PuthuKavithai 7

PuthuKavithai 7

அத்தியாயம் ஏழு

பார்த்திபன் இறுக்கமாகப் பார்க்க, மது அவளையுமறியாமல் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் கல்லென நிற்க, அவனுக்கு முன் நின்ற அந்தப் பெண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் இருவருக்குமிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை.

பார்த்திபனின் கை மேலும் மேலும் அவளது கையை இறுக்கிக் கொண்டிருந்தது. வலி தாங்கவியலாமல் அவனிடமிருந்து மது கையை உருவப் பார்க்க, அவன் இன்னமும் இறுக்கிக்கொண்டான்.

அந்த இறுக்கம், அவனது கொந்தளிப்பு!

ஆனால் அந்தப் பெண்ணோ அவனை அவளது கண்களால் நிரப்பிக்கொண்டிருந்தாள் என்பது மட்டும் மதுவுக்கு நிச்சயம். ஆனால் அவள் யார்?

குழப்பமாக இருந்தது!

“எஸ்பி…” தனது காரை நோக்கி நகரப் போனவனை அழைத்தாள் அவள்.

கோபத்தோடு திரும்பியவன்,

“நான் பார்த்திபன்… பார்த்திபன் நெடுஞ்செழியன்!” என்று கூறிவிட்டு, அந்தக் கருப்பு ஆடி கியூ செவனுக்குள்ளே மதுவை தள்ளினான். அவன் பிடித்த பிடி இன்னமுமே வலித்தது.

“ஸ்ஸ்ஸ்…”

“சாரி மது…” மெல்லிய குரலில் கூறிவிட்டு, ஓட்டுநர் இருக்கைக்கு அவன் போக முயல, அந்தப் பெண்ணோ,

“பேச மாட்டியா எஸ்பி?” என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

பல்லைக்கடித்துக் கொண்டு திரும்பியவன், எதையோ சொல்ல முயல… அவளருகில் வந்த இன்னொருவன்,

“இன்னும் என்ன பண்ணிட்டிருக்க அஞ்சலி?” என்று கேட்டான், பார்த்திபனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி!

“சந்தோஷ்… இவர் பார்த்திபன்… என்னுடைய காலேஜ்மேட்…” வெளிக்காட்டிக்கொண்டிருந்த உணர்வுகளை நொடியில் துடைத்தவள், வெகு இயல்பாக அவனுக்கு அறிமுகப் படுத்தினாள் அந்த அஞ்சலி.

“எஸ்பி… இது என்னுடைய ஹஸ்பன்ட். சந்தோஷ்!” என்று இவனிடமும் திரும்பி அறிமுகப்படுத்த, அந்த சந்தோஷ் விரிந்த புன்னகையுடன் பார்த்திபனுக்கு கைக் கொடுத்தான், காரில் அமர்ந்திருந்த மதுவை லேசாகப் பார்வையிட்டபடி!

“ப்ளீஸ் டூ மீட் யூ பார்த்திபன். ஏன் நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமே…” என்று இருவரையும் சேர அழைக்க,

“நோ தாங்க்ஸ் சந்தோஷ்… நாங்க இப்பதான் முடிச்சுட்டு வந்தோம்… நீங்க உங்க லஞ்சை எஞ்சாய் பண்ணுங்க…” என்று பெயருக்குப் புன்னகைத்துக் கொண்டு பார்த்திபன் கூறினான். ஆனாலும் அஞ்சலியை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.

சந்தோஷின் முகத்தில் சிறு ஏமாற்றம் பரவியது. அவனது ஆர்வமான பார்வை யாரை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்ந்து கொண்ட பார்த்திபனுக்கு உள்ளுக்குள் கோபம் பரவியது.

அஞ்சலியை கண்ட கோபத்தைக் காட்டிலும் மதுவின் மேல் இப்போது கோபம் அதிகமானது.

அவளும் அவளது உடையும்!

சந்தோஷின் பார்வைக்கு வெறும் ஆர்வம் கூடக் காரணமாக இருக்கலாம். ஆனால் பார்த்திபனால் அதையும் அங்கீகரிக்க முடியவில்லை. இந்தப் பெண் சற்று நல்லதனமாக உடை உடுத்தி இருக்கக் கூடாதா என்ற கோபம் அவனுக்கு.

