சரி © 13
விருந்தின் மறுநாள் மதிய உணவு இடைவேளை வரை காத்திருந்த சம்யுக்தா, அதற்குமேல் காத்திருக்க முடியாமல் ரிதுவை அலைபேசியில் அழைத்தாள். ஒரு சில வினாடிகளிலேயே எதிர்முனை எடுக்கப்பட்டு ரிது பேசினாள்.
“ஹாய் சம்யு! என்ன டூட்டி நேரத்துல கால் பண்ணிருக்க!”
“தோனுச்சு பண்ணேன். ஏன் பண்ணக் கூடாதா?”, சம்யு.
“ஆக்சுவலா நானே ஒங்கிட்ட பேசனும்னு நெனச்சுட்டு இருந்தேன். சரி, நீயே சொல்லு”, ரிது.
“ஒங்கம்மா நாங்க போனப்பறம் ஏதும் சொன்னாங்களா?”
“எங்கிட்ட ஒன்னும் சொல்லல. ஆனா அவங்க ஆக்டிவிட்டிய வச்சுப் பாத்தா ஒங்கள ஸ்மெல் பண்ணிட்டாங்கன்னு தெரியுது”
“அது எனக்கும் தெரிஞ்சுது. அதான் சித்துவ அப்பவே அலர்ட் பண்ணேன். பட் நோ யூஸ். யுவர் மம்மி இஸ் டூ ஸ்மார்ட்”
“எனக்கும் அப்படித்தான் தோனுது. அடுத்து என்ன பண்றதா இருக்க?”
“எங்க வீட்டுக்கு மேட்டர் லீக்காயிடும்னு நெனக்கிறேன்”
“அல்ரெடி எங்கம்மா ஆன்ட்டிகிட்ட காலைலயே பேசியாச்சு. நீ எதுக்கும் கேர்ஃபுல்லா இரு”
“ஏற்கனவே எங்க வீட்ல கேர்ஃபுல்லாத்தான இருந்தேன். ஆனா ஒங்க வீட்ல ஆன்ட்டி சந்தேகப்படுவாங்கன்னு நெனக்கல ரிது”
“நல்லாச் சொன்ன போ! ஒனக்கு ஒன்னு தெரியுமா? இந்த கெட்டுகதர அரேஞ் பண்ணச் சொன்னது, அதுவும் வீட்டுக்கே வரச் சொல்லுன்னு சொன்னது, எல்லாம் ராஜமாதாதான்”
ரிது கூறியதைக் கேட்டதும், சற்று அதிர்ந்தே போனாள் சம்யுக்தா. பின்பு சுதாரித்துக்கொண்டு, “ஏனிந்த திடீர் ஏற்பாடெல்லாம் ரிது? நீ கூட எங்ககிட்ட சொல்லல!”, என்று கேட்டாள்.
“அன்னையின் ஆணை! சொன்னா அப்பறம் நம்மள, குறிப்பா ஒன்னோட ஆள, மீட் பண்ணவே விட மாட்டேன்னு சொன்னாங்க. ஸோ, நானும் நடக்கறது நடக்கட்டும். எல்லாம் நல்ல விதமா முடிஞ்சா சரின்னு விட்டுட்டேன்”
“சரி, இப்ப என்ன செய்யலாம்? நீயே ஒரு ஐடியா சொல்லு”, என்றாள் சம்யு.
“திடீர்னு ஒன்னும் தோனலையே, சம்யு. நீ ஏதும் ஐடியா பண்ணி வச்சிருக்கியா? சித்துகிட்ட இதப்பத்தி கேட்டியா?”, ரிது.
“சித்துகிட்ட கேக்கல. பட், நானே எனக்குத் தோனுனதச் சொன்னேன். கொஞ்சம் ஒத்துவந்த மாதிரி தெரிஞ்சது”, சம்யு.
“என்ன தோனுச்சு? என்ன சொன்ன? கொஞ்சம் புரியும்படியாச் சொல்லுடி”
“நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும், ஓக்கேவா?”
