செம்புனல் – 2
உடல் மரத்துப் போயிருந்தது. தலையை யாரோ கோதக் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தாள். அவள் ஊரின் பின் பக்கம் காட்டுக்குள் கொஞ்சம் தள்ளியிருக்கும் குடிசைகளுள் ஒன்றில் படுத்திருந்தாள். இங்கு எதற்காகப் படுக்க வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து எழ முயன்றாள்.
“படு தாயி…”
எரிந்து கொண்டிருந்த விளக்கைக் கையிலெடுத்த அவள் அம்மா மடியிலிருந்த தெய்வாவின் தலையை அழுத்தினார். அவர் கண்களிலிருந்து வந்த கண்ணீர் துளி அவள் கன்னங்களில் விழுந்து வழிந்தது.
“உடுப்ப மாத்திவிடுக்கா”
அவள் சித்தி கொடுத்த உடையை வாங்கியவர் தெய்வாவின் மீதிருந்த போர்வையை விலக்க அவர் கையைத் தட்டிவிட்டாள். அவர் மடியிலிருந்த தலையைத் தரையில் வைத்து உடலைக் குறுக்கி போர்வையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“தெய்வா உடுப்ப மட்டும்…”
“போ… வேணா… போ”
அவள் வாயருகில் குனிந்ததால் அவள் சொன்னது கேட்டது. அவள் சித்தி ரோஜா அழ அவள் அம்மா அவரை கட்டிப் பிடித்துக் கதறினார்.
“ம்மா…”
வெளியிலிருந்து கேட்ட அவள் அண்ணன் சிவாவின் குரலில் இருவரும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தனர். வெளியே வந்ததும் மகனின் தோளைப் பிடித்துப் பெருங்குரலெடுத்து அழுதார் செம்பருத்தி.
“அழுவாதக்கா… அக்கா…”
“நிறுத்துறீங்களா ரெண்டுப் பேரும்? வாய மூடுங்க”
“எப்படிடா அழாம இருக்க சொல்லுற?”
“ஒப்பாரி வெச்சதெல்லாம் போதும். இப்படிக் கத்திக் கதறி என்னத்த ஆச்சு இது வரைக்கும்? நாங்கப் பாத்துக்குறோம்”
“எங்க சிவா? என்னப்பா?” அவன் கை பிடித்தார் ரோஜா.
“விடுங்க சித்தி. வீட்டுக்குப் போங்க. ஊருக்குள்ள ஒரு பொம்பள அழக் கூடாது”
“தெய்வா?”
“கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா செத்துட மாட்டா. போயித் தூங்குங்க. அம்மாவையும் கூட்டிட்டுப் போங்க. இந்தப் பக்கம் ஒருத்தர் வரக் கூடாது. சபரி… பாத்துக்கோடா. வாங்கடாப் போகலாம்”
சபரியைத் தவிர அங்கிருந்த மூன்று ஆண்களும் ஊரை விட்டு வெளியே நடந்தார்கள். ரோஜாவும் செம்பருத்தியும் குடிசைக்குள் எட்டிப் பார்க்க “போங்க. வீட்டுக்குப் போங்க. நிம்மதியாத் தூங்குங்க. ஒரு பொண்ணுக்காக அழுவுறது இந்த ஊருல இதே கடைசியா இருக்கட்டும். கண்ணத் தொடைங்க முதல்ல” என்று கத்தினான் சபரி.
“அழுவாத அழுவாதங்குறீங்க? மனசாட்சி இருக்காடா உங்களுக்கெல்லாம்?”
“அழுவுறவனுக்குதான் மனசாட்சி இருக்கா? தைரியமா இரு உன்னப் பாத்துக்க நான் இருக்கேன்னு சொல்லுறவனுக்கு இல்லையா? சொல்லுறோம்ல எல்லாம் சரி பண்ணுறோம்னு… போங்க வீட்டுக்கு”
சிவாவை விட கோபமாய் இவன் பேச செம்பருத்தி விழிவிரித்துப் பார்த்தார். ரோஜா அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சபரி குடிசை வாசலை விட்டு நகரவில்லை. விடியலின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நோக்கி முன்னேறி அவன் பாதம் தொட்டுத் தாண்டிச் சென்றது.