“எஸ்பி… ப்ளீஸ்… எவ்வளவு நாள் கழிச்சு பார்த்திருக்கிறோம். பேச எவ்வளவோ இருக்கு. வாயேன் ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் உன் ப்ரென்ட்காக ஸ்பேர் பண்ண மாட்டியா?”

அவளது பார்வையும் குரலும் அவனைக் கெஞ்சியது.

சந்தோஷ் முன் அவளை ரொம்பவும் முறைக்காதவன்,

“இல்லம்மா. அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு… மதுவை வீட்டில் விட்டுவிட்டு நான் போகணும். இன்னொரு நாள் பார்க்கலாமே…” அவளைப் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து சந்தோஷை பார்த்தே கூற,

“நீங்க என்ன பண்றீங்க பார்த்திபன்?” இயல்பாக அவன் கேட்டான், மதுவை மேல் பார்வையாகப் பார்த்துக்கொண்டு,

“பிசினெஸ் தான் சந்தோஷ்…” அவனது பார்வையினைப் பார்த்திபன் ரசிக்கவில்லை. அதுவும் அஞ்சலியின் முன் அவனுக்கு நிற்கவே பிடிக்கவில்லை.

முள்மேல் நிற்பது போலிருந்தது. எப்போதடா கிளம்புவோம் என்றிருந்தது.

“எப்படிப் போகுது?”

“ம்ம்ம்… இயாஹ்… ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு…” என்றவன், கிளம்ப ஆயத்தமாக,

“படிக்கும்போது பார்த்திபன் ஒரு யூஎஸ் மேனியாக். அங்க தான் செட்டிலாகனும்ன்னு முடிவா இருந்தார்… ஆனா…” என்று நிறுத்திய அஞ்சலியின் முகத்தில் கர்வம்.

அது ஏனென்று மதுவுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தக் கர்வத்தைப் பார்த்திபன் கண்டுகொண்டான்.

அவளது ஒவ்வொரு அசைவின் அர்த்தத்தையும் உணர்ந்தவனாயிற்றே! இதை உணராமல் இருப்பானா? உள்ளுக்குள் கடுகடுப்பு தோன்றினாலும் அதை அடக்கிக்கொண்ட பார்த்திபன்,

“அங்கு இருந்திருந்தால் என்னுடைய சம்பாத்தியம் லட்சங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது என்னுடைய நிறுவனம், தென்னிந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. ஐந்நூறு பேருக்கு வேலைக் கொடுக்கிறேன். இதைக் காட்டிலும் நான் யூஎஸ்ஸில் இருந்து என்ன செய்யப் போகிறேன்?” என்று இடைவெளி விட்டவன், “கேஎம் ஸ்டீல்ஸ்… கேள்விப்பட்டு இருக்கிறீர்களா சந்தோஷ்?” என்று வெகுதெளிவாக அமைதியாக ஆங்கிலத்தில் கேட்க, அதைக் கேட்ட அஞ்சலியின் முகம் அதிர்ந்து கறுத்தது.

சந்தோஷ் வியப்பாக, “ஓ… அது உங்களுடையதா?” என்றவன், “அஞ்சு… உன்னுடைய ப்ரென்ட் மிகப்பெரிய ஆள் தான்…” என்று செர்டிபிகேட் கொடுத்தான். அதோடு,

“நான் யூஎஸ்ஸில் வேலை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் பார்த்திபன். இன்னும் கொஞ்ச நாள் போனால் அங்கேயே பிசினெஸ் தொடங்கலாம் என்று இவள் சொல்லிக்கொண்டிருக்கிறாள்…” என்று அதே ஆங்கிலத்தில் தொடர்ந்தவன், “இப்ப வெக்கேஷனுக்காக வந்திருக்கோம்…” என்பதைத் தமிழில் கூறிவிட்டுச் சிரித்தான்.

