PuthuKavithai 3

அத்தியாயம் 3

“அம்மாச்சி…” சகுந்தலாவை கண்டதும் பீறிட்டு எழுந்த சந்தோஷப் பரபரப்பு அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அப்படியே வடிந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்திபனிடம் அவளுக்கு ஒட்டுதலில்லை. சரியான பேச்சுவார்த்தையும் கூட இல்லை!

தாய்மாமனுக்கும் தன் தந்தைக்கும் கொடுக்கல் வாங்கலில் ஏதோ பிரச்சனையாகி கடந்த ஒன்பது வருடமாகப் போக்குவரத்து இல்லை என்பதை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறாள்.

வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ வழிபாட்டிற்கு என பானுமதி மட்டும் மதுவந்தியை அழைத்துக் கொண்டு காரமடை செல்வார். அப்போதும் அவளது தந்தை அவரது கோபத்தைக் கைவிட்டதில்லை. தனது மாமியாரின் வீட்டிற்கு வந்தது இல்லை… பார்த்திபனும் நேரில் பார்க்கையில் தமக்கையிடமும் மதுவிடமும் ஒரு தலையசைப்போடு நகர்ந்து விடுவான். அதற்கும் மேல் ஒரு வார்த்தையும் இல்லை.

தமக்கை என்று ஒருத்தி இருக்கிறாளே, அவள் நன்றாக இருக்கிறாளா? இல்லையா? அவள் ஒரு பெண்ணைப் பெற்று வைத்திருக்கிறாளே, அந்தப் பெண் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு ஏதாவது தேவையா? அருகில் அமர்ந்து இரண்டொரு வார்த்தை பேசலாம் என்பதெல்லாம் என்றுமே இருந்ததில்லை.

பானுமதியால் அப்படி இருக்க முடிந்ததில்லை. பிறந்த வீட்டுப்பாசம் அவளை வெகுவாக ஆட்டுவிக்கும். ஆனால் அதற்கான பிரதிபலிப்பை பார்த்திபனிடம் காணவியலாது. அவனது இந்தச் செய்கைகளுக்கான காரணம் தன் கணவர் தான் என்பது அவர் அறிந்தது தான். ஆனால் பிறந்த வீட்டில் கணவனையும் புகுந்த வீட்டில் பிறந்த வீட்டு மனிதர்களையும் விட்டுத்தர முடியாத சாதாரணப் பெண்மணிதான் பானுமதி!

பெரும்பாலும் அவன் வீட்டில் இருந்ததும் இல்லை. அவனது அலுவலகம் கோவையில் உள்ளது என்பதை மட்டும் சகுந்தலா சொல்லக் கேள்வி. ஆனால் மது அவற்றை ஆராய்ந்தது இல்லை. அவனாக எந்த விதமான பேச்சுவார்த்தையும் ஆரம்பிப்பது இல்லை. உணவருந்தும் நேரத்தில் அவன் தலைகாட்டினால் கூட சகுந்தலாவின் பார்வைக்காக வேண்டி அமர்வான். கொறித்து விட்டு அறைக்குச் சென்றுவிடுவான்.

மது தன்னுடைய மாமன் பேசிப் பார்த்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

பானுமதியாக மனம் தாளாமல் “பார்த்தி… எப்படி இருக்க?” என்று கேட்பதுண்டு. அதற்கும், தமக்கையிடம் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாமல், குறைந்தபட்சம் ஒரு புன்னகைக்குக் கூடப் பஞ்சமாக,

“ம்ம்ம்…” என்று முனகிவிட்டு சென்றுவிடுபவனைப் பார்க்கும் பானுமதி தன் தாயிடம் புலம்புவதுண்டு.

“கூடப் பிறந்தவன் மாதிரியா நடந்துக்கறான்? என்னமோ எதிரியை பார்க்கிற மாதிரி பார்த்து வெச்சுட்டு போறான்மா? எனக்கு இந்த வீட்டில் என்னதான் இருக்கு? உனக்கப்புறம் இவனெல்லாம் என்னை ஆதரிப்பான்னு நினைக்கிற? ஒரு மண்ணும் கிடையாது… எல்லாம் என் தலைஎழுத்து… இதற்குப் பேசாமல் நான் சென்னைலையே இருந்துடலாம் ம்மா… ஆசையா வர்றேன்… ஆனா இவன் பாரும்மா கண்டுக்கக் கூட மாட்டேங்கறான்…”

