பதினொன்று
கோயிலிலிருந்து வெளியே வந்த சக்திக்கு மனதில் ஏதோ உறுத்தல்… அவனது புத்தி எதோ சரியில்லை என்று கூறியது… பெரும்பாலான நேரங்களில் அவனது புத்தி காட்டும் பாதை சரியாக இருக்கும்… ஒரு முறை நிதானமாக சுற்றியும் பார்த்தவன்… செருப்பை அணிவதற்காக குனிய… பக்கத்தில் சிலீர் என்றது! ! !
அவன் மேல் விழுந்திருக்க வேண்டிய அரிவாள் வெட்டு தவறி பக்கத்தில் நிறுத்தபட்டிருந்த ஆக்டிவாவின் மேல் விழ… சுதாரித்த சக்தி சட்டென திரும்பி பார்த்தான்… பக்கத்தில் மூவர் கொலைவெறி கண்களில் மின்ன… கையில் அரிவாளோடு நின்று கொண்டிருந்தனர்.
“ஏன்டா… அநாதை பயலே… கல்யாணம் பண்ணிட்டா மட்டும் விட்டுடுவோம்ன்னு நினைச்சியா?” ஒருவன் வெறியோடு முன்னே வர… அவனை எதிர்கொள்ள சக்தி தயாரானான்… நந்தினியின் முகத்தில் கலவரம்.
பூக்கடையில் நின்றுருந்த வெற்றி திரும்பி அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியாக… உடன் நின்றிருந்த அவர்களது நண்பர்களும் சில கணங்கள் அதிர்ந்து மீண்டனர்… திருமணம் முடித்த கோயிலுக்கு வெளியிலேயே இதை எதிர்பாராததால் முதலில் என்ன செய்வது என்று புரியவில்லை… முதலில் சுதாரித்தது சக்திவேல் தான்… வேஷ்டியை காலால் மேலே உதைத்து மடித்து கட்டியவன்.
“ஏன்டா மூணு பேரா அருவாள தூக்கிட்டு வந்துட்டா பயந்துருவேனா? இன்னும் எத்தனை பேர் வேணும்னா வாங்கடா… பார்த்துடலாம்…” என்று அவர்களை நோக்கி முன்னேற… சக்தியை நோக்கி அரிவாளை வீசினான் இன்னொருவன்… அதில் லாவகமாக குனிந்தவன்… அவனது கையை மடக்கி குத்து விட… மடங்கி சரிந்தான் அவன்… அவன் கையிலிருந்த அரிவாள் இப்போது சக்தியின் கையில்.
ரௌத்திரமாக அந்த இருவரையும் நோக்கி வேகமாக அரிவாளை வீச… அந்த இருவரும் சற்று பின்வாங்கினர்… அதற்குள் அதிர்ச்சியில் இருந்து மீண்ட வெற்றியும் மற்றவர்களும்… அந்த மூவரையும் சூழ்ந்து கொள்ள… தாங்கள் பிடிபட்டதை உணர்ந்தனர்… கோபத்தோடு முன்னே வந்த வெற்றி.
“ஏன்டா நாயிங்களா… எவ்வளவு தைரியம் இருந்தா பட்டபகல்ல எல்லாருக்கும் முன்னாடியே சக்தியை வெட்ட வருவீங்க… உங்களை முதுகுக்கு பின்னாடி வேலை பார்க்கற பேடிபசங்கன்னு எங்களையும் நினைச்சுட்டீங்களாடா…” ஆவேசமாக சப்தமிட.
“பேடி பையனில்லாம வேற என்னடா… பிச்சைகார நாயி… எங்க வீட்டு பொண்ணை கெடுத்து இப்போ கல்யாணமும் கட்டி இருக்கவன நாங்கசும்மாவா விடுவோம்… இங்க பாரு வெற்றி… உனக்கும் எங்களுக்கும் பகையில்லை… இவனை எங்க கிட்ட விட்டுடு… இது எங்க மானம் மரியாதை சம்பந்த பட்ட விஷயம்… எத்தனை பேரை வேனும்னாலும் போட்டு தள்ள தயங்க மாட்டோம்…”
அவர்கள் சக்தியை கண்டபடி பேச ஆரம்பிக்க… நந்தினி அவள் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை உணர ஆரம்பித்து அதிர்ந்தாள்… சக்திவேல் திரும்பி அவளை வெறுமையான பார்த்துவிட்டு அவர்களை நோக்கி திரும்பினான்.
