Rose – 10

418-6GbN9bL-671d34ed

அத்தியாயம் – 10

தன்னவளிடம் கோபத்தைக் காட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய யாதவ் மனம் எங்கும் அவளின் நினைவுகள் மட்டுமே ஆக்கிரமித்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திவிட்டு சீட்டில் சாய்ந்து இமைகளை மூடினான்.

தாயின் அன்பை இழந்தவனின் வாழ்க்கையில், அவள் வந்தது ஒரு வரமென்றே சொல்லலாம். அதுவரை அவன் வகுத்து வைத்திருந்த கொள்கைகள் காற்றில் காணாமல் போனது விந்தையிலும் விந்தை தான்.

ஒரு காலகட்டத்தில் காதலே வராது என்று உறுதியாக சொன்னவன்,  பெண்ணவளிடம் மனதைப் பறிக்கொடுத்தை என்னவென்று சொல்வது?!

அவன் கேட்காதபோது அன்பை வாரி வழக்கும் சுரபியாக இருந்தவள், காதலை எதிர்பார்க்கும் வேளையில் கானல் நீராக காட்சியளிக்கிறாள்.  இன்று அவளிடம் கண்ட மாற்றம் அவனை மொத்தமாக வீழ்த்தி இருந்தது. தன்னவளின் காதலைப் பேசும் காந்த விழிகளில் இருந்த உறுதி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது.

தன்மீதான வெறுப்பைக் காட்டுவதற்காகவே நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறாள் என்ற புரிந்துபோனது. தன் கையை ஸ்டேரிங்கில் குத்தி கோபத்தை வெளிபடுத்திய யாதவ் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அன்றிரவு வரை எங்கெங்கோ சுற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைய, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மீனா பதட்டத்துடன் எழுந்து சென்றார்.அவனது தலை தாறுமாறாக கலைந்து கிடக்க, சர்ட் கசங்கி இருந்தது. ஆதரவற்ற சிறுவனைப்போல் வந்து நின்ற மகனைப் பார்த்து தாயுள்ளம் பதறியது.

ஏற்கனவே காலையில் நடந்த பிரச்சனையைப் பற்றி ராமின் மூலமாக அறிந்திருந்தவர், “இன்னைக்கு மருத்துவமனையில் வேலை அதிகமா? சரி போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்று பேச்சை மாற்ற, சிலநொடிகள் அமைதியாக அங்கே நின்றான்.

தன்னவளின் பிடிவாதம் அறிந்திருந்த காரணத்தால், தாயிடம் பேசிப் பார்க்கும் எண்ணம் நெஞ்சினில் உதயமானது. இத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரென்று பேச மனம் வராமல் திரும்பிய யாதவ், “அம்மா உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

அவன் இயல்பாக பேசியதைக் கண்டு இமைக்க மறந்த மீனா, “என்ன விஷயம்?” வியப்புடன் கேட்டு தனயனை சிந்தனையுடன் ஏறிட்டார்.

“அந்த நிறுவனத்தை யாழினிக்கு கொடுக்காதீங்க அம்மா” அவன் குரல் பிடிவாதத்துடன் ஒலிக்க, அவனது வார்த்தைகளில் விரவிக்கிடக்கும் பயத்தை உணர்ந்தார்.

மருத்துவம் படித்த மகன் சிறுபிள்ளைத்தனமான பேசுவது சிரிப்பை வரவழைக்க, ‘இந்த காதல் வந்தால் மனுசனின் மனநிலை இப்படியெல்லாம் மாற்றுகிறதே!’ நினைத்ததும் அடிவயிற்றில் இருந்து சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.

“அமெரிக்கா சென்று படித்த உனக்குள் இவ்வளவு குறுகிய சிந்தனையா? பெண்கள் நிர்வாகத்தை எடுத்து நடத்த தகுதியே இல்லாதவர்கள் என்று முடிவே பண்ணிட்டியா? உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லப்பா” விளையாட்டாக ஆரம்பித்து கண்டிப்புடன் முடிக்க, அவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேற விழிகள் இரண்டும் சிவந்தது.

