UKU 4

உயிர் காதலே உனக்காகவே…!

காதலின் நினைவலைகள்…!

சுத்தமாய் என்னை மறந்து போனேன்!
மொத்தமாய் நீ அள்ளும் போது,
விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்!
உன் பார்வை பிடியிலிருந்து!

மனித மனம் விசித்திரமானது. நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்குக் கடிவாளம் போட அவ்வளவு சீக்கிரம் நம்மால் முடிவது இல்லை. எதை நினையாதே மனமே என்று கட்டளையிடுகிறோமோ, அதையேச் சுற்றிச் சுழலும்.

உடையின் நிறங்களை தேர்தெடுக்கும்போதும் அதற்குத் தோதான அணிகலன்களை வாங்கும்போதும் பூரணி இதைச் சொன்னாள், பூரணி அதைச் சொன்னாள் என்று என் தமக்கையர் இயல்பாய் உச்சரிக்கும் அவளது பெயர்கூட என்னுள் மாற்றத்தை விதைக்க, சற்று கடுப்புகூட வந்தது எனக்கு.

படிக்கும்போதும் சரி வெளிநாட்டில் பணிநிமித்தம் இருந்தபோதும்சரி சிறு சலனம்கூட மனதில் தோன்றவிடாமல் பெண்களைக் கடந்து வந்தவனை, முகமறியாப் பெண் சலனப்படுத்துவதா?

என்னுள் எழுந்த ஈகோ கேள்வி எழுப்ப, எனக்கு உடைகள் பார்க்கும் சாக்கில் அங்கிருந்து நகர்ந்து வந்தேன்.

இத்தனை வருடங்களாக ஏகபோகமாக நான் மட்டுமே கவர்ந்திருந்த என் குடும்பத்தினர் மனதை, பார்த்த சில நாட்களிலேயே கவர்ந்துவிட்டவள் என்பதாலும்,

என்னைப் போலவே அவளது குடும்பத்தின் ஒற்றைப் பெண் வாரிசு என்பதாலும் இப்படி ஈர்ப்பாகத் தோன்றுகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஒருவழியாக அனைத்தையும் வாங்கி முடித்து வெளியே வந்து காரில் ஏறி மாப்பிள்ளை வீட்டாரின் குலதெய்வக் கோவிலை நோக்கிச் சென்றோம். மனதை மயக்கும் மெல்லிய மெலடிப் பாடல்கள் இளையராஜா இசையில் ஒலிக்க, சுகமாகக் கண்களை மூடிச் சாய்ந்து ரசித்தபடி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரப் பயணம்.

ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள மிகச்சிறிய அழகான கிராமத்தை வந்தடைந்தோம்.

போகும் வழியெல்லாம் தலையாட்டிச் சிரித்த பசுமையான பயிர்களும், இடையிடையே குறுக்கிட்ட சிறு சிறு ஓடைகளும் மனதை இலகுவாக்கியது. பொதுவாகவே இயற்கையின் ரசிகனான என்னை மேலும் மயக்கியது அந்த இடம்.

நடுத்தர அளவுள்ள ஆலயம். தென்னாடுடைய சிவனின் மறுபாதியான சக்தியின் ஆலயம்தான் அது. பழமையான கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், பழமையும் புதுமையும் கலந்து மிளிர்ந்தது. கோவில் கோபுரத்தின் பின்புறம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் மலைக்குன்றுகளும், கோவிலை ஒட்டி ஓடிய சிறு ஓடையும், அதனருகே இருந்த படித்துறையும் வெகுவாக ஈர்த்தது என்னை.

நாங்கள் போய்ச் சேர்ந்த போது பூஜைகள் நிறைவுற்றிருந்தது.

மாதவியும் வினோத்தும் அந்தப் படித்துறையின் கடைசி படியில் அமர்ந்து கால்களை நீரில் துழாவ விட்டபடி பேசிக் கொண்டிருந்தனர்.

திருமணமாகப் போகும் மயக்கம் இருவரது கண்களிலும் மிதமிஞ்சியிருந்தது.

அவர்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி உள்ளே நுழைந்த என்னை எதிர்க்கொண்டது என் அம்மாதான், “ஏன்யா இவ்வளவு லேட்டு? பூஜையெல்லாம் முடிஞ்சிடுச்சி. போய் சாமிய கும்பிட்டு வாய்யா.”

