SSKN — epi 13

அத்தியாயம் 13

 

தொட்டு தொட்டு என்னை

பட்டாம்பூச்சி பெண்ணை

திட்டமிட்டு யார் வென்றதோ

 

லப்டோப்பில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவனை இரு கரங்கள் பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டன.

“என்னடி?”

“என்ன பண்ணிட்டு இருக்க மணி? எழுந்ததும் முதல் வேலையா உன்னை ரூம்ல போய் தேடுனேன், காணோம்”

“ரூம்ல இருந்தா வேலைப்பாக்க முடியல. அதான் கீழ வந்துட்டேன். உன்னை வந்து எழுப்பலாமான்னு நினைச்சேன். நைட்லாம் ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துச்சு. சரி பகல்லயாச்சும் தூங்கட்டும்னு விட்டுட்டேன்.”

“நைட் தூக்கம் வரல மணி. அதான் கேம் ப்ரோக்ராம் ரன் பண்ணி பார்த்துட்டு இருந்தேன். டைம் போனதே தெரியல”

ஏதோ சொல்ல வாய் திறந்தவனை, கை வைத்துப் பொத்தினாள் கவி.

“நீ சொன்ன மாதிரி ரூம்ல ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். நடு நடுவுல சாப்பிட்டேன். தண்ணி குடிச்சேன். நீ வாங்கி தந்த ஹேல்த்தி நட்ஸ்லாம் சாப்பிட்டேன். போதுமா?”

போதும் என தலையாட்டினான் மணி.

“சரி, பக்கத்துல வந்து உட்காரு”

“முடியாது! இப்படி தான் இருப்பேன்” கட்டிப் பிடித்த பிடியை இன்னும் இறுக்கினாள் கவி.

“நடு ஹால்ல வச்சு என்ன இது அட்டகாசம்? மீராம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க?”

“என்னன்னவோ நினைப்பாங்க! நிச்சயம் பண்ணவங்க அப்படி இப்படி இருப்பாங்கன்னு நினைப்பாங்க. நம்ம கவி செம்ம ரோமெண்டிக்னு நினைப்பாங்க. மணி ரொம்ப குடுத்து வச்சவன்னு நினைப்பாங்க. அதைப் பத்திலாம் என்ன கவலை உனக்கு? கவலைப்பட வேண்டிய நானே கட்டிக்கிட்டு நிக்கறேன்” மேலும் குனிந்து தாடையை அவன் தோளில் அழுத்தினாள்.

“லெப்ட் சைட்டும் இப்ப செஞ்ச மாதிரியே தாடைய வச்சு அழுத்தி குடுடா லயனஸ். ஸ்ட்ரெஸ்ல நரம்பெல்லாம் பிண்ணி பினைஞ்சு கிடக்கு. நீ இப்படி செய்யறப்போ ரிலீவா இருக்கு”

“அப்படி என்ன ஸ்ட்ரெஸ் உனக்கு? நரம்பு முறுக்கிக்கிற அளவுக்கு?” கரிசனையாகக் கேட்டப்படியே அவன் சொன்னபடி செய்தாள்.

“ஹ்ம்ம், நல்லா இருக்குடி!”

“ரூமுக்கு வா மணி, நல்லா பிடிச்சு விடறேன்! இங்க யாராச்சும் வந்துற போறாங்க”

“ஒன்னும் வேணா! ரூமுக்குப் போனா சட்டையைக் கலட்ட சொல்லுவே! கேடி கேப்மாரி நீ”

“ஐயே! ரொம்பத்தான் அலட்டறே! பாவமா இருக்கே நம்ம அக்குபஞ்சர் திறமைய காட்டலாம்னு நினைச்சா, ஓவர் சீன் போடற”

“நீ? அக்குபஞ்சர்? என்னை பஞ்சர் வேணும்னா செய்வ! இங்கயே இப்படியே பிடிச்சு விடு”

கண்டதையும் கற்றவள் ஆயிற்றே அவள்! ஸ்ட்ரெஸ் ரீலீவ் செய்யும் மசாஜும் படித்து வைத்திருந்தாள். ஆனால் செய்து பார்த்ததில்லை. இன்று பலியாடு தானாகவே சிக்கவும் மகிழ்ந்து போனாள் கவி.