“விடு பானுமதி… ஒரு கல்யாணம் ஆச்சுன்னா அக்கான்னு பாசம் தானா வந்துடும் ஆத்தா…”சகுந்தலா சமாதானப் படுத்த,

“அதையும் தான் ஒத்துக்க மாட்டேங்கறானே… எதத் தான் மனசில வெச்சுட்டு இருக்கான்னே தெரியலையே… என்னோட கொழுந்தியா ஒருத்தி இருக்கா… சினிமா ஸ்டார் மாதிரி இருப்பா… பணம் வசதி எல்லாம் அவ்வளவு இருக்கு… நமக்குத் தகுந்த குடும்பம் தான்… ஆனா இவன் ஒத்துகிட்டா தானே? நானும் அந்தப் பொண்ணைக் கட்டிக்கச் சொல்லி போராடி பார்த்துட்டேன்…”

“அவன் என்ன பணம், நகை வேணும்ன்னு கேக்கறானா மதி? நமக்கு இருக்கு இன்னும் ஏழு தலைமுறைக்கு… என்ர ஆசையெல்லாம் அவனுக்குத் தகுந்த பொண்ணு மட்டும் தான். வயசு போயிட்டே இருக்கு, இருவத்தி ஒம்போது முடியப் போகுது, காலகாலத்துல ஒரு பொண்ணைக் கட்டினா தானே நான் நல்லா இருக்கும் போதே வர்றவளுக்குப் பாண்டித்தியம் பாக்க முடியும்… ஹும்ம்… எதுவொன்னுக்கும் கொடுப்பினை வேணும் ஆத்தா…”

அன்றொருநாள் விட்டேற்றியாகப் போய்விட்டவனைப் பார்த்து தன் தாய் புலம்பியதும் அதைக்கேட்டு தனது அம்மாச்சி புலம்பியது அனைத்தும் அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த அளவு புலம்ப விட்ட தன் மாமனைப் பார்க்கும் போது சற்று வெறுப்பாகக் கூட இருக்கும்!

தன் கண் முன் வந்து நின்றால் நன்றாகத் திட்ட வேண்டும் என்றெல்லாம் அவள் உறுதிமொழி எடுப்பதுண்டு. ஆனால் அவன் வரும் போது அவன் கண்ணில் பட்டு விடாமல் ஓடி ஒளியவே நேரம் சரியாக இருந்துவிடும். பின் எங்கே கேள்வி கேட்பது எல்லாம்?

பயம் என்பதெல்லாம் இல்லை என்றாலும் அருகில் அணுக முடியாத பிம்பம் அவன்!

சகுந்தலாவின் ஜம்பம் மட்டும் ஏதோ சற்றுச் செல்லுபடியாகும் அவனிடம்! மற்றபடி அவருமே யோசித்துத் தான் அவனிடம் பேசுவது. தவறாகக் கூறிவிட்டால் அவன் பார்க்கும் பார்வையோன்றே போதுமே எரித்துவிட!

அனைவரின் பார்வையிலும், அவன் ஏதோ சிங்கத்தைப் போல அல்ல புலியைப் போல நினைத்துக்கொள்வார்கள் போல. அவன் வருகிறான் என்றாலே அந்த இடத்தில் முதலில் ராணுவ அமைதி முதலில் வந்தமர்ந்து விடும்.

அவன் எதன் பொருட்டாவது வேலையாட்களை அழைக்கும் போது பார்க்க வேண்டுமே, அவர்கள் நடுங்கிக் கொண்டே அவனறைக்குப் போவதும் பேயறைந்தார் போலத் திரும்பி வருவதும், மதுவிற்கு தான் நல்ல பொழுதுபோக்கு அவையெல்லாம்.

“செல்விக்கா… ஏன் சின்னதம்பி இப்படி இஞ்சி தின்ன மாதிரி இருக்காப்ல? மாமனதான பார்க்க போனாப்ல? என்னமோ பேயக் கண்ட மாதிரி ஒரு ரியாக்ஷனை கொடுக்கறாப்ல?”வேண்டுமென்றே சமையல் செய்யும் செல்வியை அவள் வம்பிழுத்து, மாடியில் உள்ள பார்த்திபனுடைய அறைக்குச் சென்ற தோட்டக்காரன் சின்னதம்பியை பற்றிக் கேட்க, அவளோ சுற்றும் முற்றும் பார்த்தபடி,

