Puthu Kavithai 29

29

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் மது.

‘இவன் என்ன என்னுடைய சந்தோஷத்தை பறிப்பது? நான் சந்தோஷமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா என்ன? இந்த போட்டோக்கள் ஒரு பொருட்டா என்ன? பார்த்திபன் இரண்டு தட்டு தட்டினால் இவர்கள் எம்மாத்திரம்?’

பார்த்திபனின் நினைவு வரும் போதே தானாக அவளுக்குள் தைரியம் வந்தது.

இவர்களுக்கு அவன் தான் சரி. எதை பற்றியும் யோசிக்காமல் அவனிடம் முதல் வேலையாக இதைப் பற்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு மனம் தெளிவானது!

அதே தெளிவோடு வகுப்பிலும் இருந்தாள்.

பார்த்திபன் மதியம் அழைத்து விஷயத்தை சொன்ன போதும் குழப்பங்களை வெளிக்காட்டாமல் பேச முடிந்தது. ஆனாலும் வைக்கும் போது கண்டுகொண்டான்!

“என்னடி பொண்டாட்டி ஆச்சு?” எதார்த்தமாக அவன் கேட்க, மதுவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும் போல இருந்தது!

“ஒண்ணும் இல்லையே…” நழுவலாக பதில் கூற,

“இல்லையே… ஏதோவொன்னு மிஸ்ஸாகுதே…”

“என்ன?”

“உன்னோட அந்த பெப்பியான மாமூ…” என்று அவன் சிரிக்க,

“ஓ… கிளாஸ் ஆரம்பிக்க போதுல்ல… மறந்துட்டேன் மாமூ…” என்று சிரிக்க முயன்றாள். முடியவில்லை.

“இல்ல… ஏதோ சரியில்ல…” அவளது நாடியை பிடித்து வைத்திருந்தான்.

“ம்ஹூம்…அதெல்லாம் ஒண்ணுமில்ல… தூக்கம் கண்ணைக் கட்டுது…”

“அடப்பாவி…” என்று சிரித்தவன், “சரி கிளாஸ்ல தூங்கு… நைட் ஷிப்ட் வேலை பாக்கணும்ல…” குறும்பாக அவன் கூற, அவளது முகம் சிவந்தது.

“மாமூ…” சிணுங்கினாள்!

“ஓகேடி பொண்டாட்டி… டேக் கேர்…” என்று பேசியை வைத்தான்.

பார்த்திபன் ஃபோனை வைத்தபிறகும் கூட அந்த ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூக்கம் தொண்டையை அடைத்தது.

கண்ணீரை துடைத்துக் கொண்டு அறைக்குள் செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியது செல்பேசி.

மீண்டும் அவன்கள் தான்!

இந்த முறை சஞ்சயின் எண்ணிலிருந்தே! அவசரமாக வராண்டாவின் அருகிலிருந்த ரெஸ்ட் ரூமுக்குள் போனாள். காலையிலாவது கூட்டமில்லை. இப்போது வராண்டா முழுக்க மாணவிகள்! யாருடைய பார்வைக்கும் தீனியாக வேண்டாமே! மனதை திடப்படுத்திக் கொண்டு அழைப்பை எடுத்தாள்.

“புரூக்பீல்ட்ஸ்க்கு போற போல…” அதே எள்ளல்!

“ஆமா… அதுக்கென்ன இப்ப?” சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் மது! ஆனாலும் மனதுக்குள் ஒரு குழப்பம். இப்போதுதான் பார்த்திபனிடம் பேசிவிட்டு வைத்தது. அதற்குள் இவன் கூறுகிறான் என்றால்?

“தப்பு பண்ற மது டார்லிங்…” இது ரதீஷ்!

“அப்படித்தான் பண்ணுவேன்… என்னடா பண்ணுவ நீ? மிஞ்சி மிஞ்சி போனா நெட்ல இந்த பிக் எல்லாம் போடுவியா? போட்டுக்க…” அவளுக்கு கோபம் கொதித்தது! கைமீறி போனபிறகு இவனிடம் ஏன் கெஞ்ச வேண்டும்?

அடக்கமாட்டாமல் சிரித்தான் ரதீஷ்! அந்த சிரிப்பு அமானுஷ்யமாக இருந்தது.

