Thanjam mannavan nenjam 2

Thanjam mannavan nenjam 2

மதுமதிக்குத் தெரிய ஆரம்பித்திருந்தது. அவன் அவர்களது குடும்பம் சார்ந்த உறவை தங்களுக்கேயான தனிப்பட்ட உறவாக மாற்றி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விழைகிறான் என்று தெரிந்தது…

அவன் அவளைத் தன் உயிரினும் மேலாக நேசிக்கிறான் என்று அவனது பரிதவிப்பு நிறைந்த கண்களைப் பார்க்கும் போது தெர்ந்தது…

பதிலுக்கு அவன் அவளது நேசத்தை வேண்டுகிறான் என்று மேலும் மேலும் இறுகிக் கொண்டே போன அவனது அணைப்பை உணரும்போது தெரிந்தது.

இதுவரை புரிந்திராத புதிர்களுக்கான விடைகள் தவிப்புடன் கூடிய அவன் வார்த்தைகளைக் கேட்ட போது தெரிந்தது…

இறுதியில் அவன் அவளது இதழ் நோக்கி குனிந்து அதில் கவிதைகள் புனைந்தபோது அவளுக்கு அவனது காதல் புரிந்தே விட்டிருந்தது…மேலும் மேலும் வீரியம் கூடிக் கொண்டே சென்ற அவனது இதழ் அணைப்பில் தொய்ந்து போய்ச் சரிந்தவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு அவள் தலை தடவி முதுகு வருடி ஆசுவாசப் படுத்தினான்.அவனது அந்தக் கரிசணத்தில் அவள் கரைந்தே போனாள்.

அவள் அமைதியடைந்ததும் மீண்டுமாக அவளை நோக்கிக் குனிந்தவனைத்

தள்ளி விட்டு நின்றவளைப் புரியாமல் பார்த்தவனிடம்,

“ ஹலோ…வீரபாகு ஒரு சின்னப் பொண்ணத் தனியா கூப்பிட்டு வந்து பலான வேலை எல்லாம் பண்ண பாக்குறீங்ளா… பிச்சு…பிச்சு”வென்று சுட்டுவிரலால் பத்திரம் காட்டி விளையாட்டாய் மிரட்டிவிட்டுச் சிரித்தபடியே ஓடினாள். அவளது அந்தச் செல்ல மிரட்டலில் தனக்குள் சிரித்தவாறே அவளைப் பின் தொடர்ந்தான் வெற்றிவேல்.அந்த உல்லாசமான மனநிலையிலேயே இருவரும் தேவனூர் வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்குள் நுழையப் போனவளை நிறுத்திப் பிடித்து “ஏய் பூனைக்குட்டி…என்ன நீ…என்னைப் பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே…”என்றவனிடம்

“ம்…பிடிக்கலன்னு சொன்னா என்ன செய்வீங்க வீரபாகு…”என்றாள் குறும்பாக.

“ம்ம்…வேற என்ன செய்வேன்…அப்போ மாதிரி திரும்பவும் என் காதலை உனக்குப் புரிய வைப்பேன்” என்று அவள் இதழ்களைப் பார்வையிட்டவாறே அவளை நெருங்கி வந்த வெற்றிவேலிடம்

“ ஐயோ…நான் உள்ள போறேன்ப்பா” என்று விட்டு உள்ளே சென்றுவிட்டாள் மதுமதி.

அஞ்சுகம் மதியச் சமையலை கவனித்துக் கொண்டிருக்க…கமலம் அவருக்கு உதவிக்கொண்டிருந்தார். இருவரும் பல விசயங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்… இறுதியில் அவர்கள் பேச்சு மதுவிடம் வந்து நின்றது…

“அருமையா வளத்துருக்கக் கமலா மதுவ…” என்றார் அஞ்சுகம்…

கமலத்தின் முகத்தில் விவரிக்க முடியாத பெருமை நிறைந்தது…

பெற்றோர்கள் ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பது…தன் பிள்ளைகள் அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்குகிறார்கள் என்று கேள்வியுறும் போது தானே…