“ரொம்பச் சந்தோஷம்…” என்று கைகொடுத்த பார்த்திபனிடம் மதுவை காட்டி,

“இவர்களைப் பெமினா பேஷன் ஷோல பார்த்த ஞாபகம்…” என்று தயங்கினான். மதுவின் முகம் தவுசன்ட் வாட்ஸ் பல் போல ஒளிர்ந்தது. பார்த்திபனின் முகமோ கறுத்து மீண்டது.

“எஸ் ண்ணா… யூ ஆர் ரைட்… டென் டேஸ் பிபோர்…” என்று முந்திக்கொண்டு மது கூற, பார்த்திபன் திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான். இது வேறா என்ற கோபம் அவனது முகத்தில். மதுவால் அந்தக் கோபத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை.

ஆனால் அவளுக்குத் தன்னை ஒரு நபர் அடையாளம் கண்டுகொண்ட மகிழ்ச்சி. பார்த்திபனுக்கு அவள் இதுபோல ஷோ பீசாக இருக்க விரும்புவதில் வந்த கோபம்.

சந்தோஷ் மிகவும் ஆர்வமாக அவள் புறம் திரும்பினான்.

“வெரி க்ளாட் ம்மா… ரொம்பச் சீக்கிரத்தில் மிஸ் சென்னை, மிஸ் இந்தியான்னு போயிட்டே இருங்க…” மனமுவந்து அவன் கூற, அஞ்சலி பார்த்திபனையும் மதுவையும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.

அவனுக்கும் பெண்களுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாதே என்ற எண்ண ஓட்டம் அவளது மனதுள். அதோடு இத்தனை அழகான மாடல் பெண்ணோடு பார்த்திபனா என்ற ஆச்சரியம்!

“தேங்க்ஸ் அண்ணா…” என்று நன்றியுரைத்தவள், பார்த்திபனை பெருமையாகப் பார்க்க, அவன் முறைத்தான்.

‘சும்மாவே இது தலைகீழா தொங்கற பிசாசு… இப்ப கேட்கவா வேணும்?’ மது அவளது மனதில் தன் மாமனை வறுத்தெடுத்தாள்.

“ஓகே சந்தோஷ்… நாங்க கிளம்பறோம்… ஹேவ் யுவர் லஞ்ச்…” என்று கைகொடுத்து விடைபெற்றான். பேசிக்கொண்டிருந்த போதே அவன் இப்படிச் செய்ததில் சந்தோஷின் முகம் சுருங்கியது. அவன் அதைக் காட்டிக்கொள்ளவில்லையே தவிர மது அதைத் தெளிவாகக் கண்டுகொண்டாள்.

அவனது பார்வையில் ஆர்வம் இருந்ததே தவிரக் கல்மிஷம் எதுவும் இல்லைஎன்பதை அவளது உள்ளுணர்வு அவளுக்குக் கூறியது. பெரும்பாலும் அவளது உள்ளுணர்வு பொய்ப்பதில்லை. ஆனால் முருங்கை மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்திற்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது?

அஞ்சலியிடம் அவன் எதுவுமே சொல்லிக்கொள்ளவில்லை. அவன் தவிர்க்கிறான் என்பதை உணர்ந்த அவளுக்கும் மனதுக்குள் வலித்திருக்க வேண்டும். அந்த வலியை அவளது முகம் பிரதிபலித்தது. அதையும் மது கண்டுகொண்டாள்.

பார்த்திபனின் இந்தச் செய்கையை அவளால் ஏற்க முடியவில்லை. கோபம் இருக்கலாம் ஆனால் இப்படி முகத்தில் அடித்தார் போலச் செயல்படலாமா?

அதிலும் உடன் படித்தவள் வேறு. நண்பர்கள் என்றும் கூடச் சொன்னாளே!

முரட்டுத்தனம் அவனுடன் பிறந்த ஒன்றுதான்! அவளுக்கு அவன் கையால் அடி வாங்குவதும் கூடப் புதிதில்லை தான்! ஆனால் பழகியவர்களிடம் வெளிப்படையாக இப்படி முகம் முறிப்பதா?

பார்த்திபன் எதுவுமே பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான். அவனது மனம் உலைகலனாகக் கொதித்துக் கொண்டிருந்தது.

சாலையில் வாகனத்தைப் பறக்கவிட்டான் அவன்.

