sippayinmanaivi 14

மேற்கு கடற்கரை காற்று

நாகர் நாட்டின் கிழக்கில் மலைநாடுகள் தலைவர் சித்திரையும் அவர்களது இல்லத்தாரும் இருளிர் காட்டில் மகிழ்ந்திருக்கிறார்கள். நாகர் நாட்டின் மேற்கில் கணியன் பிரம்பியில் கந்தனை சந்தித்துவிட்டு தோண்டி நோக்கிப் பயணம் செய்கிறான்.

‘தலைவா, கந்தனுக்கு உங்கள் மேல் இருக்கும் பாசம் இணையில்லாதது’ மதிமாறன் சொன்னான்

‘தளபதி நாங்கள் நண்பர்கள் ஆனால் எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத போர் பிரம்பி போர், ஒருவரை ஒருவர் காத்துக்கொள்ள நாங்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல’ கணியன் சொன்னான்

‘தலைவா அந்தப் போரை நான் தவறவிட்டுவிட்டேன், என் இளமைக் காலங்களை அந்தப் போரை பற்றி சிலாகித்தே சென்றது. பிரம்பி சிற்றசர் கார்மேகம் போல் தளபதி மாடன் போல் நாங்கள் இருக்க வேண்டுமென்று முத்தூரு துறைமுக படைப்பள்ளியில் அனைவரும் பேசிக்கொள்வோம்’ மதிமாறன் சொன்னான்.

‘என்ன மாறா பேச்சு வழக்கில் என்னை முதியவனென்று சொல்கிறாய்’ கணியன் சொல்லி நகைத்தான். மதிமாறன் வாய் திறக்காமல் இருந்தான்.

‘எனக்கும் அது இளமை பருவம், என் செயல்களால் தான் அந்த போர் விளைந்தது. குருதி மாரிப்பொழிந்தது. ஒரு போர் எத்தனை உயிர்களை சிறுபொழுதில் இல்லாமல் செய்தது. என் கரை படிந்த கைகளை காணும் போதெல்லாம் என்னை ஏனோ கிறுக்கன் போல் உணர்கிறேன். இனி ஒரு போரை நான் தொடங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இரவில் மனிதர்கள் கதறும் சத்தம் என் காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். வாழ்நாளில் இந்த வலி குறையப்  போவதில்லை’ கணியன் சொல்லி அமைதியானான்.

அதன் பிறகு இருவரும் அமைதியாகவே பயணம் செய்தனர். கணியன் இவ்வளவு மனம் திறந்து பேசியது இதுவே முதல் முறை. ஒரு வேலை பிரம்பி சென்று வந்ததால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம். தோண்டி என்னும் துறைமுக நகரை அடைந்தனர். கலப்பட்டினம் போல் இதுவும் நாகர் உள்நாட்டு கலன்களுக்காக பயன்படுத்தும் துறைமுகம் அதுமட்டுமில்லை இங்கு இருக்கும் மலைகளும் மலைகளை ஒட்டிய மேற்கு கடலும் பல ரோமர்களை ஈர்த்தது அதனால் வணிகர்கள் மட்டுமில்லாத ரோமர்கள் பலரைக் காணலாம். ஓர் இரு திங்கள்கள் இங்கு இருந்துவிட்டு ரோமநாடு திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

சிற்றரசன் தேர்மலையான் கணியனை வரவேற்று மேற்கு கடற்கரையில் மலைகளின் அடியில் மணற் பரப்பில் பெரிய பாய் விரித்து நான்கு பக்கங்களிலும் தீ மூட்டப்பட்டிருந்தது. கணியனும் மதிமாறனும் ஒரு பக்கம் தேர்மலையானும் அவன் மனைவி அன்னமும் எதிர் பக்கம் இருந்தனர். கையில் தேறல் கிண்ணங்களுடன் வானில் ஆதவன் மறையும் நேரத்தில் கீழ் வானம் பொன் போல் மின்னிக்கொண்டிருந்தது.
ரோம பெண்கள் ஒளிரும் சிற்றாடைகளுடன்  ஆடத் தொடங்கினர். கூர் மூக்கு கொண்ட நீல மீன்கள் பல  தீயின் மேல் வாடிக் கொண்டிருந்தது. கடல் காற்றின் ஊதமும் கடல் காக்கைகள் கூட்டத்தின் அழகும் கணியனை மயக்கியது. 

‘நிதி தலைவரே, எனக்கு ஒரு வினா’ தேர்மலையான் கேட்டான்.

‘கேள் தோழா கேள்’ கணியன் சிறு மயக்கத்தில் இருந்தான்.

‘ இப்படி உங்களுக்கு இறை(வரி) குவியும் சிற்றரசர்களையும் துறைமுகங்களையும் விடுதலை தந்துவிட்டால் நாகர் எப்படி வாழ்வது?’ தேர்மலையான் கேட்டான்.

‘குறும்பாக சிற்றசர்களை பிரித்தும் கூட வஞ்சிக்காடு, முத்தூரு துறைமுகம் மற்றும் ஆய் ஊர்கள் உள்ளனவே. அதில் வரும் இறை போதுமானது’ கணியன் சொல்லித் தொடர்ந்தான்.

‘மேலும் பிரம்பி வேளாளர்கள், தோண்டி வெளி நாட்டவர்கள் மற்றும் கலப்பட்டின வணிகர்களை எப்படி விடுவது, அதனால் ஒரு நல்ல அமைப்புடன் உங்களை சந்திக்க உள்ளேன், வணிகம் மூலம் குறும்பர்களை தொடர்பில் வைத்துக் கொள்வோம்’ கணியன் சொன்னான்.

‘ஆகையால் நாகர் போர் வீரர்கள் மற்ற குறும்பர்களுக்காக போரில் ஈடுபடப் போவதில்லை?’ தேர்மலையான் கேட்டான்.

‘அப்படி முழுமையாய் உங்களைப் பிரிய முடியுமா? எங்களுக்கு இறை செலுத்தவில்லை என்றாலும் எங்கள் நட்பு நாடுகளை மற்றொருவர் தீயின் இறையாக விடமாட்டோம்’ கணியன் நம்பிக்கை சொன்னான்.

என்ன சொன்னாலும் கணியனின் மனம் சிற்றசர்களை பிரிப்பதில் விருப்பமில்லை ஆனால் பேரரசு முடிவு செய்துவிட்டால் நிதி தலைவரால் என்ன செய்யமுடியும் அதுமட்டுமல்லாமல் கூடல் நகர் மட்டும் அதைச் சுற்றி உள்ள பெரும் மனிதர்களின் அரசியல் நிலைப்பாட்டை கணியன் அறிய முடியாது. கணியன் மிகச் சிறந்த வணிகன், நல்ல மனிதன் ஆனால் உலக ஆசைகள் இல்லாதவன் அதனால் கூடல் நகரின் அரசியல் கணியனை பாதிப்பதில்லை. வஞ்சிக்காடு மற்றும் அனைத்து பிற நாட்டு வணிகங்கள் என முழு வேகத்தில் புரவிகள் போல செல்பவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே திருகோணத்திலிருந்து மார்த்தாண்டன் பல்லக்குகள் வந்தது.