PuthuKavithai 10

PuthuKavithai 10

அத்தியாயம் பத்து

அன்று மிகவும் கடுமையான ப்ராக்டிஸ் செஷனாக இருந்தது மதுவுக்கு!

ரதீஷின் முகத்தில் அவ்வளவு தீவிரமான வெறி. வரப்போகும் நிகழ்ச்சிக்கான பயிற்சி என்பதை தாண்டி, அடுத்த நாளே வந்துவிடாது என்று அவன் தீர்மானம் செய்தது போல இருந்தது அவனது செயல்முறை. அவள் மேடையில் ஆடும் நிகழ்ச்சிகளிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டாள் என்றாலும் அந்த விதமான நடனத்தையும் அவள் விட்டுவைத்தது இல்லை.

அனைத்தையும் கற்றுப் பார்த்துவிட வேண்டும் என்பது மதுவின் தாரக மந்திரம்.

அதோடு இந்த பேஷன் ஷோவில் நடன சுற்றும் இடம் பெறுவதால், அதற்கான பயிற்சிதான் இப்போது! பாலே வகை நடனம்!

“ஷிவா… நெக்ஸ்ட் நீ போ… போதும் என்னால முடியல… ஐ ம் எக்ஸாஸ்ட்டட்…”

ஆடி முடித்த களைப்போடு, மூச்சு வாங்கிக்கொண்டு ஷிவானியின்  அருகில் வந்தமர்ந்தவள், அடுத்ததாக அவளைப் போக சொல்ல,

“ஐ கான்ட்! சஞ்சு வந்துரட்டும்… இவன் காட்டான்… கொஞ்சம் கூட பாவமே பார்க்காம பென்ட்டை நிமிர்த்துவான்… உப்ப்ப்…” என்று மதுவை நிமிர்ந்து பார்க்காமல் அவள் பதில் கூற,

“ஏய்… ஷிவா… மது அவளோட டர்ன் முடிச்சுட்டா… இப்ப நீ தான் போகணும்… சஞ்சு வந்தா மட்டும் தான் நீ வருவன்னு தெரிஞ்சாலே ராஷ் உன்னை சுக்கா போட்டுடுவான்… மரியாதையா போய்டு….” என்று ஷாலினி அவள் பங்குக்கு மிரட்ட,

“ஏன் நீ போயேன்…” என்று அவளை கோர்த்து விடப் பார்த்தாள் ஷிவானி. அவளது முகம் ஏகத்துக்கும் கறுத்திருந்தது, முன்னெப்போதும் இல்லாத அளவு!

“ஓய்… இது உன்னோட டர்ன் மா… அடுத்தது தான் நான்…” என்று ஷாலினி அவளிடம் சண்டைக்கு போக,

“நீ போ ஷால்… அவனை பார்த்தாலே எனக்கு இப்ப பயமா இருக்கு… இன்னைக்கு ரொம்ப ரஃபா தெரியறான்…”

ஷிவானியின் அன்றைய செய்கை ஷாலினிக்கும் மதுவுக்கும் வித்தியாசமாக தெரிந்தது. ஆனால் அவர்கள் அறியாத ஒன்று, பார்ட்டியில்  ரதீஷிடம் அவள் வாங்கிக்கட்டியது.

‘என்னுடைய அபெர்ஸ்ஸில் நீ தலையிடாதே’ என்று அவன் அத்தனை இறுக்கமான முகத்தோடு கூறியதும், அவள் அவனது முகத்தில் தெரிந்த வெறியை பார்த்து நடுங்கியதும் அவர்கள் அறியாதது!

அவனது அந்த திமிரையும் அவளை துச்சமென நினைக்கும் பாங்கினையும் மீறி, அவளுக்கு ரதீஷை பிடிக்கும். அவனுக்காக எதையும் செய்யக் கூடியவள் ஷிவானி. ஆனால் அவனது அலட்சியம் ஷிவானியை எப்போதும் கலங்க வைக்கும்.

இப்போதோ அவனது கவனம் முழுவதும் யார் மேல் என்பதை முழுவதுமாக உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் எதோ தீப்பற்றியது போல இருந்தது.

