SY21b

சரி © 21 (b)

சம்யுக்தா தன் வீட்டிற்கு முதன்முறையாக வருவதால், சித்தார்த் தன் இல்லத்தில் ஆங்காங்கே மெருகூட்டிக்கொண்டிருந்தான். குறிப்பாக தன் அறையினை வெகு சிரத்தையோடு, அதுவரை இல்லாத அளவிற்கு அலங்கரித்துக்கொண்டிருந்தான்.

 

டேய்! என்னடா ரூமுக்குள்ளயே தவங்கெடக்குற! என்னடா ஆச்சு ஒனக்கு!, தாய் பாமாவின் குரல் எதிர்பாராமல் கேட்டதால் சற்று அதிர்ந்து திரும்பினான் சித்து.

 

அட! என்னம்மா! நானே எத எங்க வக்கிறது, எங்க எத வச்சா நல்லாருக்கும்னு மண்டயப் போட்டு உருட்டிகிட்டு இருக்கேன்!, சித்து.

 

ம்! எதுக்கு இம்புட்டு வேலையும்!, பாமா.

 

இத்தன நாளா பேச்சுலரா இருந்த நா, இனிமே ஃபேமிலி மேனா மாறனும்ல! அதுக்கேத்த மாதிரித்தான என்னோட ரூமும் இருக்கணும்! அப்பத்தான வந்து பாக்கறவங்க என்ன பொறுப்பானவன்னு முத்திரை குத்துவாங்க! அதுக்குத்தான் தாயே!, சித்து.

 

ஒன்னோட பொறுப்பு, பருப்பெல்லாம் ஏற்கனவே வெந்திருச்சு, வந்து சாப்பிட வா! நேரமாகுது! இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துருவாக!, பாமா.

 

சம்யுக்தாவின் குடும்பம் காரிலேயே வந்ததால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட வெகு சீக்கிரமே வந்துவிட்டனர். வந்தவர்கள், சம்பிரதயமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்பு மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க மாடியில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட விருந்தினர் அறைக்குச் சென்றுவிட்டனர்.

 

ஆனால், சம்யுக்தா மட்டும் சித்துவின் அறைக்கு வந்துவிட்டாள். ஆங்காங்கே, அவன் அறைகுறையாக விட்டுவைத்திருந்த அலங்காரங்களை எல்லாம் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

ரொம்ப வேலையெல்லாம் பாத்த மாதிரி தெரியுது!, சம்யு.

 

தெரியுதா! தெரிஞ்சாச் சரி!, சித்து.

 

சித்து விட்டுவைத்த வேலைகளை, சம்யு எடுத்து தொடர ஆரம்பித்தாள். சித்து வேண்டாம் என்று கூறியும், சம்யு பிரயாண களைப்பு தீர ஓய்வெடுக்காமல், சித்துவின் அறையை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கு படுத்தினாள். சித்துவும் சேர்ந்துகொண்டான்.

 

இருவரும் ஒருவழியாக முடித்தவுடன், மேலிருந்து சம்யுவின் வீட்டினர் அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு, இறங்கி வந்துவிட்டனர். வந்தவர்கள் நேராக சித்துவின் அறைக்கே வந்தனர்.

 

வந்தவர்கள், வியந்தனர். சித்து அறையை மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பதாக பாராட்டினர். சித்து, சம்யுவைப் பார்த்து சிரித்துக்கொண்டான். சம்யுதான் இந்த பொலிவிற்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரியாது.

 

அப்போது அங்கே வந்த சித்துவின் தாய் பாமா, சூப்பர்டா! காலைல இருந்து நீ பண்ண முடியாத வேலைய கொஞ்ச நேரத்துல, எம் மருமக முடிச்சிட்டா பாத்தியா!, என்று உண்மையை போட்டு உடைத்தார்.

 

என்னம்மா… இப்ப்டி பண்றீங்களேம்மா!, என்றான் சித்து.