குடிசையருகில் வந்த எல்லா பெண்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சிலர் அங்கேயே நின்றார்கள். பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்து சில பெண்கள் வெளியே எட்டிப் பார்த்தனர். செம்பருத்தி தூக்குச்சட்டியுடன் வந்தார்.
“எங்கப் போறீங்க? உங்கள இங்க வர வேணாம்னு சொன்னேன்ல? சிவா பாத்தான்னா அவ்வளோதான்”
“ஒரு வா சோறாவது குடுக்க விடுங்கடாப் பாவிகளா? இப்டி அவள அடச்சு வெச்சு என்னடாப் பண்ணப் போறீங்க? புள்ள ஒடம்பெல்லாம் காயமாக் கெடக்குறாடா… கொஞ்சம் சாப்பிட வெச்சு காயத்துக்கு மருந்துப் போட்டுட்டுப் போயிடுறேன். உனக்கு புண்ணியமாப் போகும்… உள்ள விடுப்பா”
“போங்க. மருந்து?”
“இருக்குதுப்பா”
“அவக்கிட்ட எதுவும் பேசாதீங்க. போனோமா வந்தோமான்னு இருக்கணும்”
இன்னும் சில பெண்கள் செம்பருத்தியுடன் செல்ல “அவங்கம்மா மட்டும் போனாப் போதும். மத்தவங்கல்லாம் கெளம்புங்க” என்றான் சபரி.
“ஒத்த ஆளா புள்ளைய எப்படித் தூக்குவாங்க?”
கேள்விக் கேட்ட ரோஜாவை மட்டும் உள்ளே செல்லுமாறு சைகை செய்தான். தெய்வா இரவு படுத்திருந்த நிலையிலிருந்து கொஞ்சமும் அசைந்திருக்கவில்லை. செம்பருத்தி கண் கலங்க “வேணாக்கா… வெளில சத்தம் கேட்டா அப்பறம் வந்து பாக்க கூட விட மாட்டாங்க” என்றார் ரோஜா.
“இவனுங்க யாருடி எம்பொண்ண நான் பாக்கக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு? இவனுங்களால உள்ள வர முடியாமதான வாசலோட நிக்குறானுங்க”
“மெல்ல பேசுக்கா”
“எத்தன எடத்துலக் கிழிச்சு ரத்தம் வந்திருக்கு? ராத்திரி ஏதோ பழந்துணியத் தூக்கிட்டு வர மாதிரி ரெண்டுப் பேருத் தூக்கிட்டு வந்து இங்க போட்டு வெச்சிருக்கானுங்க… ஏன் வந்து பாக்கக் கூடாது? ஏன் தொடக் கூடாது?”
“அப்பப்ப நடக்குறதுதானக்கா? என்ன… நம்ம வீட்டுல நடக்கும்போது வலிப் புரியுது. இவ இருக்க நெலமையில நிக்க வெச்சு உடுப்பு மாத்துறதெல்லாம் கஷ்டம் கா. தூக்கிப் பிடிக்குறேன். முதல்ல கொஞ்சம் சாப்பிட வெப்போம். தெம்பு வரட்டும்”
தரையில் உட்கார்ந்து தெய்வாவை போர்வையுடன் சேர்த்து முதுகில் கைக் கொடுத்துத் தூக்கித் தன் மீது சாய்த்துக் கொண்டார். உறக்கம் கலைந்துவிடத் திமிறினாள். ரோஜா அவளை சமாளிக்கத் திணறினார். அவள் நீண்ட முடியைக் கொத்தாகப் பிடித்த செம்பருத்தி “ஏய்” என்று கத்த அமைதியானாள்.
