Rose – 23

download (77)-98eb3200

அத்தியாயம் – 23

இளவேனில் காலத்தின் கடும் வெயிலின் தாக்கமின்றி மிதமான குளிர்காற்று வந்து முகத்தில் மோதியது. இரவு பொழிந்த மழையில் நனைந்த மலர்கள் ரம்மியமாக காட்சியளித்தது. வழக்கம்போலவே அதை மனதினுள் ரசித்தபடி யாதவ் நடக்க, “கிருஷ்! வெயிட் எ மினிட்!” ஒரு பெண்ணின் குரல் அவன் கவனத்தை ஈர்க்கிறது.

அவன் நின்ற இடத்திலிருந்து திரும்பிப் பார்க்க, சற்றுத் தொலைவில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவனது பார்வை அவளை அளவெடுக்க, காந்தம் கொண்ட விழிகள் அவனை ஈர்த்தது. அவளை எங்கோ பார்த்த ஞாபகம், நினைவடுக்கில் தேடினான். சட்டென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

வீட்டின் முன்பிருந்த ரோஜா செடிகளில் பூத்திருந்த பூவைப் படும்படாமல் தொட்டு ரசித்து, “திஸ் இஸ் ஃபார் யூ” ஒற்றை ரோஜாவைப் பறித்து சிறுவனின் கையில் கொடுத்த பெண்ணின் பளிங்குமுகம் அவனை வெகுவாக ஈர்த்தது.

கண்ணில் குறும்பு மின்ன காட்சியளித்தவளை இமைக்காமல் நோக்கி, ‘இந்தியா கிளம்பற கடைசி நிமிடத்தில் தான், இவளைப் பார்க்கணும்னு விதியா?’ மனதிற்குள் சலித்துக்கொண்டே காரின் கதவைத்திறந்து ஏறியவன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

அவன் விழிதிறந்து பார்க்க படுக்கையில் இருந்து கீழே விழுந்ததை உணர்ந்தவன், “ராட்சசி! இன்னைக்கும் கனவில் வந்து என் தூக்கத்தையே கெடுத்துட்டா” கோபமாக தலையணையைத் தூக்கி சுவற்றில் விட்டெறிந்தான்.

‘ஒருநாள் பார்த்ததுக்கே, ஐந்து வருடமாக கிறுக்கனாக மாறி இருக்கியே! அவளோடு ஈருடலும், ஒருயிருமாய் வாழ்ந்திருந்தால்…’ மனம் கேள்வி எழுப்ப, அவனின் இதயத்துடிப்பு சட்டென்று அதிகரித்தது. எங்கோ சென்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு எழுந்து பால்கனிக்குச் சென்றான்.

காலைநேரத்தில் தோட்டத்தில் பூத்திருந்த வண்ண ரோஜாக்கள், அவனை வாவென்று அழைப்புவிடுக்க, மீண்டும் அவளின் பளிங்கு முகம் மனக்கண்ணில் தோன்றி மறைய, ‘இங்கே பாருடி! நீ என்னை ரொம்பவே தொந்தரவு பண்ற… இது சரியில்ல சொல்லிட்டேன்!’ தனக்குள் புலம்பியபடி உடற்பயிற்சி அறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் உடல் மூளை இடும் கட்டளைகளை சரியாக செய்ய மனமோ, அந்த பெயர் தெரியாத மோகினியைத் தேடிப் பயணித்தது. இந்த இடைப்பட்ட வருடங்களில் அவன் எராளமான பெண்ணைக் கடந்து விட்டான்.

ஆனால் எந்த பெண்ணிடமும் அவளைப் போன்ற காந்த விழிகளும் இல்லை. அவனைக் கவர்ந்து இழுக்கவும் இல்லை. அந்தளவுக்கு அவனை ஆளும் அந்த அழகியைக் காணும் ஆவல் தான், அவனை மீண்டும் அமெரிக்கா மண்ணில் காலடி பதிக்க காரணமாக அமைந்தது.

 சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வந்து உடையை மாற்ற, அவளை மீண்டும் சந்திக்கும் ஆசை அதிகரித்தது. அவன் மனதில் இருந்த அமெரிக்கா மோகமும், லிவ்விங் டூ கேதர் வாழ்க்கையின் மீதான ஈடுபாடும் ஒன்றாக கை கோர்த்தது.

மீண்டும் அங்கே செல்ல சொல்லி மனம் கட்டளையிட்டது. தன் லேப்டாப்பை எடுத்து அமர்ந்த யாதவ், அமெரிக்காவிற்கு டிக்கெட் புக் செய்தான். அடுத்த பதினைந்து நாளில் பயணம் என்பது முடிவாக, அதற்கான பணிகளில் மும்பரமாக இறங்கினான்.

அவன் மருத்துவமனையில் லீவ் கேட்ட விஷயமறிந்து நண்பனைத் தேடி வந்த ராம்குமார், “திடீர்ன்னு எதுக்கு மச்சி லீவ்?” என்ற கேள்வியுடன் ராம்குமார் அறைக்குள் நுழைய, யாதவ் பயணத்திற்கு தயாராகி நின்றிருந்தான்.

அவனது கேள்விக்கு பதிலே சொல்லாமல் சிரித்தவனை வேற்றுகிரகவாசியைப் போல பார்த்த ராமிடம், தன்னுடைய டிக்கெட்டை காட்டினான் யாதவ்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த ராம்குமார் அதிர்வுடன், “டேய்! நீ மறுபடியும் அமெரிக்கா போறீயா?” என்றான்.திகைப்பு மாறாத குரலில்.

“லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை வந்திடுச்சு. அதன் அமெரிக்கா போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் கூற, ‘உன்னை எல்லாம் திருத்தவே முடியாது’ மனதிற்குள் முணுமுணுக்க, அதைப் படித்துவிட்டான் யாதவ்.

“அதுக்காக ஏன் செலவு பண்ணிட்டு அவ்வளவு தூரம் கிளம்பிப் போகணும். இங்கே இப்போ அதெல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிடுச்சு, இங்கேயே ஒரு பெண்ணைத் தேடிப்பிடி!” ராம்குமார் இயல்பாகக் கூற, அதை அவன் காதிலேயே வாங்கவில்லை.

மீண்டும் ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்த யாதவ், “தெரியும்டா! ஆனால் இங்கே இருக்கிற பெண்கள் அதுக்கெல்லாம் சரியென்று தலையாட்டினாலும், பின்னாடி பிரச்சனை செய்வாங்கடா. அவங்களே மாறினாலும் மனசு மாறவே மாறது” என்றவன் விளக்கம் தர, “ஓ” என்றான் ராம்.

“அதே அமெரிக்கா பெண்கள் அப்படி இல்லப்பா!” – யாதவ்.

“அங்கேயும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் பெண்கள் இருக்காங்க மச்சி! அதையும் கொஞ்சம் ஞாபகத்தில் வச்சுக்கோ!” மதுராவின் நினைவில் தான், யாதவிடம் வாதாடினான் ராம்குமார்.

தன் முடிவில் உறுதியாக இருந்த யாதவ், “எனக்கு பிடித்த பெண்ணோடு கொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு, பிடித்தால் அடுத்த கட்டம் நோக்கி நகர்வேன். இல்லன்னா இந்தியா ரிட்டர்ன் ஆகிடுவேன்.” அழுத்தம் திருத்தமாக கூற, ராம் தலையில் அடித்துக் கொண்டான்.

“மச்சி விதி வலியது! அங்கேயும் தமிழ் பெண்ணிடம் நீ வாக்கப்பட போறேன்னு தெரிஞ்சிடுச்சு. இத்தனை நாளாக உன் வாழ்க்கையில் வராத காதல் அவள் மேல் கன்னாபின்னான்னு வருமென்று நான் உனக்கு சாபம் தருகிறேன்” ராம்குமார் விளையாட்டாகச் சொல்ல, அதைக்கேட்டு வயிறு வலிக்க சிரித்தான் யாதவ்.

