SST — epi 1
SST — epi 1
மலேசியாவில் பல கட்டிடங்களில் நான்காவது மாடி இருக்காது. அதை 3A என மாற்றி இருப்பார்கள். நான்கு என்ற எண் சீனத்தில் “சூ” என அழைக்கப்படுகிறது. அதே “சூ” இறப்பையும் குறிக்கும். நல்ல சகுனம் இல்லை என நம்பரை மாற்றி வைப்பார்கள் இந்நாட்டில் .
‘சீக்கிரம் கிளம்பு! எனக்கு ட்யூட்டிக்கு மணி ஆச்சு’ என சூரியனார் கடுப்பில் கத்திக் கொண்டிருந்ததைக் கண்டுக் கொள்ளாமல் மெல்லத்தான் மறைந்தாள் நிலவு மங்கை. சுறுசுறுப்பாக அவர் வெளிச்சத்தை பூமியில் அள்ளி தெளிக்க இருள் மெல்ல பிரிய ஆரம்பித்தது.
அந்த அழகிய விசாலமான கொண்டோமினியத்தில், இன்னும் சயனித்திருந்தான் குருப்ரசாத். கட்டிலில் குப்புறப் படுத்திருந்தவன் மேல் வெல்வெட் கம்போர்டர் போர்த்திக் கிடந்தது. தூங்கும் போது ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் குணத்தைக் கணிக்கலாம் என சொன்னதை நம்பினால், சத்தியமாக இவன் பிடிவாதம் பிடித்த கோபக்காரன் என சொல்லி விடலாம். தூங்கும் போது கூட முகம் உர்ரென இருந்தது. புருவத்தை நெறித்துக் கொண்டு தான் தூங்கிக் கொண்டிருந்தான்.
நாம் பார்ப்பது தெரிந்தோ என்னவோ மெல்லத் திரும்பி படுத்து நமக்கு முகத்தை நன்றாக காட்டினான் குரு. கருத்தடர்ந்த அலை அலையான கேசம் நெற்றியில் புரள, புருவம் அடர்த்தியாக வளைந்து நின்றது. மூக்கோ எதிரே வந்தால் முட்டிவிடுவேன் என்பது போல நீண்டு கிடந்தது. மூக்குக்கு கீழ், உதட்டின் மேல் அளவான அளவில் மீசை ஸ்க்ரப்பி ஸ்டைலில் இருந்தது. மீசை ஸ்டைலுக்கு ஏற்றபடி சின்னதாக தாடியும் இருந்தது.
ரூமின் மெல்லிய வெளிச்சத்தில் பார்க்கும் போது வெள்ளையாகத் தான் இருந்தான். உடற்கட்டு எப்படி இருக்கிறது என பார்க்கலாம் என இன்னும் கொஞ்சம் நெருங்கினால், கம்போர்டரை இழுத்துப் போர்த்திக் கொண்டான் குரு. ஜஸ்டு மிஸ்!
கரெக்டாக காலை மணி ஐந்துக்கு போன் அலாரம் அடிக்க, கை நீட்டி அதை அணைத்தவன் படக்கென கண்ணைத் திறந்தான். எழுந்தவுடனே முதன் முதலில் அவன் செய்வது சிட் அப்தான். கட்டிலில் படுத்தப்படியே ஐம்பது தடவை சிட் அப் செய்து முடித்தவுடன் எழுந்து அமர்ந்தான்.
போனை எடுத்து இன்று என்ன செய்ய வேண்டும் என தனது செகரட்டரியால் குறிக்கப் பட்டிருக்கும் காலெண்டரை திறந்துப் பார்த்தான். பின் எழுந்து பாத்ரூம் போய் பல் துலக்கி வெளியே வந்தவன், அவனது உடற்பயிற்சி உடையை உடுத்திக் கொண்டான்.
கிச்சனுக்கு சென்று ப்ரீட்ஜில் உள்ள வாட்டர் பாட்டலை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அந்த கொண்டோமினிய வளாகத்திலே இருந்த ஜிம்முக்குக் போனான்.
