~16~
தனது இதழில் அழுந்தப் புதைந்து கவியெழுதுபவனை உதறித் தள்ள நினைத்தவள் முயற்சிக்க,
அவளது முயற்சிகளை ஒற்றைக் கை கொண்டு தகர்த்தவன், மேலும் மேலும் அவளது இதழில் புதைந்தான்.
அதற்கு மேல் அவனைத் தடுக்க வலு இல்லாமல், கண்களில் கண்ணீர் வடிய அவனது மூடிய விழிகளைப் பார்த்தாள்.
தித்திப்பான உதடுகளில் சுவைத்த உப்பு சுவையில் தன்னிலை அடைந்தவன், விழி மலர்த்தி அப்ஷராவின் முகம் பார்க்க, அதில் கண்ட வேதனையில் அவளை விட்டு விலகினான்..
அவளை நோகடித்துவிட்டோம் என்பது நன்றாகப் புரிந்த போதும், இன்று செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்க மனம் ஒப்பவில்லை.
அவன் விலகியதும் எழுந்து விலகியிருந்த சுடிதாரை சரி செய்தவள், “எதுக்கு இப்படி பண்ணுனீங்க..?” என்றாள் கண்ணீர் வழிய..
உடனே பதில் சொல்லாமல் அவன் அமைதியாய் இருக்க, “உங்களுக்கு எப்பவுமே என் மனசு புரியாதாங்க…எனக்கு என்ன பண்ணுறதுன்னு புரியல..?” நேற்றில் இருந்து அவனது மாற்றம் புதுமையாய் இருக்க, எதை நம்புவது எதை விடுவது எதை தொடருவது எனப் புரியாமல் அல்லாடினாள்..
முத்தமிட்டான் தான் திருமணம் ஆன இத்தனை வருடம் கழித்து இரண்டாம் முறையாக முத்தமிடுகிறான் ஆனால் காதலாய் முத்தமிட்டானா என்பதில் தான் அவளது குழப்பம்..
அவளது அழுகையைத் தாங்க முடியாதவன் அவளைத் தொட நினைக்க..
அவனது எண்ணம் புரிந்து இரண்டடி பின்னடைந்தவள், “என்னைத் தொடாதீங்க…மீறித் தொட்டா நான் செத்துருவேன்..” உறுதியான அவளது குரலில் தூக்கி கரத்தை கீழிறக்கியவன்…
“என்னை உனக்குப் புரியலையா டி..” அவனது கலங்கிய குரல் மனதை அசைத்தாலும் அதைப் பொருட்படுத்தாதவள்
“எனக்கு புரியலங்க..இந்த திடீர் பாசம் பேச்சு..எதுவுமே புரியல…மாமா திட்டினதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா அது வேண்டாம்…ப்ளீஸ் என்னால இதுக்கு மேல போலியான பாசத்தை எல்லாம் பார்க்க முடியாது..”
“நான் தனியா சமாளிச்சுப்பேன்..இந்த ஐந்து வருஷத்துல எப்படி சமாளிச்சனோ அதே மாதிரி…” பேச்சைப் பாதியில் நிறுத்தியவள்..
“ஒண்ணு சொல்லவா..?” கண்களைத் துடைத்து அவன் முகம் பார்த்து கேட்க
“ம்…சொல்லு..” என்றவனும் அவளது முகம் பார்த்தான்
“எனக்கே எனக்கு என்ன வேணும்னு புரியலங்க..” குழந்தையாய் உதடு பிதுக்கி அழுபவளை வாரி அணைக்க கைகள் பரபரத்தாலும் அதை அடக்கியவன்
“இங்க பாரு டி..” அவனின் அழைப்புக்கு
“ம்..” எனப் பதிலளித்தவள் அவனது முகம் காண மறுக்க
“என்னை நிமிர்ந்து பாரு டி..” அவனின் அதட்டலில் அவன் முகம் கண்டதும்
“என்னை யாராச்சும் வற்புறுத்தி ஏதாச்சும் செய்ய வைக்க முடியும்னு நீ நினைக்கிறியா..?” நேர்பார்வை கொண்டு அவன் கேள்வி கேட்க..
