Sempunal – 1
Sempunal – 1
செம்புனல் – 1
கிடங்கில் சூழ்ந்திருந்த புழுதி மூக்கில் நுழைந்து தொண்டையைக் கமறச் செய்தது. லாரியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகளை உள்ளே தூக்கிச் சென்று அடுக்க வேண்டும். ஒருவன் இரண்டாவது மூட்டையை முதுகில் சுமந்து எட்டி நடைப் போட்டபோது முதல் மூட்டையை எந்த நொடியிலும் கீழே போட்டுவிடுவோம் என்ற நிலையில் குனிந்து தூக்கி நடந்தனர் இரண்டு பெண்கள்.
“என்னங்கடி பூச்சிப் புடிக்குறீங்க? தூக்கி என் முதுகுல ஏத்திவிடுங்க”
“வேணாம் தெய்வா. ரொம்ப கனமா இருக்குடி. எங்க ரெண்டுப் பேராலத் தூக்க முடியல… நீ ஒத்த ஆளாத் தூககுறதெல்லாம் கஷ்டம்”
“இன்னும் பத்தடி இப்படியே நடந்தா விழுந்து வாரிடுவீங்க. நில்லுங்கடி முதல்ல. சொல்ல சொல்லப் போய்க்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எல்லாம் நான் தூக்குவேன். ஒரு கைப் புடி”
சிறு குழந்தையை உப்புமூட்டைத் தூக்கும் லாவகத்துடன் மூட்டையைத் தூக்கி முதுகில் வைத்து கூன் போட்டு நடந்தாள் தெய்வா.
“மனுஷியாடி இவ? அசால்டாத் தூக்கிட்டுப் போறா? நம்மளால ஏன் வெண்ணிலா முடியல?”
“நல்லா சத்தா சாப்பிடணும். நம்ம சாப்பிடுறதெல்லாம் சாப்பாடா? சின்ன வயசுலேந்து அப்படி வேலை செஞ்சுப் பழகிருப்பா மலரு”
“இன்னும் இங்க எதுக்கு நிக்குறீங்க? கைய காலக் கழுவிட்டுக் கடைக்குப் போக வேணாமா? அப்பறம் லேட்டாயி போச்சுன்னு அதுக்கும் வாங்கிக் கட்டிக்கணும்”
“நீ வரதுக்காக நிக்குறோம் தெய்வா. கடைல வேற சரக்கு எறக்கிருப்பாங்க. சீக்கிரம் அடுக்கி வெச்சுட்டுக் கெளம்பணும்”
“சீக்கிரமா? தெனம் போற மாதிரி இன்னைக்கு ஆறு மணிக்குக் கெளம்புறதெல்லாம் நடக்காத காரியம் வெண்ணிலா. எல்லாம் பிரிச்சு அடுக்கணும். எப்படியும் எட்டு மணியாவது ஆகிடும்”
“என்ன தெய்வா இப்படி சொல்லுற? வெண்ணிலா வீட்டுல அவங்க அக்கா குடும்பத்தோட வந்திருக்காங்க. ரெண்டு நாள்லக் கெளம்பிடுவாங்க வேற. பாவம்… அவங்களோட இருக்கலாம்னு ஆசையா இருந்தாடி”
“அதுக்கெல்லாம் என்ன பண்ணுறது? சரி வேணும்னா நீ சீக்கிரம் கெளம்பு. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து வேலைய முடிச்சுட்டுப் போறேன்”
“நாங்களாவது டவுனுக்குள்ள போவோம். நீ காட்டுக்குள்ள போகணும் தெய்வா. வேணாம்டி”
“எதுடி காடு? எங்கயோ இருந்த மரத்தப் புடுங்கி எங்கயோ நட்டு வெச்ச மாதிரி பொழப்பத் தேடி ஊரு விட்டு ஊரு வந்து ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம வாழுறீங்களே…. நீங்க தான் காட்டுல வாழுறீங்க. எனக்கு எந்த பயமும் கிடையாது. ராத்திரி நேரங்கழிச்சுப் போனா என்ன?”