பழைய சாதமும் மிளகாய் வத்தலும் எடுத்து வந்திருந்தார். சோற்றை வாயருகில் எடுத்துச் செல்ல அவளால் வாயை முழுவதும் திறக்க முடியவில்லை. சாதத்தின் அளவை பாதியாகக் குறைத்து ஊட்டினார். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் உதட்டில் விரல் பட்டுவிட முகம் சுளித்தாள்.
“இது சரி வராது. ரோஜா… அவள அசையாம புடி. கொஞ்சம் பொறுத்துக்க தெய்வா” என்ற செம்பருத்தி பெரிய கவளங்களாக எடுத்து அவள் வாயில் அடைத்தார். வலி, எரிச்சல், கூடவே காய்ந்திருந்த உதட்டுக் காயத்திலிருந்து கசிந்த ரத்தம் எல்லாவற்றையும் சாதத்துடன் சேர்த்து விழுங்கினாள்.
எடுத்து வந்த உணவு காலியானதும் தூக்கை குடிசை வாசலருகில் வைத்தார். பக்கத்திலிருந்த மண் பானையிலிருந்து சொம்பில் தண்ணீர் எடுத்து கை கழுவி மீதியை தெய்வாவிடம் நீட்டினார்.
வாங்க கை தூக்கி உடனேயே கீழே இறக்கிவிட்டாள். தோள்பட்டையைப் பிடித்துக் கண்களை மூடியவள் முன் சொம்பை இறக்கிப் பிடித்தார். வாங்கினாள். கை நடுங்கியது. இன்னொரு கையாலும் பிடித்து நீரைப் பருகினாள்.
“என் கையையும் சித்தி கையையும் புடிச்சு எந்திரி”
நின்றவுடன் தள்ளாடினாள். அவள் கைகளை இரு பெண்களும் அழுத்தமாகப் பிடித்து நிருத்தினர். செம்பருத்தி அவள் ஆடையில் கை வைத்ததும் தட்டிவிட்டாள்.
“நானே மாத்திக்குறேன்”
“நிக்கக் கூட முடியல நீ…”
“மாத்திக்குறேன்னு சொல்றேன்ல… போங்க இங்கேருந்து”
அவர்களிடமிருந்து கைகளை உருவிக் கொண்டாள். இரவு ரோஜா எடுத்து வந்திருந்த சுடிதார் தரையில் இருந்தது. குனிந்து அதை எடுத்தவள் “போங்க” என்றாள்.
“மருந்து தடவ…”
“வெச்சுட்டுப் போங்க”
“என்ன தெய்வா…”
“அக்கா… போகலாம்”
அவர்கள் வெளியே சென்றதும் பானையருகிலிருந்த கீத்துத் தட்டியை எடுத்து வாசலை மறைத்து வைத்து உள்ளே வந்தாள். ஆடைக் கலைந்து உடலைப் பார்த்தாள். நகக் கீறல், ரத்தம் கட்டி கருத்த காயம், சிராய்ப்பு, கிழிந்துத் தொங்கிய தோள், சதை பிளவென்று உடல் முழுவதும் பரவிக் கிடந்தன.
“மருந்த தடவிட்டு உடுப்பு மாத்து தெய்வா” தாயின் குரல் கேட்டது.
“மருந்துலயே குளிச்சாக் கூடப் பத்தாது. இப்ப வேணாம்”
சுடிதாரை மாட்டித் தட்டியை விலக்கி எட்டிப் பார்த்தாள்.
“இதுக்கு மேல இங்க நிக்காதீங்க. கெளம்புங்க. தெய்வா உள்ளப் போ”
“ஏன் உள்ளப் போகணும்?”
“அவள விடு. அதான் எந்திரிச்சுட்டால்ல?”
“போங்கன்னு சொன்னா கேக்க மாட்டீங்க?” செம்பருத்தியை நோக்கி கை ஓங்கினான் சபரி.
