Sempunal 3

Sempunal 3

செம்புனல் – 3

“அய்யா நம்ம பக்கம் ஏதோ விவசாயம் பண்ணப் போறதா சொல்லி வந்திருக்காங்க”

தரணி வந்து ஆறுமுகத்தின் வீட்டில் தகவல் சொன்னபோது ஆத்மன் அவன் வேலைப் பார்க்கும் டயர் பேக்டரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

“யாரு தரணி?”

“விவரம் முழுசாத் தெரியலண்ணே. அப்பாவப் பாக்கணும்னு சொன்னாங்க”

“அப்பா வீட்டுல இல்ல. நான் வந்து பாத்துப் பேசிட்டு அப்படியே பேக்டரிக்குக் கெளம்புறேன்”

சிவா ஆத்மனுக்காகக் காத்திருந்தான். இருவருமாய் தினம் சேர்ந்து வேலைக்குச் செல்வது வழக்கம். தரணி முன் நடக்க அவனைப் பின் தொடர்ந்தனர்.

பஸ் ஏற வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்கு மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். இரண்டுக்கும் இடையில் ஒரு சிறிய கூட்டம் தென்பட்டது. ஆத்மன் பேச சிவா வேடிக்கைப் பார்த்தான்.

“என்ன விஷயம்?”

“நீங்க யாரு?”

“கொஞ்ச தூரத்துலதான் எங்க ஊர் இருக்கு. அங்க…”

“இந்தப் பக்கம் ஊர் எங்க இருக்கு? எல்லாம் காடுதான?”

“வெளிலேந்துப் பாக்க அப்படிதான் இருக்கும். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க?”

“அதக் கேக்க நீ யாரு?”

“தெரிஞ்சுக்குறதுக்காகக் கேக்குறேன்னு வெச்சுக்கோ. எதுக்கு இங்க வந்த?”

“தம்பி மரியாதையாப் பேசு. இங்க ரப்பர் தோட்டம் போட போறோம். அதுக்கு இடம் பாக்குறதுக்கு வந்திருக்கோம்”  கோட்சூட் அணிந்து அவனை சுற்றி நின்றவர்களுள் ஒருவர் சொன்னார்.

“ரப்பர் தோட்டமா? அப்போ இங்க இருக்க மரமெல்லாம்?”

“அதெல்லாம் எடுத்துட்டு ரப்பர்…”

“மரத்த வெட்டப் போறீங்களா?”

“ஒரு மரத்த எடுத்துட்டு அந்த எடத்துல இன்னொரு மரம் நடுறோம்னு சொல்லுறாருல்ல? முதல்ல கேள்விக் கேக்க நீங்க யாரு? கெளம்புங்க”

“சுத்துவட்டாரம் முழுக்க எங்க ஊர சேந்தவங்கதான் பராமரிக்குறோம். இங்க விளையுறதுதான் எங்க சாப்பாடு”

“உங்க சாப்பாட்டுல கை வெக்கல. வேணும்னா நாங்க வெக்குற மரங்களுக்கு நடுவுல நெல்லோ கரும்போ போட்டுக்கோங்க. அத நீங்களே எடுத்துக்குங்க. எனக்குப் பிரச்சன இல்ல”

“ரப்பர் மரத்தோட நெல்லும் கரும்புமா? உனக்கு இதப்பத்தி ஏதாவது தெரியுமா?”

“அதுக்குதான் கூட இத்தன எக்ஸ்பர்ட்ஸ் வெச்சிருக்கேன். சாயில் டெஸ்ட், ஹுமிடிட்டி டெஸ்ட் எல்லாம் முடிஞ்சு இந்த இடம் கரெக்டா இருக்கும்னு இவங்க சொன்னதுக்கப்பறம் தான் நான் பாக்கவே வந்தேன்”

“கேளு உன் எக்ஸ்பர்ட்ஸ்கிட்டயே… ரப்பரோட நீ சொல்லுற நெல்லும் கரும்பும் விளையுமான்னு”

“நெல்லு விளையாட்டி புல்லுப் போடுங்க. வாட்டெவர்… எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்ல. இந்த இடம் ஓகே தேவேந்திரன். நீங்க ப்ரொசீட் பண்ணுங்க”

அங்கே அவர்களைத் தவிர வேறு யாருமில்லையென்ற பாவனையில் கலைந்துச் சென்றார்கள்.

