SST — epi 9

SST — epi 9

அத்தியாயம் 9

பல்லின மக்கள் வாழ்வதால் இங்கு பெருநாட்களும் அதிகம். நோன்புப் பெருநாள், தீபாவளி, சீனப்பெருநாள், கிறிஸ்ட்மஸ், விசாக தினம் இப்படி நிறைய கொண்டாட்டங்களும் விடுமுறைகளும் அனுசரிக்கப்படுகின்றன மலேசியாவில்.

 

பேரா மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்தது குருவின் குடும்ப இல்லம். ஈப்போ நகரமே மலை முகடுகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான நகரமாகும். இவர்களின் பங்களா பரம்பரை பணக்காரர்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த ஏரியாவில் இருந்தது. அந்த இடமே பச்சை பசேலென, மாசு இல்லாத காற்றை சுமந்து அழகாக காட்சி அழிக்கும். வீட்டில் இருந்து பார்க்கும் போது தூரத்தில் தெரியும் மலை முகடுகள் வாவேன அழைப்பது போல ரம்மியமாக இருக்கும்.

அன்று ராம் ப்ரசாத்(குருவின் அப்பா) இல்லத்தில் கும்மாளம் களைக்கட்டியது. ஆனந்தியின் செல்ல மகன் குரு ப்ரசாத் குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தான். ஏற்கனவே பிரசாந்தினியும் தனது பிள்ளைகள் இருவருடன் ரேஷ்மியின் பிறந்த நாளைக் கொண்டாட வந்திருந்தாள். தனது மூன்று பிள்ளைகளையும் ஒன்றாக பார்க்கவும் ஆனந்திக்கு ஆனந்தம் தாண்டவமாடியது.

பரந்து விரிந்த தோட்டத்தின் நடுவே இருந்த கஷேபோவில்(மர வேலைப்பாட்டினால் ஆன கூடாரம்) குடும்பம் மொத்தமும் டீ குடிக்க கூடி இருந்தார்கள். நடுவில் இருந்த மேசையில் வேலையாட்கள் டீ ஜக், கப்ஸ், கேக், பலகாரங்கள் எல்லாவற்றையும் செட் செய்திருந்தார்கள். பிள்ளைகளுக்கு மில்லோவும் இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் சுற்றி அமர்ந்திருக்க, பிள்ளைகள் தோட்டத்தை சுற்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். இன்று பகல் ப்ளைட்டில் தான் குரு  நேராக சிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து இறங்கி இருந்தான். வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றிருந்தவன், அம்மாவுக்கு கொடுத்த வாக்கின் படி தம்பி மகள், அவன் பேபிம்மாவின் பிறந்த நாளுக்கு வந்திருந்தான்.

தன் கையாலேயே பிள்ளைகளுக்கு டீயை கப்பில் ஊற்றினார் ஆனந்தி. மற்றவர்கள் தானாகவே எடுத்துக் கொள்ள, பெரியவனுக்கு மட்டும் தன் கையால் கொடுத்தார் அவர். புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் குரு.

“ஹரி, நாம ரெண்டு பேரும் எவ்வளவுதான் அடிச்சுப் பிடிச்சு அன்ப கொட்டுனாலும், அம்மாவுக்கு குரு அண்ணா மேலதான் பாசம் அதிகம்” பெருமூச்செறிந்தாள் பிரசாந்தினி.

“பிரஷா, அதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே! ட்ராகன் மாதிரி நீ அனல் மூச்சு விட்டாலும், ஐயா சாமின்னு அண்ணாவைத் தான் கொஞ்சுவாங்க அம்மா.”

ஆனந்தி மெல்லிய சிரிப்புடன், கேக் தட்டை குருவிடம் நீட்டினார். அதை எடுத்து வாயில் போட்டு மென்றபடியே புன்னகைத்தான் குரு.

“மை டியர் ப்ரதர் அண்ட் சிஸ்டர், என்னை மட்டும் தான் ஆனந்தி பெத்தாங்க. உங்க ரெண்டு பேரையும் குப்பைத் தொட்டியில இருந்து எடுத்துட்டு வந்தாங்க. சோ இந்தப் பொறாமையெல்லாம் மூட்டைக் கட்டி வச்சிட்டு சாப்பிட மட்டும் வாயைத் திறங்க” என சொன்னான் குரு.