“இவன் பெரிய விஷ்வாமித்தர், நீ சாபம் கொடுத்து பழிக்க போகுதா?!” கிண்டலாக கூறிய நண்பனை அமெரிக்காவிற்கு வழியனுப்பிவிட்டு வீடு திரும்பும் வழியில், அவன் சிந்தனை எங்கோ சென்றது.

சட்டென்று தன் மனதிற்கு கடிவாமிட்டு, “ஆண்டவா இவனை நல்ல குடும்ப பெண்ணிடம் மாட்டிவிடு. தன்னுடைய கொள்கை தவறுன்னு இவன் உணரணும்” என கடவுளை வேண்டிட, இறைவன் மேலிருந்து கொடுத்தேன் வரத்தை என்று சொன்னது இவன் காதில் விழாமல் போனது.

யாதவின் தேடல் அமெரிக்கா மண்ணில் காலடிபதிக்க வைத்தது. அங்கே வந்து இறங்கிய கொஞ்ச நேரத்தில், ராகுல் வந்து அவனை அழைத்துச் சென்றான். இளவேனில் காலத்தின் தொடக்கம் என்பதால், மரங்கள் துளிர்விட்டு பச்சை பசையேல் என்று பசுமையாக காட்சியளித்தது. கார் பயணம் முழுவதும் வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தபடி வந்தான் யாதவ்.

“இங்கே இருக்கின்ற வரை இங்கேயே தங்கிக்கோ, உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமல் கேளுடா” என்ற ராகுல் கிளம்பிச் சென்றுவிட, யாதவ் அறையைச் சுற்றிப் பார்த்தான்.

சமையலறை, ஹால், படுக்கையறை என்று ஒரு ஆள் தங்குவதற்கு ஏற்றார்போல வீடு கட்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்பிருந்த தோட்டத்தில் ரோஜா செடிகள் பூத்திருந்தது. அதை பார்க்கும்போது மீண்டும் அவளின் நினைவே தோன்றி மறைந்தது.

தன் உடமையைப் பெட்ரூமில் வைத்துவிட்டு, பயணக்களைப்பு தீர குளியல் போட்டான். சமையலறையில் பொருட்கள் இருந்தபோதும், அதை சமைத்து சாப்பிட மனமில்லை. பக்கத்தில் இருக்கின்ற ஹோட்டலுக்கு சென்று சாப்பிட முடிவெடுத்தான்.

அமெரிக்காவின் பிரபலமான தமிழ் உணவகம். அதற்குள் நுழைந்த யாதவ் சற்றே திகைத்துப் போனான். முன்பு இருந்ததைவிட ஹோட்டலின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு உணவின் பின்னோடு இருக்கின்ற பாரம்பரியம் பற்றிய ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது.

அதற்கிடையில் பாரதியாரின் வாக்கியங்கள் சில இடம்பெற்று இருக்க கண்ட யாதவ் தன்னையும் அறியாமல், “வாவ்…” என்றான். அங்கே போடபட்டிருந்த டேபிளில் அமர்ந்து மசாலா தோசை ஆர்டர் கொடுக்க, கமகம வாசனையுடன் வந்து சேர்ந்தது.

இந்தியாவில் இருக்கின்ற ஹோட்டலுடன் ஒப்பிடும்போது, அங்கே அதே சுவை கிடைப்பது அரிது தான். அந்த எண்ணத்தில் அவன் உணவை சாப்பிட தொடங்கும்போது, “அப்பா நான் வொர்க் கிளம்பறேன். இனி நீங்க பார்த்துகோங்க” என்றவள் குரல் கணீரென்று ஒலிக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தான் யாதவ்.

அவளின் கருமைநிற கூந்தல் இடையைத் தாண்டி இருக்க, கருவண்டு விழிகள் அழகாக அபிநயம் பிடித்தது. கூர்மையான நாசி, ரோஜாவின் இதழ்போல சிவந்த உதடுகள், நேர்த்தியான உடை என்று அவனின் மனதை வெகுவாகக் கவர்ந்தாள். இடைபட்ட வருடத்தில் அவளது அழகு மெருகேறி இருந்தது.

