Rainbow kanavugal-27

27

அந்த பெரிய பங்களாவின் விஸ்தாரமான வாயிலுக்குள் நுழையும் போதே இந்துவின் மனம் படபடத்தது. வெளியே நின்றிருந்த காவலாளி அவளை பற்றிய விவரங்களை விசாரித்தபின் உள்ளே அனுப்பி வைத்தார்.

தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த நடைபாதையில் யோசனையோடு நடந்துவந்தவளின் மனம் ஒரு நிலைபாட்டில் இல்லை.

தன் வீட்டில் யாரிடமும் இங்கே வருவது பற்றி அவள்  கூறவில்லை. அவள் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு போயிருப்பதாகத்தான் தெரியும்.

வீணாவை தள்ளிவிட்ட பிரச்சனைக்கு பிறகுதான் அவள் ஒரு பெரிய மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தது. அது கூட அவளாக செய்யவில்லை.

சரவணன்தான் அவள் வேலைக்கு போக முயற்சி எடுத்தது. வீணா இந்து வீட்டிலிருக்க கூடாது என்று சொன்னதால் அவள் தன் அம்மாவுடன் ஊருக்கு கிளம்பி போக இருந்தாள். ஆனால் சரவணன் விடாபிடியாக நின்று அவளை போகவிடாமல் தடுத்துவிட்டான்.

அந்த கோபமும் ஏமாற்றமும் அவள் மனதில் கனன்று கொண்டிருக்க, முதல் இரவுக்கு பிறகு அன்றுதான் அவனிடம் மீண்டும் அவள் அதிகபட்சமாக பேசியது. அதுவும் சீற்றமாக!

அவன் தன்னை அனுப்பவில்லை என்ற கோபத்தோடே அவன் செய்கைகளை அணுகினாலே ஒழிய அதன் பின்னிருக்கும் அவனின் நல்லெண்ணத்தை அவள் உணரவே இல்லை. அவன் செய்வதன் காரணங்களை கேட்டு தெரிந்து கொள்ள கூட அவளுக்கு பொறுமை இல்லை.

‘நான் எதுக்கு இங்க இருக்கணும்… எனக்கு இங்க என்ன இருக்கு… என்னை எதுக்கு எங்க அம்மா கூட போகவிடாம தடுத்தீங்க’ என்றவள் அவனை பார்த்து கடுகடுத்து பேச, அவன் எப்படி தன் எண்ணத்தை அவளிடம் புரியவைப்பான்.

அதற்கு அவள் கொஞ்சமாவது அவன் மனதின் எண்ணத்தை புரிந்து கொள்ள முயல வேண்டுமே. ஆனால் அவளோ, “உங்க கிட்ட போய் இதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன் பாருங்க” தலையிலடித்து கொண்டு அவனின் பதிலுக்காக காத்திராமல் அமைதியாக தன்னிடத்தில் சென்று படுத்து கொண்டாள்.

தன் கேள்விகளுக்கு எல்லாம் அவனால் பதில் சொல்ல முடியுமா என்ற இளக்காரம்தான்!

ஆனால் அவன் உதடுகள்தான் ஊமையே தவிர அவன் உள்ளமும் உணர்வுகளும் இல்லையே. இதை புரிந்து கொள்ளாத இந்து அவன் மனதின் எண்ணங்களை அறிய ஒரு சிறு முயற்சியை கூட அப்போதுவரை செய்யவில்லை.

ஆனால் சரவணன் எந்த நிலையிலும் அவள் மீது வெறுப்பையோ கோபத்தையோ வளர்த்து கொள்ளவில்லை. அதுவும் எல்லோரிடமும் அன்பாக இருந்தே பழக்கப்பட்டவன் தன் மனைவியிடம் போய் கோபம் கொள்வானா? அது அவனுக்கு பழக்கமே இல்லாத ஒன்று!

தன் நிதானத்தை எந்த நிலையிலும் இழக்காமல் அவள் மனநிலையில் நின்று அவள் பிரச்சனைக்கான தீர்வை யோசித்தான். அப்போதுதான் அவளை வேலைக்கு அனுப்பினால் என்ன என்ற எண்ணம் உதித்தது அவனுக்கு!

