Alaikadal 5

Alaikadal 5

அலைகடல் – 5
காலை வேளைக்கே உரிய பரபரப்பு அந்த கப்பலில் இருப்பவர்களை ஆக்கிரமிக்க பூங்குழலியின் மூளையோ விமானப்பயிற்சி இருப்பதால் செய்ய வேண்டிய வேலைகளைச் சுற்றி வந்தது.
அனைத்து உடற்பயிற்சியும் முடிந்து உணவகத்தில் குழுமியிருந்தனர் வீரர்கள்.

வெகுமாதங்கள் கழித்து பூங்குழலி இன்றுதான் போர்விமானத்தின் சீருடையான ஆலிவ் பச்சை சட்டையும் ஃபேண்டையும் அணிந்திருந்தாள். வழக்கமான உடைபோல் சிக்கென்று இல்லாமல் சற்று தளர்வாக தொளதொளவென்று இருந்தாலும் அதுவும் அவளிற்கு தனி கம்பீரத்தை கொடுத்தது

பூங்குழலிக்கு அன்று வேலைகள் குமிந்திருந்ததால் எப்போதும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பெண்கள் வழக்கமும் அவள் இவர்களுக்கு முன்பே வந்து உண்டு சென்றுவிட்டதால் மாற்றி அமைக்கப்பட்டு விட,
பாதி கவனத்தை சாப்பாட்டிலும் மீதியை பூங்குழலியைத் தேடுவதிலும் வைத்திருந்த ஜான்சி அருகில் இருந்த பவிகாவிடம், “மேம் இன்னக்கி சாப்பிடவே வரலை முன்னாடியே வந்துட்டு போயிட்டாங்களோ? ஏன்? நேத்து நான் கொஞ்சம் ஓவரா பண்ணிட்டேனா?” என

“இப்போதான் நீ ஓவரா பண்ற… மேம் இப்படித்தான். என்னமோ நேத்து கொஞ்சம் பாவப்பட்டு ஜூஸ் குடுத்தா தினம் அவங்க ஜூஸ் குடிக்க பிளான் பண்றியா நீ? வேணும்னா அவங்க கிட்டையே போய் கேளேன் ஏன் சாப்பிட வரலைன்னு… ஆளைப் பாரு” தோசையை மென்று தின்ற வாயோடு ஜான்சியையும் பல்லிடுக்கில் மென்றாள் பவிகா.

இருவரும் உண்டு முடித்து அமைதியாக வெளியே செல்லும் வழியில் நடந்துக்கொண்டிருந்தனர். மிகப்பெரிய உணவுக்கூடம் என்பதால் வெளியேறி வேலை நடக்குமிடம் செல்லவே ஐந்து நிமிடம் வேண்டியிருக்கும்.

ஜான்சியால் பூங்குழலியின் பாரமுகத்தை ஏனோ தாங்கவே முடியவில்லை. ஒரு வாரம் தொடர்ந்து அவள் அருகில் உண்டதால் அவளில்லாத வெற்று இடம் சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சட்டென்று தோன்றிய பாசமோ அல்லது நேற்று தனக்காக அவள் பேசிய பேச்சோ ஏதோ ஒன்று அவளைக் கவர்ந்து பூங்குழலியிடம் இழுத்ததால்,

“நேத்து நம்ம மூஞ்சியவாது பார்த்தாங்க… இன்னக்கி அதுவும் இல்லை. ஏன் பவிகா இப்படி?” மனதில் அரித்த கேள்வியை ஜான்சி கேட்டுவிட

“எனக்கு தெரியாதும்மா. அவங்களுக்கு தேவையில்லாம பேசுனா அவ்ளோவா பிடிக்காது. முகத்துக்கு நேராவே சொல்லிருவாங்க. அவங்களும் அவசியமில்லாம பேசவும் மாட்டாங்க. பேசுனா அவ்ளோ தான்…பார்த்ததானே நேத்து. சோ, அப்படியே பார்த்துப் பார்த்து தானா ஒரு மரியாதை, பயம் எல்லாம் வந்துருச்சிப்போல எல்லாருக்கும். அவங்களும் தள்ளியேதான் இருப்பாங்க. எதுக்கு மேம் பத்தியே பேசுற கொஞ்சம் வேற வேலை இருந்தா பாரு போ” பவிகா விரட்ட

