அத்தியாயம் – 6
தன் எதிரே நிழலாட கண்டு நிமிர்ந்த எழிலுக்கு அவளைக் கண்டதும் சுள்ளேன்று கோபம் வரவே தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு நின்றவனிடம், “சீனியர் அன்று என்னை காப்பாற்ற வந்து நீங்களும் அடிப்பட நேர்ந்தது எண்டு தானே நான் உங்களிடம் கதைக்க வந்தேன். நீங்க எப்படி என்னிடம் கதைக்காமல் போகலாம்” என்றாள் தன்னுடைய கோபத்தை வார்த்தைகளை வெளியிட்டாள்.
அப்போது தான் முகிலனும், மேகாவும் கேம்பஸ் உள்ளே வர எழிலும், நிலாவும் கதைப்பதைக் கண்டு, “என்னடா இது அதிசயமாக இருக்கோம். இவ்வளவு கெதியா இருவரும் நண்பர்கள் ஆகி போயினர்” என்று அவன் வாய்விட்டு புலம்ப அவனை முறைத்தாள் மேகா.
அவளின் முறைப்பை அலட்சியம் செய்துவிட்டு இருவரும் அவர்களை நோக்கிச் செல்ல, “ஆமா நான் வேண்டுமென்றேதான் கதைக்காமல் சென்றேன். அதில் என்ன பிழை கண்டீர்” என்றான் அவன் எரிச்சலோடு.
“ஐயோ அதில் பிழை காண எனக்கு நேரம் இல்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் கேட்க வேண்டும். என்னை கண்டும் காணாமல் போவதற்கு என்ன காரணம் என்று சொல்லிவிட்டீர் எண்ட நிம்மதிக்கு நித்தமும் பங்கம் வராது..” என்றாள் ஏளனமாக உதட்டை வளைத்தாள்.
அவளின் பேச்சில் அவனின் கோபம் சற்று அதிகரிக்க, “ஓம் உன்மேல் எனக்கு கோபம் தான். மேகா என்ற பெயரை மாற்றி இங்கே எல்லோரிடம் மழைநிலா எண்டு கதைக்கும் உன்மீது கட்டுகடங்காத கோபம் வருகிறது..” என்றான் முகம் இறுக.
அன்று கனவில் வந்த பெயரை அவன் சொன்னதும் அவளுக்கும் அந்த கனவு ஞாபகம் வந்துவிட, “உங்களுக்கு விசரா? என்னுடைய பெயர் மழைநிலா யாருக்காகவும் எண்ட பெயரை மாற்றிக்கொள்ள எனக்கு துளியும் இஷ்டம் இல்லை. நேரத்திற்கு நேரம் ஆளை மாற்றுவது போல பெயரை மாற்றும் நீங்கள் என்ர கிட்ட கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” அதுவரை காட்டிடாத கோபத்தை வெளிபடுத்த விலகி நின்று இதெல்லாம் பார்த்த முகிலன் மேகா இருவருக்கும் எதுவும் புரியவில்லை.
“நான் எப்போதடி பெயரை மாற்றினன்” கோபத்துடன் அவளை எரிக்கும் நோக்கத்துடன் கேட்க, “எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. உங்களின் பெயர் முகிலன். ஆனால் எல்லோரிடமும் எழிலரசன் என்று சொல்லிவிட்டு என்னிடம் பிழை காண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு” அவளும் சரிக்கு சரி சண்டை போட இம்முறை அவன் பொறுமை இழந்தான்.
இருவருக்கும் வந்த வாக்குவாதத்தை கண்ட மேகாவும் முகிலனும், “நம்முடைய பெயரை வைத்து இவர்கள் எதற்காக சண்டை இடனும்” அவர்களை நோக்கி சென்றனர்.
“இங்கே பாரும் நான் ஒன்றும் ஊருக்காக பெயர் வைக்கல. எண்ட பெயர் பிறந்ததில் இருந்ததே எழிலரசன் தான்” அவனின் கைகள் இறுகியது.