சிறு வயதில் இருந்தே இவர்கள் இருவரும் பொறாமையில் பொங்கும் போது, இப்படித்தான் பேசி அழ வைப்பான் குரு. சின்னவர்கள் இருவரும் அவன் மேல் பாய்ந்து பிராண்ட, ஆனந்தி தான் பிரித்தெடுத்து ஹரிக்கும் பிரஷாவுக்கும் நான்கு அடிகளைப் பரிசாகக் கொடுப்பார். மறந்தும் கூட ஓர் அடி பெரியவன் மேல் விழாது. குரு என்றால் அவருக்கு உயிர். பார்க்க அசப்பில் தன் கணவரையே உரித்து வைத்திருப்பவன் மேல் அலாதி பிரியம்.

ஆனந்தி பிள்ளைகளுக்கு எல்லாமே சரி சமமாகத்தான் செய்வார். ஆனால் மூத்தப் பிள்ளைக்கு ஒரு பிடி அதிகம் ஆகிவிடும், பாசமாகட்டும், பலகாரமாகட்டும். குரு சில சமயங்களில் சின்னவர்களை வம்பிழுத்து அழ வைத்தாலும், பல சமயங்களில் அரவணைத்துக் கொள்வான். போட்டி, பொறாமை, மனஸ்தாபம் எல்லாம் தந்தை உயிருடன் இருந்த வரைதான். அதன் பிறகு அண்ணனே அப்பாவானான் இருவருக்கும். தொழிலை வளர்த்தது முதல், தங்கைத் தம்பி இருவருக்கும் திருமணத்தை முடித்தது வரை எதிலும் குறை வைக்கவில்லை அவன்.

“மாப்பிள்ளை ஏன்மா வரல ப்ரஷா?” என கேட்டான் குரு.

“போண்ணா, எப்ப பாரு வேலை, வேலை, வேலைதான் அவருக்கு. நானும் பிள்ளைங்களும் கண்ணுக்குக் கூட தெரியறது இல்ல அவருக்கு. பிஸ்னஸ் ட்ரீப்கு நியூ யோர்க் போயிருக்காரு. இன்னும் ஓன் வீக் ஆகும் வர” சலித்துக் கொண்டாள் தங்கை.

கல்லூரி படிக்கும் போதே காதல் என வந்து நின்றவள் இவள். காலேஜ் சீனியர் மேல் காதல், நீ தான் அம்மாவிடம் பேச வேண்டும் என அழுதழுது முகம் வீங்க நின்ற தங்கை கண் முன் வந்து நின்றாள் குருவுக்கு. என்னதான் தன் பேச்சை ஆனந்தி தட்ட மாட்டார் என்றாலும் அந்தஸ்த்து, தராதரம், தகுதி எல்லாம் பார்ப்பவர் அவர். பரம்பரை பரம்பரையாக கோயிலில் முதல் மரியாதை ப்ரசாத் குடும்பத்துக்குத்தான் கொடுப்பார்கள் அவ்வூரில். அவ்வளவு பாரம்பரியம் மிக்கது அவர் குடும்பம். தங்கைக்காக விசாரித்து, அவர்கள் குடும்பமும் ஓரளவு அந்தஸ்தானவர்கள் என அறிந்தப் பின் தான் தாயிடம் பேசவே ஆரம்பித்தான் குரு. தாயின் சம்மதம் கிடைத்ததும் நிச்சயம் மட்டும் முடித்தார்கள். இருவரும் படித்து முடித்து லைப்பில் செட்டில் ஆன பின்பே திருமணத்தை முடித்து வைத்தான் குரு. ப்ரஷாவின் கணவன் நரேஷ் மனைவி மேல் உயிரையே வைத்திருந்தான். குருவின் மேல் மரியாதை டன் கணக்கில் வைத்திருந்தான்.

“நீ இப்படியே கதை விட்டுட்டு திரி! பேபிம்மா பேர்த்டேக்கு நீ வரதுக்கு இருக்கவும் தானே, உன்னை விட்டுட்டுப் போனாரு. இல்லைனா வால் பிடிச்சுட்டே போயிருப்பியே நீ! பிள்ளைங்க ரெண்டையும் மாமியார் தலையில கட்டிட்டு நல்லா ஊரு சுத்தறடி நீ! குடுத்து வச்சவ” என தங்கையை வம்பிழுத்தான் ஹரி.