வீட்டிலேயே அவள் அடைந்து கிடப்பதால்தான் அவள் மனம் இப்படி எதிர்மறையாக சிந்திக்கிறது. ஒரு வேளை வெளிஉலகத்தை பார்த்தால் அவள் சிந்தனைகள் மாறும். அதுவே அவள் மனமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எண்ணினான்.

தன் யோசனையை எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தவன் பாலாவை அவளிடம் அது குறித்து பேச வைத்தான். இதில் தன் தலையீடு குறித்து அவளிடம் சொல்ல வேண்டாமென அறிவுறுத்தி இருந்தான்.

அதன் விளைவாக சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையில் செவியலராக பணியில் சேர்ந்தாள். சரவணனின் எண்ணம் போலவே அந்த புது வேலையும் அதில் கிடைத்த அனுபவங்களும் அவளுக்குள் நிறைய நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியிருந்தது.

அந்த புதுவிதமான சூழ்நிலை நிறைய புது மனிதர்களின் பழக்கமென்று மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வாழ்க்கையில் சந்தோஷத்தை உணர்ந்தாள். அந்த சந்தோஷம் அவள் வீட்டில் பிரதிபலித்ததோ இல்லையோ? அவள் வேலையில் நன்றாகவே பிரதிபலித்தது.

இந்துமதி நோயாளிகளிடம் அன்பாக பழகினாள். முகம் சுளிக்காமல் தன் வேலையை ஒரு சேவையாக கருதி செய்தாள். அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தை விட அதன் மூலம் அவளுக்கு கிடைத்த மனநிறைவு அதிகம். இரவு பகல் என்று அவள் வேலை நேரங்கள் மாறி மாறி வந்த போதுதான் துர்காவின் மனதிற்கு நெருடலாக இருந்தது.

இருப்பினும் அவள் சுதந்திரத்தில் தலையிடுமளவுக்கு மோசமான மாமியார் ரகம் இல்லை அவர். அவள் படித்த படிப்பிற்கான வேலையை செய்கிறாள் என்று மருமகளை பற்றி பெருமையாகவே அக்கம் பக்கத்தில் சொல்லி கொள்வார். அதேநேரம் இந்துவின் அம்மா செல்விக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.

“ஏன் துர்கா அவளை வேலைக்கு அனுப்புன?” என்று கேட்டுவிட, “ஐயோ! மதனி அதெல்லாம் என் முடிவு இல்ல… அவங்க புருஷன் பொண்டாட்டி சேர்ந்து எடுத்த முடிவு” என்று சொல்லிவிட்டார். சரவணன் அப்படிதான் தன் அம்மாவிடம் சொல்லி இருந்தான்.

ஆனால் செல்வியின் மனம் கேட்கவில்லை.

மகளிடம் இது பற்றி கேட்டார்.

“இப்போ எதுக்கு உனக்கு வேலைக்கு எல்லாம் போகனும்” என்றவர் கேட்க,

“நான் படிச்ச படிப்புக்கான வேலைக்கு போறேன்… அதுல என்ன தப்பு” என்றாள்.

“நீ படிக்கிறேன் படிக்கிறேன்னு என்ன செஞ்சன்னு எனக்கு தெரியாது” என்று செல்வி உரைக்க அவளுக்கு சுருக்கென்று தைத்தது.

அந்த விஷயத்தை இன்னும் எத்தனை வருடத்திற்கு சொல்லி காட்டி கொண்டே இருக்க போகிறார் என்று மனம் குமுறியவள் சீற்றமாக,

“போதும் நிறுத்த மா… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்… என் உறவை அத்து விட்டுதானே என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணி குடுத்த… அப்புறம் என்ன உரிமையில இதெல்லாம் நீ என்கிட்ட கேட்டுட்டு இருக்க” என்றவள் மேலே செல்வியை பேசவிடாமல்,

“இனிமே இது என் வாழ்க்கை… நான் என்ன பண்ணணும் பண்ண கூடாதுன்னு நான்தான் முடிவெடுப்பேன்… அந்த ஊர் பக்கம் கூட இனிமே நான் வர மாட்டேன்… பொண்ணுங்கிற பாசம் இருந்தா என்னை இங்க வந்து பார்த்துட்டு போ… அதுவும் இல்லையா… வராதே!” என்று படபடவென பேசி அவரை பேசவே விடாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

மகள் இப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாலே என்று மனம் வாடினாலும் அவள் பேச்சிலும் குரலிலும் தெரிந்த தெளிவும் அழுத்தமும் அவளின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அகமகிழிந்தார்..