“நேரா உட்காரு மணி”

லாப்டோப்பை மேசை மேல் வைத்தவன் அவள் சொன்னது போல நிமிர்ந்து நேராக அமர்ந்தான். கழுத்தையும் தோளையும் பெரு விரல் வைத்து சின்ன சின்ன வட்டம் போடுவது போல மெல்ல அழுத்திக் கொடுத்தாள் கவி. அவளின் ரிதமான மெல்லிய மசாஜ், மணியின் டென்ஷன் முடிச்சுகளை தளர்த்தியது.

“சுகமா இருக்குடி லயனஸ். எப்போதும் சித்ராக்காவுக்கு நான் பிடிச்சு விடுவேன். முதன் முதலா ரீசிவிங் எண்ட்ல இருக்கேன். சொர்க்க சுகமா இருக்கு” கண்களை மூடி தளர்வாக அமர்ந்துக் கொண்டான் மணி.

“நான் தானே உனக்கு பெரிய டென்ஷன்! இப்போத்தான் உன்னை நான் டென்ஷன் பண்ணாம நல்ல பிள்ளையா இருக்கேன்ல! அப்புறமும் என்ன பிரச்சனை உனக்கு?” வாய் பேசினாலும் கைப்பாட்டுக்கு வேலையை செய்தது. தோளில் இருந்து முதுகுக்கு இறக்கி இருந்தாள் விரல்களை.

“இந்த சனி ஆராய்ச்சி முடிய மாட்டுது கவி! போன வாரம் அங்கிள் கைட் பண்ண ஓரளவு ஃபைனல் ட்ராப்ட் முடிச்சேன். இப்போ முதல்ல இருந்து படிச்சுப் பார்த்தா இண்ட்ரோக்கும் கான்க்லுசேஷன்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு. மண்டை காயுதுடி. ஒருத்தர் ரத்தத்த, கிட்னிய, போன்மேரோவ இன்னொருத்தருக்கு குடுக்கறாங்களே, அந்த மாதிரி மூளையையும் குடுக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும். உன் கிட்ட இருந்து கொஞ்சம் மூளை தானம் வாங்கிப்பேன் நான்” சிரித்தான் மணி.

“எது கேட்டாலும் தரேன் மணி. என் மூளைய மட்டும் கேட்காதே! உன்னை முடக்கி உட்கார வச்சிரும்” சீரியசாக சொன்னாள் கவி. மசாஜ் செய்தவள் கையை நிறுத்தி, முன்னே இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான் மணி.

இவளும் நெருங்கி அமர்ந்துக் கொண்டாள். கொஞ்ச நாட்களாகவே பேசாமல் இருந்தவன், அவள் அழவும் சமாதானப்படுத்தி பேச ஆரம்பித்தாலும், பேச்சு வார்த்தை குறைவாகத்தான் இருந்தது. இன்றுதான் எப்பொழுதும் போல பேசுகிறான். அதிலேயே நெகிழ்ந்திருந்தாள் கவி. அவன் கழுத்தில் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவது போல அசைந்தாள்.

“குட்டிப் பாப்பாவா நீ?”

“ஆமா! நீ தானே எனக்கு அம்மாவா இருப்பேன்னு வாக்கு குடுத்துருக்க! அப்போ நான் உனக்கு குட்டிப் பாப்பாத்தானே.” செல்லம் கொஞ்சினாள் கவி.

“லயனஸ், இந்த குட்டிப் பாப்பாக்குள்ள எப்ப ஒரு குட்டிப் பாப்பா வரும்?” நெகிழ்ந்திருப்பவளிடம் ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தான் மணி.

“நான் பீப்பா ஆனாதான் பாப்பா வரும் மணி. இவ்ளோ படிச்சிருக்க அதுக்கூட தெரியல” அவன் மூக்கோடு மூக்கை உரசினாள்.

“நீ பீப்பா ஆகனும்னா அதுக்கு முதல்ல நாம கதவ தாப்பா போடனுமே லயனஸ்”

“அதெல்லாம் கவலைப்படாதே மணி. இந்த பாப்பா, அழகா போடுவா தாப்பா”

“போடுவடி போடுவ! தாப்பா போடுறது உனக்கு அவ்வளவு சீப்பா போச்சு! நம்மூர்ல தாப்பா போடவும் லைசென்ஸ் வேணும் தெரியுமா?”

