவளின் பக்கவாட்டில் அவளது அண்ணன் அருண் எதையோ கூறி அவளது தாடையைப் பிடித்துச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

தவிப்போடு வினோத், பிரசாந்த், பிரவீன் நின்றிருக்க, திருமணத்திற்காக வந்திருந்த வினோத்தின் நண்பர்கள் சிலரும் அங்கே நின்றிருந்தனர்.

“பூரணி பிளீஸ்டி… செல்லம்ல… நாளைக்கு காலையில வரும்போது எடுத்து வந்து தரோம். இப்பப் போகவிடு. அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் சொல்லிடாத. பிளீஸ்…” கெஞ்சிக் கொண்டிருந்தான் அருண்.
அந்தச் சூழ்நிலையில் அங்கே என்னை எதிர்பார்க்காத வினோத்,

“என்ன ஆனந்த் புது இடம்னு தூக்கம் வரலையா?”
மெல்லிய சிரிப்போடு அவர்கூற்றை ஆமோதித்தவன்,

“என்ன அண்ணா? ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கீங்க?” கேள்வி வினோத்திடம் இருந்தாலும் பார்வை பூரணியைச் சுற்றி வந்தது.
என்னை அங்கிருந்து லேசாக நகர்த்திக் கொண்டு வந்தவர், “அதை ஏன் கேட்குற? என் கூட வேலை பார்க்கற ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சென்னையில இருந்து கல்யாணத்துக்கு வந்திருக்காங்க. அவங்க தங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கோம்.

இன்னைக்கு நைட் சும்மா பேச்சுலர்ஸ் பார்ட்டி அந்த ஹோட்டல்ல கொண்டாடலாம்னு பிளான்.” என்றபடி என்னைப் பார்த்து லேசாகச் சிரிக்க, அவர்களது பிளான் எனக்குப் புரிந்தது.

“அதனால என்ன ண்ணா?”

“இவனுங்களும் வரேன்னு சொன்னானுங்க.” என்று பிரசாந்த், பிரவீன், அருணைக் கைகாட்டியவர்,

“கூடவே அந்த குட்டிச்சாத்தானும் வர்றேங்குது.” பூரணியைக் காட்டி அழுகாத குறையாகக்கூற சிரிப்புத் தாளவில்லை எனக்கு.

“கூட்டிட்டு போகலைன்னா, வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு மிரட்டுது. நாளைக்கு நிச்சயதார்த்தம். நாளைக்குலாம் எங்கயும் போக விடமாட்டாங்க. இன்னைக்கு நாங்க என்ஜாய் பண்ணாதான் உண்டு. இவளை எப்படி சமாளிக்கன்னே தெரியல.”

“சாக்லேட் வாங்கித் தரேன்னு சொல்லி ஏமாத்த வேண்டியதுதான.” மதியம் நிகழ்ந்த நிகழ்வின் நினைவில் புன்சிரிப்போடு நான் கூற.

“ம்ம், அதெல்லாம் சொல்லியாச்சு. அவளுக்காக சென்னையில இருந்து வீடியோகேம் கேசட்ஸ் வாங்கி வந்திருந்தேன். அது என் லக்கேஜ்ஜோட அந்த ஹோட்டல்லதான் இருக்கு. அதை உடனே எடுத்துக் கொடுக்கச் சொல்லி அடம்பிடிக்கிறா.

கூட்டிட்டு போனாலும் திரும்ப கொண்டு வந்து விட யாராவது ஒருத்தர் வரணும். அந்த ஹோட்டல் இங்கயிருந்து தூரம் கொஞ்சம் அதிகம்தான். இங்க வந்துட்டு திரும்பவும் அங்க வர்றது சரிவராது. அதான் என்ன செய்யன்னு புரியாம அவளைக் கெஞ்சிகிட்டு இருக்கோம்.”

என்னிடம் சூழ்நிலையை விளக்கியவர் ஏதோ யோசனை வந்தவராக,

“ஆனந்தன் நீங்க எங்ககூட ஹோட்டலுக்கு வர்றீங்களா?”