“அதெல்லாம் நாங்க எல்லா வேலையும் பார்த்துட்டுதான் இருக்கோம். பை பவி நான் கண்ட்ரோல் ரூம் போறேன்” ஜான்சி பவிகாவிடம் விடைப்பெற்று செல்ல எதிரில் வந்துக்கொண்டிருந்தான் ரியாஸ் அவன் பின்னே சபரியும்.

ரியாஸ் நேற்று நடந்த சம்பவத்தை முற்றிலும் மறந்து அவனிற்கும் இன்று விமானப்பயிற்சி என்பதால் ஆலிவ் பச்சை உடையில் சபரியிடம் அதைப்பற்றிய செய்திகளை உற்சாகத்துடன் பேசி வர, ஜான்சி அவனை முறைத்துக்கொண்டே வந்தாள்.

கடந்துபோகும் கடைசி நொடியில் ஜான்சியின் பார்வையை கண்டு வியப்பில் புருவம் உயர்த்தினான் ரியாஸ். பின்பே அவளது முறைப்பிற்கு காரணம் நேற்று தான் பேசியவிதம் என்று உணர
‘இது வேறயா? கடவுளே’ என்று முனுமுனுத்தவாறு கடந்து சென்றவளை, “ஹலோ மிஸ்” என்ற குரலில் கட்டியிழுத்து நிறுத்தினான்.

கண்டுக்காமல் செல்லவேண்டும் என்றிருந்தாலும் பக்கத்தில் சபரி வேறு இருந்ததால் காட்சிப் பொருள் ஆக விரும்பாமல் திரும்பி கேள்வியோடு நோக்க, “நேற்று உங்களை ஹர்ட் பண்ணுன மாதிரி பேசுனதுக்கு சாரி மிஸ்…” என்றான் அவன். பூங்குழலி ஜான்சியின் பெயரை அழைத்திருந்தாலும் நேற்றைய களேபரத்தில் சரியாக கவனிக்காததால் அவனிற்கு நியாபகம் வரவே இல்லை.

அவன் மன்னிப்பு கேட்பான் என்று இவளும் எதிர்பார்க்கவில்லை. கோபம் இருக்கிறதுதான் இருந்தாலும் பதிலுக்கு சண்டையிடவும் தோணவில்லை, சமாதானமாகி இட்ஸ் ஓகே என்றவாறு மன்னிக்கவும் மனதில்லை ஆக ஒரு தினுசாய் பார்த்ததோடு சரி, ஒன்றையும் கூறாமல் தன் வழியே சென்றுவிட்டாள் ஜான்சி.

அவளின் முகபாவனையிலேயே மனக்கிடங்கை அறிந்துக்கொண்டவனோ அங்கேயே நின்று அவள் இடப்பக்கம் திரும்பிச் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதன்பின் எந்தவித பேச்சும் இன்றி தோசையை உள்ளே தள்ளிகொண்டிருந்த ரியாஸை,“என்னாச்சு பீல் பண்றியா? லீவ் இட் அவங்க ஒன்னும் சொல்லாம போனதே மன்னிச்ச மாதிரிதான்” என சபரி சமாதானம் செய்ய,

“இல்லை சார். நான் அதை நினைச்சி பீல் பண்ணலை கடைசியா பார்த்த அவளோட பார்வை…” என்று தயங்கியவன் பின், “அதை நினைச்சாலே இங்க என்னமோ பண்ணுது” இடது கையால் இடது பக்கம் இருக்கும் நெஞ்சைத் தொட்டுக் காட்ட மனதிற்குள்ளேயே அதிர்ந்து நெஞ்சைப் பிடித்தான் சபரி.

