வானம் காணா வானவில்-22 (Final)

வானம் காணா வானவில்-22 (Final)

நிறைவு அத்தியாயம்-22

நாட்கள் அதன் போக்கில் செல்ல, தண்டனை காலம் முடியும் வரை மிருணா வெளியில் சென்று வருவதைக் கூட விரும்பவில்லை.

மிருணாவின் செயல்களைக் கவனித்து வந்திருந்தார், நீலா.

வீட்டிற்குள் அடைந்தே இருப்பது மனஅழுத்தத்தைக் கொடுத்து, அதனால் வேறு பிரச்சனைகள் வந்தால் குடும்பத்தில் சச்சரவுகள் கூடும் என்பதை உணர்ந்த நீலா… யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

சந்திரபோஸிடம் தனது எண்ணத்தைக் கூறி, அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து, இறுதியில் தங்களது ஃபினான்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுக்க உத்தேசித்தனர்.
அதை மகன்களிடமும் அழைத்து தெரிவித்தவர், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள கூறியிருந்தார்.

நீலாவின் தூண்டுதலாலும், அரவிந்த், சஞ்சய் வழிகாட்டுதலாலும், மிருணா தனக்கிடப்பட்ட பொறுப்பை ஏற்றுத் திறம்பட செயல்படத் துவங்கினாள் மிருணா.

தன் விருப்பத்தை அறிந்திருந்தமையால் இந்தப் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பதை உணர்ந்து, முதலில் தான் நடந்து கொண்ட விதத்தால் கூனிக் குறுகினாலும், அதன்பின் தனக்கிட்ட பணியினை அவர்களின் நம்பிக்கைக்கு சற்றும் குறையாத வகையில் ஏற்று நடத்த தன்னைத் தயார் செய்தாள், மிருணா.

தன்னையும் அந்த வீட்டின் சகமனுஷியாக நடத்தும், பெரியவர்களுக்கும், கணவன் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் செயலில் முதலில் திகைத்தாலும், மனதால் நன்றி கூர்ந்தாள், சிறியவள்.

நேரில் நன்றி கூற, அவள் வளர்ந்து வந்த பாதை மிருணாவைத் தடுத்தது. ஆகையால் மனதால் நினைத்தவள், அதனை தனது செயலில் காட்ட தன்னை ஆயத்தப்படுத்தினாள்.

மறக்க, மன்னிக்க இயலாத தவறுகளைத் தான் செய்திருப்பினும், தன்னை ஒதுக்காமல், தன்னை நம்பி, தன் விருப்பம் போல அதற்கேற்ற துறையில் கொடுத்திருந்த பொறுப்பை மதித்து செயல்படத் துவங்கியிருந்தாள், மிருணா.

ஆரம்பத்தில் இருந்த விட்டேற்றியான மனோபாவத்தை மாற்றிக் கொண்டு, குடும்ப உறுப்பினர்களிடம் இணக்கமாகச் செயல்படத் துவங்கியிருந்தாள்.

விசாலினி என்றும் யாரையும் தள்ளி நிறுத்திப் பார்க்கும் குணமின்மையால், நடந்தை மறக்காத போதும், அதை ஒரு பிரச்சனையாக்கி யாரையும் தள்ளி நிறுத்தாமல் அனைவருடனும் ஒன்றுபட்டே இருக்க எண்ணிணாள்.

மிருணா தயங்கிய போதும், விசாலினி தனது பெருந்தன்மையால் அதை ஓரம்கட்டி, இயல்பாகப் பழகினாள்.

மனம் தனது முதிர்ச்சி இல்லாத செயல்களினால் செய்த செயல்களை எண்ணித் தன்னைச் சாடினாலும், விசாலினியின் பெருந்தன்மை தன்னைச் சுட்டாலும், ஆரம்பத்தில் தயங்கியவள், நாளாகவே சற்று மாறி இலகுவாயிருந்தாள், மிருணா.

மேன்மக்கள் எத்தகைய சூழலிலும் மேன்மக்களே என்பதை அவர்களின் நடவடிக்கையைக் கொண்டு உணர்ந்தாள்.

வைபவங்கள், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் ஒன்று சேர்ந்து, தங்கள் உறவுகளை பேணியிருந்தனர்.

மிருணாவின் மாற்றத்தால், சஞ்சய் சற்று தெளிந்து காணப்பட்டான்.

நீரஜாவிற்கும் அனைவருடம் நல்ல இலகுத்தன்மை வந்திருந்தது.

மகன்கள் இருவருக்கும் என்றுமே சிறுவயது முதல் பிணக்கு வராத போதும், வந்த மருமகள்களை எண்ணி சற்றே மனம் வருந்தியிருந்த பெற்றோருக்கு, மருமகள்களின் இணக்க உறவு மடை திறந்த வெள்ளம் கண்ட விவசாயிகளின் மகிழ்ச்சி போல இருந்தது.

குணம் குறைந்தவளாக இருந்த போதும், குடும்பத்திற்கு ஏற்றாற் போல தன்னை மாற்றிக் கொள்ள விழைந்த மிருணாவால், மனைவியின் செயலால் துவண்டிருந்த சஞ்சய் சற்று தெளிந்திருந்தான்.
வேலூரில் இயங்கி வரும் விருந்தினர் தங்குமிடங்களை, சந்திரபோஸ் அதுவரை பார்த்திருக்க, வயோதிகம் காரணமாகவும், அலைச்சல் நிமித்தமாகவும் தொடர்ந்து கவனித்துக் கொள்ள இயலாத நிலை வந்தது.

சஞ்சய், அவற்றை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாரமொருமுறை சென்று மேற்பார்வையிட்டு வந்தான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்திரபோஸ் தனது திருப்திக்காக சென்று வந்தார்.