“கடையையே தலைகீழா கவுத்திப்போட்டுத் தேடறாங்க உங்க பொண்ணுங்க, லேட்டாகாதா?” என்றபடி கோவில் கருவறையை நோக்கிச் சென்றேன்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து மூன்று வேன்களில் வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

கருவறையினுள் அபிஷேக ஆராதனைகள் முடிந்து சர்வலங்கார பூஷிதையாக இருந்த அம்மனைக் கண்குளிரக் கண்டு தரிசித்துப் பின், குடும்பத்தினர் நலனைக் கண்களைமூடி வேண்டிக்கொண்டு கண்களைத் திறந்தவனின் முன் தீபாராதனைத்தட்டு நீட்டப்பட்டது.

தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு, பிரசாதத்தை வாங்கிக்கொண்டு நிமிர்ந்த என் விழிகள் ஸ்தம்பித்தன.

இமைகள் குடையாய் கவிழ்ந்திருக்க, இதழ்கள் ஓயாமல் எதையோ முனுமுனுக்க, கூப்பியக் கரங்களோடு தேவதைப் பெண்ணொருத்தி என்முன் நின்றிருந்தாள். என்னைச் சுற்றியுள்ள அண்டசராசரங்கள் அனைத்தும் செயலற்று உறைந்து போக, நாங்கள் இருவர் மட்டுமே அகிலத்தினுள் இருப்பது போன்றதொரு உணர்வு எனக்குள்.

பிறை நெற்றி, குவிந்த இமைகள், அடர்ந்த புருவங்கள், எள்ளுப்பூ நாசி அதில் ஜொலித்த சிறு வைரம், ஆரஞ்சுச் சுளைகளாய் இதழ்கள், சிறு பள்ளத்துடன்கூடிய மோவாய், குட்டியான காதுகளில் அசைந்தாடிய ஜிமிக்கிகள், சங்கு கழுத்து, அதற்குமேல் பயணித்த கண்களைக் கட்டுப்படுத்தி, அவளது மூடிய இமைகளுக்கு வந்து சேர்ந்தேன்.

பிரம்மன் எனக்கெனவே செய்து வைத்த செப்புச் சிலை இதுவென்று உள்ளம் உறுதியாகக் கூறியது. என்ன ஒரு மாயம் இந்த காதலில் மட்டும்? கண்கள் தானே அவளைப் பார்த்தது! பிறகு எதற்காக இந்த மனது இப்படி தேவை இல்லாமல் அலைமோதுகிறது! அவளை மீண்டும் மீண்டும் காண சொல்லி கண்களுக்கு வலியுறுத்துகிறதே!
மயில் வண்ணப் பாவாடையும் இளஞ்சிவப்புத் தாவணியும் அணிந்து தேவதையாகக் காட்சியளித்தாள். முகத்தில் குழந்தைத்தனம் மிச்சமிருந்தது.

அவள் முகத்தைவிட்டு பார்வையை விலக்க முடியாமல் நான் உறைந்துபோய் நின்றிருக்க, அவளது சிப்பி இமைகள் மெதுவாகத் திறந்தது.

காதளவோடிய கண்கள் என்று எப்பொழுதோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தது. அவ்வளவு நீண்ட விழிகள் அவளுக்கு. ஒவ்வொரு முறை சிமிட்டும் போதும் உள்ளே விழுந்து விழுந்து எழுந்தேன்.

கன்னியின் கண்களில் மூழ்காதவர் எவரும் இல்லை. மங்கையவள் பார்வை பட்டால் ஞானியரும் விழி பிதுங்கி மதி மயங்குவார் என்கையில் நானெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் என்னைக் கண்டவளின் கண்களில் சிறிது பயமிருந்ததோ?

அவள் முகத்தைவிட்டு கண்களை அகற்றாமல் பார்த்தபடி நின்றிருக்க, சற்று தயக்கத்தோடு, “சாரி” என்றாள்.

மெல்லிய குரலில் அவளது வார்த்தைகள் என்னை வருடிப் போக, எதற்காக இவள் என்னிடம் மன்னிப்பு கேட்கிறாள் என்று புரியாமல் அவளையே பார்த்திருந்தேன்.

