NUA–EPI 25

NUA–EPI 25

அத்தியாயம் 25

இங்கு நீயொரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி (முத்துக்காளை)

 

தன் நெஞ்சில் புதைத்துப் பூட்டி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்ததில் காற்றில் பறப்பதைப் போல உணர்ந்தார் அஜய். மனம் லேசாக, மென்னகையுடன் தன் மருமகனைத் திரும்பிப் பார்த்தார் அவர். அங்கே காளை குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை! என்னதிது?”

“டீச்சரப்பா” என அழைத்து தாவி அணைத்துக் கொண்டான் தன் மாமனாரை. அவன் ஆவேசத்தில் கீழே விழ போன அஜய் தட்டுத் தடுமாறி சமாளித்தார்.

“ஒரு ஆம்பள மனசு இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும். உங்க நெலைமை எனக்கு நல்லாவே புரியுது டீச்சரப்பா! நமக்கு இருக்கற ரெண்டு கண்ணுல எந்த கண்ணு முக்கியம்னு கேட்டா என்னன்னு பதில் சொல்ல! ஆனா நீங்க, ரெண்டு கண்ணுல ஒரு கண்ண காப்பாத்த இன்னொரு கண்ண உங்க கையாலேயே குத்திக்கிட்டீங்களே டீச்சரப்பா! வலிச்சிருக்குமே! மரண வலி வலிச்சிருக்குமே! சில மாசம் பழகி கூட வாழ்ந்த எனக்கே டீச்சர பிரிஞ்சி ரெண்டு நாள் இருக்க முடியல. ஆசையா தவமிருந்து பெத்து, பாசம் வச்ச புள்ளைய தனிச்சு விட்டுட்டு வந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்கு நல்லாவே புரியுது. நீங்க ரொம்பவே பாவம் டீச்சரப்பா!”

அவன் அணைப்பு இன்னும் இறுகியது. உயிர் வாழ மட்டுமே உணவை விழுங்கும் அஜய்க்கு கட்டுமஸ்த்தான காளையின் அணைப்பும் அவன் பாசமும் கண்ணைக் கட்டியது.

“யப்பா மருமகனே! கொஞ்சம் மெதுவாப்பா! அணைச்சு, அனுப்பி வச்சிடாதே! என் அரசிக்கு அப்புறம் தான் என் உயிர் போகனும்னு தெனம் வேண்டிக்கிட்டு இருக்கேன் நான்!” என கண்ணில் நீருடனும் உதட்டில் சிரிப்புடனும் சொன்னார் அவர்.

சட்டென தள்ளி அமர்ந்தான் காளை.

“அபியோட அப்பாவ விட நீங்க கிரேட்டு டீச்சரப்பா”

“அது யாரு அபி அப்பா?”

“அதான் திரிஷாவும் பிரகாஷ்ராஜூம் நடிச்சாங்களே அபியும் நானும் படம்! அந்த அபி அப்பா மகள பக்கத்துல வச்சுப் பொத்தி பொத்தி வளத்தாரு! நீங்க மனசுக்குள்ள பொத்தி வச்சு, நெஜத்துல தள்ளி வச்சி என் டீச்சர ஒரு தைரியமான மனுஷியா வளத்துருக்கீங்க! ஐ லவ் யூ டீச்சரப்பா!”

கலகலவென சிரித்தார் அஜய். கண்களில் நீர் வரும் வரை சிரித்தார்.

“இப்போ புரியுது ஏன் என் மக உன்னை உயிருக்கு உயிரா விரும்பறான்னு! என் கூட வேலை செஞ்சவங்க, என் சொந்தபந்தம், அக்கம்பக்கம், நண்பர்கள்னு எல்லோரும் என்னை ஜட்ஜ் பண்ணாங்க. நான் செஞ்ச காரியத்தை அக்கு வேறா ஆணி வேறா அலசி என்னை புழிஞ்சு காயப் போட்டாங்க! ஆனா நீ….” தொண்டையை செறுமிக் கொண்டவர்,

“ஆனா நீ என்னை ஜட்ஜ் பண்ணல! எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு புரிஞ்சுக்கிட்டது மட்டுமில்லாம என்னை லவ் பண்ணறேன்னும் சொல்ற! என் மனசு எவ்வளவு நெறைஞ்சுப் போச்சு தெரியுமா மாப்பிள்ளை. மங்கை உன்னை கல்யாணம் பண்ணதுல எனக்கு மனசு சுருக் சுருக்குன்னு வலிக்கும்! நம்ம ஒழுங்கான வாழ்க்கை குடுத்துருந்தா நம்ம மக இப்படி பட்டிக்காட்டுல வாழ்க்கைப் பட்டுருப்பாலான்னு நெனைச்சு கலங்காத நாளில்ல! ஆனா கள்ளங் கபடம் இல்லாத பத்திரைமாத்துத் தங்கம்யா நீ! என் மக கண்டிப்பா உன் கூட மனசு நெறைஞ்சு வாழ்வான்னு எனக்குத் தெரிஞ்சிருச்சு! என் அம்மும்மா இவ்வளவு தகிடுதத்தோம் பண்ணி உன்னைக் கட்டிக்கிட்டதுல தப்பேயில்ல”

அஜய் சொன்னதைக் கேட்டு காளைக்கு லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது.