“ஐயோ… செத்த சும்மா இரு கண்ணு… இப்பதான் சின்னவரு பேயோட்டி விட்டிருக்காப்ல… இன்னும் அஞ்சு நிமிசத்துக்குள்ள ரூமுக்கு காபி போவலின்னா அடுத்தக் காவு நாந்தேன்…” செல்வி படபடப்பாகக் காபியை கலக்கிக் கொண்டிருக்க,

“செல்விக்கா… எனக்கு ஒரு சந்தேகம்…” நல்ல பிள்ளையாக மது கேட்க,

“என்ன கண்ணு சந்தேகம்?” ஒன்றும் அறியாமல் செல்வி வாயை விட,

“காபி அதுவா மாமா ரூமுக்கு போகுமாக்கா? இல்லைன்னா ரூமு காப்பிக் கிட்ட வருமா?” அறியாப்பிள்ளையைப் போலக் கேட்டுவிட்டு வாயை மூடிக்கொள்ள,

“ஏன் கண்ணு, எப்படியும் என்னைய காவு வாங்கிடறதுன்னு முடிவு பண்ணிட்ட போல…”என்று நொந்துக்கொன்டாலும் மெல்லிய சிரிப்புப் படர்ந்தது செல்வியின் முகத்தில் அப்போது!

“அங்கன என்னடி பேச்சு? தம்பி காபி கேட்டு நேரமாவுது… நீ என்னடான்னா சீவி சிங்காரிச்சுட்டு இருப்ப போல இருக்கே…” என்று புழக்கடையிலிருந்து பெரியவள் குரல் கொடுக்க,

“ஐயோ! பெரியாத்தா… சின்னதம்பிக்கிட்ட காபியை கொடுத்துட்டேன்…” செல்வி பயந்து கொண்டே சின்னதம்பியை அழைத்துக் காபி ட்ரேவை அவனிடம் கொடுக்க, அவனது மனதுக்குள் நடுக்கம் பிறக்கும், அடுத்து தனக்கு என்ன பாட்டு காத்திருக்கிறதோ என்று!

“ஏன்டி போக்கத்தவளே, ஒரு காப்பித் தண்ணி போட தெரியுதா? அதுக்குள்ளே ஆயிரம் வியாக்கியானம் உனக்கு…” புழக்கடையில் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த வைரத்தை பார்வையிட்டவாறே சகுந்தலா பாட்டை ஆரம்பிக்க,

“காபி தண்ணின்னு சொல்லிட்டியே அம்மாச்சி… அதேன் காபியை செல்விக்கா தண்ணியா போட்டுடுச்சு போலருக்கு…” செல்வியை பார்த்துச் சிரித்துக்கொண்டே கண்ணைச் சிமிட்டி மது வம்பிழுக்க,

“அதே தான் பேத்தி பொண்ணு… இவளுக்குக் கேக்க யாருமில்லைன்னு தைரியம்… இப்ப பாருடி செஏஏஏலுவி… என்ர பேத்தி பொண்ணு வந்துட்டா… கொஞ்சம் சாக்கிரதையா இருடி…” என்று அவர் பொய்யாய் எச்சரிக்க,

“ஆத்தா… நீ ஒன்னும் சாதாரண ஆத்தா இல்ல… சரியான மங்காத்தா… உன் பேத்தி வந்த முசுவுல என்னை இப்படித் தெராட்டுல வாங்கறியா?… அது இன்னும் இரண்டு நாளைக்குத் தேன் இருக்குமாத்தா… சொல்லிட்டேன்… என்னய நீ பகைச்சுக்காதே…”

செல்வி பதிலுக்குப் பதிலாகச் செல்ல சண்டைக்கு நிற்க, மாட்டிற்குத் தீவனத்தை அளவு பார்த்துக் கொண்டிருந்த சகுந்தலா தன்னுடைய கண்ணாடியைச் சரி செய்து கொண்டே பதிலுக்கு மல்லுக்கு நின்றார்.

“மதுக்குட்டி இருக்கும் போது எனக்கென்னடி பயம்? உன்ர சவடாலை எல்லாம் நீ வேற எங்கயாவது வெச்சுக்க…”

“ம்க்கூம்… ரொம்ப ஆடாதே பெரியாத்தா… நாளபின்ன நான் தான் உனக்குக் கஞ்சி ஊத்தோ… ணு… ம்ம்ம்ம்…” மருமகள் முறையிலிருந்த தூரத்து உறவுக்காரியான செல்வி விடுவேனா என்று வம்பிழுத்துக் கொண்டிருக்கும் போதே அப்போது பார்த்திபன் கீழிறங்கி வர, சப்தமில்லாமல் சமைலறைக்குள் நழுவி அடைந்து கொண்டாள் செல்வி!

