SY21a

சரி © 21 (a)

 

ராஜசிம்மன் செங்கல்பட்டு வரும் வழியிலேயே யோகியிடம் பேச்சுக்கொடுத்து, அவன் தன் கம்பெனிக்கு கொடுத்த பயோடேட்டாவில் இல்லாத பல விசயங்களை, இதுவரை அவனிடம் பேசாத பலவற்றைப் பற்றி குறிப்பாக அவன் பரம்பரை, குடும்ப பழக்கவழக்கம் ஆகியவற்றை நன்கு கேட்டு தெரிந்துகொண்டார்.

 

ராஜசிம்மனும் யாஷிகாவின் தந்தை ஜெயபாலனும் தங்கள் மகள்களினால்தான் அறிமுகமாகினர். பின்பு தொழில் சம்பந்தமாகவும் அடிக்கடி சந்தித்து, வீடுவரை வந்து செல்லும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், வீட்டிற்கு ஓரிருமுறைதான் வந்திருக்கிறார்.

 

இருவரும் யாஷிகாவின் இல்லத்திற்கு வருவதற்குள் நன்கு இருட்டிவிட்டது. கார் வாசல் முன் வந்து நின்றதும், யாஷிகாவின் பெற்றோர் வெளியில் வந்து ராஜசிம்மனை இல்லத்தினுள் அழைத்துச் சென்றனர். யோகியை கவனிக்கவில்லை. அவன் காருக்கருகிலேயே நின்றுகொண்டான். கூப்பிடும் வரை உள்ளே வந்துவிட வேண்டாம் என்பது ராஜசிம்மனின் உத்தரவு.

 

உக்காருங்க சார்!, ஜெயபாலன்.

 

என்ன சார் சாப்பிடுறீங்க! காஃபியா, டீயா, இல்ல லைட்டா டிஃபன் எதாவது செய்யவா?, விஜயலெட்சுமி.

 

மொதல்ல சார், சார்னு சொல்றத நிப்பாட்டுங்க! ஏன்னா, அதக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போச்சு! ஜெயபாலன்தான் சார்னு கூப்பிடுறாருன்னா, நீங்களுமா?

 

ஓ, சாரிண்ணே! இனிமே அண்ணேன்னே கூப்பிடுறேன். சரியா?, விஜி.

 

ஓக்கே! ஓக்கே! இப்ப நா சொல்ல வந்தத சொல்லிட்டு, நீங்க ஸ்வீட்டா என்ன குடுத்தாலும் சாப்பிடுறேன்!

 

ராஜசிம்மன் இவ்வாறு கூறியதும், எதிரில் அமர்ந்திருந்த யாஷிகாவின் பெற்றோர் ஒருவரை ஒருவர் என்ன சொல்லப் போகிறார், என்று ஆவலாக பார்த்துக்கொண்டனர்.

 

வந்தவொடனே புதிரா பேசுறீங்க! என்ன சமாச்சாரம்!, ஜெயா.

 

அதானே! ரிதுவுக்கு விசேசம் வச்சிருக்கீங்களா!, விஜி.

 

ரிதுவுக்கு கொஞ்ச நாள் ஆகும்! ஆனா, யாஷிகாவுக்கு நீங்க கொஞ்சம் சீக்கிரம் வச்சா நல்லாருக்கும்!, ராஜு.

 

அதுக்கென்னணே! நாங்களும் பாத்துகிட்டுத்தான் இருக்கோம்! ஒன்னும் சரியா அமையல!, விஜி.

 

ஒங்க சைட்ல எதுவும் வரன் இருக்கா சார்?, ஜெயா.

 

இருக்கு சார்! அதுல என்ன பியூட்டின்னா, அந்த வரன யாஷிகாவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு! அதச் சொல்லத்தான் நானே நேர்ல வந்தேன்!, ராஜு.

 

என்னண்ணே சொல்றீங்க! யாஷிகாவுக்கா?, விஜி.

 

ஆமாம்மா! அத ஒங்கட்டச் சொல்ல சங்கடப்படுதுன்னு நெனக்கிறேன்!, ராஜு.

 

பையன், நம்ம பையன்தானா சார்?, என்று ஜெயா நம்ம என்ற வார்த்தையால் தன் சமூகத்தை நினைவுப்படுத்தினார்.

