PuthuKavithai 2
PuthuKavithai 2
அத்தியாயம் 2
இரவு மணி பன்னிரண்டை தொட்டிருந்தது. மதுவந்திக்கு பதட்டமாக இருந்தது. சற்று தாமதமாகுமே தவிர இவ்வளவு நேரமானதில்லை. பெரும்பாலும் ஒன்பது மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விடுவாள்.
பானுமதியே வீடு வந்து சேர பெரும்பாலும் பத்து மணியாகிவிடும் என்பதால் அவருக்கே மதுவின் இந்தத் தாமதமான வீடு திரும்பல் என்பது பெரும்பாலும் தெரிவதில்லை.
அவளது தந்தையோ கேட்கவே தேவையில்லை, தொழில் தொடர்பான வேலைகளையும் சந்திப்புக்களையும் முடித்து விட்டு இரவு விருந்துக்கும் சென்று விட்டு நேரமிருந்தால் கிளப்பிலும் தலை காட்டி விட்டு வருவதுதான் எப்போதுமான நிகழ்வே!
அதனால் இந்த முறை அவளுக்குப் பிரச்சனைகளைக் கொடுத்ததில்லை, அதைப் போன்றே திரும்பி விடலாம் என்று தான் அவள் நினைத்திருந்தாள். இந்த சஞ்சயால் வந்தது என்று அந்த நிலையிலும் அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
அவன் தானே அவளை பப்புக்கு போகலாம் என்று அழைத்துச் சென்றது, பார்ட்டிக்காக!
மதுவந்திக்கும் பப்பில் நடனமாடுவது மிகவும் பிடித்த ஒன்று. லேசாகத் தாளமிட செய்யும் இசை படிப்படியாகத் தீவிரமாகி வெறித்தனமாக மாறுவதை மிகவும் ரசிப்பாள் அவள். அந்த இசை ஒவ்வொரு நொடியும் நரம்பில் ஏறி அவளைச் சூடேற்றி எங்கோ அழைத்துப் போவதாகத் தோன்றும்!
தீவிரமான, வெறித்தனமான நடனம்!
கும்பல் மனப்பான்மை வெட்கத்தை வெட்டி விடுகின்றது. இதுதான் நாகரிகம், இதுதான் சரி என்று புதுப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் வெட்கமில்லாத மனப்பான்மை வந்து விடுகிறது போலும்.
அடுத்த நொடி வாழ்வில் இல்லை என்று நினைத்துக் கொள் என்று சஞ்சய் அடிக்கடி கூறுவது அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“இந்த நொடி மட்டுமே உண்மை… அதை எவ்வளவு அதிகபட்சமாக அனுபவிக்க முடியுமோ அனுபவி மது…” பப்பில் கையில் மதுவோடு, மதுவின் காதை கடித்தான் சஞ்சய், அவளது கையில் மோஜிட்டோ காக்டெயிலை திணித்தவாறு!
அவள் அதிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள்.
தோழிகளோடு பப் சென்றாலும் மது வகைகளை அவள் இதுவரை தொட்டதில்லை. தோழிகள் பியர் அருந்துவதுண்டு. சிலர் ஹாட் வரை கூடச் சென்றதுண்டு.
“ஹே கிட்… அது ஜஸ்ட் பார்லி வாட்டர்… இதைப் பெரிய விஷயமாக்காதே…” என்று வலுக்கட்டாயமாக ஷிவானி திணித்தபோதும் கூட அவள் முடியாதென மறுத்திருக்கிறாள்.
ஒயினை கையில் கொடுத்து, “ஸ்கின்னுக்கு நல்லது மது… கலர் மெய்ன்டையின் பண்ணலாம்… ஜஸ்ட் பீல் ப்ரீ…” என்று திணித்த போதும் நடுக்கத்தோடு வேண்டாமென்று இருந்திருக்கிறாள்.
அப்போதெல்லாம் வெளியே மறுத்தாலும் உள்ளே சிறு ஆசை எழுவதுண்டு. ஏன்? சோதித்துப் பார்த்தால் தான் என்ன என்ற கேள்வி எழும்! வயதுக்குரிய ஆசை தான் !