எலி ஏன் ஹாப் பேன்ட் போட்டுக்கொண்டு ஓடுகிறது என்று மது திரும்பிப் பார்ப்பதற்கும் பார்த்திபன் அவளைக் கடந்து புழக்கடை பக்கமாகப் போய்,

“ம்மா… போயிட்டு வரேன்…” என்று தாயின் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி விடுவிடுவென்று நடந்தான்.

தான் ஒருத்தி இருப்பதைக் கூடக் கண்டுகொள்ளவில்லையே என்று அப்போது மனம் கிடந்து அடித்துக்கொண்டது. என்னவாக இருந்தாலும் அவள் இன்னமும் சிறு பிள்ளை தானே? தாய் மாமனிடம் செல்லம் கொண்டாடுவது என்பதும் தனியான சுகம் தானே?

அவன் பின்னால் விரைந்து சென்ற அம்மாச்சியை வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது அப்போது!

பானுமதி தன்னுடைய தன்மானத்தை அடகு வைப்பதும் இல்லாமல் மதுவின் தன்மானத்தையும் அடகு வைத்துப் பிறந்த வீட்டை தூக்கிப் பிடிப்பதாகப் பட்டது அந்த வளர்ந்த குழந்தைக்கு! பார்த்திபனுடைய அலட்சியத்தை எல்லாம் தாங்கிக் கொண்டு அப்படி இங்கு வந்தேயாக வேண்டுமா என்று உள்ளிருந்து ஒரு குரல் உரிமைவாதத்தை எழுப்பும் போதெல்லாம் சகுந்தலாவின் பிம்பம் ஒன்று மட்டுமே ஆறுதல்!

அம்மாச்சிக்காக என்ற பிரதிவாதத்தினால் மட்டுமே இன்று வரை காரமடை சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது.

இந்தளவு தங்களை அலட்சியப்படுத்தும் இவனது உறவு தேவையா என்று தந்தை கேட்பதில் தவறில்லை என்று தோன்றியது.

ஆனாலும் பானுமதி பிடிவாதமாகப் பிறந்த வீட்டுச் சொந்தங்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் ரகசியம் தான் மதுவுக்கு புரிவதே இல்லை. தங்களது வசதி என்ன! அந்தஸ்து என்ன! தந்தையையும் தாயையும் கொண்டாட அத்தனை பேர் சென்னையில் இருக்கும் போது,காரமடையின் ஒரு மூலையில் இருக்கும் மாமனது திமிரை பார்த்து அவள் எத்தனையோ முறை எரிச்சலுற்று இருக்கிறாள்.

அதைத் தாயிடம் கேட்டதுமுண்டு!

“ம்மா… மாமா தான் உன்னைக் கண்டுக்கவே மாட்டேங்குதே… அப்புறமும் ஏன் வலியனா போய்ப் பேசி வாங்கிக் கட்டிக்கற?”

கண்களில் வந்து போன க்ஷண நேர வலியை மறைத்துக்கொண்டு,

“அவன் கண்டுகிட்டா என்ன கண்டுக்காம போனா என்ன மதுக்குட்டி? அவன் என்னோட தம்பி… இதெல்லாம் உனக்குக் கல்யாணமானா தான் புரியும்…”

ஒரேடியாகத் தாய் முடித்துவிட, மது அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்.

“என்னால எல்லாம் என்னோட தன்மானத்தை விட்டுக்கொடுத்துட்டு எங்கயுமே இருக்க முடியாதும்மா… அது யாரா இருந்தாலும் இப்படித்தான்… நீ ஒரு ஏமாளி… அதான் இப்படி இருக்க…”என்று பானுமதியையே குற்றம் சாட்டிய மதுவை சிறு சிரிப்போடு பார்த்து,

“ஏமாளியாவே இருந்துட்டு போறேன் மதுக்குட்டி… என்ன? நான் ஏமாந்து போறது என் தம்பிகிட்ட தானே? என்னை விடப் பன்னெண்டு வயசு சின்னவன் அவன்… அவன் கிட்ட ஏமாந்து போறது ஒன்னும் தப்பில்லடி… இதெல்லாம் உனக்குப் புரியாது… நீ ஓடு…” என்று மெல்லிய சிரிப்போடு விரட்டிய பானுமதியை முறைத்துக்கொண்டே, கையில் வைத்திருந்த காலியான இளநீரை கோபமாகத் தூக்கி எறிந்துவிட்டுத் தோப்பின் கடைக் கோடியிலிருந்த பம்ப் செட்டை நோக்கி நடந்தாள் மது!

கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் ஆழ்ந்து தன்னைக் குளிரவைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பானுமதியும் சரி, பார்த்திபனும் சரி திருந்திவிடவே போவதில்லை என்ற கோபம் அவளுக்கு!

அடுத்ததாக அம்மாச்சியிடம் கொதித்தாலும்,

“மதுக்குட்டி எப்படிப் பேசுது பாரு பானு… பேசாம என்ர தங்கத்த வக்கீலாக்கி வுட்டுடு… அவ தான் உன் அருமை தம்பிக்காரன நிக்க வெச்சுக் கேள்வி கேக்கோணும்…” என்று பெருமைப்பட்டுக் கொள்வதோடு சரி, அதற்கும் மேல் பார்த்திபனிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசி விட மாட்டார்!

அப்படிப்பட்ட பார்த்திபனையும் அம்மாச்சியையையும் அந்த இரவு நேரத்தில் வீட்டில் பார்த்தபோது கால்கள் நடுங்க துவங்கியிருந்தது.

குற்றமிழைத்த உணர்வில்!

இவ்வளவு நேரம் வரை அவள் வெளியில் சுற்றியதில்லை.

அதுவும் ஆண் நண்பனோடு….

எல்லாவற்றுக்கும் மேலாகக் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதில்லை!

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த இந்த நேரத்திலா அம்மாச்சி வர வேண்டும்?

சிகரம் வைத்தது போலப் பார்த்திபனையும் இப்போது பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான அந்த நொடியில் எங்காவது மேலிருந்து குதித்து விடலாமா என்று தோன்றியது!

அவனது ஏளனப் பார்வை ஒன்றே போதுமே… ஒருவரை கொன்றுவிட!

“வா அம்மாச்சி… எப்ப வந்த நீ?” இயல்பாகக் கேட்பது போலக் காட்டிக்கொண்டாலும் அவளது குரல் அவளையுமறியாமல் நடுங்கியது.

“எட்டு மணி இருக்கும் மதுக்குட்டி… நீ எப்படிடா கண்ணு இருக்க?”

சாதாரணம் போலக் கேட்ட சகுந்தலாவுக்குள் படபடப்பு, அவள் வீடு வந்து சேர்ந்த நேரத்தைப் பார்த்து! ஓரக்கண்ணில் மகளையும் மகனையும் பார்த்துக் கொண்டார்!

பானுமதி சாதாரணமாக இருந்தார். அவருக்கு இது எப்போதும் போல ஒன்றுதான். பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு இந்த நேரத்து வீடு திரும்பல் என்பது இயல்பான ஒன்று என்று அறிந்தவருக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை. அது அவர் பழகும் சமுதாயத்தில் ஒன்றுமே இல்லாத ஒன்று!

ஆனால் பார்த்திபனை பார்த்த சகுந்தலாவின் மனம் சில்லிட்டது!

அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தான். கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி!

கால் மேல் காலிட்டு,  கைகளைக் கட்டிக்கொண்டு நேராக மதுவை பார்த்தபடி!

அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வதைப் பார்க்கையில் அவருக்கு ஏதேதோ நினைவுகள்.

வேறு வழி இல்லாமல் மது பார்த்திபன் புறம் திரும்பி,

“வாங்க மாமா…” என்று அழைத்த போது உதறியது அவளுக்கு!

அவன் பதில் ஒன்றும் கூறவில்லை… அவனது பார்வை மட்டும் கூர்மையாக அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.

வெகு கூர்மையாக! ஆழமாக!

அவளைத் துளைத்த அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் மது!

அந்தப் பார்வை அவளை விளாரால் விளாசியது…

“ஒண்ணுமில்லை பார்த்தி… அது வந்து…” அவனது பார்வையைக் கண்டு ஆரம்பித்த பானுமதியை கையைக் காட்டி நிறுத்தினான்… பார்வை இன்னமும் மதுவின் மேல் மட்டுமே!

“மணி என்ன?” நிதானமாக அவளது கண்களைப் பார்த்து அவன் கேட்க, மது தடுமாறினாள்.

“மாமா…அது வந்து…. ” என்று திணற,

“கேட்ட கேள்விக்குப் பதில்…” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல அவன் நறுக்கென்று கேட்க, அவள் விழித்தாள் என்ன சொல்வதென்று!

