SST–EPI 22
SST–EPI 22
அத்தியாயம் 22
மலேசியாவில் கலப்புத் திருமணம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். சீனர்களும் இந்தியர்களும் மணம் புரிந்து பிறக்கும் குழந்தைகளை இங்கே சிண்டியன் என அழைப்பார்கள். இவர்கள் வாழ்வு முறை இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியோ, அல்லது சீன கலாச்சாரத்தைப் பின்பற்றியோ அல்லது இரண்டும் கலந்தோ இருக்கும்.
வாயைப் பிளந்தபடி ஹரி இருப்பதைப் பார்த்து, குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மிருவுக்கோ அந்நிய ஆணின் எதிரே குருவின் கைப்பிடியுள் இருப்பது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஒருங்கே கொடுத்தது. அவன் பிடியில் இருந்து விலக முயல, அவளால் அது முடியவேயில்லை. எவ்வளவுக்கெவ்வளவு இவள் விலக முயன்றாளோ அதே அளவு பிடிவாதத்துடன் இறுக்கிப் பிடித்திருந்தான் குரு.
“டேய், விடுடா!” மெல்லிய குரலில் அதட்டினாள் மிரு.
சுவாரசியத்துடன் அவளைப் பார்த்தவன்,
“டேய்?” என கேட்டான்.
“விடுடான்றேன்!”
“டா?”
“அடேய்! டா, டேய், டோய் எல்லாம் நீதான். இப்ப விடப்போறியா இல்லையா?” குரலில் கோபம் ஏறிக்கொண்டே இருந்தது மிருவுக்கு.
“மரியாதை மிரு, மரியாதை! லவ் பண்ணறேன் சொன்னதும், மரியாதை ரொம்பவே தேயுதே! எப்ப நீ லவ்வ அக்சேப்ட் பண்ணிக்கறியோ, அப்ப போடா குரு, வாடா குரு, தோடா குருன்னு என்ன வேணா சொல்லு, ஒன்னுமே சொல்லாமே கேட்டுக்குவேன். அண்ட்டில் தென் எனக்கு ரெஸ்பேக்ட் குடுக்கனும் மிரு!”
தன்னைக் கண்டு கொள்ளாமல், அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே குசுகுசுவென பேசிக் கொண்டிருப்பது ஹரிக்கு கடுப்பைக் கிளப்பியது.
‘இங்கொருத்தன் நிக்கறான்னு கூட பார்க்காம, ரோமாண்ஸ பாரேன். இப்போ போய் ஆட்டத்தைக் களைச்சி விடறேன்!’
அவர்களை நெருங்கியவன்,
“என்ன ப்ரோ! இந்த வீட்டுக்குள்ள எந்த லீலையும் வச்சிக்கிறது இல்லைன்னு நினைச்சேனே! இப்போ இது என்ன புதுசா?” என கேட்டான்.
குருவின் அணைப்பில் இருந்த மிருவின் உடல் ஆத்திரத்தில் விறைத்தது. குருவை ஒரே தள்ளில் விலக்கியவள், கோபத்துடன் ஹரியை உறுத்து விழித்தாள்.
“சேத்தான் பெத்துல்!(சரியான சைத்தான்டா நீ) என்ன லந்தா? எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, என்னையும் உங்க ப்ரோ கூட்டிட்டு சுத்தன பொண்ணுங்களையும் சேர்த்து வச்சுப் பேசுவ? உன் ப்ரோ மன்மதனுக்கு மருமகன், அவர் பின்னால நாங்க லோலோன்னு சுத்தறோம்! இன்னொரு தடவை இப்படி எதாச்சும் பேசி வச்ச, மூக்கிருக்கும் முகரை இருக்காது! பீ கேர்பூல்” என கத்தினாள்.
ஹரி பேவென முழிக்க, குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எட்டி நின்றவள் தோள் மேல் கைப்போட்டு அருகே இழுத்தவன்,
“ஹரி, மீட் யுவர் அண்ணி மிருதுளாஸ்ரீ! மிரும்மா, அவன விட்டுரு பாவம்! அழுதுருவான்” என சொல்லி வாய் விட்டு சிரித்தான்.
