SY3

SY3

சரி – 3

“நைட் நல்லா தூங்கினீங்களா?”, ஆர்த்தோ அனந்தராமன்.

 

“நா நல்லா தூங்கிட்டேன் டாக்டர். அவந்தான் சரியா தூங்கலைனு நெனைக்கிறேன்”, சித்து.

 

யோகியை நல்ல நண்பன் என்பது போல் பார்த்தார் ஆர்த்தோ. சித்துவின் காலை பார்த்தவர் சற்று திருப்தியாக உணர்ந்தார்.

 

“மேல இருக்குற காயத்துல தண்ணி படாம பாத்துக்கங்க, ஆயின்மென்ட் ரெகுலரா அப்ளை பண்ணுங்க. பெயின் கம்மியாயிருச்சுன்னா நாளைக்குக் கூட வீட்டுக்குப் போயிறலாம்”, ஆர்த்தோ சொன்னவுடன் சற்று ஆறுதலாக இருந்தது இருவருக்கும்.

 

“ஓகே டாக்டர்”, யோகி.

 

“டோன்ட் ஸ்ட்ரைன் யுவர் வூண்டட் லெக். கொஞ்சநாள் பொறுங்க”, ஆர்த்தோ.

 

“கொஞ்ச நாள்னா எவ்வளவு நாள் டாக்டர்?”, சித்து.

 

“நார்மலா இருவத்தோறு நாள் சொல்லுவோம். நீங்க க்ரோயிங் ஏஜ் அன் ஹெல்த்தியா இருக்கறதால ஒங்களுக்கு பத்து, பதினஞ்சு நாள் போதும்”, ஆர்த்தோ.

 

“ரொம்ப பெரிய அடி ஒன்னுமில்லைல டாக்டர்”, சித்து.

 

“இல்ல. எக்ஸ்ரே பாக்கலையா, சிஸ்டர் எக்ஸ்ரே குடுக்கலையா?”, என்று உடன் வந்திருந்த செவிலியரை பார்த்தார்.

 

“காலைல ஆஃபீஸ்ல ஆள் வந்ததும் கொடுத்திடறோம் டாக்டர்”, செவிலியர்.

 

“ஒரு வாரம் கழித்து மறுபடியும் ஒரு எக்ஸ்ரே எடுக்கணும் மிஸ்டர் சித்தார்த்”, ஆர்த்தோ.

 

“ஓகே டாக்டர்”, சித்து.

 

டாக்டர் சென்றதும், மீண்டும் செவிலியர் வந்து எக்ஸ்ரேவை கொடுத்துவிட்டு, டெம்ப்பரேச்சர் மற்றும் பீப்பி குறித்துக்கொண்டு சென்றார்.

 

எக்ஸ்ரேவை இருவரும் பார்த்தனர். லேசான ஃப்ராக்சர்தான். மேலே இருக்கும் காயம் ஆறினால் போதும் என்று அவர்களுக்கு தோன்றியது.

 

“சரி மச்சி, நாளைக்கு டிச்சார்ஜ் ஆனதும் நீ வேலைக்கு போயிருடா. நா பாத்துக்கறேன்”, சித்து.

 

“அதான் மூனு நாள் லீவு கொடுத்துருக்காங்கல்ல. மெதுவா போறேன். ரூமுக்கு போனப்பறம் அதப் பத்தில்லாம் யோசிப்போம் மச்சி”, யோகி.

 

“நா கம்பெனில கேட்டேன்டா, ஒர்க் அட் ஹோம் பேசிஸ்ல இருக்கச் சொல்லிட்டாங்க. இன்னக்கிக் கூட ஏதோ மெயில் பண்ணிருக்காங்க. ஆனா நா ஓப்பன் பண்ணல”

 

“அதுக்கு எங்க கம்பெனி பரவாயில்லபோல மச்சி”

 

“ஆமாடா.  நானும் பேசாம ஒங்க கம்பெனிக்கே ஏதாவது வேலைக்கு வந்துறவா?”