‘நீ உன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறாய்’ என்று கூறும் போது அவர்களுக்குத் தோன்றும் பெருமை…’சமுதாயத்திற்கு நல்ல பிள்ளைகளைக் கொடுத்து விட்டோம்…’என்று அவர்கள் அடையும் திருப்தி… இவற்றால் அவர்களை வளர்க்கும் போது பட்ட கஷ்டங்களைக் கூட அந்த நொடியில் மறந்துவிடுகிறார்கள்… கமலத்திற்கு வார்த்தைகளில் வடிக்க இயலாத அப்படிப்பட்ட இன்பத்தைத்தான் தேடித் தந்திருந்தாள் மதுமதி…

“அமைதியிலாகட்டும்…பெரியவுளை மதிக்கத் தெரியிறதிலாகட்டும்…பாசம் காட்டுறதிலாகட்டும்…பொறுப்போட நடந்துக்கிறதிலாகட்டும்…எல்லாக் குணங்களையும் மதுமதி உசந்து நிக்கிறா…”

என்று அன்று இரவு தான் கண்டதை கமலத்திடம் விவரித்தார் அஞ்சுகம்…

“அவ அப்படித்தான் மதினி… ஒருத்தர் மேல பாசம் வைச்சுட்டா அவங்களுக்காக உயிரையும் கொடுப்பா… ஆனா அதுவே வெறுத்துட்டா அதுக்கப்புறம் உயிர் போற வரைக்கும் அவங்க இருக்கிற திசைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டா…” என்றார் கமலம்.

“அதுல ஒண்ணும் தப்பில்ல கமலம்…உங்கிட்ட இருக்குற ரோசம் அவகிட்டயும் இருக்குமில்ல…ஏன் கமலம்… மதுமதிக்கு அடுத்துக் கல்யாணம் தான…மாப்பிள்ளை ஏதும் பாத்துருக்கீங்களா…” என்றார் அஞ்சுகம்.

“ மாப்பிள்ளைலாம் எதுவும் பாக்கல மதினி… அவதான் மேல படிக்கப் போறேன்னு சொல்றாளே…”என்றார் கமலம்.இதற்கு என்ன சொல்வது என்று யோசித்தார் அஞ்சுகம்.

“இதை என்னத்துக்கு இப்படிச் சுத்தி வளைக்கிற அஞ்சுகம்” என்று கூறிவிட்டு “ஏன் தாயீ கமலா…என் பேத்தி மதுவ என் பேரன் வெற்றிக்குக் கேக்குறேன்… குடுப்பியா” என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.

கமலத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.உணர்ச்சிப் பெருக்கால் கண்கள் கலங்கியது.’தான் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் செல்ல மகளை எங்கோ…யாருக்கோ திருமணம் செய்து கொடுப்பதை விடத் தன் அண்ணன் மகனுக்குக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சிதான்…ஆனால் அது தான் மட்டும் முடிவு செய்யக் கூடிய விசயம் அல்லவே’.

“ஆத்தா நீ சொன்ன விஷயத்துல எனக்குப் பரிபூரணச் சம்மதம் தான்…ஆனா மதுவும் அவ அப்பாவும் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலையே…அவங்க ரெண்டு பேரோட முடிவும் இதுல ரொம்ப முக்கியம் இல்லையா…” என்றவரின் கூற்றும் சரி எனப்பட்டது இருவருக்குமே…

குலசேகரனிடம் விஷயம் கூறப்பட்டு அவர் சுந்தரத்தை தொடர்பு கொண்டு அவரை வரச் செய்தும் விட்டார்.இத்தனை வருடங்களாகத் தேவனூர்ப் பக்கமே வந்திராத சுந்தரம் மதுவைப்பற்றி நேரில் பேச வேண்டும் என்று குலசேகரன் கூறியதுமே உடனடியாகக் கிளம்பி வந்து விட்டார்.

என்னவோ ஏதோவென்று அமர்ந்திருந்தவரிடம் வெற்றிவேல் மது திருமணம் பற்றிப் பேச்சு எடுக்கவும் ‘இல்லங்க இது சரிவராது…’ என்று முதலில் மறுக்கவே நினைத்தவர் தன் முடிவைக் கூறும் முன் தன் மனைவியைப் பார்த்தார்.