“இல்லை..” என்பது போல் அவள் தலையசைக்கவும்
“ம்..குட்…எனக்கு பிடிச்சா எனக்கு தோணுனா மட்டும் தான் ஒரு விசயத்தைச் செய்வேனே தவிர்த்து வேற யாரும் சொல்லி நான் பண்ண மாட்டேன்..” என்றவனுக்கு அவள் தெரியும் எனப் பதில் கொடுக்க
“அது தெரிஞ்சும் எப்படி நீ அப்பா சொல்லி உன்கிட்ட பேசுறம்னு நினைக்கலாம்..? அப்படியே அப்பா சொல்லி உன்கிட்ட பேசுறதா இருந்தா நம்ம கல்யாணம் ஆன புதுசுலயே உன்கிட்ட பேசிருக்கனும்..” என்றவன் அடுத்து தனது பேச்சைத் தொடங்கும் முன் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர, ஒரு நிமிடம் எனச் சைகை செய்தவன்
“சொல்லுங்க..” என்றான் போன் அட்டென்ட் செய்து..
அந்தப் என்ன சொன்னார்களோ? அதற்கு இவன், “சரி இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பிட்டேன்..ஃபைலை ப்யூன் கிட்ட கொடுத்து விடுங்க..” ஆணையாய் சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு..
“அப்ஷரா..எனக்கு பாம்பே’ல இம்பார்டென்ட் மீட்டிங் இருக்கு..எப்படி மறந்தேன்னு எனக்கே தெரியல..இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பனும் ட்ரைன்ல பெங்களூர் போயிட்டு அங்க ஒரு சின்ன வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு பாம்பே போகனும்”
“எதையும் நினைக்காம இரு..சீக்கிரமா வரேன்..” மனதைப் புரிய வைக்க அவன் நினைக்க, விதியோ அதுபடி வேலை செய்தது.
எப்போதையும் போல் அவனது முகத்தைப் பார்த்தே அவனுக்காகச் சரி எனச் சொன்னவள், அமைதியாய் அவனுக்கு உதவ முற்பட..
அவளது கைகளை தடுத்தவன், “உன்னை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன் இருந்தும் நீ எனக்கு ஹெல்ப் பண்ணுற..முடிந்த அளவுக்கு நான் செய்ததை சரி செய்யப் பார்க்கிறேன்…” சரிசெய்ய முடியாது எனத் தெரிந்தும் தைரியமாகச் சொன்னான்..
அதைப் புரிந்தவளுக்கும் பழசைக் கிளற மனம் இல்லை…அவனது மனநிலையில் யாராக இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பர் என்பதைப் புரிந்து கொண்டவள்..
சின்னதாய் சிரித்தவள், “பத்திரமா போயிட்டு வாங்க..” என்றவளும் அதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டாள்..
பேச நேரம் இல்லாததாலும், கடைசி நேரத்தில் இரயிலைப் பிடிக்க நினைத்தவன் விரைவாய் கிளம்பிவிட்டான்..
ருத்ராவிடமும் ஞானவேலிடமும் விடைபெற்றவன், அவசரமாய் கிளம்பிவிட்டான்..
பயணத்தைத் தொடர்ந்தவன் இறுதி நேரத்தில் ரயிலை பிடித்து பெங்களூர் நோக்கிப் போனவனின் மனமோ அவனது எண்ணத்தின் தேடலைத் தொடங்கியது.
பம்பாயின் பயணம் தேடலுக்கான விடை கொடுக்குமா..?
******
ஏதோ ஒரு வேகத்தில் சிவாவின் அழுகையைக் காண முடியாமல் ராதை அழைத்து வந்துவிட்டாலும், மனம் கூனிக் குறுகியது.
ஏற்கெனவே சுற்றத்தார் அவர்களது குடும்பத்தை விலக்கி வைத்து சிவாவை கேலிப் பொருளாய் பார்ப்பதும் அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்க இப்போது கோமுவின் பேச்சு இன்னும் அழுத்தியது.
சிவாவை வைத்து தவறான தொழில் செய்வதாய் சொல்லாமல் சொல்லி சென்றுவிட்டாள் கோமு.. தனது நிலையைக் கிரகித்து கொள்ள நினைத்தாலும் முடியவில்லை.
நடந்த களோபரத்தில் சர்வாவை யாரும் தேடவில்லை என்றாலும் சிவாவின் மனதில் அவனது ஒதுக்கமும் பதிந்தது.
சர்வாவும் கண்ணனும் கால் போன போக்கில் நடக்க, சர்வாவிற்கு எந்த அளவிற்கு வேதனை இருந்ததோ அதே அளவு வேதனைக் கண்ணனுக்கும் குறையாமல் இருந்தது.