“அது வந்து மாமா…”

“கேட்டா பதில் சொல்லனும் மது…” மது என்றதில் அவன் கொடுத்த அழுத்தம் பானுமதியை திணற செய்தது… தன்னாலேயே தனது சகோதரனின் இந்தக் கோபத்தைத் தாள முடியாத போது சிறிய பெண்ணான மதுவால் தாள முடியுமா என்ற பயம் மனதுக்குள் எழுந்தது.

முகத்தில் இறுக்கம் இருந்ததே தவிரக் கோபத்தை மதுவால் காண முடியவில்லை… ஆனால் அவனது குரல் அவளைத் துண்டாக்கியது.

“ட்வெல்வ் ஓ கிளாக் மாமா…” சிறிய குரலில் அவள் கூற,

“தமிழ்ல…”

“பன்னெண்டு…” தலை நிமிராமல் கூறினாள்.

“தம்பி… அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… ப்ரெண்ட்ஸ் கூட…” என்று மீண்டும் பானுமதி ஆரம்பிக்க, திரும்பி அவரைப் பார்த்து முறைத்தான்,

“நிறுத்தறியா…” குரலை உயர்த்தாமல் அவன் அழுத்தமாகக் கூற, பானுமதி பின்னடைந்தார். இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது … அடிக்கடி வாசலையும் பார்த்துக்கொண்டார்… கணவரை இன்னமும் காணவில்லையே!

அது இன்னொரு வம்பாயிற்றே!

“வெளிய ப்ரெண்ட்ஸ் கூடப் போனா ஆறு மணிக்குத் திரும்பலாம், ஏழு மணிக்குத் திரும்பலாம்…ஆனா பன்னெண்டு மணி வரைக்கும் சுத்தற அளவுக்கு என்ன ப்ரெண்ட்ஷிப் வேண்டி இருக்கு?”

அவளால் பதில் கூற முடியவில்லை… ஆனாலும் அவளது தன்மானத்தைத் தூண்டி விட்டுக்கொண்டிருந்தான் பார்த்திபன். இவனென்ன நண்பர்களைப் பற்றிக் கூறுவது என்ற கோபம் மனதுக்குள் எட்டிப்பார்த்தது.

அதே கோபத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்க்க,

“முறைக்காதே… பதிலைச் சொல்லு…”

“அது என்னுடைய இஷ்டம்… என் ப்ரெண்ட்ஸ் பத்தி பேச உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது…”

கோபமாக அவள் கூறிய பதில் அவனை அடுத்த வார்த்தையைப் பேச யோசிக்க வைத்தது. பெற்றவளுக்கே இல்லாத அக்கறை தனக்கெதற்கு என்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால் தாய் மாமனாக அவளது தவற்றை சரி செய்ய வேண்டாமா என்று அவனது மனசாட்சி அவனைக் கேள்வி கேட்க,

“ரைட்ஸ் இருக்கா இல்லையான்னு அப்புறமா ஆராய்ச்சி செய்துக்கலாம்… ஒரு ஆம்பிளையே இந்த நேரத்துக்கு வர்றதுக்கு யோசிப்பான்… உனக்கெதுக்கு இவ்வளவு தைரியம்?” பதறாமல் அவன் கேட்க, அவனது கேள்வியில் எரிச்சலானாள் மது.

“ஏன் ஆம்பிளைங்க மட்டும் தான் உசத்தி… பொண்ணுங்கன்னா மட்டமா மாமா? உங்களுக்கு ஏன் இந்த ஷாவனிஸ்ட் புத்தி?”

“இது ஷாவனிசம் கிடையாது மது. மாமாவுக்குக் கேட்க ரைட்ஸ் இருக்கு. அதுக்குப் பதிலை சொல்லிட்டு போயேன்டி. எதுக்கு இப்ப அவன் கிட்ட மல்லுக்கு நிற்கற?” இருவருக்குமிடையே பானுமதி புகுந்து சமாதானம் செய்ய முயல,

“நீ தான் தம்பி தம்பின்னு உருகற? ஒரு நாளாவது அக்கான்னு உன்னை நினைச்சு பார்த்து இருக்காப்லையா? இப்ப மட்டும் என்னம்மா மாமாவுக்கு ரைட்ஸ் இருக்கு மண்ணாங்கட்டி இருக்குன்னு சப்போர்ட் பண்ணிட்டு வர்ற? உன்னையெல்லாம் இதுக்கு மேலயும் தாங்கிட்டாலும்…” ஏளனமாகக் கூறியவளை முறைத்தவன், திரும்பி பானுமதியை பார்த்து,

“உன்னைப் பேச வேண்டான்னு சொன்னேன்…” என்று கூறியவன், மீண்டும் மதுவின் புறம் திரும்பி,

“நீ என்னைப் பற்றியோ, என் கூடப் பிறந்தவளை பற்றியோ பேச வேண்டாம், அது எங்க பிரச்சனை. நான் கேட்ட கேள்விக்குப் பதில்… இவ்வளவு நேரம் எங்க போயிருந்த?”