“அண்ணியா????”
“ஆமா, அண்ணிதான்!” அழுத்தமாக சொன்னான் குரு.
“அண்ணியா????” இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை ஹரி.
“அண்ணின்னு தானே சொன்னாரு! என்னமோ பன்னின்னு சொன்ன மாதிரி என்ன ரியாக்சன் இது? ஷாக்க குறை, ஷாக்க குறை!” என்றவள் குருவின் பிடியில் இருந்து விலகி, ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து வந்து ஹரியிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி மடமடவென குடித்தவன் மீண்டும்,
“அண்ணியா?” என்றான்.
“டேய் ஹரி, போதும்டா. கேட்டதையே மறுபடி கேட்காதே! முதல்ல உட்காரு!” என தம்பியை அமர சொன்னவன், டைனிங் டேபிளில் தானும் அமர்ந்தான்.
அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த மிரு, ஒன்றும் பேசாமல் தான் விட்ட சமையலை மீண்டும் தொடர ஆரம்பித்தாள்.
“அம்மா, மேனகா, பேபிம்மா எல்லாம் நலமாடா?”
“ஹ்ம்ம் ஹ்ம்ம்”
“அப்பா கார் சர்வீஸ் விட்டுட்டியா?”
“ஹ்ம்ம்”
“ஹரி!!”
“அம்மா உன்னைக் கொல்லப் போறாங்க ப்ரோ!”
“பரவாயில்ல விடு! அவங்கத்தானே பெத்தாங்க, என்னைக் கொல்லறதுக்கும் அவங்களுக்கு உரிமை இருக்கு” என புன்னகைத்தான் குரு.
“வோர்ல்ட் வார் வெடிக்கும் ப்ரோ!’
“கண்டிப்பா வெடிக்கும். வெடிக்கறப்போ தண்ணிய ஊத்தி அணைச்சுக்கலாம்! யூ டோண்ட் வோரி”
“ஹ்ம்ம்! சரி, எப்போ கல்யாணம்?”
“உங்க அண்ணி என் லவ்வ அக்சேப்ட் பண்ணதும்”
“என்னாது? அப்போ வெறும் ஓன் சைடா?”
அடுப்பு பக்கமாக திரும்பி நின்றிருந்த மிருவுக்கே ஹரியின் அதிர்ச்சி சிரிப்பை வரவைத்தது.
“ஆமா, ஓன் சைடுதான்! நீ கொஞ்சம் அண்ணிகிட்ட பேசேன்! எங்கண்ணா புத்திமான், பக்திமான், சக்திமான் இப்படிலாம் சொல்லி ப்ரோபோசல கொஞ்சம் ரீகன்சிடர் பண்ண சொல்லேன்”
“புத்திமான், சக்திமான் ஒத்துக்கறேன்! அதென்ன பக்திமான்? வீட்டுல ஒரு சாமி படம் கூட இல்ல” என திரும்பி பார்க்காமலே குரல் கொடுத்தாள் மிரு.
“பக்தி சாமி கிட்ட மட்டும் இல்ல, வர போற பொண்டாட்டி கிட்டயும் வைக்கலாம்! அந்த வகைல எனக்கு பக்தி முத்திப் போச்சு மிரு” என சிரித்தான் குரு. திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள் மிரு.
அவர்கள் மீண்டும் தாங்கள் இருவருக்குமான கூட்டுக்குள் புகுந்துக் கொண்டதை ஆச்சரியமாகப் பார்த்தான் ஹரி. சிரித்த முகத்துடன் கலகலவேன பேசும் இந்த குரு அவனுக்குப் புதுமையாகத் தெரிந்தான்.
“ஓன் சைட் லவ்வுன்னு சொல்றீங்க! அப்புறம் எப்படி லீவிங் டூகேதர்?” என ஆச்சரியமாகக் கேட்டான் ஹரி.