ஆனால் அந்த தெளிவிற்கு காரணம் அவள் வேலையல்லவா?. அதுவும் தான் சுயமாக நிற்கிறோம் என்று மனதில் உண்டாகியிருந்த நம்பிக்கைதான் அவளை அப்படி பேச வைத்தது.

மற்றபடி அவள் அந்த சூழ்நிலையிலும் சரவணனுடனான தன் உறவை பற்றி யோசிக்க கூட இல்லை. அதுவும் வீட்டில் இருந்தவரையாவது அவனை கண்டும் காணாமல் இருந்தாள். வேலைக்கு போன பிறகு அவனை காண்பதே இல்லை.

சரவணன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட அவளுக்கு அதிகமான ஒட்டுதல் இல்லை. மாமியாரிடம் வீட்டுவேலை சம்பந்தமாக பேசுபவள் பாலாவிடம் மட்டும் கொஞ்சம் நன்றாக பேசுவாள். ஆனால் சரவணனிடம் அது கூட கிடையாது.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்து போக, அவள் குடும்ப வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாவிடிலும் அவள் வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

அதுவும் அவள் நோயாளிகளிடம் பழுகும் விதத்திலும் அக்கறையாகவும் கவனமாகவும் வேலை செய்த விதத்திலும் அவளுக்கு அங்கே நல்ல பெயரும் கூடவே நிறைய நண்பர்களும் கிட்டினர்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக கலந்து உரையாடும் போதும் தங்கள் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசுவார்கள். ஆனால் இந்துவிற்கு அவற்றை பற்றியெல்லாம் பேச கூட விருப்பமில்லை.

திருமணமாகிவிட்டது என்று சொன்னால்தானே அது பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ள நேரிடும் ஒரேடியாக தனக்கு திருமணமே ஆகவில்லை என்று சொல்லிவிட்டிருந்தாள்.

பொய்தான் அனைத்து குற்றங்களுக்கும் ஆணிவேர்! அந்த காரிகை அதை உணர்ந்துதான் செய்தாலோ என்னவோ? அந்த பொய் வரும் காலத்தில் அவளை பெரிய இக்கட்டில் சிக்க வைக்க காத்திருந்தது.

இப்படி நாட்கள் தம் போக்கில் நகர்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் உடல் நலம் குன்றி பாஸ்கரன் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். அந்த மருத்துவரின் தலைமை மருத்துவர் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பரும் கூட. ரேவதியின் கோமாவிற்கு சிகிச்சை அளித்து கொண்டிருப்பதும் அவர்தான்.

அந்த சமயத்தில்தான் பாஸ்கரனுக்கு இந்துவின் அறிமுகம் கிடைத்தது. செவிலியர் பணியிலிருந்த இந்து அவரை நன்றாக கவனித்து கொண்டாள். புன்னகை முகமாக அவள் செய்த பணிவிடைகளும் அவளின் சகிப்புதன்மையும் பொறுமையும் அவள் வேலை செய்த நேர்த்தியும் அவரை கவர்ந்திருந்தது.

இந்த பெண் போல ஒருத்தி தன் வீட்டிற்கு வந்து கோமாவிலிருக்கும் தன் மனைவியை கவனித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்தவர் தன் மருத்துவ  நண்பரிடம் கேட்டுவிட, முதலில் தயங்கியவர் பின் சம்மதித்து இந்துவிடமும் பாஸ்கரன் கேட்டதை பற்றி தெரிவித்தார்.

அதுவும் இருமடங்கு சம்பளம் கொடுப்பதாக சொன்ன போது கூட மறுத்த இந்து தன் மனைவிக்காக பாஸ்கரன் உருக்கமாக கேட்ட விதத்தில் தன்னையறியாமல் சம்மதம் சொல்லிவிட்டாள்.

தினமும் ரேவதியை உடனிருந்த கவனித்து கொள்ளும் பொறுப்பை தவிர வேறு பெரிய வேலையெல்லாம் கிடையாது. இருப்பினும் அவசரப்பட்டு சம்மதம் சொல்லிவிட்டோமோ என்று சஞ்சலத்தொடும் குழப்பதோடுமே அவர்கள் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தாள்.