அர்ச்சகர் வெளியே சென்றிருக்க, விபூதி குங்குமப் பிரசாதம் பெறுவதற்காக கர்ப்பக்கிரகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம், எனது வலக்கையை நீட்ட, துளித் தயக்கமின்றி அதிலிருந்த குங்குமம் அவளது நெற்றிக்கு இடம் மாறியது.

சிறகில்லாமல் வானில் பறக்கும் உணர்வுதான் எனக்கு, தெய்வமே உத்தரவு கொடுத்த நிறைவு என்னுள்.

நன்றி சொல்லி சிரித்தவள் சிட்டாய் வெளியே ஓடிவிட, மீண்டும் ஒருமுறை அம்மனை மனதார வேண்டிக்கொண்டு வெளியே வந்தேன். கோவிலுக்குள் நான் உணர்ந்த உணர்வுகள் தெய்வ வாக்காகவேத் தோன்றியது.
என்னைக் கண்டதும் நெருங்கி வந்த மாமன்களிடம் அவளைக் காட்டி யாரெனக் கேட்க,

“நல்லா கேட்ட போ, காலையில வந்ததும் உனக்கு அபிஷேகம் பண்ணாளே ஒரு பொண்ணு, அந்தப் பூரணிதான் இது. உன்னைப் பார்த்ததும் பயந்து ஓடறாளோ? நல்ல பொண்ணு திட்டிடாத மாப்ள.”

‘திட்றதா! அடப்போங்க மாமா. நான் இந்த உலகத்துலயே இல்லை. இவதான் பூரணியா?’ ஆனந்த அதிர்வில் சிலையாய் சமைந்தேன்.

இது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பது உள்ளத்துக்குப் புரிந்தது.

காலையிலிருந்து முகம் தெரியாதபோது அவளது பெயரும், இங்கு வந்து பெயர் தெரியாமலே அவளது முகமும் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னை எனக்கே நன்கு புரிய வைத்தது. அவள் எங்கே என்று நோக்கியே என் கண்களும் கால்களும் பயணித்தன, என்னைக் கேட்காமலே!

“டேய்… பூரணியப் பிடிங்கடா” என்ற குரலும், மான்குட்டியாய் துள்ளி ஓடிய பூரணியும், இப்போது என்னை நோக்கி!
அலையடிக்கும்…!

******

உயிரின் வேட்டை…!

விடுதி அறைக்கு வந்து வெகுநேரமாகியும் நெஞ்சப் படபடப்பு அடங்காமல் அமர்ந்திருந்தாள் ஹரிணி. கைகால்களின் நடுக்கமும் இன்னும் லேசாக மிச்சமிருந்தது. தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

சுஜியும் அருகே அமர்ந்து என்ன நடந்தது என்று வெகுநேரமாகக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறாள். வாயைத் திறக்காமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் டென்ஷன் ஏறியது சுஜிக்கு.

தனியே வெளியே போகாதே என்று அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், வெளியே சென்றுவிட்டு வந்து முனி அடித்தவளைப் போல அமர்ந்திருக்கும் ஹரிணியைப் பார்க்கப் பார்க்க கோபமாக வந்தது அவளுக்கு.

அவளருகே அமர்ந்து அவளை உலுக்கியவள், “அடியே… அறிவுகெட்டவளே… உன்னை வெளிய எங்கயும் போகாம ஹாஸ்டல்லதான இருக்கச் சொன்னேன். எங்கயோ போயிட்டு வந்ததுமில்லாம பேய் பிடிச்சவ மாதிரி உட்கார்ந்து இருக்க.

என்னதான்டி ஆச்சு?” உலுக்கியதும் சற்று தன்னிலைக்கு வந்தவள், நிமிர்ந்து பார்த்து மெதுவாக,

“சு… சுஜி… நான் கமர்ஷியல் ஸ்ட்ரீட்க்கு ஷாப்பிங்தான்டி போனேன். அ… அங்க ஒருத்தன் எ… என்னை கிஸ் பண்ணிடான்டி.” திக்கித் திணறிக் கூறியவளை அதிர்ச்சியோடு பார்த்த சுஜி,

“என்னடி சொல்ற? முத்தம் குடுத்தானா? சும்மாவா விட்ட அவனை… யாரு அவன்?” அதிர்ச்சியில் படபடப்போடு வந்தன கேள்விகள்.