“கோச்சுக்காதடி… அவ உன் மேல இருக்க அக்கறையில தான சொன்னா? நீ உன் வாய வெச்சுக்கிட்டு சும்மா இரு மலரு. அவ ஊரப் பாத்துக் காடுன்னு சொன்னா அவளுக்குப் புடிக்காதுன்னு ஒனக்குத் தெரியாதா? சரி தெய்வா. இன்னைக்கு என் வேலையையும் சேர்த்துப் பாரு. கையக் கழுவுவோம் வா”
தெய்வா வாயை இறுக்கி மூடியிருந்தாள். அவள் நடையின் வேகத்திற்கு மலராலும் வெண்ணிலாவாலும் ஈடு கொடுக்க முடியவில்லை. துப்பட்டாவை பின்னால் முடிந்து சுடிதார் பேண்டை மடித்துவிட்டுக் கிடங்கின் பின் பக்கம் இருந்த பைப்பில் கைகளைக் கழுவினாள்.
“பேச மாட்டியா? எதுக்கெடுத்தாலும் இப்படிக் கோவம் வந்துடுது உனக்கு. தெரியாம சொல்லிட்டா விடேன்… நாங்களும் உன்ன மாதிரி தான் வேலைப் பாக்குறோம். ஆனா நீ மட்டும் எப்படி சிக்குன்னு இருக்க?”
“ஆமா இருக்காங்க…”
“நானும் இந்தத் தொப்பையக் கொறைக்கப் பட்டினி இருந்துக்கூடப் பாத்துட்டேன். கொறைவனாங்குது. உனக்குத் தொப்பையே வெக்காதா?”
“அதெல்லாம் எப்பயும் இருந்ததில்ல”
“சுடிதார இன்னும் கொஞ்சம் டைட்டா தெச்சாதான் என்ன? இவ்வளோ லூசாவா போடுவாங்க?”
“எனக்கு இப்படிதான் பழக்கம்”
“கையக் கழுவிட்டு வெயில்ல நின்னா எப்படி மின்னுறப் பாரு… நாங்க உன் அளவுக்குக் கருப்பில்லன்னாலும் எங்கக் கையெல்லாம் இப்படியா மின்னுது?”
“இப்ப என்னங்கடி உங்களுக்கு? நான் கோவத்த விட்டு உங்ககிட்டப் பேசணும். அதான? சரி பேசுறேன்”
“அப்பாடா… பேசிட்டா… ஆனா நாங்க சொன்னதெல்லாம் பொய்யில்ல. நீயே வேணாப் பாரு… என் கைக்கும் உன் கைக்கும் எவ்வளோ வித்தியாசம்?”
“அட ச்ச கைய விடு… கருவாச்சி மாதிரி இருக்கேன். வந்துட்டாளுங்கக் கிண்டல் பண்ண”
“கிண்டலா? சத்தியமா தெய்வா. நீ…”
“நேரமாச்சு. வா வா. கொஞ்ச தூரம் ஓடுனா நேரத்துக்குப் போயிடலாம். இல்லன்னாப் பேசியே சாவடிப்பான் அந்த சூப்பர்வைசர்”
மூவரும் ஓடத்தான் வேண்டியிருந்தது. அவர்கள் வேலைப் பார்க்கும் சூப்பர்மார்க்கெட்டுக்கும் இப்போது மூட்டைகளை அடுக்கி வைத்த குடோனுக்கும் இடையிலான இருபது நிமிட நடை பயணத்தை பத்து நிமிட ஓட்டத்தில் கடந்து சென்றால் சூப்பர்வைசரின் திட்டிலிருந்து தப்பிக்கலாம்.
கடைக்கு வந்தபோது நினைத்ததை சாதித்த திருப்தி. அட்டைப் பெட்டிகளைப் பிரித்துப் பொருட்களை அடுக்க ஆரம்பித்தனர். ஆறு மணிக்கு எப்படியோ பேசிக் கெஞ்சி சீக்கிரம் போக சூப்பர்வைசரை சம்மதிக்க வைத்துக் கிளம்பினாள் வெண்ணிலா.
ஒன்பது மணி சுமாருக்கு வேலை முடிந்தது. பஸ் ஏற மலர் ஒரு பக்கமும் தெய்வா மறுபக்கமும் நடக்க ஆரம்பித்தனர். ரோட்டில் அவளைக் கடந்து போன ஆட்டோ நின்றது.