அந்த சமயத்தில் அங்கே பெரிய களேபரமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

“ராஜி மா… இன்னொரு தோசை எடுத்துட்டு வாங்க” என்று அஜய் அதிகாரமாக குரல் கொடுக்க,

“என்னால முடியாது… வேண்டவே வேண்டாம்” என்று மது மறுத்தாள்.

“ஒன்னே ஒன்னு டார்லிங்” என்று அஜய் கெஞ்ச,

“உஹும் என்னால முடியாது பா” என்று மது அவனிடமிருந்து தப்பி கொண்டு வந்திருந்தாள்.

“அதெல்லாம் முடியாது சாப்பிட்டுதான் ஆகணும்” என்று அதிகாரமாக உரைத்தவன் தட்டோடு அவளை பின்தொடர்ந்தான்.

“அஜய் ப்ளீஸ்” என்றவள் கெஞ்ச,

அவனோ, “ராஜி மா தோசை இன்னும் வரல?” என்றவன் சத்தமாக குரல் கொடுத்தான்.

“ராஜி மா எனக்கு வேண்டாம்… எடுத்துட்டு வராதீங்க” என்று மதுவும் போட்டி போட்டு கொண்டு கத்த,

“நீங்க எடுத்துட்டு வாங்க ராஜிமா” என்று அவனும் விட்டு கொடுக்காமல் சத்தமிட்டான்.

“ராஜி மா வேண்டாம்” என்று சொன்னவள் திட்டவட்டமாக தன் கணவனிடம், “அவங்க எடுத்துட்டு வந்தாலும் நான் சாப்பிடமாட்டேன்… நான் ரூமுக்கு போறேன்” என்று மாடியேற போக,

“படுத்தாதே மது… ஒரு மூணு தோசை சாப்பிடுறதுல என்னாயிட போகுது… அதுவும் டாக்டர் நீ வீக்கா இருக்க… நல்லா சாப்பிடணும்னு சொல்லி இருக்காரு” என்றான்.

“இதே டைலாக்கை நீ இன்னும் எத்தனை தடவை சொல்லுவ” என்றவள் அவனை முறைத்து பார்க்க,

“சரி சரி நான் இனிமே அப்படி சொல்லல… ப்ளீஸ் ஒரே ஒரு தோசை மட்டும்” என்று தன் மனையாளிடம் அவன் இறைஞ்சி கொண்டு நிற்க,

“நானும் அதே ப்ளீசை உன்கிட்ட கேட்கிறேன்… என்னை விட்டுடு அஜய்… இப்ப சாப்பிட்டதே எப்போ வெளியே வந்திருமோன்னு பயமா இருக்கு” என்றாள் தணிந்த குரலில்!

“டேபிளட் போட்டிருக்க இல்ல… அதெல்லாம் வராது”

“போடா… டேப்லட் எல்லாம் ஒன்னும் யூஸ் இல்ல… எது சாப்பிட்டாலும்  வயித்தை புரட்டிட்டு வந்திருது? நீ பாட்டுக்கு சாப்பிடு சாப்பிடுன்னு ஊட்டி விட்டுட்டு அபீஸ் போயிடுவ… நான்தான் இங்கே தனியா கஷ்டபடணும்?” என்று தன்னிலையை வேதனையோடு அவள் எடுத்துரைக்க,

“சாரி மது… இந்த மாசம் கொஞ்சம் ஹெவி வொர்க்… நெக்ஸ்ட் மந்த்ல இருந்து உன் பக்கத்திலேயே இருக்கேன்.. அபீஸ் வேலையெல்லாம் கூட வீட்டுல இருந்தே பார்த்துக்கிறேன்” என்றவன் சொல்லிவிட்டு,

“எனக்காக ஒரே ஒரு தோசை சாப்பிட்டுடேன்” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தான்.

