Rudrangi 11

Rudrangi 11

~11~

ரவியின் வார்த்தைகள் முடியும் முன்னே வலிய கரம் ஒன்று அவனது கன்னத்தைப் பதம் பார்க்க, “என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க..?” கோபமான கேள்வியுடன் ஞானவேல் நின்றிருந்தார். 

எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது..? யாரோ செய்து வைத்த தப்புக்கு அப்ஷரா பலியாகுவதா..? என்ற கோபமே அவரை இவ்வாறு நடந்து கொள்ள வைத்தது. 

தன்னை அடித்தது தந்தை என்றதும், “எதுக்கு அடிச்சீங்க..?” என்றான் கர்ஜனையாய். ரவி வர்மனுக்கு தந்தை என்பதைத் தாண்டி அவர் அடித்ததால் அவனது தன்மானம் அடிப்பட்டது போன்ற பிரம்மை. 

ரவியின் வார்த்தைகள் கொஞ்சம் தடித்து வந்ததோ? என அப்ஷரா கவனிக்கும் முன், “உன்னைக் கொண்ணு புதைச்சிருக்கனும் அடிச்சதோட நிறுத்திட்டேன்னு சந்தோஷப்படு..” என்றார் அவனுக்குக் குறையாத கோபத்துடன். 

தந்தையின் கோபம் எதனால் எனப் புரிந்தாலும், தன்னை அடித்துவிட்டாரே என்பதே இப்போதைக்கு முன்னுக்கு நிற்க, “இப்போ உங்களுக்கு என்ன வேணும்..?” என்றவனுக்குத் தந்தை என்ற உறவு முறையெல்லாம் மறந்து போயிருந்தது. 

அப்ஷராவிற்கு அவனைப் பற்றித் தெரியும் ஆகையால், “மாமா..நீங்க உங்க ரூமுக்கு போங்க..” என்றவள் ஞானவேலிடம் கெஞ்சலான பார்வையை வீச 

அவரின் கோபம் இப்போது அப்ஷராவிடம் திரும்பியது, “இவனைச் சொல்லி தப்பு இல்லை மா..உன்னையும் உன் அப்பனையும் சொல்லனும்..” 

“ப்ளீஸ் மாமா..இப்போ எதுவும் பேச வேணாம்..” 

“பேச வேணாம் பேச வேணாம்னு மூணு வருஷம் இருந்தாச்சு..இன்னும் என்ன..?” தந்தையின் கோபத்தையும் அப்ஷராவின் கெஞ்சலையும் வேடிக்கை பார்த்தானே தவிர, வாயைத் திறக்கவில்லை 

“நான் உன்கிட்ட அப்போவே என்ன சொன்னேன்..ம்…சொல்லு..” அதட்டலுடன் அப்ஷராவை கேட்டதும் மௌனித்தவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. 

அவளின் அழுகை அவனுக்கு அவஸ்தையாய் இருக்க, “இப்போ எதுக்கு அவளைத் திட்டுறீங்க..?” என்றான் ரவி. 

“நான் அவளைத் தானடா திட்டுறேன் உனக்கு என்ன..?” 

“அவள் என்னோட மனைவின்னு உங்களுக்கு நினைவுல இருக்கட்டும்..” என்றவனை நக்கலாய் ஒரு பார்வை பார்த்தவர் 

“அவள் உன் மனைவின்னு உனக்கு இப்போ தான் நினைவு வந்ததா..? மூணு வருஷமா கோமா’லயா இருந்த..?” தந்தையின் கேள்வியில் பல்லைக் கடித்தவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. 

அவனது அமைதியையும் ஏளனமாய் பார்த்தவர், “இந்த மூணு வருஷத்துல அவளுக்காக நீ என்னடா பண்ணிட்ட..ஒருவேளையாச்சும் உன் மனைவின்னு அவளுக்கு சோறு போட்டிருக்கியா..?” பதில் இல்லா கேள்விக்கு பதில் கேட்கும் பெற்றவருக்கு அமைதியை பதிலாய் ரவி கொடுக்க.. 