“வாட் என்ன சொல்ல வர இப்போ?” என முதல்கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியேறி வினவ,

“ஹ்ம்ம்… அந்த பார்வை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றேன் சார்” என்று கண்சிமிட்டியவாறு சென்றுவிட,

சபரியோ, ‘விளையாடுறானா உண்மைய சொல்றானான்னே தெரியல… இதனால இவன் எதையாவது திரும்ப இழுத்து பிரச்சனை வராம இருந்தா சரிதான்’ என்றெண்ணி தோளைக் குலுக்கினான்.

விமானத்திற்காகப் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் குறைவான வீரர்கள் விமான தளவாடத்தில் வரிசையாக நின்றிருக்க பூங்குழலி மற்றும் இன்னும் சிலர் அவர்களை குழுவாக பிரித்து விட்டுக்கொண்டிருந்தனர்.
முதல் ஷிப்ட்டில் எட்டு விமானம்.அடுத்ததில் வேறு எட்டு விமானம். இது போல் நான்கு ஷிப்டாக பிரித்து அங்கிருக்கும் முப்பத்தியிரண்டு  விமானத்தையும் வீரர்கள் ஓட்டுமாறு ஏற்பாடு செய்யப்பட, ரியாஸ் பூங்குழலியைக் கண்டதும் பதுங்கி கடைசி வரிசையில் நின்றதால் கடைசி ஷிப்ட்டில் போடப்பட்டான்.

‘ஹப்பாடி எப்படியும் மேம் முதல் ஷிப்ட்டில் போயிருவாங்க’ என்ற அற்ப சந்தோசமும் பூங்குழலி கடைசி ஷிப்டில் வந்து நின்றதும் நின்றே போயிருந்தது.

முதலில் சென்றுவிட்டு திரும்பினால் மாலை வரை இருக்கும் வேலையில் விமானம் ஓட்டிய உற்சாகம் வடிந்துவிடுவதால் பூங்குழலி கடைசி ஷிப்டைத்தான் வழக்கமாக தேர்ந்தெடுப்பாள் என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கமாண்டர் வாக்கிடாக்கியை உயிர்ப்பித்து விமானத்தை தளவாடத்தில் நிறுத்துமாறு அதற்கென இருக்கும் குழுவிடம் கட்டளையிட இவர்கள் நின்றிருக்கும் இடத்தில் இருந்து ஐந்தடி தொலைவில் தடுப்பு கம்பிகள் மேலெழுந்து தளவாடம் கீழே செல்ல ஆரம்பித்தது.

கீழே சென்று மேலே வருகையில் ஒரு போர்விமானத்தையும் எடுத்துவர அதில் செல்ல வேண்டிய இரு வீரர்கள் ஒருமுறை அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டனர்.

சற்றுநேரத்தில் எல்லாம் முடிந்துவிட கமாண்டரிடம் வெற்றிக்குறி காண்பித்து உள்ளே ஏறிய கையோடு மெதுவே தளவாடத்தில் குறிப்பிட்ட தூரம் நகர்த்தியபின் வேகத்தைக் கூட்டி கடலுக்கு மேல் பறந்தனர்.

இவ்வாறே நடந்து மாலை நான்கு மணி ஆக கடைசி ஷிப்டும் ஆரம்பமாகியது விமானத்தை இருவர் இருவராய் இயக்கிக்கொண்டே போக ரியாஸ் இடையில் போக எவ்வளவோ முயன்றும் முடியாமல் விதி இவனை ஒற்றையில் தள்ளியது.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் தனக்கான கடைசி விமானத்திற்கு காத்திருந்தாள் பூங்குழலி. அருகே சோகமே உருவாய் ரியாஸ்.

‘என்னடா எனக்கு வந்த சோதனை? வகை வகையா தப்பு பண்றவன்லாம் நல்லாருக்கான். ஒரே ஒரு தப்பை அதுவும் குட்டியூண்டு தப்பை பண்ணிட்டு நான் படுறபாடு இருக்கே!’ என்றவாறு பெருமூச்சை வெளியேற்ற தளவாடத்தின் மேலே வந்த விமானத்தை சோதனை செய்து அதில் ஏறி பெல்ட் போட ஆரம்பித்தாள் பூங்குழலி.

