Oviyam 19

அந்தப் புத்தகத்திற்குள் தலையைப் புகுத்திக் கொண்டிருந்தான் அருண். நீண்ட நாட்களாக அவன் தேடிக்கொண்டிருந்த அனாடமி புக் ஒன்று இன்றுதான் கிடைத்திருந்தது. ரிசர்வ் பண்ணி வைத்திருந்தான்.

இன்றைக்குக் காலையில் லைப்ரரியனே கால் பண்ணி இருந்தார். நீண்ட நாட்களாக அந்தப் புத்தகத்திற்காக இவன் அலைவது அவருக்குத் தெரியும். அம்மாவை மாதவியின் வீட்டில் விட்டுவிட்டு நேராக லைப்ரரி வந்துவிட்டான்.
பக்கத்தில் ஏதோ அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான் அருண். பார்த்த அவன் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன. ஆச்சரிய மிகுதியில் இமைக்க மறந்து தன் எதிரில் நின்றிருந்த அர்ச்சனாவைப் பார்த்தான் அருண். ஏனென்றால் பெண் புடவை கட்டி வந்திருந்தது.

பழுப்பு நிற வண்ணத்தில் ஆரஞ்ச் பார்டர் வைத்த காட்டன் புடவை. அவள் கொத்தமல்லிக் கூந்தலை மிகவும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் பின்னலிட்டுக் கொஞ்சம் பூவும் வைத்திருந்தாள்
அருணிற்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

அடக்கிக் கொண்டான். இப்போது சிரித்து வைத்தால் அவள் எந்த எல்லைக்கும் போவாள் என்று அவனுக்குத் தெரியும். வேறு இடமென்றால் பரவாயில்லை. இது லைப்ரரி.

“இங்க என்னப் பண்ணுற?” சற்று அழுத்தமாகவே கேட்டான் அருண்.

“உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கேன் அத்தான்.”

“ஷ்… இப்போ எதுக்கு இப்படிச் சத்தம் போடுறே? இது லைப்ரரி.”

“சரி… சத்தம் போடலை. அப்போ வெளியே வாங்க.”

“முக்கியமான ஒரு புக் இன்னைக்குத்தான் கிடைச்சிருக்கு. ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதே.”

“ஒரு பத்து நிமிஷம் எங்கூட வந்தா ஒன்னும் ஆகிடாது, வாங்க.” அக்கம் பக்கத்தில் இருந்த ஒன்றிரண்டு தலைகள் இவர்களைத் திரும்பிப் பார்க்கவும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான் அருண்.

பக்கத்தில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு அவனை அழைத்துப் போனவள் இரண்டு ஃபலூடாவோடு வந்தாள். அந்த இளங்காலை வெயிலுக்கு ஐஸ்கிரீம் மிதக்கும் குளிர்பானம் இதமாகத் தொண்டைக்குள் இறங்கியது. அருண் அந்த நொடிகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

“ஏன் வீட்டுக்கு வரலை?”

“ம்? நானா? வந்தேனே… காலையில நான்தான் அம்மாவை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“அது தெரியும்… ஏன் வீட்டுக்குள்ள வரலை?” அவள் குரலில் இருந்த அதிகாரம் அவனைச் சீண்டிப் பார்த்தது. இருந்தாலும் அருண் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்தான். அவனுக்கே பழக்கமில்லாத விஷயம் அது.

“நான்தான் சொன்னேன்ல, முக்கியமாத் தேடிக்கிட்டு இருந்த புக் ஒன்னு கிடைச்சுது. அதான் அவசரமாக் கிளம்பிட்டேன்.”

“நீங்க வருவீங்கன்னு நான் ரொம்பவே எதிர்பார்த்தேன். அது பரவாயில்லை விடுங்க, என் சாரி எப்படி இருக்கு அத்தான்?” கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவனுக்கு இப்போதும் சிரிப்புத்தான் வந்தது. அவள் சூடியிருந்த பூக்கூட,

‘என்னை விட்டுவிடேன்…’ என்று அவளிடம் கெஞ்சுவது போல்தான் இருந்தது அருணிற்கு.

“எங்க மாதவி அளவுக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை… சுமாரா இருக்கே.”