 

“எங்க கம்பெனியில ஒன்னோட லைனுக்கு வேல கெடைக்காதேடா!”

 

“ஆமா மச்சி, இப்பதான் ப்ரமோசன், இன்கிரிமென்ட் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ள தரேன்னுருக்காங்க”

 

“ஒன்னோட சின்சியாரிட்டிக்கு இதுவே லேட் மச்சி”

 

“நாம் எப்பவுமே அப்படித்தான மச்சி. நீ கூட நல்ல பேரோட, நல்ல சேலரில, கம்பெனி ஓனர் வீட்டுக்கே போய் டிஸ்கஸ் பண்ற அளவுக்கு இவ்வளவு சீக்கிரமா வளந்துருக்கல்ல”

 

“ஏய் அந்த வீட்டப் பாத்தியாடா! பாஸுக்கு நல்ல டேஸ்ட்ல?”

 

“ம், சூப்பர்”

 

“சரி நீ டேப்லட் எடுத்துக்கோ. நா கொஞ்சம் ரூம் வரைக்கும் போய் குளிச்சிட்டு, வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்திறேன். பக்கத்து கேபின்ல சினாக்ஸ் கொஞ்சம் இருக்கு பாத்துக்கோ”

 

“டேய் சப்பாத்தி இருக்கே?”

 

“அத வேண்ணா நைட்டுக்கு யூஸ் பண்ணிக்குவோமே.  நீதான வச்சு சாப்பிடுவோம்ன! ஆமா, அதென்ன மச்சி ஒரே நாள்ள சம்யுக்கு இவ்ளோ சோசலிசம்?”

 

“நல்ல பொண்ணுங்க போல. நடு ரோட்லயே விட்டுட்டு போகாம நம்மள இவ்வளவு தூரம் கவனிச்சுக்குதுக”

 

“யாஷிகா ஒன்னும் கொண்டு வரலயோ?”

 

“ஏன்டா, வர்றவங்க எல்லாரும் ஏதாவது கொண்டு வரணுமா என்ன?”

 

“இல்ல, சும்மா கேட்டேன்”

 

பேசிக்கொண்டே அறையில் ஆங்காங்கே கிடந்த பொருள்களை எல்லாம் சரி செய்துவிட்டு, தான் அணிந்திருந்த உடையையும் திருத்திக்கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு புறப்பட்டான் யோகி.

 

சித்து லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“ஓகே டேக் கேர் மச்சி. பாத்ரூம் எதுவும் போகணுமா”

 

“இப்ப இல்ல. நா பாத்துக்கிறேன்டா மச்சி. அதான் ஒரு கால் நல்லாதான இருக்கு”

 

“பாத்துடா, டாக்டர் சொன்னத கேட்டில்ல. ஸ்ட்ரெயின் பன்னிராதே. எதுனாலும் கால் பண்ணு. நா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாத. மொபைலுக்கு சார்ஜ் போட்டியா?”

 

“இல்லடா, ஆனா கைக்கெட்ற தூரத்துலதான்டா இருக்கு. போட்டுக்கிறேன்”

 

“லேப்டாப்ல இப்ப ஒர்க் அதிகம் இருக்கா? இல்ல அந்த கேபின்ல வச்சு பூட்டிட்டு சாவிய கொடுத்துட்டு போகவா மச்சி?” எதிரில் சுவற்றோடு பொருந்தி இருந்த பூட்டு சாவி வசதியுடன் இருந்த அலமாரியைக் காண்பித்துக் கேட்டான் யோகி.

 

“நீ ப்ரேக்ஃபாஸ்ட் வாங்கப் போயிருக்கும்போதே முடிச்சிட்டேன்டா. உள்ள வச்சு, பூட்டி சாவியக் கொடு. கதவக் கூட நல்லா பூட்டிட்டு போயிரு மச்சி”

 

அறைக் கதவு வரை வந்தவன் திரும்பி போய் லேப்டாப்பை உள்ளே பத்திரப்படுத்திவிட்டு,

“ஆமா, டேப்லெட் எடுத்துகிட்டா தூக்கம் வரும்னு நெனக்கிறேன்”, என்று கூறிக்கொண்டே மாத்திரைகளை பிரித்து தண்ணீரும் ஊற்றிக் கொடுத்தான் யோகி.