அவன் மடியில் இருந்து எழுந்துக் கொண்டவள், அவன் லாப்டோப்பை எடுத்துப் பார்த்தாள்.

“மணி, நான் வேணும்னா இதுல உனக்கு ஹெல்ப் பண்ணவா?” கதையை மாற்றினாள்.

“என்னை கல்யாணம் செஞ்சிக்கப் போறியா இல்லையா?” பேச்சை மாற்றியதில் கோபம் கொண்டவன் குரலை உயர்த்தினான்.

“நான் ஆறு மாசம் டைம் கேட்டதா ஞாபகம்!” அவளின் குரலும் லேசாக உயர்ந்தது.

பதில் பேச வந்தவன் வாயை ஒரு கையால் இறுக மூடினாள் கவி.

“என் கிட்ட கோபப்படாதே மணி. இப்போத்தான் சரியாவே பேச ஆரம்பிச்சிருக்க! அதுக்குள்ள மறுபடியும் கோவிச்சிக்காதே! நான் தாங்க மாட்டேன். ப்ளீஸ் மணி. இன்னும் ரெண்டு மூனு மாசம் இருக்குல்ல! அது வரைக்கும் கல்யாண சப்ஜெக்ட எடுக்க வேணாமே! கொஞ்ச நாளைக்காச்சும் இப்படியே, ஒட்டிக்கிட்டு, கட்டிக்கிட்டு, இளைஞ்சிகிட்டு, குழைஞ்சிகிட்டு இருக்கலாமே மணி. ப்ளிஸ்டா, ப்ளீஸ்!” கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் கவி.

ஆறு மாதம் டைம் என பேசிவிட்டு இடையில் அவளை அவசரப்படுத்துவது சரி இல்லையென பட, பெருமூச்சுடன் அவள் கையை விலக்கினான் மணி.

“சரி”

“சிரிச்சாப்பல சொல்லு மணி!”

“சரி, வெய்ட் பண்ணறேன் லயனஸ்”

“தேங்க்ஸ் மணி!” சுற்றும் முற்றும் பார்த்தவள் பச்சக்கென உதட்டில் முத்தமிட்டாள்.

“நான் வெய்ட் பண்ணனும்னா இப்படி பச்சக் பச்சக் குடுத்து தூண்டி விடறதெல்லாம் மூட்டைக் கட்டி வை லயனஸ். தூண்டி விடறதுக்கு நான் அகல் விளக்கு இல்ல. உன்னை விடிய விடிய தூங்க விடாம வச்சிக்க துடிக்கற தூண்டாமணி விளக்கு.”

“அட, அட, அட! விளக்குல கூட உன் பேரு வருதுடா. எல்லாமே அப்படியே உனக்கு சின்க் ஆகுதுடா மணி”

“கவி”

“ஹ்ம்ம்”

“இந்த கவிக்கு ஒரு கவி சொல்லவா?”

“வேணாம்!”

“ஏன்டி வேணாம்?”

“நீ கவிதை சொல்லுவ! எனக்கு அப்படியே கட்டிக்கனும், முத்தம் குடுக்கனும்னு தோணும். யோசிக்காம நானும் குடுத்துருவேன்! நான் குடுக்கறதையும் நல்லா வாங்கிகிட்டு, ரொம்ப நல்லவன் மாதிரி விளக்க பத்தி விளக்கு விளக்குன்னு விளக்குவ. இந்த விளையாட்டுக்கே நான் வரல போடா!”

“கேளுடி ப்ளீஸ்”

“சரி சொல்லு”

“இச்சென நீ தரும் முத்தம்

கலங்குதடி என் சித்தம்

எப்போது தெளியும் இப்பித்தம்

ஏங்கித் தவிக்கிறேனடி நித்தம்!”