“டேய் நிறுத்துங்கடா… நீங்க மட்டும் தான் மானம் மரியாதை பார்க்கறவங்க… மத்தவங்களுக்கு எல்லாம் இல்லையா? என்னங்கடா ஓவரா சவுண்டு விட்டுட்டு இருக்கீங்க?... இங்க இருந்து மூணு பேரும் ஊரு போய் சேர மாட்டீங்க… எவனா இருந்தாலும் வாங்கடா… பார்த்துடலாம்…” கையில் அரிவாளோடு முன்னேற… வெற்றி அவசரமாக அவனை தடுத்தான்.
இவன் கோபத்தில் கண்மண் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்து விட கூடியவன்… திருமணமான அன்றே இந்த ரசாபாசம் தேவையா?... தனது நண்பர்களுக்கு சமிஞ்சை செய்ய… மூவரையும் வளைத்து பிடித்தனர்.
“டேய் மாப்பிள்ளை… அரிவாள கீழே போடுடா… கீழ போடுன்னு சொல்றேன்ல…” என்று வலுகட்டாயாமாக அவனிடம் இருந்து பிடுங்கி கீழே போட்டுவிட்டு…”இவனுங்களை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய்டலாம்டா… அங்க வெச்சு பார்த்துக்கலாம்…” என்றவாறே ஒரு வேனில் மூவரையும் தள்ளி மற்றவர்களும் ஏறி கொள்ள.
இன்னொரு வேனில் நந்தினி, தேவசேனாவோடு சக்திவேல் ஏறினான்… கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தவனது முகம் கல் போல இறுகியிருக்க… நிமிர்ந்து அவனை பார்க்கவும் அச்சப்பட்டு தலைகுனிந்திருந்தாள் நந்தினி… அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.
“நீங்க ரெண்டு பேரும் உள்ள வர வேண்டாம்…” என்று நந்தினியையும் தேவசேனாவையும் பார்த்து பொதுவாக கூறிவிட்டு உள்ளுக்குள் சென்றான்.
கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு மூவரிடமும் தனக்கோ நந்தினிக்கோ என்ன நேர்ந்தாலும் அவர்களே பொறுப்பு என்று எழுதி வாங்கி அதை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர்… தங்களுடன் வந்த நண்பர்களுக்கு விடை கொடுத்து விட்டு ஒரே வேனில் ஏறிய வெற்றியும் சக்தியும் வீடு வந்து சேர்ந்தனர்.
காலையில் இருந்த மகிழ்ச்சியான மனநிலை மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் வீடு வந்து சேர… தேவசேனா அவசரமாக உள்ளே சென்று ஆலம் கரைத்து வந்தாள்… இருவரையும் நிற்க வைத்து ஆலம் சுற்றி வெற்றிஉள்ளே அழைத்து செல்ல… மெளனமாக அமர்ந்தான் சக்திவேல்.
“ஏன் சக்தி… ஏன் ஒரு மாதிரியா இருக்க?” தேவசேனா பால் பழத்தை இருவருக்கும் கொடுத்து கொண்டே வாஞ்சையாக கேட்க
“ஒன்னும் இல்ல தெய்வாக்கா…” என்று அவன் கூறினாலும் அவனது மனதில் ஓடும் எண்ணங்களை வெற்றியோடு தெய்வாவும்அறியாமலில்லை… அதுவரையிலும் நந்தினியை திரும்பி ஒரு பார்வை கூட பார்க்காமல் இருக்கிறான் என்பதையும் அவள் உணராமல் இல்லை… அவனது கோபத்திற்கான காரணங்கள் நியாயமானவை என்று நந்தினிக்கும் புரிந்து தானிருந்தது.