“நாங்கக் கெளம்புறோம் தரணி. வேலைக்கு நேரமாச்சு. நீ அப்பாக்கிட்ட தகவல் சொல்லு. நான் வந்ததுக்கப்பறம் பேசுறேன். அப்பறம்… இவன் சொல்லுறதுக்குப் பேரு விவசாயம் இல்ல. இன்னொரு வாட்டி அப்படி சொல்லாத. போகலாம் சிவா”

மாமரத்தின் மீதேறி காய்ப் பறித்துக் கொண்டிருந்த வேணு தூரத்தில் தெரிந்த காரை கண்டதும் மரத்திலிருந்து இறங்கினான். மரத்தைவிட்டு விலகியதும் உச்சி வெயில் முகத்தைச் சுருக்க வைத்தது. வேணு அருகில் நின்ற காரிலிருந்து இறங்கியவன் அவனைக் கண்டு கொள்ளாது சென்றான்.

“யாருங்க?”

“காட்டுக்குள்ள ஏதோ ஊரிருக்குன்னு காலைலக் கேள்விப்பட்டேன். பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்”

“ஊர சுத்திக் காடிருக்கு. காட்டுக்கு நடுவுல ஊரில்ல”

“சுத்திக் காமிக்குறியா?”

“இங்கல்லாம் சுத்திப் பாக்குறதுக்கு ஒண்ணுமில்ல. கெளம்புங்க”

“சுத்திக் காமிக்குறதுக்குக் காசு குடுக்குறேன்”

“அது யாருக்கு வேணும். முதல்ல எடத்த காலிப் பண்ணுங்க”

வேணுவை சில நொடிகள் பார்த்தவன் காரில் ஏறிச் சென்றுவிட்டான். மாலை ஆத்மனும் சிவாவும் வந்ததும் இவ்விஷயம் சொன்னான்.

“காலைல நாங்கப் பாத்தோம். இவனப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கணும்”

“நான் எனக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லுறேன் ஆத்மா. என்னமோ ஆள் சரியில்லன்னுத் தோணுது”

“ஊர சுத்திக் காட்டவாம் காசு குடுக்குறானாம். திமுரு…”

“நீ கேட்டு சொல்லு சிவா. பாக்கலாம் எவ்வளோ தூரம் போறான்னு”

இரண்டு நாள் கழித்து ஞாயிறன்று மீண்டும் ஊருக்குள் வந்தான் நரன்.

“திரும்பத் திரும்ப எதுக்கு இங்க வர?” வேணுவுக்கு அவனைத் திருப்பி அனுப்பிவிடும் எண்ணம்.

“என்ன வரக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு நீ யாரு? நான் எல்லார்கிட்டயும் பேச வந்திருக்கேன்”

“யாருப்பா? என்ன விஷயமா வந்திருக்க?” ஆறுமுகம் அங்கே வந்துவிட அவர் முன்னால் வேறு யாரும் பேசவில்லை.

“உங்க ஊர்ல எல்லார்கிட்டயும் பேசணும். ஏற்பாடுப் பண்ணுங்க”

“என்ன விஷயம்னு முதல்ல சொல்லுப்பா”

“சொல்லுறேன். எல்லாரையும் கூப்பிடுங்க”

ஆத்மன் ஏதோ சொல்ல வர “கூப்பிடு. நாங்க முன்னாடிப் போறோம்” என்றார் ஆறுமுகம். ஊரின் மத்தியிலிருந்த மேடையில் நரன் நிற்கச் சுற்றி மக்கள் கூட்டம். தெய்வாவும் நின்றிருந்தாள். அவன் அவளைவிட்டு பார்வையை அகற்றவில்லை.

“என் பேரு நரன் சக்கரவர்த்தி. இங்க ரப்பர் தோட்டம் போட போறேன். நீங்க சுத்தி இருக்க ஏரியா முழுக்க பாத்துக்குறீங்களாம்… இப்பவே சொல்லிட்டாப் பின்னாடிப் பிரச்சன இருக்காதுல்ல”

“ரப்பர் தோட்டம் போடுறதுக்கு இங்க எங்க காலி எடமிருக்கு?”

“இருக்க மரத்த எடுத்துட்டு வெப்போம். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. என்னோட தோட்டத்துக்கு நடுல நீங்க என்ன செடி வெக்க நெனச்சாலும் வெச்சுப் பாத்துக்கோங்க. தோட்டத்துல வேலைப் பாக்குறதுக்கும் ஆள் வேணும். நல்ல சம்பளம் கெடைக்கும்”

“நாங்க வெச்சு வளக்குறத நீங்க எடுத்துக்குறதுக்கு…”

“நீங்களே பாத்துக்கோங்க. நீங்களே எடுத்துக்கோங்க”

“எப்ப ஆரம்பிக்குறதா இருக்கீங்க தம்பி?”