நடந்து நடந்து கால் சோர்ந்த இருவரும் ப்ளாட்பாரத்தில் அமர, யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனப் புரியாத நிலை. மெதுவாக சர்வாவின் தோள் தொட்ட கண்ணன், “டேய் மச்சி..” என்க
அவன் கூப்பிட்டது தான் தாமதம் என்பது போல் அவனை இறுகத் தழுவி அழத் தொடங்கினான்..
“மச்சி..அழாத டா..” என்ற விதவிதமான சமாதானங்கள் சர்வாவின் காதில் ஏறவில்லை..
சில மணி நேரத்திற்குப் பின் தன்னை தேற்றிக் கொண்டவன் கண்ணனிடம் இருந்து விலகி அமர்ந்து..
“தப்பு பண்ணிட்டேன் மச்சான்..” எனச் சொல்ல
“நீ என்ன டா மச்சி பண்ணுன…எதுவும் நினைக்காத..” என்றான் கண்ணன்..
“இல்ல மச்சான்..யார் என்ன கிண்டல் பண்ணிருந்தாலும், நான் என் சிவாவ விட்டுருக்க கூடாது டா…நான் அவளோட இருந்திருந்தா ராக்கி ஹெல்ப் பண்ண வேண்டிய சிட்டுவேஷன் வந்திருக்காது…யாருக்குமே இந்தக் கஷ்டம் வந்திருக்காது டா..” கண்ணீர் மல்கப் பேசும் நண்பனைத் தோளோடு அணைத்தவன்..
“ப்ளீஸ் டா…இனி நடக்கப் போறத பத்தி மட்டும் பேசு..”
“இனி நடக்க என்ன டா மச்சான் இருக்கு…சிவாக்கு இப்போ பதினேழு வயசு தான்டா ஆகுது அதுகுள்ள சிவாவுக்கு வந்த பிரச்சனைய பார்த்தியா..?”
“நேத்து நைட் என்கிட்ட தான் டா படுத்திருந்தான்..ஆயிரம் கதை சொல்றான் மச்சி..அப்பவும் இப்பவும் அவன் ப்ரெண்ட்ஸ் இல்லையாம், ஆனா அப்போ பார்த்தா சிரிப்பாங்க இப்போ டீச்சர்ஸ்ல சில பேர் கூட என்னைத் திட்ட மட்டும் தான் செய்வாங்க சொல்றான் மச்சி..”
“எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு டா…சில பேர் அவன் கிட்ட கூட உட்கார மாட்டாங்களாம்… நான் தப்பு பண்ணிட்டேன் என் தம்பிய நானே கஷ்டத்துல தள்ளிட்டேன் மச்சி..”
சர்வாவின் வார்த்தைகளைக் கேட்ட கண்ணனுக்கும் நெஞ்சம் வேதனையில் கசங்க
“மச்சி இப்போ சிவா அழுதுட்டு இருப்பான் நாமளும் அவன் கூட இல்லைனா ரொம்ப அழுவான் டா..வா போகலாம்..” இவ்வளவு நேரம் அழுதவனுக்கு கண்ணன் சொன்னது சரியென பட வீட்டிற்கு வரும் போது வீடே நிசப்தமாய் இருந்தது.
மாலையில் இருந்து அழுத அழுகையும் வேதனையும் அங்கிருந்த வரை சோர்வு கொள்ளச் செய்ய அனைவரும் தூங்கிவிட்டிருந்தனர்..
சிவா எங்கே என கண்களால் தேடியவர்களுக்கு விடையாய் அவளும் சாராவும் சர்வாவின் அறையில் படுத்திருக்க
அவள் அருகில் சென்றவன் போர்வையை இருவருக்கும் மூடிவிட்டு வந்து ஹாலில் படுத்துக் கொண்டான்..
கண்ணனும் சர்வாவும் படுக்க இடம் காணாது என்பதால் ஹாலில் இவர்கள் படுக்க, காலையில் எழுந்த சிவாவிற்கு அவர்கள் தன்னைவிட்டு ஒதுங்க நினைப்பது போல் இருந்தது.
ராதையின் முகம் வெறுமையாய் இருந்தது, கிருஷ்ணாவோ எங்கே தான் துவண்டால் குடும்பம் மொத்தமும் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயத்திலே துக்கத்தை தன்னுள் ஆழப் புதைத்தவர் வெளியே சகஜமாய் இருக்க முயன்றார்.
அவரின் நிலை புரிந்து வாசனும் நேற்றைக்கு நடந்தவை கனவு என்பது போல் பேச, யாரின் மனமும் சந்தோசிக்க முடியாமல் போலியாய் இதழ் சிரித்து அந்நிமிடத்தைக் கடந்து செல்லவே நினைத்தனர்.