 

மெல்லிய புன்னகையுடன் மெதுவாக அறையிலிருந்து அனைவரும் வெளியேறி, வரவேற்பறையில் அழகாக போடப்பட்டிருந்த ஷோஃபா மற்றும் நாற்காலிகளில் அமர்ந்தனர். மார்தாண்டமும் அவர்களுடன் வந்து அமர்ந்து, திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.

 

சித்துவும், சம்யுவும் வாழ்வதற்கு நுங்கம்பாக்கத்திலேயே ஒரு ஃப்ளாட் வாங்க ஏற்பாடு செய்துவிட்டதாக, சம்யுவின் தந்தை தாமோதரன் தெரிவித்தார்.

 

ஒரே முகூர்த்தத்தில் சித்து-சம்யு மற்றும் யோகி-யாஷிகா ஆகியோரின் திருமணங்களும் நடத்துவது பற்றி பேசப்பட்டது. அப்போது சம்யுவின் வீட்டினரும் நாளும், நேரமும் ஒத்து வந்தால் முடித்துவிடலாம் என முடிவுக்கு வந்தனர்.

 

அதுவரை சித்துவிற்கே தெரியாத, ஒரே மேடையில் இரு திருமணம்! ஆச்சரியமாகத்தான் இருந்தது சித்து-சம்யு ஜோடிக்கு! நடந்தால் நன்றாக இருக்கும் என்று இருவரும் சைகையிலேயே பேசிக்கொண்டனர்.

 

அன்று மாலை யோகி சித்துவிற்கு அழைப்புவிடுத்து, தான் யாஷிகாவின் வீட்டிற்கு போய் வந்த விசயத்தையும், தன் தாய், இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்ய இயலுமா என்று கேட்டதை கூறினான்.

 

பாத்துக்கலாம் மச்சி!, என்று சந்தோசமானான் சித்து.

©©|©©

 

யோகியின் தாய் தன் சகோதரன் சுந்தரத்துடன் பேசி, ஒரு வாரத்திற்குள் நல்ல முகூர்த்த நாள் பார்த்தார். சித்துவின் தாய், தந்தை, சுந்தரம் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோருடன் சரண்யா கிளம்பி செங்கல்பட்டு வந்து சேர்ந்தார்.

 

சென்னையில் இருந்து வந்திருந்த யோகியும், சித்துவும் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலேயே, அனைவரும் வரும் வரை காத்திருந்து, யாஷிகாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். யாஷிகாவின் இல்லத்தில், அவளது சொந்தங்கள் சிலர் வந்திருந்தனர்.

 

இனிதே நிச்சயதார்த்த நிகழ்வு நடந்தது. நிச்சயப் பரிசாக சரண்யா தேவி தான் கொண்டு வந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை தாம்பூலத் தட்டில் வைத்து யாஷிகாவிற்கு வழங்கினார். யோகிக்கு கார் வாங்கித் தருவதாக யாஷிகாவின் தந்தை கூறினார். யோகியின் வீட்டில் ஒரு மோதிரம் மட்டும் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டனர்.

 

யாஷிகாவின் தந்தை, சம்யுக்தாவின் தந்தையுடன் பேசி, தன் மகளுக்கும் ஒரு ஃப்ளாட் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால், சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் சம்யுக்தா மற்றும் யாஷிகாவிற்கு அருகருகே ஃப்ளாட்கள் ஏற்பாடு செய்தாயிற்று.

 

யோகி-யாஷிகா, சித்து-சம்யுக்தா இரு ஜோடிகளின் திருமணமும் மதுரையில், ஒரே நாள், ஒரே மேடை என்றும் முடிவு செய்தார்கள். அதன் பின், செங்கல்பட்டில் யாஷிகாவின் வீட்டு சார்பாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

 

அதே போல் சம்யுக்தாவின் வீட்டு சார்பிலும், சென்னை, நுங்கம்பாக்கத்திலேயே ஒரு பிரபலமான ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பேசி முடித்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளும், ரிதுவின் தந்தை ராஜசிம்மனின் ஆலோசனை மற்றும் உதவியுடன் நடந்துகொண்டிருந்தன.