அனைவரும் மகிழ்ந்திருந்த வேளையில், சில மாதங்கள் காத்திருப்பிற்குப் பின் கருத்தரித்திருந்த விசாலினியை அனைவருமே தாங்கினர்.

இரட்டைப் பிள்ளைகள் என்ற விடயம் தெரிந்தது முதலே, அரவிந்த், ‘எனக்கு ஒரு பொண்ணு, உனக்கு ஒரு பையன்’ என்று மனைவியை சீண்டியபடி இருந்தான்.

“ரெண்டுமே பையனா இருந்தா என்ன பண்ணுவீங்க”, விசாலினி

“அடுத்த ரவுண்டல பாத்துக்க வேண்டியதுதான்”, என இலகுவாகச் சொன்னான் அரவிந்த்.

“அடுத்த ரவுண்டா… நான் இந்த ஆட்டைக்கு வரேன்னு உங்ககிட்ட சொன்னேனா?”, என பதறிக் கேட்டாள்.

“அது நீ இந்த முறை பொண்ணு பெத்துக் கொடுத்திட்டா அடுத்த ரவுண்டுக்கு வேலையில்ல…! இல்லைனா நான் பாவமில்லையா?”, சோகமாகக் கேட்டான் அரவிந்த்.

“நான் படற கஷ்டத்துல பாவம் புண்ணியம் வேறயா? ஏன் பொண்ணு, பொண்ணுன்னு கேட்டுட்டே இருக்கீங்க?”, நீண்ட நாட்களாக கணவனின் வார்த்தைகளில் வரும் எதிர்பார்ப்பை இன்று கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணி கேட்டிருந்தாள், விசாலினி.

“அதுக்கு நிறைய காரணம் இருக்கு”, என்று கூறி சற்று நிதானித்தான் அரவிந்த்.

“அப்டி என்ன காரணம்? பசங்க மட்டுமே இருந்த வீட்ல பொண்ணுங்க இல்லையேன்னு அத்தம்மா தான் ஏங்கியிருக்கணும். ஆனா நீங்க ஏன் இப்டி ஒரு ஆசைப்படறீங்க?”, உண்மையில் புரியாமல் தான் கேட்டாள் விசாலினி

“இப்போ… உன்னைய எடுத்துக்கோ…! நான் உன்னை எவ்வளவு சந்தோசமா வச்சிருந்தாலும், உங்க அப்பாவைப் பாத்தவுடனே எரியுமே! உன்னோட முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்ப் அளவுக்கு ஒரு வெளிச்சம்…! அது அடுத்தடுத்த நாள் நீ உங்க அப்பாவைப் பாக்கும் போதும் கொஞ்சம் கூட குறையவே மாட்டிங்குது! என்னடா இதுன்னு ஒரே குழப்பம் எனக்கு. எம்மேலயே ஒரு கோபம். உன்னைய எனக்கு சந்தோசமா வச்சுக்க தெரியலையோனு!

இரண்டரை மாசம் கழிச்சு சொல்லாம ஏண்டா வந்தேன்னு அன்னிக்கு… ஆஸ்திரேலியா ட்டிரிப் முடிஞ்சு வந்தப்போ கேட்டியே…! அதுக்கு ரீசன் இப்ப சொல்றேன்… கேட்டுக்க… அந்த தவுசண்ட் வாட்ஸ் பல்ப்பை உன் முகத்துல பாக்கத்தான் சொல்லாம சர்ப்பிரைஸா வந்தேன். ஆனா ரிசல்ட் என்னவோ ஊத்திக்குச்சு”, சோகமாகச் சொன்னான் அரவிந்த்.

‘அது எப்டி டிரைவர் சீட்ல இருந்த ஆளு எம் முகத்தை பாத்திருக்க முடியும். நாந்தான்… பின்னாடி உக்காந்திருந்தேனே’, என புரியாமல் பார்த்திருந்தாள் விசாலினி.

“அது எப்டிடா உனக்கு தெரியும்னு தானே கேக்க வர்ற. கண்ணாடியில உன் முகத்தை தான் பாத்துட்டே இருந்தேன். ஆனா உங்கப்பாவ பாக்கும் போது வருமே…! அந்தளவு பிரகாசமெல்லாம் உம் முகத்துல வரவே இல்ல!”, சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான்.

“அத நினச்சாலே எனக்கு ரொம்ப வருத்தமாயிரும். முன்னாடியெல்லாம் அத நினைச்சே காண்டாகிருவேன். இவ ஏன் இப்டி இருக்குறா… இவளுக்கு இங்க என்ன குறைனுன்னு! ஒரே யோசனையா இருக்கும். என்ன அப்டி பாக்குற… எல்லாம் ஒரு பொசசிவ் தான்!
உன்னோட அந்த சந்தோசம் பாத்தா…! எம்மேல எனக்கு உன்னைய நல்லா சந்தோசமா வச்சுக்கலயோனு தோணும். ஆரம்பத்துல…!

ஆனா போகப் போகதான் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப சிறு வயதில இருந்தே ரோல் மாடலாவோ, தன்னோட ரியல் லைஃப் எவர் டைம் ஹீரோவாவோ அப்பாவ எடுத்துட்டு, அவங்க நிழலாவே வளந்த எல்லாப் பொண்ணுங்களும் இப்டிதான்னு.

நம்ம கல்யாண சமயத்துல வந்திருந்த உங்க அக்காவல்லாம் கவனிச்சுப் பாப்பேன். அவங்க ரெண்டு பேரும் உங்க அப்பா கூட ரொம்ப டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணாங்க. அதிக ஒட்டுதல் இல்ல. மரியாதை நிமித்தமா ஓரிரு வார்த்தைனு விலகிட்டாங்க. மாமாவுமே ஏதோ மூனா மனுசங்க கிட்ட பேசுற மாதிரி தான் அவங்ககூட பேசினார். அப்பதான் பாட்டிகிட்ட ஒரு நாள் கேட்டேன்.