“இல்லைண்ணா. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை.”
நன்றாகவே நகைத்தவர், “உங்களைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும் ஆனந்த். மாதவி என்கிட்ட சொல்லியிருக்கு. நீங்க இப்ப எங்ககூட வந்தீங்கன்னா, திரும்ப பூரணிய பத்திரமா இங்க கூட்டிட்டு வந்துடுவீங்களேன்னுதான் கேட்டேன். ட்ரைவரை மட்டும் நம்பி திரும்ப அனுப்ப முடியாது.”

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது எனக்கு. அவளோடு பேசத் தருணம் எதிர்பார்த்திருக்க,

அவர்களாக ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பைத் தவற விட முடியுமா? உடனே ஒத்துக்கொண்டேன்.

அவளையும் கூப்பிட்டுச் செல்கிறோம் என்று சொன்னதுதான் தாமதம், நொடியில் மண்டபத்துக்குள் ஓடிச் சென்றவள் திரும்ப வரும்போது சிறு சிறு வாண்டுகளாக நான்கைந்து வானரங்களோடு திரும்ப வந்திருந்தாள். ‘எப்படி சிக்கியிருக்கோம் பார்த்தியா?’ என்று என்னைப் பார்த்து பாவமாக ஒரு லுக் விட்ட வினோத், என் முகமும் விளக்கெண்ணெய் குடித்தது போலிருக்கவும் குழம்பிப் போனார்.

‘இதுகளையெல்லாம் கூடவே இழுத்துட்டுப் போய் அவளோட தனியே எப்படி பேச முடியும்?’ நான் திகைத்திருக்க,

“இதுங்கல்லாம் பூரணியை விட்டு அகலாதுங்க. ஒருவேளை பூரணியை நாங்க விட்டுட்டு போயிருந்தா இதுங்க எல்லாம் கோரசா கத்தி எல்லாரையும் எழுப்பி விட்டுருக்குங்க.” என்று அவர்களது பிளானை விளக்கவும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்னால்.

டிரைவரைத் தவிர்த்துவிட்டு நானே வண்டியை எடுக்க, அந்த டாடா சுமோ நிறைந்தது. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரப் பயணம். அவர்களை ஹோட்டலில் இறக்கிவிட்டதும் பூரணிக்கென்று வாங்கி வைத்திருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு எங்களது பயணம் மீண்டும் மண்டபம் நோக்கித் தொடங்கியது.

வானரங்களை வைத்துக் கொண்டு அவளோடு எப்படி பேச, எண்ணியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனை உலுக்கியது அவளது குரல்.

“அங்கிள், குல்ஃபி வேணும் வண்டியை நிறுத்துங்க.”
ஆளில்லா சாலையில் கிரீச்சிடலோடு சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன்,

“அங்கிளா?” என்றபடி அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க, என் திகைப்பு அவளுக்கு வித்தியாசமாய் இருந்திருக்க வேண்டும், என்ன என்பது போல் புருவங்களை ஏற்றி இறக்கினாள்.

“என்ன அங்கிள்னு கூப்பிடற?”

“ம்ம், இவங்கல்லாம் உங்களை அப்படிதான கூப்பிடறாங்க. அதான்…” என்றபடி பொடிசுகளைக் காட்ட,

“அவங்க கூப்பிட்டா நீயும் அப்படி கூப்பிடுவியா?” எனது கோபத்தைப் பார்த்து அவளது முகம் குழப்பத்தை தத்தெடுத்திருக்க,

“பின்ன எப்படி கூப்பிடனும்?”

“வினோத்தை எப்படி கூப்பிடுவ?” என்றேன்.

“மாமான்னு கூப்பிடுவேன்.” தயக்கமாய் பதில் சொன்னாள்.

“ம்ம்… என்னையும் அப்படியே கூப்பிடு.”

‘லூசாய்யா நீ’ என்பது போல என்னைப் பார்த்தவள், “அதேதான் இங்லீஷ்ல கூப்பிட்டேன்.”

“அதேதான், இங்லீஷ்ல கூப்பிட்டா கேவலமா இருக்கு. நீ தமிழ்லயே கூப்பிடு.”