 

மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்விட்டு, மொபைலுக்கு சார்ஜ் போட்டான். யோகி கிளம்பியவுடன் கட்டிலில் சாய்ந்து கண்ணயர்ந்தான் சித்து.

 

வீட்டின் ஞாபகம் வந்தது. சார்ஜ் போட்டவுடன் முதலில் அம்மாவுக்கு போன் பண்ண வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அருகில் நண்பனும் இருந்தால் நிலைமையை விளக்க அல்லது சமாளிக்க வசதியாக இருக்கும் என்றும் எண்ணிக்கொண்டான்.

 

அம்மா என்ன செய்யப் போகிறார்களோ? அவன் தாயார் பாமா ஒரு அன்புப் பாசறை. ஏற்கனவே அவனில்லாமல் வீடு வெறுமையாக உள்ளது என்று அடிக்கடி வரச்சொல்லுவார். இப்போது அடிபட்டிருப்பதை கேள்விப்பட்டால் உடனடியாக, ஒரேயடியாய் ஊருக்கே வந்துவிடு என்றுகூடக் கூறுவார்.

 

தாயைப் போல தந்தை மார்த்தாண்டம் இல்லை. அவருக்கு பாசத்தை வெளியில் காட்டத் தெரியாதுதான், ஆனால் இன்றுவரை அவனது விருப்பங்களுக்கெல்லாம் மறுக்காமல் வரம் தரும் நடமாடும் தெய்வம்.

 

அவர் சித்தார்த்துக்கு நல்ல தந்தை மட்டுல்ல, தன்னுடைய தாய்-தந்தைக்கும் நல்ல மகனாக இன்று வரை அவர்களை ஆரோக்கியமாக கவனித்து வருகிறார். மதுரை கார்ப்பரேசனில் கணக்காளர் வேலை.  படித்துறையில் சொந்த வீடு. ஓரளவு வசதியான வாழ்க்கை.

 

சித்தார்த்துக்கு பிறந்ததிலிருந்து எந்த குறையும் வைத்ததில்லை. நன்றாக படிக்கும் தன் மகன் டாக்டர் அல்லது இன்ஜினியராக வருவான் என்றே பெரும்பாலான பெற்றோர்களைப் போல் எண்ணிக்கொண்டிருந்தார்.

 

ஆனால் சித்தார்த் நண்பன் யோகிதாஸை பிரியாமல், சேர்ந்தே கல்லூரிப் பருவத்தையும் முடிக்க வேண்டும் என்று மதுரை மெஜுரா கலேஜில் எம்.எஸ்ஸி. ஃபிஸிக்ஸ் முடித்தான். ஆனால் பள்ளிக் கல்வி முடித்த கையோடு தற்காலத்திற்கு ஏற்றவாறு கணினி அறிவை வளர்த்துக் கொண்டான். சிறந்த சாஃப்ட்வேர் இன்ஜினியராக உருவெடுத்திருந்தான்.

 

அவன் நண்பன் யோகிதாஸ், உடன் பிறவா அண்ணனுக்கு அண்ணனாக, தம்பிக்கு தம்பியாக, நண்பனுக்கு நண்பனாக அவனது பள்ளிப் பருவம் முதலே உடன் வளர்ந்தவன். இருவரின் வீடுகளும் அருகருகே இருந்தது அவர்களின் நட்பு உருவாவதற்கும், நட்பின் வளர்ச்சிக்கும் நன்கு உதவியது.

 

அவனது தந்தை தனசேகர் மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணியில் இருக்கும்போதே உடல் நலக் குறைவினால் காலமானார். பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுக்கென்று இருந்த ஒரே ஆறுதல் அவனது நண்பன் சித்தார்த் மட்டுமே.