சுருக்கமாக தங்கள் கதையை சொன்ன குரு,
“உங்கண்ணிய கண்ணால பாத்தே சில நாள் ஆச்சுடா! அதுக்குத்தான் சீக்கிரம் வந்தேன் இன்னிக்கு. நீ பேசிட்டு இருடா, நான் முகம் கழுவிட்டு வரேன்!” என உள்ளே போனான்.
மிருவும் ஹரியும் மட்டும் தனித்து இருக்க, அங்கே மௌனமே ஆட்சி செய்தது. தன் அண்ணாவின் காதல் மிகு பார்வை மிருவைத் நொடிக்கொரு தடம் தீண்டுவதை பார்த்திருந்த ஹரி, மிருவிடம் சாதாரணமாக பேசிப் பழகலாம் என முடிவெடுத்தான்.
“சாரிங்க! உங்கள பத்தித் தெரியாம அப்படி பேசிட்டேன்” என மன்னிப்பைப் கோரினான்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவளாயிற்றே மிரு, கோபம் தீர அவனை ஏசிய பிறகு எதற்கு முகத்திருப்பல் என சமாதானமானாள்.
“பரவாயில்ல ஹரி சார்! திட்டனதுக்கு நானும் சார்”
“ஹரின்னே சொல்லுங்க”
“நீங்க எப்படியும் என்னை விட பெரியவரா இருப்பீங்க! சோ ஹரி சார்னே சொல்லுறேன்! வந்து..” தயங்கினாள் மிரு.
“என்ன? சொல்லுங்க!” என கேட்டான் ஹரி.
“சாப்படறீங்களா ஹரி சார்? நான் இன்னும் சாப்பிடல, உங்களைப் பார்க்க வச்சு எப்படி சாப்பிடறது!”
“நீங்க சமைச்சது நல்ல வாசனையா இருக்கு! என்ன மெனு?”
“சிம்பிள் மெனுதான். ரசம் வச்சேன். மீன் பொரிச்சேன்! அவ்வளவுதான். உங்களையும் பாஸையும் பார்த்ததும், சாதம் கொஞ்சம் அதிகமா வடிச்சிருக்கேன்! ப்ளிஸ் சாப்பிடுங்க”
“எனக்கும் பசிதான்! போடுங்க சாப்பிடறேன்” என பந்தா பண்ணாமல் சரியென்றான் ஹரி.
ஒரு தட்டில் அவனுக்கு சாதம் வைத்தவள், மீன் துண்டையும் வைத்து ரசம் ஊற்றிக் கொடுத்தாள். கிளாசில் தண்ணீரும் பிடித்து வைத்தாள்.
“நீங்க சாப்பிடல?”
“பாஸ் வரட்டும்! அவருக்கு சாப்பாடு வேணுமா கேட்டுட்டு சாப்பிடறேன்”
“ஓ, சரி” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான்.
முகம் துடைத்தபடியே வந்தான் குரு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் தம்பியைப் பார்த்தவனுக்கு நிறைவாக இருந்தது. தன் உடன் பிறந்தானுக்கு அன்னமிட்டவளை அன்புடன் பார்த்தான் குரு.
“பாஸ் சாப்பிடறீங்களா?” என கேட்டாள் மிரு.
“உன் கையால சாப்பிட ஆசையா இருக்கு. ஆனா ரைஸ் வேணா மிரு”
“ரைஸ் இல்லாம வெறும் ரசம் மட்டும் குடிப்பீங்களா?” என கிண்டலாகக் கேட்டாள் மிரு.
“சாப்பிட்டா சரில! எப்படியோ சாப்பிடுவேன்! நீ முதல்ல உட்காந்து சாப்பிடு” என்றவன் ப்ரீசரில் இருந்த ப்ரோஷன் சப்பாத்தியை வெளியே எடுத்தான். அடுப்பில் ஒரே ஒரு சப்பாத்தியை வைத்து சூடு செய்தவன், அதை தட்டில் இட்டு மிருவின் அருகில் அமர்ந்தான்.
