PuthuKavithai 1
PuthuKavithai 1
அத்தியாயம் 1
“ஒன்… டூ… த்ரீ… போர்…”
பின்னணியில் வேகமான ஆங்கில இசை ஒலிக்க, அதற்கு ஏற்ப இடுப்பை வளைத்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி.
“கமான் மது… பென்ட் நைஸ்லி! இந்த பென்ட் போதாது!” அவளது நடன பயிற்றுவிப்பாளன் முகத்தில் கடுமையைக் காட்டி அவளைச் சாட்டையாய் திருகி விட, அவளது நடன அசைவை மேலும் கூர்மையாக்கினாள்.
வியர்த்துக் கொட்டிக்கொண்டு இருந்தது… இடைவிடாத பயிற்சி… ஓய்வை விரும்பாத பயிற்சி!
கிட்டத்தட்ட இந்த ஒரு அசைவுக்காக ரதீஷ் அவளை ஒரு மணி நேரமாக ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறான். அவளால் முடிந்தளவு தன்னுடைய பங்களிப்பைக் கொடுத்து விட்டாள். ஆனாலும் அவன் திருப்தி அடையவே இல்லை.
சுலபத்தில் திருப்தி அடைந்து விடுபவன் அல்ல ரதீஷ்.
வெகு சிரமம்!
உடன் நடனம் பயிலும் அனைவருமே அதை உணர்ந்து இருந்தார்கள். ரதீஷிடம் சிக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவது இல்லை.
மது அப்படியல்ல! அவளுக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளவில்லை என்றால் தலை வெடித்து விடும் என்று சொல்லும் அளவு ஒரு பைத்தியம்.
இவ்வளவுக்கும் அவளொன்றும் தொழில் முறை நடனத்தைக் கற்றுக்கொள்ள வரவில்லை. அதற்கான தேவையும் அவளுக்கு இருந்ததில்லை. அவளது நோக்கமும் அதுவல்ல!
மிகவும் வசதியான குடும்பம். தந்தை வினோதகன், ஸ்டீல் ரோலிங் மில்லுக்கு சொந்தக்காரர். தொழிலில் ஆழ்ந்து விட்டவர். மது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள், எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வப்போது கேட்டுக்கொள்ள மட்டுமே அவருக்குச் சில நிமிடங்கள் இருப்பதுண்டு.
முதலில் எல்லாம் அது போன்ற சந்தர்ப்பங்களை மது தவறவிட விரும்பியதில்லை. இப்போது அவளுக்குப் பழகி விட்டது என்று நினைத்துக்கொள்வாள். அதற்காகத் தந்தையைப் பொறுப்பற்றவர் என்று யாராவது கூறினால் முதல் எதிர்ப்பே இவளிடமிருந்து தான் எழும்.
அந்த அளவு தந்தை மேல் பாசம்! அவரது நேரமின்மையை மிகவும் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டு அதை ஒட்டியே அவளது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு இருப்பவள் நம் மது!
தாயார் பானுமதி, மிகச் சிறந்த பெண்ணியப் பேச்சாளர், சமூகச் சேவகி, பல பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர். சென்னையில் மிக முக்கியமான சமூக ஆர்வலர்.
ஒவ்வொரு வருடமும் அவரது வீட்டிலிருக்கும் ஷீல்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கும். அவரது சேவையைப் பாராட்டி விருதுகள் குவிந்த வண்ணமிருக்கும். ஆனாலும் அவற்றையெல்லாம் ஒரு அலட்சிய பார்வையோடு கடந்து விடுபவர் அவர்!
பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் வரிசையில் நிற்பவர் பானுமதி. அதற்குத் தகுந்தாற்போல அவருக்கு எதாவது வேலை இருந்தது கொண்டே இருக்கும், ஓடிக்கொண்டே இருப்பார். அவரது ஓடும் ஓட்டத்துக்குத் தகுந்தவாறு உடன் குடும்பமும் ஓடி வருகிறதா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சிந்திக்கக் கூட நேரமிருப்பதில்லை.
இப்போதும் கூடப் பெண்கள் பாதுகாப்புக் குழு என்ற குழுவை அமைத்து அதற்குத் தலைமை வகித்துக்கொண்டு, அதன் பொருட்டுப் பிரதமரையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தது அந்தக் குழு! அதோடு இந்தியா முழுக்கச் சுற்றுப்பயணம் சென்று பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பது அவரது விருப்பம்.