அடுத்த நிமிடம் அவளது மனக் கண் முன் பாட்டி சகுந்தலா தேவியின் முகம் நிழலாடும்!
அவளையும் அறியாமல் தலையாட்டி மறுத்துவிடுவாள்.
அப்படியெல்லாம் இருந்தவளிடம் மோஜிட்டோவை திணித்த சஞ்சய்யை அதிர்ந்து பார்த்தாள்.
“சஞ்சு… ஐ டோன்ட் ட்ரின்க்…” டிஜேவின் இசை காதை கிழித்துக் கொண்டிருக்க, அதை மீறி தன்னுடைய குரல் கேட்க வேண்டும் என்பதற்காகச் சற்றுச் சப்தமாக அவள் கூற, அவளை விசித்திரமாகப் பார்த்தான் சஞ்சய்!
“நீ இன்னும் சின்னக் குழந்தைன்னு ப்ரூவ் பண்ணாதே மது…” எரிச்சலாக அவன் கூற,
“நான் ஒன்றும் குழந்தை இல்லை… அன்ட் ஐ நோ வாட் இஸ் ரைட் சஞ்சு…” சற்றுக் கோபமாக அவள் கூற, சட்டென அவன் இறங்கி வந்தான்.
“ஓகே… ஓகே… ஜஸ்ட் சில்…” என்று அவளது தோளின் மேல் கை போட்டுக்கொண்டு அவன் அவளைச் சமாதானப்படுத்த, அவனை முறைத்துக் கொண்டே அவனது கையை எடுத்து விட்டாள்.
சட்டென்று தோன்றிய கோபத்தை அடக்கிய சஞ்சய்,
“ஜஸ்ட் டூ சோஷியலைஸ் மது, வேண்டாமென்று சொல்றது டீசென்சி கிடையாது, ஜஸ்ட் எ சிப்… பார் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் தப்பா நினைச்சுக்கப் போறாங்க…” என்று ரதீஷை காட்ட,
தீக்ஷாவின் இடை பற்றிக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தவன் அவ்வப்போது இவர்களையும் பார்த்து சஞ்சய்யை பார்வையால் என்னவெனக் கேட்டான். அவனது பார்வையைத் தவிர்த்தவள்,
“ஆனா எனக்கு இது சரியா படலை சஞ்சு… உனக்காக என்ன வேண்ணாலும் செய்யலாம் ஆனா இது தப்பில்லையா?” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க,
“ஹேய் அதெல்லாம் ஒன்றும் தப்பில்லை… நான் அப்ஜெக்ட் பண்ணாத்தானே தப்பு… நம்ம சர்க்கிள்ல இதெல்லாம் இல்லைன்னா தான் தப்பு… காண்டாக்ட்ஸ் கிடைக்காது ஹனி… உன்னுடைய பியுட்டி காண்டஸ்ட்க்கு காண்டாக்ட்ஸ் முக்கியமா? இல்லையா?” என்று அவளைச் சரியாக நாடியைப் பிடித்து வைத்திருந்தவன், பேச்சால் வீழ்த்தி விட்டான்.
“ம்ம்ம்… ஆமாம் தான்… ஆனா…” என்று அவள் இழுக்க,
“இழுக்காதே… சியர் அப்… உனக்கு லைட்டா வேணும்னா டக்கீலாவோட இன்னும் கொஞ்சம் லைம் ஜூஸ் மிக்ஸ் பண்ணிக்கலாம்… ஓகே?” என்றவன் அவளது பதிலை எதிர்பாராமல், பேரரை அழைத்து மோஜிட்டோ மிக்ஸில் மேலும் எலுமிச்சையை ரசத்தைப் பிழிந்து வரச் செய்து அவளிடம் கொடுத்தான்.
