Rainbow kanavugal-28

28

இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து முடிக்க, முதல் நாள் வேலை சுமுகமாகவே தொடங்கி முடிந்தும் இருந்தது.

இப்படியாக அவளின் அன்றாட பணிகள் தொடர, நாட்கள் மெல்ல நகர்ந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்திருந்தன.

முன்பு போல ரேவதியின் அறையில் இப்போது மருந்துவ நெடி வீசுவதில்லை. அந்த அறையை சுத்தமாக வைத்து கொள்வதில் தொடங்கி ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் வரை இந்து எந்தவித குறைவுமின்றி கண்ணும் கருத்துமாக செய்தாள்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து கவனித்திருந்த பாஸ்கரன் மனதில் இந்து மீதான மதிப்பும் நம்பிக்கையும் பன்மடங்கு கூடியிருந்தது.

அதேபோல இந்துவிற்கும் அந்த வீடும் வேலையும் நன்றாகவே பழகியிருந்தது. வேலையாள் ராஜியும், அருணும் அவளிடம் நன்றாக பழகிவிட, தினம் ஒரு முறையாவது அருணுடன் விளையாடினால்தான் அன்றைய பொழுது அவளுக்கு நிறைவாக முடியும்.

அன்றும் அப்படிதான் ராஜிம்மா கிண்ணத்தில் பருப்பு சாதத்தை பிசைந்து எடுத்து வந்து அருணுக்கு ஊட்ட பாடாதபாடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த காட்சியை பார்த்திருந்த இந்து, “நீங்க என்கிட்ட கொடுங்கக்கா… நான் ஊட்டி விடுறேன்” என்றவள் அவனை தூக்கி கொண்டு வெளியே தோட்டத்தில் நடந்தபடி அவனுக்கு வேடிக்கை காட்டி கொண்டே உணவை  ஊட்டிவிட்டாள்.

அவனும் அவளிடம் அதிகம் முரண்டு பிடிக்கவில்லை. அவள் காட்டும் திசைகளில் எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டே அவன் உணவு உட்கொள்ள அப்போது,

“ப்பா ப்பா” என்றவன் மேலே கை காட்டினான்.

“உனக்கு எப்பவுமே ப்பாதானா? அப்பாதான் உனக்கு பிடிக்குமா கண்ணா” என்றபோதும், “ப்பா…பா ப்” என்று தொடந்து அவன் மேலேயே கை காட்ட,

“யாருடா கண்ணா மேல?” என்றவள் திரும்பி பார்க்க அங்கே யாருமே இல்லை.

“என்னடா இருக்கு அங்க? ஏன் டா மேலேயே பார்க்குற?” என்றவள் புரியாமல் கேட்க, அந்த குழந்தையால் பதில் சொல்ல முடிந்திருந்தால் தன் அப்பா மேலே நின்றிருப்பதை காட்டி கொடுத்திருக்கும். அதுவும் அவளையே அவன் விழி எடுக்காமல் ரசித்திருந்தையும்!

ஆனால் இந்துவால் அருணின் மழலை பாஷையை புரிந்து கொள்ள இயலவில்லை. அதுவும் இந்த மூன்று வாரங்களாக இந்த காட்சி மட்டும் வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருந்தது.

சுரேஷ் நின்ற திசையை தெரிந்தும் தெரியாமலும் அருண் இந்துவிற்கு காட்டி கொடுப்பதும், அவள் திரும்பி பார்ப்பதற்கு முன் சுரேஷ் மறைந்துவிடுவதும் என்று யாருக்கும் தெரியாத ஒரு நாடகம் அங்கே அரங்கேறி நடந்து  கொண்டிருந்தது.

ஆனால் அந்த நாடகம் முடிவதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை. இருவரும் மீண்டும் சந்திக்கும் அந்த மோசமான சந்தரப்பம் தானாகவே ஒரு நாள் அமைந்தது.

