SK – 2

அத்தியாயம் – 2
திவ்யாவின் குரல்கேட்டு ஓடிவந்த சித்தார்த் முகிலன் இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான். தன் மனைவியுடன் அவர் வாழ நினைத்த வாழ்க்கையை ஓவியங்களாக வரைந்து தன்னறையில் வைந்திருப்பதை எல்லாம் பார்த்தபடியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த முகிலனின் உயிர் போயிருக்க அவரின் கைகளில் தவழ்ந்தது இறுதியாக அவளைக் கண்ட காட்சியில் அவளின் விழிகள் பேசிய காதல் மொழியை பிரதிபலிக்கும் மேகாவின் முகம்.
ஒருவர் தன்னைவிட அதிகமாக ஒருவரின் மீது பாசம் வைக்க முடியுமா? என்ற கேள்வி சித்தார்த் மனதில் எழுந்தது. தந்தையின் காலடியைப் பற்றிகொண்டு, “அப்பா.. அப்பா..” என்று கதறிய திவ்யாவை தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்ட சித்தார்த்,
“தியா இங்கே பாருடா அப்பா எங்கையும் போகல கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரும்மா” என்று சாமதானம் செய்ய, “அவர் என்னை எப்படி விட்டுட்டு போகலாம்? அவரோட மனைவி இறந்துட்ட அவரும் இறந்து போகனுமா? எனக்கு என்னோட அப்பா வேணும் நான் எங்கம்மா கையில் இருந்ததைவிட எங்க அப்பாகிட்ட இருந்ததுதான் அதிகம். எனக்கு என் அப்பா வேணும் சித்து அண்ணா” என்று குழந்தைபோல கதறும் பெண்ணை சமாளிக்க முடியாமல் திணறினான் சித்தார்த்.
அதன்பிறகு அவளை ஒரு வழியாக சமாதானம் செய்து முகிலனின் இறுதி சடங்கை எல்லாம் சரிவர முடித்துவிட்டு திரும்பிப் பார்க்கும் போது கிட்டதட்ட ஒரு மாதம் ஓடி மறைந்தது. எப்போதும் கவலை இல்லாமல் சிட்டாக பறக்கும் பெண்ணோ தந்தையின் புகைப்படம் முன்னே சோறு தண்ணீர் இன்றி தவம் கிடந்தாள்.
வீட்டில் எல்லோரும் திவ்யாவை உடன் அழைத்து செல்லும் நோக்கத்துடன் சேதுராமன், அருண், தருண் மற்றும் முகிலனின் சித்தி விஜயா மூவரும் காத்திருந்தனர். அன்று காலை சமையலை முடித்தவுடன் கையில் சாப்பாட்டு தட்டுடன் அவளின் அருகே வந்தான்.
அவனின் கண்களுக்கு வளர்ந்த குழந்தையாக தெரிந்த திவ்யாவின் அருகே சென்று அமர்ந்த சித்து, “தியா போனவங்க திரும்பி வரமட்டாங்கடா. வாழ்க்கையில் சில இழப்புகளை ஈடுசெய்ய முடியாது அதிலிருந்து வெளியே வாம்மா” என்று அவளின் கூந்தலை ஆறுதலாக வருடிவிட்டு சாப்பிட வைக்க முயற்சித்தான்.
அவள் களையிழந்த முகத்துடன், “அவங்க வரமாட்டாங்க எனக்கு தெரியும் அண்ணா. ஆனா என்னைப்பற்றி அப்பா யோசிக்கவே இல்லல்ல” என்றவளின் கண்கள் மீண்டும் கலங்க ஒருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“என்னோட செல்ல தங்கையை என்னை நம்பி பொறுப்பா ஒப்படைச்சிட்டு போயிருக்காங்க, அவங்களை நான் நல்லா பார்த்துக்கணும், அவளுக்கு பிடித்த மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கணும்” என்றவன் அவளை உருட்டி மிரட்டி சாப்பிட வைக்க தன் தங்கை மகள் சாப்பிடுவதைப் பார்த்த சேதுராமன் மகன்கள் இருவரையும் பார்த்தார்.