“நான் இங்கயே இருக்கேன்”
தெய்வா உள்ளே போய்விடப் பெண்கள் எல்லோரும் திரும்பிச் சென்றனர். மத்தியானமும் இதே தொடர்ந்தது. அங்கேயே உட்கார்ந்திருந்த சபரி சாப்பிட்டானா என்று யாரும் கேட்கவில்லை. அவனும் சாப்பாடு வேண்டுமென்று யாரிடமும் கேட்கவில்லை.
வெளிச்சத்தைப் போலவே இருள் அவனைத் தாண்டிச் சென்ற வேளை ஊரை விட்டுப் போன மூவரும் திரும்பி வந்தனர். சபரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
“தெய்வா வா போகலாம்” வெளியே வந்த தெய்வா சபரி பின்னால் சென்றாள். எங்கே, எதற்கென்று கேட்கவில்லை.
ஊருக்குள் வந்ததும் சிவா, வேணு, ஆத்மன் மூவரும் இழுத்துச் செல்லும் நரனையே பார்த்தாள். கைகளைப் பின்னால் கட்டி வாயையும் கட்டியிருந்தனர். தெய்வாவை பார்க்கத் திரும்பினான். அவன் முகத்தில் குத்தி முடியைப் பிடித்து இழுத்துச் சென்றான் சிவா.
அவ்விடத்தில் கூட்டம் அதிகமானது. நரன் கைகளைக் கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒரு பக்கம் அவன் கையைப் பிடித்திருந்த வேணு அவன் வயிற்றில் ஓங்கிக் குத்த ஆத்மன் அவன் இடுப்பில் குத்தினான்.
ஊர் மத்தியிலிருந்த பெரிய மேடையில் அவனை ஏற்றி நிற்க வைத்தனர். ஊர் தலைவரான ஆறுமுகம் மேடையில் ஏறி அவர்களருகில் வந்தார்.
“எதுக்கு இவன இழுத்துட்டு வந்து ஊர் கூட்டத்துல நிக்க வெச்சிருக்கீங்க?”
“தெய்வா…”
“இவனா?”
“காட்டப் பாக்க வந்தமா? ஊரப் பாக்கக் கெளம்பிப் போனமான்னு இல்லாம…”
சிவா அடிக்க ஆரம்பிக்க வேணுவும் ஆத்மனும் நரனை பிடித்துக் கொள்ளக் கீழே தெய்வாவுடன் நின்றிருந்த சபரி மேடையில் ஏறி அவனை எட்டி உதைத்தான்.
“நிறுத்துங்கடா. நீங்க அடிச்சுக் கொல்லுறதுக்கு இங்க எதுக்கு இழுத்துட்டு வந்தீங்க?”
“அடிக்காம? இவ்வளவு அடிச்சும் நிக்குறான் பாருங்க…”
மீண்டும் சரமாரியாக அடித்தனர். ஆறுமுகம் சிவாவை விலக்கி நிறுத்தினார்.
“காட்டுமிராண்டிக் கூட்டந்தான் நம்மன்னு நிரூபிக்காதீங்க. எவ்வளவோ பாடுப்பட்டு உங்களையெல்லாம் மனுஷங்களா மாத்தி வெச்சிருக்காரு எங்கப்பாரு. அவருப் பேரக் கெடுக்காதீங்கடா. சிவா… ஆள் அகப்பட்டுட்டான்ல… உன் தங்கச்சிய இவனுக்கே கட்டி வெச்சுடு”
“கட்டி வெக்குறதா? எதுக்கு? ஏன் ஒரு நாளோட விட்ட… வாழ்க்கைப் பூராக் கூடவே வெச்சுக்கோப்பான்னுத் தூக்கிக் குடுக்க சொல்லுறீங்களா?”