“சியர்ஸ் பேப்…” என்றவன், அவனது கையிலிருந்த மதுவை ஒரே மடக்கில் உள்ளே தள்ளிவிட்டு அவளைப் பார்க்க, அவளோ தயங்கிக் கொண்டே அவனையும் அவள் கையிலிருந்த மோஜிட்டோவையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.
ஏனோ அந்த நொடியில் அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்று நம்பத் தோன்றியது.
தன் கண் முன் வந்த பானுமதியையும் சகுந்தலாவையும் பின் தள்ளிவிட்டு சஞ்சய்யை கொண்டு வந்தாள். அவனது வார்த்தைகள் வேத மந்திரங்களைப் போல வேலை செய்யத் துவங்கியிருந்தது.
உள்ளே சென்ற வஸ்து வேலை செய்யத் துவங்கியிருந்தது!
உடலில் ஒவ்வொரு செல்லும் சில்லென்ற உணர்வில் நாட்டியமாடத் துவங்கியிருந்தது. இதயம் எம்பி மேலே குதித்து விடும் போல, அவ்வளவு குதூகல உணர்வு!
இசையோடு சேர்ந்த மோஜிட்டோ, அசுரியாக்கி இருந்தது மதுவந்தியை!
கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஆடத் துவங்கினான். அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் தடை கூறாமல் சென்றாள் மது!
தலை முதல் கால் வரை ஏதோ ஒரு பரவச உணர்வு ஆர்ப்பரித்தது.
அவளிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு நின்றவன், தன் கண் முன்னே அழகுக் குவியலாக ஆடிக் கொண்டிருந்தவளை கண்களால் பருகிக் கொண்டிருந்தான்!
கட்டுப்பொட்டித்தனத்துக்கும் சுதந்திர மனப்பான்மைக்கும் இடையில் சிக்கி தவிக்கும் இவளைப் போன்றவர்களைக் காண்கையில் மனதுக்குள்ளே ஏதோ தீண்டி செல்லும். அதிலும் தனக்கு மிகவும் பிடித்தவளை, தன் விருப்பத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதுவை பார்க்கும் போது எதையோ சாதித்த உணர்வு அவனுக்குள்!
சுற்றிலும் பார்த்தான்! தத்தமது ஜோடிகளோடு ஆட்டம் பாட்டத்தில் ஆழ்ந்திருந்தனர்.
என்னவென்று பார்வையால் கேட்டாள் மது! அவளை அப்படியே அள்ளி விழுங்கி விடப் போவதாகக் கூறிவிடலாமா என்று யோசித்தான் சஞ்சய். உதட்டில் கேலிப்புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
அருகில் வந்த பேரரிடம் இன்னொரு பெக்கை எடுத்துக் கொண்டவன் அதை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான்.
உடல் தன்னிலை மறந்து பறக்கும் நிலைக்கு வந்திருந்தது. மெல்ல அவளை நெருங்கியவன், மீண்டும் இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
நெற்றியில் விளையாடிக்கொண்டிருந்த முன்னுச்சி முடிகளை ஒதுக்கியபடி அவளைப் பார்த்தவன், மெல்லக் குனிந்து,
“லவ் யூ மது…” காதில் கிசுகிசுக்க, மது அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
காதலை வெளிப்படையாக அவன் கூறுவது இதுவே முதன் முறை!
போதை மனதை வெளிப்படையாக்கச் சொல்கிறதா?
இருவருக்குமே ஒரே மனநிலை என்றாலும் அவளிடம் அவனும் அவனிடம் அவளும் வெளிப்படையாகவெல்லாம் காதலென்று கூறிக்கொள்ளவில்லை.
அதுக் காதல் தான்!
அது உறுதி அவளுக்கும், அவனுக்குமே கூடப் போல!
“என்ன திடீர்ன்னு?” அவளும் கிசுகிசுப்பாகவே கேட்க,
“சொல்லணும்ன்னு தோனுச்சு… ஏன் உனக்குத் தோணலையா?” சிரித்துக்கொண்டே அவன் கேட்டான். அவனுக்குத்தான் பதில் தெரிந்ததாயிற்றே!