தேவசேனா கொடுத்த பால் டம்ளரை அவளுக்கும் தராமல் அவனும் குடிக்காமல் யோசனையிலேயே இருக்க… நந்தினி ஓரப்பார்வையால் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
“அக்கா இந்த சம்பிரதாயம் எல்லாம் வேணாம்… எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… இப்போ இவங்க காலேஜ்க்கு போய் பேசணும்… நான் கிளம்பறேன்கா…” என்று பாலை குடிக்காமல் வைத்து விட்டு கிளம்ப.
“டேய் சக்தி… பால் பழமாச்சும் முடிச்சுட்டு போ… அதுதான் முறை…” தெய்வா பதட்டமாக கூற.
“நடந்தது எதுவுமே முறை இல்லையாம்… இதுல மட்டும் என்னக்கா முறை வேண்டி இருக்கு?” கடுப்பாக தெய்வாவிடம் கூறிவிட்டு… நந்தினியை நோக்கி.
“உன்னோட யுனிபார்ம் சேரி காஞ்சு போச்சுன்னா… அதை சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு… காலேஜுக்கு டைம் ஆகுது…” நேற்றைய தினம் முழுக்க யுனிபார்ம் சேலையிலேயே இருந்துதிருந்தாள்… காலையில் கட்டி கொண்ட கூரை புடவையை தவிர்த்து அவளிடம் இருந்தது அந்தவொரு புடவைதான்… நந்தினி மெளனமாக தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல… தெய்வா திட்ட துவங்கினாள்.
“ஏன் சக்தி… இப்போ தான் கல்யாணமே ஆகியிருக்கு,... ஒரு சடங்குமே வைக்கல… அதுக்குள்ளே இப்படி அந்த பொண்ணை காலேஜுக்கு விரட்டற… பாவம் டா…”
“அக்கா… யாருக்கும் பாவம் பார்க்கற நிலைமைல நான் இல்ல… எனக்கு ஒண்ட கூட வீடு இல்லாத நிலைமைல இந்த பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்கறதே நிஜமா அசிங்கமா இருக்கு… இதுல சடங்கு அது இதுன்னு இன்னும் என்னை அசிங்கப்படுத்தாதீங்க…”
அவனது நிலைமை அவனுக்கு எவ்வளவு சங்கடத்தை கொடுத்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தேவசேனா அவனை மேலும் கடுப்பில் ஆழ்த்த விரும்பவில்லை… மெளனமாக சமையலறை நோக்கி போனாள்.
“சரிங்க சாரே… இன்னைக்கு மத்தியானமாச்சும் நந்தினியை இங்க சாப்பிட வெச்சுட்டு கூட்டிகிட்டு போங்க… உங்க பிடிவாதத்த விட்டுடுவீங்களா?” குத்தலாக கூறிவிட்டு சென்ற தேவசேனாவை பார்த்து சிரித்தான்.
“அக்கா… இப்போ போய் காலேஜ்ல பேசிட்டு… லஞ்சுக்கு வந்திடறேன்…”என்று சமாதான உடன்படிக்கையை நீட்ட… வெற்றி சிரித்து கொண்டார்.
“அக்காவும் தம்பியும் எதையோ பேசி சமாதானத்துக்கு வாங்க…” என்று மீண்டும் அவர் சிரிக்க… அவரோடு சக்தியும் சேர்ந்து கொண்டான்.
“சரிங்கண்ணா… கிளம்பறேன்…” என்று அவன் கிளம்ப… அவனோடு கல்லூரி சீருடையில் நந்தினி… புது தாலியின் ஈரம் காயாமல்… குங்குமம் கலையாமல் அவனுடன் செல்ல… அதை பார்த்த வெற்றியின் மனமும் தெய்வாவின் மனமும் கனத்தது.
********
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… இந்த பிரச்சனைய நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு ரொம்ப யோசனையாவே இருந்துது… ஆனா இப்போ சந்தோஷமா இருக்கு…” நிம்மதி அடைந்த மனதுடன் சக்திவேல் பிரின்சிபாலிடம் நன்றி உரைத்தான்.
“இதுல என்ன இருக்கு சக்திவேல்… உங்களை நான் எவ்வளவு வருஷமாபார்த்துட்டு வரேன்… உங்க ஜென்யுனிட்டி எனக்கு தெரியும்… நந்தினிய ஸ்டுடன்ட்டா ஒரு ரேன்க் ஹோல்டரா எனக்கு ரொம்ப பிடிக்கும்… யூ போத் டிசெர்வ் இட் சக்திவேல்…” அவரும் மனம் திறந்து கூற… புன்னகைத்த சக்திவேல்.
