SST — epi 2

SST — epi 2

அத்தியாயம் 2

 

மலேசியாவின் தேசிய உணவாக நாசி லெமாக் கருதப்படுகிறது. தேங்காய் பால் ஊற்றி ஆக்கப்பட்ட சோறும் அதோடு நெத்திலி, அவித்த முட்டை, உறைப்பான சம்பால், பொரித்த வேர்கடலை, வெள்ளரி துண்டு என சேர்ந்து வருவதே நாசி லெமாக் ஆகும். எல்லா இனத்தவரும் இதை விரும்பி உண்ணுவார்கள்.

 

காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினாள் மிரு என்று அழைக்கப்படும் மிருதுளா ஸ்ரீ. அவர்கள் வசிக்கும் ஏரியாவில் திருட்டு பயம் அதிகம். ஸ்டீயரிங் வீலுக்கான லாக்கையும் எடுத்துப் பூட்டி, காரை லாக் செய்து விட்டு தங்களின் ப்ளாட்டை நோக்கி நடந்தாள். இடுப்பு, முதுகெல்லாம் வலி பின்னி எடுத்தது. காலையில் கார் ஓட்ட ஆரம்பித்தவள், இரவு பதினொன்று ஆகிவிட்டது. இப்பொழுதுதான் வீட்டுக்கு வருகிறாள்.

அவர்களின் ப்ளாட் கோலாலம்பூரின் ஒரு ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்தது. அரசாங்கத்தின் நிலத்தில் பலகை வீடு கட்டி வாழ்ந்த இவர்கள் எல்லோரையும் அப்புறப்படுத்த அரசாங்கமே தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போல பதினைந்து மாடி ப்ளாட்டை வரிசையாக கட்டிக் கொடுத்திருந்தது. ஒரு பாத்ரூம் ஒரு ஹால், ஒரு படுக்கை அறை, சின்னதாக கிச்சன் என ரொம்ப சிறிய ப்ளாட் வகை அது. முன் பணம் எதுவும் செலுத்தாமல், மாதம் மாதம் வாடகை மாதிரி அரசாங்கத்துக்கு நூறு வெள்ளி கட்ட வேண்டும். எல்லா இன வசதி குறைந்த மக்களும் இங்கே வசித்தார்கள். நாளொரு சண்டை நடக்கும், வீடு புகுந்து கொள்ளை நடக்கும், கொலை கூட நடந்திருக்கிறது.

இந்த குடியிருப்பு அரசாங்க மருத்துவமனை பக்கத்தில் இருப்பதால், ஆவி நடமாட்டம் இருப்பதாக கூட பேச்சு இருக்கிறது. மிரு இன்னும் ஆவியை நேருக்கு நேராகப் பார்த்து ஹாய் சொன்னது இல்லை. அந்த பாக்கியம் கிடைக்காமல் போகட்டும் என்பதே அவளின் தலையாய வேண்டுதல்.

தம்பி பயலுக்கு ஒரு மேசேஜை தட்டி விட்டாள் மிரு. பத்தாவது மாடியில் இருந்த வீட்டுக்கு பகலில் தனியாக போய் விடுவாள். இரவில் என்றால் தம்பி கணேஷ் இவளுக்காக கீழே வந்து காத்திருப்பான். லிப்ட் வேலை செய்தால் லிப்டில் போவார்கள். இல்லையேல் லொங்கு லொங்கு என மூச்சு வாங்கியபடியே படி ஏறுவார்கள்.

“மிரு” கத்தியபடியே கை ஆட்டினான் கணே.

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், நடையை எட்டிப் போட்டாள். அருகில் போனதும் டிரைவ் த்ரூவில் வாங்கி வந்திருந்த மேக்டோனல்ட்ஸ் பர்கரை அவனிடம் நீட்டினாள்.

“தேங்க்ஸ் மிரு. இன்னிக்கு வீட்டுல ரசம். பகல்ல பல்ல கடிச்சுட்டு நெத்திலி பொரிச்சு சாப்பிட்டுட்டேன். ராத்திரியும் அதையே எப்படி சாப்படறது சொல்லு. அதான் மேசேஜ் போட்டேன் உனக்கு” என புன்னகைத்தான்.