மதியமாக இருந்தாலும் வாகன நெரிசல் குறையவில்லை. அந்த நிலையிலும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம், அவன் கையில் பறந்தது அந்த ஆடி கியூ செவன்.

பல வருடங்களுக்குப் பிறகு அஞ்சலியை, அதுவும் அவளது கணவனுடனும் குழந்தையுடனும் பார்த்ததில் மனம் வெதும்பிக் கொண்டிருந்தது.

“மாமா…” மெல்லிய குரலில் அழைத்தாள் மது. அவளது குரல் காதில் விழுந்தாலும், பதில் கூற விழையவில்லை அவன்.

“மா… மா…” சற்று அழுத்தமாக அழைத்தாள்.

“ம்ம்ம்…” என்று வெறும் ம்மிட்டவனை வெறித்துப் பார்த்தாள். யாருடைய உணர்வுக்குத் தான் இவன் மரியாதை தருவான்? சுற்றியுள்ளவர்களைப் பற்றிய சிந்தனையே இவனுக்கு இருக்காதா?

“அது யார் மாமா?” அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. இந்தளவு பார்த்திபனை பாதிப்பவளை பற்றித் தெரியாமல் இருந்தால் என்னாவது?

அவன் பதில் கூறவில்லை.

“உங்க எக்ஸ்ஸா?”

சஞ்சுவை இவன் விரட்டியதை எல்லாம் மது மறந்துவிட்டாள். எல்லோரும் டெரர் பீசாக பார்க்கும் பார்த்திபனின் கடந்தகால வாழ்க்கையை ஆராய்வது வெகுசுவாரசியமாகப் பட்டது அவளுக்கு. ஆனால் மதுவின் கேள்வி அவனை மேலும் கடுப்பிற்குள்ளாக்கியது.

அவளை எரிப்பது போலப் பார்த்தான்.

“டேக் இட் ஈசி மாமா… ஜஸ்ட் அவங்க எக்ஸ் தானே?” வெகு இயல்பாக அவள் கேட்க, அவனுக்கு மதுவின் தைரியம் ஒரு வகையில் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தப் பெண் இதையும் இயல்பாகப் பேசுகிறாளே என்ற வியப்பு!

அஞ்சலியால் தான் இத்தனை நாட்களாக இவன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையா? மதுவின் மூளைக்குள் எக்கச்சக்க கற்பனை குதிரைகள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது.

“நீங்க இத்தனை நாளா கல்யாணம் வேண்டான்னு சொன்னதுக்கு ரீசன் இவங்க தானா?” ஆர்வமாக அவள் கேட்க, அவளைப் பார்த்து முறைத்தான்.

“மது… நீ சின்னப் பொண்ணு… வாயை மூடிட்டு உட்கார்…”

“நான் ஒன்றும் சின்னப் பொண்ணில்ல மாமா. எனக்கும் எய்ட்டீன் ஸ்டார்ட் ஆகப் போகுது. காலேஜ் போகப் போறேன். இப்பவே இயர்ன் பண்றேன்…” ரோஷமாக அவள் கூற,

“இப்ப உனக்குச் சம்பாத்தியமே தேவையில்லாத ஒன்று. இதில் அதை குவாலிபிகேஷனா வேற சொல்றியா?”

“ஏன் மாமா? ஏன் உங்களுக்கு இந்தக் குறுகின மைன்ட்செட்? கேர்ள்ஸ் இயர்ன் பண்ணவே கூடாதென்று சொல்றீங்களா?”

“அப்படி நான் சொன்னேனா?” என்று அவளைப் பார்த்து முறைத்தவன், “சம்பாதிக்க உனக்கு இன்னும் காலம் இருக்கு… அதைவிட உன்னுடைய இந்த ப்ரோபெஷன் நம்ம குடும்பத்துக்குச் சரிப்படாத ஒன்று. அதை நீ புரிஞ்சுக்கணும்…”

“அதனால் தான் நீங்க நேரோ மைண்டட்ன்னு சொல்றேன். இதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைன்னு ஒன்றை சொல்லுங்க பார்க்கலாம்… எல்லா இடத்திலும் நம்முடைய ஆட்டிடியுட்ன்னு ஒன்று இருக்கு மாமா…”