 

நம்ம பையன்னு சொல்றதவிட, நல்ல பையன்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும்!, ராஜு.

 

அப்ப… எங்காளுங்க இல்லையா!, ஜெயா.

 

இல்ல சார்! ஆனா ரொம்ப நல்லவர், திறமையானவர், வாழ்க்கைல சீக்கிரமா உயரத்துக்கு வந்துருவாரு. அதுக்கு எல்லாத் தகுதியும் இருக்கு! குறிப்பா நம்ம பொண்ண நல்லா பாத்துப்பார், ராஜு யோகிக்கு தரமாக சான்றளித்தார்.

 

ஆனா… நம்ம பக்கம் அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்க மாட்டாங்களே சார், ஜெயா சற்று பின்வாங்கினார்.

 

நம்ம பக்கம்னு நீங்க சொல்றது இந்த சமூகம் தான? இப்பத்தான் இதெல்லாம் சகஜமாயிருச்சில்ல ஜெயா!, ராஜு.

 

ஆனாலும் நாம நாலு எடத்துக்கு போகும்போது நம்ம காதுபடவே நாலு வார்த்த பேசிட்டாங்கன்னா?, இழுத்தார் ஜெயா.

 

நீங்க நெனக்கிற மாதிரி நாலு வார்த்த பேசுற அளவுக்கு இருக்காது. ஏன்னா அவரும் சிவகங்கை அரண்மனை வகையறாத்தான். ஆனா அவங்க தாத்தா காலத்துக்கு அப்பறம் அந்த உறவுமுறையெல்லாம் இப்ப அவ்வளவு நெருக்கம் இல்லை

 

அப்படியா! அப்ப அவங்கப்பா?, விஜி.

 

அவர் இருந்தா நா எதுக்கும்மா இவ்ளோ தூரம் வந்து பேசப் போறேன்! அவர் கவர்மென்ட் வேலைல இருந்து, சீக்கிரமே எறந்துட்டதால அவங்கப்பா சைடும் பழக்கம் கொறஞ்சிடுச்சு, ராஜு.

 

இதைக் கேட்டதும் யாஷிகாவின் தாயாருக்கு யோகியின் மீது பரிதாபம் ஏற்பட்டது. மேற்கொண்டு எதுவும் கேட்க தோன்றவில்லை.

 

அப்ப அவங்கம்மா சைடு…, என்று அறியும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் ஜெயா.

 

அவங்கம்மாவுக்கு சொந்த பந்தமெல்லாம் இருக்கு. அவங்க சப்போட்டோடதான் பிள்ளைய படிக்க வச்சு ஆளாக்கிருக்காங்க. அந்தம்மாக்கு சிவகங்கை பக்கம் கொஞ்சம் சொத்தும் இருக்குபோல

 

சொத்த விடுங்கண்ணே! பையன், அம்மான்னு சின்னதா ஒரு குடும்பம். பிக்கல் பிடுங்கல் இருக்காதுன்னு நெனக்கிறேன், என்றார் விஜி சற்று ஒத்து வந்ததுபோல்.

 

பையனோட குணம் எப்படி சார்? மத்தபடி பழக்கவழக்கம், சகவாசமெல்லாம்…, என்று ஜெயா மீண்டும் ஆரம்பித்தார்.

 

டீ டோட்லர் சார்! சகவாசம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது! கூடவே ஒரு ப்ரண்டு இருக்கார் பாருங்க… ரொம்ப நல்ல பையன் சார். ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, மொதல்ல அவனோட நண்பனப் பத்தி விசாரின்னு சொல்லுவாங்க! அதுமாதிரி அவர வச்சே நீங்க இவர தெரிஞ்சிக்கலாம்

 

அவருமா!, விஜி.

 

ஆமாம்மா! பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை இல்லாம பழகுறது, பேசுறதுன்னு இருக்கிற இந்தக் காலத்துல, எம்பக்கத்துல உக்காந்து பேசுறதுக்கே சங்கோஜப்படுவார்னா பாத்துக்கோங்களேன்!, ராஜு சித்துவுக்கும் சான்றளித்துக்கொண்டிருந்தார்.

 

இந்தக் காலத்துல நல்ல ஃப்ரெண்டு கெடக்கிறதே ரொம்ப கஷ்டம் சார், ஜெயா.