“உனக்குத் தோன்றது எல்லாம் எனக்கும் தோணனும்ன்னு ஒன்னும் எழுதி வைக்கலையே…” உதட்டை சுளித்துக் கொண்டு அவள் கூற,
“ஆஹான்… உனக்குத் தோணும் போது சொல்லிக்க… இப்போதைக்கு எனக்கு இது போதும்…” என்று அவளது உதட்டை நோக்கி அவன் வர,
“ஏய்ய்யி…” மிகவும் அதிர்ந்து அவசரமாக விலகினாள் மது.
“மது…” எரிச்சலாக அவன் அழைக்க, அவள் கிண்டலாகச் சிரிக்க, அவனது ஏமாற்றத்தை மறந்து அவளது செய்கையில் சிரித்தான்.
“ரொம்ப அலட்டக் கூடாது பேப்ஸ்… யூ ஆர் மைன்…” அந்தப் போதையிலும் அவன் தெளிவாகக் கூற, அவளுக்கு அவனது அந்த உரிமை உணர்வு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவனது செயலைத் தான் அங்கீகரிக்க முடியவில்லை.
“அதை நான் அக்செப்ட் பண்ணனுமே சஞ்சு…” அவனைக் குறும்பாகப் பார்த்து சிரிக்க,
“ஓ… நோ சொல்ல போறியா?” என்று அவனும் சிரித்தான்.
“ம்ஹூம்… சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கறேன்… கமிட் ஆகிட்டா இந்த ராட்சசன் கிட்ட மாட்டியாகனுமே…” கள்ளச் சிரிப்போடு மது கூற,
“இல்லைன்னா மட்டும் இந்த ராட்சசன் உன்னைச் சும்மா விடுவான்னா நினைச்சுக்கிட்ட?அப்படியே தூக்கிட்டு போய்ட மாட்டேன்?” கண்ணில் காதல் போதை வழிய அவன் கூற,
“அப்ப நீ ராவணன்னு சொல்ல வர்ற?” கிண்டலான சிரிப்போடு அவள் கேட்டாள்.
“ஐ நீட் யூ மது… அதுக்கு ராமனா இருந்தா என்ன? ராவணனா இருந்தா என்ன? இட்ஸ் சிம்பிள்…” என்று தோளை குலுக்க, மதுவுக்கு புரையேறியது!
“அடப்பாவி… இப்படி வில்லனாட்டம் பேசற… நீ ஹீரோங்கறதே உனக்கு மறந்து போச்சா?”
“நான் ஹீரோவாகறதும் வில்லனாகிறதும் உன் கையில் தான் பேப் இருக்கு…” என்று அவளுக்கு மிகவும் அருகில் வந்தவனை அவசரமாகத் தள்ளி நிறுத்தினாள் மது.
“என் கைலையும் இல்ல… கால்லயும் இல்ல… நீ இப்படி பிஹேவ் பண்றதை முதலில் நிறுத்து…” என்றவள் சிரித்தவாறு ஆட்டத்தைத் தொடர்ந்தாள்.
அவளது சிரிப்பை வெறித்துப் பார்த்தான் ரதீஷ்.
அவளது சிரிப்பு அவனைப் பித்தனாக்கிக் கொண்டிருந்தது. உள்ளே சென்ற மதுவின் தாக்கமும், சிரித்தவாறு சஞ்சுவுடன் ஆடிக்கொண்டிருந்த மதுவின் தாக்கமும் அவனைக் கிறுகிறுக்க வைத்தது.
கண்களால் மதுவை கபளீகரம் செய்து கொண்டிருந்தான் ரதீஷ்.
“ராஷ்… மதுவை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கியே…” ஷிவானி சின்னச் சிரிப்போடு கேட்க, தோளை குலுக்கிக் கொண்டான் அவன்.
“நத்திங்…”
“இல்லையே ராஷ்… உன்னுடைய கண்ல வேறே எதையோ பார்க்கிறேன்…” அவனது கண்களைப் பார்த்து ஷிவானி கூற, அவளை உணர்வுகளைத் துடைத்து விட்டுப் பார்த்தான்.