அவன் இறுக்கமாகவே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனது வாயைக் கிளறியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து,

“என்னை விடுங்க மாமா… நாம அப்புறமா சண்டை போடலாம்… நீங்க அஞ்சலியை பத்தி சொல்லுங்க…”

பதில் பேசாமல் அவன் சாலையைப் பார்த்து ஓட்ட, “நீங்கப் பதில் சொல்லலைன்னா… என்னுடைய கற்பனை குதிரையைக் கன்னாபின்னான்னு தட்டி விட வேண்டியிருக்கும்…”

“விட்டுக்க…” என்று அவன் சுலபமாகக் கூறிவிட,

“மாமா… நீங்க ரொம்ப அரகன்ட்…” என்ற மது, அவனை முறைக்க,

“நினைச்சுக்க… ஐம் லீஸ்ட் பாதர்ட்…”

“அம்மாச்சி கிட்ட சொல்லுவேன்…” மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு அவள் கூற,

“ம்ம்ம்… கோ அஹெட்… ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்…” வாகனத்தை அதிகபட்ச வேகத்தில் செலுத்திக் கொண்டே அவன் கொடுத்த பதில் மதுவை எரிச்சலாக்கியது.

‘இந்த மாமனை எப்படித்தான் கரெக்ட் செய்து விஷயத்தைப் பிடுங்குவது?’ என்று நகத்தைக் கடித்துக் கொண்டு யோசித்தாள். வழி எதுவும் புலப்படவில்லை.

ஆனால் பார்த்திபனது மனம் கொதித்துக் கொண்டிருந்தது. பெண்கள் எவ்வளவு சுலபமாக மனதை மாற்றிக்கொள்கிறார்கள்? அதிலும் அஞ்சலி?

“உன்னை ஒரு நாள் பார்க்கலைன்னா கூட என்னால் எதுலையுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியலடா… ஐ ஆம் அடிக்டட்…” என்று தன் மேல் தலை சாய்த்துக் கொண்டு பிதற்றிய அஞ்சலி நினைவுக்கு வந்தாள்.

அவளது அந்தக் காதல் வசனங்கள், சின்னச் சின்னச் சில்மிஷங்கள், குட்டிக் குட்டி அணைப்புகள், அதையும் தாண்டி… காதலுடன் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்… அனைத்துமே ஒரு நாள் அவளது ஒரு சொல்லில் கானல் நீராக மாறிய விந்தை!

அவையெல்லாம் எல்லாம் பொய்யா? அல்லது அவளது அந்தக் காதல் பொய்யா? அவளது நோக்கமெல்லாம் அமெரிக்க வாழ்க்கையின் மீது மட்டும் தான் என்பதை உணராத முட்டாளாக அல்லவா இருந்தேன் என்று நினைத்தவன், ஸ்டியரிங் வீலை குத்தினான்.

மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அருகில் மது இருப்பதையும், அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும் மறந்து, தன்னிலையை மறந்து வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

“மாமா… கண்ட்ரோல் யுவர்செல்ப்…” சிவந்து போன அவனது முகத்தைக் கலவரமாகப் பார்த்து மது பயப்பட, இந்தச் சிறு பெண்ணுக்குப் பயம் காட்டுகிறோமே என்ற குற்ற உணர்வில்,

“ஐ ம் சாரி… ஐம் சாரி மது…” என்றவன், வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பெசன்ட் நகரை நோக்கி, பானுமதியின் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான். மதுவை வீட்டில் விட்டாக வேண்டும் அவனுக்கு.

தனிமை மிகவும் தேவை இப்போது!

வேறெந்த விஷயமும் அவனது நினைவில் இல்லை!

அவனது நினைவெல்லாம் அஞ்சலியும், அவளது துரோகமும் மட்டுமே!

அவனது அந்த நிலையைக் கண்ட மதுவுக்கு மனம் பிசைந்தது.

பார்த்திபனை எப்போதுமே கம்பீரமாகக் கண்டுதான் பழக்கம், அவளைப் பொறுத்தவரை!