நீ குழந்தையா இருந்த போதிருந்தே மாமாவும், நீயும் ரொம்ப க்ளோஸ்னு சொன்னாங்க…!

‘அவள நாங்க எங்க வளத்தோம். அவ பிறந்து ஒன்பது மாசத்துல இருந்து எல்லாமே அவளுக்கு கிருபாதான் பாத்தான். அவ பெரியவளானதக் கூட அந்தக் கழுதை எங்ககிட்ட வந்து சொல்லல. அதுக்கப்புறமும் எங்க பக்கமா இழுத்து பாத்தோம். பொடிசி பிடிகுடுக்கவும் இல்லை, கிருபா அதுக்கு ஒத்துக்கவும் இல்ல. அதான் அவ இப்டி வித்தியாசமா வளந்திருக்கானு’, சொன்னாங்க

அப்புறம் உனக்கு முடியாம இருந்தப்பவும், ரொம்ப முடியாத நேரத்தில உன்னைய அறியாம பெயின் ரொம்ப சிவியரா இருக்கும் போதெல்லாம் ‘அப்பா… அப்பானு தான் அழுவ…!’, அப்பல்லாம் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்.

என்னடா நாம்ம எவ்ளோ கவனிச்சிட்டாலும், அவ அவங்கப்பாவ தான தேடறா…! நம்மைத் தேடலையேனு ஒரே ஆதங்கமா இருக்கும். தூக்கத்துல கூட ரொம்ப ரேர்ரா எதாவது பேசுவ…! அப்போ கூட… டேட்னு… கூப்பிட்டு எதாவது சொல்லும்போது ரொம்ப யோசனையா இருக்கும்.
ஆனாலும் என்னைய அவாய்ட் பண்ணியோ, இல்ல என்னை நோகடிக்கற மாதிரியாகவோ மாமா இருக்கும் போதோ, இல்லை மற்ற நேரங்கள்லயோ நீ இதுவரை நடந்துகிட்டது இல்ல.

இயல்பா தான் நீ இருக்க. ஆனாலும் இதைப் பத்தி யோசிச்சுப் பாத்தப்போ தான் எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது.

அப்போ தான், இதே போல அன்பை எனக்கு என் பொண்ணைத் தவிர வேற யாராலும் எனக்குத் தர முடியாதுங்கற உண்மையை புரிஞ்சுகிட்டேன்.

அதான் பொண்ணு வேணும்னு கேக்கறேன்!”, என்று தான் உணர்ந்ததை, தனது எதிர்பார்ப்பு எதனால் என்பதை மனைவியிடம் கூறினான், அரவிந்த்.

“…”, அரவிந்த் முகம் பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தாள் விசாலினி.

“இதுல நான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், உன்னை எந்தளவு சந்தோசமா வச்சிட்டாலும், உன்னைய என் வழிக்கு கொண்டு வர முடியாதுன்னு, பாட்டி வேற திட்டவட்டமா அன்னிக்கே சொல்லிட்டாங்க!”, என்று சோகமாகக் கூறினான் அரவிந்த்.

தான் எவ்வளவு முயன்றும், தன்னையும் மீறி அரவிந்தனைக் காயப்படுத்தியதை எண்ணியபடியே அமர்ந்திருந்தாள், விசாலினி.

திருமணம் என்ற பேச்சு வந்தவுடனே கிருபாகரன் மகளிடம் அழைத்துப் பேசியிருந்தார்.

“எப்பவும் அப்பாவுக்கு நீ குழந்தை தான் ஷாலுமா. ஆனாலும் மாப்பிள்ளைக்கு முன்ன, அப்பாவுக்கு அதிக இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறது, அதிகமா அப்பாவைப் பற்றியே, எதாவது பெருமை பேசுறது, இதெல்லாம் அவங்கள சங்கடப்படுத்தும்.

எல்லாமே எனக்கு எங்க அப்பாதான், எனக்கு அப்பாவைத்தான் ரொம்ப பிடிக்கும், அப்டிங்கற மாதிரி எதுவும் மாப்பிள்ளைகிட்ட எப்பவுமே பேசிட கூடாதுடா ஷாலுமா.

பொறுப்பா நடந்துக்கணும். உம்பாட்டிக்கே எம்மேல ரொம்ப கோபம். நான் உன்னை அவங்களோட மற்ற பேத்திகளைப் போல பொறுப்பா, நல்லா வளக்கலனு. அதனால எந்த சந்தர்ப்பத்திலும் அப்பாவுக்கு கெட்ட பேரு வர மாதிரி பண்ணிறக் கூடாதுடா ஷாலு!

அப்புறம் இது வரை அப்பா ஊட்டிவிட்டு சாப்டதெல்லாம் சரிடா. மாப்பிள்ளை இருக்கும்போது அவரு முன்னாடி வந்து, அப்பா ஒரு வாயினு எங்கிட்ட எப்பவும் போல வந்து கேக்கக் கூடாது”, இப்டி நிறைய விடயங்களை தனது தந்தை தன்னிடம் அவ்வப்போது பகிர்ந்து கொண்டதை நினைவோட்டத்தில் ஓட விட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தாள், விசாலினி.

கணவனின் புரிதல் சந்தோசத்தைத் தந்தாலும், தனது விழிப்பு நிலையை ஏதோ ஒரு இடத்தில் தவற
விட்டிருக்கிறோம் என்பதை எண்ணி சுதாரிக்க எண்ணினாள்.

பெரியவர்கள், நல்லபடியாக பிரசவித்து பெண் மீள வேண்டும் என்று வேண்டுதலை வைத்துக் காத்திருந்தனர்.