“ஒனக்கில்லாமலா! சொல்லு சம்யு”
“அது வந்து, நாங்க ரெண்டு பேரும் மொதல்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா, சேஃபா இருக்கும்னு தோனுது”
“என்ன, அந்தக் கால ‘அலைபாயுதே’ ஸ்டைலா”
“ஸ்டைலோ, மைலோ எனக்குத் தோனுனதச் சொன்னேன். அதான் என்னோட சைடுல சேஃபா இருக்கும்னு தோனுது. பட், சித்து ஈசியா சமாளிச்சுக்கலாம்னு சொல்றாரு”
“அப்பறம் ஏன்டீ நீ இந்த விபரீத முடிவுக்கு வர!”, ரிது சற்று தயக்கம் காட்டினாள்.
“சித்து சொல்ற மாதிரி, அவரோட சைடுல சமாளிச்சுக்கலாம்னு வச்சுக்குவோம். பட், எனக்கு, எங்க வீட்ல எப்டி ரியாக்ட் பண்ணுவாங்களோன்னு பயமா இருக்குடீ”
“ஆமாமா, அதுவும் உங்கப்பா… வெரி க்ளவர்!”
“அம்மா மட்டும் என்னவாம்! அம்மாவுக்கு எம்மேல டவுட் வந்திருச்சுன்னு தெரிஞ்சதும், நா சித்துகூட பேசுறதே இல்ல தெரியுமா?”
“அதுனால ஒனக்கு என்ன கொறஞ்சு போச்சு! வாட்ஸ்அப், சேட்டிங்னு நல்லாத்தான வாழ்ந்துகிட்டு இருக்க?”
“என்னடீ சொல்ற? நானா?”, தெரியாததுபோல் கேட்டாள் சம்யு.
“டபாய்க்காத! நேத்து நைட்டுகூட ரொம்ப நேரம் சேட் பண்ணியா இல்லையா?”
“அடிப்பாவி! அதெல்லாம் ஒனக்கு எப்புடி இவ்வளவு சீக்கிரமா தெரியுது?”
“நாங்களும் ஸ்பை வச்சுருக்கோம்ல”
“யார வச்சுருக்க?”
“ஏய்! ரொம்பப் பேசாத”
“இல்லம்மா… யார ஸ்பையா வச்சுருக்கன்னு கேட்டேன்”
“இப்ப நா ஃபோன வக்கிறேன். யாஷிகாட்டயும் இதப் பத்தி கேட்டு, அவளாள இதுல என்ன ஹெல்ப் பண்ண முடியும்னு கேக்கறேன். சரியா? ஓக்கே பை”
“நானும் வச்சுக்கிறேன்! இல்லல்ல, வக்கிறேன். பை”, என்று சம்யு அலைபேசியை அணைத்தாள்.
©©¨©©
இரண்டு நாட்கள் மிகவும் அவசர கதியில் ஓடிவிட்டன. சித்துவும், யோகியும் வேலை பளுவின் காரணமாக இரவுகூட, சரியான நேரத்திற்கு வந்து, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியவில்லை.
இன்றுதான் இருவரும் கிட்டத் தட்ட ஒரே நேரத்திற்கு வந்து, உணவருந்திவிட்டு பேச ஆரம்பித்தனர். ரிது தன்னிடம் கூறியவற்றையெல்லாம் சித்துவிடம் கூறி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்த முயற்சித்தான்.
ஆனால், சித்து மிகவும் சாந்தமாக கூறினான்,“இதெல்லாம் நாங்க ரெண்டு பேருமே முன்னாடியே எதிர்பார்த்ததுதான் மச்சி”
“என்ன சொல்ற மச்சி! அன்னக்கி சம்யு சொன்னத வச்சு நீயா கெஸ் பண்றியா?”, யோகி.
“அது மட்டுமில்ல மச்சி! நாம அவங்க வீட்டுக்குப் போனப்பகூட ரிதுவோட அம்மா, நாங்க எதிர்பார்க்காத நேரங்கள்ல, எங்கள நோட் பண்ணிட்டே இருந்தாங்க!”
