PuthuKavithai 8

PuthuKavithai 8

அத்தியாயம் எட்டு

“பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா பார்த்தி! நல்ல படிப்பு, நல்ல குடும்பம், இன்னும் என்ன வேணும் உனக்கு?”

அந்தப் பெண், அதாவது லேகா அவ்வளவு அமெரிக்கையாக இருந்தாள். அத்தனை நாசூக்கு, அதோடு வெகுநேர்த்தியும் கூட!

பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தும் கூட எதுவுமே சொல்லாமல் இறுக்கமாக வாய் திறக்காமல் அமர்ந்திருந்தவனைப் பார்த்த சகுந்தலாவிற்கு பொறுமை பறந்துபோய் விடும் போல இருந்தது. பல நேரங்களில் பார்த்திபனின் வாயைத் திறக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. மாட்டான்! அவனாகத் திறந்தாலே ஒழிய அவனிடமிருந்து எதையுமே பிடுங்க முடியாது.

அந்த அடமும் பிடிவாதமும் முரட்டுத்தனமும் பல நேரங்களில் சகுந்தலாவிற்கே சமாளிக்க முடியாத அளவுக்குப் போகும் போதுதான் அவர் இதுபோல அவனிடம் கோபப்படுவதும்.

ஆனாலும் அவன் நல்லவன். தனது அமெரிக்கக் கனவுகளை எல்லாம் தந்தையின் பொருட்டுத் தியாகம் செய்துவிட்டு, அவருக்குப் பின் அந்தக் கிராமத்தில் பெற்றவளுக்காக இருந்துகொண்டு, நஷ்டமாகப் பார்த்த வியாபாரத்தையும் நிமிர்த்தி, உறவுகளால் முதுகில் குத்துப்பட்ட போதும் அதையும் தாண்டி, குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் மனதளவில் எவ்வளவு வன்மையாக இருக்க வேண்டும்? வன்மையாக மாறினானா? மாற்றப்பட்டானா?

அவன்மேல் கோபப்படும் சமயங்களில் எல்லாம் சகுந்தலாவுக்கு இவையெல்லாம் நினைவுக்கு வந்துவிடும். அவன்மேல் கோபப்படுவதையே மறந்துவிடுவார்.

ஆனால் இப்போது மகனுக்குத் திருமணமாக வேண்டுமே!

லேகா புத்திசாலிப்பெண் என்பதைச் சகுந்தலாவும் பானுமதியும் கணக்கிட்டு விட்டனர். புத்திசாலிதான்! ஆனால் பார்த்திபனை சமாளிக்கும் அளவு அவளுக்குத் திறமை இருக்கிறதா என்று பானுமதி தன் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

“கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடுவோம் மதி. அப்புறம் அவங்க இரண்டு பேரோட பாடு! பார்த்திக்கு ஒரு கல்யாணம் ஆனா போதும் எனக்கு…”

பெருமூச்சோடு கூறியவரை சின்னச் சிரிப்போடு பார்த்தார் பானுமதி. அந்த அளவு ஓய்ந்து போயிருந்தார் சகுந்தலா!

“ஏன் மா? இருக்கறது ஒரு மகன்… அவனுக்குக் கல்யாணத்தைப் பண்றதுக்கே இப்படிச் சலிச்சுக்கற?”

“போதும் மா தாயே… பையன் வேணும் பையன் வேணும்ன்னு தவமா தவம் கிடந்து, அத்தனை கோவிலுக்கு வேண்டி, ஆயிரம் வைத்தியம் பார்த்து, உனக்கப்புறம் பன்னெண்டு வருஷம் கழிச்சுப் பெத்தேன் இவனை! அதுக்கு தான் என்னையும் சேர்த்து இவன் படாத பாடு படுத்தறானே! கொஞ்சமாவது இரக்கப்படறானா பார்?”