நீரஜா. ரவி டேட்கு வரப்போகும் குழந்தையை (சகோதரனையோ, சகோதரியையோ) எண்ணி மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.

பள்ளிக்குச் சென்று வருவதில் மருமகளின் உடல்நிலையைக் கருதி, நீலா பள்ளிப் பொறுப்புகளை தற்காலிகமாக எடுத்து கவனிக்கத் துவங்கியிருந்தார்.

விசாலினி எவ்வளவோ மறுத்தும் நீலா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
அரவிந்த், தனது தொழில்முறைப் பயண மாதங்களை, நாட்களாகச் சுருக்கியிருந்தான். பத்து நாட்களுக்கு மேல் எங்கும் தங்கியிராமல் தனது பயண நோக்கத்தை தீயாக வேலை செய்து, முடித்துக் கொண்டு திரும்புவதை வாடிக்கையாக்கியிருந்தான்.

மனைவியின் கருத்தரிப்பு உறுதி செய்யப்பட்ட நாள்முதலே, விசாலினியின் அனைத்து சுகவீனங்கள், துன்பம் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் அவளோடு இருந்தான்.
மசக்கையின் படுத்துதலால் முதல் மூன்று மாதங்களை வெளியுலகம் காண முடியாத நிலையில் கழித்திருந்தாள்.

தனது சுகவீனத்தால், கோபம் தூபம் போட கணவனை சாடுவதும் கூடியிருந்தது.

“நல்லா ஜாலிய எம்முன்ன சுத்தாத…! நான் மட்டும் இப்டி கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா நீ மட்டும் ஹாயா இருக்க!”, என்று தனது இயலாமையால் கண்ணில் நீர் வைத்து அழத் திராணியில்லாது சோம்பி வருந்துபவளை, அணைத்துத் தேற்றுவான்.

அப்போதும் அவனை அடித்துத் தூர விரட்டுவாள். “போடா எல்லாம் உன்னால தான்..”, என்று

“சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு!”, என்பவனை

“எல்லாம் தான் முடிஞ்சு போச்சே…! இனி என்ன செய்ய போற… எங்கிட்ட வராம தள்ளிப் போ”, என்று அவனை அணைப்பிலிருந்து தள்ளுவாள்.

அவளின் திட்டுகள், அரவிந்தனுக்கு சிரிப்பை உண்டு செய்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் மறைக்க மிகுந்த சிரமப்படுவான்.

சில வேளைகளில் அவனின் மன ஓட்டத்தைக் கண்டு கொள்பவள், கையில் உள்ளதை எடுத்து அவன் மேல் விசி தனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாள்.

சில நேரங்களில் அரவிந்தனின் அருகாமையை வேண்டி, வேலையாக இருப்பவனை அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லுவாள்.

எத்துணை வேலைகள் செய்யாமல் கிடந்தாலும், மனைவியின் உடல்நலம், மனவளம், அத்தோடு… தனது பிறக்க இருக்கும் பிள்ளைகளின் நலன் கருதி தன்னால் இயன்ற வேகத்தில், வந்து மனைவியை பொறுப்பாகக் கவனித்துக் கொண்டான், அரவிந்த்.

“வருசத்துக்கு ஒன்னு, ரெண்டுனு இல்லை என்னால முடியற மாதிரி பெத்துக் குடுத்துட்டே இருப்பேன். வளத்துக் குடுங்கனு எங்கம்மாகிட்ட… மங்கம்மா மாதிரி சபதமெல்லாம் போட்டுட்டு, ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ்கே இப்டி சொங்கி போயிட்டியே ஷாலுமா!”, என்று ஒரு முறை அரவிந்தன் கேட்டு வைக்க,

“யோவ்… எனக்கு இப்டியெல்லாம் நடக்கும்னு கனவா கண்டேன். ஈஸியா நினைச்சு ஒரு ஃபுளோவுல அன்னிக்கு அப்டி பேசிட்டேன். அவங்களே மறந்துட்டாங்க. விட்டா நீ போயி அவங்களுக்கு ஞாபகப்படுத்தி என்னைய டம்மியாக்கிருவ போல…! வந்துட்டான்… சபதம் அது இதுன்னு அபத்தமா பேசிக்கிட்டு!”, என சீறினாள் விசாலினி.

“எதுக்கு இவ்ளோ கோபம் ஷாலுமா. இவ்வளவு கோபம் உன் உடம்புக்கு ஆகாதுடா… பீ கூல்!”

“ரொம்ப நல்லவன் வேசம் போடாத… எல்லாம் எனக்குத் தெரியும். உம்புள்ளைங்கள நினச்சு தான கூலா இரு, வாட்டர் ஃபாலா இருணு எங்கிட்ட சொல்றேனு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் இன்னும் சின்ன பப்பா இல்ல”, விடாமல் பேசினாள் விசாலினி.

“அப்டி உங்கிட்ட வேசம் போடறவனா நான். நல்லா யோசிச்சுப் பாரு”, அரவிந்த்

“செவாலியர் சிவாஜி என்ன ஆக்ட் பண்ணார். நீதான் பெஸ்ட்டா பெர்ஃபார்ம் பண்ற. உனக்கு தான் அடுத்த ஆஸ்கார் அரவிந்த் பையா”

“ஆக்ட், ஆட்டம் பாட்டம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் மூவியே பாக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா ஷாலுமா”, என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அரவிந்த கேட்க

“போதும் மச்சி… நீ ஒரு தடவை போட்ட ஆட்டத்துலயே உம்புள்ளைங்க என்னைய வச்சு செய்துங்க…! இன்னும் நீ ஆக்ட்டெல்லாம் பண்ணா நாந்தாங்கமாட்டேன். உம்புள்ளைங்க வெளிய வரட்டும்…. அப்புறம் நான் என்ன மாதிரி உங்கிட்ட ரியாக்ட் பண்றேன்னு மட்டும் பாரு!”, என்று வீரவசனம் பேசி அமர்ந்திருந்தாள், விசாலினி.