“தேங்க்ஸ் மேடம்…” என்று மீண்டும் நன்றி கூற… நந்தினியிடம் திரும்பிய பிரின்சிபால்.
“நந்தினி… திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நீ நின்றது எனக்கு ஷாக்கா தான் இருந்தது… ஆனா சக்தி ஏதோ டைட் கார்னர்ல தான் இப்படி பண்ணிருக்கார்ன்னு கண்டிப்பா நம்பறேன்… உன்னை ஹாஸ்டலுக்கு ரிகமென்ட் செய்றேன் நந்தினி… ஆனா கோல்ட் மெடல் வாங்க வேண்டியது உன் பொறுப்பு… ஓகே வா…” அன்போடு கண்டிப்பும் சேர்த்து கூறிய பிரின்சிபாலை நன்றியுடன் பார்த்தாள் நந்தினி.
“கண்டிப்பா மேம்…”
அவரிடம் பேசிவிட்டு வெளியே வரும் வரை நந்தினியை திரும்பியும் பார்க்கவில்லை சக்திவேல்… அவளாக அவனிடம் பேசவும் தயக்கமாக இருந்தது… காலையில் நடந்த சம்பவமும் அதில் அவளது உறவினர்கள் வெறியோடு நடந்து கொண்ட முறையும் கூறிய முறையற்ற வார்த்தைகளும் அவளை அவனிடமிருந்து சற்று தள்ளி நிற்க வைத்தது குற்ற உணர்வில்.
மெளனமாக கல்லூரியின் உள்சாலையை கடந்து கொண்டிருந்த சக்திவேலின் மனதில் கோபம் மிகுந்திருந்தது… இதே கல்லூரியில் கௌரவமாக இத்தனை வருடங்களை கடந்து வந்து… இப்போது படிக்கின்ற மாணவியை அவசர திருமணம் செய்தவன் என்கிற பெயரை சுமப்பது அவனது மனதை அழுத்தியது.
கல்லூரி பாடவேளைஎன்பதால் மாணவிகள் நடமாட்டம் இல்லையென்றாலும் அவ்வப்போது கடந்து செல்பவர்களின் கூரிய பார்வையை தவிர்க்க பெரும்பாலும் தலையை நிமிர்ந்து பார்த்திராமல் சென்று கொண்டிருந்தவனை ஓர கண்ணால் அவ்வப்போது பார்வையிட்டு வந்த நந்தினிக்கும் அவனை நினைத்து சிறிது அச்சம் இருந்தாலும்… அப்படி கடந்து செல்பவர்களை நேர்கொண்டு நிமிர்ந்து எதிர்கொண்டாள்!
அவளுக்கு சிறிதும் தயக்கமில்லை… எது இவன் என் கணவன் என்ற கர்வத்தை கொடுத்தது என்பதை அவளே அறியவில்லை… ஆனாலும் அவனுடன் இணைந்து நடந்து செல்வது என்பது பெரும் சாதனையாக பட்டது அந்த பேதைக்கு… அவன் மனம் அறியாமல்!
“சரி… வேறென்ன வேணும்?” இறுகிய கல் போல முகத்தை வைத்து கொண்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி சக்திவேல் கேட்டபோது நந்தினியின் மனதில் பழைய குறும்பு தலை தூக்கியது.
“எனக்கு ஒரே ஒரு உம்மா போதும்…” என்று கூறிபார்க்கலாமா என்று மனதில் நினைக்கும் போதே கிளுக் என்ற சிரிப்பு அவளிடம் இருந்து எட்டிப்பார்க்க… அவளை பொசுக்கி விடுவது போன்று பார்த்து வைத்தான் சக்திவேல்… அவசரமாக தலையை மீண்டும் குனிந்து கொண்ட நந்தினி.
“ஒன்னும் வேண்டாம்…” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்ற குரலில் கூறியவளை… இன்னமும் முறைத்தான்.