“உன்னுடைய வேலையை பார் ஷிவானி… என்னுடைய அபெர்ஸ்ல உன்னுடைய மூக்கை நுழைக்காதே…”
அவன் கூறிய விதத்தில் அவளது முகம் கறுத்து மீண்டது!
“ராஷ்… நான் எதுவும் தப்பா சொல்லிடலையே…” அவசரமாக மறுத்தாள் அவள்.
“இனிமேலும் கூற நினைக்காதே ஷிவானி…” மிகவும் அசாதாரணத் தொனியில் கூறிவிட்டு கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டான். கண்கள் மதுவின் பக்கமே சென்றது.
ஒருவன் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பதை அறியாதவள், ஒருவாறாக ஆடிமுடித்துக் கையிலிருந்த செல்பேசியைப் பார்த்தபோதுதான் மணி பதினோரு ஆகி மேலும் இருபது நிமிடங்கள் கடந்திருந்ததே தெரிந்தது. அன்றைக்கென்று பானுமதி மாலை அவளை அழைத்து இரவு விரைவாகத் திரும்பிவிடும்படி அழைத்திருந்தது வேறு அவசரமாக நினைவுக்கு வந்தது. என்ன காரணமோ?
அவளுக்குக் காரணம் தெரியவில்லை என்றாலும் அன்னையின் சொற்களை என்றுமே மீறியதில்லை. அவர்கள் தரும் சுதந்திரம் என்பது தவறாக உபயோகப்படுத்த அல்லவே.
மோஜிட்டோ எந்தக் கணக்கில் சேர்த்தி என்று மதுவின் மனசாட்சி நேரம் காலம் தெரியாமல் கேட்டு வைக்க,
சரி இந்த உட்கட்சி பூசலை பின் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளுக்கு உள்ளே ஏறியிருந்த போதை சட்டெனக் கீழே இறங்கியது. அன்னையின் அழைப்பை நினைத்து!
தலையில் கைவைத்துக் கொண்டாள் மது!
பானுமதி ஒன்றும் கோபித்துக் கொள்பவர் இல்லைதான், மகளைப் புரிந்து வைத்து இருப்பவர்தான், ஆனாலும் மதுவுக்கு கலக்கமாக இருந்தது.
“கடவுளே… காப்பாற்று!” அவசரமாக வேண்டுகோளை வைத்து விட்டு சஞ்சய்யை பார்க்க, அவன் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது, அத்தனை போதையில் இருந்தான் அவன்!
“ஹே பேபி… கம்மான் டான்ஸ்… பேபி… டான்ஸ்…” போதையில் உளறிய சஞ்சய்யை பிடித்து உலுக்கினாள் மது!
“சஞ்சு… ஐ நீட் டூ கோ…” பாடலின் ஒலி காதை கிழித்துக் கொண்டிருக்க, அதைத் தாண்டி அவனுக்குக் கேட்பதற்காகக் கத்த வேண்டியிருந்தது.
“ஒய்ய்ய்ய்யி? இப்ப தானே பார்ட்டி ஸ்டார்ட் ஆகிருக்கு…” அவனுக்கு அவன் கவலை, அவளுக்கோ ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இருந்தது.
“சஞ்சு… அண்டர்ஸ்டான்ட் பண்ணிக்க… மம்மி கால் பண்ணி வர சொல்லிருந்தாங்க… நான் மறந்துட்டேன்…”
“ச்சே… எப்ப பார்த்தாலும் மம்மி மம்மின்னு…” எரிச்சலில் இன்னும் சில வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவன் திட்ட, சற்று நேரம் மௌனமாக அவனை வெறித்துப் பார்த்தவள்,
“ஏன் இப்படி ஹர்ட் பண்ற சஞ்சு?” அவளது மனம் உடைந்து விடும் போல இருந்தது. அவள் பயம் கொள்ளியா? அதை எந்த இடத்தில் வைத்து எப்படிச் சொல்கிறான் இவன்? வரைமுறை இல்லையா? ஆனால் அவனோ அவளுக்குப் பதில் கூறாமல், அவளது கையைப் பற்றித் தன்னருகே இழுத்து,
“ஜஸ்ட் இன்னொரு டென் மினிட்ஸ் மட்டும் மது… ப்ளீஸ்…” என்று அவளது இடையை இழுத்தான் சஞ்சய், சட்டென்று அவனது கையை விலக்கி விட்டாள்.