“ஐயோ! நான் அந்த அர்த்தத்தில் சொல்லல அம்மா. இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கினால், என்னைவிட்டு நிரந்தரமாக பிரிஞ்சி போயிடுவா அம்மா” என்றவன் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“சின்ன பையன்போல நடந்துக்கிற யாதவ்” என்ற தாயைக் கொலைவெறியுடன் நோக்கியவன், “யாரு நானா?” எரிந்து விழுந்த மகனை சலனமே இன்றி ஏறிட்டார்.

காலையில் இருந்து அடக்கி வைத்திருந்த கோபம் எல்லைக் கடக்க, தன்னுடைய தவிப்பு புரியாமல் பேசுகிறாரே என்ற எண்ணமே எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தாற்போல இருந்தது. வீட்டினில் இருக்கும் பொருட்களை அவன் தூக்கிப்போட்டு உடைக்க, கொஞ்சம் தள்ளி நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தார் மீனா.

அவன் மனம் மெல்ல அமைதியடைய, மாடிக்கட்டில் பொத்தென்று அமர்ந்தான். அதுவரை அவன் வெளிபடுத்திய கோபத்தில் விளைவாக,. அனைத்து பொருட்களும் உடைந்த நிலை வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.

தாயின் முகம் பார்க்க தயங்கிய யாதவ், “ஸாரிம்மா” என்றான் முணுமுணுப்புடன்.

அங்கிருந்த வேலையாளை அழைத்து அந்த இடத்தைச் சுத்தம் செய்ய சொன்னவர், “உன்னோட கோபம் இவ்வளவுதானா யாதவ்?” நிதானமாகக் கேட்ட தாயை சிந்தனையுடன் ஏறிட்டான் மைந்தன்.

அவனருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்த மீனாவின் பார்வை அவனைத் துளைத்தெடுக்க, “அம்மா ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க, ஏதோ கோபத்தில்…” என்றவனை கையமர்த்தி தடுத்தார் மீனா.

“உன் வேலையை நீயே தனித்து செய்து பழகுனு சொன்ன வார்த்தை ஏற்படுத்திய காயத்தை மறந்து, என்னிடம் இயல்பாக பேச உனக்கு இவ்வளவு வருஷம் ஆகியிருக்கு. அப்போ நீ சொன்ன வார்த்தையை நீயே யோசித்துப் பாரு” என்று அவர் இடைவெளிவிட, அவன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.

“நீ ஏற்படுத்திய காயத்தை மறந்து அவள்மட்டும் உன்னை உடனே மன்னிக்கணும் என்று எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு” கண்டிப்புடன் கூற, அவர் சொல்வதை மெளனமாக உள்வாங்கினான்.

‘அம்மா சொல்வதும் உண்மைதானே?’ என்ற எண்ணம் நெஞ்சினில் தோன்ற, அவனது சிந்தனையோட்டம் அறியாமல் தொடர்ந்து பேசினார் மீனா. 

“லிவ்விங் டூ கெதர் வாழ்க்கைதான் எனக்கு பிடிக்கும் ஆன்ட்டி என்று கர்வமாக சொன்னவளின் முகத்தில் மருந்துக்கு கூட மலர்ச்சி இல்ல” யாழினியின் மனதை சரியாக படித்திருந்த தாயை வியப்புடன் நோக்கினான்.

“ஏதோ கோபத்தில் வார்த்தையை விட்டுட்டேன்” தவறு செய்துவிட்ட குழந்தைபோல கூறிய மகனின் மீதான கோபபட முடியாமல், சிறிதுநேரம் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவனது பரிதவிப்பான முகம் கண்டு மனம் இளகிட, “உன்னை வெறுக்கிறேன்னு சொல்லும் யாழினி, ஏன் இந்த நிறுவனத்தை வாங்கணும்?” நிதானமாக கேள்வி எழுப்ப, அவனும் அந்தவொரு கோணத்தில் சிந்திக்க தொடங்கினான்.