“ம்மா, பாரும்மா இவன! நீ பேபிம்மாவ பார்த்துக்காம, கோயில், தொண்டு, க்ளப்னு பிசியா இருக்கியாம். அதனால இவனும் அண்ணியும் ஊர் சுத்த முடியலைன்னு ஜாடை மாடையா சொல்லுறான்” என அம்மாவிடம் ஹரியை மாட்டி வைத்தாள் பிரஷா.

“ஐயோ! அதெல்லாம் இல்லம்மா! இவ கதை கட்டி விடறா! நம்பாதீங்க” அலறினான் ஹரி.

ஆனந்தி அப்படித்தான். பேரப்பிள்ளைகள் என் கொஞ்சுவார், எல்லாம் செய்வார். ஆனால் அவர்கள் தான் உலகம் என இருந்து விடமாட்டார். ஹரியின் மனைவி மேனகா ஒரு பள்ளி ஆசிரியை. மகளை காலையில் ப்ளேஸ்கூலில் விட்டு விட்டு, பள்ளி முடிந்து வரும் போது அழைத்துக் கொண்டு வந்து விடுவாள். பிள்ளைக்கு உடம்பு முடியா விட்டால், இவளோ அல்லது ஹரியோ லீவ் போட்டுவிட்டு பார்த்துக் கொள்வார்கள். ஆனந்தியை இதெற்கெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அப்படி எதிர்ப்பார்ப்பது ஆனந்திக்கும் பிடிக்காது.

மேனகா மாமியார் மெச்சும் மருமகள். வீட்டிலும் எல்லாம் பார்த்து, ஆசிரியர் தொழிலையும் செவ்வனே செய்து வருபவள். ஆனந்தியே தேடி அலைந்து தேர்ந்தெடுத்த மருமகள் மேனகா. முதலில் குருவுக்குத்தான் மேனகாவை மனதில் நினைத்திருந்தார். பெரியவன் அறவே பிடிக்கொடுக்காமல் போகவும், சின்னவனுக்கு கட்டி வைத்து விட்டார். ஹரி தாய் சொல்லைத் தட்டாத மகன்.

அவர்கள் வீட்டு பிரின்சஸ் ரேஷ்மி குடுகுடுவென ஓடி வந்து, குருவின் மடியில் அமர்ந்துக் கொண்டாள். சின்னவளை மெல்ல அணைத்துக் கொண்டான் குரு.

“குருப்பா, கேக்” என கேட்டாள் அவள்.

கையில் இருந்த கேக்கை மெல்ல தன் பேபிம்மாவுக்கு ஊட்டி விட்டான் குரு. சாப்பிட்டு முடித்தவளுக்கு தன் கையாலேயே மில்லோவையும் பருக கொடுத்தான். பின் வாயில் ஒட்டி இருந்த உணவு துணுக்குகளை நேப்கினால் துடைத்து விட்டவன், குட்டியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“மை லிட்டில் ஏஞ்சல்” என கொஞ்சிக் கொண்டான்.

கிச்சனில் இருந்து வந்த மேனகா, ஹரியின் பக்கம் அமர்ந்துக் கொண்டாள். மனைவிக்கு தன் கையாலேயே டீ ஊற்றிக் கொடுத்தான் ஹரி. புன் சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் அவள். பிரஷாவோ தனது இரண்டு வால் பையன்களுக்கும் பிஸ்கட் கொடுத்து, குடிக்கவும் கொடுத்தாள்.

சுற்றி தன் பிள்ளைகள் மேல் பார்வையை ஓட்டிய ஆனந்தி, ரேஷ்மியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் குருவின் மேல் பார்வையை நிலைக்கவிட்டார். முகம் மென்மையாய் மாறி இருக்க, கண்களில் கனிவுடன் தன் தம்பி மகள் பேசிய மழலையைக் கேட்டுக் கொண்டிருந்தான் குரு. அதைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டார் ஆனந்தி.