நட்புக்குள் பொறாமை என்னும் தீ பிடித்துவிட்டால், அந்த நட்பு எரிந்து சாம்பலாகும் வரை அந்த தீ நிற்காது அல்லவா!

பார்ட்டியில் ரதீஷ் மதுவை உறுத்து பார்த்துக்கொண்டு அப்படி கூறியபோது மனதுக்குள் யாரோ சம்மட்டியை வைத்து அடிப்பதை போல உணர்ந்தாள் ஷிவானி.

அவளது ஆசை ரதீஷ்! ஆனால் அவனது ஆசை மது என்பதை உணர்ந்த போது மனதில் வெப்ப கங்குகள்!

அப்போதே மதுவை அவள் பார்த்த பார்வையில் வேற்றுமை வந்துவிட்டது.

நட்பு எரிந்து சாம்பலாக ஆரம்பித்திருந்தது. அந்த இடத்தில் வஞ்சம் வந்தமர்ந்தது.

மதுவை அவள் தீவிரமாக வெறுக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

அப்போது சஞ்சு தன்னுடைய கைக்குள் மதுவை வைத்துக்கொண்டு மயக்கமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். கண்களில் அவ்வளவு மயக்கம் அவனுக்கு. அது அவன் குடித்த மதுவாலா? கைக்குள் இருந்த மதுவாலா? ஷிவானிக்கு அவ்வளவு கோபம் வந்தது.

இந்த பக்கம் ரதீஷ் மதுவை தீவிரமாக பார்த்துக்கொண்டிருக்க, அந்த பக்கம் சஞ்சுவை விட்டால் பூப்போட்டு அர்ச்சனை செய்து விடுவான் போல! அத்தனை காதல் அவனது பார்வையில்!

இவனும் சரி அவனும் சரி… மதுவையே விரும்ப என்ன தான் காரணம்?

ஷிவானியின் மனம் கொதித்து கொந்தளித்தது. கோபத்தில் அழுகை வரும் போல இருந்தது. அவளும் நல்ல வசதியான வீட்டுப் பெண் தான். அழகி தான்! ஆனால் ஏன் ரதீஷுக்கு பிடிக்கவில்லை என்ற கேள்வி அவளுள்!

மதுவிடம் என்ன இருக்கிறது என்று இருவரும் அவளிடமே விழுந்து இருக்கின்றனர் என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். உள்ளுக்குள் அவ்வளவு எரிச்சல் அவளுக்கு!

மதுவை பார்க்கும் போதே அவளை கழுத்தை நெரிக்க வேண்டும் போல தோன்றியது. அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கும் போதே அவளை விழுங்கி விடுவதை போல பார்த்த ரதீஷின் பார்வையை பார்த்த போது, அவள் மேல் காரமான மிளகாயை அரைத்து அப்பியதை போல இருந்தது.

விட்டால் மதுவின் தலைமுடியை பற்றி வெளியே இழுத்து தள்ள வேண்டும் என்பது போன்ற வெறுப்பு!

அத்தனை வெறுப்பையும் எரிச்சலையும் சேர்த்து வைத்துக் கொண்டு திரும்பி மதுவை பார்த்தாள் ஷிவானி. யாருமே அவளை கவனிக்கவில்லை… ஒருவனை தவிர!

ரதீஷ்!

ஒரு செஷனை முடித்து விட்டு லேசாக தண்ணீர் அருந்திவிட்டு நிமிர்ந்தவனின் கண்களில் பட்டது ஷிவானியின் வெறுப்பை சுமந்த முகம்! அவளது வெறுப்பும் ஆசையும் அவனுக்கு தெரிந்ததுதான். அதனால் தான் அவளை தள்ளியே வைத்திருந்தான்.

ரதீஷுக்கு எப்போதுமே தன் மேல் தானாக வந்து விழும் கனிகளை சுவைக்கப் பிடிக்காது. கைக்கு எட்டாது என்ற நிலையில் இருப்பதை வலுகட்டாயமாக பறித்து தடியால் அடித்து பழுக்க வைப்பது என்பது அவனது செயல்பாடுகளில் ஒன்று.