“இவ்வளவு ஏன்டா சமூகத்துல இவள் தான் உன் மனைவின்னு அந்த அந்தஸ்தாச்சும் கொடுத்திருக்கியா..இந்த வீட்டுப் பால் காய்ச்சுக்கு கூட உன் மனைவின்னு இவளை நீ கூப்பிடல..ஏன் இப்போ வரைக்கும் இவளை இந்த வீட்டுக்கு நீ கூப்பிடலை..” குற்றம் சாட்டும் அவரது பார்வைக்கு பதில் அளிக்க விரும்பாமல் தலையைப் பிடித்துக் கொண்டு சேரில் அமர்ந்துவிட்டான் ரவி. 

“இங்க பாரு டா..ஓவ்வொரு நாளும் இவ உன்னைப் பார்த்து தவிக்கிறதும்..எனக்கே வெறுத்துட்டு டா..யாரோ பண்ணுன தப்புக்காக இத்தனை வருஷமா உன் காலையே சுத்தி வரும் இவளை விட்டுப் போக உனக்கு எப்படி டா மனசு வந்தது..” தந்தை கேட்ட கேள்வி சரியானதே…ஆனால் அதைக் கேட்க வேண்டியவள் அமைதியாய் அழுதபடியே நிற்க.. 

ரவிக்கு தான் செய்தவை தவறு எனப் புரிந்தாலும் அத்தவறின் வீரியம் முழுவதுமாய் புரியவில்லை. இன்னும் தந்தை என்னவெல்லாம் பேசினாரோ? எதுவும் அவனது கருத்தில் பதியவில்லை, அவனது பார்வை அவளிடமே நிலைக் குத்தி நின்றுவிட்டது.. 

“அவளைப் போகச் சொல்லுற அளவுக்கு நீ என்னடா உரிமைய அவகிட்ட கொடுத்திட்ட..ஒரு வக்கீலா இருந்துட்டு உன் கல்யாணத்தை சட்டப்படி ரிஜிஸ்ட்டர் பண்ணனும்னு கூடத் தெரியாதில்லையா..? அதுக்கும் இன்னைக்கு எவ்வளவு சண்டை போடுற..?” தந்தையின் அதட்டலில் அவனது சிந்தனை காலையில் தனது கையில் பிஏ கொடுத்த பேப்பருக்குச் சென்றது. 

ஆம்! காலை நடந்த கூத்துக்கள் அனைத்தும் அவனுக்கேத் தெரியாமல் கையெழுத்து வாங்கி அவர்களின் திருமணத்தை பதிந்து வைத்ததால் வந்தது தான். அப்போது மலர்ந்திருந்த அப்ஷராவின் முகம் அவனுக்கு நினைவுக்கு வர, இவனுக்கும் அது மனதின் ஓரத்தில் நிம்மதி அளித்தது. 

“உன்னால அவளுக்கு எல்லா இடத்துலயும் அவமானம் தான்டா..நீயாச்சும் ஒரு இடத்துல தான் அவமானப் பட்ட அதுக்கு காரணம் அப்ஷா இல்லை..” ரவியை விடாமல் திட்டும் ஞானவேலிடம் ஒரு கெஞ்சல் பார்வையை விடுத்தவள்.. 

“ப்ளீஸ் மாமா…கொஞ்சம் அமைதியா இருங்க..” என்றாள் ரவியின் முகத்தையும் வேலின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து.. 

அப்ஷராவின் பேச்சைக் கேட்கும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்துவிட்ட ஞானவேல், “என்னடா மரம் மாதிரி நின்னுட்டு இருக்க..? வாயைத் திறந்து பேசு..” அவனின் சட்டைக் காலரைப் பற்றி இழுத்துக் கேட்பவரை நிதானமாய் பார்த்தவன், அவரின் கைகளை எடுத்துவிட்டபடி 

“இந்தக் கேள்வியெல்லாம் அவள் கேட்கட்டும் நான் பதில் சொல்லுறேன்..உங்களுக்கு பதில் சொல்லனும்னு எந்த அவசியமும் எனக்கு இருக்கிற மாதிரி தெரியல..” பொறுமையாய் பதிலளித்தவன், தீர்க்கமான பார்வையை வீச 

“இவள் உன்ன கேள்வி கேட்கமாட்டான்னு தைரியத்துல தான இப்படி பேசுற..” கொதிப்பாய் அவர் கேட்க 

“கேட்கட்டும்னு தான சொல்றேன்..அவள் கேட்கட்டும் நான் பதில் சொல்றேன்..” வாழ்க்கையை இவ்வளவு நாட்களாய் தள்ளி வைத்தவனுக்கு சில நாட்களாய் அதை வாழ்ந்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் திண்ணமாய் இருந்தது. ஒரு சக்தியால் இழந்த வாழ்க்கையை மறு சக்தி கொடுத்திருந்தாள். 