“கொஞ்சம் பொறுமையா இரும்மா. அவனா ஏதாவது சொல்வான்…”

“அவனா ஏதாவது சொல்வான்னு பார்த்துட்டே இருக்க, நான் இருக்கணுமே மதி? இப்பவே ஆயிரம் ஓட்டை உடைசல் உடம்புல. எனக்கும் தெம்பிருக்க வேண்டாமா?”

நொந்து போய் அவர் கூற, பானுமதி அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்.

பதில் பேசாமல் செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபோது இருவருக்குமே சற்று கடுப்பாகத்தான் இருந்தது.

சக்ரவர்த்தி அவ்வளவு சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார். அந்த மனிதருக்கு என்ன பதில் கூறுவது? அத்தனையும் கூடியிருக்கும் இடத்தை விட்டு அடமாக அமர்ந்திருக்கும் மகனைப் பார்க்கும்போது அவ்வளவு கோபமாக இருந்தது சகுந்தலாவிற்கு!

“லூசு மாதிரி பேசாத சக்கு…”

பார்த்திபனின் அருகில் அமர்ந்து கொண்டு அவளது செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்த மது, பேசியிலிருந்து கண்ணெடுக்காமல் கோபமாகக் குரலை உயர்த்தினாள். கோபமாகத் தனது அம்மாச்சியைத் திட்டும் போதும் சரி, செல்லம் கொஞ்சும் போதும் சரி, சகுந்தலா அவளுக்கு சக்குவாகி விடுவார்.

“ஒய்… என்னடி சந்தடி சாக்குல அம்மாச்சியை லூசுன்னு சொல்ற?” பானுமதி வரிந்துகட்டிக்கொண்டு மகளிடம் சண்டைக்கு வர,

“ம்ம்ம்… பின்ன? மாமாவைத் திட்றதுன்னா நல்லா திட்டச் சொல்லு. அதுக்கு எதுக்கு நான் இருப்பேனா கிருப்பேனான்னு சொல்றாங்க?” சகுந்தலாவை யாராவது ஏதாவது சொல்லி விட்டாலே சண்டைக்குச் செல்பவள், இப்போது அவரே வாயை விட்டால் சும்மா விட்டு விடுவாளா?

மகன்மேல் கொண்ட கோபத்தைச் சற்று நேரம் தள்ளி வைத்தவர், “மதுக்குட்டி… நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?” தனக்காகப் பரிந்து கொண்டு கோபப்பட்ட பேத்தியிடம் செல்லமாகக் கேட்க,

“அது வேகுதோ இல்லையோ! இன்னொரு தடவை இப்படிப் பேசாதே அம்மாச்சி…” என்று அவள் கோபமாகக் கூற, அவர் சிரித்துக் கொண்டார்.

“பேத்தியைப் பக்கத்தில் வெச்சுட்டு ஏதாவது பேச முடியுமா செல்லக்குட்டி…”

“இந்தக் கொஞ்சலுக்கொன்னும் குறைச்சல் இல்ல கிழவி…” கிண்டலாக அவள் கூற, இருவரின் இந்த சம்பாஷனை பார்த்திபனின் முகத்தில் லேசான புன்னகையை வரவைத்தது.

ஒரு நேரம் முதிர்ச்சியாகப் பேசுபவள், அடுத்த நிமிடமே தனது விளையாட்டுத்தனத்தைக் காட்டுவது அவனைப் பொறுத்தவரை ஆச்சரியமாக இருந்தது.

அஞ்சலியை அவள் பார்த்த போதும் அப்படித்தானே! அத்தனை முதிர்ச்சியாக அறிவுரை கூறிவிட்டு, வரும் வழியில் ஒரு குல்பிக்கு அத்தனை அடம் பிடித்தாளே! அதுவரை அவள் மேல் இருந்தக் கோபமெல்லாம் கற்பூரமாகக் கரைந்துப் போய்விட்டது அவனுக்கு.