இந்த ஷிவானியிடம் அவன் மட்டுமல்ல, மதுவும் கூட கவனமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“ஷிவானி…” ரதீஷ் சப்தமாக அவளை அழைக்க, அவளது நினைவு ராஸாவுக்கு வந்தது. அடுத்த நடன செஷனுக்காக அவன் தயாராக நின்றுக்கொண்டிருந்தான்.

ஷாலினி அவளுக்கு அழகு காட்டிக்கொண்டிருந்தாள், மாட்டினாயா என்று!

“ச்சீ பே…” வாயைக் கோணிக்கொண்டு அலட்சிய பாவனையோடு ஷிவானி ஷாலினியை பார்த்து திட்ட, மது இருவரையும் பார்த்து சிரித்தாள்! அவளது அந்த சிரிப்பு அவளது வெறுப்பை அதிகரிக்க செய்தது. எரிச்சலாக ரதீஷ் பக்கம் போக,

“விட்டா எரிச்சுடுவ போல இருக்கே…” மெல்லிய புன்னகையோடு அவன் கேட்க,

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்…”

“எனக்கு என்ன தேவைன்னு நான் தானே முடிவு பண்ணனும் ஷிவானி…” அவளது இடையை பற்றிக்கொண்டே அவன் கேட்க,

“எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிட முடியுமா?”

“வேற யார் முடிவு பண்ணனும்?”

“அதை மதுவும் சஞ்சுவும் முடிவு பண்ணனும்…”

“அவங்களோட அஃபேரையே நான் தான் முடிவு பண்ணனும் ஷிவானி…” அத்தனை ஆணவம் அவனது குரலில்.

“உனக்கு மத்தவங்க விஷயம் எதுக்கு ரதீஷ்?” இவள் நறுக்கென்று கேட்டு வைக்க, ரதீஷ் சிரித்தான்.

அவன் பெரும்பாலும் சிரிப்பதில்லை!

அப்போது அந்த சிரிப்பில் விஷத்தை மட்டுமே உணர்ந்தாள் ஷிவானி!

“வந்தமா வேலைய பார்த்தமான்னு போ ஷிவானி… அதுக்கு மேல எதையாவது ப்ளான் பண்ண… உன்னோட எதிர்காலத்தை இருண்ட காலமாக்க எனக்கு ஒரே நிமிஷம் போதும்…”

சற்றும் குரலை உயர்த்தாமல் ரதீஷ் கூற, அவனை வெறித்துப் பார்த்தாள்.

இசை ஆரம்பித்து இருந்தது… மெல்லிய பீட்ஸ்!

மென்மையான அசைவுகள்!

அவளது கையை சுழற்றி பிடித்தவனின் இன்னொரு கைக்குள் அவளது இடை!

பாலே பாணி நடன அமைப்பு… வெகு நெருக்கமான அசைவுகள்… அவனும் அவளை அவனிஷ்டப்படி ஆட்டுவிக்க, அவள் அவனது கைகளில் பொம்மையாய்!

சற்று முன் அத்தனை கோபமாக எச்சரித்தவனா இவன் என்று தோன்றியது. ஆடி முடித்த போது அவளுக்கு சற்றும் களைப்பில்லை!

கண்களில் மெல்லிய நீர்படலம்!

மெளனமாக அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டவள், இறுக்கமாகவே அவளது இடத்தில் அமர்ந்தாள். அருகில் அமர்ந்திருந்த மது மென்மையாக அவளது முதுகை தட்டிக் கொடுக்க, அவளது கைகளை விலக்க தோன்றினாலும் எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

அவளது அந்த பார்வையும் செய்கையும் மதுவுக்கு புதிது!

இவளுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடி ஷாலினியின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருக்க, அருகில் வந்து தொப்பென்று அமர்ந்தான் சஞ்சய்.

ஆடிக் கொண்டிருந்த ரதீஷின் பார்வை, இவர்கள் பக்கமாக திரும்பியது!