தெரியாது என்பதுபோல பாவமாக உதட்டைப் பிதுக்கியவளைப் பார்த்துக் கடுப்புடன், “எருமை… என்னதான் ஆச்சு சொல்லித் தொலையேன்.” என்று எரிந்து விழ,

“சுஜி மதியத்துக்கு மேல ரொம்ப போர் அடிச்சுதுடி. அம்மாவும் ஃபோன் பண்ணியிருந்தாங்க. அவங்கதான் எங்கயாவது ஷாப்பிங் போக வேண்டியதுதானேன்னு சொன்னாங்க. அப்பதான் நம்ம ஹாஸ்டல் ஜன்னல் வழியா பார்த்தப்ப எதிர்ல இருந்த ரோட்டுல ஒருத்தன் நீல ஜீன்ஸ் வெள்ளை சட்டை போட்டு தலையில ஹெல்மெட்ட கழட்டாமலேயே நின்னுகிட்டு இருந்தான்.

நம்ம ரூமையே பார்க்கற மாதிரி இருந்தது. எனக்கு ரொம்ப பயமா போச்சு ஜன்னலை மூடிட்டேன். அம்மாகிட்ட பேசிட்டு திரும்பவும் ஜன்னலைத் திறந்து பார்த்தப்ப யாரும் இல்ல. சரி என்னோட பிரமைதான், அவன் எதேர்ச்சையாதான் நின்னுகிட்டு இருந்தான்னு நினைச்சு கிளம்பி கமர்ஷியல் ஸ்ட்ரீட்க்கு ஷாப்பிங் போனேன்.

ஆட்டோலதான் போனேன். அப்பவும் எதுவுமே வித்தியாசமா எனக்குத் தோணலைடி. ஆனா ஷாப்பிங் முடிச்சிட்டு வெளிய வந்து கேப் புக் பண்ணிட்டு வெயிட் பண்ணும் போதுதான் பார்க்குறேன், அதே ஆளு அதே ஹெல்மெட்டோட அதே வண்டியில என்னைப் பார்த்துக்கிட்டே நிக்குறான்.

அவன் இங்கயிருந்தே என்னை கமர்ஷியல் ஸ்ட்ரீட் வரை ஃபாலோ பண்ணி வந்திருக்கான். அவனைப் பார்த்ததும் பயமாப் போச்சு. பயத்துல என்ன செய்யறேன்னே தெரியாம அவனைப் பார்த்துகிட்டே நடந்து போய் நடு ரோட்டுல நிக்கறேன். கொஞ்ச தூரத்துல ஒரு கார் வேகமா வந்தது, என்ன செய்யன்னே தெரியாம நான் அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டேன். அப்ப… அப்ப…”
பேசிக்கொண்டிருந்தவளின் முகம் பயத்தில் வெகுவாக வெளிறிப் போய் இருந்ததில், சுஜியின் முகமும் பயத்தைத் தத்தெடுத்தது.

“அப்புறம் என்னதான்டி ஆச்சு. அந்தக் கார்க்காரன் இடிச்சிட்டானா?” என்றவாறு ஹரிணியின் உடலை ஆராய்ந்தாள்.
இல்லை என்று தலையசைத்தவளின் விழிகளில் அப்பொழுது நடைபெற்ற காட்சிகள் விரியத் துவங்கின.

நட்டநடு ரோட்டில் ஹெவியான ட்ராபிக்கில் வேகமாக நகரும் வாகனங்களுக்கு இடையில் திடீரென ஹரிணி நடந்து வந்தது சில வாகனங்களைத் தடுமாறச் செய்தது. அவள் வாகனங்களின் ஹாரன் ஒலியில் சற்று தன்னிலைக்கு வந்து பார்க்கும் போதுதான் தான் நடுவீதியில் நிற்பது உரைத்தது.
மேலும் அவளை நோக்கி மிக வேகமாக வந்த காரைக் கண்டதும் அரண்டு போனவள் அப்படியே அதிர்ச்சியில் சிலைபோல நின்றாள், எதுவுமே செய்யத் தோன்றாமல். சரிதான், இன்றோடு நம் கதை முடிந்தது என்று ஒரு வினாடி மனதில் தோன்றியதும், வருவதை எதிர்கொள்ள இறுகக் கண்களை மூடிக் கொண்டாள்.