என்னதான் இருந்தாலும் மதுவின் மேல் கோபத்தை இழுத்து வைத்து பிடிக்க முடியவில்லை.

இவள் சிறு பெண்ணா? இல்லை வளர்ந்த பெண்ணா?

வினோதகனின் மேல் இருந்த கோபத்தில் பானுமதியையும் மதுவையும் கூட ஒதுக்கி வைத்தது தவறோ என்று முதன்முதலாக தோன்றியது அவனுக்கு!

பேத்தியிடமிருந்து மகனை நோக்கித் தனது பார்வையைத் திருப்பினார் சகுந்தலா.

“இப்பவே முப்பதாகப் போகுது உனக்கு. இன்னும் எத்தனை நாள் இப்படியே ஓட்டலான்னு நினைக்கற பார்த்தி?”

கைகளைக் கட்டிக்கொண்டு அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். திருமணம் என்ற வார்த்தையே அவனுக்கு ஒவ்வாமையைக் கொடுப்பது போலிருந்தது.

அவனைப் பொறுத்தவரை காதல் என்பது பெரு வலி. திருமணமென்பது ஏமாற்று வேலை. சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்தே தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு அமைப்பு. அவ்வளவுதான்!

அவ்வளவு சுலபத்தில் யாரையுமே நம்பாத அவனது இயல்பு அமைந்ததும் அவனது தோல்விகளால் தான்!

சகுந்தலா பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் எதையும் பேசாமல் எழுந்துகொள்ள, பானுமதிக்கு கொதிப்பாக இருந்தது.

‘இவன் யாருக்குத்தான் அடங்குவான்?’

மெளனமாக தனது கணவரைப் பார்த்தார் பானுமதி. இவராவது பேசினால் தேவலாம் என்றிருந்தது. ஆனால் பேசியதில்லை. அவன் கேட்டதும் இல்லை. அவர் பேசி பார்த்திபன் கேட்டதெல்லாம் ஒரு எட்டு வருடங்களுக்கு முன் தான்.

அப்போதெல்லாம் வினோதகனின் பேச்சை மீறியதில்லை அவன். அதே போலத் தனது மைத்துனனின் மேல் அவ்வளவு பாசம் அவருக்கும்! அவரது திருமணத்தின்போது பத்து வயது சிறுவனாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தவனை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

அதிலும் குறும்புக்கார கண்ணன் அவன்! அறுந்த வால்! ஒரே நொடியில் அத்தனை சில்மிஷங்களையும் செய்துவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்ளும் அவனை உச்சிமோர்ந்து அணைத்துக் கொள்வார்.

அப்படிப்பட்ட இருவருக்குமிடையே ஒரு நாள் பிளவு வந்தது. அன்று முதல் விலகியவன் தான். இப்போது வரை சரியான பேச்சுவார்த்தை இல்லை.

வினோதகன் ஒத்துவந்தால் பார்த்திபன் ஒத்துப்போகமாட்டான். பார்த்திபன் சற்று கீழிறங்கி வந்தால் வினோதகன் தழைந்து போகமாட்டார். இருவருக்கும் அப்படியொரு ஒற்றுமை. அத்தனை பொருத்தம்!

இந்த வாக்குவாதங்கள் எல்லாம் பானுமதியின் வீட்டில் தான் நடந்துகொண்டிருந்தது.

பெண் பார்த்து விட்டு நேராக பெசன்ட் நகர் வீட்டிற்கு வந்தவர்கள் தான், பார்த்திபனுடன் போராடிக்கொண்டிருந்தனர். பார்த்திபனின் அருகில் அமர்ந்துகொண்டு செல்பேசியை நோண்டியவாறே ஓரக்கண்ணால் அனைத்தையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தாள் மது.