அவள் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப் பார்த்து கவிதை சொன்னான் மணி. அவன் குரலில் தெரிந்த ஏக்கம், கவியை துடிக்க வைத்தது. வேகவேகமாக அவன் முகம் முழுக்க முத்தமிட்டவள் பட்டென எழுந்துக் கொண்டாள். அவன் லேப்டோப்பை எடுத்துக் கொண்டவள்,

“டைனிங் டேபிள் போலாம் மணி. என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியும்னு பார்க்கறேன்” என அவசரமாக நடந்தாள். இவனும் அவள் பின்னாலேயே சென்றான். மீராம்மா கிச்சனில் சமைக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். வெங்கி இன்று வர தாமதம் ஆகுமென தகவல் கொடுத்திருந்தார். ஹேரியை அவன் அம்மா வந்து ஏற்கனவே அழைத்து சென்றிருந்தார்.

இருவரும் நாற்காலியில் அமர்ந்தனர். மணி ஆரம்பத்தில் இருந்து செய்திருந்த ரிப்போர்ட்களை வாசிக்க ஆரம்பித்தாள் கவி.

“மீராம்மா, இன்னிக்கு நான் சமைக்கவா?” என கேட்டான் மணி.

தலையை நிமிர்த்திப் பார்த்த கவி,

“உனக்கு என்ன ஸ்பெஷலா சமைக்கத் தெரியும்? ஒரு தடவை நீ செஞ்சு குடுத்த கேசரி சாப்பிட்டுருக்கேன். அவ்ளோ ருசி” என எப்பொழுதோ சாப்பிட்டிருந்ததை நினைவு வைத்து இப்பொழுது பாராட்டினாள்.

“ஆமா, சாப்பிட்டுட்டு ஈன்னு பல்ல காட்டுனியே! மறக்க முடியுமா!” சிரித்தான் மணி.

“அப்போவும் இப்படித்தானா? என் கிட்டயும் இப்படித்தான் பல்ல பல்ல காட்டுவா மணி” என மீராவும் இணைந்து சிரித்தார்.

“மணிக்காகத்தான் நான் ப்ரேஷஸ் போட்டேன். பல்லு வரிசையா இருந்தாலாச்சும் என்னைத் திரும்பி பார்ப்பானான்னு ஒரு நப்பாசை. அப்போலாம் ஐயாவுக்கு என்னைக் கண்ணுக்கே தெரியாது. நானே தேடி தேடி போய் பேசுவேன். டவுட் கேப்பேன். கிளாஸ்ல இவனையே பார்த்துட்டு இருப்பேன். போன் நம்பர் கேட்டதுக்கு அவ்ளோ பில்ட் அப் பண்ணான்.  கெஞ்சி கெஞ்சி வாங்கனேன். நான் இவன் பின்னாடியே சுத்தறதா பார்த்து கிளாஸ் பொண்ணுங்களாம் என்னை மணியோட சனின்னு கூப்புடுங்க.”

“ஓ நம்ம மணி பெரிய உசுமலரசேன்னு சொல்லு ஸ்கூலுல” கிண்டலடித்தார் மீரா.

“ஆமா மீராம்மா! தலைவர் எங்க போனாலும் பொண்ணுங்க புடை சூழ தான் போவாரு. பெல் ஐ லவ் யூன்னு ஒரே லவ் டார்ச்சர் இவருக்கு.”

“எல்லாரும் ஒளிஞ்சி மறைஞ்சிதான் சொன்னாங்க கவி. தைரியமா என்கிட்ட நேரா லவ் சொன்ன முதல் ஆள் நீதான்”

“ஓஹோ, பாருங்க மீராம்மா! முதல் ஆள் நானுன்னா அதுக்கப்புறம் எத்தனை பேரு சொன்னாங்கன்னு கேளுங்க”

“சொல்லு, சொல்லு! கவி கேக்கறால்ல!” கோர்த்துவிட்டார் மீரா.

“அது இருக்கும் எக்கசக்கமா! அதெல்லாமா கணக்கு வச்சிப்பாங்க. மத்தவங்க ப்ரோபோஸ் பண்ணப்பலாம் நான் ரிஜேக்ட் பண்ண கர்ம வினைதான் இப்போ என்னை சுத்தி சுத்தி அடிக்குது. நல்லாவே நீ என்னை வச்சி செய்யற கவி”

“அதெல்லாம் எங்க கவி சரி சொல்லிரும். நீ கவலைப்படாதே மணி” கவி அமைதியாகி விடவும் மீரா அவனை சமாதானப்படுத்தினார்.