அவனிடம் வழக்காடுவாளே தவிர, அவன் என்றால் அனைவருக்குமே சிம்மசொப்பனம் தான்!

அவனது வார்த்தைகளே இறுதியானவை, அவன் இருக்கும் இடத்தில்!

தன் தந்தையே, நிதானிக்கும் நபர் என்றால் அது பார்த்திபன் ஒருவனே என்பது அவளுக்கும் தெரிந்தது என்பதால், அவனது இந்தத் தோற்றத்தையும் அலைப்புறுதலையும் அவளால் ஏற்கவே முடியவில்லை.

சற்று முன் தனக்காகவும் தனது ஆண் நண்பனுக்காகவும் பார்த்திபனுடன் மல்லுக்கட்டியதெல்லாம் பின்னுக்குச் சென்றுவிட்டது.

“ஐ ம் நாட் அ லாரி டூ கேரி யுவர் சாரி…” அவனது மன்னிப்பைக் கிண்டலாக அவள் மறுதலிக்க, ஒரு நிமிடம் நிதானித்தவனின் முகத்தில் புன்னகை கீற்று!

“ம்ம்ம்… லாரி இல்லைன்னா? பொக்லைன்… ட்ரைலர்… இதெல்லாம் கூட உன்னுடைய சைஸ் தான்…” சிரிக்காமல் அவன் கூற, அவளது முகம் வியப்பில் ஆழ்ந்தது.

பார்த்திபன் கிண்டலடிக்கிறானா? என்ன ஆச்சரியம்?

“மா… மா…” என்று அவள் வாயைப் பிளக்க,

“என்ன?”

“இல்ல… இது நீங்களான்னு எனக்கே சந்தேகம் வருது…”

“ஏன்… நானும் மனுஷன் தானே? இரண்டு கை, இரண்டு கால் எல்லாம் இருக்க ஒரு ஜீவன் தானே?”

“இருக்கலாம்… ஆனா நீங்கத் தொல்பொருள் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய ஒரு பீஸ்ன்னுல்ல நினைச்சுட்டு இருந்தேன்…” என்று அவளும் அவனை வார,

“எல்லாம் நேரம் தான்… பொடுசெல்லாம் என்னைக் கிண்டலடிக்குது…”

“ஹெலோ… என்னைப் பொடுசுன்னு இன்னொரு தடவை சொன்னீங்கன்னா அவ்வளவுதான்…” சிறுபிள்ளையாக அவனை எச்சரிக்க, அஞ்சலியின் நினைவையும் மீறி அவனது முகத்தில் சிரிப்புப் படர்ந்தது.

“பொடுசை பொடுசுன்னு சொல்லாம வேறென்ன சொல்றது? ஆனா அந்தப் பொடுசு பண்ற காரியமெல்லாம் தான் பெருசா இருக்கு…” சந்தடிசாக்கில் அவளுக்குக் குட்டு வைத்தவனை முறைத்தாள்.

“நான் நார்மலா தான் மாமா இருக்கேன்… நீங்க ஓவர்ரியாக்ட் பண்றீங்க…”

“ஆஹான்!” சற்று நக்கலாக அவன் கூற, அவளுக்குத்தான் அவனது தொனி எரிச்சலை ஏற்படுத்தியது.

“பின்ன? சஞ்சு என்னுடைய பாய்ப்ரென்ட்… ஜஸ்ட் பாய்ப்ரென்ட்… அதுக்கும் குதிக்கறீங்க… ஒரு பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு வந்தா அதுக்கும் குதிக்கறீங்க… கொஞ்சமாவது நார்மலா பிஹேவ் பண்ணுங்க… யூ ஆர் வெரி மச் ஓல்ட் ஃபேஷன்ட்…” படபடவென அவள் பொரிய, காரை ஓரமாக நிறுத்தினான் பார்த்திபன்.

அது தியோசாபிகல் சொசைட்டியின் அருகிலிருந்த அமைதியான சாலையது! பகலிலேயே இருளில் மூழ்கும் அளவுக்கு மரங்கள் சூழ்ந்த அந்தச் சூழ்நிலை, அமைதியை தருவதற்குப் பதில் அமானுஷ்யமாகத் தோன்றும் அவளுக்கும் அவளது தோழிகளுக்கும்.