அவளுக்கு இந்த விடயம் கோபத்தை கொடுக்க, “அதே போலத்தான் நானும். எண்ட பெயரும் பிறந்ததில் இருந்தே மழைநிலாதான். அதனால் என்னிடம் பிழைகான எண்ணாதீர்” என்று இருவரும் சண்டை போட்டனர்.
“அப்போது நான் பொய் சொல்கிறன் என்று எண்ணுகிறீர்” அவளிடம் சண்டைபோடும் எண்ணத்துடன் அவன் கேட்க, “நான் அதை கேட்கவில்லை. என்னிடம் பிழை காண உம்மிடம் உரிமை இல்லை என்று கதைக்கிறேன்” என்றாள் வெறுப்புடன்.
முதல் ஜென்மத்தில் உயிருக்கு உயிராக நேசித்தவர்கள். இப்போது எதிரும் புதிருமாக நின்று சண்டையிடுவதை காலம் ரசனையுடன் பார்த்தது. சில விஷயங்கள் நடப்பது நம் கையில் இல்லை. ஆனால் சில விஷயங்கள் நமக்கு அப்பாற்ப்பட்ட சக்தியால் சிலநேரம் நடக்கவே செய்கிறது.
இவர்களுக்கு வந்த கனவு உண்மை. அதில் இருந்த அவர்களின் உண்மை. இப்போது இவர்களின் நடைமுறை வாழ்க்கையும் நிஜமே. ஆனால் கனவு ஏன் வந்தது. இவர்களை இணைக்கவா? இல்லை நிரந்தமாக பிரிக்கவா?
“எண்டா அவளிடம் சண்டை போடுவது போல கதைக்கிறாய்” இருவரையும் சாமதானம் செய்யும் நோக்கத்துடன்.
அவன் சொல்வதை காதில் வாங்காமல், “நீ சொன்ன முகிலன் இவன்தான். இவண்ட பேர் கார்முகிலன்” பிரச்சனையை தீர்க்க வந்தவனை வைத்து அவன் மீண்டும் தொடங்கிவிட அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
எழிலன் கைகாட்டியவனை ஏறயிறங்க பார்த்துவிட்டு அவள் வேன்றுமென்றே முகத்தை திருப்பிட அப்போது அங்கே நின்ற மேகாவைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றாள்.
மேகாவின் கைபிடித்து இழுத்துவந்து, “அதேபோல நீங்க சொன்ன மேகா இவள்தான். என்னோட கிளாஸ் மெட். மேகவர்ஷினி இவண்ட முழு பெயர்” என்று சொல்ல இருவரின் சண்டையும் மெகாவிற்கு தலையிடியை உருவாக்கிட அவளின் கையை உதறிவிட்டு நடந்துவிட்டாள்.
முகிலன் எழிலனையும் தூரத்தில் சென்ற மேகாவையும் பார்க்க, மழைநிலாவோ முகிலனையும் எழிலனையும் ஏளனமாக பார்த்துவிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
கனவுக்கும், நிஜத்திற்கு இடையே போராடிய இரு மனமும் ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தை யோசிக்க தொடங்கியது. அவளுடன் சண்டை போடுவது அவனுக்கு பிடித்தம் என்றால், அவனோடு கதைப்பதே அவளின் பிடித்தம்.
அதன்பிறகு நாட்கள் நகர்ந்தபோதும் எழிலனும், நிலாவும் எதற்க்காக சண்டை போட்டனர் என்று முகிலன், மேகா இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு முறை கண்ட கனவு இருவருக்கும் இடையே பெரிய சண்டையை உருவாக்கிவிட்டது போலும். நேருக்கு நேர் சந்திக்கும் நேரத்தில் இருவரின் முகத்திலும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும்.
இருவரின் இந்த நிலைக்கு காரணம் எது என்று புரியாதபோதும் தங்களின் பெயரை வைத்து எதற்க்காக சண்டை போடுகின்றனர் என்ற குழப்பத்துடன் அன்று வீடு வந்து சேர்ந்தனர் முகிலனும் மேகாவும்.