சரியென்று உடனே ஒத்துக்கொண்டவள், சற்று தொலைவில் இருந்த குல்ஃபி வண்டியைக் காட்டி,

“மாமா, குல்ஃபி வேணும் வாங்கித் தாங்க” என்க சந்தோஷத்தோடு இறங்கினேன். வாண்டுகளுக்கும் அவளுக்கும் அவர்களுக்குப் பிடித்த ஃபிளேவரில் வாங்கித் தந்துவிட்டு, எனக்கும் ஒன்றை வாங்கிக் கொண்டு அவளருகே வந்து நின்றேன்.

ஏகாந்தமான சூழல், காயும் ஒற்றை நிலா, போக்குவரத்தில்லா சாலை, தொண்டைக்குள் கரையும் குளுமை, வண்டிக்குள் பிள்ளைகள் இருக்க வெளியே நானும் அவளும் மட்டும்,

மெல்ல பேச ஆரம்பித்தேன், “பூரணி, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”
பேசு என்பது போல என்னைப் பார்த்தாள், “நான் என்ன சொல்ல வர்றேன்னு சரியா புரிஞ்சுக்குவியா?”
குல்ஃபியில் முழு கவனத்தையும் பதித்தபடி தலையை ஆட்டினாள்.

அவளது சிறுபிள்ளைத்தனம் என்னை வெகுவாக கவர, அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தேன்.
காதல் சொல்ல முடிவெடுத்துவிட்டாலும், ஏதோ ஒரு தயக்கம் எனக்குள்ளும் குமிழ் விட்டது. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட நிலை. மெல்ல பேச்சு கொடுத்து அவளை என்னிடம் சற்று சகஜமாக பேச வைத்த பிறகு என்னிதயத்தை திறந்து காட்டலாம் என்று தோன்றியது.

அவளது கவனத்தை என்வசம் திருப்பும் பொருட்டு அவளைப் பற்றி விசாரிக்கலாம், பிறகு என் நேசத்தை சொல்லலாம் என்று எண்ணியபடி,

“என்ன படிக்கிற?” என்றேன். அவளது படிப்புத் தகுதியையும் தெரிந்து கொள்ளலாமே…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து எதிர்பாராத நேரத்தில் குப்புற விழுந்தது போல அதிர்ந்து போனேன் அவளது பதிலில்.

“நான் பிளஸ் ஒன் படிக்கிறேன் மாமா.”

—அலையடிக்கும்…

வேட்டை ஆரம்பம்…

நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு ஹரிணியிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தான் சரண். கலெக்டர் கொலை நடந்த அன்று நிகழ்ந்தவற்றை நினைவுபடுத்தி அவனது கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தாள் ஹரிணி.

நன்கு தெளிவாகவே இருந்தாள். அவனது கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு அவள் கூறிய பதில்களில் அவனது பல சந்தேகங்கள் தீர்வதாய் இருந்தது. கண்டிப்பாக தொழில்முறை கொலையாளிகள் இல்லை என்பது உறுதியாகி இருக்கும் பட்சத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே கொலை நடந்திருக்கக்கூடும் என்பது தெளிவாக புலனாகியது.

கொலையாளியின் முகம் முழுவதும் அவள் பார்க்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் என்றாலும் கொலையாளியின் பார்வை வெகு பரிட்சியமாக இருப்பதாக அவள் கூறியது நிமிர்ந்து அமரச் செய்தது அவனை.

“அந்தக் கொலைகாரன மறுபடியும் பார்த்தா உன்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியுமாம்மா?” அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தீரன் கேட்க,

“நிச்சயமா முடியும் அங்கிள். அந்தக் கண்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

கொலையாளியோட இரண்டு புருவத்துக்கும் இடையில இருக்கற அந்த சின்ன மச்சம் எனக்கு எங்கயோ பார்த்திருக்கற ஃபீல் குடுக்குது. அதுமட்டுமில்லாம நேத்து அந்த கொலைகாரனை ரொம்ப நெருக்கத்துல பார்த்தேன்.”
இது அனைவருக்குமே புது செய்தியாக இருந்தது.

“அப்ப நேத்து நடந்த கொலையும் அவன்தான் பண்ணதா? நீ பார்த்தியா?” சரணின் வார்த்தையில் பெரும் பதட்டம்.

“இல்ல, நான் அவன் கொலை பண்ணதைப் பார்க்கல, கொலை நடந்த இடத்துல இருந்து அவன் வெளியே வந்ததைப் பார்த்தேன்.” என்றவள் முன்தினம் மாலை நடந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினாள்.