“லிசன் சஞ்சு… மணியாச்சு… ஐ நீட் டோ கோ… நீதானே என்னை டிராப் பண்றதா சொன்னே… ப்ளீஸ் வா சஞ்சு…” வேறு வழியில்லாமல் அவனைக் கெஞ்சினாள் மது.
“மது… நீயென்ன குழந்தையா? இப்படி சைல்ட்டிஷா பிகேவ் பண்ற?” அவளது பிடிவாதமான அழைப்பு அவனை எரிச்சல் படுத்தியது.
“ப்ளீஸ் சஞ்சு… இன்னைக்கு அம்மா சீக்கிரமா வேற வர சொல்லியிருந்தாங்க… இப்பவே ரொம்ப லேட் ஆகிடுச்சு… இன்னமும் லேட்டா போனா இனிமே வெளிய போறதுக்கே தடா போட்டுடுவாங்கடா… ப்ளீஸ் சஞ்சு… அன்டர்ஸ்டேன்ட்…” என்று கெஞ்சலாகக் கேட்டவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன், அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யூ ஆர் அ கிட்…” சற்றுக் கோபமாகக் கூறிவிட்டு அவனுடைய காரை நோக்கிப் போக, எப்படி இப்படி அவன் கூறலாம் என்று மதுவுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
“நோ… ஐ ம் நாட் அ கிட்…” எரிச்சலாக அவள் கூற,
“நோ… யூ ஆர் அ கிட்…”
“நோ…”
“எஸ்…”
“நோ…” என்றவளை இழுத்து தனது காரின் மேல் சாய்த்து, அவள் மேல் கிட்டத்தட்ட சாய்ந்துகொண்டு,
“அப்படீன்னா ப்ரூவ் பண்ணு பேப்…” அத்தனை நேரமாக அவன் காட்டிய கோப பொய் முகத்தைத் தொலைத்துக் காதலாக அவளது கண்களைப் பார்க்க, அவனது அந்தத் திடீர் செய்கையில் அதிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள்.
“சஞ்சு…” அவளது குரல் வெளி வராமல் சண்டித்தனம் செய்தது. அவனிடமிருந்து தன்னைப் பிரிக்கப் பிடிவாதமாக முயன்று கொண்டிருந்தாள் மது.
“உன்னால் முடியாது டார்லிங்…” என்றவன் அவள் நகர முடியாதபடிக்கு அவளுக்குக் கால்களால் தடுப்பணை போட,
“சஞ்சு… ப்ளீஸ்… விடு… யாராச்சும் பார்த்துட போறாங்க…”
“இங்க பார்க்க யார் இருக்கா? அப்படியே பார்த்தாலும் தான் என்ன?” என்றவன் அவளது கழுத்தில் முகத்தைப் புதைக்க, அவளது உடல் நடுங்கியது, பயத்தில்!
“அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க யாராவது அவங்க கிட்ட போய்ச் சொல்லிட போறாங்க சஞ்சு, ப்ளீஸ்… லீவ் மீ…” குரல் நடுக்கமாய் வெளிவர, நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் சிரித்தான் போதையாய்!