“எங்க போனா என்ன உங்களுக்கு? அதைக் கேக்க எங்க அம்மா இருக்காங்க… அப்பா இருக்காங்க… வந்தா உங்க வேலையை பார்த்துட்டு போங்க… என்னை அதிகாரம் செய்ற வேலை வேண்டாம்…” தீர்க்கமாகக் கூறியவளை விக்கித்துப் போய்ப் பார்த்தாள் பானுமதி. இந்தத் தைரியம் எங்கிருந்து வந்தது?

“மது… வாயை அடக்கு… என்ன பேசற நீ?” பார்த்திபனை பயத்தோடு பார்த்தவர், மதுவை அடக்க முயல,

“அம்மா இருக்காங்க… அப்பா இருக்காங்கன்னா… அவங்க கிட்ட சொல்லிட்டு போயிருந்தியா?” பார்த்திபன் விடாமல் கேட்க, அதுவரை மெளனமாக இருந்த சகுந்தலா,

“பார்த்தி… மதுக்குட்டி சின்னப் பொண்ணுடா… சொன்னா கேட்டுக்கப் போறா… காலையில் பேசிக்கலாம்… நாளைக்குப் பொண்ணு பார்க்க போகணும்ல… இப்ப டென்ஷன் ஆகாத…” என்று தன் மகனைச் சமாதானப்படுத்த,

“ம்மா… உன் பேத்திக்கு ஒன்னும் பத்து வயசில்ல, பதினேழு வயசு. அட்வைஸ் பண்றவங்களைக் கண்டா பிடிக்காத வயசு தான், ஆனால் கெட்டு போக நிறைய சான்ஸ் இருக்க வயசு. உன் பொண்ணும் ஒன்னும் கண்டுக்கறதில்லை போல இருக்கு. அவ வர்ற நேரத்தை பார்த்தியா… பன்னெண்டு மணிக்கு வந்ததும் இல்லாம கேட்டால் பதிலும் சொல்ல மாட்டேங்கறா. இவளைப் பார்த்து வளர்க்கிறதை விட உன் பொண்ணுக்கு சோசியல் சர்விஸ் தான் முக்கியமா போச்சா? உன் பொண்ணை முதலில் வீட்டில் அடங்கி உட்காரச் சொல்லு. அப்பத்தான் உன் பேத்தி அடங்குவா…”

பானுமதியையோ மதுவந்தியையோ திரும்பியும் பார்க்காமல் சகுந்தலாவிடம் அவன் கடுப்படிக்க, மதுவந்திக்கு கோபம் எல்லை மீறியது. மற்ற நேரங்களில் என்றால் இவ்வளவு தைரியம் இருக்காதோ என்னவோ? உள்ளே சென்ற டக்கீலா தைரியத்தைக் கொடுத்தது.

“இங்க பாருங்க மாமா, என்னைப் பேசறதுன்னா என்னை மட்டும் பேசுங்க, அம்மாவை பேசற வேலை வேண்டாம். பொறுப்பே இல்லாத அதுக்கு உங்களுக்குத் தகுதி கிடையாது…” கையை நீட்டி அவள் பேச,

“எனக்கு அந்தத் தகுதியே வேண்டாம்… எக்கேடோ கெட்டு போ… என்ன வந்தது?” என்று கடுப்பாக மதுவை பார்த்துக் கூறியவன், பானுமதி புறம் திரும்பி,

“அய்யனுக்கும் அம்மாளுக்கும் பொண்ணை ஒழுங்கா வளர்க்க தெரிஞ்சா பெத்துக்கணும். ஒழுங்கா வளர்க்கத் தெரியாத உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எதுக்குப் பிள்ளைங்க? பார்த்துட்டே இரு… ஒருநாள் இல்ல ஒருநாள் உன்னை மூலையில் உட்கார வெச்சு அழ வைக்கத்தான் போறா உன் பொண்ணு…” குரலை உயர்த்தாமல், வெகு அழுத்தமாக அவன் கூற,