©©|©©

 

யோகியின் தாயார் தன் அண்ணன் சுந்தரத்துடன், ரிதுவின் தந்தை ராஜசிம்மனுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காகவும், திருமணத்திற்குப் பின் யோகி, யாஷிகா வசிக்கப்போகும் வீட்டைப் பார்ப்பதற்காகவும் சென்னை கிளம்பி வந்தார்.

 

திருமணத்திற்கு பெரிதும் உதவியதற்கும், தன் மகனை நன்கு கவனித்துகொள்வதற்கும், ராஜசிம்மனுக்கு நன்றிகள் பல கூறி, திருமண அழைப்பிதழை சகல மரியாதையுடன் வைத்து அழைத்தார். கட்டாயம் குடும்பத்துடன் திருமணத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

ரிதுவின் தாய் திலோத்தமை பேசிக்கொண்டே, சரண்யாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு வரவேற்பறையில் இருந்து ரிதுவின் அறைக்குச் சென்றார். ரிதுவோ, கீழேயிருந்த அவர்கள் மேலே இருக்கும் தன் அறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

 

இது எம் பொண்ணு, ரிது, என்று திலோ அறிமுகம் செய்து வைத்தார்.

 

ஓ! அப்படியா! நல்லாருக்கியாம்மா ரிது! ஒன்னப்பத்தி எல்லா புள்ளைகளுமே நல்லவிதமாப் பேசிக்குவாங்கம்மா! எனக்குத்தான் ஒன்னப் பாக்க குடுத்துவக்கல! ம்… இப்பவாவது பாத்தேனே!, என்று ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டார் சரண்யா.

 

ரிதுவந்திகா ஒரு சிறு புன்னகையுடன், பதில் ஏதும் பேசவில்லை. அவளின் அமைதியை திலோ களைத்தார்.

 

காலைலருந்து எதுவுமே சாப்பிடலையேமா! ஏதாவது எடுத்துட்டு வரச் சொல்லவா?, திலோ.

 

ஏம்மா? ஒடம்புக்கு எதுவும் செய்யுதா?, சரண்யா.

 

இல்ல, லேசா தலை வலி! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும், ரிது அமைதியாக சொன்னாள்.

 

அதுக்காக சாப்பிடாமலா ரெஸ்ட் எடுப்பாங்க! ஒரு ஜூஸ் எடுத்துட்டு வரச்சொல்லவா?, திலோ.

 

வேண்டாம்மா! கொஞ்ச நேரத்துல சரியாயிடும்! நா அப்பறம் குளிச்சிட்டு சாப்பிட்டுக்கிறேன், ரிது.

 

சரி, நாங்க இருந்த ஒனக்கு டிஸ்டப்பண்ற மாதிரி இருக்கும் போல! கிளம்பறோம். வாங்க போகலாம், என்று சரண்யாவை அழைத்தார் திலோ.

 

சரிம்மா, நீ ரெஸ்ட் எடு! ஒடம்பப் பாத்துக்கோ! கல்யாணத்துக்கு நீயும் மதுரைக்கு கண்டிப்பா வரணும்! சரியா?, என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார் சரண்யா.

 

ம்!, ரிது.

 

திலோவும், சரண்யாவும் அதற்குமேல் அங்கு நிற்காமல் கீழே இறங்கினர். திலோத்தமையின் முகம், மகளைப் பார்த்த பின்பு முன்புபோல் இல்லை என்பதை உணர்ந்தார் சரண்யா. ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பினர் சரண்யாவும், அவர் அண்ணன் சுந்தரமும்.