தன் அண்ணனைப் பற்றி தெரியுமாதலால், எதையும் கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டான் ஹரி. மிருவோ வெறும் சப்பாத்தியை சாப்பிடுவானோ என நினைத்தப்படியே பார்த்திருந்தாள். சப்பாத்தியின் மேல் ரசத்தை ஊற்றி அதை குளிப்பாட்டி சாப்பிட்டான் குரு.
மிருவுக்கு முகம் அஷ்டகோணலாக மாறியது!
“என்ன காம்பினேஷன் இது பாஸ்?”
“ரசம் ப்ளஸ் சப்பாத்தி இஸ் ரப்பாத்தி” என சொன்னவன் அதை சுருட்டி வாயில் திணித்துக் கொண்டான்.
“கொஞ்சமா சோறு சாப்பிட்டா என்ன பாஸ்? இப்படி சாப்பிடறவங்கல எல்லாம் கொண்டு போய் மியூசியத்துல வைக்கனும்”
மெல்ல புன்னகைத்தான் குரு.
“நான் இப்படி சாப்பிடறதே உனக்காகத்தான் மிரு”
“வாட்?”
சுவாரசியமாக இருவரையும் கவனித்தான் ஹரி.
“என்னோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு மிரு! பரம்பரையா மூத்தப் புள்ளைக்கு வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காரு! அதனாலத்தான் ஹெல்த்தி லைப்ஸ்டைல் ஃபோலோ பண்ணுறேன்! ஓன்ஸ் இன் அ வைல் தானேன்னு சாப்பிட ஆரம்பிச்சா, அடிக்கடி சாப்பிட சொல்லும் மிரு! விடாது கருப்பு போல, சாப்பாட்டு விஷயத்துல நமக்கு என்னிக்குமே விடாது ஆசை! ஆரம்பத்துல ஆரோக்கியமா இருக்கனும்னு இந்த லைப் ஸ்டைல் அடாப்ட் பண்ணேன்! இப்போ உனக்காக ரொம்ப நாள் இருக்கனும் போல இருக்கு. நம்ம பிள்ளைங்களுக்காக ரொம்ப நாள் வாழனும்னு தோணுது! சோ சாப்பாட்டு விஷயத்துல என்னை கம்பள் பண்ணாத மிரும்மா”
மிரு வாயடைத்துப் போயிருக்க, ஹரியோ அதிர்ந்துப் போனான். இந்த மாதிரி விஷயங்கள் எதையும் குரு அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டதில்லை.
“எங்க கிட்ட இதெல்லாம் சொல்லவே இல்லையேண்ணா! ஏன் இப்படி சாப்பிடறான்னு அம்மா எவ்ளோ கவலைப்படறாங்க!”
“ரீசன் சொன்னா இன்னும் கவலைப் படுவாங்களே ஹரி! அதான் சொல்லல! ஆனா என் கூட மீதி நாட்கள கழிக்கப் போற மிருவுக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரியனுமே! அதான் சொன்னேன். ரீசனா போன மெடிக்கல் செக் அப் வரைக்கும், ஐம் இன் டிப்டாப் கண்டிஷன் மிரு! சோ டோண்ட் வொரி” என அவளைப் பார்த்து கண்ணடித்தான் குரு.
“மணியாச்சு, நான் கிளம்பறேன்! கணே வெய்ட் பண்ணுவான்” என சொல்லியவள், மீதி இருந்த உணவை அவசரமாக அள்ளி முழுங்கினாள். கையை கழுவி விட்டு, வேகமாக தனக்கு ஒதுக்கி இருந்த ரூமுக்குப் போனாள் மிரு. பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவள், கட்டி வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டாள்.
“பாய் பாஸ், பாஸ் ஹரி சார்”
“பாய் மிரும்மா”
“பாய்ங்க” என்றான் ஹரி.