அமெரிக்காவில் இளவேனில் காலம் என்றால், மரங்களில் இலை துளிர்க்கும். மாறாக அங்கே வாழும் மனிதர்களின் ஆடைகள் குறைப்பு ஏற்படும் என்பார்கள்.

இவளோ லாங் ஸ்கர்ட், டாப் அணிந்து அழகின் பதுமையாக நின்றிருக்க, இவனின் மனம் அலைபாய்ந்தது. ரவீந்தர் மகளை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைய, அவளின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாமல் தடுமாறினான் யாதவ்.

அவளைக் கண்டவுடன் அவனது கொள்கைகள் மறந்துபோக, அவளுடன் இணைந்து வாழ வேண்டுமென்று பேராவல் கொண்டது அவனின் இதயம். அன்றே அந்த உணர்விற்கு என்ன பெயர் என்று யோசித்திருந்தால், பின்னாடி வரப்போகும் பிரச்சனைகளைத் தடுத்திருக்கலாம்.

அவன் அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கொடுத்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து பார்க்கும்போது, அவன் தேவதை மாயமாக மறைந்திருந்தாள்.

வீடு வந்து சேர்ந்த யாதவிற்கு ராமிடமிருந்து போன் வரவே, “ஹலோ சொல்லு ராம்” என்றான்.

“என்னடா அமெரிக்கா போயிட்டியா? அங்கே கிளைமேட் எப்படி இருக்கு?” வழக்கம்போலவே விசாரிக்க, அவன் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தான் யாதவ்.

“என்னாச்சுடா?!” ராம் சிந்தனையுடன் கேட்க,

“நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன்டா! அவ்வளவு அழகாக இருந்தாடா.அவ கண்ணு இரண்டும் மேக்னெட்ன்னு சொல்லணும். என்னை அப்படியே கவர்ந்துட்டாள், என்ன மேடமைப் பற்றி விசாரிக்கும் முன்பே பட்சி பறந்திடுச்சு” என்றான் சோகமாக.

அவன் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்ட ராம், “என்னடா உனக்கு காதல் காத்து அடித்துவிட்டதா? ஒரே முறை பார்த்த பெண்ணை நினைத்து, இப்படி புலம்பற?” என்றான் நக்கல் சிரிப்புடன்.

யாதவிற்கு கோபம் வர, “அவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்தால், வாலிப வயசு தடுமாறத்தான் செய்யும். அதை சொன்னால் கிண்டல் பண்றீயா?” என்றவன் பதிலை எதிர்பாக்காமல் அழைப்பைத் துண்டிக்கபோக, ராமிற்கு அவனை நினைத்து சிரிப்பாக வந்தது.

நண்பனின் கொள்கையை நன்கறிந்த ராம்குமார், ‘கடவுளே அந்த பெண்ணை வைத்தே இவனின் கொள்கையைத் தவிடுபொடியாக்கிவிடு. இவன் மீண்டும் இந்தியா வரும்போது, ஒரு நல்ல மனிதனாக வரணும்’ மனதினுள் வேண்டிக் கொண்டான்.

சிறிதுநேரம் நண்பனிடம் அரட்டையடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்த யாதவ் படுக்கையில் சரிய, அவன் மனக்கண்ணில் அவளின் பிம்பம் தோன்றி மறைந்தது. இங்கே வந்ததும் அவளை சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அவளிடம் பேசும் முன்பே மாயமாக மறைந்துவிட்டதால், ஏனோ அவளின் ஞாபகம் அதிகமானது. அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக கழிந்தது எனினும்,அவன் தேடல் முடியவில்லை. நிறைய பெண்கள் அவனுக்கு வலைவீச, அவர்களை இலகுவாக கடந்துவிட்டான்.

யாதவின் ஒரே தேடல் அவள் மட்டுமாகவே இருந்தாள் என்று சொல்வது மிகையில்லை. இந்நிலையில் ராகுலின் பிறந்தநாள் வரவே, தன் நண்பனின் வீட்டு விருந்துக்கு கிளம்பினான் யாதவ். அவன் பாதி தூரம் சென்றிருக்க, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக அவளைக் கண்டான்.