அவரது இந்த லட்சியத்தை ஒட்டியே தன் பெண்ணையும் சுயசார்பு மிக்கவளாகத்தான் அவர் வளர்ந்திருந்தார். தவறு, மதுவாக வளர்ந்திருந்தாள்!
அன்னையை யாராவது விமர்சனம் செய்தாலும் அதைத் தீவிரமாக எதிர்ப்பவள் மதுதான். பெண் தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்துவது தவறா என்று ஆரம்பித்துப் பெண் என்றால் தன் அன்னையைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று பேசி எதிராளியை துவம்சம் செய்து விடுவாள்.
மதுவின் ஆதர்ச நாயகனும் நாயகியும் அவளது தந்தையும் தாயுமே.
பானுமதியின் எண்ணமும் செயலும் பெண்கள் பாதுகாப்புக் குழுவை சுற்றியே இருந்தது.
அவரது மகளான மதுவுக்கோ சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்தது.
பரதம் பயின்றது போலவே மேற்கத்திய நடன வகைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவளை இந்தப் பிரபலமான நடன பள்ளியில் சேர வைத்தது.
பன்னிரண்டாவது வகுப்பை முடித்த நேரம், விடுமுறை வேறு, அன்னையும் தந்தையும் அவரவர் வேளைகளில் ஆழ்ந்து இருக்க, இல்லத்தில் நேரத்தை நெம்பித் தள்ளுவது மதுவுக்கு ஆகாத காரியம். நேரம் கிடைத்தால் அவளது தோழிகளுடன் மட்டுமே ஜாகை!
அதுவுமில்லாமல் அவள் கலந்து கொள்ள விரும்பும் அழகிப் போட்டிகளுக்கு இது போன்ற நடனங்கள் தெரிந்திருப்பது முக்கியம் அல்லவா!
யோசிக்காமல் சேர்ந்து விட்டாள். மூன்று மாதமாகப் பயிற்சியும் போய்க்கொண்டிருக்க, கல்லூரி திறக்கும் நேரமென்பதால் சற்று இலகுவாகி இருந்தது பயிற்சி. கல்லூரி திறந்து விட்டால் வார இறுதியை மட்டுமே நடன பயிற்சிக்காக ஒதுக்க முடியும் என்பதால் இருக்கின்ற நேரத்தில் விரைவாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள அவள் நினைத்திருந்தாள்.
ஆனால் ரதீஷின் முரட்டுத்தனம் அவளை லேசாகப் பயமுறுத்தியது!
இந்த நடன பள்ளியின் முக்கியமான பயிற்றுநர் அவன்.
ஹிப்ஹாப், ப்ரீ ஸ்டைல், ஜும்பா போன்ற ஸ்டைல்களில் தேர்ந்தவன்.
திறமையாளன்! ஆனால் பொறுமை சற்றுக் குறைவு! சொல்லிக்கொடுப்பதை ஒருமுறை பிடிக்கவில்லை என்றால் கசக்கி பிழிந்து விடுவான்.
“எதற்காக நாலு கவுன்ட் கொடுக்கிறேன்? ஒவ்வொரு ஸ்டெப்பும் நாலு கவுன்ட்ல முடிச்சா தான் கிரேஸ்புல்லா இருக்கும். ஈவன் ஹாப் அ செக்கன்ட் கவுன்ட் மேக்ஸ் அ சென்ஸ். நானும் முதலில் இருந்தது சொல்லிட்டு இருக்கேன் மது, யூ ஆர் நாட் கெட்டிங் இட் ஆல்!” என்று முகம் சிவக்க கோபமாகக் கூறிய ரதீஷ் மதுவின் அருகில் வந்து அவளது இரண்டு கைகளையும் இறுக்கமாகப் பிடித்தான், முதுகு பக்கமாக இருந்து.
வேகமாக ஆடி முடித்ததில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. கை கால்களில் சிறு நடுக்கம், கால்கள் துவள ஆரம்பித்து இருந்தது.
தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்!
அவனது சூடான மூச்சு அவளது பின் கழுத்தைத் தீண்டியது. இது எப்போதுமான பழக்கமென்றாலும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தள்ளி நிற்க முயற்சித்தாள், அவன் விடவில்லை. கைகளை இறுக்கமாகப் பிடித்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
முரட்டுத்தனமாக அவன் பிடித்தது வலியைக் கொடுத்தது!