“தெரில. இன்னும் முடிவுப் பண்ணல. அவசரம் எதுவுமில்ல. பாக்கலாம்”

“ரப்பர் மட்டும் வெக்கப் போறீங்களா?”

“ஏதோ ஒண்ணு… ரப்பர் இங்க நல்லா வளரும்னு என்னோட டீம் சொன்னாங்க. இன்னும் எதாவது ஐடியா சொன்னா அதையும் செய்வேன். உங்க ஊர சுத்திப் பாக்கணும். பாத்துட்டுக் கெளம்புறேன்”

மேடையிலிருந்து இறங்கி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தான். ஆத்மன், வேணு, சிவா மூவரும் ஆறுமுகத்தின் அருகில் வந்தனர்.

“இதெல்லாம் சரி வராதுன்னு சொல்லுங்கப்பா. மரத்த வெட்ட விடக் கூடாது”

“ஏன் ஆத்மா? அந்த தம்பி வேற மரம் வெக்குறேன்னு சொல்லுதுல்ல?”

“நம்மையும் நடுவுல எந்த செடி வேணா வெச்சுக்க சொல்லுது. அப்பறமென்ன?”

“கொஞ்சமாவது யோசிச்சுப் பேசுங்க. நீங்கல்லாம் அவன் பேசுனத முழுசாக் கேட்டீங்களா இல்லையா? அவனுக்கு ரப்பர் தோட்டம் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. யாரோ நாலுப் பேரு சொன்னத வெச்சு ஆரம்பிக்குறேன்றான்.

கடைசியா சொன்னான்ல… வேற எதாவது வெக்க சொன்னா வெப்பேன்னு… இவன் ரப்பர் தோட்டம் தான் ஆரம்பிப்பான்னு என்ன நிச்சயம்?

ஒருவேள மரத்தயெல்லாம் வெட்டுனதுக்கப்பறம் இவன் சொல்லுற அந்த டீமு… இங்க எதுவும் சரியா வளராதுன்னு சொன்னா இந்த கூமுட்ட அதையும் நம்பி சரி வாங்கப் போகலாம்னு மூட்டையக் கட்டிடுவான். அப்பறம்?”

“வேணு… அந்தப் புள்ள படிச்சப் புள்ளப்பா. அது பொய் சொல்லாது”

“கெழவி… படிச்சவன் பொய் சொல்ல மாட்டானா? என்ன புதுசா கதை சொல்லுற? நாங்களும்தான் படிச்சிருக்கோம். பொய்யா சொல்லுறோம்?”

“அந்த புள்ள தோட்டத்துல வேலைக் கூடப் போட்டுக் குடுக்குறேன்னு சொல்லுது”

“முதல்ல அவன் தோட்டம் போடுறானாப் பாக்கலாம். அங்க எதுக்கு வேலைப் பாக்கணும்?”

“ஊருக்கு இவ்வளோ பக்கத்துல வேற என்ன வேலை கெடைக்கும் சொல்லு? அதோட நம்மத் தேவைக்கு ஏதாவது வாங்கணும்னா… ஏன் வீட்டக் கொஞ்சம் சரி பண்ணணும்னாக் கூட கையில காசு வேணும்ல?”

“காசு வேணும்னாக் கொஞ்ச நாள் டவுன்ல போய் நாங்க இப்போ வேலைப் பாக்குற மாதிரிப் பாத்தாப் போச்சு. இருக்குறத விட்டுட்டுப் பறக்குறதுக்கு ஆசப் படுறீங்க. இன்னைக்குக் கிடைக்குற காச வெச்சு வீட்டப் பெருசாக் கட்டிட்டு இன்னும் பத்து வருஷம் கழிச்சு சாப்பாட்டுக்கு எங்கப் போவீங்க?

இவன் இப்போ தோட்டம்பான்… இன்னும் கொஞ்ச நாள்ல பேக்டரிம்பான்… இருக்குற எல்லாத்தையும் புடுங்கிட்டுக் கடைசில நம்மள இங்கேந்து வெரட்டி அடிக்குற வரைக்கும் அடங்க மாட்டான்”

நரன் வீடுகளின் நடுவே நடந்தான். சிலர் வேடிக்கைப் பார்த்தனர். சபரி அவன் கூட்டத்தில் சொன்னவற்றைக் கேட்டிருந்தான். எதிர்ப்பட்ட பெண்களிடமெல்லாம் எதையாவது பேசியபடி நடந்தவனிடம் வந்தான்.