“என்ன பண்ணலாம்னு…”
“தெய்வா… வா இங்க… டேய் எடுடா அருவாள.. வெட்டு… உன் ஆச தீர வெட்டு”
“சிவா அவசரப்படாத. வெட்டிட்டு அவ எங்க…”
“பேசாதீங்க… இந்த ஒரு விஷயத்துலக் குறுக்க வராதீங்க. எங்கள முடிவெடுக்க விடுங்க”
“வேணு என்னப்பா… ஊர் தலைவரு சொல்லுறதுக்குக் கட்டுப்பட்டு…”
“எங்கப்பா ஊர் தலைவர்னா அவருக்கு அடுத்து நாந்தான தலைவன்? நான் சொல்லுறேன்… யாரும் குறுக்க வரக் கூடாது”
“ஆத்மா நீ வேணா அடுத்தத் தலைவரா இருக்கலாம். இப்ப உங்கப்பாதான் தலைவர். அவர் சொல்லுறதக் கேட்டுதான் ஆகணும்”
“தேவையில்ல. சின்ன வயசுலேந்து இப்படி நிறையப் பாத்தாச்சு. இவன் விஷயத்துல நாங்க எடுக்குறதுதான் முடிவு. தெய்வா வா” கீழே நின்றிருந்தவளின் கைப் பிடித்து மேடை மீது தூக்கினான் ஆத்மன்.
“புடி. வெட்டு” அவள் கையில் அரிவாளைத் திணித்தான் வேணு.
நரன் அருகில் சென்றாள். அவன் வாயில் கட்டியிருந்த துணியைப் பிடித்து இழுத்துக் கீழே போட்டாள். முகம் முழுக்கத் திட்டுத் திட்டாய் சிவந்திருந்தது.
“டேய் யாரத் தூக்கிட்டு வந்திருக்கீங்க? யார் மேலடா கை வெக்குறீங்க? என்ன? வெட்டப் போறியா? முடியுமா உன்னால? நீங்க என்னங்கடா? பெரிய இவனுங்க மாதிரி ஆளத் தூக்கிட்டு வந்துட்டா? போய் கம்ப்ளயின்ட் குடுக்க வேண்டியதுதான? அய்யா சாமி நியாயம் சொல்லுங்கன்னு…
முதல்ல நாந்தான் பண்ணேன்னு நிரூபிக்கணும். இருபத்திநாலு மணி நேரம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் பாக்கி இருக்கு. போங்கடா… சீக்கிரம் இவள ஏதாவது ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் டெஸ்ட் பண்ணுங்க. இல்லன்னா உங்களால ஒண்ணுத்தையும் நிரூபிக்கவும் முடியாது… எங்கிட்ட நெருங்கவும் முடியாது”
ஓங்கி அரிவாளின் கைப்பிடியால் அவன் மூக்கில் குத்தினாள். சிவா, ஆத்மன், வேணு, சபரி நால்வரும் அவனைத் துவைத்தெடுத்தனர்.
“இன்னும் ஏன் பாத்துட்டே நிக்குற?”
சிவா கத்த தெய்வா அரிவாளைக் கீழே போட்டாள்.
“இவன வெட்டுனா?”
“என்ன…”
“சிவா இரு… இவன வெட்டுனா? மிஞ்சிப் போனா இன்னும் பத்து நிமிஷத்துல உயிர் போயிடும். அப்பறம்? இந்த நாய் சுலபமா சாவுறதுக்கா இவ்வளோ கஷ்டப்பட்டு நம்ம உயிரப் பணயம் வெச்சுத் தூக்கிட்டு வந்தோம்?”
“வேணு சொல்லுறது சரிடா. சாவடிக்குறதுனால இந்த நாய் திருந்தாது”
“இவன உக்காந்து திருத்திட்ருக்க சொல்லுறியா சபரி?”
“இவன் செத்தா பத்து நிமிஷ வலி. அது பத்தாது. வேணு இவன நாய்னு சொன்னான்ல? நாய் தான். இனிமே நம்ம ஊருக்குக் காவல் இருக்கப் போற நாய்.
எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க. இவன ஒரு பய மனுஷனாப் பாக்கக் கூடாது. ஊருக்குப் பின்னாடிக் கட்டி வெக்கப் போறோம். நாய்க்கு சோறு வெக்குற மாதிரி சோறு வைங்க. மத்த நேரம் எவனும் கிட்டப் போகக் கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு வாட்டி தான் சங்கிலிய அவுத்து விடுவோம். அதுவும் எங்க நாலுப் பேருல ஒருத்தர். இது கொஞ்சம் காசுக்கார நாய். வருவானுங்க… கூட்டம் கூட்டமாத் தேடி வருவானுங்க. எவனும் வாயத் தொறக்கக் கூடாது. இவன அவுத்துவிட நெனைக்குறவனக் கேள்வியே இல்லாம வெட்டிப் போட்டுடுவோம். இனிமே யாரும் இங்க நிக்கத் தேவையில்ல. கெளம்புங்க”
“ஆத்மா இதெல்லாம்…”
“நீங்களும் கெளம்புங்கப்பா. இவனக் கட்டி வெச்சுட்டு வீட்டுக்கு வரேன். இனிமே எவனும் நம்ம ஊர் பொண்ணுங்களத் தொடக் கூடாது. இத்தன நாள் நீங்க சொன்ன விதிக்குக் கட்டுப்பட்டோம். இனி இதான் விதி. குறுக்க வராதீங்க”
எல்லோரும் ஆறுமுகத்தின் முகத்தைப் பார்க்க அவர் குனிந்தத் தலையுடன் வீட்டை நோக்கி நடந்தார். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. தெய்வா நரனை அறைந்தாள். குடிசைக்கே திரும்பி நடந்தாள்.
எல்லோரும் சென்றுவிட சபரி அவன் வீட்டிலிருந்து சங்கிலி ஒன்றை எடுத்து வந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து என்ன கூட்டிட்டுப் போயிடுவாங்க. போகும்போது இந்த ஊரும் நீங்களும் இருக்கப் போறதில்ல”
“நீ யாரு, உன் செல்வாக்கென்ன, உன்னத் தேடி யாரெல்லாம் வருவாங்க… எல்லாம் பாத்து வெச்சுதான் தூக்கிருக்கோம். ஆழம் தெரியாம கால விடல. நீ இங்க இருக்கன்னுக் கண்டுப்புடிச்சாதான? எவன் நெனச்சாலும் நடக்காது. உன்னத் தேடுறவங்கள சுத்த விடுறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இழுத்துப் போய் கட்டுங்கடா. நாயெல்லாம் பேச விட்டு வேடிக்கப் பாத்துக்கிட்டு…”
“சும்மா எதுக்குடா சவுண்டு விடுறீங்க? உங்களால ஒண்ணும் பண்ண முடியாது…”
“உண்மதான்டா… எங்களால ஒண்ணும் பண்ண முடியாது. பணமிருக்கவன ஒண்ணும் பண்ண முடியாது. அதிகாரமிருக்கவன ஒண்ணும் பண்ண முடியாது. அரசாங்கத்த ஒண்ணுமே பண்ண முடியாது.
ஆனா உன்ன விடுறதா இல்ல. வாழ்க்கையில எல்லா எடத்துலயும் கையக் கட்டி நின்னுப் பழகுன ஒருத்தன்… அசிங்கப்பட்டே பழகுன ஒருத்தன் கையில அவன அப்படி அசிங்கப்படுத்துனவன் சிக்குனா… அதும் கேக்க ஆளில்லாம சிக்குனா என்ன ஆவான்னு நீ தெரிஞ்சுக்கதான் போற”
அவனை இழுத்துச் சென்றவர்களுக்கும் நரனுக்கும் அவன் இங்கு வந்த நாள் நினைவு வந்தது. முதலில் பச்சையாய்த் தெரிந்தக் காடு உள்ளே செல்லச் செல்லக் கரிய வண்ணம் பூசிக் கொண்டது.
Leave a Reply