அந்தப் பக்கமாகச் செல்வதற்கே சற்று அச்சமாக இருக்கும். அந்த இடத்தைப் பற்றிய புரளிகள் ஆயிரம். அந்தத் தோழமைப் படைக்கு, இரவில் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அளவுக்குப் பீதியூட்டும் அவை பகலில் சுவாரசியமான கதைகள்!

“இங்க எதற்கு மாமா நிறுத்துனீங்க?” கண்களில் பயத்தோடு அவள் கேட்க,

“ஏன்? என்ன விஷயம்?” அவனும் அறிவான், அந்தப் புரளிகளை!

“உங்களுக்கு இந்த இடத்தைப் பத்தி தெரியாது…” என்று அவள் ஆரம்பிக்க, தோளைக் குலுக்கிக் கொண்டான் அவன்.

“எதையெல்லாமோ பயமே இல்லாமல் பண்ற ஆள் நீ… சும்மா பேய்க்கா பயப்படப் போற?” நறுக்கென்று அவன் கேட்க,

“மா… மா…” பல்லைக்கடித்துக் கொண்டு அவள் அழைக்க,

“நான் ஓல்ட் ஃபேஷன்ட்ன்னு நீ நினைச்சா அதுல எனக்கொண்ணும் கஷ்டம் கிடையாது. ஆனா இவ்வளவு சொல்லியும் திரும்பத் தப்பு பண்ணா, கெட்டுப் போறது என்னுடைய லைப் கிடையாது, உன்னுடைய லைப் தான்…” என்றவன், “இப்ப பொண்ணுங்களுக்குத் தைரியம் ரொம்ப அதிகம்… ரிலேஷன்ஷிப்பை ரொம்ப ஈசியா எடுத்துக்கறீங்க…” என்று குற்றம் சாட்ட,

அவள் மௌனமாகத் தலை குனிந்துகொண்டாள். தான் அவ்வாறு நினைக்கவில்லை என்றாலும் சஞ்சுவை அவ்வளவு அழுத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவளுக்குச் சற்று குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தானே தனது இயல்பு. ரொம்பவும் எதனோடும் ஒட்டியதில்லையே!

ஆனால் இப்போது தன்னுடைய விஷயம் முக்கியமா? அல்லது அஞ்சலியை பற்றித் தெரிந்து கொள்வது முக்கியமா?

“மாமா… என்னை இவ்வளவு சொல்றீங்களே… அஞ்சலியை பத்தி மட்டும் ஏன் மாமா சொல்ல முடியலை உங்களால? உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?” நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்து அவள் கேட்க, அவனது முகம் அதீத விரக்தியை வெளிப்படையாகக் காட்டியது.

ஆனால் பதில் கூறவில்லை.

“இத்தனை நாள் அம்மாச்சியும் அம்மாவும் எவ்வளவு தவிச்சு போயிருக்காங்க. அம்மாச்சி எத்தனையோ நாள் உங்களை நினைச்சு அழறதை நானே பார்த்திருக்கேன். அவங்களை எல்லாம் மறக்க வைக்கிற அளவுக்கா அஞ்சலி உங்க மனசில் இன்னும் இருக்கா? இந்த அளவு ரிலேஷன்ஷிப்பை சீரியஸா எடுக்கறதுன்னா, அந்த ரிலேஷன்ஷிப்பே தேவையில்லையே மாமா…”

விளையாட்டுப்பெண் என்று தான் நினைத்துக்கொண்டு அவளுக்கு அறிவுரை கூற, அவளோ தனக்கே அறிவுரை கூறுகிறாள். வியந்து போய் அவளைப் பார்த்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“எந்தவொரு உறவுமே நம்மை அடிமைப்படுத்தாததா இருக்கனும். நம்மை அடிமைப்படுத்தற எந்த விஷயமும் சரியில்லாத விஷயம் தான் மாமா. இந்த அஞ்சலிக்காக இத்தனை நாளா உங்க இயல்பையே தொலைச்சுட்டு, அம்மாச்சியை அழ வெச்சுட்டு, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்து என்ன மாமா சாதிச்சு இருக்கீங்க?”