 

யு நோ ஒன்மோர் திங், அவரத்தான் நம்ம சம்யுக்தா கல்யாணம் பண்ணிக்கப் போறா!, மற்றொரு ஆச்சரியத்தை அவர்களுக்குக் கொடுத்தார் ராஜு.

 

ஓ! அப்ப ரெண்டும் சேந்துதான் இந்த நாடகத்த நடத்துதுகளா! சம்யுவுக்கு மேரேஜ்னு சொல்லுச்சு யாஷிகா. ஆனா அதுக்குப் பின்னாடி இவ்ளோ கத இருக்கா?, விஜி சற்று கோபப்பட்டது போல் தெரிந்தது.

 

சம்யுக்தா விசயத்த கேள்விப்பட்டதும், நானும் மொதல்ல கோபப்பட்டேன். அப்பறம் சம்யுவோட வீட்ல, அந்தப் பையனோட ஃபேமிலிய பாத்ததுக்கப்பறம் எனக்கும் கொஞ்சம் மரியாதை வந்துருச்சு, ராஜு.

 

அப்ப நீங்க சொல்றத வச்சுப் பாத்தா ரெண்டு பசங்களுமே நல்லவிதமாத்தான் வளந்துருக்காங்க போல!, விஜி.

 

அதுல எனக்கு கொஞ்சங்கூட டவுட்டே இல்லம்மா!, ராஜு.

 

என்ன சார் இவ்ளோ சொல்றீங்க! ஒங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கில்ல! நம்ம ரிதுவுக்கே நீங்க சொல்ற பையன கட்டி வச்சிரலாம்ல!, என்று ஜெயபாலன் ராஜசிம்மனை பேச்சில் மடக்குவதாக நினைத்துக் கேட்டார்.

 

வாஸ்தவம்தான்! எங்களுக்கும் அவரப் புடிச்சிருக்கு! ஆனா, அவர் விரும்புறது ஒங்க பொண்ணத்தான சார்! இன்ஃபேக்ட், எம்பொண்ண அவருக்கு புடிச்சிருந்தா, இப்ப நாம  பேசிகிட்டே இருந்திருக்க மாட்டோம்! இந்நேரம் எம் பொண்ணு மேரேஜ் இன்விட்டேஷனோட ஒங்கள வந்து பாத்திருப்பேன்!, ராஜு ஓரளவுக்கு விளக்கினார்.

 

என்ன சார் சொல்றீங்க! நீங்க ஏத்துக்கற அளவுக்கு ஒருத்தர்னா, நிச்சயமா எங்களுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல சார், என்று ராஜுவின் வார்த்தைகளால் சற்று மனம் மாறியதுபோல் பேசினார் ஜெயா.

 

ரொம்ப சந்தோசம்! அப்ப ஸ்வீட் சாப்பிடலாமா?, ராஜு.

 

ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே!, விஜி.

 

என்ன?, ராஜு.

 

நம்ம புள்ளைங்க எல்லாம் ஒன்னாத்தான திரியுதுக! அப்ப அதுக எல்லாத்துக்கும் அந்த பையனத் தெரிஞ்சிருக்குமே!

 

அட, ஆமாம்மா! நல்லாவேத் தெரியும்! அதுவும் என்னோட வீட்டுக்கு, கம்பெனி வேலை விசயமா வந்துபோய் இருக்கிறவர்தான். ஏங்கேக்கறீங்க?

 

அப்ப நீங்க சொல்றவர் ஒங்க கம்பெனி ஆளா?, ஜெயா.

 

ஆமா சார். இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட ஒர்க்கிங் பார்ட்னராவே ஆக்கி, ஒரு ஷேர் கொடுக்கலாம்னுகூட நெனச்சிருக்கேன்! அந்தளவுக்கு தெறமைசாலி!, ராஜு.

 

ஒங்களுக்கு பார்ட்னரா ஆக்கிக்கறதவிட, ஒங்க பொண்ணுக்கு லைஃப் பார்ட்னரா செலக்ட் செஞ்சிருந்தா நல்லாருந்திருக்குமே சார், மீண்டும் ரிதுவுடனே பொருத்தி பேசினார் ஜெயா.

 

அதுக்கு நாங்க ரெடியா இருந்தாலும், அவரும் ஒத்துக்கிறனும்ல!, ராஜு.