அன்று வீடே ஆள் அரவமின்றி இருந்தது.

ராஜிம்மா மட்டும் மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்க, எப்போதும் போல இந்து ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிகளை முடித்து கொண்டு வெளியே வந்து, “என்ன க்கா இன்னைக்கு வீடே சத்தமில்லாம இருக்கு… எல்லோரும் வெளியே போயிருக்காங்களோ?” என்று கேட்க,

“பெரிய ஐயா காலையிலேயே கிளம்பி அபீஸ் போயிட்டாரு…  அஜய் தம்பியும் மதும்மாவும் செக் அப்க்காக  ஹாஸ்பெட்டில் போயிருக்காங்க… அனும்மா நேத்து நைட் வீட்டுக்கே வரல… சுரேஷ் தம்பியும் குட்டி பையனும்  ரூம்ல இருப்பாங்களா இருக்கும்” என்றவர் வரிசையாக ஒப்புவிக்க,

“ஒ!” என்று கேட்டு கொண்டவள் தன் மனதில் அப்போது எழுந்த சந்தேகத்தை அவரிடம் வினவினாள்.

“அனுங்கிறவங்கதான் அருணோட அம்மாவா க்கா?”

“அவங்க முழு பேர் அனன்யா… அஜய் சாரும் அவங்களும் இரட்டை புள்ளைங்க” என்று விளக்கமளித்த ராஜி, “ஏன் நீ அனு ம்மாவை இதுவரை பார்த்ததில்லை?” என்று கேட்டாள்.

“ம்ம்ம் பார்த்திருக்கேன்… ஒன்னு ரெண்டு தடவை அவங்க அருணை கொஞ்சிட்டு வெளியே கிளம்பும் போகும் போது பார்த்திருக்கேன்… ஆனா அருண் அப்பாவைதான் நான் பார்த்ததே இல்ல” என்றாள்.

“அனுவை பார்க்கலன்னு சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு… வீட்டிலேயே இருக்க சுரேஷ் தம்பியை போய் பார்க்கலனு சொல்ற” என்று ராஜி வியக்க, இந்து மெளனமாக யோசித்திருந்தாள்.

அப்போது ராஜியே அவளிடம், “ஆனா கொஞ்ச நாளாவே நானும் பார்க்கிறேன்… சுரேஷ் தம்பி கீழே வரற்தே இல்ல” என்றவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே,

இந்து ரொம்ப நாட்களாகவே தன் மனதை குடைந்து கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டாள்.

“ஏன் க்கா… ரேவதியம்மா கோமாவுக்கு போனாங்க” என்று அவள் கேட்க ராஜி அதிர்ச்சியானார்.

“என்ன க்கா எதாச்சும் அக்சிடன்ட் ஆகிடுச்சா?” என்றவள் மேலும் தன் கேள்விகளை தொடர, இந்துவை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தார்.

“நான் சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்டேன்” என்றவள் தயக்காமாக சொன்ன நொடி,

அவளை நேர்கொண்டு பார்த்தவர், “சாதாரணமான அக்சிடென்ட்டா இருந்தா நீ கேட்டதும் நானே சொல்லி இருப்பேன்… ஆனா இது அபப்டி இல்ல” என்று நிறுத்தியவர்,

“நான் இப்போ சொல்ல போறதை யார்கிட்டயும் சொல்லாதே சரியா?” என்றார்.

அப்படி என்னவாக இருக்கும் என்று இந்து ஆர்வமாக கேட்க தொடங்க, ராஜி நடந்த விஷயங்களை உரைக்க தொடங்கினார்.