இருவரும் வந்து நேராக தோட்டத்தில் அமர்ந்திருப்பதை வைத்தே இருவருக்குள்ளும் ஏதோ சண்டை என்று நந்தினியும், தருணும் வேகமாக அவர்களின் அருகே வந்தனர்.
“என்னப்பா வந்தும் வீட்டின் உள்ளே வராமல் இங்கேயே அமர்ந்திருக்கிறீர்” என்று அங்கிருந்த கதிரையை மகளின் அருகே இழுத்துபோட்டு அமர அவளோ அமைதியாக இருந்தாள்.
தன் மகனின் முகத்தை வைத்தே அவனின் மனதைப் படித்த நந்தினி, “என்னடா இன்றும் மேகாவுடன் சண்டை இட்டாயா?” என்று அவனிடம் கேட்க அவனோ மெளனமாக அவரை நோக்கினான்.
அவர்கள் இருவரும் இப்பொழுது பதில் சொல்ல போவதில்லை என்ற எண்ணத்தில் பெரியவர்கள் இருவரும் எழுந்து சென்ற சிறிதுநேரத்தில் அங்கே வந்து சேர்ந்தனர் சித்தார்த் மற்றும் திவ்யா.
அவர்கள் முகத்தை கண்டதும் மனதில் சந்தேகம் எழுந்ததும், “என்ன எலியும் பூனையும் ஒரே இடத்தில் இருக்கிறது” என்ற கேள்வியுடன் அவர்களை நெருங்கினர்.
சித்தார்த் மகனின் தோளில் கைவைக்க சட்டென்று நிமிர்ந்தவன், “அப்பா வாங்க” என்றான் வேகமாகவே.
“என்ன இருவரும் இங்கே இருக்கீங்க? என்ன விடயம்” மகளிடம் கதைக்க தொடங்க, “இப்போ என்னம்மா வேண்டும்” என்றாள் மகள் எரிச்சலோடு.
இருவரின் முகத்தைக் கண்டதும், ‘ஏதோ சரியில்லை’ என்ற உண்மையை உணர்ந்து அவர்களே சொல்லட்டும் என்று அவர்கள் சிந்திக்க நேரத்தை கொடுத்துவிட்டு எழுந்து சென்றனர்.
“ஆமா முகில் நம்ம பெயருக்கும், அவங்களோட சண்டைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு. ஆனால் அது என்ன எண்டுதான் புரியல” என்றாள் சிந்தனையுடன் புருவத்தை சுருக்கியபடி.
“ம்ம்.. அவர்கள் இருவரும் நேரில் பார்க்கும் போது அவர்களின் முகத்தில் அப்படியொரு கோபம். அவனிடம் நான் சென்று காரணம் கேட்டால் அவன் என்னோடு கதைப்பதை நிறுத்தியே விடுவான்” என்றான் அவனின் மனதை படித்தது போல.
“எனக்கு என்னவோ நடப்பது அனைத்தும் சரிதான் என்று தோன்றுகின்றது” என்றாள் முகிலனின் மீது பார்வையை பதித்தபடி.
“இல்ல மேகா இதில் நிறைய குழப்பம் இருக்கு. கேம்பஸில் சீனியர் ஜூனியரின் பெயரை தெரிந்து மனதில் பதிய வைப்பதும், ஜூனியர்கள் பெயரை மனப்பாடம் செய்வதும் வழமையாக நடக்கும் ஒரு செயல்.” என்றவன் சிலநொடி நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
அவள் கேள்வியாக நோக்கிட, “ஆனால் இவர்களின் விடயத்தில் இந்த குழப்பம் வந்தது என்றில் இருந்து எண்டு உனக்கு ஞாபகம் வருகிறதா?” கேள்வியாக புருவம் உயர்த்தினான்
அவள் சிந்தனையுடன் தலைகுனிய சட்டென்று அவர்களின் விபத்து ஞாபகம் வர, “அன்று நடந்த விபத்தின் பின்னரே இவர்கள் இருவரும் சண்டை போடுகின்றனர்” என்றாள் மேகா.