 

அதுவும் சரிதான். ஆனா, அதெப்படி ஒங்க கம்பெனி ஆளு, நீங்க சொல்றத ஒத்துக்காம இருக்க முடியும்?, ஜெயா.

 

என்னோட கம்பெனி வேலை என்ன கவர்மென்ட் உத்தியோகமா? இது இல்லாட்டி இன்னொரு கம்பெனி! அங்க போய் இதே மாதிரி முன்னேறிட்டுப் போறாரு!, யோகியைப் பற்றிய தன் கருத்தை மறையாது கூறினார் ராஜு.

 

அது சரி. ஆனா, ஒங்க கம்பெனிலயே இருந்துகிட்டு ஒங்க பேச்சையே கேக்க மாட்டாருன்னு சொல்றீங்க! அவருக்கு நீங்க இவ்ளோ சப்போட் பண்ணி பேசறீங்க!, விஜி.

 

ஏன்னா, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!, ராஜு.

 

அதெப்படி?, விஜி

 

ஒன்னுமில்ல, இப்ப… நா ஒங்க வீட்டுக்கு வந்தேன். எதுல வந்தேன்?, ராஜு.

 

கார்ல!, விஜி.

 

அந்தக் கார் தானாவா வந்துச்சு? அதுக்கு முன்னாடி ஒருத்தர் உக்காந்து ஓட்டிகிட்டு வந்தாத்தான வரும்! ஆனா அவ்வளவு முக்கியமானவர, நீங்க கண்டுக்கக் கூட இல்லையே! ஏன்?, ராஜு.

 

ஆமாண்ணே! சாரிண்ணே, இப்பவே கூப்புடுவோம், என்று எழுந்து போகப் போன விஜயலெட்சுமியை தடுத்து நிறுத்தினார் ராஜசிம்மன்.

 

இருங்க முழுசா சொல்றேன், கேட்டுக்கோங்க. இப்ப நீங்க கூப்புட்டா, எனக்குக் கொடுத்த மரியாதைனாலதான கூப்பிடுறதா அர்த்தம்!, ராஜு.

 

ஆமா, அதுலென்ன இருக்கு! முதலாளிக்குப்பறம்தான டிரைவர், வேலைக்காரங்க எல்லாரும், விஜி.

 

ஆனா, உங்க மாப்பிள்ளை அப்படி இல்லை! அவரோட விசயத்துல, அவர் யோசிக்கிறது என்னன்னா… தனக்கு கெடக்கிற ரெஸ்பெக்ட், ஃப்யூச்சர் எல்லாம் தன்னால், தன் உழைப்பால் கெடச்சதா இருக்கணுமே தவிர… என்னை மாதிரி ஆளுங்க, ஏற்கனவே சேத்து வச்சிருக்கும் மரியாதை, உழைப்பில் இருந்து தனக்கும், தன் சந்ததிக்கும் கெடச்சா, அது சரியா இருக்காது, அப்டின்றதே அவர மாதிரி ஆட்களோட கருத்து! இப்பப் புரியுதா நா என்ன சொல்ல வறேன்னு?, ராஜு.

 

புரியுது சார்! சுயமரியாதை, கௌரவம் கட்டாயம் வேணும்! அப்படித்தான சொல்றீங்க!, ஜெயா.

 

ஆமா! அத நா மட்டும் சொல்லல. அப்படிச் சொல்ற, அவர மாதிரி இன்னும் சில பேர் இருக்காங்க. அதுனாலதான் தன் சுயமரியாதைய விட்டுக் கொடுத்து, என்னோட பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல உங்க வருங்கால மாப்பிள்ளை!, ராஜு.

 

ச்சே! இந்தக் காலத்துல இப்படி ஒரு ஆளா! கேரக்டர் நல்லா இருக்கே!, ஜெயா.

 

கேரக்டர் மட்டுமில்ல, ஆளே நல்லாத்தான் இருப்பார்!

 

ஓ, அப்படியா! பாக்க முடியுமா? ஃபோட்டோ ஏதாவது கொண்டு வந்திருக்கீங்களா?, ஜெயா.

 

ஃபோட்டோ எதுக்கு? ஆளையே கூப்பிடுறேன், பாத்துக்கோங்க!, உற்சாகமாகச் சொன்னார் ராஜு.