“நெட்ல போட வேற பிக்ஸ் இருக்கு ஸ்வீட் ஹார்ட்… அதையும் பார்க்கணுமா?” என்று திமிராக கேட்டவன், “அனுப்பறேன்… பாத்துட்டு வா…” என்று துண்டிக்க, கரங்கள் நடுங்க ஃபோனையே வெறித்து பார்த்தாள் மது.

இப்போது என்ன காத்திருக்கிறதோ?

உலகத்திலுள்ள அத்தனை கெட்ட வார்த்தையும் கூறி அவர்கள் இருவரையும் சபிக்க வேண்டும் என்று தோன்றியது.

வாட்ஸ்அப்பை உயிர்ப்பித்தாள்…

மெசேஜ் வந்திருந்தது!

அதே எண்ணிலிருந்து!

இன்னும் பத்து படங்கள்!

விதவிதமான கேப்ஷனுடன்!

இருட்டு அறையில் முரட்டு குத்து, மாமியை துவம்சம் செய்த சாமி டைப் கேப்ஷன்கள்.

அவற்றை பார்க்கும் போதே அவளுக்கு கூசியது…

படங்களை டவுன்லோட் செய்து பார்த்த போது, நின்று கொண்டிருந்த தரை இரண்டாக பிளக்கும் உணர்வு!

உலகமே தட்டாமாலையாக சுற்றுவது போன்ற பிரம்மை!

அத்தனையும் நிர்வாணப் படங்கள்! அவளது நிர்வாணப்படங்கள்!

உடை மாற்றுவது, குளிப்பது என்று அத்தனையிலும் முழு நிர்வாணமாக அவள்!

எப்படி இது சாத்தியம்?

அவளது முழு சுயநினைவிலிருந்த படங்கள் அவை… ரகசிய கேமரா வைத்து எடுக்காமல் இவை சாத்தியமே இல்லையே!

பேசி மீண்டும் அழைத்தது!

“யூ பாஸ்டர்ட்…” அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் மது!

“எஸ்… ஐ அம் பாஸ்டர்ட்… அப்கோர்ஸ்‌…” சஞ்சய் அலுங்காமல் குலுங்காமல் கூற,

“நீ விளங்கவே மாட்ட… சத்தியமா சொல்றேன்… நீ விளங்கவே மாட்ட…” கோபத்தில் எப்படி அவனை சபிப்பது என்றும் கூட அவளுக்கு விளங்கவில்லை.

“வாவ்… பத்தினி தெய்வமே… நீ விடற சாபத்துல பச்ச மரம் பத்திட்டு எரியப் போகுது…” என்று அவன் சிரிக்க, அவளால் தாள முடியவில்லை.

“நீ ஒரு ராட்சசன்…” வெடித்த கேவலை அடக்கிக் கொண்டு அவள் கத்த,

“எஸ்… எஸ்… எஸ்…” பதிலுக்கு அவன் கத்தினான். மதுவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“இந்த போட்டோஸ் எல்லாத்தையும் நான் நெட்ல போட போறேன்… என்ன சொல்ற நீ? போடவா வேணாமா?” சஞ்சயிடமிருந்து பேசியை வாங்கிய ரதீஷ், நிதானமாக கேட்க,

“வேண்டாம் ரதீஷ்… ப்ளீஸ்… என்னை விட்டுடு…” கண்ணீரோடு அவள் கெஞ்ச,

“நோ சான்ஸ்… அட்லீஸ்ட் உன் புருஷனுக்காவது அனுப்பியே ஆகணுமே… நீ பாத்தத நாங்க எப்பவோ பாத்துட்டோம்ன்னு சொல்லனுமே ஸ்வீட்ஹார்ட்…” சற்றும் இரக்கமில்லாமல் அவன் கூற, அவள் வாயை மூடிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வெள்ளம்!

வெகுநேரமாக ரெஸ்ட் ரூம் கதவை திறக்காததால் வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்ட ஆரம்பித்தனர்.

“ஐ பெக் யூ ரதீஷ்… என்னோட வாழ்க்கைய வீணாக்கிடாத… ப்ளீஸ்…”

“அந்த எண்ணம் முன்னாடி இல்லையே… தில்லா சொன்னல்ல… நெட்ல போட்டா போட்டுக்கன்னு. இப்ப ஏன் கெஞ்சற?”

“தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ்… என்னை விட்டுடு…” தன்னை மறந்து அவனிடம் கெஞ்சினாள் மது.

“சரி… இதே நினைப்பு எப்பவும் இருக்கணும்.” என்றவன், “அடுத்த இன்ஸ்ற்றக்ஷன் வர்ற வரைக்கும் நீயே எதுவும் செய்யக் கூடாது. ஐ வார்ன் யூ… எதுவுமே!” என்று கத்தியால் குத்தி கிழிப்பது போல கறாராக கூற, ரெஸ்ட்ரூம் கதவு தட்டப்பட்டுக் கொண்டே இருப்பதை பார்த்தவள்,

“ம்‌ம்… ஓகே…” என்று அவசரமாக கூறிவிட்டு பேசியை வைத்தாள்.

அந்த நிலையிலும் அந்த புகைபடங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி தோன்றியது. மனதுக்குள் சொல்ல முடியாத வலி. மௌனமாக நின்று கொண்டிருந்தவள், ஷிவானிக்கு அழைத்தாள்.

“ஹாய் மது…” ஆர்ப்பாட்டமாக அழைத்தாள் அவள். இப்போது ஷிவானி ஒரு பிரபலமான நடிகை! எவ்வளவோ விட்டுக் கொடுத்தவள் தானே… இனியென்ன புதிதாய்? கசந்தது மதுவுக்கு.

“என்னோட ரூம்ல ஸ்பை கேமரா வெச்சியா?” நேரடியாக ஷிவானியை கேட்க, அவள் மௌனமானாள்.

“சொல்லு ஷிவா…”

“இல்ல…” ஒற்றை வார்த்தையில் பதில்.

“பொய் மட்டும் சொல்லாத…”

சற்று நேரம் மௌனித்தவள், “ஆமா…” என்று ஒப்புக்கொள்ள, மதுவின் தேகம் நடுங்கியது.

“ச்சே… உன்னை ஒரு பிரெண்டா நினைச்சதுக்கு…” என்றவளால் முடிக்க முடியவில்லை.

“ப்ளீஸ் மது… அப்படி சொல்லாதே…” ஷிவானிக்கு ஏதோ போல இருந்திருக்க  வேண்டும்.

“இனிமே என்கிட்ட பேசாத ஷிவா… இன்னைக்கோட நம்ம ஃப்ரெண்ட்ஷிப் இல்ல…”

“மது…” அவசரமாக அவள் அழைக்க, இவள் தூண்டித்தாள்.

பழகிய நட்பே இப்படி சோரம் போனதை எப்படி ஏற்க?

முடியவில்லை!

இவளால் தான் அவர்களுக்கு படங்கள் கிடைத்திருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை.

முகத்துக்கு தண்ணீரை வாரியிரைத்து கழுவியவள், சற்றே முகத்தை தெளிவுப்படுத்திக் கொண்டு, வெளியேறினாள்.

எவ்வளவுதான் முகத்தைக் கழுவினாலும் கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது. கிருஷ்ணம்மாள் வந்த பிறகு அவளுக்கு பெரிதாக நட்பு வட்டமில்லை. அதிலும் நடுவில் வந்து சேர்ந்ததால், இன்னுமே அவளை வேற்றாளாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர், அவளது வகுப்புத் தோழிகள்!

அதை தாண்டி யாருடனும் இன்னும் பெரிய பழக்கமில்லை என்பதால் அவள் யாருடனும் பேசாமல் அவளது இருக்கையில் அமர்ந்தாள்.

அதன் பின் விரிவுரையாளர் வந்து பாடமெடுத்ததோ, கல்லூரி முடிந்ததோ கூட அவளது கவனத்தில் பதியவில்லை. செல்பேசியை சைலன்ட்டில் போட்டிருந்தாள், முதலிலேயே!

அதனால் பார்த்திபன் அழைத்ததும் கேட்கவில்லை.

அவனும் விடாமல் அடித்துக் கொண்டிருந்தாலும், அவளது உணர்வு மரத்துப் போயிருந்தது.

கல்லூரியிலிருந்து கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டு, அங்கிருந்து கிளம்பி புரூக்பீல்ட்ஸ் போவதாக திட்டம். இதனாலேயே கல்லூரிக்கு சற்று முன்னதாகவே வந்தும் விட்டான்.