அவர் முகத்தில் கெஞ்சுதலுடன் கூடிய எதிர்பார்ப்பு இருந்ததைக் கண்டவர்… மதுமதியைத் திரும்பிப் பார்த்தார்.அவள் வதனத்தில் தோன்றி இருந்த வெட்கப் புன்முறுவல் அவளது விருப்பத்தையும் சம்மதத்தையும் ஒருங்கே அவருக்குத் தெரிவித்தது…

வாழப்போவது தன்னுடைய மகள் அவள் விருப்பத்தை மீறிய எதுவும் பெரிதாக அவருக்குத் தோன்றவில்லை.எனவே தன் முடிவை மாற்றிக் கொண்டு மனைவிக்காகவும் மக்களுக்காகவும் தன் சம்மதத்தைக் கூறினார் இதுவரை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே செய்தறியாத சுந்தரம்…

அதன்பின் வெற்றி மதுமதியின் நிச்சயதார்த்த நாள் குறிக்கப்பட்டு அதற்கான வேலைகள் ‘மளமள’வென்று நடந்தேறின.

அன்று மதுமதி தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது ராஜா அவளை நோக்கி வந்தான்…

“அப்புறம்…எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போற…இனிமே நான் உன்னை அண்ணினுதான் கூப்பிடனுமா…”

“ ஐயோ ராஜா…என்ன இப்படிக் கேக்குற எப்பவும் போல மதுன்னே கூப்பிடு…”

“எல்லாருக்கும் இந்தக் கல்யாணத்தில ரொம்ப ரொம்பச் சந்தோஷம்…அப்பத்தா ரெட்டை கெடா வெட்டுறேன்னு நேர்த்திக் கடனே போட்டுருக்கு…”

“ஆமா ராஜா…ஆனா இதுல எனக்கு விருப்பமில்லை…பெரியவங்க சொல்றாங்கன்னு தான் சம்மதிச்சேன்”

“ எதுல…இந்தக் கல்யாணத்திலயா…”

“ ஐயோ…கல்யாணத்துல இல்ல…கெடா வெட்டுறதுல…இறைவனுக்கு எல்லா ஜீவராசிகளும் குழந்தைகள்தானே… மனுஷங்க சந்தோசத்துக்காக தெய்வத்துக்கு உயிர்ப்பலி கொடுக்குறதுல எனக்கு உடன்பாடில்ல…அதச் சொன்னேன்…”

“ம்ம்ம்” என்றவன் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் சென்று விட்டான்.’இவன் இப்ப எதுக்கு வந்தான்… அவனா வந்தான்…அவனா பேசிட்டு போறான்…ஒருவேளை பகல்லயே போதையில இருக்கானோ…’என்று சிந்தித்தவள்…அவனைப் பற்றிய சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு வெற்றிவேலை நினைத்துப் பார்த்தாள்…

அவனை நினைக்கும்போதே ஏற்காடும் அவள் நினைவில் ஆடி அவளைச் சிவக்க வைத்தது…இப்போதெல்லாம் அவன் அவள் கண்களிலேயே படுவதில்லை…குளம் தேவனூருக்கு மட்டுமே பாத்தியப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் தயாரிப்பதிலும்,மில் வேலைகளிலும் சுற்றிக்கொண்டிருந்தான் வெற்றிவேல்.

‘வீரபாகு…இது சரி இல்லையே…பெரிய காதல் மன்னனைப் போலக் காதலைச் சொல்லி விட்டுக் காணாமல் போயிட்ட பாத்தியா…இரு…இரு…நிச்சயம் மட்டும் நடக்கட்டும்… அப்புறமா உன்னை வச்சிக்கிறேன்…’என்று கறுவினாள் மதுமதி.

ஆனால் நிச்சயதார்த்தத்தன்று யாருமே சற்றும் எதிர்பாராத விதமாக வெற்றிவேல் இந்த நிச்சயதார்த்தத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும் தான் இதை நிறுத்த போவதாகவும் அறிவித்தான்.

—தொடரும்.

இன்று இரண்டு யுடிக்கள் நட்புகளே…படித்துவிட்டுச் சொல்லுங்கப்பா…

error: Content is protected !!