 

ஜெயபாலனும், விஜயலெட்மியும் ஆச்சரியத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அப்படியென்றால் வெளியில் நிற்பதுதான் ராஜசிம்மன் சொல்லும் ஆளாக இருக்குமோ என்று யோசித்தவாறே இருக்கையைவிட்டு எழுந்தனர். அதற்குள் ராஜசிம்மனும் எழுந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டார். மூவரும் வெளியில் வந்தனர். காரின் அருகில் காத்திருந்த யோகியை கையால் அழைத்தார் ராஜசிம்மன்.

 

அப்பொழுதான் அந்த ஆஜானுபாகுவான உருவத்தை, வசீகரமான முகத்தை நன்கு கவனித்தனர் யாஷிகாவின் பெற்றோர்.

 

பொண்ணு நல்லாத்தான் செலக்ட் செஞ்சிருக்கு!, விஜி மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

 

அனைவரும் வீட்டினுள் சென்று அமர்ந்து, மகிழ்வுடன் பேச ஆரம்பித்தனர். யோகியிடம் முதலில் சற்று இடைவெளிவிட்டே பேசிக்கொண்டிருந்த ஜெயபாலன், யோகியின் பேச்சு மற்றும் நடவடிக்கையால் கவரப்பட்டு, நெருக்கமானார். விஜியலெட்சுமி சிறிது நேரம் பேசிவிட்டு சமையலறைக்குச் சென்று இரவு உணவு தயாரிப்பதில் ஆர்வமானார்.

 

யோகியைப் பற்றிய முழு விபரங்களையும் ஜெயபாலன் நன்கு தெரிந்துகொண்டார். யோகிதாஸ் பிறந்து, வளர்ந்தது எல்லாம் மதுரை என்றவுடன் ஜெயபாலனுக்கு மேலும் பிடிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அவரின் சொந்த ஊரும் மதுரைதான். அதனால், சீக்கிரம் திருமண ஏற்பாடுகளை செய்துவிடலாம் என்று கூறினார்.

 

சிறிய விருந்துபோல் இரவு உணவை முடித்து, ராஜசிம்மன் மற்றும் யோகிதாஸை அனுப்பிவைத்தனர் யாஷிகாவின் பெற்றோர்.

©©|©©

 

மறுநாள் யோகி கஃபேயில், முந்தைய நாள் விட்டுச்சென்ற வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான். சரக்கு கொள்முதல், உற்பத்தி, விற்பனை என எல்லா வேலைகளிலும் அவன் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருந்தன. அதில் மும்முரமாக மூழ்கியிருந்தான்.

 

அந்த நேரத்தில் அவனை அலைபேசி அழைத்தது. அவன் அமர்ந்திருந்த மேசையில், அருகில் இருந்ததை எடுக்காமலேயே அலைபேசித் திரையை எட்டிப் பார்த்தான். அம்மா!

 

யோகி ஏற்கனவே பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான், ஆனால் நேரமின்மையின் காரணமாக தள்ளிப்போய்கொண்டே இருந்தது. இப்பொழுதாவது பேசிவிடுவோம் என்று எடுத்தான்.

 

ஹலோ, என்னம்மா இந்த நேரத்துல?, யோகி.

 

என்னப்பா, ரொம்ப வேலையா இருக்கியா!, மறுமுனையில் சரண்யா தயங்கினார்.

 

ஆமாம்மா! அதுனாலதான் பேச நெனச்சதக் கூட பேசமுடியாம ஒரே பிஸியா இருக்கேன்!, யோகி.

 

பிஸியா! சரி, நா அப்பறம் பேசவா ராசா?

 

சும்மா சொல்லுங்கம்மா! இந்த நேரத்துல ஃபோன் அடிச்சுருக்கீங்க! ஏதும் முக்கியமா?

 

ஆமாடா ராசா! ஆனா, நீ டென்ஷன் ஆகாம கேப்பியா?

 

சொல்லுங்கம்மா, என்ன பீடிகையெல்லாம் பலமா இருக்கு?

 

அது வந்து… நாம பொண்ணுபாக்க எப்பப் போகலாம்பா? இங்க சித்து வீட்ல பேசிருக்கேன். அவங்க வறேன்னு சொல்லிருக்காங்க. அண்ணனும் சரின்னு சொல்லுது. எல்லாருமா சேந்து ஒரு எட்டு போய் பாத்துட்டு, நிச்சயம் பண்ணிறலாமாப்பா!, சரண்யா தயங்கித் தயங்கி கேட்டார்.