அப்பொழுது அதே சாலையின் மறுபுறத்தில், வாகனங்கள் செல்லும் பாதைக்கு எதிர்திசையில், வேகமாக வரும் வாகனங்களுக்கு இடையில், வண்டியை மின்னல் வேகத்தில் லாவகமாக ஒட்டியவாறு வந்தான் ஒருவன்.

அவளருகே புயல்போல வந்தவன், அதிர்ந்துபோய் கண்களைமூடி ஸ்தம்பித்து நிற்பவளின் இடையில், தனது வலிய கரத்தைக் கொடுத்து அப்படியே தூக்கித் தன்னோடு அணைத்தபடி, வெகு லாவகமாக அந்த வாகனங்களுக்கு இடையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டினான் அவன் சரண்சக்ரவர்த்தி.

சட்டென்று தான் அந்தரத்தில் தூக்கப்படவும் பயத்தில் கைக்கு அகப்பட்ட அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவனோடு அட்டை போல ஒட்டியவள் மறந்தும் விழிகளைத் திறக்கவில்லை. அந்த நொடிகளின் பதட்டம் அவளை நினைவிழப்புக்கு கொண்டு சென்றது.

வாகனப் பரபரப்புகள் குறைந்த சாலை வரும்வரை அவளை அணைத்தபடியே வண்டியை ஓட்டி வந்தவன், சற்று பரபரப்புகள் அடங்கிய கிளைச்சாலையில் வண்டியைத் திருப்பி, சாலை ஓரமாக நிறுத்தினான்.

பயந்து நடுங்கி பல்லி போல ஒட்டியிருந்தவள் இன்னும் சுயநினைவுக்கு வந்திருக்கவில்லை.

ஹரிணி தன்னைப் பின்தொடர்ந்து வந்தவனைப் பார்த்து பயந்தபடியே சாலைக்கு நடுவே நடந்து வந்தது, அந்த சாலைக்கு எதிர் சாலையில் வந்து கொண்டிருந்த சரணின் கண்களில் பட்டதும் அவனது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. எதிரே பேய் வேகத்தில் வந்த வண்டிகளைப் பார்த்ததும் அரண்டு போனான்.

இரு சாலைகளுக்கு இடையே தடுப்புச் சுவர் வேறு இருக்க, மின்னல் வேகத்தில் வண்டியை விரட்டி சாலை விதிகளைச் சற்றும் சட்டை செய்யாமல், கிடைத்த இடைவெளியில் எல்லாம் வளைந்து, வண்டியை எதிர் சாலைக்குத் திருப்பி… எதிரே வரும் வாகனங்களுக்கு ஊடே வண்டியைச் செலுத்தியவன், அவளருகே வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளிடையில் கைகொடுத்துத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அதன்பிறகே அவனது இதயமும் மூளையும் ஒழுங்காக வேலை செய்யத் துவங்கியது. ஒரு நிமிடத்தில் என்ன நடக்கத் தெரிந்தது? அவனுக்குமே சற்று படபடப்பாக இருந்ததுதான். தன் மனம் கவர்ந்தவளுடனான முதல் சந்திப்பை எப்படி எப்படியோ கற்பனை செய்து வைத்திருக்க, இன்று நிகழ்ந்த இந்த நிகழ்வை என்னவென்று சொல்வது.

வண்டி நின்று சில நிமிடங்கள் ஆனபோதும், தன் சட்டையை இறுக்கிப் பிடித்தவாறு கோழிக்குஞ்சாக நடுங்கியபடி நெஞ்சோடு ஒட்டிக் கிடந்தவளின் இதயம் படபடத்துத் துடிப்பது வரை தெளிவாக உணர முடிந்தது அவனால். தூக்கி நெஞ்சோடு அணைத்திருந்தவளை மெதுவாக நிமிர்த்தி முகம் பார்க்க முயன்றவனுக்குத் தோல்விதான் கிட்டியது.