குருப்ரசாத், முப்பத்தி இரண்டு வயதான எலிஜிபள் பேச்சலர். பெற்றவர்கள், கூடப் பிறந்தவர்கள், சுற்றம் சொந்தம் எல்லாம் இருந்தும் ப்ரைவசி வேண்டி தனியாக இருப்பவன். சொந்தமாக GP ஐ.டி சொலுஷன் எனும் நிறுவனத்தை வைத்து நடத்துபவன். ஐ.டி சம்பந்தபட்ட எல்லா சேவைகளையும் வழங்கும் இவன் நிறுவனம். வெப் டிசைனிங் முதல் அன்டி வைரஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது வரை எல்லா சேவைக்கும் இவர்களை அணுகலாம். சின்னது, பெரியது என பாகுபாடு இல்லாமல் பணத்தோடு யார் அணுகினாலும் அந்த நிறுவனத்துக்கு இவர்களின் சேவை கண்டிப்பாக கிடைக்கும்.
ஐம்பது பேர் கொண்ட குழுவை வைத்து, நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்த பவிலியன் பில்டிங்கில் அவனது அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்தான். மலேசியர்கள் மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருந்தும் ப்ரோபெசியனல்ஸ் இவனிடம் வேலை செய்கிறார்கள்.
எலிஜிபள் பேச்சிலரான இவனுக்கு இடுப்பை சுற்றி கேர்ள்ப்ரேண்ட்ஸ் இருக்கிறார்கள். நவீன கண்ணன், எழில் கொஞ்சும் கோபிகைகளின் மன்னன். கண்டிப்பாக எழில் கொஞ்ச வேண்டும், இல்லாவிட்டால் ஐயாவின் கடை கண் பார்வை கிடைப்பது சாத்தியமே இல்லை.
வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சியை முடித்தவன், துண்டை தோளில் போட்டுக் கொண்டே தனது வீட்டுக்குள் நுழைந்தான். டீவியை ஆன் செய்து, யூடியூப்பில் ஆங்கில பாடல்களை ஒலிக்க விட்டவன் குளிக்க சென்றான். ஆபிசுக்கு அழகாக கிளம்பி கிச்சனுக்குள் புகுந்தான். ஒரு கிளாசில் பால் ஊற்றிக் கொண்டவன், எனர்ஜி பார் ஒன்றை எடுத்துக் கடித்தபடியே பாலையும் குடித்து முடித்தான். இன்று காலை பத்து மணிக்கு கிளையண்ட் ஒருவருடன் ப்ரேக்பஸ்ட் மீட்டீங் இருப்பதால் பசியில் காந்திய வயிற்றை லேசாக சமாதானம் செய்து வைத்தான்.
போனை எடுத்து, கிரெப்(grab) ஆப்ளிகேஷனை நோண்ட ஆரம்பித்தான் குரு. இவனிடம் கார் இருந்தும், டாக்சி அல்லது கிரெப் சேவையைத் தான் பயன்படுத்துவான். காலையிலேயே தலைநகரில் மனிதனைப் பாடாய்படுத்தும் போக்குவரத்து நெரிசல் என்றாலே இவனுக்கு அலர்ஜி. மூடே கெட்டுவிடும். அதனாலேயே மற்றவர் ஓட்ட இவன், ஹாயாக போனை நோண்டிக் கொண்டு வருவான்.
மலாய்காரர் ஒருவரின் கார் இவன் இடத்துக்கு அருகே காட்டவும் அந்த காரை இவன் செலெக்ட் செய்ய முயன்ற வேளை போன் அடித்தது. அம்ஸ் 1 காலிங் என காட்டிய போனை பார்த்தபடியே இருந்தான். அவனின் அம்மாதான் அது. இரண்டு நம்பர் வைத்திருந்தார். அம்ஸ்1 அம்ஸ் 2 என இவன் சேவ் செய்து வைத்திருந்தான். முதல் நம்பரில் இவன் எடுக்காமல் இருக்கவும் இப்பொழுது அம்ஸ் 2 காலிங் என வந்தது. அவசரம் என்றால் தான் இப்படி விடாமல் அடிப்பார் அவர். இல்லையென்றால் மிஸ்ட் கால் பார்த்து இவனே அழைப்பான் என விட்டுவிடுவார்.
அம்ஸ் 2ஐயும் புறக்கணித்தால் , பூகம்பமே வெடிக்கும். பேரா மாநிலத்தில் வசிக்கும் அவர், ப்ளைட் எடுத்து இன்றே இங்கு வந்து நிற்பார். எதற்கு வம்பு என போனை காதுக்குக் கொடுத்தான்.
“மிஸ் யூம்மா!”
“வெளக்கமாறு பிஞ்சிரும்” அவரின் கோபத்தில் இவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஏன்மா இந்த கோபம்? இன்னும் பசியாறலயா?” என கேட்டான்.