ஃபோரம் மால்… ரேணுவிடம் இருந்து அவளது அண்ணனின் புகைப்படத்தை வாங்கியவர்கள், அவர் எங்காவது தென்படுகிறாரா என பார்வையை சுழற்றியபடியே மேல் தளத்தில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக கீழே இறங்கினர்.

வாயிற்புறம் வரை வந்தும் அவர் எங்கும் தென்படவில்லை. கூட்டம் அவ்வளவாக இல்லாததால் அவர் மாலுக்குள் இல்லை என்பதை சுலபத்தில் உறுதி செய்து கொண்டவர்கள் மாலை விட்டு வெளியே வந்தனர்.

“கார்பார்க்கிங்ல இருக்காரான்னு ஒருதடவை பார்க்கலாம். இல்லைன்னா ரேணுவுக்கு ஃபோன் பண்ணி கேட்கலாம். நீ இடதுபக்கம் போய் பாரு. நான் வலது பக்கம் இருக்கற கார்பார்க்கிங்ல பார்க்குறேன்” என்றவாறு சுஜி வலதுபுறம் நடக்க, இடதுபுறமாக நடக்க ஆரம்பித்தாள் ஹரிணி.

இடதுபுறத்தில் தரைத்தளத்தில் பேக்கிங் செக்ஷனும் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். சற்று அளவில் பெரிய வேன் ஒன்று பாதையில் நிறுத்தப்பட்டு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர் சிலர்.

அதைக் கடந்து சில அடிதூரம் நடந்து வந்தவளது பார்வையில் சற்று வெறிச்சோடிய கார்பார்க்கிங் தென்பட்டது. அண்டர்கிரௌண்டு கார்பார்க்கிங் அது. அதற்குள் செல்லும் பாதை சற்று சரிவாக இருந்தது. சுற்றுப்புறம் இருட்டத் துவங்கியதில் மின்விளக்குகள் மட்டுமே வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.

கார்பார்க்கிங் உள்ளே சொற்பமான அளவில் மட்டுமே கார்கள் நின்றிருந்தது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது.

வெளியில் இருந்தபடியே பார்வையை உள்ளே ஓட்டியவள் யாரும் தென்படாததால் திரும்பிப் போகலாம் என்று எண்ணியபோது, உள்ளே பக்கவாட்டில் இருந்து யாரோ வருவது அவளுக்குப் புலனாகியது.

டிஎஸ்பி ஜனார்த்தனன்தான் வருகிறாரோ என்று எண்ணியவள் சற்று நிதானித்து வருவது யார் என கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.

இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, தலையைக் குனிந்தபடியே சற்று லேசான தள்ளட்டமான நடையோடு வந்த உருவத்தைப் பார்த்தபடி நின்றிருந்தாள். மசமசப்பான வெளிச்சம் மட்டுமே இருந்ததில் உருவம் தெளிவாக தெரியவில்லை.

கார்பார்க்கிங்கில் இருந்து மெல்ல வெளியே வந்த உருவமானது சற்று கால் தடுமாறி விழப்பார்க்க,

அனிச்சையாகத் தாவி அந்த உருவத்தின் கைகளைப் பிடித்துத் தாங்கி நிறுத்தியவள், நல்ல மின்விளக்கு வெளிச்சத்தில் அவனது முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

கண்களைத் தவிர்த்து முகம் முழுக்க ஒரு பெரிய ஸ்கார்ப் கட்டி மறைத்திருந்த அந்த உருவத்தைக் கண்டவள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள். வெகு நெருக்கத்தில் கண்ட அவனது கண்கள் மூன்று நாட்களுக்கு முன்பு கலெக்டரைக் கொன்றது இவன்தான் என்பதை உறுதி செய்தது.

தானாக கரங்கள் நடுங்க அவனது கைகளைப் பிடித்துத் தாங்கிய தனது கரங்ளை எடுத்துக் கொண்டவள்,

அதிர்ச்சியில் வேரோடிப் போயிருந்தாள். அவனோ வாயடைத்துப்போய் பயத்தில் நின்றிருந்தவளை சலனமற்ற பார்வையால் பார்த்தபடி விலகி எதிர்புறமாக நடந்திருந்தான்.