அவனுள் புதைந்து விடுபவளைப் போல ஒட்டியிருந்தாள். அவளது உச்சந்தலையில் இதழ்களைப் பதித்தவன், அவளது முதுகை ஆறுதலாக வருடினான். சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல அவள் முகத்தை நிமிர்த்த, அவள் இன்னும் இயல்புக்கு வரவில்லை போலும், கண்களைத் திறக்கவில்லை அவள்.

“ஹே… ஹனி…”
சலனமற்று இருந்தது அவளது முகம். லேசாக கன்னத்தை தட்டியவனுக்கு பதில் இல்லை.

நடுங்கிய உடலும் சீரற்ற மூச்சுக்காற்றும் அவளது பயத்தின் அளவைப் பறைசாற்ற, மீண்டும் அழைத்துப் பார்த்தான்.

“ஹேய்… கண்ணை முழிச்சுப் பாரு… ஹரிணி…” எங்கோ ஆழத்தில் இருப்பவளுக்கு தன் பெயரை யாரோ உச்சரிப்பது போல இருந்தது.

இதழ் குவித்து மெல்ல அவள் முகத்தில் ஊதியவனின், உயிர் காற்று சற்று சிலிர்ப்பைக் கொடுக்க மெல்ல புருவத்தை சுருக்கினாள்.

வெகு அருகாமையில் அவளது எழில் முகம் அவனுக்கும் மயக்கத்தைக் கொடுக்க, தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளது நெற்றியில் இதழைப் பதித்தவன், கண்ணிமைகளையும் தீண்டி கன்னத்துக்கு இதழ்களை நகர்த்த,
தான் இந்த உலகத்தில் உயிரோடுதான் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், அவனோடு ஒட்டியபடி இருந்தவளின் புலன்கள் அவனது இதழொற்றலில் லேசாக உயிர் பெறத் துவங்கின.

தான் எதையோ பற்று கோலாகப் பற்றியபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வந்ததும், மெதுவாக விழிகளைத் திறந்தவளின் பார்வையில்பட்டது தன் கன்னத்து அருகே தெரிந்த அவனது இதழும், உராய்ந்த மீசை மூடிகளும் தான்.

ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்திருந்தவள், சூழ்நிலைபுரிய சற்று சுதாரித்துத் திமிறியபடி அவனுடைய இறுக்கமான அணைப்பிலிருந்து இறங்க முற்பட்டாள். தன் பிடியிலிருந்து நழுவ முயன்றவளின் முயற்சியில் தன்னிலைக்கு மீண்டான் அவன்.

அவனது மார்பில் கை வைத்துத் தள்ளியபடி திமிறிக் கொண்டு இறங்கியவளின் அதிர்ந்த விழிகளைக் கண்டபிறகுதான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது அவனுக்கு.

ஆறு மாதங்களுக்கு மேலாக அவளைத் தன் மனைவியாகவே எண்ணி வந்தவனுக்கு அவளை அவ்வளவு அருகாமையில் பார்த்ததும் தன்வசமிழந்தது புரிந்தது. ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே! தன்னையே அவளுக்கு யாரென தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவே. அப்படி இருக்க தான் இன்று நடந்து கொண்ட முறை சற்று அதிகப்படி என்பதும் புரிந்தது.

அதிர்ச்சியிலும் பயத்திலும் பதட்டத்திலும் மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்ததும் நெக்குருகிப் போனது அவனுக்கு.

“ஹேய்… ஒன்னுமில்ல ரிலாக்ஸ். சேஃபாதான் இருக்க.” குரல் குழைவைத் தேக்கியிருக்க,
யாரிவன்? என்னைக் காப்பாற்றினான் சரி. ஆனால் நான் கண்விழிக்கையில் அவன் செய்து கொண்டிருந்த காரியம்… சற்று சுதாரிப்புக்கு வந்ததும் கோபம் முளைவிட,

“ஏய்… யார் நீ? நீ… நீ… என்ன பண்ணிகிட்டு இருந்த?”
தட்டுத்தடுமாறிய அவளது கேள்வியில் லேசாக புன்னகை மிளிர,

“நான் யாரு? நான் என்ன பண்ணேன்ங்கறதை எல்லாம் பொறுமையா ஹாஸ்டல் போய் யோசி. ஓகேவா. நாளைக்கு நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்.” லேசாக கன்னம் தட்டியவன், அந்தப் பக்கமாக வந்த ஆட்டோ ஒன்றை கைதட்டி நிறுத்தி அவளது முகவரியைச் சொல்லி ஏற்றிவிட்டான்.