 

தானும் அதைப் பற்றிதான் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த யோகி, தாய் ஆரம்பித்தவுடன், மளமளவென முந்தைய இரவு, யாஷிகாவின் வீட்டிற்கு அவனும், அவனது முதலாளியும் சென்று பேசிய விபரங்களைக் கூறினான்.

 

தாய்க்கு மிக்க மகிழ்ச்சி! எல்லா தெய்வங்களுக்கும் நன்றி சொன்னார். யோகியும் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யாஷிகாவை பெண்பார்க்க போக வேண்டும் என்று கூறினான்.

 

இது போதாதா தாய் சரண்யாவிற்கு! ஓரிரு நாளில் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிடுவதாகக் கூறினார். பேச்சோடு பேச்சாக சித்து-சம்யுவின் முகூர்த்தத்திலேயே யோகி-யாஷிகாவின் திருமணமும் நடந்தால் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும் என்று தன் எண்ணத்தையும் யோகியிடம் வெளிப்படுத்தினார். ஆனால், இந்த விசயத்தை முதலில் யாஷிகாவிடம் கேட்டுக்கொள்ளச் சொன்னார் சரண்யா.

 

அன்னை அழைபேசியை வைத்தவுடன் முதல் வேளையாக யோகி யாஷிகாவை அழைத்து பேசினான். நேற்று இரவு அவள் வீட்டில் நடந்தது முதல் தற்போது தன் தாய் சரண்யா பேசியது வரை நிறைய விசயங்கள் யாஷிகாவிடம் பேச வேண்டும் என்பதற்காக நேரில் வருமாறு அவளிடம் கூறினான். அவளும் தன் கம்பெனி அருகில்தான் என்பதால், மதிய உணவு இடைவேளையின் போது வருவதாகக் கூறினாள்.

 

அவள் வருவதற்குள் யோகி தன் அலுவல்களை எல்லாம் மளமளவென முடித்துவிட்டான். யாஷிகாவும் தான் சொன்ன நேரத்திற்கு முன்பே கஃபேக்கு வந்துவிட்டாள். அவள் வந்ததை கண்ணாடி வழியாக பார்த்துவிட்ட யோகி, அனைத்து கோப்புகளையும் பத்திரமாக மூடி வைத்துவிட்டு அவள் வரும் அழகையே ரசித்துக்கொண்டிருந்தான்.

 

ஹலோ… மிஸ்டர் பாகுபலி! என்ன வேலையெல்லாம் கனகச்சிதமா முடிச்சிட்டீங்களா? ரொம்ப சந்தோசமா இருக்கமாதிரி தெரியுதே!, உற்சாகமாக உள்ளே வந்தாள் யாஷிகா.

 

நீ வந்துட்டீல்ல லட்டு பேபி! இனிமே சந்தோசந்தான்!, என்று செல்லப் பெயரில் பேச்சை ஆரம்பித்தான் யோகியும்.

 

லட்டு பேபியா?, என்றவாறே யாஷிகா யோகியின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

ஆமா. நாம லவ்வ ஷேர் பண்ணி, மொதல்ல ரெண்டு பேரும் சேந்து சாப்பிட்ட ஸ்வீட் லட்டுதான! அதுலருந்து லட்டப் பாத்தாலே ஒன்னோட நெனப்புதான் வருது என் லட்டு பேபி, யோகி.

 

ஓ! இந்தப் பேருக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா! இருக்கட்டும், இருக்கட்டும் இதுவும் நல்லாத்தான் இருக்கு! சரி, நம்ம விசயத்துக்கு வாங்க. எங்க வீட்ல எப்படி சமாளிச்சீங்க?, யாஷிகா.

 

நா எங்க சமாளிச்சேன். எல்லாம் சார்தான் பேசினாரு. ஆனா என்ன பேசி சம்மதிக்க வச்சாருன்னே தெரியல! நா ஒங்க வீட்டுக்கு வெளிலயே நின்னுட்டேன். ஒனக்கு கால் பண்ணலாமான்னுகூட நெனச்சேன். ஆனா அந்த நேரத்துல உள்ளருந்து கூப்பிட்டா ஒடனே போகணுமே! அதுனால பேசாம அமைதிய வெயிட் பண்ணிட்டிருந்தேன்

 

ம், அப்பறம்!, யாஷிகா.