அவன் கடந்து சென்ற பிறகே சற்று ஸ்மரணைக்கு வந்தவள் பதட்டத்தோடு அவள் வந்த திசையிலேயே சுஜியைத் தேடி ஓடினாள். வலது புறத்தில் இருந்த கார்பார்க்கிங்கில் டிஎஸ்பி ஜனார்த்தனனைத் தேடிப் பார்த்த சுஜி அவரை அங்கு காணாததால் திரும்பி ஹரிணியைத் தேடி வந்தவள், ஹரிணி ஓடி வருவதைப் பார்த்து அவளருகே சென்றாள்.

பயமும் பதட்டமும் சரிபாதி முகத்தில் நிறைந்திருக்க, சுஜியைப் பார்த்தவள் அவளது கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.
“என்ன ஆச்சு ஹரிணி? ரேணு அண்ணன் அங்க இருந்தாரா?”
சுஜி வினவ, இல்லை என்று தலையசைத்தவள் பெரும் குழப்பத்திலும் பயத்திலும் இருந்தாள்.

“அங்க… அங்க…” திக்கித் திணறியபடி தான் வந்த திசையை நோக்கிக் கைகாட்டியபடி ஹரிணி பார்த்துக் கொண்டிருக்க,

அப்போது சில பொதுமக்களும் வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டியும் ஹரிணி பயந்து ஓடிவந்திருந்த பகுதியை நோக்கிப் பரபரப்பாக ஓடினர்.

என்னவென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இருவரும். ஓடியவர்கள் அனைவருமே இடதுபுற கார்பார்க்கிங் நோக்கி ஓடவும்,

சுஜியின்கை பிடித்து இழுத்தவாறு, அந்தப் பகுதியை நோக்கித் தானும் ஓடினாள் ஹரிணி.

அந்த அண்டர்கிரௌண்டு கார்பார்க்கிங்கின் உள்ளே வெளிச்சமற்ற மூலையில் அதற்குள் சிறிது கூட்டம் கூடிவிட, கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்று பார்த்த இருவரும் அதிர்ந்து போயினர்.

சிலரது மொபைல் டார்ச்சின் உதவியால் அந்த இடம் சற்று வெளிச்சத்துக்கு வந்திருக்க, அங்கே மூலையில் சற்று எசகுபிசகான கோணத்தில் மடங்கி விழுந்து கிடந்தார் டிஎஸ்பி ஜனார்த்தனன்.

அவரது உடலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த உறையாத ரத்தம் சம்பவம் சற்று முன்னர்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

மேலேறி நிலைத்திருந்த விழிகளும் சற்று பிளந்த வாயுமாக அவர் விழுந்து கிடந்த கோலமே அவருடைய உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்தது. அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்ட ஹரிணி அவரையே பார்த்திருக்க,

பயத்தை விழிகளில் தேக்கியவாறு நின்றிருந்த சுஜியோ அடுத்து என்ன செய்வது என்றுகூட புரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தாள்.

“அப்புறம் எப்படி ஹாஸ்டலுக்கு வந்தோம்னு கூட எனக்குத் தெரியல. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கக்கூட எங்களுக்கு பயமா இருந்துச்சி.

என்னென்ன விசாரணையெல்லாம் வருமோன்னு ரொம்பவே பயந்திருந்தேன். நைட்ல ஒரு நிமிஷம்கூடத் தூங்கல.

ஆனா, அவ்வளவு சீக்கிரம் காலையிலயே போலீஸ் என்னைத் தேடி வரும்னு எதிர்பார்க்கல. போலீசைப் பார்த்த பதட்டத்தில அவங்க நேத்து சாயந்திரம் மாலுக்குப் போனியான்னு கேட்ட கேள்விக்கு போகலைன்னு சொல்லிட்டேன்.

ரேணு அண்ணனை நாங்க அதுக்கு முன்ன பார்த்ததுகூடக் கிடையாது. அவர் பேருகூட எனக்கு நேத்துதான் தெரியும். அதனால ஜனார்த்னனை தெரியுமான்னு கேட்டதும் தெரியாதுன்னு பதில் சொல்லிட்டேன். அவங்க கேட்கற கேள்விகளுக்கு தப்புத்தப்பா பதில் சொல்றேங்கறதைக்கூட என்னால அப்ப உணர முடியல.”