“அப்ப கொஞ்சுமாவது கேர்ஃபுல்லா இருந்துருக்கலாமே மச்சி!”
“ஆரம்பத்துல கேர்லெஸ்ஆ இருந்தோம். ஆனா, சம்யு உள்ள போய் சூப்ப எடுத்துட்டு வந்ததுமே, என்ன அலர்ட் பண்ணிட்டா”
“இதெல்லாம் எப்படா நடந்துச்சு?”, யோகிக்கு ஆச்சரியம்.
“அதெல்லாம் ஒனக்குப் புரியாத பாஷை மச்சி! ஆனா, சம்யு அலர்ட் பண்ணதுக்கப்பறம், நாங்க எதேச்சையாக பார்த்தாலும், பேசினாலும் ரிது அம்மா எங்கள வித்தியாசமா பாக்கற மாதிரி எனக்குத் தெரிஞ்சுது மச்சி”
“அட, அனைத்தும் அறிந்தவனே! அடுத்து என்ன செய்யப் போற?”
“சொல்றேன் மச்சி! ஆனா, அதுக்கு ஒங்களோட ஹெல்ப்பெல்லாம் வேணும் மச்சி!”, என்று நட்பின் உதவியை நாடினான் சித்து.
“பாத்துக்கலாம் மச்சி! என்ன செய்யனும் சொல்லு”, யோகி ஆர்வமானான்.
“நா மொதல்ல எங்க வீட்ல சொல்லிடறேன். என்னால எப்படியும் கன்வீனியன்ஸ் பண்ண முடியும்னு நெனக்கிறேன்”
“சரி, சம்யுவையும் அப்படியே அவங்க வீட்ல பேசிறச் சொல்ல வேண்டியதுதான! ஓன்னோட ஆளு வீட்டுக்கு செல்லப் பொண்ணுதான! சொன்னாக் கேட்டுக்க மாட்டாங்களா?”
“செல்லம்றது வேற, இது வேற மச்சி! சம்யுவே கொஞ்சம் பயப்படத்தான்டா செய்யுது”
“ஆனா, இந்த விசயத்தப் பொருத்தமட்ல, எதா இருந்தாலும் ஃபேஸ் பண்ணித்தான்டா ஆகனும்”
“சம்யு தன்னோட சேஃப்ட்டிக்காக ஒரு பிளான் பண்ணிருக்கா மச்சி. கேக்குற மூட்ல இருக்கியா? ஏன்னா, ஒன்னோட ஹெல்ப் இதுல முக்கியம்டா!”, என்று பீடிகையோடு ஆரம்பித்தான் சித்து.
“பாத்துக்கலாம் மச்சி! சொல்லு”, யோகி.
சித்து, சம்யுக்தாவின் பதிவு திருமணம் பற்றி சொல்ல ஆரம்பித்து முடிக்கும் வரை, கவனமாக கேட்டுக்கொண்டிருந்த யோகி, “பெரியோர்கள் சேர்ந்து எடுத்த பெரிய முடிவு! சரி, எப்ப இவ்வளவும் பேசி முடிச்ச?”, என்றான் புன்னகையுடன்.
“அன்னக்கி கெட்டுகதர் அட்டன் பண்ணிட்டு வந்ததுக்கு அப்பறம் இத பத்திதான்டா ரொம்ப நேரமா வாட்ஸ்அப்ல சேட் பண்ணிட்டிருந்தோம்! நாம அவ சைடும் கொஞ்சம் பாக்கணும்ல மச்சி?”
“ஆமா! இனிமே நீ அவ சைடு மட்டுந்தான பாக்கணும்!”, என்றான் யோகி நக்கலாக.
“என்ன மச்சி கலாய்க்கற!”
“ச்சேச்சே, அப்டில்லாம் இல்லடா! சரி, எம்மனசுக்குப் பட்டத நா சொல்லவா?”