“அப்ப எங்கம்மாகிட்ட விட்ட சபதம் அவ்ளோதானா?”, என்று சற்று தள்ளி நின்றபடியே அரவிந்த் சிரிக்க

“அவனவனுக்கு வந்தாதான் தலைவலியும், வவுத்த வலியும் தெரியும்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க. அது தெரியாமத்தான… நான் அப்ப பேசிட்டு இப்ப நொந்து நூடுல்ஸ்ஸாயி கிடக்கேன். இதுல உங்களுக்கு என் நிலைமைய பாத்துக் குதூகலப் படற மாதிரி தெரியுதே!”, என்று சந்தேகத்தோடு கேட்டாள்.

“சே… சே… அப்டியெல்லாம் உன்னைய பாத்து நான் நினைப்பேனா ஷாலுமா! என்ன இருந்தாலும் உன் தைரியம் எனக்கு நீ சொல்லாமலே தெரியும்டா! நீ சபதத்தை நிறைவேத்தாம விடமாட்டேனு என் ஆழ் மனசு சொல்லுதுடா!”, என்று சிரிக்காமல் அரவிந்த் பேசினான்.

கணவனின் பேச்சினைக் கேட்க அவன் முகத்தைப் பார்த்திருந்தவள், அவனின் ரியாக்சன் மறைத்திருந்த வதனத்தைப் பார்த்தவாறே, “என் நிலைமையை பாத்தா உங்களுக்கு எப்டி மச்சி தெரியுது? உங்க பேச்சில ஒரே லொள்ளா இருக்க மாதிரி ஃபீல் ஆகுதே எனக்கு…! ‘என்னைய இப்டியே ஏத்தி விட்டு ரணகளமாக்குற வேலைய பாக்க முயற்சி நடக்கற மாதிரி தெரியுதே!”, என்று சரியாக கணித்து கேட்டாள் விசாலினி.

இனி இவளிடம் பேசினாள், பத்தினி அடி நிச்சயம் என்று உணர்ந்தவன், அதற்குமேல் வழிந்த ஜொள்ளில், அந்த இடமே ஈரமாகியிருந்தது.

ஜொள்ளை ரசிக்கும் மனோபாவம் இல்லாத விசாலினி, தனது உடல்நிலையால் அதற்கு மேல் கணவனைக் கண்டு கொள்ளாமல் படுத்துவிட்டாள்.

அத்தோடு தப்பித்தோம் என்று அன்றைய நாளினைக் கடந்திருந்தான், அரவிந்தன்.

நான்கு மாதங்களுக்குப் பின் சற்றே தெளிந்தவள், தனது பணிகளை அவளே நின்று கவனிக்கத் துவங்கியிருந்தாள். யாருடைய உதவியுமின்றி, தன்னால் இயன்ற நேரங்களில், பள்ளிக்குச் சென்று சற்று நேரம் இருந்து, மேற்பார்வை பார்த்துக் கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.
கோப குணம் சற்று மட்டுப்பட்டிருந்தது. பழையபடி உணவு உண்ண ஆரம்பித்திருந்தாள். அதனால் மயக்கம், சொக்கல் இல்லாத நாட்களாக, தனது நாட்களைக் கடந்தாள்.

ஐந்தாம் மாதம் துவங்கியவுடன், குழந்தையின் அணுக்கத்தை உணரத் துவங்கினாள்.

அது வரை இருந்த சுகவீன குறைவால் வந்த எரிச்சல், கோப மனோபாவம் மாறி, முகம் காணா பிள்ளைகளின் மீது வாஞ்சை உண்டானது.

அதன்பின் நாட்கள் வேகமாகச் சென்றது போலத் தோன்றியது, விசாலினிக்கு.
வேத புத்தகங்கள், குறிப்பாக சுந்தரகாண்டம் படிக்க, பாட்டி கூறியதைக் கேட்டுப் பொறுமையாகப் படித்தாள். பாட்டி அடிக்கடி தனது பேத்தியுடன் வந்து தங்கியிருக்கத் துவங்கியிருந்தார்.

சில கேள்விகள், சில தயக்கங்கள், சில அனுமானங்களை அவராகவே முன்வந்து தனது பேத்திக்கு தெளிவுபடுத்தி, தனது பேத்தியின் கலக்கத்தைப் போக்கினார்.

பெரியவர்கள் அனைவரும் தாங்க, பேறுகாலத்தை எண்ணி பயந்திருந்தவள் இலகுவாக உணர்ந்தாள்.
வளைகாப்பிற்குப் பிறகும் அழகம்மாள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மனைவியை விசாலினியின் தாய் வீட்டிற்கு விட அனுமதிக்கவில்லை, அரவிந்த்.

பேறுகாலம் நெருங்க, அழகம்மாள், கற்பகம் இருவரும் அரவிந்த் வீட்டிலேயே வந்து தங்கிவிட்டனர்.
மனைவியின் வேதனைகளை கண்கூடாகக் கண்டவன், மனதில் ரத்தமே வந்திருந்தது.

‘இவ்ளோ கஷ்டப்பட்டுத்தான் ஒரு ஜீவன இந்தப் பூமிக்கு கொண்டு வரணுமா?’ என்ற கேள்வி எழுந்தபோது, ‘அப்பாடா இதுவே போதுண்டா எங்க வாழ்நாளுக்கும்’ என்று விசாலினியின் வேதனைகளை எண்ணியவனுக்கு நினைக்கத் தோன்றியது.

அரவிந்தனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், ஒரு பெண், ஒரு ஆண் என்று கடவுள் தந்திருக்க, மருத்துமனையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்திருந்தான், அரவிந்த்.