அவள் சொல்லி முடித்தபோது அவளது கண்களில் படர்ந்திருந்த கண்ணீரும் முகத்தில் இருந்த சங்கடமும் சரணை வெகுவாக உருக்கியது. தான் சற்று முன்பே இவளிடம் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம் என மேலும் மேலும் குற்றவுணர்ச்சியில் தவித்தான்.

தன் மனதை நிறைத்த தேவதையின் பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் அவளை விரும்புவதை நேரில் சந்தித்துச் சொல்லி,

திருமணத்துக்கான அவளது சம்மதத்தை அவள் வாயாலேயே கேட்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தவனுக்கு, அவளிடம் சென்று வழக்கு விசாரணை என்று பேசுவதா என்றிருந்தது.

ஆனால், அவளைச் சந்தித்து பேசியிருக்கும் பட்சத்தில் நேற்று அவள் பயந்திருக்க மாட்டாள். உடனே என்னிடம் தகவலைக் கூறியிருப்பாள். இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணியவன் தன் நேசத்தைச் சொல்ல இன்னும் நேரம் வரவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

மகனின் மனத்தாங்கலை உணர்ந்து கொண்ட தீரன் அவனது கரத்தைப் பிடித்து அழுத்தியவாறு,

“குறைந்த பட்ச எவிடன்ஸ் இருந்தாலே போலீஸ்க்கு விசாரிக்க அதிகாரம் இருக்கும்மா. அவங்களுக்கு உன்னோட மொபைல் நம்பர் கிடைச்சிருக்கு.

நீதான் அந்த ஜனார்த்தனனுக்கு கடைசியா கால் பண்ணியிருக்க, உங்களை பார்க்கறதுக்காகத்தான் அவர் அந்த மாலுக்கே வந்திருக்கார்.

சோ… நீ முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதும் அவங்க உன்னை கூட்டி வரவேண்டியதாப் போயிருக்கும்.” தீரன் சொன்னதை ஆமோதித்துக் கொண்டான் சரண்.

“நீ அந்த நேரம் பதட்டத்துல இருக்கங்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் ஹரிணி. அவங்க உன்னை பொறுமையா விசாரிக்கலாம்னுதான் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போயிருப்பாங்களே தவிர உன்னைக் குற்றவாளியா நினைச்சு இல்ல.”

சரணும், தீரனும்வந்ததுமே மிகுந்த மரியாதையோடு தன்னை உடனே அனுப்பி வைத்ததில் இருந்தே அவன் கூறுவதில் இருந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது ஹரிணிக்கு. சற்று ஆசுவாசமாகவும் இருந்தது.

“ஹரிணியும் சுஜியும் ஜனார்த்தனனைத் தேடும் போது நீ எங்கப் போயிருந்த ராகுல்? நீ ஹரிணி கூட போயிருந்தாலே நேத்தே நமக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வந்திருக்குமே.” ராகுலைப் பார்த்து தீரன் கேட்க,

“அவங்க பார்வையில படாத தூரத்துலதான் நான் ஃபாலோ பண்ணேன். அவங்க வெளியில வந்து இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சு தேடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவங்களைப் பார்வையால தொடர்ந்து வந்துகிட்டு இருக்கும்போது, அந்த நேரத்துல என்னோட உறவினர் ஒருத்தர் எதிர்பாராம பார்த்து நலம் விசாரிக்க, அவரைப் பேசி அனுப்பிட்டு நான் வெளிய வந்து சுஜியைத்தான் பார்த்தேன்.

ஹாஸ்டலுக்குப் போற பக்கமா அவங்க நடந்து போனதால ஹரிணியும் அவங்ககூட ஹாஸ்டலுக்குப் போறாங்கன்னுதான் நான் நினைச்சுக்கிட்டேன். சுஜி கார்பார்க்கிங்ல செக் பண்ணிட்டு திரும்பி வரும்போதுதான் ஹரிணி அவங்ககூட இல்லைங்கறது என் கவனத்துல விழுந்தது.