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்…” என்றபடி அவள் மேல் கை போட்டுக் கொள்ள, ‘ப்ச்’ என்று அவனது கையை சட்டென்று எடுத்து விட்டு தள்ளி அமர்ந்தாள். அன்று ரெஸ்டாரண்டில் அவன் நடந்து கொண்ட முறை அவளுக்கு பிடிக்கவில்லை. அன்று முதலே இருவருக்கும் சரியான பேச்சுவார்த்தை இல்லை. அவன் கிழக்கு என்றால் அவள் மேற்கில் இருந்தாள்.

அதிலும் பார்த்திபனை அவன் திட்டும் போதெல்லாம் இவளுக்கு சுருக்கென்றது. கோபம் வந்தது. இவன் யார் தன் மாமனை திட்ட என்ற எண்ணம் மட்டுமே முன் வந்து நின்றது.

அதை கொண்டு அவளும் நறுக்கென்று பேசிக்கொண்டிருந்தாள்.

அவனும் ஈகோவை விட்டுக்கொடுக்கவில்லை. அவளும் தணியவில்லை. அதனால் அவ்வப்போது அனல் பறக்கும் விவாதங்கள் இருந்துக் கொண்டுதானிருந்தன.

“ஹேய்… என்னடா?” என்று அவள் புறமாக நெருங்கி அமர்ந்தவனை முறைத்தாள் மது.

“என்ன… இன்னைக்கு குண்டூர் மிளகாய் மாதிரி இருக்க ஹனி? ரொம்ப காரமா…” தன்னால் முடிந்தளவு அவளை சமாதானப்படுத்தவேண்டும் என்று புன்னகை பூத்த முகத்தோடு அவன் கேட்க, அவள் உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“உனக்கு ஒண்ணுமே தெரியாதில்லையா?” கடுப்பாக அவள் கேட்க, சஞ்சு தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“நீ தெளிவா சொல்லு மது… நீ சொன்னா நான் கேட்டுக்க மாட்டேனா?” மீண்டும் அவளது தோளில் கைப்போட்டுக்கொண்டு அவன் கேட்க, அவளது முகம் சற்று தெளிவானது. பேசினால் புரிந்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது.

“அன்னைக்கு மாமா கிட்ட தெளிவா பேச வேண்டியதுதானே சஞ்சு? நாம என்ன தப்பா பண்றோம்?”

“ஹனி என்ன பேசறது அந்த பட்டிக்காட்டான் கிட்ட?” என்று கேட்க, அதை கேட்டதும் மதுவின் கோபம் மேலும் எகிறியது.

“சரி… ஏன் அவர் கிட்ட சண்டை போட்ட? அப்புறம் லைட்டா அவர் மிரட்டவுமே ஓடி போய்ட்ட… உன்னையெல்லாம் எந்த கேட்டகரில சேர்க்கறதுன்னே தெரியலையே…” என்று அவள் மீண்டும் அவனை தள்ளிவிட்டு முறைக்க, அவனது முகம் இறுகியது.

“அந்த **** சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது மது?” ஆங்கிலத்தில் சுத்தமான திட்டு வார்த்தைகளாக உபயோகப்படுத்தியவனை பார்த்து முறைத்தாள்.

“இங்க பார் சஞ்சு… மாமாவை திட்ற வேலை வெச்சுக்காதே… ஐ வார்ன் யூ…” முகம் சிவக்க அவள் எச்சரிக்க, சஞ்சுவின் முகம் துணுக்குற்றது.

“ஏன்? ஏன் திட்டக் கூடாதுன்னு சொல்ற? அவன் காட்டான் தானே? உன்னை அடிச்சு… என் கையை கிட்டத்தட்ட உடைச்சு… ஷிட்… மோசமான காட்டான் அவன்…” என்று திட்ட, அவளது முகத்தில் வெப்ப கலன்!

அவளும் பார்த்திபனை விட்டுக் கொடுப்பதாக இல்லை… அவனும் பார்த்திபனை விடுவதாக இல்லை. மாற்றி மாற்றி இருவரும் பேச, அது விவாதமாகிக்கொண்டிருந்தது.