“இருக்கறது ஒரே ஒரு சேரி… அதை வெச்சே மூன்று மாசம் ஓட்டிடுவியா ஹாஸ்டல்ல… வேற ஒரு மண்ணும் வேணாம்ல…” கடுப்பாக அவன் கேட்ட போதுதான் அவன் எதை கூறுகிறான் என்பதே விளங்கியது நந்தினிக்கு… ஓரகண்ணால் அவனை பார்த்து உதட்டை சுளித்து கொண்டாள்.
“ச்சே… இந்த ஹிட்லர் புத்தி தெரிஞ்சும் இப்படி ஏமாந்துட்டு இருக்கேனே… பக்கி… பக்கி… நந்து இப்படியா பக்கியா இருப்ப…” தன்னை தானே திட்டி கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க… அங்கு வெப்பம் நூறு டிகிரியை தாண்டி கொண்டிருந்தது.
“இங்க என்ன பொழப்பு இல்லாம இருக்கேன்னு நினைச்சியா? ஹாஸ்டல்ல தங்க என்ன வேணுமோ அதை வாங்கிக்க… புக்ஸ் ஏதாவது வேணும்னாலும் சொல்லு… அதை விட்டுட்டு இப்படி கேனத்தனமா உக்கார்ந்துட்டு இருந்த… எனக்கு இருக்க கோபத்துல கன்னம் பழுத்துடும்…” கறாராக கூறியவனை கண்டு மனதில் சிறிது பயம் வந்தாலும்… கூடவே அவளது மனசாட்சி குரல் கொடுத்தது.
“இதுக்கெல்லாம் பயந்தா ஹிட்லர எப்படி நந்து வழிக்கு கொண்டு வருவ? பீ பிரேவ் நந்து… பீ பிரேவ்…” தோளை தட்டி கொடுத்த மனசாட்சியின் அறிவுரையை ஏற்ற நந்தினி.
“இந்த ஒரு செட் யுனிபார்ம் போதும்… நான் மேனேஜ் பண்ணிக்கறேன்… அப்புறம்… ரெண்டு செட் ட்ரெஸ்… ஒன்னு சுடிதார் இன்னொன்னு சேரி போதும்… அப்புறம் வாளி, மக், மத்ததெல்லாம் என் ப்ரெண்ட்ஸ் கூடஷேர் பண்ணிக்கறேன்…” பொறுப்பாக கூறுவதாக நினைத்து அவள் கூற… அதற்கும் அங்கு அனல் பறக்க… ஒன்றும் புரியாமல் பார்த்தாள் நந்தினி.
“என்ன வேணும்னாலும் வாங்கிக்க… என் பொண்டாட்டி யார்க்கிட்டவும் எதுக்காகவும் நிற்க தேவையில்லை…” என்று அவன் கூறியபோது லட்சம் பூக்கள் மனதில் பூக்க மலர்ந்தவள்… அடுத்து அவன் கடித்து குதறி வைத்ததை கேட்டபோது முழுவதுமாக வாடினாள்.
“ஏன் என்னால வாங்கி தர முடியாதுன்னு நினைச்சுகிட்டு இப்படி சொல்றியா? என்னோட சம்பாத்தியத்துல உனக்கு எதையும் வாங்கி தர முடியாத பிச்சைக்காரனா உங்க வீட்டாளுங்க வேணும்னா நினைச்சுக்கலாம்… அப்படி ஒரு நிலைமைல நான் கட்டிகிட்டவள நிறுத்தமாட்டேன்… அப்படி ஒரு நிலைமையும் எனக்கு கிடையாது… அந்த நம்பிக்கை உனக்கு இருந்துச்சுன்னா ஒழுங்கா உனக்கு என்னன்ன வேணுமோ அதை வாங்கு…”
கோபமும் குரோதமுமாக அவன் கூறுவதை கேட்டபோது அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை… வார்த்தைகள் அவளை காயப்படுத்த… அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது.
“அப்படியெல்லாம் நான் நினைக்கல…” அவன் கூறுவதை மறுக்கும் துடிப்போடு நந்தினி கூற.