 

கணவரின் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து தங்களுக்கு வசதியான ஒரு வீட்டைக் கட்டி, மாடியிலும் இரண்டு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் யோகிதாஸின் தாயார் சரண்யா தேவி. 

 

மகன் யோகிதாஸ் நன்கு படித்தாலும், அவனை மருத்துவம் எல்லாம் படிக்க வைக்கும் அளவுக்கு அவள் கனவு காணவில்லை. மகனும் மெஜுரா காலேஜில் எம்.எஸ்ஸி. ஃபிஸிக்ஸ் முடித்து, கணினி அறிவிலும் சிறந்து விளங்கினான்.

 

ஆனால் பி.எஸ்ஸி. முடித்த கையோடு செலவுக்கு தாயின் கையை எதிர்பார்க்காமல், தந்தைக்குத் தெரிந்த நண்பரின் ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து, அனுபவத்தை வளர்த்துக்கொண்டிருந்தான்.

 

சித்தார்த், யோகிதாஸ் இருவரும் எம்.எஸ்ஸி. முடித்த கையோடு சென்னை வந்து வேலை தேடினர்.  சித்தார்த் சாஃப்ட்வேர் வேலைக்கு பல நேர்காணல்களுக்குச் சென்றான். செல்லுமிடம் எல்லாம் அனுபவம் கேட்டார்கள்.

 

ஒருவழியாக அவன் தற்போது பணிபுரியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பழகுநராக சேர்ந்தான். ஆனால் யோகிதாஸ் சென்னை வந்து சில நாள்களிலேயே அனுபவத்தால் ஏஆர் மாலில் விற்பனை பிரிவில் சேர்ந்து இன்று மேனேஜராகவும் இருக்கின்றான்.

 

அவனது நடவடிக்கைகள் ராஜசிம்மனுக்கு மிகவும் பிடித்து, அவனை கிட்டத்தட்ட ஒரு செல்லப்பிள்ளையாகவே கவனித்து வந்தார். ஆனால், அதற்கும் ஓர் வரைமுறையுடன் கூடிய அளவுகோல் ஒன்றை தனக்குள் தீர்மானித்திருந்தார்.

 

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கண் விழித்த சித்தார்த்,

“யாரது?”

 

“ரூம் சர்வீஸ் சார்”

 

“உள்ள வாங்க”

 

ரூம் பாய் உள்ளே வந்து எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு கிளம்பும் நேரத்தில் யோகி உள்ளே நுழைந்தான்.

 

“என்ன மச்சி, நல்லா ரெஸ்ட் எடுத்தியா?”, யோகி.

 

“ம், நேரம் போனதே தெரியல. லேசா கண் அசந்த மாதிரித்தான் தெரியுது. அதுக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சிட்டு வந்துட்டியா?”, சித்து.

 

“சரி, டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க”

 

சித்து சற்று யோசித்தவனாக, “கால்ல தண்ணி படாம குளிக்கிறேனே மச்சி”

 

“ஓகே, நானும் அதத்தான் நெனச்சேன். சரி வா” என்று கைத்தாங்கலாக அழைத்துச் சென்று குளிக்கச் செய்து, கட்டிலுக்கு அழைத்து வந்து அமரவைத்துவிட்டு, அவனது உடைகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்து அமர்ந்தான்.

 

“மச்சி, அம்மாவுக்கு எல்லா ஞாயித்துக் கிழமையும் போன் பண்ணிருவேன். ஆனா நேத்து பேச முடியல. பேசுவமா?” என்றான் சித்து.

 

“சரிடா, ஆனா இப்பவே இதச் சொல்லாம்னு நெனக்கிறியா?”, யோகி.

 

“நீயே சொல்லு மச்சி. என்ன செய்ய?”

 

“ஊருக்குப் போகும்போது சொல்லிக்கலாமே மச்சி”

 

“ஆமா மச்சி நானும் அப்படித்தான் நெனச்சேன். நேர்ல சொல்லி, என்னைய ரெண்டு அடி அடிச்சாக் கூட பரவாயில்லன்னு நெனக்கிறேன்”

 

“ஆமாடா, நாம என்ன ரொம்பப் பெரிய விசயத்தையா மறைக்கிறோம். இன்னும் ஒரு வாரத்துல சரியாகப் போகுது. அதுக்கிடையில அவங்களப் போட்டு எதுக்கு டென்சன் பண்ணனும்”

 

“சரி மச்சி, நேத்து ஏன் போன் பண்ணலன்னு கேட்டா என்ன சொல்றது?”