“எங்கம்மாப் போகணும்?”
“ஆட்டோ வேணாம். போங்க”
“எங்கப் போகணும்னு…”
“வண்டி எடுத்துட்டுக் கெளம்புங்க…”
சொன்னவள் நகரவில்லை. ஆட்டோ கண்ணைவிட்டு மறையும் வரை அசையாமல் நின்றுப் பார்த்தாள்.
மூன்று வருடங்களாக நடந்து பழகிய வழி. காலை கல்லூரியில் படிப்பு. மாலை சூப்பர்மார்க்கெட்டில் வேலை. படிப்புக்கான செலவில் ஒரு பகுதியையாவது தானே சம்பாதித்துவிட வேண்டும். வீட்டில், ஊரில் எத்தனை எதிர்ப்புக் குரல்கள்? இன்னும் ஒரே மாதம். படிப்பு முடிந்துவிடும். பட்டதாரி… தலையை நிமிர்த்தி வேகமாக நடந்தாள்.
கடைக்கும் பஸ் ஸ்டாப்புக்கும் நடுவில் தெரு விளக்குகள் இல்லாத 3 தெருக்கள். நேரம் கடந்து கிளம்பும் நாட்களில் இந்த சிறிய தூரம் மட்டுமே அவளுக்கு பயம் தரும். தெரு நாய்கள் ஏராளமாக அலையும் இடம். ஒரு முறை நான்கு நாய்கள் நீண்ட நேரம் சண்டையிட, கடைக்கே திரும்பிப் போய்விடலாமென்று யோசித்தது நினைவு வந்தது.
இன்னும் வேகமாக நடந்தாள். எதிரிலிருந்தும் பின்னாலிருந்தும் கடந்து போன வண்டிகளால் வழியில் வெளிச்சம் கூடிக் குறைந்து கொண்டிருந்தது.
முதல் தெருவைக் கடக்கும்போது பெரிய சத்தத்துடன் அருகில் வந்து நின்ற கார் அவளையும் நிற்க வைத்தது. திரும்பிப் பார்க்கும் முன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் அவள் தலையைப் பிடித்து முகத்தில் துணியால் அழுத்தினான். தலையை உலுக்கி அவன் கையைப் பிடித்துத் தள்ள முயன்றாள். மூச்சுத் திணறிக் கண்கள் சொருக காரின் மீதே சாய்ந்தாள்.
தலையை யாரோ உலுக்கினார்கள். கண்களைத் திறந்தாள். கார் கரடு முரடான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. பின் சீட்டில் படுத்திருந்தவள் எழுந்தாள். வெளியிலும் கார் உள்ளிலும் இருட்டு.
“நிறுத்துடா… டேய்… கார நிறுத்துடா”
அவன் முடியை இரண்டு கைகளாலும் பிடித்து ஆட்டினாள். தலையை மட்டும் திருப்பி அவள் முகத்தில் விரல்களை மடக்கிக் குத்தினான்.
கண்கள் கலங்கிவிட பின்னால் சாய்ந்தாள். ஜன்னலின் வழியே தெரிந்த மரங்கள் அவளுக்குப் பரிச்சயமானவை. அது அவள் ஊர் எல்லைக்கருகில் இருந்த இடம். வாழுமிடம் கண்டதும் தெம்பு வந்தது.
“வண்டிய நிறுத்து. நிறுத்துன்னு சொல்லுறேன்ல… யாருடா நீ?”
தோளில் துப்பட்டாவில் குத்தியிருந்த பின்னை கழட்டி அவன் தோள், கை என்று ஆவேசம் கொண்டு குத்தினாள். திரும்பி மீண்டும் அவள் முகத்தில் குத்தினான். இம்முறை ரத்தம் வந்தது.
இன்னொரு பக்கம் இருந்த பின்னை கழட்டினாள். அவனருகில் கையைக் கொண்டு செல்ல அவள் மணிக்கட்டைப் பிடித்து சீட்டில் அடித்தான். பின் கீழே விழுந்தது.