அவளைப் பொறுத்தவரை சகுந்தலாவும் பானுமதியும் கூறுவது சரியென்றாலும் பார்த்திபனின் மனதையும் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. அதிலும் அன்றுதான் அஞ்சலியை சந்தித்த கொந்தளிப்பு வேறு! அதே மனநிலையில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள முடியுமா? அப்படி முடிந்தாலும் மனமுவந்து வாழ முடியுமா?

வினோதகன் நடப்பவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தாலும் எதுவும் பேசவில்லை.

ஈகோ!

அந்த ஈகோ அவரைப் பேசவிடவில்லை.

ஆனால் அவராலேயே இப்போது பார்த்திபன் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஏன் மாப்ள? அத்தை சொல்றதை கேட்டாத்தான் என்ன?”

நிமிர்ந்து அவரைப் பார்த்தான். பதில் கூறியாக வேண்டுமா என்று கேட்டது அந்தப் பார்வை!

“மாப்பிள்ளை கேட்கறார் பார் பார்த்தி. அவருக்காவது பதில் பேசு…” சகுந்தலா கடுப்பாகக் கூறினார்.

“அம்மாச்சி… இன்னைக்கே மாமாவைப் பேச வெச்சுடனுமா? அவர் யோசிக்கவாவது டைம் கொடு அம்மாச்சி… விடாம ரவுன்ட் கட்டினா பாவம்ல…”

மூன்று பேரும் சுற்றிக்கொண்டு அவனை ரவுன்ட் கட்டுவதைப் பொறுக்கமுடியாமல், அஞ்சலியை மனதில் வைத்துக்கொண்டு மது பார்த்திபனுக்காக குரல் கொடுக்க, மூவருமே மதுவை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

பார்த்திபன் முகத்தில் மெல்லிய புன்னகை!

முந்தைய தினம் அடி வாங்கி, பார்த்திபனிடம் மல்லுக்கு நின்றவளா இவள் என்ற வியப்பு மற்ற மூவருக்கும்!

“மதுக்குட்டி…” ஆச்சரிய பார்வையோடு பானுமதி அழைக்க,

“எஸ் மாதாஜி…” அலட்டாமல் பதில் கொடுத்தாள்.

“நீயா பார்த்திக்கு சப்போர்ட் பண்ற? நேத்து கூட அடி வாங்கிட்டு அவ்வளவு ரோஷமா பினாத்திட்டு இருந்தியே மதுக்குட்டி?” சிரிப்பு மாறாமல் பானுமதி கேட்க,

“மாதாஜி…” என்று பல்லைக் கடித்தவள், “ஒரு தடவை அடி வாங்கினா அதை ஆயிரம் தடவை சொல்லிக்காட்டனுமா?” என்று கேட்க,

“இல்ல மதுக்குட்டி… எல்லாம் ஒரு பொதுச் சேவை தான்…” என்று இழுக்க,

“போதும் போதும். உன்னுடைய பொதுச் சேவையை நீ வெளியே மட்டும் பண்ணு மாதாஜி…” கையெடுத்துக் கும்பிட்டாள் மது. விட்டால் பிபிஸியில் ஒலிபரப்பி விடுவார் போல, பொது சேவையென்று கூறி!

“ஏன் மதுக்குட்டி? பார்த்தி பக்கமே போக மாட்ட. இப்ப என்னடான்னா ஒட்டிக்கிட்டே இருக்கியே? என்ன ரகசியம்?” இந்தப் பக்கம் சகுந்தலா சிரித்துக்கொண்டே கேட்க,

“மாம்ஸ கொஞ்சம் ஐஸ் வைக்கத்தான் சக்கு. கண்டுக்காதே…” என்று கண்ணடித்தாள். அதுவரை அங்கிருந்த இறுக்கமான மனநிலை மாறி அனைவரின் முகத்திலும் சின்னச் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