மூன்று வருடமாய் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கும் இதுநாள் வரையிலும் அப்ஷரா ஒருமுறை கூட சண்டையிட்டது இல்லை..பல சமயங்களை அவளை ஒதுக்கி வைத்திருக்கிறான், அவளைப் பற்றிய கவலை அவனது மனதில் இருந்தாலும், தன்னைவிட்டு அவள் விலக வேண்டும் என்றே அவன் செய்தவைகள் பல..இன்று வரை கேள்வியெதுவும் கேட்காமல், அவனது வழியிலே என்னைச் செல்ல அனுமதித்திருக்கிறாள். 

அவள் பேசியிருந்தாள் கூட அவனுக்கு குற்றவுணர்ச்சி இல்லாமல் போயிருக்குமோ என்னவோ..? 

அவளையே இமைக்காமல் அவன் பார்த்திருக்க, “அப்ஷா, அவன்கிட்ட கேளு..எதுவுக்கு உன் வாழ்க்கைய இப்படி சீரழிச்சாம்னு கேளு..” ஞான வேல் அப்ஷராவின் தோள் தட்டி ஆவேசமாய் பேச 

“மா…மா…” அழுகையினூடே அப்ஷரா ஞானவேலை அழைக்க, ரவியும் தனது காதுகளைத் தீட்டி வைத்து அவளை கவனிக்கலானான்.. 

“அவரை என்ன மாமா நான் கேள்வி கேட்கனும்..? கேள்வி கேட்க என்ன இருக்கு..? இதை வேணும்னு வாங்கிக் கேட்டு வாழுறது நான் தானே தவிர அவர் இல்லையே மாமா..தப்பு எல்லாமே என் பெயருல தான் மாமா..பிடிக்காதவற எப்படி வற்புறுத்தி வாழ சொல்றீங்களா..? நான் அவரை காதலிக்கிறேன்..இன்னைக்கு இல்ல என்னைக்கும் அவரை நான் காதலிப்பேன்..அதுக்காக அவரை என்னால கஷ்டபடுத்தி என் காதல கொச்சைப்படுத்த முடியாது…அவரை நிக்க வைத்து கேள்வி கேட்பது எனக்கு பிடிக்கல மாமா..ப்ளீஸ்…….” ஞான வேலின் முகத்தைத் தீர்க்கமாய் பார்த்து அவளுரைக்க, ரவி வர்மனே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் என்றால் மிகையாகாது.. 

மூக்கை உறிஞ்சியவள், “அவருக்கு நான் வேணாம் அவ்வளவு தானே..? நாளைக்கே டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட்டு தாரேன்..” என்றவள் அறையினுள் செல்ல விரைய, அவளை இறுக்கமாய் பிடித்து நிறுத்தியது ஒரு கரம். 

******

காலையில் பரீட்சை எழுத வந்த அதே ஆட்டோ தான் ஆனால் இப்போது இன்னொரு ஆளும் அமர்ந்திருந்தார். 

சிவாவிற்கு எதுவோ தவறு? என உள்ளுணர்வு சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தவன் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். 

பள்ளிக்கு வீட்டிற்கும் அதிகபட்சம் ஐந்து கிலேமீட்டர் தூரமிருக்க சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ ஒரு இடத்தில் நிற்க, இப்போது முன்னே டிரைவருடன் அமர்ந்திருந்தவர் பின்னே சிவாவின் அருகே வந்து அமர்ந்தான். 

சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த சிவா, டிரைவரை கேள்வியாய் பார்க்க, “இல்ல பா..கொஞ்ச தூரத்துல போலீஸ் நிற்கும் அதான்..” என்றான். 