“சொல்லு மச்சி”
“எது எப்படியோ! இந்த விசயம் சுபமா நடக்கும்னு எனக்கு பட்சி சொல்லுது!”
“ரொம்ப சந்தோசம்டா!”
இருவரும் ஒரு முடிவுடன், சந்தோசமாக உறங்கினர். கனவுகள் மெய்ப்பட வேண்டும்!
©©¨©©
ரிதுவந்திகாவும், யாஷிகாவும் அலைபேசியில் பேசிவிட்டு, அப்படியே சம்யுக்தாவை கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தனர்.
“என்னம்மா, கல்யாணப் பொண்ணு! சௌக்கியமா? அந்தப் பக்கம் யாஷிகாவும் லைன்ல இருக்கா. கொஞ்சம் பேசுவமா?”, என்று ஆரம்பித்தாள் ரிது.
“ஏய், என்னடீ! கல்யாணப் பொண்ணு, அது இதுன்னுகிட்டு! ஆன்ட்டி பக்கத்துல இருக்கப் போறாங்க, பாத்து”, என்று சன்னமான குரலில் பேசினாள் சம்யுக்தா.
“பாத்துட்டுத்தான் பேசுறேன். நோ மம்மி நௌ”, ரிது.
“யாஷிகா என்ன சொல்றா?”, சம்யு.
“நீயே கேளு, லைன்லதான இருக்கா!”, ரிது.
“ஹாய் சம்யு. டோன்ட் ஒர்ரிமா! வி ஆர் வித் யூ”, என்றாள் யாஷிகா உற்சாகமாக.
“நா சொன்னதெல்லாம் ரிது உங்கிட்ட சொல்லிட்டாளா யாஷிகா?”, சம்யு.
“ஆமா சம்யு. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸான ஆளுங்க வேணுமே! யார் இருக்கா? நாங்க என்ன செய்யனும் சொல்லு”, யாஷிகா.
“நீங்கதான்டீ அந்த ஆளுங்களே! ஆனா எக்ஸ்பீரியன்ஸ இனிமேதான் வளத்துக்கணும், என்னோட மேரேஜ் மூலமா”, சம்யு.
“ஏ சம்யு, நா ஒன்னு சொல்லவா?”, ரிது.
“சொல்லுடீ”, சம்யு.
“சித்துகிட்ட சொல்லுடீ. பெரும்பாலும் பசங்களுக்கு இதுல கொஞ்சமாவது நாலேஜ் இருக்கும்”
“ஏற்கனவே சொல்லிட்டேன்லடீ! ஆனா நம்ம சைடும் கொஞ்சப் பேராவது போகனும்ல?”
“சொல்லிட்டீல்ல! அப்ப ப்ராப்ளம் சால்வுடுன்னு நெனச்சுக்கோ!”, யாஷிகா.
“எப்படி சொல்ற?”, சம்யு.
“அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க சம்யு”, ரிது.
“நீ எதுக்கும் மறுபடியும் சித்துவ கான்டாக்ட் பண்ணி பேசிப் பாரு. ஒனக்கு ஒரு முடிவு கெடச்சிரும்”, யாஷிகா.
“ஓக்கேடீ, இப்பவே கால் பண்றேன்!”, சம்யு.
“வெயிட், வெயிட்! ஒடனே பறக்கற! என்ன கேக்கனும்னு முதல்ல யோசி, அப்பறம் பேசலாம்”, ரிது.
“இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு ரிது? ஏற்கனவே அவங்க பேசிகிட்ட மேட்ருதான?”, யாஷிகா.
“இல்லடீ, அவங்க ஏதும் ஸ்டெப் எடுத்தா, நாம எந்தளவுக்கு சப்போட் பண்ண முடியும், என்ன செய்யனும் அப்படின்றதெல்லாம் யோசிச்சுக்கனும்ல?”, ரிது.
“எல்லாம் அவங்க பாத்துப்பாங்க ரிது. நீ ஒன்னும் கன்ஃபியூஸ் ஆகாத. நாம என்ன செய்யனும்னு அவங்களே சொல்லட்டும்”, யாஷிகா.