அருணுக்கு திருமணம் ஆனா காரணத்தினால் அவனின் பார்வையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. அதே தருண் பார்வையில் சிறிது வித்தியாசத்தை உணர்ந்தார். அவன் திவ்யாவைப் பார்க்கும் பார்வையில் உரிமையையும் தாண்டி ஏதோவொன்று இருப்பதை உணர்ந்தார்.
அவரும் அவனின் வயதைக் கடந்து வந்தவர்தானே! அவருக்கு தெரியாத மகனின் பார்வைக்கு அர்த்தம். தனக்குள் சிந்தித்தபடி தன் தங்கை மகள் மீது பார்வையைத் திருப்ப சித்தார்த் கையில் குழந்தைபோல கள்ளம்கபடம் இல்லாமல் சாப்பிடும் பெண்ணைப் பார்த்து அவருக்கு ஒருப்பக்கம் வருத்தமாக இருந்தது.
அதுவும் சித்தார்த் திவ்யாவைப் பார்த்து கொள்ளும் விதம் அவரின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மையும் புரிந்தது. தன் தங்கை வளர்த்த மகன் என்பதாலோ என்னவோ சேதுராமனின் மறுபிம்பம் சித்தார்த் என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவன் திவ்யாவை கவனித்துக் கொண்டான்.
விஜயா ஒருபுறம் சித்தார்த்தை கண்டத்தில் இருந்தே உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தார். தன் அக்கா மகன் சொத்தில் சரிபாதி அவன் பெயரில் எழுதி வைத்த கோபம் ஒருபுறம் அவருக்கு இருந்தது. இருவரும் சாப்பிட்டு முடிக்கும்வரை பேசாத விஜயா,
“என்னப்பா சித்தார்த் பாவம் மேகா வளர்த்த பையன் என்று நினைத்தால் நீ சரியான ஆளாக இருப்ப போலவே, அந்தபக்கம் இவளோட அம்மாக்கிட்ட வளர்ந்துட்டு இந்தப்பக்கம் முகிலனிடம் நல்லவனாக நடித்து சொத்தையும் எழுதி வாங்கிட்டு இப்போ அவங்க மகளோட வால்க்கைக்குக்கும் ஏதோ வலை விரிக்கிற போல” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல கூறியவரை நேருக்கு நேராகப் பார்த்தான்.
அவனைப் பேசியதும் திவ்யாவிற்கு சுள்ளேன்று கோபம் வந்துவிட அவள் பேசும் முன்னே அவளின் கைப்பற்றித் தடுத்த சித்தார்த், “இங்கே பாருங்க இந்த சொத்து எல்லாம் என்னோட கால் தூசிக்கு பெறாது. இந்த சென்னையில் நான் பிரபலமான டாக்டர். நான் சம்பாரிக்கும் பணமே பேங்கில் கோடிகணக்கில் கிடைக்கிறது அப்போவே நான் பணத்தை மதிக்கல இப்போ நான் பணத்து ஆசைபட்டு இவளுக்கு கெடுதல் நினைப்பேனா” என்று அவரின் உச்சி முதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்தான்.
சேதுராமன் நடப்பதை அமைதியாக நோக்கிட, “தன்னோட அக்கா மகன் தவறான பாதையில் போறான்னு தெரிந்து அவனுக்கு ஒரு பெண்ணைக் கட்டிவைத்து அவளோட வாழ்க்கையைக் கேள்வி குறி ஆக்கியது நீங்கதானே? என்னைக்கும் பணத்தை வெச்சு வெளிக்காயத்து வென மருந்து வாங்கி போடலாமே தவிர மனக்காயத்திற்கு மருந்துபோட முடியாது. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் நீங்க திருந்தவே இல்ல” என்றவனின் வார்த்தையில் கூனிக்குறுகிபோய் நின்றார் விஜயா.
அன்று மேகாவின் வார்த்தைகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் வாயசைத்து நின்றது போலவே இன்றும் பேயறைத்தது போல நின்றார். சில நொடியில் தன்னுடைய குட்டுக்களை உடைத்துவிட்டானே என்ற எண்ணத்தில் அவரின் முகம் இருள்படர்ந்தது.