மது அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் காட்டிக்கொள்ள அவளென்ன சிறு குழந்தையா என்ற கேள்வி அனாவசியமாக எழும்! அதற்கு இடம் தர அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் தொட நினைக்கும் உயரத்திற்கு இது போன்ற வலிகளெல்லாம் சிறு விஷயம்.
மிஸ் சென்னை, மிஸ் இந்தியா, மிஸ் வோர்ல்ட் என்று வரிசையாக இருக்கிறதே! அத்தனை உயரத்தையும் அடைய வேண்டாமா? சற்று சுணங்கும் போதெல்லாம் இப்படிக்கூறித்தான் தன்னை அவள் வெறியேற்றிக் கொள்வது!
ஆம்!
வெறியே தான்!
சாதிக்க வேண்டும்!
புகழ் பெற வேண்டும் என்ற வெறி!
அதற்கு அவளது அழகு ஒரு மூலதனம்!
அழகு ஒரு மூலதனம் என்று எண்ணியிருந்தாள் தான், ஆனால் குறுக்கு வழிகளில் அவளுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. அதை அவள் தேர்ந்தெடுக்கவுமில்லை. குறுக்குவழிகளில் பெரும் வெற்றி நீர்க்குமிழியைப் போல, சீக்கிரமே உடைந்து விடக் கூடும்!
ஆனால் நேர்மையாக இருப்பதால் வெற்றிகள் தாமதமாகலாமே தவிர, அவை ஒன்றே நிரந்தரம்!
நேர்மையாக இருப்பதன் பயன் என்னவென்றால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை! எதன் பொருட்டும் தயங்கவும் தேவையில்லை! மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பது போல!
நேர்மை! அது என்றுமே தனக்குத் துணையிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவள் மதுவந்தி. அவள் சற்று தன் கொள்கைகளைத் தளர்த்திக் கொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும் என்று இதே ரிதீஷே அவளுக்கு உபதேசித்து இருக்கிறான். அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்வதில்லை.
ரிதீஷை பொறுத்தவரை அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக அவ்வப்போது அவளை நடனத்தில் பயிற்சி என்று கூறி சக்கையாக்கி விடுவான். அதற்கெல்லாம் மது சுணங்கிக் கொண்டதில்லை.
சாதிக்க என்ன இடர் வந்தாலும் சமாளித்துத் தான் ஆக வேண்டும்.
ரிதீஷ் நடன பயிற்றுநர் மட்டுமல்ல, வரப்போகும் மிஸ் சென்னை அழகிப் போட்டிக்கு முக்கியமான அமைப்பாளர்.
அவனது குடும்ப நிறுவனம் அந்தப் போட்டியில் மிக முக்கியமான அங்கம். குடும்பத் தொழில்களில் ஆர்வமில்லாமல் நடனத்திலும் தளையில்லாத வாழ்க்கையிலும் தன்னைத் தொலைத்து விட்டவன்.
அவனைப் பகைத்துக் கொள்வது தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் சூனியம் என்பதை அறிந்து தான் அவனது அனைத்து அடக்குமுறைகளையும் மெளனமாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறாள். அவனை அவளிடம் எல்லை தாண்ட செய்யாமல் இருப்பதும் அவளது அந்த மௌனமே!
முக்கியமாக அவன் அளவுக்கு மீறி நெருங்க நினைக்கும் போதெல்லாம் அவனை எட்டியே நிறுத்தும் அவளது அந்த முகச்சுளிப்புடன் கூடிய அந்த மௌனம்!
அவனை மட்டுமல்ல, வேறு பார்வையோடு எவர் வந்தாலும் அதே முறைப்புடன் கூடிய மௌனம் தான் அவளது ஆயுதம்.
என்னதான் நவீன வாழ்க்கைமுறையில் ஊறித் திளைத்தாலும், அவற்றிலெல்லாம் அவளது ஆர்வம் பெரிதாகச் சென்றதில்லை. அதற்குக் காரணம் சகுந்தலா தேவி!
அவளது தாய் வழி பாட்டி… அவரது உபதேசங்கள், வாழ்க்கை முறை!
கோவையை அடுத்த காரமடையில் வெகு அமைதியான சூழலை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணி அவர்!
அவருக்கு வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. எத்தகைய சூழலில் இருந்தாலும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காப்பாற்ற முடியும் என்பதை மிக உறுதியாக மதுவின் மனதுக்குள் விதைத்து வைத்தவர் அவர்.