“ஆமா, ரிது நாமளே கன்ஃபியூஸ் ஆகிட்டிருக்காம, அவங்கட்டயே கேட்டுக்கலாமே!” என்றாள் சம்யு.
“ஓக்கேடீ! அப்ப நாங்க கட் பண்ணிக்கிறோம். பை”, ரிது.
“பை சம்யு”, யாஷிகா.
“பை, பை”, என்று சம்யுக்தா கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தாள். கையோடு சித்துவின் எண்ணைத் தேடி அழைத்தாள்.
‘நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்ற பெண்ணின் குரலைக் கேட்டு பொறுமையிழந்தாள் சம்யு.
©©¨©©
சித்துவின் அறையில், அவன் அழைக்காமலேயே அவன் தாயார் பாமா அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
“நல்லாருக்கீங்களா தாயே? என்ன திடீர் அழைப்பு?”, சித்து.
“ம், இருக்கேன். எனக்கென்ன! நீ இந்தப் பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சே, இன்னுமா ஒன்னோட புராஜெக்ட் வேலையெல்லாம் முடியாம இருக்கு? ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்டா”, என்று பாமா மகனை அழைத்தார் மதுரைக்கு.
“ப்ராஜெக்ட் கெடக்குது! ஒங்களுக்கென்ன, நா இப்ப அங்க வரணும்! அவ்ளோதான? வந்துட்டாப் போச்சு”, என்றான் சித்து, தாயை உற்சாகப்படுத்துவதற்காக.
“வேலையெல்லாம் எப்படி இருக்கு? நா சொன்னேன்னு கிளம்பிறாத, ஒன்னோட ஹெல்தையும் பாத்துக்கடா. ரொம்ப ஸ்ட்ரஸ் ஏதும் இல்லையே?”, என்று பாமா கரிசனையோடு கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல தாயே! நா நல்லருக்கேன். நீங்க எதைப் பத்தியும், குறிப்பா என்னோட வேலையப் பத்தியெல்லாம் கவலப்படாதீங்க! சரியா? உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? பெரிசு எங்க? வீட்லயா, இல்ல வெளில எங்கயாவது போயிருக்காரா?”, சித்து.
“இல்ல, இல்ல. பக்கத்து ரூம்லதான் இருக்காரு. அவர்தான் ஒங்கிட்டப் பேசவே சொன்னாரு. ஒன்னோட வேலையப் பத்தியும் கேக்கச் சொன்னாரு!”, பாமா.
“என்ன திடீர் அக்கரை?”, சித்து.
“ஏன்டா நம்ம ஊர்ல அந்தமாதிரி வேலையெல்லாம் இல்லையா? நீ எதுக்கு அங்க போய் கஷ்டப்படனும்?”
பேசிக்கொண்டிருக்கும் போதே, வேறொரு அழைப்பு வரும் சங்கேத ஒலி அலைபேசியில் கேட்க, அதன் திரையில் பார்த்தான். ‘சம்யு’ மனதில் படித்துவிட்டு, தாயிடமிருந்து வந்த அழைப்பைத் துண்டிக்கும் முயற்சியில் இறங்கினான்.
“எனை ஈன்ற தாயே இந்த வீக்கென்ட் வரேன். போதுமா!”
“வாடா என் சிங்கக் குட்டி! இப்பத்தான்டா மனசு நெறஞ்சிருக்கு!”
“சரிம்மா, எனக்கு இன்னொரு கால் வருது, நா அப்பறம் பேசறேன்”
“ஓக்கே பப்ளுப் பையா! பை”, என்று உற்சாகத்துடன் கூறி வைத்தார்.
சம்யுக்தாவின் அழைப்பை ஏற்று, “ஹாய் டியர்! ஆச்சர்யம், ஆனால் உண்மைன்ற மாதிரி கால் பண்ற?”, என்று சித்து சுறுசுறுப்பாகக் கேட்டான்.