“யெஸ்” என்று இருவரும் ஹை – பை கொடுக்க, “இனிமேல் நம்மதான் கண்டுபிடிக்க வேண்டும்” முகிலன் சொல்ல அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
அவர்கள் இருவரும் போடும் சண்டையில் இவர்கள் பெயர் ஆரம்பபுள்ளியாக அமையும்படி விதிபோட்ட முடிச்சை மாற்ற முடியாமல் குழப்பத்தில் ஆழந்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு இனி கிடைக்குமோ என்னவோ?
நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது…
அன்று கேம்பஸ் லீவ். அதனால் அம்மம்மாவுடன் சேர்ந்து பழைய ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் மழைநிலா. கீதா இந்தியாவில் இருந்த சமயம் அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் ஆல்பத்தில் இருக்க ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒரு பின்னணி கதையுடன் தன் கடந்த கால நினைவுகளை பேத்தியிடம் பகிர்ந்தார்.
“அம்மம்மா நிஜத்தில் அம்மப்பா ரொம்பவே பாவம். உங்களிடம் இப்படி வந்து மாட்டி கொண்டாரே” என்று அவள் கல்லூரி கால நினைவு புகைப்படத்தை பார்த்தபடி கூற கீதா சிரித்துக் கொண்டார்.
“உண்ட அம்மப்பாவிற்கு என்னம்மா? அவர் இந்தியா வந்தும் என்னை திருமணம் என்ற பெயரில் நாடு கடத்தி விட்டாரே” என்று சிரிப்புடன் ஆல்பத்தை புரட்ட அப்போது அவள் தீவிரமாக ஒரு படத்தைப் பார்த்தாள்.
அவளின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அந்த பழைய புகைப்படத்தில் தன்னுடைய உருவத்தில் நின்ற பெண்ணைக் கண்டு அவளின் மேனி சிலிர்த்தது. விரல்கள் நடுங்க அந்த படத்தை வருடினாள்.
தன்னுடைய பேத்தியிடம் பதில் வரவில்லை என்று திரும்பிய கீதா அதில் இருந்த புகைபடத்தை கண்டதும் விஷயம் விளங்கிவிட, “இது எண்ட க்ளோஸ் நண்பி. இந்தியாவில் இவளோடு சேர்ந்து பணி செய்தேன். அப்போது எடுத்த போட்டோ இது” என்றார் பேத்திக்கு புரியும்படி.
“அம்மம்மா இவங்க என்னை மாதிரி இருக்காங்க” என்று திகைப்புடன் கூற வாய்விட்டு சிரித்தார் கீதா. சிறியவள் நிமிர்ந்து அவரை முறைக்க, “நீ அவளின்ட மறு பிம்பம். நான் அப்படிதான் நினைக்கிறன்.” என்றார் பேத்தியின் முகத்தை வருடி..
அவர் பேசிய பேச்சில் தன்னை மறந்து அவரின் மடியில் முகம் புதைத்தவளின் மனதில் மீண்டும் குழப்ப மேகங்கள் தலை தூக்கியது. அப்போது அந்த படத்தில் இருந்தவரின் பெயரை மட்டும் கேட்காமல் விட்டுவிட்டாள்.
இதற்கிடையே ஒருநாள் தன்னுடைய அப்பப்பாவுடன் கதைத்தபடியே அந்த மைதானத்தில் ஓடிய பேரனை இமைக்க மறந்து பார்த்தார் சுரேஷ். அந்த உருவத்தை காணும்போது எல்லாம் அவரின் மனதில் சில நினைவுகள் அலைபோல வந்து செல்லும்.