அவரது அந்த உபதேசத்தோடு தன்னுடைய இலட்சியத்தையும் வளர்த்துக்கொண்டாள்!
மதுவந்தியினால் அவர் சொல்லிக்கொடுத்த வாழ்க்கை நெறியிலிருந்து தவற முடியாது.
அது என்றுமே அவளால் முடியாது!
ஆனாலும் அவள் சார்ந்த வாழ்க்கை முறை அவளை உள்ளிழுக்கத்தான் பார்த்தது!
பிரபலமாக வேண்டும், அத்தனை ஸ்க்ரீன்களிலும் தன் முகமே இருக்க வேண்டும், தன் பெயரை ஒவ்வொருவரும் மந்திரமாக ஜெபிக்க வேண்டும், அத்தனை பிராண்ட்களிலும் தன் முகமே மாடலாக இருக்க வேண்டும்!
வேண்டும்… வேண்டும்… வேண்டும்!
தனக்குத் தானே கூறிக்கொண்டவள், ஒரு நீள மூச்சை இழுத்து விட்டு நிமிர்ந்து நின்றாள்.
ரதீஷ் அதே கோபத்தோடு அவளை நோக்கி,
“நோட் திஸ் மது… ஹேன்ட் மூவ்மென்ட் இந்தளவு வரவேண்டும்…” என்று கூறிவிட்டு அவளது கையை அவன் கூறுவதற்கு ஏற்ப வளைக்க, மது அவனைப் பின்பற்றினாள்.
“இவ்வளவு ப்ரீயா வளைக்க வருதே… தென் ஒய் யூ ஆர் நாட் டுயிங்?” என்று அவளைக் கடுப்படித்து விட்டு,
“லிசன் கேர்ள்ஸ்… ஹேன்ட் மூவ்மென்ட் ப்ரீயா இருந்தாதான் உங்களால் இந்த ஸ்டைல் கொண்டு வர முடியும். சோ வாட்ச் கேர்புல்லி! யுவர் கம்ப்ளீட் அட்டென்ஷன் ஷுட் பி ஆன்…” என்று கூறிக் கொண்டே போனான்.
தாகமாக இருந்தது ! உடனே தண்ணீர் அருந்தினால் நல்லதல்ல என்று இப்போது தண்ணீர் அருந்த ரதீஷ் விட மாட்டான்.
அவன் கூறுவதும் நல்லதிற்குத் தானே.
பார்த்துக்கொண்டிருந்த அவளது தோழிகளும் பின்பற்ற, ரதீஷ் மதுவை ஒரு சுழட்டு சுழற்றி தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.
மதுவுக்கு மூச்சு வாங்கியது!
நெருக்கமாக வளைத்துப் பிடித்திருந்தான் ரதீஷ்… முன்னெப்போதும் இல்லாத நெருக்கம்… அந்த இறுக்கம் உள்ளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது.
“வாவ்…” என்று கை தட்டும் சப்தம் கேட்க, மது நிமிர்ந்து பார்த்தாள்.
சஞ்சய் கை தட்டிக்கொண்டிருந்தான்.
சஞ்சய் ரதீஷின் நெருங்கிய நண்பன். நடனப்பள்ளியின் இன்னொரு அங்கம்!
நகரத்தில் வெகு முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். மதுவுக்கு, நண்பன் என்பதை விட முக்கியமானவன். இப்போதுதான் இருவருக்குமிடையே நடனத்தைத் தாண்டிய வேதியியல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சஞ்சய்யை கண்டதும் அவளது முகம் பளீரென்று ஒளிர்ந்தது!
“நீங்க இரண்டு பேரும் செம பேர் டியுட்… காம்படிஷனுக்கு பேசாமல் மதுவையே உன்னுடைய பேரா செலக்ட் பண்ணிடேன் ராஷ்…”
“ஒய் நாட்? அதற்கு மது ஒத்துழைக்க வேண்டுமே?” என்று அவளைப் பார்த்தவன், சஞ்சய் புறம் திரும்பி, “இன்னும் ஸ்ப்ளிட்ஸ் தான் நல்லா ப்ராக்டிஸ் பண்ணனும்… ஆஸ் பார் ஆஸ் நவ், ஷி இஸ் ஓகே…” என்று அவன் கூற, சஞ்சய் அவளுக்குக் கட்டை விரலைக் காட்டினான்.