“அரசிக்காக உன் பொண்டாட்டிய விட்டுட்டேன்னு உனக்கு நெஜமாவே கோபம் வரலியா காளை?”

“உங்க மேல கோபம் வரல டீச்சரப்பா! ஆனா என் டீச்சர நெனைச்சு இந்த நெஞ்சுல ரத்தமே வருது! எந்தக் குழந்தைக்கும் இந்த நெலைமை சத்தியமா வரக் கூடாது! அம்மாவோட பாசத்துல முங்கி, அப்பாவோட நேசத்துல குளிச்சி வளர வேண்டிய காலக்கட்டத்துல என் டீச்சர் தனிச்சு நின்னத நெனைச்சுப் பார்க்கறப்பவே நெஞ்சு அடைக்குது! அந்தக் குட்டி டீச்சர ஓடிப்போய் அணைச்சுக்க சொல்லி மனசு துடிக்குது! எதிர் வீட்டு கெழவனை பொழந்து பொங்கல் வைக்கனும்னு வெறியே வருது!”

அதைப்பற்றிப் பேசும் போதே கண்கள் கலங்கியது அவனுக்கு. தான் உயிராய் காதலிக்கும் தன் மனைவி பட்ட துன்பங்கள் அவன் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தன.

“டீச்சரப்பா, அவங்க கூட இத்தனை மாசம் இருந்திருக்கேன். அத வச்சு ஒன்னு மட்டும் சொல்லறேன்! இங்கயே இருந்திருந்தா தினம் உங்கள பார்த்து, எனக்கு மட்டும் ஏன் அன்பு கெடக்கலன்னு ஏங்கி என் டீச்சர் இன்னொரு அரசியா ஆகிருப்பாங்க! நீங்க கரெக்டான எடத்துல சேர்த்து விடவும் தான் இப்ப அவங்க ஒரு சிங்கப்பெண்ணா இருக்காங்க! எதையும் தனியா நின்னு சமாளிக்கறாங்க! தைரியமா இருக்காங்க! இப்போ என்னை விட்டுட்டு வந்தத எடுத்துக்குங்களேன், உங்க அரசி உங்கள இப்படி விட்டுட்டுப் போவாங்களா? ஆனா என் டீச்சர் செய்வாங்க! இப்போ நான் கிளம்பி அவங்கள தேடிப் போகலைனா, இதுக்கு மேலயும் என்னை வச்சி செய்வாங்க!” என சொல்லியபடியே எழுந்தான் காளை.

புன்னகையுடன் எழுந்தார் அஜய்.

“சரி வாங்க மாப்பிள்ளை! நாம ஹோட்டலுக்கு ப்ரேக்பஸ்ட் சாப்பிட போகலாம்! அதுக்கு அப்புறம் நீங்க அப்படியே கெளம்புங்க உங்க டீச்சர தேடி”

மொட்டை மாடியில் இருந்து இறங்கினார்கள் இருவரும்.

“அதுதான் அந்த எதிர் வீடா?” என அஜய் வீட்டின் முன்புறம் இருந்த வீட்டைக் காட்டிக் கேட்டான் காளை.

ஆமென தலையாட்டினார் அஜய். வேகமாக அந்த வீட்டுக்கு நடந்தவன், தட தடவென அங்கிருந்த இரும்புக் கேட்டைத் தட்டினான்.

“டேய் நாதாரி கெழட்டுக் கெழவா! வாடா வெளியே” என சத்தம் போட்டான் காளை.

“என்ன செய்யற?” என பதறி போனார் அஜய்.

ஓடிப் போய் அவன் கரம் பற்றி தன் வீட்டுக்கு இழுத்தார். அவனை இழுக்கவா முடியும்? அசையாமல் அவன் நிற்கவும்,

“டீச்சரப்பா சொல்லறேன்! ஒழுங்கா வரியா இல்லையா?” என மெல்லிய குரலில் கடிந்தவர் வேகமாக இழுக்க முயன்றார்.

அந்த வீட்டில் விளக்கு வெளிச்சம் வர,

“அந்த கெழவன் செத்துடான்! இப்ப தயவு செஞ்சு வந்துடு” என படபடத்தார் அஜய்.