“பாஸ் ஐயா… அனன்யா அம்மாவுக்கு மாப்பிளை பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டிருந்த சமயத்துல… திடீர்னு ஒரு நாள் அனன்யா அம்மா சுரேஷ் தம்பியை கட்டிக்கிட்டு வந்துட்டாங்க… வீடே அல்லோலக்கல்லோல பட்டுச்சு…

பாஸ்கரன் சாருக்கு பொண்ணு மேல கோபம் இருந்தாலும் பொண்ணை விட்டு கொடுக்க முடியல… அவருக்கு அஜய் தம்பியை விட அனும்மா மேல பாசம் அதிகம்…

அதனால பெருசா எந்த பிரச்சனையும் பண்ணிக்காம அவங்க கல்யாணத்தை ஏத்துகிட்டாரு… ஆனா ரேவதி அம்மாவால பொண்ணை மன்னிக்க முடியல… அவர் அனும்மா கிட்ட முகம் கொடுத்து கூட பேசல

ஒரு மாசம் கழிச்சு அனும்மா கர்ப்பமா இருக்காங்கிற விஷயம் தெரிஞ்சுது… அதுவும் நாலு மாசம்” என்றதும் இந்து அதிர்ந்து பார்க்க ராஜி தொடர்ந்தார்.

“உனக்கே அதிர்ச்சியா இருக்கே… மத்த எல்லோருக்கும்” என்றவர், “கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு கர்ப்பமாக இருந்திருக்குனு தெரிஞ்சதும் அம்மாவுக்கு பயங்கர அதிர்ச்சி…

இந்த விஷயம் தெரிஞ்ச அன்னைக்கு ரொம்ப நேரம் பொண்ணுக்கும் அம்மாவுக்கும் இடையில வாக்குவாதம்  நடந்துச்சு… வீட்டுல வேற பெரிய ஐயாவும் அஜய் தம்பியும் இல்ல… வாக்குவாதம் அதிகாமாகி ‘நீ என் பொண்ணே இல்ல என் வீட்டை விட்டு போ’ அப்படின்னு அம்மா கத்துனதுதான் கடைசி

அப்புறம் வீடே அமைதியாகிடுச்சு… அனும்மா விறுவிறுவென வெளிய போயிட்டாங்க… கொஞ்ச நேரத்தில பெரிய சத்தம் கேட்டுச்சு… ஓடி போய் பார்த்த போது ரேவதி அம்மா படிக்கட்டுல இருந்து தவறி விழுந்துட்டாங்க… அந்த சமயத்துல சுரேஷ் தம்பிதான் அம்மாவை தூக்கிட்டு போய் ஹாஸ்பெட்டில சேர்த்தாரு”

அதிர்ச்சியோடு ராஜி சொன்ன அனைத்தையும் உள்வாங்கிய இந்துமதிக்கு மனம் கலங்கி போனது. பருவ வயதில் உண்டாகும் காதலும் அது ஏற்படுத்துகின்ற தாக்கமும் இதுபோல பல குடும்பங்களின் சந்தோஷங்களை பறித்து நிலைகுலைய செய்துவிடுகிறது என்று தோன்றிய கணம் தான் செய்த தவறும் அவள் நினைவுக்கு வந்தது.

ராஜிம்மா மேலும் சொல்லி கொண்டிருந்தார்.

“அம்மாவுக்கு இப்படியாகியும் அந்த அனு பொண்ணு திருந்தல” என்று அவர் சொல்ல,

“ஏன் அப்படி சொல்றீங்க? அவங்க தப்பு செஞ்சு இருந்தாலும் தான் காதலிச்சவரைதானே கட்டிக்கிட்டாங்க” என்று வினவினாள்.

“கட்டிகிட்டா மட்டும் ஆச்சா… ஒழுங்கா குடும்ப நடத்த வேண்டாம்… பெத்த புள்ளையாச்ச்சும் பார்த்துக்கணும்கிற அக்கறை வேண்டாம்?” என்றதும் இந்து புரியாமல் பார்க்க,

“அந்த பொண்ணு சரியில்ல இந்து… தினமும் வேலை முடிஞ்சு நடுராத்திலதான் வரும்… அது கூட பரவாயில்ல… சில நாள் முடியாதளவுக்கு முட்ட முட்ட குடிச்சிட்டு வரும் தெரியுமா? அம்மா இருந்த போதெல்லாம் இப்படி இல்ல… அருண் பிறந்த பிறகுதான்” என்றார்.

