RR 2

RR 2

ரௌத்திரமாய் ரகசியமாய்-2

கொழும்பில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகம் (university of Colombo) இலங்கையின் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இலங்கையின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் மாத்திரமன்றி நவீன உயர்கல்வியை வழங்கும் முன்னனி கல்வியகமும் இதுவே. ஆசியாவின் முதற் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

தாமிரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவி. அவள்‌ அழகி அதிலும் அறிவுள்ள அழகி. படிப்பில் எப்போதும் அக்கறை அதிகம் அவளுக்கு அதனாலேயே உயர்தரத்தில் உயிரியல் விஞ்சானப் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவள் சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றான கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானாள்.

அது கொழும்பு பல்கலைக்கழக வளாகம். கிளைகள் பரப்பி, பெரிய ராட்சத வேர்கள் கொண்ட மரத்தின் கீழ் சிந்து அலைபேசியை குடைந்து கொண்டிருந்தாள்.

ரகு கைகளை கட்டிக்கொண்டு தரையை பார்த்தபடி தாமிராவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தான். கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி ரகுவை முறைத்துக் கொண்டடிருந்தாள்.

“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடா? மிட் நைட் சுவரேறி குதிச்சு வந்து தான் எனக்கு விஷ் பண்ணியாகனும்னு ஏதாவது வேண்டுதலா என்ன?”

‘மிட் நைட்ல சுவரேறி குதிச்சு வந்து விஷ் பண்ணியிருக்கான்..’ இதைக் கேட்டதும் இத்தனை நேரம்‌ முகப்புத்தகத்தில் புதைந்து போயிருந்த சிந்து சட்டென தலையை உயர்த்தி ‘அப்படியா?’ என்பது போல் ரகுவை பார்க்க, அவனது திருட்டு முழியே அவனைக் காட்டிக் கொடுத்தது. சிக்கிட்டான் ரகு.

தன்னை விடுத்து தனியக போனதும் மட்டுமில்லாமல்‌ நடு இரவில் சுவரேறி‌ குதித்து போய் பிறந்த நாள் வாழ்த்து கூறி வந்திருக்கிறான்.

“துரோகி… அப்போ நீ அவளை தனியா விஷ் பண்ணியிருக்க? ஒரு டாக்டர் பையன் பண்ற வேலையாடா இது திருடன் மாதிரி சுவரேறி போய்.. அதுவும்‌ எங்கிட்ட கூட சொல்லாம மிட் அவ வீட்டுக்கு போயிருக்க. து-ரோ-கி..” என்று அவளும் அவனுடன் மல்லுக்கு வர தோழிகள் இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டான் ரகு‌.

ரகு, சிந்து, தாமிரா மூவரும் இந்த பல்கலைக்கழக வாழ்வின் ஆரம்ப பகுதியிலேயே நல்ல நண்பர்கள். இரு பெண் தோழிகளுடனே இருப்பதால் ஏனைய மாணவர்கள் அவனை கேலி செய்தாலும் அவன் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஒரு போதும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை .இவர்கள் மூவரது நட்பும் மிக ஆழமானது. வலிமையானது.

ஒரு புறம் ‘சொல்லுடா இப்போ சொல்லு’ என்பது போல் தாமிரா ரகுவை முறைக்க, மறுபுறம் சிந்து அவனை முறைக்க, அவன் பாடு திண்டாட்டமானது.

“இன்னும் கொஞ்ச நாள்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊருக்கு ட்ரெயினிங் போய்டுவோம். அதுக்கப்புறம் தாமிராவை இப்படி சர்ப்ரைஸ் எல்லாம் பண்ண முடியாது இல்லையா? அதனால் தான்…” என்று அவன் இழுக்க, இடையிட்ட சிந்து