“அத்தான்…” சிணுங்கினாள் பெண். முன்பென்றால் இதற்கு அர்ச்சனாவின் பதில் வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்போது மாதவி அவள் அண்ணி. அதனால் அமைதியாக அதை எதிர்த்தாள்.

“ஃபலூடாக்கு ரொம்பத் தான்க்ஸ். அப்போ நான் கிளம்புறேன்.” சொல்லிவிட்டு அவள் எழுந்து கொள்ள அவன் கைப்பிடித்து அவனை உட்கார வைத்தாள் அர்ச்சனா.

“என்ன சீனியர்? விளையாடுறீங்களா?”

“நீதான் நேரங்காலம் தெரியாம விளையாடுறே. மாதவியோட நாத்தனார் எங்கிறதால நானும் அமைதியா இருக்கேன். எம் பொறுமையை நீ ரொம்பவே சோதிக்கிறே.”

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.”

“ஓ… புடவையா? ரொம்ப அழகா இருக்கும்மா.”

“நான் அதைச் சொல்லலை.”

“பின்ன என்ன?”

“நான் உங்கக்கிட்ட பிரபோஸ் பண்ணினேன். அதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.”

“ஏய்! விளையாடுறியா நீ?”

“முதல்ல யெஸ் சொல்லுங்க, அதுக்கப்புறம் விளையாடலாம்.” அவள் கண்ணடித்தாள். அருண் தலையில் அடித்துக் கொண்டான்.

“சும்மா நடிக்காதீங்க அத்தான். உங்களுக்கு என்னைப் பிடிக்கும்.”

“ஆமா… நீ பார்த்தே…”

“ஆமா. பார்த்தேன் தான். அந்த முல்லையையும் காஞ்சனாவையும் தவிர நீங்கப் பேசின ஒரே பொண்ணுன்னா அது நான்தானே?”

“நான் கைநீட்டி அடிச்ச ஒரே பொண்ணும் நீதான். அதை விட்டுட்டியே!”

“ஆ… அதேதான். இதே தப்பை வேற யாராவது பண்ணி இருந்திருந்தா நீங்க சட்டுன்னு கை நீட்டியிருப்பீங்களா? சத்தியமா இல்லை. உங்க சுண்டுவிரல் நகம் கூட எந்தப் பொண்ணு மேலயும் படாம உங்கக் கற்பை எவ்வளவு தூரம் எனக்காகப் பாதுகாத்து வெச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும் அத்தான்.”

“கல்லைக் கட்டிக்கிட்டுக் கிணத்துல குதிக்க நான் ரெடியில்லை பொண்ணே. ஆளை விடு.”

“சும்மா வெட்டிப் பேச்சுப் பேசாதீங்க அத்தான். அந்தப் பென்னாம் பெரிய காலேஜ்ல நீங்க என்னை ராகிங் பண்ணினீங்கன்னு சொன்னப்போ அத்தனை பேரும் வாயைப் பொளந்தாங்க தெரியுமா? இன்னும் கொஞ்சப் பேரு என்னைப் பொறாமையா வேற பார்த்தாங்க.” இதை அவள் சொல்லும் போது அருணின் முகம் சிவந்து போனது.

“அதுல இன்னொரு கொடுமை தெரியுமா உங்களுக்கு? நீங்க பட்டுன்னு என்னை அறைஞ்சிட்டீங்கன்னு நான் உக்கார்ந்து அழறேன்… ஒரு அரை லூசு சீனியர் எம் பக்கத்துல வந்து அருண் இங்கதான் உன்னைத் தொட்டானான்னு என் கன்னத்தைத் தடவிச்சு.” சொல்லிவிட்டு அர்ச்சனா இடி இடியென்று சிரித்தாள்.

“அப்படிப்பட்ட சீனியர் இன்னைக்கு எங்கூட ஐஸ்கிரீம் பார்லர்ல உக்கார்ந்து ஃபலூடா சாப்பிடுறார்னா என்ன அர்த்தம்?”

“உனக்குப் பைத்தியம் முத்திடுச்சுன்னு அர்த்தம்.”

“சமாளிக்காதீங்க சீனியர். ஒருவேளை… எங்கண்ணனைப் பார்த்துப் பயப்பிடுறீங்களோ?”