“அதெல்லாம் சாப்பிட்டாச்சு. ஒரு வாரம் ஆச்சுடா நீ போன் போட்டு. நானும் சரி பாப்போம் இவனே அடிக்கறானான்னு வெய்ட் பண்ணா, இதான் சாக்குன்னு அப்படியே இருக்க. இப்போ நானே ரெண்டாவது வாட்டி அடிக்கவும், எடுத்துட்டு மிஸ் யூ, கீஸ் யூன்னு ஆளை ஏய்க்கற!” பொரிந்துக் கொட்டினார் அவனின் அம்மா ஆனந்தி.
“இங்க ரொம்ப பிசிமா நானு! வீட்டுக்கு வரவே நைட் ஆகிறுது. வந்ததும் போன் பேசக்கூட எனர்ஜி இல்லம்மா. அப்படியே சாஞ்சிருவேன். உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்டா தெரியும். அங்க போய் தன்னந்தனியா இருந்துட்டா, நீ எங்க போற, எந்த ப்ராண்ட் தண்ணி அடிக்கற, எந்த பொண்ணு கூட சுத்துற இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்ட.”
“ஹெப்பி(ஆனந்தி) பேபி! இந்த மாதிரிலாம் பேசி ஏன் பீ.பீய ஏத்திக்கிறீங்க? மருந்து சாப்டீங்களா?” அக்கறையாக கேட்டான்.
“சாப்டேன்டா! எப்படா வருவ ப்ரசாத்? ஆறு மாசம் ஆச்சுடா நீ வந்து. நான் வரேன்னாலும் பிசி, மீட்டிங், ஓவர்சீ போறேன்னு கதை கதையா சொல்லுற! கண்ணுக்குள்ளயே நிக்கறடா”
பட்டென போனை நிறுத்தியவன், வீடியோ கால் போட்டான். அங்கே அவர் எடுக்கவும், வசீகரமாக சிரித்தான் குரு.
“பாத்துட்டீங்களாம்மா? ஆறு மாசத்துக்கு முன்ன பார்த்த மாதிரியேத்தானே இருக்கேன்?” என கண்ணடித்தான்.
போனின் தெரிந்த மகனின் பிம்பத்தை வருடினார் ஆனந்தி.
“வாடா ப்ரசாத்! வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போடா”
“சரி கண் கலங்காதீங்க. நீங்க கலங்கனா எனக்குப் பிடிக்காது. அடுத்த மாசம், பேபிம்மா பேர்த்டேக்கு கண்டிப்பா வரேன்”
பேபிம்மா என செல்லமாக அழைக்கப்படும் ரேஷ்மி குருவின் தம்பி மகள். மூன்று வயதாகப் போகிறது. ஆனந்திக்கு பிறந்தது இரண்டு மகன்கள் குருப்ரசாத், ஹரிபிரசாத் என அவர்களுக்குப் பேர் சூட்டி கடைசியாக பீறந்த மகளுக்கு பிரசாந்தினி என பெயரிட்டிருந்தார். பிரசாந்தினி திருமணம் ஆகி பினாங்கில் வசிக்க, ஹரி தன் குடும்பத்துடன் அம்மா வீட்டிலே இருந்தான்.
ஆனந்தியின் கணவர், குருவுக்கு இருபது வயதாகும் போதே சாலை விபத்தில் உயிர் இழந்திருந்தார். படித்துக் கொண்டே அவர் செய்த கார் வியாபாரத்தை குருதான் கவனித்து வந்தான். தம்பி தலையெடுக்கவும், பிஸ்னசை அவனிடம் கொடுத்துவிட்டு இவனது கனவை செயலாக்க தலைநகரம் வந்துவிட்டான்.
லட்சியத்தை அடையும் வரை கல்யாணம் வேண்டாம் என கண்டிப்பாக இருந்துவிட்டான் குரு. அதனாலேயே மற்ற இருவருக்கும் திருமணத்தை முடித்தார் ஆனந்தி. அவரின் பெருங்கவலையெல்லாம் பெரிய மகன் மீதுதான் மையம் கொண்டிருந்தது. கணவர் தயவால் பணம் என்றுமே பிரச்சனையாக இருந்ததில்லை ஆனந்திக்கு. பிள்ளைகள் நல்வாழ்வு மட்டுமே அவரின் பிரார்த்தனையாக இருந்தது.