 

“நேத்து கை தவறி போன் கீழ விழந்துருச்சுன்னு சொல்லுவோமா?”

 

“ஆமா, அப்பறம் ஊருக்குப் போயி நாந்தான் விழுந்தேன்னு சொல்லிக்கிருவோம். மொத்தத்துல ஏதாவது ஒன்னு விழுந்துருக்கணும்”, இருவரும் புன்னகைத்துக்கொண்டனர்.

 

“ஏன் யோகியோட போன்ல இருந்து பேசிருக்கலாம்ல அப்படின்னா என்ன சொல்றது?”

 

“அஸ் யூஸ்வல் புது மொபைல் மாத்துனதுல என்னோட பழைய நம்பர்லாம் மிஸ்ஸிங். காரணம் போதுமா?”

 

“இதுக்குத்தான்டா நீ வர்ற வரைக்கும் காத்துகிட்டிருந்தேன். ஓக்கே மச்சி டயல் பண்ணவா?”

 

“ம்”

 

மொபைலை எடுத்து தாயார் பாமாவை அழைத்தான்.

 

“என்ன தொரை நேத்து ரொம்ப பிஸியோ?”, எதிர் முனையில் தாய்.

 

“இன்னக்கிக் கூட பிஸிதான். ஆனா, நேத்து மொபைல் கீழ விழுந்து பேசமுடியாமப் போச்சும்மா”, சித்து.

 

“ஏன்டா கீழ விழுந்துச்சு?”

 

“ம், மேல விழுக முடியாததுனால கீழ விழுந்திருச்சு”

 

“ஓஹோ…, அவனோட மொபைல்ல வழக்கம்போல நம்பர் மிஸ்ஸிங். அப்படித்தான?”

 

“யா, மம்மி. பட் அவந்தான் நேத்து எனக்கு ரொம்ப உதவியா இருந்தான்”

 

“என்ன உதவி”

 

சற்று உளறிவிட்டோமோ என்று யோசித்த சித்து,

“இல்லம்மா இந்த மொபைல பிரிச்சுட்டு, மறுபடியும் மாட்டி ஏதோ ப்ரோக்கிராம்லாம் சேஞ்ச் பண்ணி கொடுத்தான்”

 

இவன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் அருகில் இருப்பதை சொல்லிவிடாதே என்று சைகை காண்பித்தான் யோகி.

 

“நீ என்ன வேல நேரத்துல போன் பண்ணிருக்க”

 

“ஒர்க் அட் ஹோம் பேசிஸ்ல இருக்கேம்மா”

 

“ஏன், என்னாச்சு. ஒடம்புக்கு எதுவும் சரியில்லையா”

 

“அதெல்லாம் ஒன்னுமில்லமா. நா நல்லாத்தான் இருக்கேன்”

 

“இல்லையே, கொரலே சரியில்லையே!”

 

“நம்புங்கம்மா. நம்பிக்கைதான் வாழ்க்க. அங்க அப்பா, பாட்டி, தாத்தால்லாம் எப்படி இருக்காங்க”

 

“ம், ம் இருக்காங்க. நீந்தான்டா எதையோ மறைக்கிற மாதிரி தெரியுது”

 

‘தாய்க்கெழவி கண்டுபுடுச்சிட்டியே’

 

“அம்மா, கம்பெனில வேல அதிகம்மா, ஒரே டயர்ட். கன்ட்டினியூவா ஒர்க் பண்ணிட்டிருக்கேன். அதான் டல்லா இருக்கு. இப்ப ஒரு டீ சாப்ட்டா சரியாயிரும்”

 

சட்டென அவன் கம்பெனி சூழலில் இருப்பதுபோல் பேசியது அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

“ரூம்லதான இருக்க?”