“அது எதுக்கு?”

“ஒருவேளை பொண்ணு தரமாட்டாங்கன்னு…” அவன் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டினாள் அர்ச்சனா.

“ஏன்? உங்கண்ணனுக்கு மட்டும் தான் பொண்ணைத் தூக்கத் தெரியுமா? அவரு ஹாஸ்பிடல்ல இருந்துதான் தூக்கினாரு. நான் உங்க வீட்டுக்கே வந்து தூக்குவேன்டி!”

“ஐயோ அத்தான்! சூப்பர். நீங்க எப்போன்னு மட்டும் சொல்லுங்க. தூக்குற சிரமமெல்லாம் உங்களுக்கு வேணாம். நானே அழகா ரெடியாகி பைக்ல வந்து உட்கார்றேன்.”

“ஏம்மா… நான் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா?”

“திரும்பத் திரும்ப நடிக்காதீங்கன்னுச் சொல்லிட்டேன். அப்போ எதுக்கு இவ்வளவு பிகு பண்ணுறீங்க? அப்பாவை நினைச்சா? இல்லை உங்க அக்கா வாழ்க்கையை நினைச்சா?” அவள் யோசனையில் ஆழ்ந்து போக அவன் எழுந்து கொண்டான்.

“நீ சாவகாசமா இருந்து யோசி. நான் இந்த புக்கை முடிக்கிற வழியைப் பார்க்குறேன். அத்தானோட தங்கையாச்சேன்னு பார்த்தா நீ ரொம்ப ஓவராத்தான் பண்ணுறே.” விட்டால் போதுமென்று நடையைக் கட்டிவிட்டான் அருண்.

“போங்க அத்தான்… போங்க. இன்னைக்கு அத்தையைக் கூப்பிட வீட்டுக்கு வருவீங்க இல்லை? அப்போக் காட்டுறேன் உங்களுக்கு அர்ச்சனா யாருன்னு.” வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே புன்னகைத்தாள் பெண். அந்தச் சிரிப்பு அந்த வெண்பளிங்கு முகத்திற்கு அத்தனை எடுப்பாக இருந்தது.

0-0-0-0-0-0

காலையிலேயே அம்மா வந்துவிட்டதால் மிகவும் கலகலப்பாக இருந்தாள் மாதவி. இதில் அர்ச்சனா வேறு இன்றைக்குக் தான் புடவை கட்டிக்கொண்டு தான் காலேஜ் போவேனென்று மாதவியை ஒரு வழி பண்ணிவிட்டாள்.

பழக்கமில்லாததால் இடுப்பிலும் தோளிலும் புடவை நிற்பேனா என்று மல்லுக் கட்டியது. இன்றைக்கு அவள் நண்பிகள் அத்தனை பேரும் புடவைக் கட்டிக்கொண்டு தான் காலேஜ் வருகிறார்களாம்.

கற்பகத்திற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. திகைத்துப்போய் நின்றுவிட்டார்.

‘இதென்னடி அர்ச்சனா வேஷம்!?’ அம்மாவின் கேலியில் மகள் முறுக்கிக் கொள்ள மாதவிதான் இளையவளைச் சமாதானம் பண்ணினாள்.

‘ஏன் அத்தை? அர்ச்சனாக்குப் புடவை எவ்வளவு அழகா இருக்கு. அடிக்கடி இப்படிக் கட்டினா அவ பழகிடுவா.’

‘அண்ணீ… ரொம்பத் தான்க்ஸ் அண்ணி. எனக்குப் புடவை அழகா இருக்கா?’ மாதவியைக் கட்டிக்கொண்டு அவள் கேட்டபோது பெரியவளுக்குப் பாவமாகிப் போய்விட்டது.

உண்மையிலேயே நவநாகரீக உடைகளை மட்டுமே அணிந்து பழகியிருந்த அர்ச்சனாவிற்கு இது போன்ற கலாசார உடைகள் அவ்வளவு பொருந்தவில்லை.

ஆனால்முகத்தில் அடித்தாற் போல அதைச் சொல்லி அவளைப் புண்படுத்த மாதவிக்கு மனம் வரலில்லை.