 

வரும் வழியில் சரண்யா சுந்தரத்திரத்திடம் ரிதுவைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். சுந்தரம் தானும் ராஜசிம்மனிடம் ரிதுவைப் பற்றி கேட்டதாகவும், அதற்கு ராஜசிம்மன் ரிதுவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் என்று தெரிவித்ததாகக் கூறினார்.

 

அப்படியாண்ணே! ரொம்ப சந்தோசம்! மாப்பிள்ளை எப்படியாம்? எந்த ஊரு? எதுவும் கேட்டியா!, சரண்யா உற்சாகமாகக் கேட்டார்.

 

மாப்பிள்ளை ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கமாம். சிஏ முடிச்சி, தொழில்ல நல்ல முன்னேற்றத்தோட இருக்காராம்!, சுந்தரம்.

 

தொழில்னா, என்ன பண்றாங்க

 

தங்கம்தான்! அவுங்க ஊர்லபோய் தங்கமுடியா பிள்ளைன்னு கேட்டா எல்லாருக்கும் தெரியுமாம்! அந்தக்காலத்தில இருந்தே, தங்கம் மட்டுமில்ல கல்யாண மஹால் எல்லாம் வச்சிருக்காங்களாம்! ஒரே பையன். இனிமேயும் அந்த ஊர்லயே இருந்தா போர் அடிக்கும், சென்னைக்கு வந்து பிஸினச டெவலப் பண்ணணும்னு ஒரே பிடிவாதமாம்!, சுந்தரம்.

 

ஓ! அதான்… இவர் சென்னைங்கறதால சம்பந்தம் பேசிட்டாங்க போல! பிஸினச டெவலப் பண்ண மாதிரியும் ஆச்சு, சென்னைல செட்டில் ஆன மாதிரியும் ஆச்சு!, சரண்யா.

 

ஆமா! கூடிய சீக்கிரம் சென்னைல ஒரு நகக்கடை ஆரம்பிக்கப் போறாங்களாம். அந்தப் பொண்ணு சீக்கிரம் ஒத்துக்கிட்டா, கட வேலைய, கல்யாண வேலை எல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுரலாம்னு மாப்பிள்ளை பையனும் சொல்லிட்டானாம்! ஆனா, இந்தப் பொண்ணுதான் இன்னும் பிடிகொடுக்க மாட்டேங்குதாம்!

 

எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சரண்யா தேவி தன் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டார்.

©©|©©

 

சம்யுக்தா, யாஷிகா இருவரும் தங்களது திருமணத்திற்கு ரிதுவை மதுரைக்கு அழைத்தனர். ரிது வர மாட்டேன், வரவேற்பில் கலந்துகொள்கிறேன் என்று கூறிவிட்டாள். அவளுக்காக தங்கள் திருமணத்தை சென்னையில் மாற்ற ஏற்பாடு செய்யப்போவதாக இருவரும் கூறினர்.

 

இரண்டு திருமண நிகழ்வுகள், நான்கு குடும்பங்கள் நம்பந்தப்பட்டது. நிறைவு நிலையில் இருக்கும் சுப நிகழ்வுகள் தன்னால் குழறுபடியாகக் கூடாது என்று எண்ணிய ரிது, வேறு வழியின்றி தானும் மதுரைக்கு அவர்கள் கிளம்பும் போதே வந்துவிடுவதாக உறுதியளித்தாள். அதனால் ரிதுவுடன் துணையாக அவள் தாய் திலோத்தமையும் வரவேண்டிய கட்டாயமாயிற்று.

 

திருமணத்திற்கு முந்தைய நாளே சம்யு, யாஷிகா இருவரும் ரிதுவையும், அவள் தாயார் திலோவையும் தங்களுடன் அழைத்து வந்து, தங்களுக்காக சித்து, யோகியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்தர தங்கும் விடுதியில் தங்க வைத்து நன்கு கவனித்துக்கொண்டனர்.

 

தோழிகள் இருவரும், பெரிதும் முயன்று ரிதுவை சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். அவர்களின் கெஞ்சல் மற்றும் கொஞ்சலினால் ரிதுவும் உள்ளுக்குள் வேதனை இருந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாய் தெரிந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சரளமாக பேசி சிரிக்க ஆரம்பித்தாள்.