அதன்பிறகு சேதுராமனின் பக்கம் திரும்பிய சித்தார்த், “உங்க தங்கை மகளை நீங்க அழைச்சிட்டு போக நான் தடை சொல்ல மாட்டேன். ஆனா ஒரு அண்ணனாக இருந்து நான் செய்கின்ற கடமையை எங்கிருந்து வேண்டுமென்றாலும் செய்வேன்னு மறக்காமல் அவளை பத்திரமாக பார்த்துகோங்க” என்றான்
அவன் பேசி முடித்தபிறகு அங்கே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.
திவ்யா தமையனின் முகத்தை பார்த்துவிட்டு, “மாமா நான் உங்களோட வரல, நான் அண்ணா கூடவே இருக்கேன்” என்று அங்கு நிலவிய அமைதியைக் கலைத்தாள்
“திவ்யா என்ன பேச்சு இது? நீ அவங்களோட கிளம்புடா” என்றவனை ஏறிட்டவளோ, “அண்ணா எங்க அப்பாவுக்கு இவங்க யார்மீது நம்பிக்கை இல்ல போல அதான் என்னோட பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சி இருக்காங்க அதை ஞாபகத்தில் வைத்து பேசு” கிட்டதட்ட அவனை மிரட்டினாள்.
அவளின் மிரட்டலைக் கண்டு சித்தார்த், “சரியான வாலு” என்று அவனின் தலையை செல்லமாக வருடிவிட தருண் மட்டும் அவளின் முன்னே வந்து நின்றான்.
அவனின் செய்கையைக் கண்டு அருண் ஒருப்பக்கம் பதட்டத்துடன் நின்றிருக்க விஜயா எதுவும் பேசாமல் அங்கிருந்து சத்தமில்லாமல் வெளியேறிவிட சேதுராமன் மட்டும் தன் மகனின் எதிர்பார்த்தான்
“எனக்கு உங்க தங்கச்சி திவ்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு படிப்பு, வேலை எல்லாம் இருக்கு. மாமா இருந்தா இன்னும் உரிமையா வந்து இதைக் கேட்டிருப்பேன். அதே மாதிரிதான் நான் உங்களையும் நினைக்கிறேன் எனக்கு திவ்யாவைக் கட்டிகொடுங்க” அவனின் தைரியமான தெளிவான பேச்சு சித்தார்த் மனத்தைக் கவர்ந்தது.
அவன் திவ்யாவைத் திரும்பிப் பார்க்க அவளோ திகைப்பின் உச்சியில் நின்றிருந்தாள். தருணை மாமன் மகன் என்ற முறையில் தெரியும் என்ற போதும் அவனிடம் அதிகமாக பேசி அவளுக்கு பழக்கமில்லை. அதனாலோ என்னவோ அவன் திருமணம் என்று பேசவும் அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தாள்.
அவளின் கைகள் சில்லிட்டு போய்விட, “தியா ரிலாக்ஸ். உனக்கு விருப்பம் இருந்தா சரின்னு சொல்லு. விருப்பம் இல்லாட்டி நோ என்று காரணத்தோடு சொல்லு” என்று சொல்லிவிட்டு சித்தார்த் நகர்ந்துவிட அவள் மட்டும் தருணை கேள்வியாக நோக்கினாள்.
“தியா நான் உன்னை அத்தையின் இறப்புக்கு வந்தபோதுதான் பார்த்தேன். என்னவோ தெரியல எனக்கு நீ வேணும் லைப் முழுவதும் என்று மனசு சொல்லுது. உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு” என்றான் அவளின் விழிகளில் தன் பார்வையை ஊடுருவிப் பார்த்தான்.
தன் சம்மதம் கேட்டு எதிரே நிற்பவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிமிர்ந்து தமையனின் முகம் நோக்கிட, “அவரோட வாழ்க்கை முழுக்க வாழபோகும் பொண்ணு நீதான். நீயே யோசித்து நல்லவொரு முடிவெடு” என்றவன் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற இவர்கள் இருவரும் மட்டுமே ஹாலில் நின்றிருந்தனர்.