மற்றவர்கள் அவர்களுக்கு இடையில் வரவில்லை என்றாலும், இவர்களது விவாதம் அவர்களின் பார்வைக்கும் உள்ளானது. அதிலும் ரதீஷ், ஆடிக்கொண்டிருந்தாலும் பார்வை முழுக்க இருவரின் மேல் மட்டும் தான்.

இது கடந்த ஒரு மாதமாகவே நடந்துக் கொண்டிருக்கும் பிணக்கு என்பதால் அவர்கள் அனைவருக்கும் அது பெரியதாக தோன்றவில்லை.

“திரும்ப திரும்ப மாமாவை பேசற… அவர் என்ன பேசினாலும் என்ன பண்ணாலும் என்னோட மாமா அவர். சோ அந்த மரியாதையை கொடுக்கறது உனக்கு நல்லது சஞ்சு… அன்னைக்கு நீ பொறுமையா உட்கார்ந்து பேசியிருந்தா உன்கிட்ட அவர் நல்ல விதமா தான் பேசியிருப்பார்… நீதான் கன்னாபின்னான்னு பேசி அவரோட கோபத்தை அதிகமாக்கி விட்டுட்ட…” என்று அவன் மேலேயே பழியை தூக்கிப் போட, அவன் முறைத்தபடி எழுந்துக் கொண்டான்.

“அதிகமாக்கி விட்டுட்டேனா? யூ இடியட்… அவன் என் கையை உடைச்சது தப்பில்லை… அவன்கிட்ட நான் பேசினது தப்பா?”

“தப்பு கிடையது… ஆனா பேசுற நேரமும் உனக்கு தெரியல…பேசற முறையும் தெரியல…” என்று முகத்தை அவள் திருப்ப, அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“ஆர் யூ கிரேசி? எனக்கே பேச சொல்லி தர்றியா மது? அப்படியென்ன அந்த காட்டான் உனக்கு முக்கியம்?”

“ஆமா முக்கியம் தான் சஞ்சு… ஏன்னா அவர் என்னோட மாமா… அடிச்சாலும் பிடிச்சாலும் அவர் என்னோட அம்மாவோட தம்பி… அதை நீ மறந்துட்டு என்கிட்டே சண்டை போட்டுட்டு இருக்கே…” குரல் அவளையும் அறியாமல் தழுதழுத்தது!

“நீ அந்த காட்டானுக்கே ஜால்ரா தட்டு…” என்று சற்று சப்தமாக கூறிவிட்டு, “நீ என்னை லவ் பண்றியா? இல்லை அவனை பண்ணறியான்னே தெரியல…” என்று அவனுக்குள் முனகிக் கொள்ள, அது ஸ்பஷ்டமாக அவளது காதில் விழுந்தது.

எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள்!

கண்ணீர் விழவா இல்லை எழவா என்று கேட்டுக்கொண்டிருந்தது. அதை சஞ்சய் அறியாமல் மறைத்தாள் மது. அவனது அந்த ஒற்றைச் சொல்லில் மனம் வெகுவாக காயப்பட்டிருந்தது.

உடையை சரி செய்துக்கொண்டு ரதீஷ் அருகில் சென்றாள்.

“பதில் பேசிட்டு போடி…” என்று கோபமாக அவளது கையை பிடிக்க, அவனது முகத்தையும் பிடித்திருந்த அந்த கையையும் உணர்வில்லாமல் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“சஞ்சு… இதென்ன பிஹேவியர்? அவளை விடு…” அதுவரை தலையிடாமலிருந்த ரதீஷ் இருவருக்குமிடையில் வர, அவளுக்கு அவமானமாக இருந்தது.

‘இருவர் சம்பந்தப்பட்ட விஷயத்தை இவன் இத்தனை பேருக்கு மத்தியில் தான் பேச வேண்டுமா?’

ஷாலினியும் அவளருகே வந்தாள்.

“என்னப்பா நீங்க? சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணாதீங்க…” என்று அவள் அறிவுரை கூற, ஷிவானி தான் இறுக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாக இருந்தாலும், அதை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

“கையை விடு சஞ்சு…” இறுக்கமாக அவள் கூறியதை அவன் உணரவில்லை.