இந்துமதிக்கு இந்த விஷயம் பேரதிர்ச்சியாக இருக்க, “குடிப்பாங்களா?” என்று கேட்டவள், “அவங்க வீட்டுக்காரர் எதுவும் கேட்க மாட்டங்களா?” என்று மேலும் வினவ,

“கேட்டிருந்தா அந்த பொண்ணு ஏன் இப்படியெல்லாம் செய்யுது? ஆனா எப்பயாச்சும் அஜய் தம்பி மட்டும் சத்தம் போடுவாரு” என்று சொல்லியவர், “எல்லாம் கலிகாலம்” என்று புலம்ப, இந்து பதிலேதும் பேசாமல் அப்படியே உறைந்து நிலையில் அமர்ந்திருந்தாள்.

அவள் தோளை தட்டியவர், “ஏதோ நீ கேட்டியேன்னு மனசுல இருக்கிறதெல்லாம் கொட்டிட்டேன்… நீ இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதே தாயே… அப்புறம் என் வேலையே போயிடும்” என்று சொல்லிவிட்டு அகன்றுவிட, “இல்ல க்கா சொல்லல” என்றாள்.

ஆனால் அவர் சொன்ன விஷயங்களின் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தது இந்துவின் மனம். ரேவதியின் அருகில் சென்று அவர் கரத்தை பற்றி கொண்டவள்,

“நீங்க எந்தளவுக்கு மனசொடைஞ்சு போய் இந்த நிலைமைக்கு வந்திருப்பீங்கன்னு என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது ம்மா” என்று அவருக்கு ஆதரவாக பேசினாள்.

மேலும், “உங்களுக்கு சீக்கிரம் குணமாகிடணும் ம்மா… நான் செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரமா உங்களை எப்படியாச்சும் குணமாக்கி பார்க்கணும்னு என் உள்ளுணர்வு சொல்லுது” என்று நம்பிக்கை வார்த்தைகளை உரைத்தாள். அந்த வார்த்தைகள் அவர் மூளையை  எட்டியிருக்கும் என்ற நம்பிக்கையோடு!

அதே சமயம் ராஜிம்மா, “நான் மார்க்கெட் போயிட்டு வந்துடுறேன்… சுரேஷ் தம்பி அருணை பார்த்துக்க சொல்லி கூட்டிட்டு வந்தா நீ கொஞ்ச நேரம் சமாளிச்சிக்கோ இந்து…” என்று கிளம்பிவிட, அவர் சென்ற சில நிமிடங்களில் வேகமாக ஒரு கார் வீட்டுவாசலில் வந்து நின்றிருந்தது.

அதில் வந்து இறங்கிய அனன்யா தள்ளாடி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்த மாத்திரத்தில், “சுரேஷ்… சுரேஷ்” என்று கூப்பாடு போட, அந்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த இந்து அதிர்ந்து போனாள்.

ராஜிம்மா சற்று முன்புதான் அனுவை பற்றி சொல்லியிருந்தார். அந்த உண்மையை நேரெதிராக பார்க்க ஜீரணிக்கவே முடியவில்லை.

“சுரேஷ் சுரேஷ்” என்று கத்திய அனன்யா ஒரு நிலைக்கு மேல் ஓய்ந்து போய் படிக்கட்டில் தானே ஏற முற்பட்டு தடுமாற இந்து பதறி கொண்டு அவளை வந்து தாங்கி பிடித்து கொள்ள, அவளை விசித்திரமாக பார்த்த அனு,

“யார் நீ?” என்று கேட்க,

“நான் அம்மாவை பார்த்துக்கிற நர்ஸ்” என்றாள்.