‘சூப்பரா இருக்கு அர்ச்சனா. நான் உனக்குப் பூவும் கொஞ்சம் வெச்சு விடுறேன்.’

‘வாவ்! சூப்பர் ஐடியா அண்ணி!’ பெண் குதூகலித்தது. அக்காவிற்குப் பிடித்திருந்தால் தம்பிக்கும் பிடிக்கும் என்று இலகுவாக அவள் மனம் கணக்குப் போட்டிருந்தது. அது இவளுக்குத் தெரியவில்லை.

கட்டிலில் வந்து சாய்ந்தாள் மாதவி. அம்மாவும் அத்தையும் ஏதோ கீழே பேசிக்கொண்டு இருந்தார்கள். ஃபோன் சிணுங்கியது. செழியனுக்கு இப்போது அங்கே நள்ளிரவு. அதனால் அவனாக இருக்க வாய்ப்பில்லை.

“ஹலோ…”

“மாதூ…”

“டாக்டர்! நீங்க இன்னும் தூங்கலையா?”

“தூக்கம் வரலையே!”

“ஐயோ! காலையில சீக்கிரமா வேற எழுந்துக்கணும். இன்னும் தூங்கலைன்னா எப்படிங்க?”

“நான் என்னப் பண்ணுறது மாதவி? தூக்கம் வரலை.”

“ஏதாவது புக்ஸ் படிங்க டாக்டர்.”

“ஏய் மாதவி! நீ என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா?”

“ஐயோ! புரியுது அத்தான். ஆனா… என்னால இப்போ என்னப் பண்ண முடியும் சொல்லுங்க?”

“கிளம்பி வா மாதூ… இப்போவே… இப்போவேக் கிளம்பி வா.” அவன் குரலில் மாதவிக்கும் தொண்டை அடைத்தது.

“செழியன்…”

“சொல்லுடா.”

“அம்மா வந்திருக்காங்க.” பேச்சை மாற்றினாள் மாதவி.

“ஓ… என்னத் திடீர்னு? லேசுல வரமாட்டாங்களே?”

“நான் கொஞ்சம் டல்லா இருக்கேனாம்னு அத்தை தான் வரச் சொன்னாங்க.”

“ஓ… மருமகள் டல்லா இருக்கிறது புரியுது. மகன் டல்லா இருக்கிறது புரியலையாமா?” மீண்டும் அதே புள்ளியில் வந்து நின்றான் இளஞ்செழியன்.

“இன்னும் கொஞ்ச நாள்தானே டாக்டர்.”

“நீ ரொம்ப சிம்பிளாச் சொல்றே மாதவி. ஏய் சொல்ல மறந்துட்டேன். நான் லண்டன்ல இருக்கும் போது எங்கூட யூனிவர்ஸிட்டியில இருந்த பொண்ணு ஒன்னு இங்க இதே கான்ஃபரன்ஸுக்கு வந்திருக்கா. இன்னைக்குத் தான் மீட் பண்ணினேன்.”

“அப்படியா… அப்படி ரெண்டு மூனு பேரோடப் பழகிட்டீங்கன்னா பொழுது போயிடும் டாக்டர்.”

“ஏய்! பொண்ணு ஒன்னைப் பார்த்தேன்னு சொல்றேன். பழகுங்கன்னு ஈசியாச் சொல்றே?”

“இதிலென்ன இருக்கு டாக்டர்? பொழுது போகலைன்னா பேசாம அந்தப் பொண்ணை உங்க ரூமுக்கு வரச்சொல்லுங்க.”

“அடிப்பாவி! கோபப்படுவேன்னு பார்த்தா… கோர்த்து விடுறே?”

“ஆமா… நான் கோர்த்து விட்டுட்டாலும்! அத்தனை வருஷம் லண்டன்ல இருந்தப்போ வராததெல்லாம் இப்போத்தான் வரப்போகுதாக்கும்?”

“லண்டன்ல வரல்லைன்னு உனக்கு யாரு சொன்னா?”

“டாக்டர் மனசு எனக்குத் தெரியாதா? அது இந்த மாதவியைத் தவிர வேற யாரையும் பார்க்காது.”

“அவ்வளவு நம்பிக்கையா?”