“முடியாது… எனக்கு பதில் சொல்லு…” அவளிடமிருந்து பதில் பெறாமல் விட மாட்டேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க, அவளால் அத்தனை பேரின் முன்னும் அவளது உணர்வுகளை வெளிக்காட்ட முடியவில்லை. இவன் இதை கூடவா புரிந்துக்கொள்ள முடியாது என்று எண்ணினாள்.

“விடுன்னு சொல்றேன்…” கடுமையான முகத்தோடு அவள் கூற, அவனது ஈகோவும் வெகுவாக தட்டி எழுப்பட்டுக் கொண்டிருந்தது.

“முடியாது மது… எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்…”

“என்ன… தெரியனும்?”

“நீ என்னை லவ் பண்றியா இல்லையா?” அனைவரின் முன்னும் அவனது காதலை அவனுக்கு உறுதி செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு! கண்டிப்பாக ஆமென்று தான் சொல்வாள் என்று நம்பினான்… அப்போது வைக்க வேண்டும் அவளுக்கு செக் என்று எண்ணிக்கொண்டிருந்தான். பார்த்திபன் கண்களில் துரும்பாக உறுத்திக்கொண்டே இருந்தான். சஞ்சய் வேண்டுமென்றால் பார்த்திபனை முழுவதுமாக அவள் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது.

அவள் பதில் கூறாமல் அவனை உறுத்து விழித்தாள்.

“என்ன முறைக்கற மது… பதில் பேசு…”

“இல்ல சஞ்சு… ஐ டோன்ட் லவ் யூ… இந்த மாதிரியான ஆட்டிடியுட்டோட இருக்க உன்னோட ரிலேஷன்ஷிப்ப என்னால அக்செப்ட் பண்ண முடியாது…” மிகவும் தெளிவாக, உறுதியாக அவள் கூற, மெல்ல அவளது கையை விடுவித்தான்.

முகத்தில் கோபம் கொந்தளித்தது!

ரதீஷ் முகத்தில் உணர்வுக் கலவை! அவன் என்ன மாதிரியாக நினைக்கிறான் என்பதை கூட ஷிவானியால் உணர முடியவில்லை. குறைந்தபட்சம் அவள் கூறியதற்கு அவன் சந்தோஷமாவது பட்டிருக்க வேண்டும்… அல்லது நண்பனுக்காக அதிர்ந்திருக்க வேண்டும். இரண்டுமே அவனது முகத்திலிருந்து கண்டுக்கொள்ள முடியவில்லை.

“மது… நீ இப்ப ரொம்ப இமோஷனலா இருக்கே… இப்ப எதுவும் டிசைட் பண்ணாதே… கொஞ்ச நேரம் விடுங்க… ரெண்டு பேருமே!” ஷாலினி இருவரையும் விட்டுக்கொடுக்காமல் பேச, இருவருமே இறுகிய முகத்தோடு அருகருகே அமர்ந்தனர்.

ரதீஷ் எந்த கருத்தையும் கூறவில்லை… ஆனால் சஞ்சுவின் முதுகில் தட்டிக்கொடுத்தான். அது சஞ்சய்க்கு அவன் தரும் ஆதரவாக தெரிந்தாலும் அவனது முகத்தில் மின்னி மறைந்த ஒரு நொடி உணர்வு மாற்றத்தை ஷிவானி மட்டுமே கண்டுக்கொண்டாள்.

அது வக்கிரமா? ரவுத்திரமா? எரிச்சலா? கோபமா? என்னவென அவளுக்கு புரியவில்லை. ஆனால் நல்லதென்று மட்டும் கூற முடியாத உணர்வு கலவையது!

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சஞ்சய், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, மதுவிடம் வந்து, அவள் முன் முட்டிகாலிட்டு அமர்ந்தபடி,

“ஐம் சாரி மது…” என்று சிறியதாகிவிட்ட குரலில் கூற, அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ரொம்ப அஷேம்ட்டா இருக்குடி… நான் இப்படி பேசியிருக்க கூடாது… ரியலி சாரி மது…” என்று மிகவும் நைந்த குரலில் சஞ்சய் கூற,

“உனக்கு கூட அஷேம்ட்டா இருக்காடா? பெரிய விஷயம் தான் போ…” மதுவின் குரலில் அவ்வளவு எள்ளல்.