“வேற எப்படி நினைச்சு இருந்தாலும் சரி… நீயா எதையாவது நினைச்சுகிட்டு என்னை வெச்சு ப்ளே பண்றதை இதோட விட்டுடு… காலைல ஒவ்வொருத்தனும் பேசினதை கேட்டல்ல…” கடுமையாக வந்த மறுமொழி அவளை தீவிரமாக குத்தி கிழிக்க… அவனுக்கு அருகில் வந்து அமர்ந்த நந்தினி… அவன் கண்களை நேராக பார்த்து.
“நான் உங்களை வெச்சு ப்ளே பண்ண நினைக்கல… நினைக்கவும் மாட்டேன்… நான் உங்களை லவ் பண்ணது நிஜம்… அதைதான் நான் அங்க சொன்னேன்…” வார்த்தைகளை எண்ணி எண்ணி கோர்த்து அவன் முன் உதிர்க்க.
“ஹும்ம்ம்… மண்ணாங்கட்டி லவ்வு… லவ்வாம் லவ்வு… கடுப்பேத்தாத! நீ அதுக்கப்புறம் சொன்னதை லவ்வுன்னு எவன் ஒத்துக்குவான்? அட்லீஸ்ட் உனக்கு அதுக்கு அர்த்தமாச்சும் தெரியுமா? சொல்ல வந்துட்டா…” அவனது கோபத்தை கொட்டி கொண்டிருக்க… நந்தினிக்குள் இருந்த குறும்பு பெண் எட்டி பார்த்தாள்.
இதுவரை குற்ற உணர்ச்சியை கொடுத்து வந்த வார்த்தைகள் திருமணம் ஆகிவிட்ட நிலையில் வெட்கத்தை தருவிக்க… அவனை வம்பிழுக்க தோன்றியது… அவனுக்கு இன்னும் அருகில் அமர்ந்து… தைரியத்தை எல்லாம் சேர்த்து அழைத்து கொண்டு… அவனது சட்டை காலரை தன் முகத்தை நோக்கி பற்றியிழுத்தவள்.
“அர்த்தத்தை சொல்லித்தர தான் நீங்க இருக்கீங்களே மாமா…” ஹஸ்க்கியான குரலில் அவள் கூற… மிக அருகில் இருந்த அவளது உதடுகளோ என்னை முத்தமிட மாட்டாயா என்றழைக்க… திண்டாடி போனான் சக்திவேல்… இதுவரை அவளிடம் காட்டிய கோபத்தை எல்லாம் அவள் ஒரே வார்த்தையில் சின்னாபின்னபடுத்த… என்ன செய்வது என்று புரியாமல் அவனுக்கு புரையேறியது.
“பாத்து பாத்து…” என்று தலையை தட்டியவள்…”நான் இங்க இருக்கும் போது வேற யார் மாமா உங்களை நினைக்கறது?” குறும்பாக அவள் கேட்க… அவளிடமிருந்து தனது சட்டை காலரை மென்மையாக பிரித்தவன்.
“அடங்கு நந்தினி… என்ன வாய் மறுபடியும் நீண்டுட்டு இருக்கு?” அதுவரையில் உயர்ந்திருந்த சுருதி படிப்படியாக குறைந்து கடைசியில் கிசுகிசுப்பானது.
“என் வாய் எப்போவும் போல அப்படியே தான் மாமா இருக்கு… வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருங்க…” அவனை போலவே அவளும் கிசுகிசுப்பாக கூற.
“உன்னை இவ்வளவு திட்டறேன்… கொஞ்சமாவது ஏதாவது சீரியஸ் ரியாக்ஷன் காட்டறியா? உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?”
“அதையும் நீங்களே பார்த்து சொல்லுங்க மாமா…” அவனை தன்னால் முடிந்தவரை வம்பிழுக்க… தலையில் அடித்து கொண்டு வாகனத்தை கிளப்பினான்… வேண்டிய பொருட்களை வாங்கி கொண்டு வெற்றியின் விருந்துண்டுவிட்டு… மாலையில் கல்லூரிக்கு மீண்டும் அழைத்து சென்றான்… ஹாஸ்டலில் ஒப்புவிக்க.
கடைசியாக ஒருமுறை முயற்சித்து பார்க்கலாம் என்று மீண்டும் அவனிடம் பேச்சு கொடுத்தாள் நந்தினி.