“ஐஸ் வெச்சு என்ன பண்ண போற மதுக்குட்டி?” சகுந்தலா கிண்டலாகக் கேட்க,

“வேறென்ன? நான் மாம்ஸுக்கு சப்போர்ட் பண்ணா, எனக்கு அவர் சப்போர்ட் பண்றதா சொல்லியிருக்கார்!” என்று சிரித்துக்கொண்டே அவனோடு இன்னமும் ஒட்டிக்கொண்டு கூற,

“அடப்பாவி பயபுள்ளைகளா! இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?” பானுமதி வாய்மேல் கை வைத்துக்கொண்டு கேட்க, அவன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்து,

“ஒய் பொடுசு… நான் எப்ப அப்படிச் சொன்னேன்?” இறுக்கம் தளர்ந்து அவன் கேட்க,

“மாமா, இப்படி பல்டி அடிக்காதீங்க. நீங்கத் தானே சொன்னீங்க! அதைத்தான் நான் நம்பிட்டு இருக்கேன் மாமா!என் வாழ்க்கைல விளையாடாதீங்க மாமா!” சோகமாகக் கூறுவது போல நடித்தாலும், அவளது குரலிலிருந்த கிண்டலை எல்லோரும் புரிந்து கொள்ள, அனைவரது முகத்திலும் சிரிப்புப் படர்ந்தது.

அவனிருந்தால் இறுக்கமாகவே இருக்கும் வினோதகனும் கூட அவர்களது சிரிப்பில் கலந்து கொண்டார்.

“பிச்சு போடுவேன் பொடுசு! பண்றதெல்லாம் விவகாரம். இதில் என்னையும் கூட்டு சேர்க்க பார்க்கறியா?”

“உங்களைப் போய்க் கூட்டு சேர்க்கனுமா? ஓ மை கடவுளே! அதுக்கு நான் பேசாம ஆப்ப அடிச்சு வெச்சுட்டு, அதுமேல நானே ஏறி உக்கார்ந்துக்கலாம்!” என்பதை பாவனையோடு அவள் செய்து காட்ட, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தவன்,

“மதிக்கா! உன் பொண்ணுக்கு என்ன இருக்கோ இல்லையோ? இந்தக் கொழுப்பு ஓவர் டோஸ்ல இருக்கு!” என்று பானுமதியை பார்த்துக் கூறிய பார்த்திபனை ஆச்சரியமாகப் பார்த்தனர் மற்ற மூவரும்.

எத்தனை வருடங்கள் கழித்துத் தனது தமக்கையை உரிமையோடு அக்கா என்றழைக்கிறான், அதுவும் சிரிப்போடு. இவ்வளவு நேரம் அங்கிருந்ததே அதிசயம் என்றால், பானுமதியை அக்காவென்பது இன்னொரு உலக அதிசயமாகப் பட்டது மூவருக்குமே.

அவனது அந்த சிரித்த முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள் மது.

‘இந்த அழகான முகத்தை காட்டாமல் ஏன் இவன் இஞ்சி தின்றார் போன்ற முகத்தை லேகாவுக்கு காட்டிவிட்டு வந்தான்? நிறம் தான் சற்று குறைவே தவிர எத்தனை கம்பீரம்! ராம்ப் வாக் மாடல் எல்லாம் அருகில் நிற்கக் கூட முடியாது…’ பெருமையாக மனதுக்குள் எண்ணிக்கொண்டவள், அவனை வம்பிழுப்பதில் குறியாக இருந்தாள்.

“ஆமா! நீங்க சமைச்சு போட்டு, நாங்க உட்கார்ந்து சாப்பிடறோம் பாருங்க. அந்தக் கொழுப்புதான் மாம்ஸ்…” என்று சிரிக்காமல் கூற, ‘இவளுக்கு ஆனாலும் தைரியம் தான்’ என்று பானுமதி நினைக்க,

“ஓஓஓ! உனக்கு அதெல்லாம் வேற பண்ணனுமா?” கேலியாக அவன் கேட்டான்.