மருத்துவமனையில் இருந்து, அழகம்மாள் தங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணிய போது, அங்கு ஒரு பிரளயமே வந்திருந்தது.

“எம்புள்ளைங்கள பாக்காம என்னால இருக்க முடியாது”, என்று தங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கேட்க, “ரொம்ப பண்ணாத… இத்தனை நாளு எப்டி இருந்தியோ, அப்டியே இன்னும் இரண்டு மாசத்துக்கு இரு. அங்கையும் வந்து தங்கக் கூடாது. அது முறையில்ல”, என்று அழகம்மாள் மிக கண்டிபப்பாக கூறியிருந்தார். அழகம்மாள் பாட்டி, பேத்தியை தங்களின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருந்தார்.

குழந்தைகள் முகம் பார்த்தபின்பு அழைத்துச் செல்லுங்கள் என்றுவிட்டார், அழகம்மாள்.
நாற்பது நாட்களுக்குப் பிறகே அரவிந்தனை விசாலினியின் வீட்டில் தங்க அனுமதித்திருந்தார், அழகம்மாள்.

அதற்கான காரணத்தை பாட்டியிடம் கேட்டு அலுத்துப் போனவன், இறுதியாக மனைவியிடமே வந்து நச்சரித்தான்.

குழந்தைகளுடன் மாறி, மாறி நேரம் போக, அலுப்பு உண்டான மனதில், நச்சரித்த அரவிந்தன் கையில் தங்களின் பெண்ணைக் கொடுத்து “அவ தூங்கற வர விளையாட்டு காட்டுங்க, இல்ல பேசிட்டு இருங்க. நான் பையன பாத்துக்கறேன்” என்று விட்டு, உறங்கிக் கொண்டிருந்த மகனுடன் சென்று படுத்து உறங்கிவிட்டாள், விசாலினி.

மகளுடன் நேரம் செலவிட்டவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நீண்ட நேரம் கை,கால்களை உதைத்து தந்தையுடன் சிரித்த குழந்தை, திடீரென்று அழத் துவங்கியது. விசாலினி உறங்கும் வேளையில் குழந்தை அழுவதை நிறுத்த என்ன செய்வது என்றறியாமல் திகைக்க, அந்நேரம் குழந்தையின் அழுகுரலில் எழுந்தவள் கணவனிடமிருந்து பெண்ணை வாங்கி அமர்த்தினாள், விசாலினி.

எல்லாம் தானறியாத உலக விடயம் என்று உள்ளுணர்வு கூற, இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள இருக்கிறதோ என்ற மனோபாவத்துடன் இரண்டு மணிக்கு உறங்கச் சென்றான், அரவிந்த்.
பாலை அருந்தியதோடு, உறங்கத் துவங்கிய குழந்தையை தொட்டிலிட்டு விட்டு, உறங்கிக் கொண்டிருந்த மகனுக்கும் பாலூட்டி தொட்டிலிலிட்டு, விசாலினியும் சென்று படுத்தாள்.

அதுவரை இருந்த அயர்ச்சியின் காரணமாக உறங்கத் துவங்கிய அரவிந்தனைக் காண்கையில் இதழில் முறுவல் வந்தது, விசாலினிக்கு.

அதே புன்முறுவலுடன் படுத்தவுடன் உறங்கியிருந்தாள்.
//////////

பேறுகாலத்தில் வீடு வெறுச்சோடியிருக்க, மீண்டும் சஞ்சய் குடும்பத்தை தங்களுடன் வந்து இருக்குமாறு பெரியவர்கள் கூறியிருந்தனர்.

மிருணா, தன்னை முழுவதுமாக பெரியவர்கள் மன்னித்து ஏற்றதாக எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்தாள்.

நீரஜாவிற்கும் மகிழ்ச்சியே. அனைவரும் இனி ஒரே இடத்தில் வசிக்கலாம் என்ற எண்ணமே அவளை ஆனந்தமாக இருக்கச் செய்தது.

விசாலினியை ஆறுமாதம் கழிந்தபின்பே அரவிந்தனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார், அழகம்மாள்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு முன்பே பழகியிருந்த விசாலினிக்கு, சஞ்சய் குடும்பத்தைக் கண்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி மனதில் உண்டாயிருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின்…

ஆகாஸ், அகஸ்லா தர்ஷினி இருவரும் அவர்களது பள்ளியிலேயே படிக்கிறார்கள். பள்ளி விட்டுவந்து நீரஜாவுடன் இருக்க, ஐந்து மணிக்கு வீட்டிற்கு திரும்புவதாகக் கூறி சென்ற, விசாலினியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் மூவரும்.

எதிர்பாரா விதமாக அந்நேரம் சஞ்சய் வந்திருக்க, “சஞ்சு டாடி… எங்களை வெளியே எங்காது கூட்டிட்டுப் போங்க”, என்று வாண்டுகள் இருவரும் நச்சரித்தனர்.

நீரஜாவிற்கு தனது தந்தையைப் பற்றித் தெரியுமாதாலால், அவனின் வருகையை பார்த்திருந்தவள், பழையபடி தொலைக்காட்சியில் பார்வையை இடமாற்றியிருந்தாள்.

“அம்மா வந்து கூட்டிட்டுப் போவாங்க. டாடிக்கு வேற வேலயா பாட்டிய பாக்க வந்தேன்டா”, என்று அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்குள் பாடாய்படுத்தியிருந்தனர்.

ஆனாலும், சற்று நேரம் அவர்களுடன் செலவிட்ட பிறகே வந்த வேலை முடிந்து கிளம்பினான், சஞ்சய்.