ஹரிணி எங்கன்னு நான் பார்க்கும்போதே அவங்க எதிர் பக்கத்துல இருந்து ஓடி வந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் யாரையோ தேடறாங்கங்கறது அப்பதான் புரிஞ்சுது. ஆனா அது ஜனார்த்தனன் சாரா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.

இடதுபுறம் இருந்த கார்பார்க்கிங்கில கார் எடுக்க நேரா லிப்ட் மூலமா அண்டர்கிரௌண்டு இறங்கி வந்த ஒருத்தர், அங்க கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஜனார்த்னனைப் பார்த்து செக்யூரிட்டிக்குத் தகவல் கொடுக்க, சில நிமிஷங்கள்லயே அந்த தகவல் பரவி பொதுமக்கள் அந்தப் பக்கமா ஓட ஆரம்பிச்சாங்க.

ஹரிணியும் சுஜியும் அங்க போய் பார்த்து அதிர்ந்து நிக்கறதைப் பார்த்தேன். ஏற்கனவே ரொம்ப பயந்து இருக்கறவங்க மேலும் பயந்து போயிடுவாங்களேன்னு வண்டி ஏற்பாடு பண்ணி உடனடியா இரண்டு பேரையும் ஹாஸ்டலுக்கு அனுப்பி வச்சேன். சரண் சார்கிட்ட இதை அப்பவே சொல்லிட்டேன்” என்றான் ராகுல்…

“அந்த நேரம் ஹரிணி பயப்படுவாளேன்னுதான் நான் யோசிச்சேன், அவ அந்த ஜனார்த்னனைப் பார்க்கதான் வந்திருப்பான்னு யோசிக்கவே இல்லை.”
என்றபடி தன்னுடைய மடிக்கணிணியை விரித்து வைத்து அதில் சிசிடிவி பதிவுகளை ஒடவிட்டான். கொலையாளியின் நடையைக் காட்டி பெண் போல நடப்பதாக தனது சந்தேகத்தைக்கூற, அதை உறுதியாக மறுத்திருந்தாள் ஹரிணி.

“அவன் தடுமாறி விழப் பார்த்தப்ப நான் அவனைத் தாங்கிப் பிடிச்சேன். என்னால அவன் ஒரு ஆண்தான்ங்கறதை உறுதியா சொல்ல முடியும். ஆனா அவனோட நடை நிதானமா இருந்தது. நேற்று கொஞ்சம் தள்ளாடி நடக்கற மாதிரியும் இருந்தது.”
ஹரிணி கூறியதைக் கேட்டவனுக்குள் பல சந்தேகங்கள் முளைவிட, விசாரணையில் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

“ஹரிணிதான் கலெக்டர் கொலைக்கு ஐவிட்னஸ்னு உங்களுக்குதான் அன்னைக்கே தெரியுமே சார். நீங்க அவகிட்ட அன்னைக்கே வந்து பேசியிருந்தா இவ்வளவு தூரம் ஆகியிருக்காதே சார்.” சரணைப் பார்த்து சுஜி கேட்க,
சற்று சங்கடமாய் ஹரிணியைப் பார்த்துக் கொண்டவன், “அது என்னோட தவறுதான். இனி இப்படி நடக்காது” குரலில் வருத்தத்தைத் தேக்கிக் கூற,

அவனுடைய வருத்தம் நிறைந்த குரல் இரு பெண்களையுமே வருந்தச் செய்தது, “ஹைய்யோ! நடந்ததுக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்? எனக்கே என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியாத குழப்பத்துல இருந்தேன். எதையுமே சரியா யோசிக்கக்கூட முடியல என்னால.

அன்னைக்கே நாங்க போலீசுக்குப் போயிருந்தாகூடதான் இதை தவிர்த்திருக்கலாம். ஆனா அந்த நேரம் பயம்தான் பிரதானமா இருந்தது.” என்ற ஹரிணியின் கூற்றை சுஜியும் ஆமோதிக்க, திலகவதிதான் சமாதானப் படுத்தினார்.