யாரிவன்? வெகுநாள் பழகியவன் போல கன்னம் தட்டுகிறான். விடுதி முகவரியைச் சரியாகச் சொல்கிறான் என்ற குழப்பத்தோடு பயணித்தவள் ஆட்டோவின் பின் இருந்த இடைவெளி வழியாக திரும்பிப் பார்க்க, அவளை அவன் பின்தொடர்வதும் தெரிந்தது. நெஞ்சம் முழுக்க குழப்பமும் பயமும் போட்டி போட பயணித்தவள், விடுதி வாசலில் வந்து ஆட்டோ நிற்கவும் இறங்கித் திரும்பிப் பார்க்க, மெல்ல அவளிடம் தலையசைத்தபடி திரும்பிச் சென்றான்.

‘கடவுளே… என்னைச் சுத்தி என்னதான் நடக்குது? யாரிவன்னே தெரியலையே?’ அவன் சென்ற திசையையே பார்த்தபடி நின்றவளின் அருகே மற்றொரு பைக் வந்து நின்றது. பதறித் திரும்பிப் பார்க்க, அதே அடர் நீலநிற ஜீன்ஸ் வெள்ளை சட்டை அணிந்தவன் ஹெல்மெட்டோடு நிற்க, அதிர்ந்து பின்வாங்கினாள்.

“இந்தாங்க மேடம். நீங்க ஷாப்பிங் பண்ண பேக் எல்லாம் அங்கயே விட்டுட்டு வந்துட்டீங்க” என்றபடி அவளிடம் அவள் வாங்கிய துணிகள் அடங்கிய பையைக் கொடுத்தவன், திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட…

வெகுநேரம் அங்கேயே அதிர்ச்சியோடு நின்றிருந்தவள், உச்சபட்ச குழப்பத்தோடு விடுதியின் உள்ளே வந்தாள்.

நடந்ததை சொல்லி முடித்து பாவமாகப் பார்த்தவளைக் கண்ட சுஜிக்கு ஆத்திரமும் பரிதவிப்பும் சேர்ந்தே வந்தது.

“இன்னைக்கு வந்தவனுங்க இரண்டு பேர் மூஞ்சியையும் நல்லா பார்த்தியா? கொலைகாரன் இவனுங்க இல்லையே?”

“ம்கூம்… இல்ல. ஆனா இவனுங்க யாருன்னே தெரியலையே சுஜி. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. ரொம்ப பயமா இருக்கு சுஜி.”
சுஜிக்குமே என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. எவ்வளவு சீக்கிரம் ரேணுவின் அண்ணனைப் பார்த்து இந்த விஷயங்களை அவரிடம் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது.

தள்ளிப் போடப் போட இந்தக் குழப்ப மேகங்கள் மேலும் அதிகரிக்குமேயன்றி குறையப் போவதில்லை. அவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டால் நல்ல தீர்வு ஒன்றை அவர் சொல்லக்கூடும்.

உடனடியாக ரேணுவிற்கு ஃபோன் செய்தவள், “மறுநாளே அவளது அண்ணனைப் பார்க்க முடியுமா?” என்று கேட்க, அவளும் விசாரித்துச் சொல்வதாகக் கூறி வைத்தாள்.

நடந்ததை எண்ணியெண்ணி மேலும் மேலும் மருகிக் கிடந்த ஹரிணியை ஒருவாறாகத் தேற்றி எழுப்பி இரவு உணவை உண்ண வைத்தாள். ரேணுவும் மறுநாள் மாலை ஆறு மணிக்கு அவளது அண்ணனைப் பார்க்க அனுமதி வாங்கிக் கொடுத்தாள்.

அவரது அலுவலகத்திற்கு சென்றால் இயல்பாகப் பேசிட முடியாது. அதனால் பிரபலமான மால் ஒன்றிற்கு வருவதாகச் சொல்ல, ரேணுவின் அண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டதால் இடத்தையும் நேரத்தையும் மறுபடி ஒருமுறை உறுதி செய்துவிட்டு அலைபேசியை வைத்தாள் சுஜி.

வேட்டை தொடரும் …