சஞ்சயும் ரதீஷும் சேர்ந்து தான் இந்த டான்ஸ் ஸ்டுடியோவை நடத்திக்கொண்டிருந்தனர்.
ராஸா ஸ்டுடியோ!
இருவருமே மிக மிக வசதியான வீட்டு வாரிசுகள் ஆனாலும் அவர்களது ஆசை, காதல் எல்லாம் இந்த ஸ்டுடியோ தான். படிக்கும் போதே இருவருமாகத் துவங்கியது. இப்போது நன்கு வளர்ந்து விட்டிருந்தது.
ராஸாவில் நடனம் பயில்வது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அந்தஸ்தான ஒரு விஷயம்.
அதோடு இருவரும் தொலைக்காட்சிகளுக்கு நடன போட்டிகளுக்கு கொரியோக்ராப் அதாவது நடன அமைப்பும் செய்து தருகிறார்கள். அதனால் இந்தத் துறையில் பிரகாசிக்க விரும்புவர்களுக்கு இவர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள்.
மதுவந்திக்கு தொலைகாட்சிகளில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அவளது லட்சியமெல்லாம் அழகிப் போட்டிகள் தான்! அதைப் பற்றி எப்போது நினைத்தாலும் மனம் ஜிவ்வென்று பறக்க ஆரம்பித்து விடும். பறக்கத் துவங்கிய மனதை அடக்கி கீழே கொண்டு வந்தாள்.
இன்னமும் ரதீஷின் இறுக்கமான அணைப்பில் தான் இருந்தாள் மது! தெரிந்து செய்வானோ அல்லது அவனையும் அறியாமல் செய்வானோ, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போலச் செய்வது அவனது பழக்கம். அதை சஞ்சய் தவறாக எண்ணுவது இல்லை, இவையெல்லாம் இங்கே வெகு சாதாரணம் என்பதைப் போலத்தான் அவன் எடுத்துக் கொள்வது!
இந்தப் புரிதல் தான் அவளை சஞ்சயிடம் வீழ்த்தியதும்!
ரதீஷ் ஒரு தீவிரவாதி என்றால் சஞ்சய் மிதவாதி!
எந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் பழகாதவன் நெருக்கமாகப் பழகுவது மதுவிடம் மட்டும் தான். மதுவுக்கும் சஞ்சய் அருகில் இருப்பதென்பது சொல்ல தெரியாத வலிமை! ரதீஷின் சில செயல்கள் மனதுக்குள் கிலியை பரவச் செய்யும் என்றால் அதற்கு மருந்திடுவது சஞ்சயின் அணுகுமுறை தான்!
சஞ்சய்க்கும் மதுவுக்கும் ஈர்ப்பு இருந்தாலும் மற்றவரின் சுதந்திரத்தில் இருவருமே தலையிட்டதில்லை. சஞ்சய் வேறு யாருடனும் நடனமாடினாலும் வெளியே அழைத்துச் சென்றாலும் மது கண்டுகொண்டதில்லை. அது போலத்தான் அவனும்!
அந்தச் சுதந்திரம் அவர்களது துறையில் கண்டிப்பாக அவசியம் என்று எண்ணினாள் மது!
“இந்த ஸ்டெப்ஸ ப்ராக்டிஸ் பண்ணு மது… ஐ வில் பி பேக் இன் பைவ் மினிட்ஸ்…” அவளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டே கூறியவன், மீண்டும் அதே போலச் சுழற்றி சஞ்சய்யிடம் அனுப்பினான்.
இது அவனது ஸ்டைல். மது என்று மட்டுமில்லை, யாராக இருந்தாலும் இப்படித்தான் ரதீஷ் செய்வது. அது ஒரு பெரிய பிரச்சனையாகத் தோழிகளுக்குள் வந்ததில்லை. அவ்வப்போது மதுவுக்கும் ரதீஷுக்கும் மட்டும் முட்டிக்கொண்டு விடும். ஆனால் சஞ்சயும் அனைவருமாகச் சேர்ந்து இருவரையும் சமாதானப்படுத்தி விடுவதுண்டு.
இப்போதும் கூட அவன் சுழட்டி விட்டதில் எரிச்சலானவள், ரதீஷை சண்டைபிடிக்கத்தான் எண்ணினாள். ஆனால் அதற்குள் அவன் தப்பித்துக் கொண்ட என்ற எரிச்சல் வேறு.