அவனிடம் தலையசைத்தவள் இப்போதும் வெளியே பார்க்க சில நிமிடங்கள் போய் தான் அந்த வித்தியாசத்தை உணரத் துவங்கினாள் சிவா. 

அருகே அமர்ந்திருந்தவன், இவளுக்கு நெருக்கமாய் அமர, அவனின் கைகள் பயணித்த திசையில் முகத்தைச் சுளித்தவள், “அண்ணா கொஞ்சம் தள்ளி உட்காருங்க..” என்றாள் மிரட்டும் தோணியில் 

தன்னை மிரட்டும் சிவாவை எகத்தாளமாய் பார்த்தவன், “நான் எதுக்கு தள்ளி போய் உட்காரனும்..?” என்றான். 

அவனது கேள்வியை காதில் வாங்காமல், “அண்ணா உங்கள தான் சொல்றேன் தள்ளிப் போய் உட்காருங்க..” சிவாவின் கூச்சலில் அவனது வன்முறையான தொடுகை அதிகமானதே தவிர குறையவில்லை.. 

பள்ளி செல்லும் குழந்தை என்பதை அவன் மறந்துவிட்டானா? அல்லது சிவாவின் பாலினத்தால் அது மறுக்கபட்ட ஒன்றா..? கைகள் அசுர வேகத்தில் சிவாவின் மேல் பயணிக்க இப்போது சிவா திமிறி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். 

‘பெண்’ என்ற வார்த்தையை எழுதி வைத்தால் கூட காமப்பேய்கள் விட்டு வைக்காது, இதில் ஆணாய் பிறந்து பெண்ணாய் உணர்ந்து பெண்ணாகவே வாழ விரும்புபவர்களை விட்டு வைக்குமா..? 

முன்னேயிருந்த டிரைவருக்கு பின்னால் நடப்பது தெரியவில்லையா இல்லை தெரிந்து தெரியாதது போல் தான் இருக்கிறாரா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். 

தன் மீது அழுத்தமாய் அருவருக்கும் விதமாய் பதிந்த அவனது கரத்தை பிடித்தவள் அதை முறுக்க, இவளது செய்கையை சற்றும் எதிர்பாரதவனின் ‘ஆ..’ என்ற அலறலில் ஆட்டோ குலுங்கி நின்றது.. 

நண்பனின் கரத்தை சிவா வளைத்து பிடித்திருப்பதைக் கண்ட டிரைவர் சிவாவை நோக்கி, “பொட்டப்பயலே.. அவன் கைவிடுடா” அவனின் கத்தத்தில் வார்த்தை சிவாவின் சுயமரியாதை அடிப்பட்டுப் போக, மனதின் சோர்வு உடலையும் தாக்கியதைப் போல் அவளின் கை தளர்ந்தது. 

அவளது கை தளர்ந்த அந்நொடி நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டவன், வேகமாய் திரும்பி சிவாவை அடிக்கத் துவங்க, அவளது முயற்சியில் தடுக்க நினைத்தாலும் 

வயதுக்கேற்ற வலு தானே அவளுக்கு இருக்கும்..! 

“பொட்டை..நான் தொட்டா அப்படியே சிலுத்துக்கிற…உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு..” அடியின் ஊடே அவன் வார்த்தையைவிட, இப்போது பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பின்னேறினாள்.

இவர்களின் உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே சிவா அமர்ந்திருந்த புறம் ஒரு பைக் வந்து நிற்க, அதில் ஹெல்மெட் அணிந்திருந்த ராக்கி, கண்ணாடியைக் கழற்றி விட்டு உள்ளே பார்த்தான். 

அவனைக் கண்டதும் சிறிது பயம் நீங்க, ராக்கியை ஆவலுடன் நோக்க, “என்ன அண்ணா இங்க பிரச்சனை..?” என்றான் டிரைவரின் புறம் திரும்பி. 

வந்தவன் சிவாவிடம் கேட்காமல் தன்னிடம் கேட்டது கொஞ்சம் நிம்மதியாயிருக்க, “அப்படி கேளுப்பா தம்பி, இதுங்கல ஆட்டோவில ஏத்துனது தப்பா போயிட்டு பா..பார்க்க படிக்கிற புள்ள மாதிரி இருக்கேன்னு பாவப்பட்டு ஏத்துனா..இங்க வந்து கஷ்டமர் புடிக்குது..” வாய்க்கு வந்ததைச் சொல்லும் டிரைவர் பார்த்தவன் இப்போது சிவாவைப் பார்க்க, அவளோ வாயைத் திறந்து மறுத்துக் கூறாமல் அழுது கொண்டிருந்தாள். 