துப்பட்டாவை கழுத்திலிருந்து உருவி அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டாள். அதை அவள் இறுக்கும் முன் காரை ப்ரேக் போட்டு நிறுத்தி ஒரு கையை கழுத்துக்கும் துப்பட்டாவுக்கும் இடையில் நுழைத்து முன்னால் இழுத்து இன்னொரு கையால் சாவியைத் திருகி காரை நிறுத்தினான்.
கார் நின்றவுடன் கதவைத் திறக்க முயன்றாள். லாக் செய்யப்பட்டிருந்தது. டிரைவர் சீட்டிலிருந்து தள்ளாடி எழுந்து பின்னால் வந்தான். கதவில் சாய்ந்து இரண்டு கைகளாலும் அடித்தவள் கால்களால் உதைத்தாள்.
முதலில் அவள் கால்களைப் பிடித்து இழுத்து அதன் மீதே உட்கார்ந்தவன் கைகளைப் பிடிக்க முயன்றான். அவனை அடிப்பதிலேயே குறியாக இருந்தாள்.
கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மீண்டு மீண்டும். கொஞ்சம் அமைதியானவள் அவன் முகத்தை நகத்தால் கீறி அருகிலிழுத்தாள்.
“நீ? நரன்?”
அவள் சுதாரிக்கும் முன் அவள் துப்பட்டாவை கொண்டே ஒரு கையைக் கதவிலிருந்த கைபிடியுடன் கட்டினான். இன்னொரு கையால் அவனைத் தள்ளி எழ முயன்றாள். மேலும் இரண்டு அறை விட்டான். இன்னொரு கையையும் துப்பட்டாவில் சேர்த்துக் கட்டினான்.
கத்த வேண்டும். யாராவது வரக் கூடும். இவ்வளவு நேரம் இது ஏன் தோன்றவில்லை? இந்நேரத்தில் இங்கு யாராவது இருப்பார்களா?
“விடுடா… யாராவது வாங்களேன்…”
இத்தனை நேரம் வாங்கிய அடியும் நடத்திய போராட்டமும் சோர்வடையச் செய்திருந்தன. பத்தாது. இந்த சத்தம் பத்தாது. ஆடைக் கிழிபட அவன் மேலும் அடிக்கக் கை ஓங்க “விட்ரா” என்று ஓங்காரமாய்க் கத்தினாள். இருமல் வந்தது.
முகத்தருகில் குனிந்தவனிடமிருந்து வந்த மது வாடை குடலை புரட்டியது. வாயில் துணியை வைத்து அடைத்தான். தலையை சிலுப்பினாள். துப்பினாள்.
இரண்டு கைகளையும் வாயில் வைத்து அழுத்தினான். மூச்சுக் காற்றை உள் வாங்க அவள் எடுத்துக் கொண்ட நேரத்தில் மொத்தத் துணியும் அவள் வாய்க்குள் திணித்துவிட்டான்.
தொண்டையில் சிக்கிக் கொண்ட நாக்கை முன்னே நகர்த்தித் துணியை வெளியே தள்ள நினைத்தாள். முடியவில்லை. உடலைத் திருப்பித் தன் மீது உட்கார்ந்திருந்தவனைக் கீழே தள்ள முயன்றாள். முடியவில்லை. காலால் கதவில் உதைத்தாள். அதனால் எந்தப் பலனுமில்லை. கத்த முயன்றாள். தொண்டையிலிருந்து வந்த சத்தம் அவள் காதுகளையே எட்டவில்லை. அவள் செயல்களின் வேகம் குறைந்தது. எதையும் நிறுத்தவில்லை.
கையை உருவி கொள்ள முயன்றாள். வலியெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவிய வலி கண்ணிலிருந்து கண்ணீர் வழியச் செய்தது. கடைசியாக பலம் முழுதும் திரட்டி ஒருமுறை அவனைத் தள்ள முயன்றாள்.
“அடங்க மாட்ட?”
கத்தியவன் அறைந்தான். தலை வலியெடுக்கக் கண்கள் தாமாக மூடிக் கொள்ள ஏதோ சொல்ல நினைத்து எழுப்பிய ஒலி ஈனஸ்வரத்தில் கேட்க மயங்கினாள்.