“இவங்க வர்றதே லேட்டா வந்துட்டு… டைம் ஆகிருச்சு நாளைக்கு போவோம்னு, ப்ரோகிராம் ஸ்கிப் பண்றதே வேலையா இருக்கு. இதுவே எங்க டாடினா அப்டியில்ல. சொன்னா சொன்ன மாதிரி வருவாங்க!”, அகஸ்லா

“அம்மா வந்து கண்டிப்பா கூட்டிட்டு போவாங்க. அப்டியெல்லாம் ஸ்கிப் பண்ணா… எதாவது ப்ராபர் ரீசன் இருக்கும்”, ஆகாஸ்

இருவரின் பேச்சை அமைதியாகக் கேட்டபடியே, ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் தன்னைத் தொலைத்திருந்தாள், நீரஜா.

அரவிந்தனின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத பெண்ணாக அகஸ்லா தர்ஷினி வளர்ந்தாள். ஆகாஸ் தாயின் செயல்களில் இருக்கும் நியாயம் மட்டுமே புரிந்தவனாக வளர்ந்தான்.
அரவிந்தன் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் வரை, மிகுந்த கவலைக்குள்ளாகி விடுவாள், அகஸ்லா.

“ஏன் டாட், இந்த அம்மாவ பிஸினெஸ் பாக்க சொல்லிட்டு நீங்க இங்க ஸ்கூல் மத்த பிஸினெஸ் பாருங்க. ஆகாஸ்கு தான பிஸினெஸ் புரியணும். அவன அம்மா கூட ஃபாரின் அனுப்பிருவோம்”, அகஸ்லா

“பெரியவங்களாகி நீங்க ரெண்டு பேருமே எல்லாமே கத்துக்கணும் தங்கம். பையன்னா பிஸினெஸ், பொண்ணுண்ணா ஸ்கூல் பாக்கணும்னு எல்லாம் கிடையாதுடா!

அப்பா ஒரே ஆளா எல்லாம் பாத்து ரொம்ப கஷ்டப்படறேன்னு… எனக்கு ஹெல்ப் பண்ணத்தான் அம்மா ஸ்கூல் போறாங்க. அதனால இனி அப்டி சொல்லக் கூடாது”, அரவிந்த்
“சாரி டாட்”, அகஸ்லா

ஆகாஸ் அளவிற்கு புரிதல் அகஸ்லாவிற்கு கிடையாது. ஆனால் தனது தந்தை கூறினால் எதையும் சரி என்றுவிடுவாள்.
////////////

குழந்தைகள் இருவரும் ஆளுக்கொருவரை அணைத்தபடியே உறங்கியிருக்க,

“ஷாலு, எங்காது ட்ரிப் போயிட்டு வரலாமா?”, அரவிந்த்

“அறுந்த வாலா ரெண்டை வச்சிட்டு, ட்ரிப் வேற போவீங்களா?”, விசாலினி.

“ஏண்டி, எம்பொண்ணு நான் சொல்றதக் கேட்டு நடந்துப்பா, நம்ம ஆகாஸ் நீ சொல்லுறதுக்கு முன்னையே உனக்கு வேணுங்கறத பாத்து பாத்து பண்ணுறான். அப்புறமென்ன?”, அரவிந்த்

“வெகேசன்ல ரெஸ்ட் எடுத்தாதான், அப்புறம் ஸ்கூல் திறந்தவுடனே ஓட தெம்பா இருக்கும். இப்பவும் ஓடுனா…”, என்று விசாலினி யோசிக்க

“இந்த மச்சான மறந்து மாமாங்கம் ஆகிப் போச்சு…! இப்டியே போனா லைஃப் ரொம்ப போரிங்கா போயிரும்டி…! என்னைய இப்பல்லா கொஞ்சம் கூட கவனிக்கவே மாட்டிங்கற!”, ஆதங்கமாக வார்த்தைகள் வந்தது அரவிந்தனிடமிருந்து.

“மறக்கவுமில்லை… பறக்கவுமில்லை… நேரமில்லாம ஓடுறோம். சரி உங்க இஷ்டம். ஆனா அத்தை, மாமாவையும் கூட்டிட்டுப் போவோம்”, விசாலினி.

“அவங்க எதுக்குடி?”, அரவிந்த

“யோசிங்க?”

“எனக்கு யோசிக்கவெல்லாம் இப்ப முடியாது. மைண்ட் முழுக்க ஷாலு… ஷாலுன்னு இருக்கு… அதுக்குத்தான் உங்கூட எங்காது போயிட்டு வரணும்னு கேட்டா, கூடவே எங்க அம்மாவையும், அப்பாவையும் கூட்டிட்டுப் போகணும்கற! ரொம்ப உன்னை மிஸ் பண்றேன். எப்பத்தான் என்னைய புரிஞ்சுக்குவடீ!”, அரவிந்த்.

“இதையா யோசிக்க சொன்னேன். சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு!”, என்றபடியே திரும்பிப்படுத்தாள்.

தன் மார்பில் கைபோட்டு அணைத்தபடி உறங்கியிருந்த மகளை, மெதுவாக விலக்கி எழுந்தவன், மறுபுறம் வந்து படுத்திருந்த விசாலினியை அலேக்காகத் தூக்கினான்.

விசாலினியின் தனியறைக்குள் சென்றவன், அங்கு இருந்த படுக்கையில் மனைவியை விட்டான்.

“என்ன இது. குழந்தைங்க முழிச்சிட்டா…!”, என்று பதறியவளை

மனைவியை அணைத்துப் படுத்தவன், “முழிச்சிட்டா போகணும், அது வரை கொஞ்சமா மச்சான கவனிப்பியாம்”, என்றபடியே தனது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டான்.

அவசர யுத்தம் ஒன்றை அரங்கேற்ற ஆயத்தமாகினர்.