கணேஷிக்கு வயது பதினைந்து ஆகிறது. அரசாங்கப் பள்ளியில் படிக்கிறான். இந்த வருடம் பீடி3 எனப்படும் பொது பரிட்சை வருகிறது.

“அம்மாவால முடிஞ்சத செய்யறாங்க. நாம அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் கணே. நின்னுகிட்டே விதவ் விதமா சமைக்கவா முடியும் அவங்களால. பாவம்ல அவங்க”

அவன் வயதொத்த பிள்ளைகளை விட பொறுப்பானவன் தான் இவன். ஆனால் வயதுக்கேத்த ஆசையும் இருந்தது. முடிந்த அளவு அதை நிறைவேற்றிக் கொடுப்பாள் மிரு.

“நாளைக்கு ஒன்னும் கேட்க மாட்டேன்” என்றபடியே பையில் இருந்த ப்ரைசை மென்றபடி வந்தான்.

“அம்மாவ ஹாஸ்பிட்டல் கூப்டு போனியாடா?”

“இல்லக்கா”

“ஏன்டா? மருந்து முடிஞ்சிருக்குமே! உன்னை நம்பித்தானே அவங்கள விட்டுட்டுப் போறேன்.”

“நான் என்னக்கா செய்ய? லிப்ட் பழுது. அவங்க எப்படி படியில ஏறி இறங்குவாங்க? அதான் லிப்ட் சரியானா போகலாம்னு சொல்லிட்டாங்க”

“எனக்கு போன் போட வேண்டியது தானே?”

“அக்கா பாவம். கார்லயே சவாரிக்கு சுத்திட்டு இருப்பா. சும்மா இதுக்கெல்லாம் அவள தொந்தரவு பண்ணாதேன்னு சொல்லிட்டாங்க.”

பெருமூச்சு ஒன்று வெளியானது இவளுக்கு. மூச்சு வாங்க இருவரும் படி ஏறினார்கள். வழியில் அங்கங்கே உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருந்தார்கள் அந்த ப்ளாட்டின் குடிமகன்கள். இவளைப் பார்த்ததும் ஒரு மாதிரியாக இளித்து வைத்தார்கள்.

இவள் கண்டு கொள்ளவே இல்லை. அக்காவும் தம்பியும் அவர்களைக் கடந்து போகவும்,

“செம்ம வண்டிடா! ஓட்டிப் பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை, ஆனா சிக்க மாட்டுது.” என ஜாடை பேசினார்கள்.

இவளுக்கு கோபம் பொங்கியது. சாக்கடையிடம் மோதினால், நாம் தான் நாற வேண்டும் என பேசாமல் வந்தாள். தம்பியோ கோபமாக திரும்பினான், அவர்களை கேள்வி கேட்க. அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு படி ஏறினாள்.

கொஞ்சம் மேலே போனதும்,

“ரௌத்திரம் பழகனும் கணே! ஆனா இந்த மாதிரி ஆளுங்க கிட்ட இல்ல, நமக்கு சரிக்கு சமமான ஆளுங்க கிட்ட. நீயும் நானும் படிச்சிருக்கோம். அவங்களாம் படிக்காத காட்டுப்பசங்க. நம்ம குடும்ப நிலைமை மத்தவங்கள இப்படித்தான் பேச வைக்கும். ஆனா மனசு உடஞ்சிராமா முன்னேறி இந்த சாக்கடைய விட்டுப் போகனும். நமக்குன்னு சின்னதா ஒரு வீடு வாங்கனும். நீ, நான், அம்மா! நினைச்சுப் பாரு, சந்தோஷமா இருக்குல்ல. அதை நினைச்சு இதெல்லாம் கடக்கப் பழகு” தம்பிக்கு அறிவுரை கூறுவது போல தனக்கும் கூறிக் கொண்டாள் மிரு.