“ஹாஸ்டல்ல தான் இருக்கனும்ன்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் தினமும் பார்க்கவாவது வரட்டா? ப்ளீஸ்…” முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க… நிர்தாட்சண்யமாக மறுத்தான்.
“முடியாது… நான் இனிமே காலேஜ் டிரிப் ஓட்ட மாட்டேன்… அதனால இங்க வரவும் மாட்டேன்…” கறாராக அவன் சொல்வதை கேட்டபோது நந்தினிக்கு ஏமாற்றமாக இருந்தது.
“ஏன்… ஏன் ஓட்ட மாட்டீங்க?” அதே ஏமாற்றத்தோடு அவள் கேட்க.
“இனிமே எந்த முகத்தை வெச்சுட்டு அந்த பொண்ணுங்களை பார்க்க சொல்ற? உங்க பொண்ணை நம்பி அனுப்புங்கன்னு ஒவ்வொரு பேரன்ட்ஸ் கிட்டவும் என்னால எப்படி கேட்க முடியும்? செந்தில் தான் இனிமே வருவான்… நான் எடுக்க மாட்டேன்…” வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தாளித்து கொண்டிருந்தவனை பரிதாப முகத்தோடு பார்த்து கொண்டிருந்தவள்… சக்திவேல் இப்படி கூறவும் சட்டென மலர்ந்தாள்.
“நிஜமாவா… இனிமே காலேஜ் டிரிப்புக்கு வர மாட்டீங்களா? வாவ்…” அநியாயத்திற்கு சந்தோஷபட்டவளை ஒரு மார்கமாக பார்த்தான் சக்திவேல்… இவளுக்கு என்னவாயிற்று என்று!
“ஹப்பா… அவ உங்களை சைட் அடிப்பாளே இவ உங்களை சைட் அடிப்பாளேன்னு கவலை இல்லாம இங்க இருக்கலாம்… தேங்க்ஸ் மச்சி…” கண்ணடித்து விட்டு நந்தினி போக.
அடக்கடவுளே எந்த பக்கம் பால் போனாலும் கோல் போட்டு தாக்கறாளே… இவளை எப்படித்தான் சமாளிப்பது என்று புரியாமல் அவளை ஹாஸ்டலில் விட்டு கிளம்பினான் சக்திவேல்… இருபத்திநான்கே மணி நேரத்தில் தலைகீழாக மாறிவிட்ட வாழ்கையை நினைத்து பெருமூச்சு விட்டபடி வாகனத்தை செலுத்தியவனுக்கு… அடுத்து என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக தன் முன் நின்றது.
பன்னிரண்டு
ஹாஸ்டலில் சேர்ந்து விட்ட நந்தினிக்கு நேரத்தை நெம்பி தள்ள வேண்டியிருந்தது… பகல் நேரங்களில் பெரும்பாலும் வகுப்பறையிலும் பரிசோதனை கூடத்திலும் நூலகத்திலும் கழிந்தாலும் இரவில் சக்தியின் நினைவு வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவன் எங்கு தங்கியிருப்பான்… என்ன உண்டிருப்பான்… என்று மனம் தவிக்க… ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவை உண்ணாமல் நேரம் போவது தெரியாமல் அளந்து கொண்டிருப்பாள்… யாராவது கவனித்து ஊக்கினால் ஒழிய அவள் அந்த இடத்தை விட்டு நகர்வது இயலாத காரியமாக இருந்தது… அவனை மனதுக்குள் கொண்டு வராதவரை இருந்த தெளிவும் நிம்மதியும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க துவங்கினாள் நந்தினி.
ஆனால் இந்த உணர்வுகள் அனைத்தும் படிக்கும் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் காணமல் போய் பாடங்களில் ஆழ்ந்து விடுவதை அவளே உணர்ந்து தன்னை முன்பை விட மிகவும் அதிகமாக புத்தகங்களில் புதைத்து கொள்ள ஆரம்பித்தாள்… தன்னை மறந்து படித்து கொண்டிருப்பது அவளது தினசரி வழக்கமாகி போனது.