“ஓஹோ துரோகி சர் உனக்கு மட்டும் தான் விஷ் பண்ணுவாராம். அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம.. ஹ்ம்ம்.. சரி அதை விடு. லூசு மாதிரி ஏன்டா இப்படி செஞ்ச? அவங்க வீட்ல பார்த்திருந்தா நம்ம நட்புக்கே கெட்ட பெயர் வரும்னு உனக்கு தெரியாதா?” கேட்ட தோரணையில் அவனால் இதற்கு இப்போது பதில் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

எப்படிக் கூறுவான் அவன் மனதில் முளை விட்டிருந்த நேசம் தற்போது பெரு விருட்சமாக வேரூன்றி நிற்கின்றதென? எப்படி சொல்ல முடியும் அவளிடம் சில காலமாகவே தாமிரா என்னும் தேவதை.அவன் மனதில் ஆழமாய் பதிந்து‌ போய் விட்டாளென. அமைதி காத்தான் அவன்.ஆனால் அவனது ஒவ்வொரு அசைவையும் சிந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

“நல்லா கேளு சிந்து..” என்றவள் ஒரு நீண்ட பெரு மூச்சுடன் ரகுவின் புறம் திரும்பி,

“இன்னும் ஒரு வாரத்துல நாம் எல்லாரும் ட்ரெயினிங்காக ஒவ்வொரு ஊருக்கு போயிடுவோம். இந்த நேரத்துல இத்தனை வருஷ நட்புக்கு கெட்ட பெயர் வரக் கூடாது ரகு. லைஃப் லாங் உங்க இரண்டு பேரோட இந்த நட்பு எனக்கு தேவை. அப்படிப்பட்ட எங்க நட்பை யாரும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது..” என்றாள் உறுதியாக.

யாருக்கு எப்படியோ ரகுவுக்கு இந்த பேச்சு நெஞ்சோரம் சிறிது வலியை கொடுக்கத் தான் செய்ததது. வார்த்தைக்கு வார்த்தை நட்பு நட்பு என்று பேசுபவளிடம் தன் காதலை எப்படி வெளிப்படுத்துவான்? காதலால் தன் நட்பையும் இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் வலித்தாலும் அமைதி காத்தான். அவனது முக மாற்றத்தை தாமிரா கவனிக்கவில்லை. சிந்துவின் எக்ஸ்ரே கண்கள் மிக துல்லியமாக கண்டு கொண்டன.

நிலைமையை சகஜமாக்க எண்ணி, “ஓகே ஓகே.. உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கலாம். இப்போ வயிற்றில் மணியடிக்குது. எனக்கும் தாமிராவுக்கும் நம்ம ரகு லஞ்ச்சுக்கு வெளியே கூட்டிட்டு போ போறான் பாரு.” அவள் தாமிராவை பார்த்து கண்ணடிக்க, அவளும்,

“ஆமா ரகு.. மை நட்பு பசிக்குதுடா‌..” உதட்டை சுழித்தவாறு வயிற்றை தடவிக்காட்ட ரகுவை பார்த்து ‘ஈ’ என்று இழித்தாள்‌.

“என்னது நானா? ரெண்டு பேரும் என்னை லெஃப்ட்டு ரைட்டு வாங்கி காதை பஞ்சர் பண்ணிட்டு இப்போ எங்கிட்டயே லஞ்சுக்கு கூட்டிட்டு போக சொல்றீங்களா?உங்கப்பன் வீட்டு காசுலேயா வாங்கி கொடுப்பேன்?”

சிந்து, “இல்லை உங்கப்பன் வக்கீல் வண்டுமுருகன் காசுல..”

ரகுவின் தந்தை ஒரு வக்கீல். அதனால்‌ இவர்கள் இருவரும் ரகுவின் தந்தையை வக்கீல் வண்டுமுருகன் என்று இவனை கடுப்பேத்திக் கொண்டு இருப்பார்கள்‌

பட்டென இடைபுகுந்தவளை பொய்யாய் முறைத்து விட்டு இருவரையும் அழைத்துச் செல்ல வழமையான கலகலப்பு திரும்பியது‌.

***

மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம். நீண்டு அகன்ற அந்த சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்த கடைகளில் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சாலையில் இறங்கி நடக்கத் துவங்கினர்.