“என்ன ஆச்சு சிவா..?” டிரைவரின் மேற்சொன்ன வார்த்தைகளைக் கேட்காமல் சிவாவிடம் நேரடியாய் வினவ 

“இல்ல..இவங்க தான்..” சொல்ல வந்ததை முழுவதும் முடிக்காமல் அவள் அழுவதை வைத்தே புரிந்து கொண்டவன், 

“வண்டியில இருந்து இறங்கி வா..” என்றவன் டிரைவரை அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க, வண்டியிலிருந்து இறங்கியவள் ராக்கியின் பக்கமாய் வந்து நின்றாள்.. 

“இன்னொரு தடவை உங்கள எங்க ஏரியா பக்கம் பார்த்தேன்னு வை..சாவடிச்சிருவேன்..” அந்த வயதிற்கு உரியத் திமிரில் பேசியவன், சிவாவிடம் திரும்பி, 

“வண்டியில ஏறு..” என்றான் சாதாரணமாய். 

அன்னியனின் வண்டியில் ஏறப் போகிறோம் என்ற நினைப்பெல்லாம் அவளுக்கு இல்லை..இப்போதைக்கு இவர்களிடமிருந்து போனாள் போதும் என நினைத்த சிவா, வேகமாய் வண்டியில் ஏறினாள். 

மறுபடியும் திரும்பி இருவரையும் பார்த்து ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவன், பைக்கை கிளப்பிக் கொண்டு போய்விட்டான்..

அவள் பின்னால் உட்கார்ந்து அழுது கொண்டே வருவதை உணர்ந்தவன், “சிவா எதுக்கு டா அழுற..?” என்றான் மெல்லமாய்..

கேள்வி கேட்டவனுக்கு பதிலளிக்காமல் தனது அழுகையைத் தொடர, “இப்படி அழுதுட்டே வந்தன்னு வை, உன்னை நான் தான் என்னவோ பண்ணிட்டம்னு எல்லாரும் சொல்லுங்க..எதுவாயிருந்தாலும் சொல்லிட்டு அழு சிவா..” ராக்கியின் வரலாற்றில் முதன் முறையாகத் தன்மையாய் பேசுகிறான் அதுவும் சிவாவிடம்.. 

“அது ஒண்ணுமில்லை..” என்று சொல்லத் துவங்கியவளுக்கு பெண்மைக்கே உரிய மெல்லிய தயக்கம் தடுக்க வாயை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். 

தயக்கம்!! பெண்மைக்கே உரிய அழகான அதே நேரத்தில் ஆபத்தான உணர்வு..பல விசயங்களைப் பகிராமல் மறைப்பதற்கு முக்கிய காரணமே தயக்கம் தான்..ஆண்களுக்கும் தயக்கம் இருக்கும் தான் ஆனால் பெண்களில் அளவிற்கு இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. 

நடந்த தப்பான விசயங்களை நினைத்துத் தான் அழுகிறாள் ஆனால் அதைச் சமூகத்திடம் சொல்ல அவளது தயக்கம் தடுக்கிறது. சொன்னாலும் என்ன செய்துவிடப் போகிறார்கள்..? ஆணுக்குக் கொடுமை நடந்தால் வேறு பெண்ணுக்கு கொடுமை நடந்தால் வேறு எனச் சொன்னாலும் இவ்விருவருக்குமே நியாயம் கேட்க, நாமெல்லாம் திரண்டு நிற்போம்..அதே நிலை மூன்றாம் பாலினத்திற்கு வந்தாள், குறைகள் குற்றங்கள் எல்லாம் அவர்கள் பக்கம் திரும்பிவிடும். 

ஏனென்றால், நம்மைப் பொறுத்தவரையில் அவர்கள் இச்சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள்..!? 

ருத்ராங்கி வருவாள்..

கருத்துக்களை சொல்ல 

comments

error: Content is protected !!