“சரிடா, இன்னும் ஒரு மாசம் வெய்ட் பண்ணுறேன். அதுக்குள்ள அந்த காலன் வந்து என்னைக் கூட்டிட்டுப் போகாம இருந்தா சரி”
அவர் அப்படி சொல்லவும் பட்டென கோபம் வந்தது குருவுக்கு,
“இதுக்குத்தான் நீங்க போன் போட்டாலே நான் எடுக்கறது இல்ல. ஒன்னு கல்யாணம்னு குதிப்பீங்க இல்ல கருமாதின்னு கடிப்பீங்க. ஏன்மா இப்படிலாம் பேசி காலையிலே என் மூட்ட ஆப் பண்ணுறீங்க? எனக்கு இருக்கறது நீங்க மட்டும் தான். நீங்களும் இப்படிலாம் பேசுனா நான் என்ன செய்ய? போங்கம்மா” சத்தம் போட்டவன், போன் காலை நிறுத்தி விட்டான்.
ஆனந்தி மறுபடி போன் செய்ய, இவன் எடுக்கவே இல்லை. மறுபடி மறுபடி அவர் முயற்சிக்க பேசாமல், போன் திரையையே கோபமாக பார்த்தப்படி இருந்தான் குரு. இனிமேல் ஒரு வாரம் கழித்து தான் பேசுவான். கோபம் வந்தால், சட்டென மறையாது இவனுக்கு.
“சாரிடா ப்ராசாத். இனிமே அப்படி பேசமாட்டேன். மூட் அவுட் ஆகாம வேலைக்குப் போடா! அம்மா லவ் யூ” என வாட்சாப் அனுப்பி வைத்தார் ஆனந்தி. படித்தவன் அதற்கும் பதில் போடாமல், இன்னொரு கிளாஸ் பால் குடித்து கோபத்தீயை அணைக்க முயன்றான்.
கொஞ்ச நேரம் மூச்சை ஆழ இழுத்து விட்டவன், கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு என காட்டியது. இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என மீண்டும் கிரெப் ஆப்ளிகேஷனைத் திறந்து, ரிக்வேஸ்ட் கொடுத்தான். இந்த முறை ஒரு பெண் அக்செப்ட் செய்திருந்தாள்.
பெயர் மிருவென காட்டியது. ப்ரோட்டோன் சாகா(மலேசிய கார்) இன்னும் ஐந்து நிமிடத்தில் இவன் இடத்தை அடையும் என காட்டவும், அவசரமாக லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி லிப்ட் வழி லாபிக்கு இறங்கினான். அவன் லாபியில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடத்தில் ப்ரோட்டான் சாகா கார் நம்பர் கண்ணுக்குத் தெரிகிறதா என பார்த்தப்படியே நின்றான். குறித்த நேரத்துக்கு வந்து நின்றது அந்த ஊதா நிற கார்.
பின் பக்க கதவைத் திறந்து அவன் ஏறி அமர,
“குட் மார்னிங் சார்” என குரல் கேட்டது.
“மார்னிங்” என பட்டும் படாமலும் பதில் அளித்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.
குரல் பெண் எனக் கூறினாலும் பின்னால் இருந்து பார்க்க ஆண் போலவே இருந்தது இவனுக்கு. ஒட்ட வெட்டிய பாய்கட். கருநீலத்தில் ஒரு டீசர்ட்.
அவ்வளவுதான் பின்னால் இருந்து தெரிந்தது. இவனுக்கும் யார் என பார்க்கும் ஆர்வமெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரு முறையாவது இந்த சேவையைப் பயன்படுத்துகிறான். அவனுக்கு, கார் ஓட்டுபவர் கூட அவன் ஆபிசில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். அது வேலை செய்யும் வரை தான் மதிப்பு, இவர்கள் இறக்கி விடும் வரை தான் மதிப்பு. எப்பொழுதுமே ஓட்டுபவர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ளமாட்டான். அவர்கள் பேச முயன்றாலும், ஒரு வார்த்தை இரு வார்த்தைகளிலேயே கட் பண்ணி விட்டு விடுவான்.
“சார், என்ன பாட்டு போடட்டும்?” தமிழன் என கிரெப் ஆப்ளிகேஷனைப் பார்த்தே தெரிந்து வைத்திருந்தவள், தமிழில் பேசினாள்.
“யுவர் விஷ்” என சொல்லி வாயை மூடிக் கொண்டான்.
திடீரென ஹை டெசிபளில் ‘சந்தோஷம் இன்று சந்தோஷம்’ என பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
‘உன் இஷ்டம்னு சொன்னேன் தான்! அதுக்குன்னு காதை ஓட்டைப் போடற அளவுக்கு சவுண்ட் வைக்கனுமா?’ பின்னால் இருந்து முறைத்தான் குரு.