 

“ஆமா”

 

“நீயேதான டீப் போடனும்?”

 

“ஆமா…, ஆனா எனக்கிருக்க டயடுக்கு அதுக்கெல்லாம் பொறுமையில்ல. அதுனால காலாற கொஞ்சம் வெளிய போய் ஒரு டீ அடிச்சிட்டு வந்தாதான் சரியாயிருக்கும்மா”

 

“சரி கிளம்பு, அவனக் கேட்டதாச் சொல்லு. எப்ப ஊருக்கு வர்றதா இருக்க? ரொம்ப நாள் ஆச்சே?”

 

“இப்போதைக்கு அதப் பத்தி நெனக்கவே முடியாதும்மா. நெறய வேல இருக்கு”

 

“சரி சரி, வேல வேலன்னு ஒடம்ப கெடுத்துக்காத. வர்றப்ப வா. ஆனா அடிக்கடி வந்து போப்பா”

 

“ஏம்மா திடீர்னு இப்டிச் சொல்றீங்க? மாசத்துல எப்புடியும் ரெண்டு தடவ வந்துட்டுதான போறேன்”

 

“ஆமாடா, ஆனா என்னமோ தெரியல, நேத்து அப்பாகூட ஒன்ன பாக்கணும்னு சொல்லிட்டிருந்தாரு”

 

“ட்ரைப் பண்றேன்மா”

 

“யாரோ வரமாதிரி தெரியுது. சரிடா நீ ஒடம்பப் பாத்துக்க, நல்லா குளி, சாப்பிடு, ரெஸ்ட் எடு. எல்லாம் வழக்கமா சொல்றதுதானேன்னு போன கட் பண்ணிறாத. நா எங்கடமைக்கு சொல்லிட்டேன். ஓகே பைடா”

 

“பைமா”, என்று போனை அணைத்து வைத்தான் சித்து.

 

“நல்லவேள என்னைய உள்ள இழுத்துவிட்ருவியோன்னு நெனச்சேன். பரவாயில்ல சமாளிச்சு வச்சுட்ட”, யோகி.

 

“ஆமா மச்சி, ஒரு ஃப்ளோல ஒன்ன உள்ள கொண்டுவரப் பாத்துட்டேன்ல?”

 

அப்படியே இருவரும் வழக்கம்போல் கம்பெனி விசயம், எதிர்காலம் என்று பேச ஆரம்பித்தனர்.

 

vvv

 

ரிது வீட்டில் தாயார் திலோத்தமையிடம் மூவரும் அந்த இருவரைப் பற்றியும், குறிப்பாக யோகிதாஸ் ஏஆர் மாலில் வேலை செய்வதையும் கூறியவுடன், மேலும் அவருக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

 

“நம்மாளயே சாச்சுப்புட்டிகளேடீ?”, திலோ.

 

“அம்மா, அது நம்மாள் இல்ல. அவன் ஃப்ரெண்ட்”, ரிது.

 

“இருந்தாலும் வண்டி ஓட்டிட்டு வந்தது நம்மாள்தான? அவனத்தன மொதல்ல சாச்சிங்க? அப்பறந்தான பின்னாடி இருந்தவன் விழுந்திருப்பான்?”, லா பாய்ண்ட் போல் பேசினாள் தாய்.

 

“சரி, என்ன செய்ய? அதுக்குத்தான் நாங்க மேற்கொண்டு எதுவுமே பேசாம வீட்டுக்கு வந்திட்டோம். உங்ககிட்டயும் சொல்லிட்டோம்”

 

“நா ஒன்னுஞ் செய்ய முடியாதம்மா. நைட் அப்பா வந்ததும் சொல்லிட்டுதான் மறு வேல”

 

“அம்மா, நீயே இத முடிச்சு விட்றேன். ப்ளீஸ்”

 

“ஆமா ஆன்ட்டி, அங்கிள் கோபப்பட்டா, அப்பறம் நாங்க மீட் பண்ணக்கூட முடியாது”, யாஷிகா.