இவனும் அருகில் ஏறி அமர விமானம் விண்ணை நோக்கிப் பாய்ந்தது. பூங்குழலி அனாயசமாக ஓட்டிச்செல்ல அவளின் லாவகத்தை கண்டு வியந்துதான் போனான்.

குறிப்பிட்ட தூரம் சென்று திரும்புகையில் அங்கிருந்த கண்காணிப்பு கணினியின் ஓரத்தில் வினாடியில் லேசான சிகப்புப் பொட்டாக ஒரு சிக்னல் விழுந்து மறைய பூங்குழலி அதனை பார்க்கும் முன் சென்றுவிட்டது ஆனால் ரியாஸ் கவனித்து விட்டான்.

“மேம் ஜஸ்ட் நொவ் திரும்பும்போது சிக்னல் தெரிஞ்சது அதுவும் இந்தியன் பார்டர் கிட்ட” என

“வாட் நம்ம ஷிப் எதுவும் இல்லையே அங்க… சப்மரைன் (நீர்மூழ்கி கப்பல்) கூட அரபியன் ஸீல தானே இருக்கு?” என்றாவாறு வந்த வழியே மீண்டும் திரும்ப இருவரின் கண்ணுக்கும் தட்டுபட்டது அந்த சிகப்பு சிக்னல்.
இந்திய கடல் எல்லைக்கோட்டினை சற்று ஒட்டி உள்ளே காண்பிக்க,“எதாவது நியூ ஷிப் உள்ளே வருதா? கமாண்டர் கிட்ட இன்பார்ம் பண்ணுங்க ரியாஸ் குய்க்” என்றவாறு அந்த சிக்னல் விழும் பகுதியை நோக்கி விமானத்தை செலுத்தினாள்.

ரியாஸ் கமாண்டரிடம் கூறிவிட்டு பதிலுக்காகக் காத்திருக்க வாக்கிடாக்கி வழியாக இருவருக்கும் அவர் கூறியது கேட்டது. அப்படி எந்த கப்பலும் வரவில்லையென்றும் தேவைப்பட்டால் ஆக்சன் எடுக்குமாறு கூறி அதற்குள் ஷிப் அனுப்புவதாகவும் கூறினார் அவர்.

இடத்தை நெருங்கியதும் பைனாகுலர் வழியாக கீழே நடப்பதை பார்த்த ரியாஸ், “மேம் ஒன்னு ஸ்ரீலங்கா கப்பல் மாதிரி தெரியுது மேம். இன்னொன்னு சாதா கப்பல்தான் மீன்கள் அப்புறம் கடல்ல கிடைக்குற பொருட்கள் இருக்கு கூடவே ஆறு பேர் நிக்குறாங்க மே பீ நம்ம நாட்டு மீனவர்களா இருக்கலாம் அவங்களை துப்பாக்கி முனைல பிடிச்சி வச்சிருக்காங்க” என்று விட,
மேலிருந்தே சுடுமாறு இருக்கும் விமானத்தின் பிரத்யேக துப்பாக்கி பட்டனை ஸ்ரீலங்கா கப்பல் என்று ரியாஸால் கூறப்பட்ட கப்பலைக் குறிவைத்து அழுத்தினாள் பூங்குழலி.

சில பல குண்டுகள் அக்கப்பலை நோக்கிப் பாய விமானச் சத்தம் கேட்டு அங்கிருப்போர் மேலே பார்த்ததால், குண்டுச்சத்தத்தை கேட்டு சுதாரிக்கும் முன் கப்பலில் இருந்த ஒருவன் மேலே பட்டு அவனை வீழ்த்த, இரண்டு குண்டுகள் அவர்களின் கப்பலிலும் ஏனைய சில கடலிலும் வெடித்தது.