“உன்னால என்னைக்குமே கை நீட்டாத எங்கம்மா என்னை அறைஞ்சிட்டாங்க தெரியுமா மணி!”

“இது என்ன புது கதையா இருக்கு?” என கேட்டான் மணி. கவி அடிக்கடி தன் அம்மாவைப் பற்றி பேசியதில்லை. இன்று பேசவும் மீராவும் ஆவலாக கவனித்தார்.

“திடீர்னு ப்ரேசஸ் வேணும்னு அடம் பிடிச்சேன். உடம்ப தேத்தனும் டாக்டர் கிட்ட போலாம்னு அழுதேன். அடிக்கடி ரூம்லயே அடைஞ்சி கிடந்தேன். அவங்களுக்கு என் மேல லேசா சந்தேகம் வந்துருச்சுப் போல.”

“அப்புறம் என்னாச்சு?” மீரா கேட்டார்.

“நான் ஸ்கூலுக்கு போனப்போ என் ரூம செக் பண்ணிருக்காங்க. என்னோட கவிதைலாம் சிக்கிருச்சு.”

“கவிதை எழுதுனியா? நீயா?” ஆச்சரியமாக கேட்டான் மணி.

“கவிதைனா நீ சொல்ற கவிதை மாதிரின்னு ஓவரா கற்பனை பண்ணிக்காதே! ‘மணி என் நெஞ்சில் அடித்தாயே ஆணி’ ன்னு ஒரு கவிதை. அப்புறம் ‘ பூனை கத்தும் மியா, காதலில் விழுந்தாள் லயா’ அப்படின்னு ஒன்னு. ‘என் காதல் கள்வனே மணி, நீ சிரிக்கும் சத்தம் கிண்கிணி’ அப்படின்னு இன்னொன்னு”

மீராவும் மணியும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

“என்ன உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு சிரிப்பு! ஜீனியஸ்சா இருந்தா கவிதைலாம் வந்தே ஆகனும்னு சட்டம் இருக்கா?” கடுப்பானாள் கவி.

கவியைத் தன் தோளோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் மணி.

“என்னம்மா காதல் கவிதை வடிச்சிருக்கடி என் பட்டுக்குட்டி. அம்மா அடிச்சது ரொம்ப வலிச்சதா?” என்னவோ நேற்று தான் அவள் அடி வாங்கிய மாதிரி கேட்டான் மணி.

“கொஞ்ச நேரம் வலிச்சது! அப்புறம் அவங்க அழவும் வலி போயிருச்சு. அவங்க கண்டிப்பு காட்டற ரகம் இல்ல. பாசத்தை அள்ளிக் குடுப்பாங்க. ஆனா நாம அதே பாசத்த திருப்பிக் குடுக்கறப்போ ஏத்துக்கத் தயங்குவாங்க. நான் குழந்தையா இருந்தப்போ எப்படியோ தெரியலை. ஆனா வளர வளர ஒரு ஒதுக்கம் அவங்க கிட்ட. அப்பா சொல்லுவாரு, அம்மா கிட்ட அன்ப மட்டும் காட்டு கவிம்மா. நீ புத்திசாலி பிள்ளைன்னு காட்டிகிட்டா அவ ஒதுங்கி, ஒடுங்கி போயிருவா அப்படின்னு. அப்போ புரியல, இப்போ புரியுது” லேசாக பெருமூச்சு விட்டவள் அதற்கு மேல் வாய் திறக்கவில்லை.

மணி சமைக்கப் போகவும், கவி லேப்டோப்பில் அவனின் ஜர்னலை அலசி ஆராய்ந்தாள்.

மீராவோ கவி தன் அம்மாவைப் பற்றி லேசாக சொல்லிய விஷயங்களை அசைப்போட்டப்படி அமர்ந்திருந்தார். அவரின் யோசனையைக் கவியின் மெல்லிய குரல் கலைத்தது.

“நீங்க எப்போ எனக்கு அம்மாவா வருவீங்க மீராம்மா?”

(கொட்டும்)