“என்னடா ங்க! அண்ணி சொல்லு” என மிரட்டினான் குரு.
“இல்லல்ல! ங்கவே இருக்கட்டும்” என சொன்னவள், வேகமாக வெளியேறிவிட்டாள்.
அவள் கிளம்பியதும், நீண்ட பெருமூச்சொன்றை விட்டான் குரு.
“ஏண்டா ஹரி! நான் குடும்பஸ்த்தன் ஆகற அறிகுறி அதாச்சும் உன் கண்ணுக்குத் தெரியுதாடா?” என சோகமாக கேட்டான்.
“ரொம்ப கஸ்டம்தான் ப்ரோ”
“அந்த கஸ்டத்துல நீயும் எண்ணெயை ஊத்தப்போறியாடா?” என சூசகமாகக் கேட்டான் குரு.
“ரைட்டு, புரியுது! ஆனந்திக்கு தெரிய வேணாம்னு சொல்லுறீங்க?”
“இப்போதைக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கறேன் ஹரி! மிரு இன்னும் தயங்கறாடா! என் மேல சத்தியமா அவளுக்குக் காதல் இருக்கு! ஆனாலும் முரட்டுத்தனமா மறுக்கறா! முதல்ல அவள ஒத்துக்க வைக்கிறேன்! அப்புறம் நானே அம்மாட்ட பேசறேன்! ஒரே டைம்ல ஆனந்தியையும், என்னோட ஆனந்தத்தையும்(மிரு) என்னால சமாளிக்க முடியாதுடா ஹரி. ஐ ஹோப் யூ அண்டெர்ஸ்டேண்ட்”
“காதல் வந்ததும் நல்லா பேசறீங்க ப்ரோ! எங்கண்ணா குருப்ரசாத்தா இதுன்னு டவுட்டே வருது ப்ரோ”
“ஷீ இஸ் மை ஹெப்பி பில். என் சந்தோசத்துக்கான மாத்திரை அவ! ஐ லவ் ஹேர் சோ மச் ஹரி” கண்கள் மலர, முகம் பளபளக்க சொன்னான் குரு.
‘ஐயோ ப்ரோ! மம்மி அந்த மாத்திரையை இடிக் கல்லுல போட்டு இடிச்சி கரைச்சி குடிச்சிருவாங்களே! சும்மாவே உங்க மேல அவங்களுக்கு பொசெசிப்பான அன்பு. இப்போ அவங்க பார்த்த பொண்ண ரிஜேக்ட் பண்ணிட்டு, கண்ணெல்லாம் காதலோட நின்னீங்கன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலையே! கடவுளே, சேவ் மை ப்ரோ!’
“என் வாயால விஷயம் வெளியாகாது ப்ரோ! ஆனாலும் அவங்க கிட்ட ரொம்ப காலம் மறைக்க முடியாது! உங்களுக்கேத் தெரியும், பாத்து செய்யுங்க! என்னோட முழு சப்போர்ட் உங்களுக்கு இருக்கு. எங்களுக்காக வாழ்ந்த நீங்க, இனிமே உங்க சந்தோசத்துக்காக வாழுங்க ப்ரோ” என உணர்ச்சிப் பூர்வமாக சொன்னான் ஹரி.
அன்புடன் தன் தம்பியை ஆரத் தழுவிக் கொண்டான் குரு.
அங்கே மருந்துவமனைக்கு மார்க்கஸ் வந்திருந்தான் ரதியைப் பார்க்க. அவனைப் பார்த்ததும், உற்சாகமாக சிரித்தாள் மிரு. ரதியிடம் நலம் விசாரித்த மார்க்கஸ், என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லி வலியிறுத்தினான்.
“கணே, நீயும் அம்மாவும் சாப்பிடுங்க! நான் ச்சேகு கூட பேசிட்டு வரேன்” என கிளம்பினாள் மிரு.