கை இழுபட இமைகளைப் பிரிக்க முடியாதபடிக் கண்ணீர் தேங்கியிருந்தது. தலையை ஒருபக்கம் சாய்த்து மெல்லக் கண் திறந்தாள். ஆடை யாவும் கீழே கிடந்தன. ரத்தக் கரைப் படிந்த கால்கள் சீட்டிலிருந்த கீழே விழ அவளை காரிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு கையை அவனிடமிருந்து உருவி வாயிலிருந்த துணியை எடுத்து வீசியவள் “விடு…” என்றாள்.
கையை விட்டான். காரிலிருந்து அவள் ஆடைகளைத் தூக்கி அவள் மீதே வீசியெறிந்தான். காரை கிளப்பி லைட்டை போடாமல் ஓட்டிச் சென்றான்.
முழங்கையை ஊன்றித் திரும்பினாள். கல் குத்திக் கிழித்தது. உள்ளங்கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்தாள். கீழே கிடந்த ஆடையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். உதடு காய்ந்து நாக்கு வறண்டிருந்தது. வாயால் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தவள் இரண்டு உதடுகளையும் சேர்த்து மடக்கினாள். கிழிந்திருந்த உதட்டோரத்தில் பல் பட்டதும் உடனேயே பிரித்துவிட்டாள்.
சுற்றி இருட்டாய் இருந்தபோதிலும் எங்கிருக்கிறோமென்று புரிந்தது. கை ஊன்றி எழுந்தாள். நிற்க முடியவில்லை. கால்கள் நடுங்கின. மீண்டும் தரையில் அமர்ந்தாள். மூன்றாவது முறை முயற்சி வெற்றிப்பெற எழுந்து நின்றாள்.
இரண்டடித் தள்ளாடிச் சென்று மரத்தைப் பிடித்து அதில் சாய்ந்து நின்றாள். கையிலிருந்த சுடிதாரை அணிந்துக் கொண்டாள். உடல் முழுவதும் மறையவில்லை. துப்பட்டாக் கண்ணில் பட்டது. மரத்தில் கை வைத்து அழுத்திப் பிடித்து நேராக நின்று தரையில் பாதங்களை ஊன்றினாள். குனிந்து துப்பட்டாவை எடுத்து உடலில் சுற்றி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
ஊர் எல்லையில் ஒரு சிறிய கூட்டம். தன்னைத் தேடுபவர்களாக இருக்கக் கூடுமென்று அவர்களை நோக்கி நடந்தாள்.
கையிலிருந்த லாந்தரை தூக்கிப் பிடித்தவன் அவளை அடையாளம் தெரிந்து கொண்டான்.
“தெய்வா? தெய்வா நீயா?” கத்தியபடி ஓடி வந்தான்.
அதற்கு மேல் சக்தியில்லை. அப்படியே மடிந்து அமர்ந்தாள். ஓடி வந்தவன் கைகளை நீட்டினான். அவள் தலையிலிருந்து கால் வரை பார்த்ததும் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
அவள் தலை சரிய கன்னத்தில் கை வைத்துப் பிடித்தான்.
“அம்மா…”
சட்டென்று கையை எடுத்துக் கொண்டான். கன்னம் முழுவதும் கைத் தடங்கள்.
“என்னாச்சு? எங்கப் போன?”
“அண்ணா…”
“என்னம்மா ஆச்சு? ஏன் இப்படியிருக்க?”
“அண்ணா…”
“ஏய் யாருன்னு சொல்லு தெய்வா”
“நரன்…”
அதற்கு மேல் பேச முடியவில்லை. அவன் மீதே சாய்ந்தாள்.
“தூக்கு”
“என்னடா இப்படியிருக்கா?”
“இன்னும் எத்தனப் பேரடா பலிக் குடுக்கணும்?”
“நம்ம தலையெழுத்து…”
“யார் பேர சொல்றா?”
எல்லாம் தூரத்தில் கேட்டக் குரல்கள். உலகம் இருண்டு போனது. கேட்ட எல்லா ஆண் குரல்களும் அவனை நினைவூட்டின. சாய்ந்திருந்தவனின் மீதிருந்து சிலிர்த்து விலகியவள் தரையில் சரிந்தாள்.