ருத்ரனும் அமர்தீப்பும் காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளை. சற்று தூர பயணத்திலேயே தங்களை ஓர் கார் பின் தொடர்வது போல் உணர்ந்தான் ருத்ரன். சந்தேகம் வலுத்தது. புருவ மத்தியில் முடிச்சிட திரும்பினான்.

“அமர், யாரோ எங்களை ஃபாலோ பண்றாங்க.. ஸ்லோ டவுன் த கார்..” என்றதும் வேகத்தை குறைத்தான். பின் தொடர்ந்து வந்த காரின் வேகம் குறையவில்லை அவர்களது காரை கடந்து சென்றது.

“நோ ருத்ரன். இட்ஸ் நாட்..” என்று அமர் கூறும் போதே மீண்டும் ஒரு கார் அவர்களை பின் தொடர்ந்து வருவதைக் கண்டான். ஏற்கனவே கடந்து முன்னே சென்ற காரின் வேகம் குறைக்கப்படுவது போல் இருந்தது.

அது ருத்ரனை உறுத்தியது. ஏதோ சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. ஒரு கார் அவர்களுக்கு முன்னாலும் மற்றைய கார் பின்னாலும் வர சுதாரித்துக் கொண்டான். அவர்கள் தங்களை வட்டமிட்டுவிட்டார்கள்.

அமர் பதற்றமடைந்தான். ருத்ரன் அதற்கு எதிரிமாறு. பதற்றமடையவில்லை. பயப்படவில்லை. நம் பதற்றம், பயம் எதிரிக்கு பலம் நொடிப்பொழுதில் அடுத்து அவர்கள் செய்ய வேண்டியதை திட்டமிட்டான். அமரும் அந்த திட்டத்திற்கு தகுந்தாற் போல் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

பரபரப்பான சூழ்நிலை தான். ருத்ரனின் மூளை வேகமாக கணக்கிட்டது. நகரத்தின் மையப்பகுதி அது என்றாலும் வேறு வழியில்லை.

கார் எந்த இடத்திலும் நிற்கவில்லை. அந்த இரு காரும் தங்களை தொடர்வதும் நிற்கவில்லை. அந்த பகுதி முழுக்க இவர்களது கார் சுற்றியது. ருத்ரன் தங்களை அடையாளம் கண்டு கொண்டான். எதிரிகளும் புரிந்து கொண்டனர். அவர்களும் ஒரு திட்டத்துடன் ருத்ரனின் காரை வேகமாக நெருங்கினர்.

ருத்ரன் சுற்றும் நோட்டமிட்டான்‌. மனிதர்களின் நடமாட்டம் அதிகமான பகுதி இங்கே‌ எதுவும் வேண்டாம்.. ஆள் நடமாற்ற பகுதிக்கு எதிரிகளை வருவழைக்க முயன்றான். இரண்டு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது‌. காரின் வேகத்தை அதிகரிக்குமாறு அமருக்கு கட்டைளையிட்டான்.

அமர் வியந்தான்‌. எப்படி ருத்ரனால் மட்டும் எந்தவொரு சூழ்நிலையிலும் நிலைமையை சமாளிக்க முடிகிறது? அதுவும் மிக மிக வேகமாக மிக நிதானமாக‌.

ருத்ரனின் திட்டப்படி அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. எதிரிகளின் கார்கள் இரண்டும்‌ இவர்களை துரத்தியது. அமரின் கைகளில் கார் சீறிப்பாய்ந்தது.

அதே நேரம் பகலுணவையும் முடித்துக் கொண்டு, அங்கே இங்கே என‌ அலைந்து திரிந்து விட்டு நண்பர்கள் மூவருமாக அரட்டை அடித்தபடி வந்து கொண்டிருந்தனர். வளவளத்தபடியே முதலில் தாமிரா மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முன்னேறினாள்.