இப்போதும் பெண் பார்க்கச் சம்மதித்து இருப்பதும் கூடச் சகுந்தலாவின் பிடிவாதத்திற்காகத் தான் என்பது அவளுக்குத் தெரிந்த ஒன்றென்பதால் அந்தக் கோபமும் அவளுக்குள் சேர்ந்து கொண்டது.

பதினேழு வயது பெண் தான். ஆனால் எவ்வளவு தெளிவாகக் கூறுகிறாள். இந்தத் தெளிவு தனக்கே கிடையாது என்றுதான் தோன்றியது அப்போது. இவள் சிறு பெண் தான். ஆனால் புத்திசாலி! அவள் மேல் சற்று மரியாதை தோன்றியது அவனுக்கு!

அவளை நேராக்க வேண்டும் என்று தான் அழைத்துக் கொண்டு வந்தது. ஆனால் அவளன்றோ தன்னை நேராக்கிக் கொண்டிருக்கிறாள்.

“இப்ப பாருங்க… அவ்வளவு அழகா ஒரு குழந்தையோடு, ஹஸ்பன்ட்டோட இருக்காங்க. நீங்க தான் இப்படி உங்க லைப்பை வீணாக்கிட்டு இருக்கீங்க…” என்று அவள் கூறும் போது அவனது ஆற்றாமை எல்லையைக் கடந்தது.

கடந்தகாலத்தில் அவர்களிருவரும் உயிராக இருந்த காட்சியெல்லாம் கண் முன் வந்து போனது.

அப்படி இருந்தவள், இன்று கணவனென்று இன்னொருவனை அறிமுகப்படுத்தி, குழந்தையோடு…

“ச்சே…” தன்னையும் அறியாமல் ஸ்டியரிங்கை குத்தினான்.

“உடனே இந்த லேடீசே இப்படித்தான்னு புலம்பாதீங்க மாமா…” அவனது மனதைப் படித்தவளாக மது கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்க்க, அவன் தன் தலையைக் கையால் தாங்கிக்கொண்டு அந்த ஸ்டியரிங் வீலின் மேல் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

“லேடீஸ் கொஞ்சம் பிராக்டிகலா பார்ப்பார்கள். அவ்வளவுதான்! எந்த விஷயத்தையும். நடக்க முடியாத விஷயத்துக்காக லைப்பை வேஸ்ட் பண்ண மாட்டோம். நீங்க தான் இப்படிச் சீரியஸா எடுத்துக்கறீங்க…”

வெகு நுணுக்கமாக அவள் கூறிய விஷயத்தை அவனும் உணர்ந்துதான் இருந்தான். ஆனாலும் சில நேரங்களில் மனம் தவிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லையே.

“எஸ் சீரியஸ் தான்… அது ரொம்பவே சீரியஸ் ரிலேஷஷிப் தான் மது… ஆனா ஒரே நாளில் முடிச்சுட்டு போனா…” சிறு பெண்ணிடம் கூறுகிறோமே என்ற தயக்கம் இருந்தாலும் அவனுக்கும் அப்போது ஒரு அவுட்பர்ஸ்ட் தேவைப்பட்டது.

பேச ஆரம்பிக்கிறான் என்றவுடன் அவள் மௌனமாக அவனது பேச்சை கவனித்தாள். குறுக்கிடவில்லை. அவனுக்கான இப்போதைய தேவை என்பது இடைவெளியில்லாத, குறுக்கீடு இல்லாத கவனித்தல் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டாள்.

“நான் யூஎஸ்ல செட்டிலாக முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவளுடைய உண்மையான முகத்தைப் பார்த்தேன் மது… அதுவரைக்கும் அவ அவ்வளவு… க்ளோஸ்…”

இடது கையால் தன் தலையைத் தாங்கிக்கொண்டவன்,

“முடியலை மது… யார் என்ன சொன்னாலும் என்னால் இன்னும் அஞ்சலியை மறக்க முடியலை…”

மனம் வெதும்பி அவன் கூற, மதுவின் விழிகளில் கண்ணீர் கோர்த்தது!

error: Content is protected !!