வீட்டை அடைந்ததும் கேட்டைத் திறந்து உள்ளே போனார்கள். இவர்கள் அம்மா ரதிதேவி இன்னும் உறங்காமல் காத்திருந்தார். மகளைப் பார்த்ததும், ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார்.

“வாம்மா மிரு. சாப்பாடு எடுத்து வைக்கறேன். குளிச்சிட்டு வா” என சமையல் அறைக்குப் போனார்.

“நான் போட்டு சாப்பிட மாட்டேனாம்மா? நீங்க போய் தூங்க வேண்டியது தானே?” கடிந்துக் கொண்டாள் அன்னையை.

“நாள் முழுக்கத்தான் தூங்கறேன். வயசு புள்ள களைச்சுப் போய் வர, உனக்கு சாப்பாடு போடாம என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. முட்டைப் பொரிக்கவாடி?”

“அக்காவுக்கு மட்டும் முட்டையா? பகல்ல எனக்கு மட்டும் நெத்திலி குடுத்தீங்க?” சண்டைக்கு வந்தான் கணே.

“ராத்திரி சாப்பாட்டுக்குப் பொரிக்கலாம்னு இருந்தேன். நீதான் உங்கக்காவுக்கு செலவு இழுத்து வச்சிருக்கியே! இன்னும் என்ன முட்டை. ஓடு பர்கரை சாப்பிடுட்டுப் போய் படி” விரட்டினார் மகனை.

அவர்களின் செல்ல சண்டையை கேட்டு சிரித்தப்படியே குளிக்கப் போனாள் மிரு.

ரதிதேவி பெயருக்கு ஏற்றப்படி அழகிதான். நல்ல நிறம் ஆனால் குள்ளமாக குண்டாக இருப்பார். படிப்பும் சரியாக ஏறாமல், ரொட்டி தயாரிக்கும் கம்பேனியில் வேலை செய்து கொண்டிருந்தார். மாப்பிள்ளை மட்டும் அமையவே இல்லை. வீட்டில் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம், பிள்ளை குட்டி என இருக்க இவருக்கு மட்டும் மனம் ஏக்கமாய் ஏங்கும். பெற்றவர்களும் முயன்று தான் பார்த்தார்கள். குள்ளக்கத்திரிக்காய் போல் இருந்தவரை யாரும் மணக்க முன் வரவில்லை.

இப்படியே வாழ்க்கைப் போக, கம்பேனியில் விசா, பெர்மிட் எதுவும் இல்லாமல் திருட்டுத்தனமாக வேலைக்கு வந்த ஒரு ஆப்பிரிக்கனின் கடைக்கண் பார்வை இவர் மேல் விழுந்தது. கருப்பாக இருந்தாலும், நெடு நெடுவென ஆஜானுபாகுவாக இருந்த லூவிஸ் விரித்த வலையில் வீழ்ந்தார் ரதி. அவனின் காதல் வசனம் கண்ணை மறைக்க அவனுடனே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். புறம்போக்கு நிலத்தில் பலகை வீடமைத்து இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.

நீக்ரோகாரனைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள் என சொந்தபந்தங்கள் இவரைத் தூற்றி ஒதுக்கி வைத்தது. லூவிசின் காதலில் மகிழ்ந்திருந்த இவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கலயாணம் முடித்த ஒரு வருடத்திலேயே பிறந்தாள் மிரு. பின் சில வருடங்கள் கழித்து கணேஷ். அம்மா மலேசிய பிரஜை என்பதால் பிள்ளைகள் இருவருக்கும் குடியுரிமைக் கிடைத்தது. தாய் நாடு என்று தாய் அந்த நாட்டில் பிறந்ததால் தானே அழைக்கப்படுகிறது. தங்கள் தந்தை ஆப்பிரிக்கராக இருந்தாலும் தாயின் வழி இந்நாட்டில் சகல உரிமைகளும் பிள்ளைகளுக்குக் கிடைத்தது.

சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். கணேஷ் பிறந்த ஒரு வருடத்தில் பெரிய ரெய்ட் நடந்தது. பெர்மிட் இல்லாதவர்களை எல்லாம் பிடித்து, அவர்கள் தத்தம் நாட்டுக்கு அனுப்பி வைத்தது அரசாங்கம். பிடிபட்டவர்களில் லூவிசும் அடக்கம். எவ்வளவோ முயன்றும் ரதியால் அவரை மீட்க முடியவில்லை. ரதி போல பல இன பெண்கள் இந்தியர்களை, பங்களாதேஷ் நாட்டவர்களை, இந்தோனேசியர்களை இப்படி பல நாட்டில் இருந்து வந்த ஆண்களை மணந்து அவர்கள் திருப்பி அனுப்பப்படவும் தன்னந்தனியாகவோ, வேறு மணம் புரிந்து கொண்டோ வாழ்கிறார்கள் இங்கே.

சுற்றம் ஒதுக்கி விட, கணவனும் இல்லாமல் பிள்ளைகளை தாமே கஷ்டப்பட்டு வளர்த்தார் ரதி. அதில் தன் ஆரோக்கியம் பேண மறந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் இனிப்பு நீர் முற்றி போய் வலது காலை தொடைக்குக் கீழ் வெட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்பொழுதுதான் படித்து முடித்திருந்தாள் மிரு.

அதற்கு பிறகு குடும்ப பாரம் தானகவே அவள் தோள்களில் தொற்றிக் கொண்டது. அம்மாவுக்கு கிடைத்த சொக்சோவை நம்பி(வேலை செய்ய முடியாமல் போனவர்களுக்கு கிடைக்கும் அரசாங்க மானியம். ஏற்கனவே வேலை செய்யும் போது கொஞ்சமாக அரசாங்கம் இந்தப் பணத்தை எல்லோரிடமும் வசூல் செய்யும். அந்த பணம் தான் திரும்ப இவர்களுக்கே வழக்கப்படும்) செகண் ஹேண்டில் கார் வாங்கினாள். முன் பணம் அவளது நண்பன் கொடுத்து உதவினான். அதில் இருந்து வேலைத் தேடிக் கொண்டே கிர் ஓட்டினாள். அதோடு கிடைத்த பார்ட் டைம் வேலைகளையும் செய்வாள். படித்து டிகிரி வைத்திருந்தாலும், அனுபவம் இல்லையென போன இடத்தில் எல்லாம் ரிஜேக்ட் செய்யப் பட்டது தான் தற்பொழுது அவளின் பெரிய வருத்தம்.

குளிர்ந்த நீரில் உடல் நடுங்க குளித்து வந்தவள், ஹாலில் வந்து ஆசுவாசமாக அமர்ந்தாள். அங்கே இருந்த சிறிய மேசையில் உணவு இருந்தது. மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள். பசியில் காந்திய வயிற்றுக்கு ரசம் கூட அமிர்தமாக இறங்கியது.

“சாப்டீங்களாம்மா?”

“அதே காஞ்சு போன ரொட்டி தானே? சாப்பிட்டேன்” வெறுப்பாக சொன்னார் ரதி.

அம்மா அருகில் போனவள், ஒரு வாய் சாதத்தை அவருக்கு ஊட்டி விட்டாள்.

“ஒரு வாய் சோறுதான். சுகர் ஒன்னும் ஏறிடாது” என புன்னகைத்தாள் மிரு. இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமர்ந்திருந்தார் ரதி. இவள் கை கழுவிவிட்டு வந்து, அம்மாவைக் கைத்தாங்கலாக பற்றி ரூமுக்கு அழைத்துப் போனாள்.

“டேய் கணே! போ, வெளிய ஹால்ல உட்கார்ந்து படி. அம்மா தூங்கனும்.” ரூமின் உள்ளே படித்துக் கொண்டிருந்தவனை ஹாலுக்குத் துரத்தி விட்டாள் மிரு.