சாலையில் சீரிப்பாய்ந்து படு வேகமாக வந்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவளுக்கு வேகமாக வரும் அந்த கார் தன்னை நோக்கி வருவது புரிந்தாலும்‌ அவளால் முன்னேறவோ ஓடவோ முடியவில்லை. அதிர்ச்சியின் உச்சத்தில் அவள் மூளை செயல்பட மறுத்தது.

அந்தக் கார் வரும் வேகத்தில் மோதி தூக்கி எறியப்பட்டால் எலும்பு கூட எஞ்சாது. அசுர வேகம் அது. சர்ரென்று சாலையில் வழுக்கிக் கொண்டு‌ வந்த கார் முன்னால் நின்றவளை கண்டதும் நூலிழையில் ஒடித்து திருப்ப முயல, அதே கணம் அவளை பலமாக பிடித்து இழுத்துக் கொண்டே சாலையின் மறுபக்கம் விழுந்தான் ரகு.

அந்த காரின் வேகம் சிறிது குறைந்தாலும் அந்த கார் நிறுத்தப்படவில்லை. அதன் பின் தொடர்ந்து அதே வேகத்தில் மேலும் இரண்டு கார்களும் சென்றது.

ஒரே சலசலப்பு. என்ன‌ நடந்தது என்பதை புரிந்து கொள்ளவே அவளுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. தேனீ கூட்டம் போல் மக்கள் சலசலப்புடன் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர். சிந்து பதற்றத்துடன் அவளருகே ஓடி வந்தாள்.

ரகு, “தாமிரா ஆர் யூ ஓகே? நல்லா தானே இருக்க?” அக்கறை கலந்த பதற்றத்துடன் வினவினான். அவன் மனம் வெகுவாய் கலங்கிப் போயிருந்தது.

அவளால் எதையும் பேச முடியவில்லை. மொழி மறந்து போனவளாக படபடக்கும் இதயத்தோடு அவளால் மூச்சு விட முடியவில்லை. அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

தன் கண் முன்னே நண்பர்கள் இருவரும் மயிரிழையில் தப்பிய காட்சியை கண்டதில் அவளும் பேச்சற்றுப் போயிருந்தாள். அடி ஏதும் பட்டுள்ளதா என தாமிராவை ஆராய்ந்தாள். ஆங்காங்கே லேசான சிராய்ப்புகளை தவிர பெரிதாக எந்த அடியுமில்லை‌ என்பதை உறுதி செய்து கொண்டாள்.

தாமிராவின் அருகில் அமர்ந்திருந்த ரகுவைப் பார்த்தாள். அவன் நெற்றியிலும் முழங்கையிலும் லேலாக இரத்தம் கசிந்திருந்தது. ஆனால் அவனோ அதைப்பற்றியெல்லாம் கண்டு கொண்டதாயில்லை. அவனது கலங்கிய பார்வை‌ தாமிராவிலேயே நிலைத்திருந்தது.

“ரகு,ப்ளீடிங்.. கெட் அப் உனக்கு மருந்து போடனும். தாமிரா இன்னும் அதிர்ச்சியில் இருக்கா. அவளையும் சீக்கிரம் இங்கிருந்து அழைச்சிட்டு போகனும். இரண்டு பேரும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்குறது நல்லது. ஹரி அப்..” என‌ மருத்துவராய் அவனை அவசரப்படுத்தினாள்.

எவ்வளவு மகிழ்ச்சியாய் ஆரம்பித்த இந்நாள் இப்படி முடியும் என அவர்கள் நினைத்தும்‌ பார்க்கவில்லை. மூவரும் ஒரே விதமான மனநிலையுடன் இருந்தனர். வார்த்தைகள் எழவில்லை.

தாமிராவால் எழுந்து நடக்க முடியவில்லை. விழுந்த வேகத்தில் கால் சுளுக்கு விழுந்து விட்டது போலும். இருவரும் அவளை கைத்தாங்கலாக பிடித்து எழுப்பி ஆட்டோவில் ஏற்றினர்.

error: Content is protected !!