“உன்னுடைய இந்த வெட்கமும் நடுக்கமும் தான் எனக்கு இன்னமும் ஜிவ்வுன்னு போதையை ஏத்துது ஹனி…” என்றவன், அவளை மேலும் தன் ஆளுகைக்குள் கொண்டு வரப் பார்க்க, வலுக்கட்டாயமாகத் தன்னைப் பிரித்து எடுத்தவள் அவனைக் கோபமாகப் பார்த்து,
“சஞ்சு… இவ்வளவு சொல்றேனே… உனக்குக் கொஞ்சம் கூடப் புரியலையா? மம்மி வில் பி வெய்டிங் பார் மீ… நீ டிராப் பண்ணறியா? இல்லைன்னா நான் டாக்சி புக் பண்ணட்டா?” என்றவள் அதோடு நிற்காமல் தன்னுடைய செல்பேசியை எடுத்து உபர் ஆப்பை திறக்க ஆரம்பித்தாள். அவளது கோபம் எல்லை தாண்டிக் கொண்டிருந்தது.
அவளது கோபம் அவனைச் சற்று சுதாரிக்க வைத்தது.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மூச்சைப் பெரிதாக இழுத்து வெளியே விட்டான், மனமும் உடலும் சமன்பட்டது போலிருந்தது.
ரிமோட்டை இயக்கி காரைத் திறந்தவன்,
“கெட் இன்சைட் மது…” என்றழைக்க, அவனது இந்த மாறுதலை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
இவன் எப்போது என்ன நினைக்கிறான் என்பதையோ, எப்படி நடந்து கொள்வான் என்பதையோ அவளால் யூகிக்க முடியவில்லை. உண்மையிலேயே அவன் கூறுவதைப் போலக் குழந்தைதானோ? இன்னமும் வளர வேண்டுமா?
“நான் டிரைவ் பண்ணட்டா?” அவளுக்குமே தலை ஒருமாதிரியாகச் சுற்றிக்கொண்டு தான் இருந்தது. இவ்வளவுக்கும் ஒரே ஒரு பெக் மட்டுமே அருந்திய தனக்கே இப்படி என்றால் சஞ்சய் அருந்திய மதுவின் அளவை நினைத்து மனம் அதிர்ந்தது.
“ஏன்… நான் என்ன மொடாக் குடியன்னு நினைச்சியா? எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன்…” என்றவன் விர்ரென்று காரை கிளப்ப, மது பயந்து பின்னால் சாய்ந்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.
வீட்டை அடைந்ததும் சஞ்சய் விடைபெற்றுப் போய்விட, சப்தமில்லாமல் பூனை போலப் பாதங்களை எடுத்து வைத்தாள்.
யாராவது எழுந்து விட்டால் என்னாவது! நிமிர்ந்து வீட்டைப் பார்க்க அந்தப் பிரமாண்ட வீடு இரவு வெளிச்சத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு இருந்தது. விளக்குகள் வேறு ஒளிர்ந்து கொண்டிருக்க அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது.
பயம்!
பயமா? தானா? சான்ஸே இல்லை… என்று தோளை குலுக்கிக் கொண்டாள்! யாரும் இன்னமும் உறங்கவில்லையோ? வாட்ச்மேன் வேறு நல்ல உறக்கத்தில் இருந்தான் போல, மெல்ல காரிடரை கடந்தாள்!
நடை வேறு சற்றுத் தள்ளாட்டமாக இருந்தது, ச்சே இனி இந்த சஞ்சய் கொடுத்தாலும் இந்தக் கர்மத்தை அருந்தவே கூடாது என்று ஆயிரத்து ஓராவது தடவையாக நினைத்துக்கொண்டு கதவில் கை வைக்க, அவள் தட்டாமலே திறந்து கொண்டது!
மனதைத் திடப்படுத்திக்கொண்டு சிட் அவுட்டை தாண்டி உள்ளே நுழைய, அங்கே ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டு நடுங்கியே போனாள்!
சகுந்தலா தேவியுடன் அமர்ந்திருந்தார் பானுமதி. அருகே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் கைகால்கள் வெலவெலத்தன!
சகுந்தலா தேவியின் சீமந்த புத்திரன்… பானுமதியின் சகோதரன்… மதுவந்தியின் தாய் மாமன்!
வெகு வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு வந்திருந்தான்!
பார்த்திபன் நெடுஞ்செழியன்!