அதன் பிறகே அவன் அசைய, எடுத்தார் அஜய் தன் வீட்டுக்கு ஓட்டம். காளையை உள்ளே விட்டு கதவை சாற்றியவர், ஜன்னல் திரையை லேசாக விலக்கி எதிர் வீட்டைப் பார்த்தார். மீசையை முறுக்கியப்படி ஒரு ஆள் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.

நெஞ்சை நீவிக் கொண்ட அஜய்,

“இந்த மாதிரி ஓட்டம் ஓடி எத்தனை வருஷம் ஆச்சுத் தெரியுமா! அந்தக் கெழவன், சம்பவம் நடந்த ஒரு வாரத்திலேயே ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டான். அந்த குடும்பமே அதுக்கு அப்புறம் வீட்டைக் காலி பண்ணி போய்ட்டாங்க! இப்போ இருக்கறது ஒரு போலீஸ்காரன் பேமிலி.” என சொல்லியவருக்கு அவன் செய்த செயலில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“ச்சே! கெழவன் புட்டுக்கிட்டானா! அவனுக்கு என் கையால படையல் போடனும்னு நெனைச்சேன்! மிஸ்ஸாகிப் போச்சு!”

“இன்னும் கொஞ்சம் லேட்டாகிருந்துச்சு, அந்த போலீஸ்காரன் உனக்கும் எனக்கும் கெடா வெட்டிப் படையல் போட்டுருப்பான்!”

“தம்பி”

குரல் கேட்டு இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்.

“சாப்பிட வாங்க!” அழைத்தது வேறு யாரும் இல்லை மங்கையர்க்கரசிதான்.

“தூங்கலியா அரசிம்மா?”

“மாப்பிள்ளை வந்துருக்காரு! அவருக்கு சாப்பிடக் குடுக்கறது இல்லையா ஜெய்! நீங்களும் வாங்க!” என டைனிங் ஹாலுக்குப் போனார் அரசி.

“என்ன டீச்சரப்பா, அத்தை சாப்பிட கூப்புடறாங்க!”

இவ்வளவு நேரம் அவரின் கதையைக் கேட்டிருந்தவனுக்கு அதிசயமாக இருந்தது.

“அவ பொண்ணப் பார்த்துக்க நீங்க வந்துட்டீங்களே! இனிமே அவ மக புருஷன விட்டுட்டு இந்த அப்பன் வேணும்னு வந்து நிக்க மாட்டாளே! அந்த பூரிப்புத்தான் மாப்பிள்ளை!” என சிரித்த முகமாகவே சொன்னார் அஜய்.

காளைக்குப் பார்த்து பார்த்து பரிமாறினார் அரசி.

“இன்னும் ரெண்டு இட்லி வச்சிக்குங்க தம்பி! இந்த வடையையும் சாப்பிடுங்க”

“எனக்கு போதும் அத்தை! நீங்களும் உக்காந்து சாப்பிடுங்க! அடுத்த முறை நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரனும்! டீச்சரப்பா உங்க ரெண்டு பேருக்கும் என் மங்கையைப் பார்க்கனும்னா என் வீட்டுக்கு வாங்க! ஏன்னா என் பொண்டாட்டிய இங்கலாம் இனி அனுப்ப மாட்டேன். டீச்சருக்கு என்னையும் எங்க வீட்டுல உள்ளவங்களயும், எங்க ஊரையும் ரொம்ப புடிச்சிருச்சு! அவங்களே கூட இனிமே அந்த ஊர விட்டு வரமாட்டாங்க! வளைக்காப்பு, பிரசவம் இப்படின்னு எதாச்சும் விசேஷம்னா கூட நீங்கதான் அங்க வரனும்!” என சொல்லியபடியே ஓரக்கண்ணால் அரசியைப் பார்த்தவாறு காபியை ரசித்துக் குடித்தான் காளை.

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியின் முகத்தில் வர்ணஜாலத்தை அள்ளி இறைத்தது.

“கண்டிப்பா வருவோம் தம்பி! எனக்கு வேற என்ன வேணும், அவ சந்தோஷமா அவ குடும்பம், அவ புருஷன்னு இருந்தா அதுவே போதும்!” முகத்தில் சிரிப்புடன் வாசல் வரை வந்து மருமகனை வழியனுப்பினார் அரசி.

அவன் கிளம்பியதும், இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வடிய,

“அவ சந்தோஷமா இருக்கனும் ஜெய்! நான் நல்ல அம்மா இல்லைன்னு எனக்குத் தெரியும்! அப்படி நல்ல அம்மாவா இருக்கவும் தெரியல எனக்கு! ஆனா அவ நல்லா இருக்கனும், ஆரோக்கியமா இருக்கனும், புள்ள குட்டின்னு மகிழ்ச்சியா இருக்கனும்னு எப்பவுமே வேண்டிப்பேன். நல்லா இருப்பாத்தானே ஜெய்? பிரச்சனை பண்ணிட்டு வந்துட மாட்டால்ல?” என கேட்டார்.