“நர்ஸா?” என்று இழுத்தவள் அரைகுறை மயக்க நிலையில் தள்ளாடி கொண்டே, “என்னை என் ரூம் வரைக்கும் கொஞ்சம் கூட்டிட்டு போய் விட்டுடுறியா?” என்று உதவி கேட்க, இந்துவின் முகம் கடுகடுத்தது.

அவளருகில் நிற்கவே அசூயையாக உணர்ந்த போதும் வேறுவழியின்றி அவள் படியேற செல்ல உதவியாக  வந்தவள் அந்த அறை வாசலில் தேங்கி நின்றுவிட்டாள்.

அனன்யா அதற்குள் கதவை திறந்து அவளையும் உள்ளே இழுத்து கொண்டு நுழைந்துவிட்டாள்.

சுரேஷ் அப்போது அருணை தோளில் போட்டு தூங்கவைத்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அனு கோபமாக, “ஏன் நான் கூப்பிட கூப்பிட நீ கீழே வரல?” என்று வினவ, அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

யார் பார்வையில் தான் பட்டுவிடவே கூடாது என்று இத்தனை நாள் பயந்து கொண்டிருந்தானோ அவனெதிரே அவள் நின்றிருந்தாளே? அதுவும் அதிர்ச்சியே ரூபமாக!

அவனை பார்த்த அதிர்ச்சியில் அவளுமே உறைந்து போயிருந்தாள்.

சீதாராமன்தான் சுரேஷ் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை. அதுவும் அனு அவன் மனைவி. அருண் அவன் குழந்தை இப்படி ஒரு சேர நிறைய அதிர்ச்சிகள் அவளை தாக்கியிருந்ததில் அவள் நிலைகுலைந்து போயிருக்க,

அனன்யா அவள் பிடியிலிருந்து விலகி படுக்கையில் சரிந்துவிட்டு, “தேங்க்ஸ்” என்று சொல்லும் போதே இந்து தன்னிலை மீட்டு கொண்டாள்.

அவள் இருக்கும் இடம், பொருள் அனைத்தும் அவள் நினைவுக்கு வர, அந்த நொடியே அவசர அவசரமாக அவர்கள் அறையை விட்டு வெளியே ஓடி வந்திருந்தாள்.

“இந்து” என்ற சுரேஷின் அழைப்பு கேட்ட மறுகணம் அவள் கால்கள் இன்னும் வேகம் எடுக்க, விரைவாக படியிறங்கிய அதே சமயத்தில் அஜயும் மதுவும் அவளை எதிரப்பட்டு வந்தனர்.

இந்துவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் கையை பிசைந்து கொண்டு நிற்க அஜய் அவளை பார்த்து, “அம்மா ரூம்ல இல்லாம… ஏன் நீங்க மேலே போனீங்க?” என்று கேட்டுவிட,

அவள் என்ன பதில் சொல்வதென்று தத்தளிக்க பின்னோடு வந்த சுரேஷ் அவன் கேள்விக்கு பதிலளித்தான்,

“அது வந்து அஜய்… அருண் விளையாடிட்டே தூங்கிட்டான்… அதான் அருணை ரூம்ல கொண்டு வந்து படுக்க வைச்சிட்டு போனாங்க” என்று சொல்ல,

“ஒ! சரி சரி” என்று அஜய் தலையசைக்க, மதுவிற்கு ஏனோ அது சரியாக படவில்லை.

பேயறைந்தது போலிருந்த இந்துவின் முகமும் தடுமாற்றத்தோடு வந்த சுரேஷின் பதிலும் அவள் மூளைக்குள் சந்தேக விதையை அப்போதே விதைத்திருந்தது.

இந்துவோ விட்டால் போதுமென அந்த நொடியே ரேவதியின் அறையில் வந்து அடைந்து கொண்டாள்.

error: Content is protected !!