“ஹாய் சித்து! தேவைனா பேசித்தான ஆகனும்!”, சம்யு.
“சொல்லுங்க மேடம்!”
“ரொம்ப நேரமா ட்ரைப் பண்ணிட்டே இருக்கேன் சித்து, லைன்ல யாரது கிளையன்டா இருந்தாங்க?”
“அய்யோ! இல்ல சம்யு, அது எங்க குலதெய்வம் பாமா”
“யாரு! என்னோட மாமியாரா?”
“செம! சரி, நீ என்ன சொல்ல வந்த?”
“நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திதான்! நீங்க எதுவும் யோசிச்சு வச்சிருக்கீங்களா?”
“ம்! நம்ம யோகி வேலைல எறங்கிட்டான்ல! சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடிச்சிறலாம் சம்யு”
“ஓ, தேங்க் காட்! சரி சித்து, நாங்க அதாவது நா, ரிது, யாஷிகா மூனுபேரும் இதுல எந்தளவுக்கு இன்வால்வ் ஆக வேண்டியிருக்கும்?”
“அதப் பத்தின ஐடியா எனக்கில்ல. பட் ஒரு ரெண்டு பேராவது ஒன்னோட சைடுல இருந்து வரனும் சம்யு”
“அப்ப அவங்க ரெண்டு பேரையும் ரெடியா இருக்கச் சொல்லவா?”
“அவங்கதான்னு இல்ல, யாராவது ரெண்டு பேர் வேணும்னு சொன்னான். மற்ற டீட்டெய்ல் எல்லாம் க்ளியரா கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேனே. அதுவர கொஞ்சம் வெயிட் பண்ணும்மா!”
“ஓக்கே, நா அப்பறம் பேசறேன்!”, என்று மறுமுனையில் வேகமாக அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு, தான் இந்த வார இறுதியில் மதுரையில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான். சம்யு ஆன்லைனில் இல்லை. அதனால், தன் நிறுவன வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.
©©¨©©
அதன்பின் வந்த, வார இறுதியான, சனிக்கிழமையன்று மாலையும் இல்லாமல், நண்பகலும் இல்லாத வேளையில், யோகி தன் வீட்டிற்கு வருவதை சாளரம் வழியாக எதேச்சையாக பார்த்த ரிது, வாசல் வரை வந்து மகிழ்வுடன் வரவேற்றாள்.
“வாங்க யோகி! வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்?”, ரிது.
“ஹாய்”, என்று மட்டும் சொல்லிவிட்டு வண்டியை நிறுத்திய யோகி உள்ளே வந்தான்.
“என்ன அப்பாவப் பாக்க வந்தீங்களா?”, ரிது.
“ஏன், நா அப்பாவ மட்டுந்தான் பாக்க வரணுமா?”, யோகியின் இந்த பதில் ரிதுவுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. சந்தோசமாக உணர்ந்தாள்.
“அப்பா, இப்பவாவது பழைய யோகி மாதிரி பேசுறீங்களே!”, ரிது.
பேசிக்கொண்டே இருவரும் வீட்டின் வரவேற்பறைக்கு வந்திருந்தனர். ஆள் அரவம் மற்றும் வண்டியின் சப்தம் கேட்டு, உள்ளே இருந்த தாய் திலோத்தமையும் வரவேற்பறைக்கு வந்தாள்.
“வாங்க தம்பி!”, என்றாள் அவனை எதிர்பார்க்காதவளாக.
“வணக்கம் மேடம்! சார் இல்லையா?”, யோகி.
“ஒங்கட்ட சொல்லலையா? அவர் மலேசியா போயிருக்காரே!”, என்று கூறிய திலோத்தமை, இருக்கையைக் காண்பித்து “உக்காருங்க தம்பி”, என்று கொடுக்க வேண்டிய மரியாதையையும் கொடுத்தார்.