தருண் திவ்யாவை கேள்வியாக நோக்கிட, “உங்களுக்கு தெரியும் சித்து அண்ணாவை எங்க அம்மா வளர்த்தாங்க. இப்போ அண்ணாவும், நானும் அப்பாவையும், அம்மாவையும் இழந்துட்டு நிற்கிறோம். நான்.. நீங்க.. உங்கள கல்யா..” என்று கோர்வையாக சொல்ல முடியாமல் திணறியவளை சலனமின்றி பார்த்தான்.
அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று அவள் சிந்திக்க, “தர்ஷி நிமிர்ந்து என்னை பாரு” என்றான் மெல்லிய குரலில்.
அவனின் ‘தர்ஷி’ என்ற அழைப்பில் நிமிர்ந்தவள் அவனின் விழியை நேருக்கு நேராக பார்க்க, “உனக்கு அண்ணா என்றால் எனக்கு மச்சான். அதனால் அவரை என்னால் விட்டுகொடுக்க முடியாது. நீ எனக்காக எந்த உறவையும் இழக்க வேண்டிய சூழ்நிலை இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே வராது” அவன் உறுதியான குரலில் உரைத்துவிட்டு அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்ட இவளின் உதட்டில் புன்னகை அரும்பிட அவளின் கண்கள் லேசாக கலங்கியது.
“தர்ஷி என்ன இது குழந்தை மாதிரி பண்ற” என்று பெருவிரலால் அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவன் துடைத்துவிட, “மாமா” என்ற அழைப்புடன் அவனின் தோளில் உரிமையாக சாய்ந்த தன்னவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.
காலையிலிருந்து தந்தையின் புகைப்படம் முன்னே அமர்ந்திருந்த அவளின் தோற்றமும், சற்றுமுன் சித்தார்த்தை பேசியுடன் விஜயாவின் மீது அவளுக்கு வந்த கோபமும், இப்போது உரிமையாக தோள் சாய்ந்த தன்னவளை கலவையான உணர்வுகளில் கவரப்பட்டான்.
“உஸ்ஸ் அழுகாமல் இரும்மா” என்று அவளை சாமதானம் செய்து வெளியே அழைத்து வந்த தருண், “அப்பா தர்ஷி இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிட்டா” என்று மலர்ந்த முகத்துடன் கூற சித்தார்த் இமைக்காமல் தங்கையின் முகம் பார்த்தான்.
மெல்ல அவளின் அருகே சென்று, “எனக்காக ஓகே சொல்லல இல்ல” அவன் நிதானமாக கேட்க தமையனை தயக்கமின்றி எதிர்கொண்ட திவ்யா இல்லையென மறுப்பாக தலையசைக்க அதில் அவனின் மனம் நிம்மதியடைந்தது.
“தேங்க் காட்” என்று தன்னைமறந்து கூறிய சித்தார்த் சேதுராமனின் பக்கம் திரும்பி, “இவ இனிமேல் உங்களோட பொறுப்பு. உங்களுக்கு திருமணம் எப்போ வைக்கனுமோ அப்போ சொல்லுங்கள் நான் எல்லா ஏற்பாடும் பண்ணுகிறேன்..” என்றான்.
சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு அருண் மட்டும், “இவ எங்க வீட்டு பொண்ணு இவளை நாங்க எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுகொள்ள எங்களால் முடியும், ஆனா நீங்க அவளுக்கு எதுவும் செய்ய வேண்டாம்..” என்றான் வெடுக்கென்று.
அவனிடம் இப்படியொரு பேச்சை எதிர்பார்க்காத தருண் தன் அண்ணனைக் கேள்வியாக நோக்கிட, “என்னதான் நம்ம அத்தை வளர்த்தாலும்” அவன் தொடங்கும் போதே சித்தார்த் முகத்தில் இருள் சூழ்ந்தது. இப்பொழுதும் அருணுடன் சண்டை போட நினைத்து நிமிர்ந்த திவ்யாவின் கைகளைப்பிடித்து தடுத்து மறுப்பாக தலையசைத்தான்.