“யாராயிருந்தாலும் அந்த நேரப்பதட்டம் இப்படிதான் செயல்பட வைக்கும். சரிசரி இதோட இந்தப் பேச்சை விடுங்க. எல்லாரும் சாப்பிட வாங்க.” என்றபடி பேச்சை மாற்றி ஹரிணியையும் சுஜியையும் அழைத்து மதிய உணவைப் பறிமாறினார்.

மதிய உணவை முடித்துக் கொண்டு சரண், ஹரிணி கொடுத்த தகவலின்படி இரண்டு கொலைக்கும் காரணமானவன் ஒருவனே என்பதை உறுதிசெய்து கொள்ள, சிசிடீவி பதிவுகளையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் சோதனை செய்ய வேண்டி புறப்பட்டுச் சென்றான். தீரன் தனது அலுவலகத்துக்குக் கிளம்பிவிட உடன் ராகுலும் கிளம்பிச் சென்றான்.
அடுத்த சில மணிநேரங்களில் ஹரிணியின் பெற்றோரும் வந்துவிட, ஹரிணியைப் பார்த்து கண்ணீரில் கரைந்தவர்களைத் தேற்றும் அளவுக்கு அவள் தெளிவாய் இருந்தாள். நடந்த நிகழ்வுகளை தனது பெற்றோருக்கு ஒருமுறை கூறியவள், பயத்தில் இருந்தவர்களையும் சமாதானம் செய்தாள்.

எப்பொழுதும் தனக்கு சப்போர்ட் செய்யும் தந்தை வெகுவாக பயந்துபோய் இருக்க, தன் தாய் தனக்கு ஆதரவாக இருந்தது நெகிழ்த்தியது அவளை.

“போதும்டா, இனி அப்பா உன்னைத் தனியா இங்க தங்க விடமாட்டேன். தமிழ்நாட்ல போய் படிப்பை கன்டினியூ பண்ணிக்கலாம். நீ எங்ககூடவே வந்துடு” என்று பதறிய தந்தையைச் சமாதானப்படுத்தத் திணறியவள்,

“இவ்வளவு பிரச்சனையிலயும் என் பொண்ணு இப்ப தைரியமா இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம்? அவளுக்கு எந்த பிரச்சினையும் இனி வராது. அவ படிப்பை இங்கயே முடிக்கட்டும்” என்று கூறிய அன்னையின் கூற்றில் அசந்து போனாள்.

“நிஜமா அம்மாவை சமாளிக்கறதுதான் கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். அவங்களே தைரியமா இருக்காங்க. நீங்க பயப்படாதீங்கப்பா. இனி எதுவா இருந்தாலும் தீரன் அங்கிள் ஃபேமிலி இங்கதான இருக்காங்க அவங்ககிட்ட சொல்லிடறேன்” என்றவளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார் திலகவதி.

“பின்ன என் மருமகளுக்கு ஒரு பிரச்சனைன்னா நாங்க பார்த்துக்கிட்டு இருப்போமா? சரண் அவளைக் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பான். நீங்க கவலைப்படாதீங்க” என்றவரைக் குழப்பமாக ஏறிட்டுப் பார்த்தவள், கேள்வியாகத் தன் தாயைப் பார்க்க,

அவளுக்குத் தாங்கள் பார்த்திருந்த வரன் சரண்தான் என்பதைக் கூறியவர், “அன்னைக்கு என்னை முழுசா எங்கடி சொல்லவிட்ட? நான் பேசியதைக்கூட காதுல வாங்கியிருந்திருக்க மாட்ட. தம்பியோட ஃபோட்டோவை உனக்கு மெயில் அனுப்பியிருந்தேனே அதைப் பார்த்தியா?”
அன்னையின் கேள்விக்கு இல்லையென்று தலையசைத்தவளுக்கு, என்ன பேசுவது என்றே புரியாமல் போயிருந்தது.

‘மூன்று நாட்களாக தான் இருந்த நிலைக்கு மெயில் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றக்கூட இல்லை’ என்று எண்ணிக் கொண்டவள், தன்னை அந்த விபத்திலிருந்து காப்பாற்றிய அன்று சரணின் செய்கைக்கான முழு அர்த்தமும் புரிந்தது.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இது என்ன புதுத்தலைவலி?’ என்று எண்ணியவளுக்கு அதுவரையில் இருந்த இதம் தொலைந்து போனது.

—-வேட்டை தொடரும்.