“ஹேய் ஹனி… என்ன அவனை இப்படி முறைக்கிற?” டான்ஸ் ஹாலை தாண்டி சென்றுகொண்டிருந்த ரதீஷை முறைத்தவளை பார்த்துச் சிரித்தான் சஞ்சய்.
“ம்ம்ம்… அவனுக்கு நீயாவது சொல்லக் கூடாதா சஞ்சு? ஹீ இஸ் வெரி ரூட்…” கோபத்தில் அவளுக்கு மூச்சு வாங்கியது.
“உனக்குத் தெரியாதா? அவன் அப்படித்தான்… நாம மாற்ற முடியாது. பட் ஹீ ஹாஸ் ஸ்டப். கொஞ்சம் அவனை அனுசரித்து தான் போகவேண்டும் டார்லிங்…” என்றவன் அவளை இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்ள, அவள் அந்தக் கைகளை மென்மையாக விலக்கினாள்.
“ஸ்டப் இருக்குங்கறதுக்காக எவ்வளவுதான் அவனுடைய இந்த முரட்டுத்தனத்தைச் சகிக்க முடியுமென்று நினைக்கிற? ஒரு நாள் நான் பர்ஸ்ட் அவுட் பண்ணத்தான் போறேன். அப்ப என்னைக் குறை சொல்லாதே சஞ்சு…” கறாராகச் சொல்லிவிட்டு நிமிர, ஷிவானி சிரித்தபடி அருகில் வந்தாள்.
“ஹே மது! இன்றைக்கு ராஷ் கிட்ட சிக்கினது நீயா?” சிரித்துக்கொண்டே அவள் கேட்க, மது எரிச்சலாகத் தோளை குலுக்கினாள்.
“ப்ச்…”
அனைவருக்கும் அவன் ராஷ் தான்! அதே போலச் சஞ்சய்யை சஞ்சுவாக்கி விட்டிருந்தனர் அந்தப் படையினர்.
அனைவருமே மிக மிக வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான். பன்னிரண்டாவது தேர்வை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த நேரத்தில் வெஸ்டர்ன் கற்றுக் கொள்ளலாமே என்றுதான் இங்கு அந்தத் தோழிப்படை வந்திருந்தது.
ஷிவானியும் ஷாலினியும் முன்னரே இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் பயின்றவர்கள். ஆர்த்தியும் மதுவந்தியும் இப்போதுதான் இங்கு வந்திருந்தனர்.
தோழிகளுக்குள் அந்த அழகிப் போட்டி என்பது ஒரு குட்டி சவால்!
வெல்வது யார் என்ற சிறிய போட்டி!
யார் வெற்றி பெற்றாலும் அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அவர்களனைவருக்கும்!
போட்டி உண்டே தவிரப் பொறாமை இல்லை!
ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை உழைத்து வெற்றி பெறத் தூண்டும். ஆனால் பொறாமை வந்துவிட்டாலோ அடுத்தவரின் வெற்றி கண்ணை உறுத்தும். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பத்தகாத செயல்களைச் செய்யச் சொல்லும். ஆரோக்கியமான போட்டிகள் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் பொறாமை குணமோ வீழ்த்தி விடும்.
நரிக்குணம் சந்தர்ப்பவாதிகளின் பிறவிக் குணம். நட்பில் இந்த நரிகளை இனம் காணமுடியாத போது பாலில் சிறிது விஷம் கலந்துவிட்ட நிலை தான். மொத்தமும் பாழ்!
மானை வேட்டையாடக் காத்திருக்கும் புலி ஒரு புறம்!
அதே மானைக் கொன்று புசிக்கக் காத்திருக்கும் சிங்கம் ஒரு புறம்!
புலியிடமும் சிங்கத்திடமும் மானைக் காட்டி கொடுத்து தானும் ஏமாற்றி உண்ண நினைக்கும் நரி ஒரு புறம்!
அத்தனை பேரையும் ஓரம் கட்டி வேட்டையாடக் காத்திருக்கும் வேடன் ஒரு புறம்!
அந்த வேடன் வேட்டையாட போவது புலியையா? சிங்கத்தையா? நரியையா? அல்லது மானையா?
வேடிக்கையான கணக்குகளைக் கணக்காகப் போட்டு அதையும் முடித்து வைப்பதில் காலம் ஒரு கில்லாடியான ஆசிரியன்!