“எனக்கு ஒன்னும் தெரியாதே மேடம்! நா கொஞ்சம் அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சார்கிட்ட பேச, ஃபோன்ல ரெண்டு நாளா ட்ரைப் பண்ணேன். ஸ்விட்ச் ஆப்னு வந்துச்சு, அதான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துறலாமேன்னு வந்தேன்”, யோகி.
‘அப்ப எங்கிட்ட சொன்னதெல்லாம் பொய்யா கோபால்!’, ரிது உள்ளுக்குள் பழைய சரோஜா தேவியாய் குமுறினாள்.
“அவர் ஃபாரின் போனா இந்த சிம்ம யூஸ் பண்ண மாட்டார். அதான் ஸ்விட்ச் ஆஃப்னு வந்திருக்கும் தம்பி”
“ஓ! எப்ப வருவார் மேடம்?”, யோகி.
“அவர் வர இன்னும் ரெண்டு நாள்கூட ஆகலாம். நீங்க ஊருக்குப் போயிட்டு வரதுன்னா, போயிட்டு வாங்க. நா சொல்லிக்கிறேன்”
“ஒரு சின்ன வேலை விசயமா போறேன் மேடம். போனா கொஞ்சம் முன்னப்பின்ன ஆகலாம். அதான் ப்ராப்பரா பெர்மிஷன் கேட்றலாமேனு வந்தேன்”
“நோ ப்ராப்ளம் தம்பி, டேக் யுவர் ஓன் டைம். நா சொல்லிக்கறேன். ஆமா, என்ன வேலைன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“அது வந்து… எங்க அம்மா வழில, அம்மாவும் மாமாவும் ப்ராப்பர்டி பிரிச்சு ரெஜிஸ்டர் பண்ணிக்கிறாங்க. அது சம்பந்தமா நானும் அங்க இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு நெனக்கிறேன்”
“ஓ, அதானா! நீங்க போய்ட்டு வாங்க, நா சார்கிட்ட சொல்லிக்கிறேன்”
“தேங்க்யூ மேடம்! அது மட்டும் இல்ல, புதுப் ப்ராஜெக்ட் விசயமா கொஞ்சம் சார்கிட்ட சொல்லனும்னு வந்தேன். அத நா ஊர்லருந்து வந்தப்பறம் பேசிக்கிறேன்”, என்று கூறிக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தான்.
“இருங்க தம்பி, வெய்யில்ல வந்திருக்கீங்க! கூலா ஏதாவது கொண்டுவறேன்”, என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் திலோத்தமை.
அதுவரை பேசாமல் அருகில் அமர்ந்திருந்த ரிது பேச ஆரம்பித்தாள்,“அப்ப சார், இப்பவும் கம்பெனி விசயமாத்தான் வந்தீங்களோ? நா கூட என்னப் பாக்கத்தான் வந்தீங்களோன்னு ஒரு நிமிஷன் சந்தோசப் பட்டுட்டேன்”
ஆனால், யோகி அவளை பாராததுபோல், வாய் அதிகம் அசையாமல், மிகவும் சன்னமான குரலில் பேசினான். “முக்கியமா உன்னப் பாத்து, உங்கிட்ட சில வார்த்தைகள் பேசிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் ரிது, போதுமா!”
“ஏன், ஃபோன்லயே பேசிருக்கலாம்ல?”, ரிது.
“பேசலாம், சில விசயங்கள் முகத்துக்கு நேரா பேசிட்டா, அத நீங்க உண்மையாவே லைக் பண்றிங்களா, இல்லையான்னு ஈசிய தெரிஞ்சுக்கலாம். அதான் இவ்ளோ வெய்யில்லயும், இந்த நேரத்துல, நார்மலா உங்கப்பா வீட்ல இருக்க மாட்டார் அப்டீன்னு கால்குலேட் பண்ணி வந்தேன்”
ரிதுவுக்கு அவன் பேசுவது என்னவோ போல் இருந்தது. ஆனால், அவள் அதைப் பற்றி மேற்கொண்டு கேட்பதற்குள் தாய் திலோத்தமை குளிர்ந்த மோருடன் வந்துவிட்டார்.