“அர்த்த ஜாமத்துல எழுந்து உட்கார்ந்து பொலம்பும் போதே அது தெரியலையா?”

“வர்றேன்டீ… எல்லாத்தையும் முடிச்சு ஏறக்கட்டிட்டு உன்னோட கணக்குப் பார்க்குறதுக்குன்னே கிளம்பி வர்றேன். உடம்பை நல்லாத் தேத்திக்கோ.” இப்போது மாதவி லேசாகச் சிரித்தாள்.

“சிரிப்பு…” அதன் பிறகும் செழியன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் ஃபோனை வைத்தான். சிவந்து போன அவள் முகம் அவன் அழைப்பைத் துண்டித்த போது கலங்கிப் போனது. அவனின் வருத்தம் அவளை வெகுவாகப் பாதித்தது.

‘இப்படியொரு அன்பைப் பெறத் தான் ஏதோ பெரிதாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’

0-0-0-0-0-0

மாலை ஏழு மணி. ஐந்து மணி வரை லைப்ரரியில் உட்கார்ந்திருந்த அருண் அதன்பிறகு அந்தக் காஃபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டான்.
மாதவியின் வீட்டிலிருந்து மதிய உணவிற்கு வரச் சொல்லி அழைப்பு வந்திருந்தது. ஆனாலும் அவன் போகவில்லை. புத்தகத்தில் மூழ்கிப் போனான்.

இப்போது மிகவும் களைப்பாக இருந்தது. ஸ்நாக்ஸ் மட்டும் உண்டுவிட்டு லைப்ரரியிலேயே இருந்து விட்டான். லேசாகப் பசித்தது. பைக்கை எடுத்துக்கொண்டு நேராக மாதவி வீட்டின் முன்பாக நிறுத்தினான் அருண்.

“வா வா அருண். என்ன இவ்வளவு லேட்டா வர்றே? மதியம் ஏதாவது சாப்பிட்டியா?”

“இல்லைக்கா. செமப் பசி.”

“எத்தனை தடவை உனக்குச் சொல்றது அருண். இப்படிப் பண்ணாதடா.”

“சரி சரி. அட்வைஸ் பண்ணாமச் சோத்தைப் போடு. கண்ணெல்லாம் இருட்டுது.” சொல்லிக்கொண்டே டைனிங் டேபிளில் உட்கார்ந்தான் அருண்.

“ஓ… அருண் வந்தாச்சா மாதவி?”

“ஆமா அத்தை. அம்மா எங்க?”

“பின்னாடி தோட்டத்துல இருக்காங்க. நானும் உங்கம்மாவும் அவரைக்காய் பறிக்கிறோம்.”

“சரிங்கத்தை…” சிரித்தாள் மாதவி.

“பரவாயில்லையே, சம்பந்திங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போகுதே.” சொல்லியபடி வீட்டைக் கண்களால் ஒரு அலசு அலசினான் அருண். அர்ச்சனாவை எங்கேயும் காணவில்லை. அப்பாடா…என்றிருந்தது அருணிற்கு. சாப்பிட்டு முடித்தவன்,

“மாதவி… எனக்குக் கொஞ்சம் முகம் கழுவணும். காலையில வெளியே கிளம்பினது. கசகசன்னு இருக்கு. இங்க எங்க பாத்ரூம் இருக்கு?” என்றான்.

“கீழ வேணாம். வா மேல எங்க ரூமுக்குப் போகலாம்.” தம்பியை அழைத்துக்கொண்டு மாதவி படியேறும் போது,

“மாதவி!” கற்பகத்தின் குரல் கேட்டது.

“இதோ வர்றேன் அத்தை.” குரல் கொடுத்தவள்,

“மேலே ரைட்ல இருக்கிறது எங்க ரூம். டவல் பாத்ரூம்லயே இருக்கு. அதை யூஸ் பண்ணு. என்னோடதுதான்.” சொல்லிவிட்டுக் கீழே மீண்டும் போய் விட்டாள்.

அருண் அந்த வீட்டிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய தடவைகளே வந்திருக்கிறான். அதுவும் மேலேயெல்லாம் வந்தது கிடையாது.