வீட்டுக்குள் இருக்கும் வரை வெறுமையாய் இருந்த மனம் வெளி வாசலுக்கு வந்தாலே அனைவரின் ஏளனமான பார்வையில் வேதனையை வாங்கி வந்தது.
இதுவும் கடந்து போகும் என நினைத்தும், கடவுளின் பிள்ளையாய் சிவாவை ஏற்று வளர்க்க நினைத்த ராதைக்கு நேரம் போக போக, “சிவாவிற்கு விஷம் வைத்துக் கொன்றிருக்க வேண்டுமோ?” எனச் சஞ்சலத்தில் ஆழ்ந்தது.
‘என் பையனுக்கு நானே விஷம் வைக்க நினைத்துவிட்டேனே’ மனம் அரற்ற, தெளிவில்லா பல குழப்பங்களில் கண்ணீர் கூட வர மறுத்தது.
‘நேற்று இருந்து சந்தோஷமே தங்களது வாழ்வின் இறுதி சந்தோஷம் போல’ சிவாவின் முகத்தைக் காணவும் முடியாமல் அவளை அணைக்கவும் முடியாமல் தாயான ராதையின் மனம் கனத்தது.
அன்றைய பொழுதை எப்படிக் கடந்தார்கள் என யாராவது கேட்டால் சத்தியமாய் கிருஷ்ணனின் குடும்பத்திடம் பதில் இருக்காது.. ஏன் வாழ்கிறோம்? என்ற நிலைக்கு வந்திருந்தார் ராதை.
அவரைப் பற்றியே நினைத்த ராதை சிவாவைப் பற்றி யோசிக்க மறந்தாரா இல்லை மறுத்தாரா என்பது அவர் அறிந்தது.
வேடிக்கையாளர்களுக்கே இவ்வளவு துன்பம் இருக்கும் போது, அதனின் மூல காரணமான சிவாவின் வலி அங்கு யாருக்கும் புரியாமல் போனது.
இளம் வயது..எது உண்மை எது பொய்மை..எது நிஜம் எது நிழல்..எதைச் செய்ய வேண்டும்..எதைச் செய்யக் கூடாது.. எனப் பிரித்து பார்க்க முடியாத வயது.
அவளது வயதிற்கு வந்த துன்பங்கள் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம் தான்..
சில நேரம் பிரச்சனையில் தாக்கத்தில்..துக்கத்தின் முடிவில் மனதில் ஒரு வலி பரவும் உணர்ந்திருக்கிறீர்களா?
எதுவோ நெஞ்சைப் பிசைந்து அடைப்பது போல..
வெட்ட வெளியில் நின்றாலும் மூச்சுக் காற்றுக்கு ஏங்கும் அந்நொடி..? ஏன் வாழ்கிறோம் எனப் போராடும் அந்நிமிடம்..? இதோடு வாழ்க்கை முடிந்துவிடாதா என ஏங்கும் அக்கணம்? ரணமான அவஸ்தை?
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நமது பெயரிட்டு அழைத்தாலும் யாரும் தனக்கு இல்லை என்ற நிலை..? கடந்து வந்த ஒவ்வொருவரும் என் எதிராளிக்குக் கூட இத்துன்பம் வரக் கூடாது என கண்டிப்பாக நினைப்பார்கள்.
அதே நிலையில் தான் சிவாவும் இருந்தாள்.
வாழ்க்கையில் ஓட ஆரம்பிக்கும் முன்னே களைத்து விட்டாள்..இனி தான் அவளது ஓட்டம் ஆரம்பம் எனத் தெரியாமல் போய்விட்டது..
பல சிந்தனைகளின் முடிவில் சாகலாம் என முடிவெடுத்தவளுக்கு அன்னையும் தந்தையும் அழுவார்கள் என்று தோன்ற..
எங்கேயாவது போய் செத்துவிடலாம் என நினைத்தவள், நடுச் சாமத்தில் வீட்டைவிட்டு வெளியேறினாள்..
பிள்ளை அனைவரையும் யோசித்து அவளுக்குத் தெரிந்த வரையில் ஒரு முடிவெடுத்து வெளியேறிவிட..
யாரையும் சிந்திக்க மறந்த தாய் தனது முடிவை நோக்கி அந்தரத்தில் சேலைக் கட்டினாள்..
ருத்ராங்கி வருவாள்..
Leave a Reply