 

யோகியும், சித்துவும் வந்திருந்தவர்களை கவனிப்பதில் எந்த வித குறைவும் இன்றி பார்த்துக்கொண்டனர். ராஜசிம்மன் மட்டும் விமானம் மூலம், திருமணத்தன்று பகலில் வந்து, குடும்பத்துடன் சேர்ந்து, விழாவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

பெற்றோர் முதல் உற்றார் உறவினர் வரை அனைவரின் ஆசீர்வாதத்துடன், ஐம்பூதங்கள் சாட்சியுடன், மங்கள இசை முழங்க, திருமாங்கல்யம் பூட்டி, இரு திருமணங்கள் இனிதே முடிந்தன.

 

தாலி கட்டி முடித்த பின், ஆசீர்வாதம் வழங்கவும், பரிசுகள் கொடுக்கவும் பலரும் மேடைக்கு வந்து சென்றனர். அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்தே அயர்ந்துவிட்டனர் திருமண தம்பதிகள்.

 

ஓரளவிற்கு வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிவிட, இரண்டு திருமண ஜோடிகளும் மேடையைவிட்டு கீழே இறங்கி, மஹாலின் ஒரு ஓரமாக இருந்த இருக்கைகளில் அமர்ந்து, ஒருவருடன் ஒருவர் ஆசுவாசமாக பேச ஆரம்பித்தனர். அதுவரை அவர்களுடன் ஒட்டாமல் பெற்றோருடனே இருந்த ரிதுவந்திகாவும் அவர்களுடன் கலந்துகொண்டாள்.

 

மகிழ்ச்சியான சூழல், ஒருவருக்கொருவர் கிண்டலும், கேலியும் பேசி, மகிழ்ச்சியை பரிமாரிக்கொண்டனர். ரிது சம்யுவையும், யாஷிகாவையும் அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக பேசி கலாய்த்துக்கொண்டிருந்தாள்.

 

சித்துவும், யோகியும் சற்று தனிமைப்படுத்தப்பட்டது போல் அவர்களின் அருகில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓர் உருவம், அவர்களை நோக்கி வந்து தன் இரு கைகளையும் நீண்டி, இருவரின் கைகளையும் பற்றி குலுக்கியது.

 

விஷ் யூ போத் ஹேப்பி மேரீட் லைஃப்!

 

தங்களையும் அறியாமல் கை குலுக்கிய நண்பர்கள் இருவரும், புரியாமல், புதிராய் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால், எதிரில் இருந்தவரின் புன்னகை சற்றும் மாறவே இல்லை!

 

தேங்க்யூ!, சித்து.

 

தேங்க்யூ, நீங்க…!, என்று ஆச்சரியமாக இழுத்தான் யோகி.

 

ஐம் ஷர்வேஷ்! நானும் ஒங்கள மாதிரி மாப்பிள்ளையாகப் போறவந்தான்! ஆனா அது எப்பன்னுதான் தெரியல!, என்றான் ஷர்வேஷ் என்ற ஷர்வேஷ்வரன்.

 

புரியலையே பாஸ்! பொண்ணு ரெடின்னா கல்யாண வேலைய ஆரம்பிச்சுர வேண்டியதுதான!, சித்து.

 

ஏன்னா, கல்யாணத்துல பொண்ணத்தான் ரொம்ப இம்பார்ட்டன்டா பாக்குறாங்க!, யோகி.

 

கரெக்ட்! நானும் அப்படித்தான் பொண்ணுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்து, வெயிட் பண்ணிட்டிருக்கேன்!, ஷர்வேஷ்.

 

சூப்பர்! யாரந்த பொண்ணு?, சித்து.