“எடுத்துக்கோங்க தம்பி. நம்ம பண்ணைல இருந்து வந்த, நாட்டு மாட்டுப் பால்ல ஒற ஊத்துனது, நல்லாருக்கும்! உடம்புக்கும் நல்லது!”, என்று உபசரித்தார்.
“தேங்க்யூ மேடம்!”, என்று கூறியவன், அவசரமாக அதை எடுத்து பருகிவிட்டு, எழுந்து விட்டான்.
“என்ன இவ்ளோ ஃபாஸ்டா! இதெல்லாம் ரசிச்சு ருசிச்சு குடிக்கறது இல்லையா? அப்பத்தான ஒடம்புல ஒட்டும்!”, திலோ.
இதை எதிர்பார்க்கவில்லை யோகி மற்றும் ரிது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிய புன்னகையோடு பார்க்க மட்டும் செய்தான்.
“அப்ப நா கிளம்பட்டா?”, யோகி.
“ரொம்ப அவசரமா? இருந்து ரிதுட்டயும் ரெண்டு வார்த்த பேசிட்டுப் போங்க தம்பி. அவளும் வீட்லயே அடஞ்சு கெடக்கா. பேச்சுத் தொணைக்கு யாரும் இல்ல. ஒங்களமாதிரி யாராவது வந்தாத்தான் உண்டு”, என்று ரிதுவிற்காக பேசுவதுபோல் பேசினார்.
‘எங்கள பேசச் சொல்லிட்டு வாட்ச் பண்றதுக்கா?’, ரிது.
திலோத்தமை என்னதான் கூறினாலும் தான் கிளம்பிவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான் யோகி.
“இல்ல மேடம், நா கிளம்பறேன். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணணும்”, என்று எழுந்துவிட்டான்.
“ஓக்கே தம்பி! அம்மாவ கேட்டோம்னு சொல்லுங்க”, என்று அதையும் ரிதுவுக்கும் சேர்ந்து அவரே பேசிவிட்டு உள்ளே நகன்றார்.
ரிது யோகியின் பின்னாலேயே வாசல் வரை வந்தாள். அந்த இடைவெளியை பயன்படுத்தி ரிதுவும் யோகியுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
“எப்ப ரிட்டர்ன்?”, ரிது.
“தெரியல, ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல செய்ய வேண்டிய வேலை சீக்கிரம் முடிஞ்சா, நானும் சீக்கிரமே வந்துருவேன்”, யோகி.
“ஓ, அந்த ப்ராப்பர்டி விசயமா?”
“அது இல்ல. நம்ம சசியோட மேரேஜ் விசயமா!”, என்று அருகில் யாரும் தங்களை பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, மிகவும் தணிவான குரலில் கூறினான் யோகி.
“சசி?”, ரிது.
“ம்!”, யோகி.
‘ச-சம்யுக்தா, சி-சித்தார்த்’
“ஓ! புரியுது, புரியுது”, ரிது.
“அப்ப சரி, கிளம்பறேன்?”, யோகி.
“நல்லபடியா முடிச்சுட்டு வாங்க”, என்று சகஜமாக கூறிய ரிது, அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு, “இதுல எங்க ரோல் என்னன்னு சொன்னா, நாங்களும் தாயாரா இருப்போம்ல. ரெண்டு பேராவது எங்க சைடுல இருந்து வேணுமாமே!”, என்றாள்.
“ஒங்களுக்கு ஒரு கெஸ்ட் ரோல் கூட இல்ல! வேற ரெண்டு பேர அரேஞ் பண்ணிக்கிறோம்! பை”, என்று கூறி வண்டியை உயிர்ப்பித்தான்.
“ஓக்கே, பை யோகி”, என்று கையைக் காண்பித்தாள் ரிது. ஏதோ கூற வந்துவிட்டு எதையோ கூறிவிட்டுப் போவதுபோல் ரிதுவின் மனதில் குழப்பம் உண்டானது.
விரைவில் குழப்பம் தீரும்! தெளியும்!
©©|©©