மீனாவின் பேச்சினில் இருந்த ஏதோவொன்று அவனது சிந்தனைக்குத் தூபம் போட, “அம்மா!” என்றான் மைந்தன் திகைப்பு மாறாத குரலில்.

அவனது தெளிவான முகம் கண்டு புன்னகைத்த மீனா, “அவளால் உன்னை எப்போதும் வெறுக்க முடியாது யாதவ். இந்த ஊரிலேயே இருக்க அவளுக்கொரு பிடிப்பு வேணும் அண்ட் அந்த சாக்கில் சண்டைப் போடுவதற்காக அருகே வேணும்னு நினைக்கிறாள்” இலகுவாக விஷயத்தை யூகித்துவிட, அவனது முகம் பளிச்சென்று பிரகாசமானது.

அவனது கையை நம்பிக்கையுடன் தட்டிக் கொடுத்து, “அவளோட கோபமெல்லாம் நீ சொன்ன சொல் மீதுதானே தவிர உன்மீது இல்லை. ஒருவேளை நிறுவனத்தை நான் கொடுக்கல என்று சொன்னால், மறுபடியும் அவளை நீ பார்க்கவே முடியாது” நிதர்சனத்தை எடுத்துரைக்க,  தன் மகனின் முகத்தில் சிந்தனைப் படர்வதைக் கண்டு திருப்தியடைந்தார்.   

“காலையில் அவ சொன்னதைக்கேட்டு என்னை நோகடிக்க இப்படி பண்றான்னு நினைச்சேன்” அவன் குரலில் சுருதி இறங்கி இருக்க, அதைக் கவனித்த மீனா மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

நீண்ட நாளுக்குப் பிறகு சிரித்த தாயின் முகத்தை அவன் இமைக்காமல் நோக்கிட, “அவளைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அவள் தனிமையை உணர காரணம், அவளுக்கென்று யாரும் கிடையாது என்ற எண்ணம்தான்” இடைவெளிவிட, அதில் இருந்த உண்மை அவனை வாயடைக்க வைத்தது.

“அவளோட சந்தோசம், துக்கம் எல்லாத்தையும் அவ உன்னிடம்தான் காட்டுவாள். நீ தந்த காயம் ஆறும் வரை கொஞ்சம் நிதானமாக நடந்துக்கோ. சும்மா தோட்டத்துக்கு எல்லாம் அவளையே காரணக்கர்த்தா ஆக்காமல், உன்னோட சில குணங்களை மாற்றிக்கொள்” மகனுக்கு அறிவுரை வழங்க, அவனும் சரியென்று தலையசைத்தான்.

வீட்டின் வேலையாள் அனைத்து பணியையும் முடித்திருக்க, “சரி குளிச்சிட்டு வா! இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றும் இல்லாமல் அதட்டிய தாயை புன்னகையுடன் ஏறிட்ட மைந்தன் மாடிப்படிகளை கடந்து அறைக்குச் சென்றான்.

அவன் குளித்துவிட்டு வருவதற்குள் சாப்பாட்டை எல்லாம் எடுத்து வைத்த மீனலோட்சனி, “ஈஸ்வரி நீ கிளம்பு” அவளை அனுப்பிவிட்டு சாப்பிட அமர, அவனும் குளித்துவிட்டு கீழிறங்கி வந்தான்.

மற்ற ஆண்களைவிட கொஞ்சம் உயரம் அதிகம் என்றபோதும், கம்பீரமாக நடந்து வந்த மகனின் மீது பார்த்து உள்ளம் பூரிக்க, அதை வெளிக்காட்டாமல் இலகுவாக மறைத்தார்.

“ஸாரிம்மா!” என்றபடி அவன் டைனிங் டேபிளில் வந்து அமர, பல வருடங்களுக்குப் பிறகு தன் மகனுக்கு சாப்பாடு பரிமாறிய மீனலோட்சனி பக்கத்தில் அமர்ந்து சாப்பிட தொடங்கினார்.