 

ரிதுதான்!, என்று அருகில் இருந்த ரிதுவைக் காண்பித்து ஷர்வேஷ் கூறியபோதுதான், அவனை முழுதாக தோழிகள் மூவரும் பார்த்தனர்.

 

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவனின் கடைசி வார்த்தைதான் காதில் விழுந்தது என்றாலும், மற்றவை என்ன என்பதை மூன்று தோழிகளாலும் கணிக்க முடிந்தது. அப்பொழுதுதான் ஷர்வேஷை, ஆழ்ந்து பார்த்தாள் ரிது. அவள் பெண்மையும் மென்மையாய் எட்டிப்பார்த்தது.

 

தன்னையுமறியாமல், அங்கிருந்து அகன்றுவிட வேண்டும் என்று, மெதுவாக எழுந்து, மணமகள் அறையை நோக்கி நகர முற்பட்டாள். மற்ற தோழிகள் இருவரும் விடவில்லை, அவளின் கைகளைப் பற்றினர். அவர்களின் கைகளை உதறியவள் வெகுவேகமாக நடந்தும், ஓடியும் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

 

ஒங்களுக்கு ஏற்கனவே ரிதுவ தெரியுமா பாஸ்?, சித்து.

 

ம்! அவங்கப்பாவும் எங்கப்பாவும்தான் எங்க கல்யாணத்த பேசி முடிச்சிருக்காங்க! ஆனா, நாங்க ரெண்டு பேரும்தான் இதுவர பேசவே இல்ல! இப்பக்கூட அவங்கப்பா சொல்லித்தான், நானும் எங்கப்பாவும் இந்த மேரேஜ் ஃபங்ஷன்லயே பொண்ண பாத்துட்டு போயிறலாம்னு வந்திருக்கோம், என்று மிகவும் ஏக்கமாக கூறி, ராஜசிம்மன் திலோ தம்பதியருடன் அமர்ந்திருந்த தன் தந்தை தங்கராஜை காட்டினான் ஷர்வேஷ்வரன்.

 

நோ ஒர்ரி பாஸ்! எங்காளுங்களப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது! இப்பப் பொண்ண ரெடி பண்ணிக் கூட்டிட்டு வருவாங்க பாருங்க!, என்று சித்து நம்பிக்கையூட்டினான்.

 

இவர்கள் மூவரும் மணமகள் அறையின் வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தனர். அதே உணர்வுடன், சற்று தூரத்தில் அமர்ந்திருந்த திலோ, ராஜசிம்மன், தங்கராஜ் மூவரும் அதே அறையின் வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

சில நிமிடங்கள் மிகவும் மெதுவாக உருண்டோடின!  திடீரென உள்ளிருந்து சம்யுக்தா மற்றும் யாஷிகாவால் ரிதுவந்திகா இழுத்துவரப்பட்டாள். அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஈடுகொடுத்து, சற்று நாணத்துடன், தலையை குனிந்தவாறே அவர்களுடன் வந்து சேர்ந்தாள்.

 

ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! வாடீ!, சம்யு.

 

கைய நீட்டுங்கண்ணா!, என்று ஷர்வேஷ்வரனை கிட்டத்தட்ட அதட்டினாள் யாஷிகா.

 

ஷர்வேஷ் என்ன நடக்கிறது என்பதையும் அறியாமல் கையை நீட்டினான். அவன் கைகளில் ரிதுவின், கைகளை திணித்தனர் இரு தோழிகளும்.

 

எங்க கண்ணையே ஒங்கட்ட ஒப்படைக்கிறோம்! இனிமே இந்தக் கண்ல ஆனந்தக் கண்ணீர மட்டுந்தான் பாக்கணும்!, என்று பழைய பட டயலாகை, நடிப்போடு வெளிப்படுத்தினாள் சம்யுக்தா.

 

ஏற்கனவே இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியில், மேலும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள அந்த திருமண மஹால் முழுவதும் சந்தோச அலைகள் ததும்பி வழிந்தன.

 

– சுபம் –

 ©©|©©