வாசலோடு விஷயத்தை முடித்துக்கொண்டு போய்விடுவான். செழியனை ஏற்றுக்கொள்ள முடிந்த அளவு கருணாகரனை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வீடு மேலேயும் நல்ல விசாலமாகத்தான் இருந்தது. கருணாகரன் காசை நாலா பக்கத்திலும் கொட்டித்தான் வீட்டைக் கட்டி இருந்தார். மாதவி சொன்ன ரூமின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் அருண்.

‘ஓ… இதுதான் அக்காவின் ரூமா?’ எண்ணமிட்ட படி அட்டாச்ட் பாத்ரூமை நோக்கிப் போனான். இவன் கதவைத் திறக்கும் முன்பாகவே கதவு உள்ளிருந்து வெளியே திறந்து கொண்டது.

அருண் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். அர்ச்சனா முகத்தைத் துடைத்தபடி பாத்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். முழங்காலைத் தொட்ட ஒரு ஷாட்ஸ், இடை தெரிந்த டீஷர்ட்.

“சீனியர்!” அவள் குரல் கூவியது.

“ஏய்! நீ இங்க என்னப் பண்ணுற? இது எங்க அக்கா ரூம்!” தவறு செய்துவிட்ட குழந்தையைப் போல தனது செயலுக்கு நியாயம் சொல்லிக் கொண்டிருந்தான். அர்ச்சனாவின் முகமெல்லாம் சிரித்தது.

“வேணுமுன்னு என்னோட ரூமுக்கு வந்துட்டு இப்போச் சப்புக் கட்டுக் கட்டுறீங்களா அத்தான்.”

“கொன்னே போட்டுருவேன். இது அக்கா ரூம்தானே?”

“அது ரைட்ல இருக்கு. இது என்னோட ரூம்.” கண்ணடித்து அவள் சிரிக்க, முறைத்தவன் வெளியே போகப் போனான்.

“அத்தான்!” அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் அர்ச்சனா.

“முதல் முதலா என் ரூமுக்கு வந்திருக்கீங்க. எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க. ஏதாவது திருத்தம் இருந்தா அதையும் சொல்லிடுங்க. ஏன்னா நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா இதுதான் உங்க ரூமும்.”

“நீ எங்கிட்ட அடிதான் வாங்கப் போறே அர்ச்சனா. நான் இங்க வந்ததே தப்பு. இதுல உங்கூட நின்னு இப்படி வாயாடிக்கிட்டு நிக்குறது அதைவிடப் பெரிய தப்பு.”

“ஏன்? நீங்க என்னோட அத்தான் தானே? இதுல என்னத் தப்பு இருக்கு?” அவன் கையைப் பிடித்திருந்தவள் மெதுவாக அவனை நெருங்கி வந்தாள்.

நினைத்திருந்தால் அவன் தன்னை உதறிவிட்டு வெளியே போயிருக்கலாம். ஆனால் அதை அவன் செய்யவில்லை என்பதை விட அவன் கண்களில் தெரிந்த மயக்கம் அவளுக்கு இன்னும் தைரியம் கொடுத்தது.

அவனுக்கும் தன்னைப் பிடிக்கிறது. ஆனால் எதுவோ ஒன்று அவனைத் தன்னை நோக்கி வரவிடாமல் தடுக்கிறது.

“அத்தான்!” அந்தக் குரல் அவனை என்னவோ பண்ணியது.

“கைய விடு அர்ச்சனா.” அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. ஆனால் அவளுக்குக் கேட்டது. கேட்கும் தூரத்தில் தானே அவள் நின்றிருந்தாள்.

‘எதற்கு அவளிடம் கையை விடச் சொல்கிறாய்? நீ உதறித் தள்ளினால் ஒரு காத தூரத்துக்கு அப்பால் போய் அவளே விழுவாளே!’ அவன் மனசாட்சி அவனோடு மல்யுத்தம் செய்தது. அருண் திணறிப் போனான். தான் என்ன நினைக்கிறோம்? இது சரியா? தவறா? என்றெல்லாம் நினைப்பதற்கு முன்பாக அவன் இதழோடு இதழ் உரசியிருந்தாள் பெண்.