மிருவும் மார்க்கஸ்சும் மருத்துவமனை காபிடேரியாவில் அமர்ந்திருந்தனர். டீயுடன் சூச்சூர் உடாங்கும்(இறால் போட்டு செய்யப்படும் ஒரு வகை பஜ்ஜி) வாங்கி வந்திருந்தாள் மிரு.
“சாப்பிடுங்க மார்க்கஸ்”
அவனும் சிரித்த முகத்துடன் பேசியபடியே சாப்பிட்டான். பாதி பேச்சில் மிரு அவனிடம் புத்தகம் ஒன்றை நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தவனுக்கு பெரிதாக புன்னகை வந்தது.
“அப்போவே நினைச்சேன்! உன் பதில் இப்படித்தான் இருக்கும்னு” என சொல்லி புன்னகைத்தான்.
காதலை சொல்லி அவன் புத்தகம் தந்திருக்க நட்பை சொல்லும் ‘காவான் பாயேக் ஃபோரேவெர்’(என்றென்றும் நல்ல நட்புடன்) புத்தகத்தை அவள் திருப்பித் தந்திருந்தாள்.
“என் மேல கோபம் வரலியா மார்க்கஸ்?”
“எதுக்குக் கோபம்? நான் விருப்பத்த சொன்னேன், அத ஏத்துக்கவும் மறுக்கவும் முழு உரிமை உனக்கு இருக்கு மிரு. எப்பவுமே உன் கண்ணுல நட்ப மட்டும்தான் நான் பார்த்தேன். இந்தப் புத்தகத்த குடுத்தாலாச்சும் அந்த நட்பு காதலா மாறுதான்னு பார்க்கலாம்னு தான் குடுத்தேன். ஆனா நட்பு மட்டும்தான் வேணும்னு என் வழியிலயே பதில் சொல்லிட்ட! ஐ லைக் இட் மிரு” என்றவன் புன்னகையை மட்டும் விடவில்லை.
“எனக்கு கில்ட்டியா இருக்கு மார்க்கஸ்”
“ஹேய்! நோ நீட், ஓகே! காதல ஃபோர்ஸ் பண்ணி வாங்க முடியாது. அது தானா வரனும். என் மேல உனக்கு வரலன்ற போது என்ன செய்ய முடியும் சொல்லு? எதிர்மறையான பதில தான் எதிர்ப்பார்த்திருந்தேன். அதுக்கு மனச தயராவும் வச்சிருந்தேன் மிரு. சோ ஐம் ஆல்ரைட். என்னிக்குமே உனக்கு ஒரு நல்ல நண்பனா நான் இருப்பேன்”
‘இவ்வளவு கரிசனையாகவும், அக்கறையாகவும் இருக்கும் இவன் மேல் ஏன் எனக்கு காதல் வரவில்லை?’ கண்கள் லேசாக கலங்குவது போல இருந்தது மிருவுக்கு.
“கண்டிப்பா நான் ஒரு இந்தியனத்தான் கட்டிப்பேன் மிரு. அது என்னவோ உங்க க்லச்சர் மேல அப்படி ஒரு ஈடுபாடு எனக்கு. எங்களுக்கு கண்டிப்பா சிண்டியன் குழந்தைக்க பிறக்கும். நீ தான் அவங்களுக்கு நேம் செலேக்ட் பண்ணனும்”
“இன்னும் கேர்ல்ப்ரேண்டே கிடைக்கல! அதுக்குள்ள நேம் வேணுமா உனக்கு?” என கலகலவென சிரித்தாள் மிரு. அவள் சிரிப்பதையே பாசத்துடன் பார்த்திருந்தான் மார்க்கஸ்.
இரண்டு நாட்கள் இப்படியே போனது. மருந்துகளினாலேயே ரதிக்கு உடல் நிலை நல்ல முன்னேற்றம் காண்பதால் சர்ஜரி தேவையில்லை என சொல்லி விட்டார்கள். எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போய் விடலாம் என சொல்லி இருந்தார் டாக்டர். தினம் மருத்துவமனை நாற்காலியில் அமர்ந்து, கட்டிலில் தலையை மட்டும் வைத்து குனிந்து தூங்குவதால் மிருவுக்கு தலைவலியாக இருந்தது. கண்கள் வேறு சிவந்துப் போய் கிடந்தன.