 

ரொம்ப நேரம் ஆச்சு. அப்பறம் ஒங்க அம்மா, அப்பா, சார் மூனுபேரும் வெளிய வந்து என்னயக் கூப்பிட்டாங்க. மொதல்ல பேசும்போது கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. நான் மதுரைன்னு சொன்னதுக்கப்பறம் ஒங்கப்பா கொஞ்சம் ஃப்ரீயா பேச ஆரம்பிச்சாரு. அதப் பத்தில்லாம் நீ எங்கிட்ட சொல்லவே இல்லையே யா?, யாஷிகா யாவாக சுருக்கிக் கேட்டான் யோகி.

 

எங்க, நம்மளப் பத்தி பேசுறதுக்கே நேரமில்ல! ஆனா, நீங்க மதுரைன்னு எனக்கு தெரிஞ்சதுக்கப்பறம் ஒங்க மேல எனக்கு கிரேஸ் ஏற்பட்டதுக்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம், யாஷிகா.

 

நாங்க படித்தொர ஏரியா. அவர் ஆண்டாள்புரம். கொஞ்சம் தூரந்தான். அப்பாவோட சொந்தமெல்லாம் அங்கதானாம்ல?, யோகி.

 

ஆமா, அதவுடுங்க பாகு! அடுத்து என்ன நடந்துச்சு, என்ன நடக்கப் போகுது?, யாஷிகா அவசரப்பட்டாள்.

 

அவ்வளவு அவசரமா லட்டு!

 

ஆமா, நீங்க ப்ரசன்ட்டுக்கு வாங்க ப்ளீஸ், யாஷிகா தன் விசயத்தை கேட்பதிலேயே ஆர்வம் காட்டினாள்.

 

இன்ட்ரோ எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சி, நைட் டின்னரே முடிச்சாச்சு யா!

 

நீங்க டின்னர முடிச்சீங்க. எனக்கு எங்கம்மா நேர்ல இருந்தேன்னா டின் கட்டிருப்பாங்க பாகு!, யாஷிகா.

 

அப்படியா?

 

ம்… எங்கம்மா நேத்து நைட்டு கால் பண்ணி ஒரே திட்டு! ஸ்பீக்கர்ல போட்டு பக்கத்துல வச்சுகிட்டு படுத்துட்டேன். ரொம்ப நேரம் பேசுனாங்க. நா உம் கொட்டிட்டே தூங்கிட்டேன். அதுக்கப்பறம் இன்னும் பேசல, என்று யாஷிகா தனக்கு நேற்றிரவு நடந்ததைப் பற்றிக் கூறினாள்.

 

அவள் தனக்கு ஏற்பட்டத் துன்பத்தையும் விளையாட்டாக கையாண்டதை நினைத்து சிறிதாக புன்னகைத்தான் யோகி.

 

சிரிக்காதீங்க, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?, சிணுங்கினாள் யாஷிகா.

 

சரி, சரி. இப்ப, இனிமே நடக்கப் போறதுலதான் நாம இன்னும் கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணணும். ஓக்கேயா லட்டு!, யோகி.

 

அதுக்காக ரொம்ப சீரியசா மூஞ்ச வச்சுக்காதீங்க. பயமா இருக்கு!, அழுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் யாஷிகா.

 

நீ அழுதுறாத! பட் பீ சீரியஸ். ஓக்கே?

 

ஓக்கே! என்ன சொல்லுங்க

 

இப்ப நம்ம கல்யாணம் நடக்கப் போகுது. சித்து, சம்யு கல்யாணமும் நடக்கப் போகுது, யோகி.

 

இதுலென்ன சீரியஸ்!, யாஷிகா.

 

அது ரெண்டுமே ஒரே நாள்ல, ஒரே மேடையில நடக்கலாமே?, சட்டென யோகி கேட்டதும் சற்று குழம்பிய யாஷிகாவின் முகம் பின்பு மகிழ்சியில் பிரகாசித்தது.

 

ஓ மை காட்! இந்த மாதிரியெல்லாம் நா யோசிக்கலயே பாகு! நானும் நீங்களும், சித்துவும் சம்யுவும்! நெனச்சுப் பாக்கவே சூப்பர்! இது நடக்குமா?, யாஷிகா.