தேடுதல் தொடர அனுமதித்தவளின் தேகமெங்கும் சிலிர்க்க, இதழ் கொண்டு தன்னவளை உறவுக்கு தயாராக ஏதுவாக உரமேற்றினான். தயாரானவள் தன்னவனோடு ஒன்றி ஒத்துழைக்க… தயக்கம் இல்லாது முன்னேறினான். இலகுவான பாதையில் இருவரது உணர்வுகளும் போட்டி போட்டு பயணிக்க சுக்கில, சுரோணிதங்களின் கலப்பில் உச்சம் தொட்டிருந்தனர். பூரண திருப்தியோடு ஒருவரையொருவர் அணைத்து இதழொற்றி இதமான அணைப்பில் கட்டுண்டு இருந்தனர்.

நிதானத்தை தொடரவியலாத நிதர்சனங்கள் இருந்தபோதும், அவசர கலவியலும், களைத்திருந்த உள்ளங்களின் மனதில், களிப்பைக் கூட்டியிருந்தது.

மனமும், உடலும் நிறைந்த கூடலில், “ஷாலுமா…”, என்று கணவன் தன்னை அழைக்க

“என்ன…”, என்பது போல அவன் முகம் பார்த்தாள்.

“எங்க ட்ரிப் போகலாம்”

விடமாட்டாண்டா என்ற பார்வையுடன், “இதுக்குத்தான ட்ரிப் டிசைட் பண்ணீங்க. அங்க போயி தான் இத என்ஜாய் பண்ணணும்னு இல்ல. பேசாம வீட்டிலேயே ஒரு வாரம் இருந்தா போதும்”, என கிண்டல் குரலில் கூறினாள் விசாலினி.

“ஒரு சேஞ்சுக்குத்தான் வெளிய எங்காது போயி வரலாம்னு கேட்டேன். எத்தனை நாள், எங்க போகலாம்னு சொல்லு. ட்ரிப்புக்கு அம்மா, அப்பா எதுக்குடீ?”

“உங்க வாலுங்களை பாத்துக்கத்தான்!”, என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள், விசாலினி.

“அடிக்கள்ளி… இது எனக்குத் தோணலையே!”, அரவிந்த்,

“மேல்மாடி காலியாயிருந்தா தோணாதாம்”, விசாலினி கூறி சிரிக்க

“போகுது… அது காலியாயிருந்தா என்ன? அது தான் அறிவு வாளி நீ இருக்கியே”, என்று இழுத்து அணைக்க,

“அப்டியில்லைங்க… அவங்க ரெண்டு பேரும் எப்பவும் வீட்டுக்குள்ளயே தான் இருக்காங்க… நம்ம கூட வெளிய வரும்போது அவங்களும் கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவாங்க, அதோட அவங்களுக்கு பொழுது போகாத நேரத்துல நம்ம வாண்டூஸ் அவங்களை என்கேஜ் பண்ணுவாங்க”, என விளக்கமளித்தாள் விசாலினி.

மூத்தவர்கள் இருவரையும் சம்மதிக்க வைத்து அழைத்துச் செல்லுமுன் இருவருக்கும் போதும் போதும் என்றாகியிருந்தது.

குடும்ப சகிதமாக சுற்றுலா சென்று பதினைந்து நாட்கள் திருப்தியாக மனநிறைவோடு அனுபவித்த ஒவ்வொரு நிமிடங்களையும் அசைபோட்டவாறு திரும்பியிருந்தனர்.

குழந்தைகள் நன்கு வளர்ந்த பிறகு சென்று வந்த முதல் கோடைகால சுற்றுலா பயணம் அனைவரையும் குதூகலிக்கச் செய்திருந்தது. நிறைவுடன் சுற்றுலா முடிந்து திரும்பியவர்கள், அடுத்த ஓட்டத்திற்கு தங்களை டிங்கரிங் செய்து செம்மைப் படுத்தி புதுப்பொலிவுடன் தயாராகியிருந்தனர்.
/////////////

கூட்டுக்குடும்ப வாழ்க்கை உணர்ந்த சிலர், அதனை விடாமல் தொடர எண்ணி தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு, அனுசரித்து அதன் பயன்களை ஆகர்ஷித்துக் கொள்கின்றனர்.

புரியாதவர்கள், புதையல் தேடிச் சென்ற இடத்தில், அது களவு போகாமல் இருக்க தன்னை மட்டுமே நம்பி இறுமாந்திருக்கும் தன்முனைப்பு நிலையில் தனிக்குடும்பத்தினை தேர்ந்தெடுத்து, திருமண வாழ்வில் வெற்றிபெறாமல், தோல்வியடைகின்றனர்.

சந்தோசங்கள் மட்டுமே வாழ்க்கை என்று சில சங்கடங்களை சகித்துக் கொள்ள பிரியமில்லாமல், பிரிந்து சென்று வாழும் தனிக்குடும்பத்தில் வாழ்க்கை நிறைவாக இருப்பதாகத் தோன்றும். அது உண்மையல்ல.

ஏழு சம்பத்துகளான, உடல் அமைப்பு, குணம், அறிவில் உயர்வு, செல்வம், கீர்த்தி, உடல்வலிவு மற்றும் சுகம் ஆகியவை இருக்கும் ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ கூட்டுக்குடும்ப வாழ்க்கையை ஒரு குறையாக, தடையாக எண்ண மாட்டான்.

வானவில் போன்ற ஏழு சம்பத்துகளைப் பெற்ற, அரவிந்த், விசாலினி இருவரும் வாழ்க்கை முழுமைக்கும் சந்தோசத்துடன், நிறைவுடன் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.

வானம் காணா வானவில்லான ஏழுசம்பத்துகளை, வாசித்த அனைவரும் தங்களின் குடும்பத்துடன் பெற்று, இன்புற்று நல்வாழ்வு வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன்.

வணக்கம்.

error: Content is protected !!