“சரியான அட்ம்ப்ட் பார்ட்டிடா நீ” என்று அவள் சொல்லும் போதே ராஜி தட்டில் அஜய் கேட்டதற்கிணங்க  தோசையை எடுத்துவந்து வைக்க, “என்ன ராஜி மா நீங்க”
என்று தன் கணவனிடம் காண்பிக்க முடியாத கோபத்தை அவரிடம் காட்ட,

“அங்கே என்ன முறைப்பு… சாப்பிடு” என்று அஜய் அவள் வாயில் வலுக்கட்டாயமாக திணிக்க போகும் போதுதான் எதேச்சையாக வாசலில் நின்றிருந்த இந்துவை பார்த்து,

“அஜய் யாரோ வந்திருக்காங்க” என்று மது சுட்டிக்காட்டினாள்.

“சும்மா ஏமாத்தாதே… சாப்பிடு” என்று அஜய் சொல்ல,

“நிஜமா டா… அங்கே பாரு” என்று வாசல்புறம் காண்பித்தாள்.

இந்துவை பார்த்த அஜய், “நீங்க சகா ஹாஸ்பெட்டில் நர்ஸ்தானே” என்று அவளை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டு கொண்டான்.

“வாங்க உள்ளே வாங்க” என்று அஜய் அழைக்க,

மது புரியாமல் தன் கணவனிடம், “யாரு என்ன?” என்று கேட்க அஜய் இந்துவை பற்றி விவரங்களை உரைத்து கொண்டிருக்க தயக்கத்தோடு இந்து உள்ளே நுழைந்திருந்தாள்.

அவள் பார்வை மது, அஜய் மீதுதான். வாசலில் வந்து நின்றதுமே அவர்களின் சம்பாஷனையை சுவாரசியாமாக பார்த்திருந்தவள் அந்த நொடி தான் வந்த வேலையை கூட மறந்திருந்தாள்.

காதலும் அன்பும் கூடிய இந்த மாதிரி அழகான தம்பதிகளை சினிமாவை தவிர வேறெங்கும் பார்த்ததில்லை என்று தோன்றியவளுக்கு இப்படி நிஜ வாழ்க்கையிலும் பார்ப்பது வியப்பாக இருந்தது. அதுவும் அவர்கள் இருவரின் அழகான கெஞ்சலும் கொஞ்சலும் அவள் மனதில் ஏக்க உணர்வை புகுத்திருந்தது.

தன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் எந்தவித சந்தோஷமும் இல்லையே என்று அப்பட்டமாக அவள் மனம் ஏமாற்றத்தை பிரதிபலித்தது.

தாங்கள் வாழ்கையிலிருக்கும் சந்தோஷங்களை அடையாளம் காண முடியாத இந்து மாதிரியான பெண்கள் தங்களுக்கு எட்டாத விஷயங்களை பார்த்து ஏங்கி ஏங்கி ஒரு நாள் அவர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிடுகிறார்கள்.

இந்து ஏக்கமாக பார்த்திருக்கும் போதே மது அஜயின் பேச்சு வார்த்தை முடிவுக்கு வர, “சரி போய் கையை கழுவிட்டு ஆபீஸ் கிளம்புற வழிய பாருங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று சாமர்த்தியமாக அவள் சாப்பிடாமல் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு தப்பி கொள்ள,

அப்போதைக்கு அவனால் அவளை முறைக்க மட்டும்தான் முடிந்த்து. அவன் அதன் பின் உள்ளே சென்றுவிட, மது இந்துவிடம் பேச்சு கொடுத்தாள்.

சில விவரங்களை கேட்டறிந்தவள் கடைசியாக,  “உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்க,

“இல்லை” என்று சொல்லிவிட்டாள். மருத்துவமனையில் அவள் சொன்ன பொய்யை இங்கேயும் கடைபிடிக்க வேண்டிய எண்ணத்தோடு.

மது அதன் பின் ராஜிமாவை அழைத்து, “அத்தை ரூமை இந்த பொண்ணு கிட்ட காண்பிங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டு அலுவலகம் புறபட்ட அஜயையும் வழியனுப்பிவிட்டு திரும்பிய சமயத்தில் சுரேஷ் படியிறங்கி வந்தான்.

அவன் மதுவை நோக்கி, “யாரந்த பொண்ணு?” என்று கேள்வியை கேட்க, மது இந்துவை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

ஆனால் சுரேஷ் எந்த பக்கமும் நகராமல் இந்து சென்ற திசையையே பார்த்திருந்தான்.

“இந்து” என்று தன் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்த அவள் பெயரை உச்சரித்தவனின் விழியோரம் நீர் கசிந்திருந்தது.