“இன்னிக்கு நைட் நீ போய் வீட்டுல படுத்துக்கக்கா! நான் இங்க இருக்கேன். பார்க்கவே பேய் மாதிரி இருக்க நீ” என்றான் கணே. மறுத்துப் பேசாமல் குருவின் வீட்டுக்குக் கிளம்பினால் மிரு. கார் ஓட்டும் போதெல்லாம் ஒரே யோசனையாகவே இருந்தாள்.
வீட்டைத் திறந்து உள்ளே வந்த மிருவை ஆச்சரியமாகப் பார்த்தான் குரு.
“என்னாச்சு மிரு? நீ வந்துருக்க! சாப்பிட்டியா?” என கேட்டான்.
“சாப்பிட்டேன் பாஸ்! ரொம்ப டயர்டா இருக்கு, அதான் வந்துட்டேன்” என்றவள் அதற்கு மேல் பேசாமல் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள். குளித்து டீசர்ட், லாங் பேண்டுடன் வெளியே வந்தவள், குருவைத் தேடிப் போனாள். அவன் ஹாலில் அமர்ந்து ஏதோ ஆங்கிலப் படம் பார்த்தப்படி அமர்ந்திருந்தான். அங்கே போனவன், குருவின் அருகில் நெருங்கி அமர்ந்தாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அவள் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான்.
“என்னம்மா?”
“ஒன்னும் இல்ல பாஸ்”
“முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு! மறுபடி காய்ச்சம் வர மாதிரி இருக்கா?” என கேட்டவன் அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் நிமிர்ந்து அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தாள்.
“என்ன மிருது?”
ஒன்றும் இல்லையென தலையை இடம் வலம் ஆட்டியவள்,
“உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் பாஸ்!”
“என் கூடத்தானே இருக்க! இனிமே இருக்கவும் போற! சோ மிஸ் பண்ண வேண்டிய அவசியம் எல்லாம்” எல்லை என அவன் சொல்ல வருவதற்குள் எக்கி அவன் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினாள் மிரு.
ஆச்சரியத்தில் கண்கள் விரிய, தன்னை முத்தமிடுபவளைப் பார்த்திருந்தான் குரு. எப்படி முத்தமிடுவது என கூட தெரியாமல் அவள் சொதப்ப, புன்னகையுடன் அவள் செயலை தனதாக்கிக் கொண்டான் குரு. இப்பொழுது அதிர்வது அவளின் முறையானது.
மிருவின் கன்னத்தில் இரு கைகளைஉம் வைத்திருந்தவன், நாளை உலகம் இல்லையென்பது போல ஆசையாக, ஆனந்தமாக, அன்பாக, அருமையாக, அடக்கி வைத்திருந்த காதலையெல்லாம் காட்டும் விதமாக முத்தமிட்டே மிருவைக் கொன்றான். கண்கள் மெல்ல கலங்க, அவனின் ஆக்ரோஷமான இதழ் ஒற்றலை அப்படியே அனுமதித்தாள் மிரு. எல்லாம் கொஞ்ச நேரம் தான். வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க, குருவை மெல்ல விடுவித்தாள் மிரு.
“யாரோ வந்திருக்காங்க பாஸ்”
“விடு மிரு, மணி அடிச்சுப் பார்த்துட்டுப் போயிருவாங்க”
“இல்ல நான் போய் பார்க்கறேன்!” என்றவள் மீண்டும் அவனை முத்தமிட்டு விட்டே எழுந்துப் போனாள்.
கதவைத் திறந்தவள், அதிர்ச்சியாக நின்றாள்.
உள்ளே நுழைந்த அந்த உருவம், மிருவை ஓங்கி அறைந்திருந்தது.
(தவிப்பார்கள்)