 

“எப்புடியும் மூனு மாசம் இந்தப் பக்கமே வரமுடியாது ஆன்ட்டி”, சம்யு.

 

“நீங்க சொல்றதும் சரிதான். சற்றே சிந்திக்கப்பட வேண்டிய விசயம்தான்”, என்றார் யோசனை செய்வதுபோல் திலோ.

 

“எங்களப் பிரிச்ச பாவம் ஒங்களச் சேர வேணாமேம்மா”, ரிது.

 

“நீங்களும் அப்புடியே பிரிஞ்சிட்டாலும்!”, திலோ.

 

“ஆன்ட்டி, ப்ளீஸ் ஆன்ட்டி”, மீண்டும் கெஞ்சினாள் சம்யு.

 

“அப்ப எனக்கு பிரதியுபகாரமா என்ன பண்ணுவீங்க?”, பீடிகை போட்டார் திலோ.

 

“என்னவேணா செய்றோம் ஆன்ட்டி”, யாஷிகா.

 

“என்ன செய்யணும் ஆன்ட்டி?”, சம்யு.

 

சிறிது யோசிப்பதுபோல் மௌனமாய் இருந்தாள் திலோ. ரிது அமைதியைக் கலைத்தாள்.

 

“அம்மா, ரொம்ப யோசிக்காதிங்கம்மா. அப்பறம் பெரிசா ஏதாவது கேப்பீங்க”

 

“பெரிசு…, ம், பெரிசுதான். சரி நா சொல்றத கேப்பிங்கல்ல?”

 

“கேக்கறோம்”, மூவரும் கோரசாக ஒத்துக்கொண்டார்கள்.

 

“ஓக்கே, நீங்க…”, திலோ.

 

“நாங்க…”, கோரஸ்.

 

“மூனுபேரும்…”, திலோ.

 

“மூனுபேரும்…”, கோரஸ்.

 

“பெத்தவங்க சொல்ற மாப்பிள்ளையத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்”, பட்டென்று சொல்லி முடித்தார் திலோ.

 

“அதுக்கு நீங்க அங்கிள்ட்ட சொல்லிருங்க ஆன்ட்டி”, என்றாள் யாஷிகாவும் யோசிக்காமல்.

 

இதை சட்டென எதிர்பார்க்கவில்லை திலோ. சற்றே அதிர்ந்தேதான் போனார். ஆனாலும் வெளிக்காட்டவில்லை.

 

“ஓக்கே, கமான் கேர்ள்ஸ். என்ன சாப்பிடறீங்க”, என்றாள் திலோ அலட்டிக்கொள்ளாமல்.

 

“ஒன்னும் வேண்டாம் ஆன்ட்டி”, சம்யு.

 

“இருங்க வரேன்”, என்று எழுந்து சமையலறைக்குள் சென்று, உள்ளே சமையல்காரியிடம் ஏதோ பேச ஆரம்பித்தாள்.

 

“என்னடீ, அவ்ளோதானா?”, என்றாள் யாஷிகா சந்தேகமாக.

 

“இரு இன்னும் இந்த சீன் முடியல. எங்கம்மாவப் பத்தி நீ இன்னும் சரியாப் புரிஞ்சுக்கல”, என்றாள் தாயை நன்கு அறிந்த மகளாக ரிது.

 

“என்னடீ சொல்ற?”, சம்யு.

 

“வெய்ட் பண்ணுங்க. குடிக்க, கொறிக்க ஏதாவது வரும். கொறிச்சுகிட்டே நிப்போம்”, என்றாள் ரிது சற்று விளையாட்டாக.

 

ஆனால் மூவர் மனதிலும் திலோத்தமை பேச்சோடு பேச்சாக தங்கள் எதிர்காலத்தைப் பத்தி ஆணி அடித்தாற்போல் ஒரு முடிவில் இருப்பதை தெரிவித்ததை நினைத்து சற்று ஆடிப்போயிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

அடித்த ஆணி அகலுமா? அகற்றப்படுமா?

——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!