“இன்னைக்கு சமையல் நல்லா இருக்கும்மா” என்றவனை இமைக்காமல் நோக்கிய மீனாவின் விழிகள் கலங்கிட, “அம்மா” அதட்டல் போட்டான்.

“நான் நிறுவனத்தை விற்கிறேன் என்றபிறகு தான் என்னோட பேச முடியுது இல்ல யாதவ்” ஆதங்கத்துடன் கேட்க, அவரது கரம்பிடித்து அழுத்தம்கொடுத்தான்.

அவனது சிறு ஸ்பரிசம் மீனாவின் மனத்திற்கு இருந்த காயத்திற்கு மருந்தாக மாறியது. அதே சமயம் தன்னுடைய விலகல் அவரின் மனத்தைக் காயப்படுத்தி இருப்பது புரிய, தாயை எப்படி சமாதானம் செய்வது என்று மூளையைக் கசக்கி சிந்தித்தான் யாதவ்.

“அப்போ இருந்த மனநிலையில் உங்க பக்கம் நியாயம் இருக்கும்னு சிந்திக்காமல் இருந்துட்டேன். இன்னைக்கு நீங்க ஃபீல் பண்ணுவதைப் பார்த்தால், உங்க பக்கமும் ஏதோவொரு நியாயம் இருக்குமோன்னு இப்போ தோணுது” அவன் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூற, அந்த வாக்கியம் மிகப்பெரிய ஆறுதலை அவருக்கு பரிசளித்தது.

தன் மகனின் கேசத்தைக் கோதிய மீனாவோ, “என்னை இவ்வளவு தூரம் புரிஞ்சிகிட்டதே போதும் கண்ணா. அந்த நிறுவனத்தை உனக்காக தான் விற்கவே முடிவு பண்ணினேன். அதை மட்டும் சரியாக செய்துவிட்டால், நான் எப்போதும் உன்னோட அம்மாவா வீட்டிலேயே இருப்பேன்” என்ற தாயின் முகத்தைக் கனிவுடன் நோக்கினான்.

தாய் – மகன் உறவென்பது கடைசிவரை கூடவே வருவது, தாலிக்கொடியின் பந்தம் இல்லையென்று போனாலும், தொப்புள்கொடி கொடுக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது. தந்தையின் இறப்பில் தொடங்கிய பிரிவு இன்று சுமுகமாக மாறிப் போனது.

இடைபட்ட காலத்தில் இருவரின் உழைப்பும் இலக்கை நோக்கி இருந்தாலும், அதற்கு ஈடாக சந்தோசமான தருணங்களை இழந்து இருக்கிறோம் என்ற உண்மை புரிந்தது.

அவரது இழப்பும் அவன் கண்ணுக்குப் பெரிதாக தெரிய, கடந்த காலத்தைச் சொல்லி அவரைக் குத்திக் காட்டவில்லை. பழைய விஷயங்களை கூறி அவனை வருத்தப்பட வைக்க வேண்டாம் என நினைத்து மெளனமாக இருந்தார் மீனா.

அவர் நினைத்திருந்தால் அவனை தொழில் செய் என்று நிர்பந்தம் செய்திருக்க முடியும். தன் விருப்பம் உணர்ந்து நிறுவனத்தை விற்க ஏற்பாடு செய்யும் தாயின் பக்கமும் ஏதாவது நியாயம் இருக்குமோ என்ற ரீதியில் சிந்திக்க தொடங்கினான்.

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த அமைதி நிலவிட, “குட் நைட் கண்ணா” என்ற மீனா பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு அறைக்குச் செல்ல, அவனும் மாடியில் இருக்கும் அறைக்குள் சென்று படுத்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக கழிய, தன்னவளைக் கண்டாலே முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டான் யாதவ்.