காலணிகள் எதுவும் அணிந்திராத அவன் பாதங்களில் ஏறி நின்றிருந்தவள் லேசாகத் தடுமாறினாள். அருணின் கைகள் அவளை வளைத்துப் பிடித்துக் கொண்டன… ஆதரவாக.

“அருண்!” தன்னை விடுவித்துக் கொண்டவள் குரலில் அத்தனைக் கிறக்கம். அருண் மீண்டுமொருமுறை அந்த ராஜ சுகத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.

“அத்தான்!”

“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு என்னடி அத்தான்!”

“எனக்குப் பிடிச்சிருக்கே அத்தான்.”

“உங்கப்பாக்கு இது பிடிக்குமா?”

“அதைப்பத்தி எனக்கென்ன கவலை.”

“உனக்கு வேற எதைப்பத்தித் தான் கவலை?”

“டெய்லி உங்களைப் பார்க்கணும். டெய்லி…” அவன் முறைக்கவும் அவள் பேச்சுப் பாதியிலேயே நின்றது.

“என்னோட கவலை இதெல்லாம் தான்.”

“பேசுவே பேசுவே… ஆமா இதெல்லாம் எங்கக் கத்துக்கிட்ட?” இந்தக் கேள்விக்காவது அவள் லேசாக வெட்கப்படுவாள் என்று எதிர்பார்த்தான் அருண். ம்ஹூம்…

“நாங்க டைட்டானிக் ஒரிஜினல் சிடியையே மூனு தரம் பார்த்த ஆளுங்க.”

“ஹா… ஹா… எதுக்குடீ?”

“எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான் அத்தான்.”

“ஓ… அப்படியா? நல்லவேளைப் புதுப் பட சிடி ஒன்னும் கிடைக்கல போல. நல்லாத்தான் வளர்த்து வெச்சிருக்கிற உன்னோட பொது அறிவை. எனக்கு வேலை மிச்சம். ஆமா… இந்தப் பொண்ணுங்களுக்கு வெக்கம் வெக்கம்னு ஒன்னு வருமே. அதைப்பத்தி ஏதாவது கேள்விப்பட்டிருக்கியா?”

“ஆ… ஆ… அதெல்லாம் தெரியும்.”

“பரவாயில்லையே… தெரிஞ்சு வச்சிருக்கியே.”

“தெரியும்… ஆனா இதுவரை யூஸ் பண்ணினது இல்லை.” அவள் அசால்ட்டாகச் சொல்ல அருண் அவளை ஒரு தினுசாகப் பார்த்தான்.

“என்ன அத்தான்?’

“இல்லை… வெக்கத்தை இதுவரை யூஸ் பண்ணாம பத்திரமா வெச்சிருக்கிற முதல் பொண்ணு நீதான்.”

“கிண்டல் பண்ணுறீங்களா என்ன?”

“சேச்சே…” சொன்னபடி அவன் வெளியே போக எத்தனிக்க அவளும் அவனோடு கூட வந்தாள்.

“ஏய்! நில்லு நில்லு… நீ எங்க வர்றே?”

“பசிக்குது அத்தான். சாப்பிடப் போறேன்.”

“கொன்னே போட்டிருவேன். முதல்ல இந்த ட்ரெஸ்ஸை மாத்து. ரூமுக்குள்ள மட்டும் தான் இனி இதெல்லாம். ரூமைத் தாண்டி இது மாதிரி ஏதாவதோட வந்தே!” அவன் மிரட்டலில் கோபப்பட்டவள் மீண்டும் ஒரு முறை அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டு விட்டு கப்போர்டை நோக்கி நகர்ந்துவிட்டாள்.

“சரியான காட்டான்.”

“ஆமா… இந்தக் காட்டானைத் தானே உனக்குப் பிடிச்சிருக்கு?”சொன்னவனுக்கு அழகு காட்டிவிட்டு பாத்ரூமிற்குள் போய் விட்டாள் அர்ச்சனா. பரவாயில்லை… இதற்காவது உள்ளே போனாளே!?

‘பரலோகத்தில் இருக்கும் எம் பிதாவே என்னை ரட்சியும்!’ ஒரு சிரிப்போடு வெளியே போனான் அருண்.

error: Content is protected !!