இதே வார்த்தையை அந்த இடத்தில் வேறு நபர் சொல்லியிருந்தால் கோபத்தில் என்ன செய்திருப்பானோ? ஆனால் அங்கே நிற்பது தாயின் சொந்தம் என்ற காரணமும், நாளை அந்த வீட்டிற்கு வாழபோகும் பெண் தன் தங்கை என்றும் அந்த இடத்தில் தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு நின்றிருந்தான்.
ஆனால் அண்ணனின் பேச்சில் தம்பியின் முகமோ வெறுப்பைத் தத்தெடுக்க, ‘இவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை’ என்று எரிச்சலோடு தமையனை நோக்கினான் தருண்.
ஒரே கருவில் இருந்து ஒற்றுமையாக வந்த இருவரும் இரு துருவமாக நிற்பது கண்டு இடையில் புகுந்த சேதுராமன், “அருண் என்ன பேச்சு பேசற, உனக்கு விருப்பம் இல்லன்ன பரவல்ல விடு. நாளைக்கு வாழ போவது நீயில்லா உன்னோட தம்பி அதனால் அவனோட மனதை நீ குழப்பாதே” அவனின் கண்டித்துவிட்டு சித்தார்த் பக்கம் திரும்பினார்.
அவரைப்போல் பொறுமையாக எடுத்து சொல்வதைக் கண்டு இவனின் பொறுமை காற்றில் பறந்தது. ஒருபக்கம் தியா அருணை பார்வையால் சுட, அவளின் கைபற்றி தடுத்த சித்தார்த் இருவரையும் கண்டு தருணால் அமைதியாக இருக்க முடியவில்லை.
அருனின் பேச்சில் அவனின் மனம் காயம்பட்டு கலங்குவதை அவனின் விழியே காட்டிகொடுக்க தருண், “என்னோட வாழ்க்கையில் நீ தலையிட வேண்டாம் அண்ணா. அவளை நான்தான் கல்யாணம் பண்ண போறேன். கொஞ்ச நேரம் முன்னாடி பச்சத்தண்ணி குடிக்காமல் இருந்தவளை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொண்டதை நீயே உன்னோட கண்ணில் பார்த்த இல்ல அப்புறம் எதுக்கு அவரை இப்படி தர குறைவா நினைக்க தோணுது” என்று தன்னுடைய பலநாள் எரிச்சலை ஒருநாள் வாக்கியத்தில் முடித்துவிட்டு திரும்ப அவனைக் கொலைவெறியுடன் பார்த்தான் அருண்.
“மச்சான் நீங்க அண்ணா பேசியதை பெருசா நினைக்காதீங்க. தர்ஷியை நான் நல்ல பார்த்துகே கொள்வேன், நீங்க என்னை நம்பி மட்டும் உங்களோட தங்கையைக் கட்டிகொடுத்த போதும்” அவன் உரிமையுடன் பேசியதில் அவனின் மனக்காயம் மாயமென்று மறைந்து போனது..
அவர்கள் மூவருக்குள் இருந்த ஏதோவொரு பிணைப்பைக் கண்டு, “தம்பி அப்பா காரியம் எல்லாம் முடியட்டும் நாங்களே நேராக வந்து பொண்ணு கேட்கிறோம்” அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
அதன்பிறகு முகிலனின் காரியம் முடித்துவிட்டு தியாவும், சித்துவும் வழக்கம்போல வேலைக்கு சென்று திரும்பிட இந்த இரு குருவியின் பாசக்கூட்டில் தேடிவந்து இணைந்தான் தருண். நாட்கள் இனிமையாக கழிந்திட ஒரு வருடம் சென்று மறைந்தது.
தாய் – தந்தை இருவருக்கும் சாமி கும்பிட்டதும் சேதுராமன் வந்து மகனுக்கு முறைப்படி பெண் கேட்டார். அதன்பிறகு வந்த ஒரு சுபமுகூர்த்த தினத்தில் தருண் – திவ்யதர்ஷினி இருவருக்கும் திருமணம் நடந்தது.
அவளின் கடமையை முடித்தபிறகு மறுவீடு வந்த தங்கையிடம் தன் முடிவை சொல்ல, “இல்ல எங்களால் முடியாது” என்று இருவரும் சம்மதிக்க மறுத்தனர்.

error: Content is protected !!