“அவ ரொம்ப நல்லா இருப்பாடா கண்ணம்மா! நம்ம மாப்பிள்ளை அவள ராணி மாதிரி பார்த்துப்பாரு! போன ஜென்மத்துல அவ கொஞ்சமா பாவமும், நெறைய புண்ணியமும் பண்ணியிருக்கா! அந்தப் பாவத்துக்கு நாம பெத்தவங்களாகவும், அவ செஞ்ச புண்ணியத்துக்கு காளை புருஷனாகவும் அமைஞ்சிருக்கான். இனிமே அவ வாழ்க்கையில எல்லாம் சுகம்தான்! நீ வாடா! வந்து கொஞ்ச நேரம் படு” என அன்பாக தன் மனைவியை உள்ளே அழைத்துப் போனார் அஜய்.  

தன் ஆத்தா கொடுத்த அட்ரசைத் தேடிப் பிடித்து அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தான் காளை. அஜய் சொன்ன கதையைக் கேட்டதில் இருந்து அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. மங்கையைப் பார்க்க வேண்டும், அவளைத் தன் நெஞ்சாங்கூட்டில் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும், உள்ளங்கையில் தாங்க வேண்டும், இறுக்கி அணைத்து தூங்க வேண்டும் என ஆயிரம் வேண்டும்கள் நெஞ்சில் வரிசைக் கட்டி நின்றன காளைக்கு.

“நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே

நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்” என முணுமுணுத்துக் கொண்டே கதவு திறக்கக் காத்திருந்தான் காளை.

கதவும் திறந்தது, தரிசனமும் கிடைத்தது.

அங்கே நின்றிருந்தது சாட்சாத் நம் தவமங்கைதான். எப்பொழுதும் அழகாய், அம்சமாய், சுத்தமாய், தேவதை போல் இருப்பவள், இப்பொழுது முகம் சிவந்துப் போய், முடி களைந்து, கண் மை ஒழுகி, சாம்பார் கறையுடன் இருந்த டீஷர்ட்டுடன் பார்க்கவே பரிதாபமாக நின்றிருந்தாள்.

அந்தக் கோலத்தில் தன் மனைவியைப் பார்த்தவன் அதிர்ந்துப் போய் நின்றான். கணவனைப் பார்த்ததும் பாய்ந்து கட்டிக் கொண்டவள்,

“சாரி, சாரி, சாரி, சாரி! இனிமே விட்டுட்டு வர மாட்டேன்! வரவே மாட்டேன்! சாரி காளை! ஐ லவ் யூ! ஐ மிஸ் யூ! ஐ காண்ட் லீவ் விதவுட் யூ! ஐம் க்ரேசி அபவுட் யூ” என கதறி விட்டாள்.

நம் சம்மு தங்கி இருந்த அதே ஹோட்டலில் வேறு அறையில் தங்கி இருந்தாள் தவமங்கை. கங்காரு குட்டி போல தன் மேல் தாவி ஏறி அமர்ந்திருக்கும் தன் மனையாளை அணைத்தப்படியே உள்ளே வந்து கதவை சாற்றினான் காளை.

“நானும் உங்க மேல க்ரேசி மோகன் தான் டீச்சர்”

“வாட்??? கம் அகேய்ன்!!!”

“எங்க வரனும் டீச்சர்?”

இவ்வளவு நேரம் கண்ணீர் வடிய, சோக சித்திரமாய் இருந்தவள் அடக்கமாட்டாமல் நகைக்க ஆரம்பித்தாள். சிரிப்புனூடே தன் காளையின் முகம் முழுக்க முத்த அபிஷேகம் செய்யவும் தவறவில்லை தவமங்கை.

(அடி பணிவான்….)

(அஸ்க்கு புஸ்க்கு…ஏன் அவன் பொண்டாட்டி நிக்க கூடாதா அங்க!!! லட்டு,சம்மு, கதிரு, கார்த்திக், பழமுன்னு என்னா ஒரு லிஸ்ட்டு…ஹஹஹஹ..செம்ம எண்டெர்டெய்ண்ட்யா எனக்கு..ஹிஹிஹி..லவ் யூ ஆல்… சின்ன எபிதான் இன்னிக்கு. மங்கையோட காதல சேர்த்து எழுதிடலாம்னு பார்த்தேன். அது இன்னும் இழுக்கும் போல. சோ இந்த எபிய இதோட முடிச்சுட்டேன்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!