“அதுவும் பண்ணலாம்… இல்லைன்னா ஷாப்பிங் கூட்டிட்டு போய் ட்ரெஸ் வாங்கித் தரலாம்… இல்லைன்னா டொமினோஸ் கூட்டிட்டுப் போய்ப் பிஸா வாங்கித்தரலாம், இல்லைன்னா கேஎப்சி கூட்டிட்டுப் போய்ச் சிக்கன் வாங்கித் தரலாம்…இல்லைன்னா அட்லீஸ்ட் சாக்லேட்ஸாவது வாங்கித் தரலாம்… ஒரு மாமாவா லட்சணமா இதில் ஏதாவது ஒன்னையாவது பண்ணீங்களா? அட்லீஸ்ட் ஒரு பானி பூரி?” இதுதான் சாக்கென்று அவள் பொரிந்து வைக்க,

‘அட அல்பமே… போயும் போயும் ஒரு பானிப்பூரிக்கா இவ்வளவு பெரிய வசனம் பேசின?’ என்ற பார்வையோடு பார்த்திபன் சிரித்துக்கொண்டே,

“மதிக்கா! உன் பொண்ணு தின்னே அழிச்சுடுவா போல இருக்கே!” என்று கிண்டலாகக் கூற,

“கண்ணு போடாதடா! குழந்தை கேக்கறால்ல… கூட்டிட்டு தான் போயேன்…” சகுந்தலா பேத்திக்காகப் பரிந்து கொண்டு வந்தார்.

“ம்ம்ம்… குழந்தையா? யாரு? இதுவா? ஷப்பா… இதோட வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏத்தினா தெரியும்!” என்று அவளைப் பார்த்தபடியே கூற, மதுவுக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது தான் உண்மை.

அவன் குறிப்பிடுவதைப் பற்றி அவளும் அறிவாளே!

மதியம், மதுவை வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவளது உடையைப் பற்றிப் பானுமதியிடம் கொதித்துக் கொட்டினாலும், சஞ்சய்யை பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை. நீயாக அவனைத் தவிர்த்துவிடு என்பதுதானே அவனது கட்டளையும்!

ஆம்… கட்டளையே தான்!

ஆனால் அதைச் சற்றும் மது கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! எதை கண்டுக்கொண்டாள்? இதை மட்டும் கேட்டுக்கொள்ள? நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்! எனக்கு ‘காது’ கேட் ‘காது’ என்பது அவளது கொள்கை!

அதைப் பற்றி அறியாத பார்த்திபனுக்கு, அஞ்சலியின் நினைவுகள் ஒரு புறம் அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், மதுவை பற்றிய அக்கறை ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருந்தது.

இருவருக்குள்ளும் இருந்த பிணக்குச் சரியாகியிருந்தது, அஞ்சலியை பற்றி அவன் மதுவிடம் கூறிய பிறகு!

மது இவ்வளவு தைரியமாக அவனை வம்பிழுத்துக்கொண்டிருப்பதும் அந்தச் சலுகையினால் தான்!

“அடடா! எப்ப பார்த்தாலும் அஞ்சு லிட்டர் கஞ்சியை முழுங்குன மாதிரி வெரப்பாவே இருக்கறது! இல்லைன்னா நீங்க ஒருத்தர் தான் உத்தம புத்திரனாட்டம் ஒரு சீனை போடறது!”

“யாரு? நான் சீன் போடுறேன்?” வம்படியாக கேட்டவனைப் பார்த்து உதட்டை சுளித்தவள்,

“இல்லையா பின்ன? இவ்வளவு நேரம் அம்மாச்சி இவ்வளவு சொல்றாங்கல்ல… அதுக்கு ஏதாவது பதிலைச் சொன்னீங்களா? உங்களுக்காகத்தானே இவ்வளவு பேசறாங்க… அதைக் கண்டுக்காம வாயைத் திறந்தா முத்து விழுந்துடும்ங்கற மாதிரி உக்கார்ந்து இருந்தா வேறென்ன சொல்றதாம்?”