“குரு”

“சொல்லுங்கம்மா”

“பேபிம்மா வயசுல உனக்கும் பிள்ளை இருந்துருக்கும்டா, நான் சொன்னப்போவே கல்யாணம் செஞ்சிருந்தா! இப்போ தம்பி பிள்ளைய கொஞ்சறவன், உன் சொந்தப் புள்ளைய கொஞ்சிகிட்டு இருந்துருக்கலாம்”

எப்பொழுதும் பிள்ளைகள், கல்யாணம் என பேச்செடுத்தாலே எகிறுபவன், மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினான். உன் பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருப்பாய் என அன்னை சொன்னதுமே, கற்பனையில் குட்டியாக தேன் நிறத்தில், பெரிய கண்களுடன், சுருட்டை சுருட்டையாய் முடிக்கற்றைகள் முகத்தில் விழ அப்பா என தன்னை அழைப்பது போல ஒரு பிம்பம் தோன்றியது அவனுக்கு. தோன்றிய கற்பனையில் அதிர்ச்சியானான் குரு.

‘என்னதிது? மிருதுவோட மினியேச்சர் என்னை அப்பான்னு கூப்பிடறா!’

கற்பனை பிம்பத்தில் பதறி தவித்துப் போனான் குரு. அவன் புன்னகை முகம் சட்டென குழப்பத்தைத் தத்தெடுத்தது. தன் அம்மாவை ஆழ்ந்து நோக்கினான் அவன்.

வீட்டு உடையாக நீள பாவாடையும் ப்ளவுசும் போட்டிருந்தாலும், கழுத்தில் கிடந்த அட்டிகை, மூக்கில் ஒளிர்ந்த வைர மூக்குத்தி, காதில் போட்டிருந்த வைர தோடு, கைகளில் வைரம் வைத்த வளையல்கள், ஒப்பனை செய்திருந்த திருத்தமான முகம், நெற்றியில் குட்டியாக பொட்டு, அதன் மேல் திருநீறு என பாந்தமாக அதோடு பார்ப்பவர்களை கட்டிப் ஓடும் ஆளுமையோடு இருந்தார் ஆனந்தி.

அம்மாவோடு ஒப்பிட்டு மிருவின் பிம்பமும் அகக் கண்ணில் தோன்றியது குருவுக்கு. சிம்பிளான உடைகள், ஏனா தானோவென்ற முக அலங்காரம், பொட்டில்லாத நெற்றி, சிலிப்பி நிற்கும் முடிக்கற்றைகள், கண்ணில் பளீரிடும் குறும்புத்தனம், போடா டேய் என மற்றவர்களை எதிர் கொள்ளும் அலட்சியம், பசித்த வயிற்றுக்கு உணவிடும் காருண்யம், பட்டென பற்றிக் கொள்ளும் கோபம், படபடவென கொட்டும் வார்த்தைகள், பார்ப்பவர்களை மோகக் கடலில் தள்ளும் சரீரம், ஆசைக் குழியில் புதைக்கும் சாரீரம் என அவளின் நிறை குறைகள் வரிசைக் கட்டி நின்றன அவன் முன்னே. அவளை வேலைக்குச் சேர்த்த இந்தக் கொஞ்ச நாட்களிலேயே மிருவைப் பற்றி இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோமா என இவனுக்கே திகிலாக இருந்தது.

தன் முகத்தையேப் பார்த்திருக்கும் அம்மாவிடம் லேசாக புன்னகைத்தான் குரு.

“சீக்கிரம் பண்ணிக்கறேன்மா! பொண்ணு பார்க்க ஆரம்பிங்க” என சொல்லியவன், ரேஷ்மியை இறக்கி விட்டுவிட்டு வீட்டுனுள் நுழைந்துக் கொண்டான். கஸ்டப்பட்டு மிரட்டி, கெஞ்சி, கொஞ்சிதான் சம்மதத்தை வாங்க வேண்டும் என நினைத்திருந்த ஆனந்திக்கு மகனின் வார்த்தைகள் அதிர்ச்சியைக் கொடுத்தன.

“ஏன்டி பிரஷா, என்னடி சொல்லிட்டுப் போறான் உங்கண்ணன்?” என தன் காதுகளை நம்பாமல் மகளைக் கேட்டார் அவர்.