அம்மாவைப் படுக்க வைத்தவள், அவரின் காலை செக் செய்தாள். காயம் இன்னும் ஆறாமலே இருந்தது. இனிப்பு நீர் அதை ஆற விடவில்லை. மருந்து எடுத்து வந்து வலிக்காமல் பூசி விட்டாள். நெற்றியில் முத்தமிட்டவள்,

“தூங்கும்மா! நாளைக்கு லிப்ட் சரியானா நானே ஹாஸ்பிட்டல் கூட்டிப் போறேன். ட்ரெஸ்சிங் செஞ்சிட்டு மருந்து வாங்கிட்டு வரலாம்” என லைட்டை அடைத்து விட்டு வெளியே வந்தாள். இருப்பது ஒற்றைக் கட்டில். அதில் அம்மா தூங்க, அக்காவும் தம்பியில் ஹாலில் படுத்துக் கொள்வார்கள். இவள் பிரம்பு நாற்காலியில் போர்வை விரித்துப் படுக்க, குட்டி மெத்தைப் போட்டு கணே தரையில் படுத்துக் கொள்வான்.

“அக்கா” மெல்லிய குரலில் அழைத்தான் தம்பி.

“என்னடா?” அக்கடாவென சாய்ந்தவள் குரல் கொடுத்தாள்.

“ரெபரெண்ஸ் புக் இன்னும் வாங்கலக்கா! எல்லாரும் வச்சிருக்காங்க, நான் மட்டும் பக்கத்து பென்ச் பிள்ளையோட ஷேர் பண்ணி படிக்கறேன்”

“ஹ்ம்ம். போன வாரமே சொன்ன. எனக்கு தான் கையைக் கடிக்குதுடா. நெறைய பேர் கிரெப் ஓட்டவும், சவாரியும் சரியா கிடைக்க மாட்டுது.”

“நான் வேணும்னா ஸ்கூல் விட்டு நின்னறவா?”

“ம்ப்ச்! படிக்காம டிமிக்கி குடுக்க உனக்கு ஒரு சாக்கு!” அவன் கவலையைப் போக்க கிண்டலடித்தாள்.

“போக்கா! எல்லா சப்ஜேக்ட்லயும் நீ எடுத்தத விட நான் கூட தானே எடுக்கறேன்” சிணுங்கினான் தம்பி.

“இன்னும் ஒரு வாரம், ஷேர் பண்ணி படிச்சுக்கடா! அக்கா எதாச்சும் செய்யறேன்” என்றவள், அவன் கேட்ட பாட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தாள். அவன் படித்து முடித்து படுக்கவும், கைப்பையை எடுத்து அந்த கார்டை வெளியே எடுத்துப் பார்த்தாள் மிரு.

“குருப்ரசாத் (GP ஐ.டி சொலுஷன்)” என வாய் விட்டுப் படித்தாள்.

“இந்த பொறுக்கி ராஸ்கல் கம்பேனிக்கு வேலைக்குப் போய்தான் ஆகனுமா?” நினைக்கும் போதே ஆத்திரமாக வந்தது.

காரில் ஏறும் மற்ற ஆண்கள் போலில்லாமல் அமைதியாக வந்தவனை ரியர் வியூ கண்ணாடி வழியாக பார்த்தப்படிதான் வந்தாள். ஹேண்ட்சமாக இருந்தான். அவளை நோட்டமிடாமல், போனை மட்டும் பார்த்தப்படி வந்தவனை, மனதில் உயர்த்தி வைத்திருந்தாள் மிரு. இவளாக பேச்சு கொடுத்த போது கூட நிமிர்ந்தும் பாராமல் ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்தவன் மேல் இவளுக்கு இன்னும் மரியாதை வந்தது.

‘இறங்கப்பற பார்த்தான் பாரு ஒரு பார்வை! பொறுக்கி, பொறுக்கி!’ அவன் மேல் கட்டி வைத்த மரியாதை பிம்பம் படக்கென சரிந்து விழுந்தது அவள் மனதில்.

அவளிடம் நன்றாக வாங்கி கட்டியவன், முறைத்தபடி அவள் காரையே பார்த்தவாறு நின்றதை நினைத்து இவளுக்கு திருப்தியாக இருந்தது. சிரித்த முகத்துடன் தூங்கிப் போனாள் மிருதுளா ஸ்ரீ.

(தவிப்பான்)

error: Content is protected !!