“பாருங்க மாமா… சொல்ல சொல்ல எங்க அம்மாவையும் அப்பாவையும் ரொம்பப் பேசிட்டே இருக்கீங்க. இப்ப நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்? கொலை குத்தமா நடந்து போச்சு? நடு வீட்டில் வெச்சு இப்படி விசாரணை பண்றீங்க?” வெடுக்கென்று கேட்டவளை அவன் கூர்மையாகப் பார்த்தான். அவளது குரலிலும் நடையிலும் இருந்த தடுமாற்றம் அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

“மது… திரும்பத் திரும்பப் பேசாதே… நீ ரூமுக்கு போ… நான் என் தம்பியை சமாதானம் செய்துக்கறேன்…” சற்றுக் கோபமாக பானுமதி கூறியது வேலை செய்தது… பார்த்திபனை முறைத்தவள், அவளது அறைக்குச் செல்வதற்காக மாடிப்படியை நோக்கிப் போனாள்.

இத்தனை வருடங்கள் வருத்தத்தினால் பானுமதியின் வீட்டு வாசலைக் கூடப் பார்த்திபன் மிதித்ததில்லை. சகுந்தலா மட்டுமே மனம் தாளாமல் அவ்வப்போது வந்து போவது. வராது வந்தவனை இந்தப் பெண் இப்படியுமா பேச வேண்டும் என்று மனம் தவித்தது பானுமதிக்கு!

முதன் முறையாகத் தனது வளர்ப்பில் குறை இருக்கிறதோ என்று தோன்றியது அவருக்கு!

இரண்டு கைகளையும் சேர்த்துச் சோம்பல் முறித்துக் கொண்டவன்,

“சரி நான் கிளம்பறேன்…” என்று கூறிவிட்டு சோபாவிலிருந்து எழுந்துக்கொள்ள,

“பார்த்தி… எங்க கிளம்பிட்ட? இங்கதான் தங்க போறன்னு நினைச்சேனே…” தவிப்பாக பானுமதி கேட்க,

“வரும்போதே ஹோட்டல்ல புக் பண்ணிட்டான் பானு… என்னை இங்க விட்டுவிட்டுப் போகத்தான் வந்தான்…” சகுந்தலா பதில் கூறினார். அவரை ஏக்கமாகப் பார்த்தார் பானுமதி.

“என்னம்மா? நீயாவது சொல்லக்கூடாதா? கடல் மாதிரி வீடு இருக்கும்போது ஹோட்டல் எதுக்கம்மா?”

“அதை உன் தம்பிக்காரன் கிட்ட நீயே கேளு ஆத்தா. இன்னமும் கோபத்தையும் ரோஷத்தையும் இழுத்து பிடிச்சு வெச்சுட்டு இருக்கவன் கிட்ட என்னத்தைப் பேச?”

சகுந்தலாவிற்கே சலிப்பாகத்தான் இருந்தது. மகனது கோபமும் நியாயம் தான் என்றாலும் வீட்டு மாப்பிள்ளை மேல் இன்னும் எத்தனை நாளுக்குக் கோபத்தைக் காட்டிக்கொண்டிருப்பான் என்ற சலிப்பு!

இருவரும் பேசிக்கொண்டிருக்க, மாடிப்படியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மதுவை அவன் கூர்மையாகப் பார்த்தான்.

லேசாகத் தள்ளாடியது அவளது நடை!

“மது…” அழுத்தமாக அவன் அழைக்க, சட்டென நின்றாள்!

அவளை நோக்கி அழுத்தமான அடிகளை வைத்தவன், அவளருகில் சென்று,

“ட்ரிங்ஸ் சாப்ட்டியா?”

மற்ற இருவருக்கும் கேட்காத தொனியில் அவளது கண்களைப் பார்த்து கேட்க, அதிர்ந்து விழித்தாள் மதுவந்தி. இதுவரை தைரியமாகப் பேசியதை போல இப்போது அவளால் பேச முடியவில்லை.

பதில் பேசாமல் நிற்பவளைப் பார்த்து,

“கமான் ஆன்சர் மீ… ட்ரிங்ஸ் எடுத்தியா?” அழுத்தமாக அவன் கேட்க, அவள் திக்கித் திணறி,

“மா… மா… அது…” என்று விழிக்க,

சற்றும் யோசியாமல் பளாரென அறைந்தான்!