“டும் டும்கு ரெடியாம்! பொண்ணு வேட்டையில நீங்க இறங்கலாம்னு சொல்லுட்டுப் போகுது குரு அண்ணா! இனிமே நீங்க பிசியோ, பிசி. கல்யாணம் பிக்ஸ் ஆச்சுனா, எனக்கு வைர தோடு வேணும், இப்பவே சொல்லிட்டேன்” என சந்தோஷக் கூச்சலிட்டாள் பிரஷா.

“வைர தோடு என்னடி, உனக்கும் என் ரெண்டு மருமகளுங்களுக்கும் சேர்த்து வைர மாலையே வாங்கித் தரேன். என் வயித்துல இப்பத்தான் பாலை வார்த்துருக்கான் உங்கண்ணன். இருடி, கோயிலுல ஒரு அன்னதானத்துக்கு ஏற்பாடு செஞ்சிரலாம்.” என போனை எடுத்து கோயில் நிர்வாகத்துக்கு அழைக்க ஆரம்பித்தார் ஆனந்தி.

ஒரு வாரம் கழித்து, ஈப்போவில் இருந்து குரு கோலாலம்பூர் வந்து சேர்ந்தான். வந்தவன் நேராக ட்ரோலி பேக்கைத் தள்ளிக் கொண்டு ஆபிசுக்கு வந்தான். லிப்டில் ஏறும் போது, மிருவும் உள்ளே வந்தாள். அவள் பயிற்சி முடிந்து, சாப்பிட்டுவிட்டு ஆபிசுக்கு வரும் நேரம் அது. லிப்டினுள் குருவைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“குட் அப்டர்நூன் பாஸ்”

அவன் பதில் சொல்லாமல் தலையை மட்டும் லேசாக ஆட்டினான். அவன் கண்கள் இரண்டும் லிப்டில் இருந்த எண்களின் மேலேயே இருந்தது.

“என்ன பாஸ், மௌனவிரதமா இன்னிக்கு?” அவன் நிலை அறியாமல் கிண்டலடித்தாள் மிரு.

அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

ஒரு வார்த்தைக்குக் கூட பஞ்சமாகும் அளவுக்கு என்னவாயிற்று இவனுக்கு என நன்றாக திரும்பி அவன் முகத்தை ஏறிட்டாள் மிரு. கோபத்தை அடக்கி இருப்பது போல, அமைதியாக அவளைத் திரும்பியும் பாராமல் நின்றிருந்தான் குரு.

‘பார்டா, இஞ்சி தின்ன குரங்கே இன்னும் கொஞ்சம் உறங்கேன்ற மாதிரி மூஞ்ச வச்சிருக்கறத. பரவாயில்ல விடு மிரு, பேசலைன்னா எங்கப்பன் வீட்டு சொத்தா குறைஞ்சிப் போகப் போகுது!’ என தோளைக் குலுக்கிக் கொண்டு இவளும் முன்னே திரும்பிக் கொண்டாள். மூன்றாவது தளத்தில் ஒரு ஆஜானபாகுவான வெள்ளைக்காரன் ஒருவன் ஏறினான். உள்ளே நின்ற மிருவைப் பார்த்ததும் அவன் முகத்தில் வெளிச்சம்.

“ஹாய் ஸ்வீட்டி! ஐம் ஜோனா! வாட்ஸ் யுவர் ஸ்வீட் நேம்?” என சிரித்தப்படி கை நீட்டினான் கைக்குலுக்க. கைக் கொடுக்கலாமா வேண்டாமா என யோசித்தாள் மிரு.

‘இவனுக்கு கைக்குடுக்கலைனா மரியாதை தெரியாதா, மேனர்ஸ் தெரியாதான்னு பாஸ் பாடம் எடுக்க ஆரம்பிச்சுருவாறே! எதுக்கு வம்பு. படக்குன்னு கையக் குடுத்துட்டு படக்குன்னு இழுத்துக்குவோம்’ என முடிவெடுத்தவள் கையை நீட்டினாள். அந்த ஜோனா இவள் கையைப் பற்றுவதற்குள், குரு இறுக பற்றி இருந்தான்.

“ஷீ இஸ் மை கேர்ள்! ஸ்டே அவே!” எனும் எச்சரிக்கையுடன்.

மிருவின் கையை அவன் பிடித்திருந்த பிடி இரும்புப்பிடியாக இருந்தது.

(தவிப்பான்)

error: Content is protected !!