“ஹேய் ப்ளீஸ்… சாரிடா புஜ்ஜி… எனக்கே தெரியுது… ஓவர் பொசெசிவா இருக்கேன்… பேசினது தப்பு தான்…”

“பொசெசிவா இருந்தா கன்னாபின்னான்னு ஹர்ட் பண்ண முடியுமா சஞ்சு? என்ன என்ன வார்த்தையெல்லாம்… எவ்வளவு கேசுவலா சொல்றே நீ? இதையெல்லாம் மாமா கேட்டா என்னாகும் தெரியுமா?” அப்போதும் பார்த்திபனை தூக்கிவைத்துக் கொண்டு அவள் பேச, அவனது ரத்தம் மீண்டும் கொதித்தது.

“எப்ப பாரு மாமா… மாமா… மாமா…” என்று இரைந்தவன், சற்று அமைதியாகி, “என்னையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்டி…” என்று எரிச்சலாக கூற, மது தலையை பிடித்துக் கொண்டாள்.

“நான் நானா இருக்க ஆசைப்படறேன் சஞ்சு… ப்ளீஸ் என்னை என்னோட சுயத்தோட இருக்க விடேன்…” என்று கெஞ்ச, மடங்கி அமர்ந்திருந்தவன் அவளது கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஓகே… ஓகே… நீ சொல்றது எனக்கு புரியுது… ஆனா உன்னோட மாமாவோட பேரை கேட்டாலே எனக்கு பிடிக்கலை மது… அதை நீயும் புரிஞ்சுக்கோ…”

“பிடிக்கலைன்னா? என்னோட பேமிலிய என்னால் விட்டுட முடியாது சஞ்சு… இப்பவே நீ இப்படி பிஹேவ் பண்ணா பின்னாடி? ஓ மை காட்…”

“ஓகே உனக்காக நான் பொறுத்துக்கறேன்… ஐ அக்செப்ட்… ஓகேவா பேபி?”

அவன் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் தனக்கு தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் முயல்கிறான் என்பதை ஷிவானி தெளிவாக கண்டுக்கொண்டாள்.

அதை கண்டுக்கொண்ட இன்னொருவன் ரதீஷ்!

“அதான் இவ்வளவு சொல்றானே மது… கொஞ்சமாவது சமாதானமாகுடி… இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா மாறி மாறி பேசிட்டே தான் இருக்க முடியும்… ரெண்டு பேருமே விட்டுக்கொடுத்துத்தான் ஆகணும்….”

ஷாலினி தன்னால் முடிந்தளவு கூற, “ஐ நீட் சம் டைம் ஷால்…” என்றவள், “லெட் மி ஃபினிஷ் மை செஷன்…” என்று டான்ஸிங் ப்ளோர் நோக்கிப் போனாள்.

சஞ்சய்யை பார்த்துக் கொண்டே, அவளைப் பின்தொடர்ந்தான் ரதீஷ்!

பதில் கூறாமல் போனவளை பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்!

மதுவை பின்பற்றி போனவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷிவானி!

பயிற்சி ஆரம்பித்து இருந்தது!

எப்போதும் போல என்பதை தாண்டி, இப்போது சற்று அதிகமாகவே கடுமையான பயிற்சியாக்கி இருந்தான் ரதீஷ்.

வியர்த்துக் கொட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது சஞ்சய்யை தொட்டு மீண்டது அவளது பார்வை!

அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்!

வாசலில் நிழலாட… ஷாலினி கதவைத் திறந்து விட்டாள்!

உள்ளே வந்தது பார்த்திபன்!

“வாவ்…..மாமா…” பெரிய சிரிப்போடும் தவுசன்ட் வாட்ஸ் பளபளப்போடும் மது குதிக்க, சஞ்சயின் முகம் கறுத்தது!

error: Content is protected !!