மரங்கள் பூத்துக் குலுங்கும் அழகை நின்று ரசித்தவளின் ரசனை அவனை ஈர்க்க, பக்கத்தில் இருந்த பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தான்.

ப்ளூ கலர் சீன்ஸ், பிளாக் கலர் சர்ட் அணிந்து நின்றிருந்தவளின் அழகு அவனை கவர்ந்திழுக்க, “ஹலோ!” அவளின் அருகே செல்ல, அவனின் குரல்கேட்டு திரும்பியவளின் விழிகளில் மின்னல் வெட்டியது.

“ஐ அம் யாதவ் கிருஷ்ணா” தன்னை அவளிடம் அறிமுகம் செய்ய, அவளின் புருவங்கள் தோரணையாக மேலேறி இறங்கியது.

“முன்ன பின்ன தெரியாத ஆணிடம், நானும் என்னை அறிமுகப்படுத்திக்கணுமா?!” அவள் குறும்புடன் கேட்க, யாதவ் தன்னையும் அறியாமல் சிரித்திருந்தான்.

ஏனோ அவளிடம் பேசும் ஆவல் இன்னும் அதிகரிக்க, “இவ்வளவு பெரிய அமெரிக்காவில் இப்படியொரு குறுகிய மனப்பான்மை கொண்ட பெண்ணா?” அவன் பொய்யாக ஆச்சரியப்பட, இம்முறை சிரிப்பது அவளின் முறையானது.

“நீங்க சரியான ஆளுதான்! மதுர யாழினி” அவள் இயல்பாக கூற, “சூப்பர் நேம்… நீங்க தமிழா?!” அவனை வேண்டுமென்றே சுத்தலில் விட எண்ணி, மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்பா – அம்மா தமிழ்நாடு. நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவள். இப்போ உங்களுக்கு என்ன வேணும் யாதவ்” தமிழில் பேசி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள். இடைப்பட்ட வருடங்களில் தந்தையுடன் இணைந்து பேசி, தமிழை தடுமாற்றம் இல்லாமல் பேசி பழகியிருந்தாள்.

“நீங்க அமெரிக்காவில் பிறந்து வளர்ந்துட்டு தமிழ் பேசுவதுதான் அதிசயமாக இருக்குங்க” அவன் வியப்புடன் கூற, அவள் புன்னகையைப் பதிலாக தந்தாள்.

உயிர் உள்ள ரோஜா ஒன்று கண்ணதிரே நடமாடுகிறதோ என்கின்ற திகைப்பில் சிலையாகி நின்றவனின் முன்பு சொடக்குப் போட்டாள். சட்டென்று மனம் நடப்பிற்கு திரும்ப, “ஒரு கப் காஃபி குடிக்கலாமா?” யாதவ் தான் அவளை முதலில் அழைக்க, அவளும் மறுப்பு சொல்லாமல் அவனுடன் இணைந்து நடந்தாள்.

“என்னை மட்டும் சரமாரியாக கேள்வி கேட்டீங்க, ஆனால் உங்களைப் பற்றி எதுவுமே சொல்லலையே” என்ற யாழினி மீதிருந்து பார்வையை அகற்ற முடியாமல் தடுமாறினான்.

அதைக் கவனித்த யாழினி கேள்வியாக புருவம் உயர்த்திட, “நான் இங்கே தான் எம்.டி முடிச்சேன், இந்தியாவில் கார்டியாலஜி முடிச்சிட்டு அங்கேயே வொர்க் பண்றேன்” என்றான்.

“உங்க அப்பா – அம்மா” அவள் அடுத்த கேள்வியைத் தொடுக்க, “எனக்கு யாரும் இல்லங்க” உண்மையை மறைத்து அவன் பொய் சொல்ல, அவள் வதனத்தில் வருத்தம் தோன்றி மறைந்தது.

இருவரும் பக்கத்தில் இருக்கின்ற காஃபி ஷாப் வந்திருந்த யாதவ், யாழினி இருவரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து ஆர்டர் கொடுத்தனர். அவனை வேண்டுமென்றே கஷ்டபடுத்திவிட்டதாக தோன்ற, அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.