அவனைக் கண்டு கொள்ளாமல் அவளும் சேர்ந்து பாடிக் கொண்டே, ஸ்டீயரிங் வீலில் தாளம் போட்டப்படியே வந்தாள். பாட்டில் ட்ரம் படபடவென முழங்கும் போது, இவளும் அதற்கேற்றார் போல படபடவென தாளம் போட்டாள்.
பின்னால் அமர்ந்திருந்தவனோ, இப்படி தாளம் போட்டுக் கொண்டே எங்கே போய் முட்டிக் கொள்வாளோ என பதட்டத்தில் அமர்ந்திருந்தான்.
பாட்டு முடியவும், சவுண்டைக் குறைத்தவள்,
“காலையில கார் எடுக்கறப்ப இந்த பாட்டை கேட்டுருவேன் சார். அன்றைய பொழுதும் பாட்டுக்கேத்தப்படி சந்தோஷமா போகும்னு ஒரு எண்ணம் எனக்கு. பாட்டும் மியூசிக்கும் ஒரு பொசிட்டிவ் வைப்ரேஷன் தருதுல்ல?” என சிலாகித்துக் கொண்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை. அதற்கு மேல் அவளும் பேசவில்லை. ஆங்கில சானலைத் திறந்து விட்டு கார் ஓட்டும் வேலையை மட்டும் பார்த்தாள். அவள் போன் அடிக்கவும்,
“சார், இம்போர்டண்ட் கால். பேசிக்கவா?” என அனுமதி கேட்டாள்.
“கோ அஹேட்!”
ப்ளூதூத் வழியாக பேச ஆரம்பித்தாள் அந்த மிரு. இவள் பக்கம் பேச்சு மட்டும் இவனுக்கு கேட்டது.
“சொல்லுடா”
“அட்மின் வேலைனா கூட ஓகேடா. பார்த்து செஞ்சு குடுடா”
“வாய்ல நல்லா வந்துரும் பாத்துக்கோ! வேலை இல்லாம நானே கடுப்புல இருக்கேன், தேவையில்லாம என்னை கிண்டல் அடிச்சுட்டு இருக்க. ஜோக்கா பேசு, மூஞ்சுல கீறல் போட்டுருவேன்”
“டீ லேடி வேலை கூட ஓகேதான். நல்ல சம்பளம் குடுத்தா ஓகே!”
“ஹ்ம்ம்ம். எவ்வளவு நாளைக்குடா இந்த கார் ஓட்டறது? கஷ்டமா இருக்கு. கம்ப்யூட்டர் சயிண்ஸ் டிகிரி இருந்து என்ன பண்ண? வேலை கிடைக்க பெரும்பாடா இருக்கு. ப்ரென்டுன்னு நீ ஒருத்தன் ரெக்ரூட்மெண்ட் செண்டர்ல வேலை செஞ்சும் எனக்கு யூஸ் இல்ல. வெத்துவேட்டுடா நீ”
“பார்ட் டைம்ல மாஸ்கோட் வேலையா? போடா டேய், வாயில வண்ணம் வண்ணமா வந்துரும்! போன தடவை அந்த கரடி மாஸ்கோட் காஸ்ட்யூம் போட்டுகிட்டு மூனு ஹவர் நின்னது, உடம்புலாம் செம்ம அரிப்பு. ரெண்டு நாளா சிநேகிதனே, சிநேகிதனேன்னு பாடிக்கிட்டு சொறிஞ்சிட்டே திரிஞ்சேன்.”
“என்ன ஓன் ஹவர்க்கு அம்பது வெள்ளி தராங்களா? சரி சரி, செஞ்சு தொலைக்கறேன். சீக்கிரமா நல்ல வேலை பாத்துக் குடுடா, ப்ளீஸ். உன் காலுல வேணும்னாலும் விழறேன்”
“ஓகே, பாய்”
அவள் பேசி முடிக்கவும், இவனின் பில்டிங் வரவும் சரியாக இருந்தது.
காரை நிறுத்தி பின்னால் திரும்பிப் புன்னகைத்தவள்,
“சார். டோட்டலா பத்து வெள்ளி” என சொன்னாள்.
அவள் முகத்தை அப்பொழுதுதான் சரியாக பார்த்த குரு, கண் சிமிட்ட மறந்தான்.
சற்று முன் அவள் தாளம் போட்டு பாடிய பாடலின் வரி அவனின் மனத்திரையில் ஓடியது.
‘கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும்!’
(தவிப்பான்…)