உயிர் பயத்தில் இருந்த மீனவர்கள் அவர்கள் கவனம் சிதறியதை பயன்படுத்தி கப்பலை உயிர்ப்பித்து நாடு திரும்பும் வழியில் செலுத்த கப்பலில் குண்டுபட்டதால் விரைந்து எல்லைகோட்டை நோக்கி சென்றது மற்றைய கப்பல் கூடவே மேல் நோக்கி சுட்டுக்கொண்டும் இருக்க விமானத்தின் இரும்பு தடுப்பை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அசராமல் அவர்களை சுற்றி வந்து தாக்கிக்கொண்டிருந்த பூங்குழலியோ அவர்கள் இந்திய பார்டரை தாண்டிய பின்பே ஓய்ந்தாள். மரக்கப்பல் என்றால் இந்நேரத்திற்கு மூழ்கியிருக்கும். அது ஓரளவு வசதியான கப்பல் ஆகையால் மிக குறைவான சேதாரத்தில் தப்பித்துவிட்டது.

தங்கள் கப்பலை நோக்கி விமானத்தை திருப்ப, “மேம் என்ன மேம் அவங்களை விட்டுட்டீங்க” ஏமாற்றத்தோடு கேட்டான் ரியாஸ்.

“நோ… அவங்க உள்ளே வந்தாங்க சோ அட்டாக் பண்ணுனோம். நம்ம எல்லைய தாண்டியும் அட்டாக் பண்ணுனா அது இரு நாட்டுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுதான் அவங்க மோடிவ் கூட அதுக்கு நாம இடம் குடுக்கக் கூடாது”

“மேம் என்ன சொல்றீங்க? அவங்கதான் எல்லையை தாண்டி பிரச்சனை பண்ணிட்டாங்களே. இந்த விஷயம் போதுமே ரெண்டு நாட்டுக்கும் பிரச்சனை வர”

“இல்லை ரியாஸ் அவங்க ஸ்ரீலங்கா ஆர்மின்னு எனக்கு தோணலை” என்றாள் யோசனையுடன்
அவளின் கூற்றில் திடுக்கிட்டுதான் போனான் ரியாஸ். “மேம் அப்படின்னா அவங்க…” என நிறுத்த,

“தெரியலை மே பீ கடல் கொள்ளையர்களா இருக்கலாம் இல்லைனா தப்பு செஞ்சிட்டு மாட்டிக்காம இருக்க சர்வதேச கடல் பகுதில சுத்தி திரியுற குற்றவாளிகளா இருக்கலாம்” என்றாள் பூங்குழலி.

குழப்பமான யோசனையுடன் பூங்குழலி முகத்தைக் கண்ட ரியாஸ், “மேம் எனக்கென்னமோ அப்படி தோணலை நீங்க எப்படி இப்படி சொல்றீங்க?”

“அவங்க வச்சிருக்கிற துப்பாக்கி வச்சித்தான் சொல்றேன். அது என்ன துப்பாக்கி என்று கவனித்திருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்” என்றவாறு மேலதிகாரிக்கு இங்கு நடந்த தகவலை கூறிவிட அவர் அதனை இந்திய பாதுகாப்பு துறைக்கு உடனடியாக கொண்டு சேர்த்தார்.

அதன் பின்பே தலையில் பல்பு எரிந்தது ரியாஸிற்கு. அவர்கள் வைத்திருந்ததோ பல ஆண்டுகள் முன் பயன்படுத்தப்பட்ட வகை துப்பாக்கிகள். அதிநவீன துப்பாக்கிகள் வந்ததும் அத்தகைய பழைய துப்பாக்கிகளை அனைத்து நாடுகளும் தூக்கி போட்டிருந்தன.
தற்போது அதைத்தான் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்ற உலகளாவிய குற்றச்சாட்டும் நினைவு வர, “மேம் யூ ஆர் சான்ஸ்லெஸ்… நான் கூட கவனிக்கவே இல்லை. நீங்க சொன்னது சரிதான்” என்று வியந்து பாராட்ட சிறு தலையசைப்புடன் கேட்டுக்கொண்டாள்.