அவன் மதுவை விரட்டியது போய், இப்போது மது அவனை விரட்ட, சகுந்தலா சிரித்துக் கொண்டார்.

அவனைச் சரியான இடத்தில் பிடித்த மதுவின் அறிவை எண்ணி அவரால் வியக்காமலிருக்க முடியவில்லை. அதோடு அவனைப் பேசவும் வைத்துவிட்டாளே!

‘சின்னக்குட்டி… சின்னக்குட்டி தான்…’ என்று மனதுக்குள் மெச்சியவர், ‘இப்ப பதில் சொல்லுடா மகனே…’ என்று சிரிப்போடு மகனைப் பார்த்தார்.

“போதும் பொடுசு! ரொம்ப ஜிங்ஜாங் போடாத!” புன்னகை மாறாமல் அவன் கேலியாகக் கூற,

“பதில் சொல்ல முடியாததுக்கு எல்லாம் மிரட்ட வேண்டியதே ஒவ்வொருத்தருக்குப் பொழப்பா போச்சு…” சலித்துக் கொண்டாள் அவள்.

“ஏன் பார்த்தி? அவ கேக்கறதுல என்ன தப்பு? கட் அன்ட் ரைட்டா நான் கேட்கறேன்… இன்னும் எவ்வளவு நாள் கல்யாணத்தைத் தள்ளிப் போடுவ? அந்தப் பொண்ணுக்கு என்ன?”

அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வினோதகன் கேட்க, அவனால் சட்டென்று அவரோடு ஒத்துப் போய்ப் பேச முடியவில்லை. அவனது புன்னகை துணி கொண்டு துடைத்தது போலானது!

முந்தைய தினம், மதுவுக்காக பார்த்திபனை அவர் கடிந்து கொண்டது வேறு அவனைத் தள்ளி நிறுத்திக்கொண்டே இருந்தது.

அதுவும் இல்லாமல் என்னதான் அவர் உறவினராகவே இருந்தாலும் பார்த்திபனின் மனதில் இன்னும் பழி உணர்ச்சி போகவில்லை. அடிபட்ட புலியாகத் தான் மனதளவில் இன்றும் இருக்கிறான் என்பதை வினோதகனும் உணரவில்லை. எப்போது வேண்டுமானாலும் அந்தப் பழி உணர்ச்சி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் தன் வேலையைக் காட்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

எத்தனை வெற்றிகள் வந்தாலும் அவனால் துரோகங்களை மறக்கவே முடிவதில்லை.

அது அஞ்சலியாகட்டும்… வினோதகனாகட்டும் இருவருமே அவனைப் பொறுத்தமட்டில், அவனது அகராதியில் ஒன்றே!

துரோகிகள்!

துரோகிகளை எந்நாளும் அவன் மன்னிக்கவே மாட்டான்.

அனைத்தையும் மறந்து விட்டான் என்று தான் அவர் நினைத்தார். பெற்றவருக்காக மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தவன், தமக்கைக்காக மதுவை கண்டித்தான். அன்று அவளது பேச்சும் குறும்பும் அவனையும் அந்த வீட்டில் இழுத்து அமர்த்தியிருந்தது.

“சொல்லு பார்த்தி…”

“ம்ம்ம்… என்ன சொல்றது?” என்று அவன் பதில் கேள்வி கேட்க,

“ஏன் அந்தப் பொண்ணை வேண்டாம்னு சொல்ற?” தீர்க்கமாக அவர் கேட்க,

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?”

“என்ன பார்த்தி?” என்று குழப்பமாகக் கேட்க, குரலைத் தழைத்துக் கொண்டவன், எங்கோ பார்த்துக் கொண்டு,

“இன்னைக்கு அஞ்சலியை பார்த்தேன்! அவளோட குழந்தையோட புருஷனோட வந்திருந்தா!”

வினோதகனின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

error: Content is protected !!