தன்னுடைய பேரனாக தன்னுடைய முதலாளி வந்து பிறக்க என்ன காரணம் என்று அவருக்கு இதுநாள் வரை புரியவே இல்லை. ஆனால் காரணம் இல்லாமல் இந்த பூமியின் எந்த ஜீவனும் மறுஜென்மம் எடுப்பதில்லை என்ற உண்மையை மட்டும் உணர்ந்திருந்தார் சுரேஷ்.
கிட்டதட்ட பத்து ரவுண்டு ஓடிவிட்டு வந்து தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்தவனின் உடல் முழுவதும் நனைத்திருக்க முத்து முத்தாக வேர்வை அவனின் முகத்தில் வழிந்தது.
“என்ன அப்பப்பா ஒரே சிந்தனையில் இருப்பது போல கண்டேனே” என்றான் புன்சிரிப்புடன்.
“ஆமாண்டா எழில். இத்தனை வருடம் சென்றபிறகும் சில நிகழ்வுகளும், அது கொடுத்த தாக்கமும் மனதைவிட்டு நீங்க மறுக்கிறது. அதற்கான காரணம் தான் என்னெண்டு எனக்கு தெரியவில்லை” என்றார் அவர் தெளிவான குரலில்.
அவர் எப்போதும் இப்படி பேசுவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவன் எழிலன். ஆனால் அவரையும் மீறி அந்த குரலில் மறைந்திருந்த வலி அவனின் மனதை கசக்கி பிழிந்தது.
“என்ன விடயம் அப்பப்பா. என்னிடம் சொல்லலாம். நான் அதற்கு தீர்வு கண்டுபிடிக்க முடியுமா எண்டு யோசிக்கிறேன்” என்றான் அவரின் மீது பார்வையை பதித்தபடி.
அவன் சொன்னதும் தன்னுடைய பக்கெட்டில் இருந்து பர்சை எடுத்து அவனிடம் நீட்டினார். பேரனோ அவரை கேள்வியாக நோக்கியபடி பர்சை திறந்து பார்த்தவனின் முகம் திகைப்பில் விரிந்தது.
“என்ன தாத்தா என்ர போட்டோவை சிறிது செய்து பர்சில் வைத்திருக்கீங்க” என்றான் குரலில் குறும்புடன்.
தன் பேரனின் முகத்தை இமைக்காமல் பார்க்க, “இந்த புகைப்படம் எடுத்து வருடம் நாற்பதற்கு மேல் இருக்கும். இண்டைய டெக்னாலஜி அணைத்திற்கும் ஆரம்பபுள்ளியாக இருந்த காலத்தில் எடுத்த போட்டோ அது” என்றார்.
“என்ன அப்பப்பா இது அந்த காலத்தில் எடுத்த போட்டோவா” என்றவன் அதன் பின்னாடி இருந்த தேதியை பார்த்தான். ஆமாம் அது பல வருடங்களுக்கு முன்னே எடுக்கபட்டது என்ற உண்மை உணர்ந்து அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“இது எண்ட பாஸின் போட்டோ. நான் அவரிடம் வேலை செய்த காலத்தில் எடுத்த புகைப்படம் இது. அவரை நான் இந்தியாவில் கண்டேன். இப்போது அவரின் மறுபிம்பமாக உன்னை காண்கிறான். ஆனால் இதெல்லாம் எதற்க்காக எண்டு புரியல..” என்றவர் சோர்வுடன் எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்.
அவர் சென்ற திசையைப் பார்த்தவனின் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது. அவனின் மனம் மீண்டும் கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே தத்தளிக்க தொடங்கியது.
ஆனால் இருவரின் சண்டையும் முடியவில்லை. அவர்களை சண்டையே போடாமல் பார்த்து கொள்வதையே தங்களின் முக்கிய பணியாக மாற்றிக் கொண்டனர் முகிலனும், மேகாவும்.
அதன்பிறகு வந்த நாளில் மழைநிலாவை மறந்தே போனான் அன்று அவளை கோபி ஷாப்பில் காணும் வரையில்..