விக்ரமாதித்ய கப்பலைக் கண்டதும் பூங்குழலி விமானத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து நிறுத்திவிட இறங்கும் முன், “நீங்க கம்ப்யூட்டர்ல பதிவாகி இருக்குறதை எடுத்துட்டுவாங்க ரியாஸ். நான் கான்பரன்ஸ் ரூம்ல இருப்பேன்” என்றுவிட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கு சென்றாள்.

*****
சென்னை.
ஈ. சி.ஆர். அருகே பிரமாண்டமாகவும் இல்லாமல் குட்டியாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கடுமையான பாதுகாப்பில் இருந்த பங்களா மாலை மங்கி இருள் பரவும் நேரத்தில் மின்விளக்குளால் உயிர்பெற்று ஒளிவீச ஒன்றன் பின் ஒன்றாக இரு கார்கள் உள்ளே நுழைந்தது.

இரு காரில் இருந்தும் இறங்கியவர்களுக்கு கிட்டதட்ட முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும் ஆனால் அதில் ஒருவன் மிக இளமையாக வசீகரிக்கும் முகத்தோற்றத்துடன் கம்பீரமாக இருந்தான். மற்றொருவனோ முகத்தை தொங்கப்போடாத குறையாக முன்னவனை பின்பற்றினான்.

எந்த வேகத்தில் உள்ளே சென்றார்களோ! தன் எதிரில் தவிப்பாக அமர்ந்திருப்பவனிடம், “சொல்லு ரித்தேஷ் என்ன விஷயம்?” என நேரடியாக பேச்சுவார்த்தைக்கு வந்தான் மற்றையவன்.

“என்னால அந்த பெண்ணைக் கண்டுபிடிக்கவே முடியலை. இதையே நான் ஒரு மாசமா சொல்லிட்டு இருக்கேன் ப்ளீஸ் ஆ…” என முடிக்கவில்லை.

“இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லை. ஒருத்தி எங்க இருக்கான்னு அவ போட்டோல இருந்து மொத்த பயோடேட்டாவும் கையில் குடுத்து தேடச் சொன்னா முடியலையாம். இந்த லட்சணத்துலதான் நீ டிடக்டிவ் கம்பெனி நடத்துறியா” என கடித்துக்குதற,

அத்தனையும் அமைதியாக வாங்கிக்கொண்டான் ரித்தேஷ். அவனும்தான் என்ன செய்வான். ஒன்றா இரண்டா கிட்டதட்ட ஐந்து வருடங்களாக இந்தியா முழுக்க தேடிப் பார்த்தாயிற்று.வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என உறுதியாகிற்று. எனினும் மாயமாய் மறைந்த பெண்ணைப் பற்றி சிறு துப்புக்கூட கிடைக்கவில்லை.

“எல்லாரும் ஆஹா ஓஹோன்னு உன்னை புகழ்ந்தாங்களே… நம்ம கூட படிச்சவன் தானேன்னு ரெண்டு வருஷம் எவன் கிட்டயோ குடுத்ததை பிடுங்கி உன்கிட்ட குடுத்தேன் பாரு. என்னைச் சொல்லணும். நீ என்னசெய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. இன்னும் ஆறு மாசம்தான் உனக்கு டைம்.அதுக்குள்ள எனக்கு தகவல் கிடைக்கணும். அப்படிக் கிடைக்கலை உன்னோட டிடக்டிவ் கம்பெனி உனக்கு இல்லை” என அப்பட்டமாக மிரட்ட.

இத்தனை வருடம் இல்லாமல் இன்று என்னவாயிற்று என்று அதிர்ந்து போய் பார்த்தான் ரித்தேஷ். அவனின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் நன்கு அறிந்தவன் ஆகையால் மேலும் தவிப்போடு அவனைக் கண்டு கெஞ்ச.

அதற்குச் சிறிதும் இரங்காமல், “நான் சொன்னா செய்வேன்னு தெரியும்ல நீ இப்போ போகலாம்” என்றவாறு மாடி ஏற, செல்பவனையே இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரித்தேஷ்.
அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!