 “ஊர சுத்திப் பாக்கணும்னு சொல்லிட்டு…”

“ஊருன்னா என்ன? இங்க இருக்க இந்த மரம், செடி, குட்டிக் குட்டி வீடுங்க மட்டுமா? அதுல என்ன இருக்கு?”

“நீ பாத்த வரைக்கும் போதும். கெளம்பு”

நரன் உடனே கிளம்பவில்லை. இன்னும் சில நிமிடங்கள் அங்கே சுற்றிவிட்டே சென்றான். அவன் போனதும் வேணு, ஆத்மன், சிவா மூவரும் சபரியின் வீட்டிற்கு வந்தார்கள்.

“எவன்டா இவன்? நீங்க சொன்னப்போ ஏதோ லூசுன்னு நெனச்சேன். பொண்ணுங்கட்டயாப் பேசிட்டுப் போறான். சீரில்ல…” 

“இங்க இருக்குற சிலரும் இவன் சொல்லுறத நம்பிக்கிட்டு ஏதோ ஒளருறாங்க. இவன் லேசுல விட மாட்டான் போலருக்கு. பேசாம கம்ப்ளயின்ட் குடுத்தா என்ன?”

“சிவா… நீ இவனப் பத்தி விசாரிக்குறேன்னு சொன்னல்ல? என்னாச்சு? சீக்கிரம் கேட்டு சொல்லு. எதுக்கும் நாளைக்குப் போய் கம்ப்ளயின்ட் குடுப்போம்”

கம்ப்ளயின்ட் கொடுக்கவும் தொலைதூரம் போக வேண்டும். போனார்கள். ஸ்டேஷனில் விசாரிப்பதற்கென்று ஒரு நாள் நரனையும் அவர்களையும் வர சொன்னார்கள். பேச்சு நடுநிலையாய் இல்லை. அவன் துவங்க இருக்கும் பணியை ஊர் மக்களுக்குப் புரிய வைக்கும் முயற்சி என்றே தோன்றியது.

கிளம்பும்போது “எதுக்கு இப்படி அய்யா சாமி நியாயம் சொல்லுங்கன்னுக் கெஞ்சுறீங்க? இதெல்லாம் வேலைக்கே ஆகாது. ஒழுங்கா அமைதியா இருந்தா அட்லீஸ்ட் தோட்டத்துல வேலைப் போட்டுக் குடுப்பேன். உங்க ஆளுங்க சில பேரு ஏற்கனவே எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுறாங்க. எல்லாரையும் அவங்கள வெச்சே ஒத்துக்க வெக்க என்னால முடியும். தேவையில்லாம இங்கல்லாம் வராதீங்க. எந்தப் பிரயோஜனமும் இல்ல. என் டைமும் வேஸ்ட்” என்று சொல்லிச் சென்றான்.

“அன்னைக்கு எவனோ வந்து எல்லார்கிட்டயும் பேசணும்னு சொல்லுறான்… என்னதான் பேசுறான் பாப்போம்னுக் கூட்டத்துல நிக்க வெச்சேன். என் தப்புதான். எல்லையிலயே பேசி அனுப்பிருக்கணும்.

அவன் சொல்லுற மாதிரிக் கொஞ்சப் பேருப் பேசுறதக் கேட்டு மொத்த ஆளுங்களும் இவனுக்கு ஆதரவாப் பேச ஆரம்பிச்சா என்ன பண்ணுறது? அன்னைக்கு நீ சொன்ன மாதிரி மரத்தயெல்லாம் வெட்டிட்டுப் பாதில விட்டுட்டுப் போயிட்டா என்ன பண்ணுறது ஆத்மா? என் முட்டாள்தனத்தால…”

“இல்லப்பா. சிவா விசாரிச்சுட்டான். இவங்க அப்பாவுக்கு சொந்தமா துணி மில் இருக்கு. ஒரே பையன். இங்க எதுக்கு வந்து தொல்லப் பண்ணுறான்னு தெரில. அவன் அன்னைக்கு வந்து பேசுனது, இன்னைக்குப் பேசுனதெல்லாம் கேட்டாதான இவன் எப்படிப்பட்டவன்னு முழுசாத் தெரியுது. நாங்க எல்லார்க்கிட்டயும் பேசுறோம். நீங்க கவலைப் படாதீங்க”

அடுத்த நாள் தெய்வாவிற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் நரன். அவளுக்குத் தெரியாமல் கல்லூரி வரை பின் தொடர்ந்தான். அங்கேயே காத்திருந்து மூன்று மணிக்கு அவள் சூப்பர்மார்க்கெட்டுக்கு வேலைக்குச் செல்லும்போது பின்னால் சென்றான். ஆறு மணிக்கு வீட்டுக்குக் கிளம்புகையில் பஸ் ஸ்டாப் வரை கண்காணித்தான்.