 

நடக்கணும்! அதுக்குத்தான் மொதல்ல நீ ஒங்க வீட்ல பேசி சரிபண்ணி வைக்கணும். அப்பறம் நாங்க நிச்சயம் பண்ண வரும்போது கன்ஃபார்ம் பண்ணிக்குவோம். ஓக்கேயா?, யோசி.

 

அது எப்ப பாகு?, யாஷிகா.

 

காலைல அம்மா பேசினாங்க. அவங்கல்லாம் ரெடியாம் ஒங்க வீட்ல பெர்மிஷன் கேக்கணும். மொதல்ல ஒனக்கு ஓக்கேயான்னு அம்மா கேக்கச் சொன்னாங்க

 

எனக்கு ஓக்கேதான். ஆனா வீட்லதான் எப்படி பேசறதுன்னே தெரியல, யாஷிகா.

 

இப்போதைக்கு அம்மா காதுல போட்டு வைய்யு யா. அப்பறம் நாங்க வந்து பேசிக்கறோம், என்று யோகி யாஷிகாவை கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்தான்.

 

வெகுவாக யோசித்தாள் யாஷிகா.

சம்யு வீட்ல என்ன சொன்னாங்க?, யாஷிகா.

 

அதெல்லாம் இனிமேதான் கேக்கணும். அவுங்க சைடு அந்த தேதி ஓக்கே. ஆனா ஒங்களுக்கும் ஒத்து வருதான்னு பாக்கணும்ல. அதான் ஒங்கிட்ட ஃபர்ஸ்ட் கேக்கச் சொன்னாங்க எங்கம்மா, யோகி.

 

ஓ! இது ஒங்கம்மாவோட ஐடியாதானா!

 

அப்படித்தான்னு நெனக்கிறேன்

 

எனக்கு ஓக்கே. ரொம்ப ஹாப்பியாக்கூட இருக்கு பாகு. ஆனா எல்லாரும் ஒத்து வரணுமே! நா சம்யுட்ட கேக்குறேன். அவளும் இத லைக் பண்ணுவான்னுதான் நெனக்கிறேன், யாஷிகா.

 

பேசிக்கொண்டே சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள் பதறினாள், ஆய்யோ, நேரமாயிருச்சே பாகு! நா கிளம்பணுமே! ஏன்னா வழியில ஏடிஎம் போய் கொஞ்சம் பணம் எடுக்கணும்

 

ஓ, நேரமாயிருச்சா! சரி கிளம்பு. அப்ப மறுபடியும் எப்ப பேசலாம்? நீ பேசிட்டு சொல்றியா?, யோகி.

 

ம், ம்! கட்டாயம் மொதல் வேலை சம்யுட்ட பேசறது, அப்பறம், இன்னக்கி கிளம்பி வீட்டுக்குப் போறேன். என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே இருக்கப்போறேன். அப்பறம் நம்ம தாட்ட லைட் லைட்டா அவுங்களுக்குள்ள வெதச்சுருவோம்! ஓக்கேயா?, என்று பேசிக்கொண்டே எழுந்து வெளியில் வந்தாள் யாஷிகா.

 

அவளை பின்தொடர்ந்த யோகி, லைட்டா என்ன, ஸ்ட்ராங்காவே வெதச்சுரு யா. நானும் சித்துகிட்ட பேசணும். அவுங்க வீட்ல என்ன சொல்வாங்கன்னு தெரியல. அநேகமா அம்மா இன்னேரம் அவுங்கட்ட பேசிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லாட்டி இவ்ளோ ஸ்பீடா இருக்க மாட்டாங்க!, யோகி.

 

அதற்குள் கஃபேயைவிட்டு வெளியில் வந்த யாஷிகா, நானும் அப்படித்தான் நெனக்கிறேன். நீங்களும் சீக்கிரம் சித்துகிட்ட பேசுங்க. ஓக்கே, நா கிளம்பறேன். பை, என்று கூறி தன் வண்டியை உயிர்ப்பித்துக் கிளம்பினாள்.

 

அவள் சென்றவுடன்தான் யோகிக்கு பசி என்ற உணர்வு தோன்றியது. முதலில் பசியை போக்கிவிட்டுதான் மறு வேலை என்று எண்ணியவனாய் உள்ளே சென்றான்.

©©|©©