தன்னுடைய முடிவு அவனைப் பாதிக்கும் என்று தெரிந்தபோதும், முன் வைத்த காலை பின் வைக்க மனமின்றி, மீனலோட்சனியை நேரில் சந்திக்கச் சென்றாள்.

ஏற்கனவே அனுப்ப வேண்டிய டீத்தூள்கள் அனைத்தும் சரியான முறையில் பேக்கிங் முடிந்துவிட்டதா என்று செக் செய்து கொண்டிருந்த மீனாவிடம், “மேடம் உங்களைப் பார்க்க, மதுர யாழினின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க” அவரது பி.ஏ. சௌந்தர்யா வந்து தகவல் கூறினார்.

அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரிந்திருந்ததால், “சரி நான் போய் பார்க்கிறேன். நீ இங்கிருந்து மீதி வேலைகளை முடிச்சிட்டு வா” என்றவர் நேராக அலுவலக அறைக்குச் சென்றார்.

“வாம்மா யாழினி” என்ற அழைப்புடன் அறைக்குள் நுழைந்த மீனலோட்சனி, அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அவள் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுக்க, “என்ன விஷயம்?” நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“இந்த டீ பேக்டரியை விற்க போவதாக ராம் அண்ணா சொன்னாங்க… அதுதான் விலைக்கு வாங்கலாம்னு வந்தேன்” என்றாள் புன்னகையுடன்.

தன் மகனது மனமாற்றம் கண்கூட கண்டிருந்த காரணத்தால், அவளது மனநிலையைத் தெரிந்துகொள்ள நினைத்தார்.

“இல்லம்மா! நீ இந்த பேக்டரியை விலைக்கு வாங்கினால், யாதவ் உன்னைவிட்டு நிரந்தரமாக விலகி போய்விடுவான். அதனால் அவனுக்குப் பிடிக்காத விஷயத்தை செய்யாதே!” நிதர்சனத்தைக் கூற, அதைக் காதிலேயே வாங்காமல் அலட்சியமாக செய்தாள்.

பின்பு, “ஒரு காலத்தில் இதே தவறை தானும் செய்தோமே என்ற குற்றவுணர்வு குத்துகிறதா ஆன்ட்டி?” அவள் கிடுக்குப்பிடி போட, தன் முகத்தை வைத்தே மனதைப் படித்துவிட்டாளே என்ற  திகைப்புடன் அவளைப் பார்த்தார் மீனலோட்சனி.

“எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. இந்த நிறுவனத்தை நான் வாங்குவதால், யாரும் என்னைவிட்டு விலகிப் போக மாட்டாங்க… அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு!” என்றவள் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“உங்க பக்கத்தில் இருக்கும் நியாயத்தை புரிய வைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு” கண்சிமிட்டிய சின்னவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த மீனாவோ, “ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிற?” என்றார் சிரிப்புடன்.

அவளும் ஒப்புதலாக தலையசைக்க, “சரி என்னோட பி.ஏ. சௌந்தர்யா உனக்கு இந்த நிறுவனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்வாங்க” என்றவர் அவளின் முடிவிற்கு சம்மதம் தெரிவிக்க அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

இண்டர்காமில் அழைத்து தகவல் சொல்ல தேயிலைப்  பயிர்களின் விளைச்சல், அதை பராமரிக்கும் முறை. தேயிலையைத் டீத்தூளாக மாற்றும் முறை என்று அனைத்தைப் பற்றியும் கூறியபடி, அந்த நிறுவனத்தை சுற்றிக் காட்டினார் சொந்தர்யா.

அவரது வழிகாட்டுதலில் நிறைய விஷயம் தெரிந்து கொண்ட யாழினி, அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள முடிவெடுத்தாள். அடுத்த சில தினங்களில் ரிஜிஸ்டரேஷன் வேலைகள் அனைத்தும் முடியவே, மீனலோட்சனி அதிலிருந்து விலகிக் கொண்டார்.

– ரோஜாக்கள் பூக்கும்…