ரப்பர் தோட்டம் குறித்த பணிகளை முடிப்பதற்காக சில கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நரன் அங்கிருந்து கிளம்புவதற்கு முதல் நாள் இடத்தைக் காண்பிப்பதாகச் சொல்லி நண்பர்கள் இருவரை வரவழைத்திருந்தான். வந்தவர்கள் மது பாட்டில்கள் எடுத்து வந்திருந்தார்கள்.

“இத வேற எதுக்குடா தூக்கிட்டு வந்தீங்க? தண்ணியடிச்சா அப்பறம் நான் பொண்ணுக் கேப்பேன்”

“இவன் ஒருத்தன்டா… இப்ப எங்கேந்து போய் பொண்ணத் தேடுறது? வேணும்னா எவளுக்காவது கால் பண்ணவா?”

“கால் பண்ணி? போய் நம்மதான் கூட்டிட்டு வரணும்”

“அதெல்லாம் யாரையும் கூப்பிடவும் வேணாம். நீங்க போகவும் வேணாம். ஊத்து… நான் பாத்துக்குறேன்”

எப்போதும் குடிப்பதை விட அதிகமாகக் குடித்தான். அவர்கள் எடுத்து வந்தவைத் தீர்ந்தபோது இன்னும் வாங்கி வரச் செய்தான். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காரை எடுத்துக் கிளம்பினான்.

“இங்கயே கட்டு சபரி. இனி தினம் யாராவது ஒருத்தர் இவனுக்குக் காவல் இருப்போம். கொஞ்ச நாள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்”

சிவா சொன்ன இடத்தில் நரனின் கை கால்களை சங்கிலியில் பிணைந்து அங்கிருந்த மரத்தில் கட்டினான் சபரி.

“தேவையில்லாம வம்ப வெலக் குடுத்து வாங்குறீங்க… அனுபவிப்பீங்கடா. என் பிரெண்ட்ஸ் இந்நேரம் என்ன தேட ஆரம்பிச்சிருப்பாங்க”

“யாரு? அந்த குடுகாரனுங்களா? அவனுங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஊத்திவிட்டு ஆளுக்கு ஒரு ஊர்லக் கொண்டு போய் விட சொல்லியாச்சு. தெளிஞ்சு எந்திரிச்சா அவனவன் எங்க இருக்கோம் எப்படி இங்க வந்தோம்னுத் தெரிஞ்சுக்கவே ஒரு நாள் ஆகும். அவனுங்களப் பத்தியே அவனுங்களுக்குத் தெரியாதப்போ உன்ன எங்கன்னுப் போய்த் தேடுவானுங்க? மொபைல் கூட அவனுங்கள்டக் கிடையாது.

உன் கார் ஒரு ஊர்ல இருக்கு. உங்க மொபைல் எல்லாம் இப்போ எந்த ஊருல இருக்குன்னு கூட உங்களுக்குத் தெரியாது. இங்க பஸ் ஸ்டாப் கிட்டப் போனாதான் டவர் கிடைக்கும். யாராவது வருவாங்க, உன்னக் கூட்டிட்டுப் போவாங்கன்னு சொல்லிட்டுத் திரியாத. பைத்தியக்காரன்னு நெனச்சுடுவாங்க”

வேணுவின் குரல் கேட்டு அருகிலிருந்த குடிசைகளிலிருந்து பெண்கள் எட்டிப் பார்த்தனர். நரன் அப்போதுதான் கவனித்தான். அவனை அவர்கள் கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு அருகே ஆறு குடிசைகள் இருந்தன. அனைத்திலும் பெண்கள் மட்டுமே தென்பட்டனர்.

“என்னங்கடா… சுத்தி வெறும் பொண்ணுங்களா இருக்காளுங்க? இங்க கொண்டு வந்து கட்டி வெச்சிருக்கீங்க?”

“பாரு… ஆசத் தீரப் பாரு…” என்ற சபரி ஊரை நோக்கி நடக்க ஆத்மனும் சிவாவும் உடன் சென்றனர். வேணு மட்டும் அவனுக்குக் காவலுக்கிருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!