ஆனால் மது வரும் வழியை காணவில்லை. வாட்ச்மேனிடம் கேட்டு, அவளது வகுப்பறைக்கு போய் பார்த்தால் டெஸ்க்கிலேயே கவிழ்ந்து படுத்து உறங்கியிருந்தாள். மாணவிகள் எவருமே இல்லாத வெற்று வகுப்பறையில் அவள் மட்டும் தனியாக!

மனம் தவித்துப் போனது!

அவசரமாக அவளருகே போனவன்,

“மது… மதுக்குட்டி…” என்று மென்மையாக எழுப்ப முயல, தூக்கதிலிருந்து சட்டென எழுந்ததில் திடுக்கிட்டு விழித்தாள் மது.

“ஹேய்… ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…” என்று முதுகை தட்டிக் கொடுத்தவன், “ஏன்டா… என்னாச்சு?” என்று கேட்க, பார்த்திபனை பார்க்கும் போதே கண்கள் கலங்கி கதறி அழுதுவிட தோன்றியது.

அவளது முகத்தை பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லையென தோன்றியது.

“மாமூ…” என்றவள், உதடுகள் நடுங்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“என்னடா குட்டி…” என்றவன், அவளது முகத்தை கையிலேந்திக் கொள்ள, அவனது உள்ளங்கை வெப்பத்தை கண்களை மூடி அனுபவித்தாள், தன்னுடைய கைகளால் அவனது கையை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டு!

“என்ன மது? ஏதாவது கெட்ட கனவா?”

“ம்ம்ம்… ஆமா மாமூ…” என்று கூற, அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவனது புன்னகைத்த முகத்தை ஆசையாக பார்க்க, புருவத்தை ஏற்றி இறக்கியவன், “ஏன்டி… கிளாஸ்ல தூங்கினதே தப்பு… இதுல ட்ரீம் வேற…” என்று அவளை கலாய்த்தவன், அவளை எழுப்பி விட, அவனது புன்னகையை அழிக்க மனமில்லாமல், அவளும் புன்னகைத்தாள்.

ஆனால் அந்த புன்னகையில் உயிர்ப்பில்லை என்பதை அவன் அறிய மாட்டானா என்ன?

“சரி… இதுக்கும் மேல சினிமால்லா போக முடியாது. சும்மா புரூக்பீல்ட்ஸ ஒரு சுத்து சுத்திட்டு வீட்டுக்கு போலாமா?” என்று அவன் கேட்க, மது திடுக்கிட்டு அவசரமாக மறுத்தாள்.

“வேணா மாமூ… வீட்டுக்கு போலாம்…” என்க,

“இல்லடி… சும்மா கொஞ்சம் ஷாப்பிங் மட்டும் பண்ணிட்டு போகலாம்…” என்று அவன் விடாமல் கூற,

“இல்ல மாமூ… எனக்கு டயர்டா இருக்கு… வீட்டுக்கு போலாம்…” என்றவள், அவனது பதிலுக்கு காத்திராமல் அவசரமாக பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவளது செயல் பார்த்திபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெளியில் கிளம்ப வேண்டும் என்று அடம் பிடிப்பதே அவளாகத்தான் இருக்கும் எப்போதும். ஊர் சுற்றுவதில் அத்தனை பிரியம். ஆனால் இப்போது என்னவாகிவிட்டது?

புரியவில்லை!

எதுவும் பேசாமல் அவளைத் தொடர்ந்தான்.

வீட்டுக்கு போனதும் மாலை டிபனை சாப்பிட்டு விட்டு படுத்தவள் தான், உறங்கிப் போனாள்.

இல்லை… உறங்குவதாக நடித்தாள்!

அவளைப் பற்றி அவளது கணவனுக்கு தெரியாதா?

உறங்கினால் எப்படி இருப்பாள் என்று!

ஆனாலும் அவளது நடிப்பை எந்தவிதமான விமர்சனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

முந்தைய நாளுக்கும் இன்றைய நாளுக்குமான வித்தியாசங்கள் அவனது கண்களில் படாமலில்லை. ஆனால் காரணம் என்ன? அவளது மனதிலிருக்கும் குழப்பம் தான் என்ன?

புரியவில்லை!

 

error: Content is protected !!