சக்தி கூறியது போலவே அதற்கு பின் கல்லூரிக்கு வருவதை சுத்தமாக நிறுத்தியிருந்தான்… செந்தில் அந்த டிரிப்பை எடுக்க… மாலை வேளையானால் அவனை காண தவித்த இதயத்தோடு அவள் வேன் ஸ்டேன்ட் பக்கம் போனாலும் செந்திலை மட்டுமே பார்க்க முடியும்… அவள் ஏமாந்து செல்வதை பார்த்த செந்தில்.
“அக்கா… அண்ணன் இனிமே டிரிப்புக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க…” ஒவ்வொரு நாளும் வந்து ஏமாந்து செல்லாதீர்கள் என்று அவன் கூறாமல் கூற… கண்களின் ஓரம் கரித்தது நந்தினிக்கு.
“சரி செந்தில்…” என்று ஜீரணிக்க முயன்றாலும் அவளது மனது அவ்வளவு விரைவாக ஏற்கவில்லை… செந்திலுக்கோ சக்தி கூறியது காதில் ஒலித்தது.
“பேசுன ஒவ்வொருத்தன் வாயையும் அடைக்கணும்டா… அவனுங்க கிட்டவெல்லாம் காட்டனும்… பிச்சைக்காரபயன்னா சொன்னீங்க… பாருங்கடா உங்க பொண்ணைராணி மாதிரி வெச்சுருக்கேன்னு காட்டனும்…” அவன் கோபத்தில் கொதித்து கொண்டு கூற.
“அண்ணே… அக்கா உங்க வீட்டம்மாண்ணே… அவங்க யாரோ பொண்ணுல்லை…”சக்தியின் பேச்சிலிருந்த தவறை அவன் உணராமல் கூறியதென்று எண்ணி திருத்த பார்க்க… அவனோ அது தெரிந்ததுதான் என்று அவனுக்கு உணர்த்தி உதடுகளை ஏளனமாக வளைத்தான்.
“ப்ச்… விடுடா…” செந்திலின் வாயை அடைக்க.
“அண்ணே… அது விட கூடியது இல்ல…” என்று எண்ணிக்கொண்டான்… மனதில் நினைத்தாலும் சக்தியிடம் கூறவில்லை… அவனது மனம் செந்திலுக்கு புரிந்தது ஆனால் இன்னொரு மனமோ நந்தினிக்காக பரிதாபப்பட்டது… அவளது ஏமாற்றம் அவனது மனதுக்கு கஷ்டமாக இருந்தது… கல்லூரி உள்ளே செல்ல திரும்பியவள்… மீண்டும் செந்திலிடம் திரும்பி.
“நேரத்துக்கு சாப்பிடறாங்களா செந்தில்…?” கவலையாக அவனிடம் கேட்க.
“கரூர் வந்தாதானக்கா தெரியும்… அண்ணன் இங்க வந்தே ரெண்டு வாரமாச்சே… உங்களை இங்க விட்டுட்டு போனவங்கதான்…”
“ஏன்… எங்க இருக்காங்க? அப்போ வீடு எதுவும் பார்க்கலையா?” சற்றே பதட்டமாக கேட்க
“வீடு இன்னும் பார்க்கலைக்கா… ஆனா அண்ணன் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் சரக்கேத்திட்டு இருக்காங்கன்னு மட்டும் தான் தெரியும்… லாரி செகன்ட் ஹான்ட்ல எடுத்து இருக்காங்கல்லக்கா… உங்க கிட்ட சொல்லலையா?” அப்பாவியாக அவன் கூறிவிட்டு அவளையே திருப்பி கேட்க… அவள் சற்றும் அறியாத தகவலால் அவளது மனம் காயப்பட்டது… தன்னிடம் கூறவே இல்லையே… ஆனால் இந்த விஷயத்தை எல்லாம் கூறுமளவு அவனென்ன உன்னிடம் தினமும் கொஞ்சிகொண்டா இருக்கிறான் என்று மனம் இடித்துரைத்தது.
“சொல்லலை செந்தில்…” ஏமாற்றமாக கூறிவிட்டு விடுதிக்கு சென்று படுக்கையில் விழுந்தாள்… கண்கள் கரித்தது… தனக்காக யாருமில்லையே என்று மனம் சுயவிரக்கத்தில் கலங்க… கொண்டவனும் தனக்காக இல்லையே என்ற கழிவிரக்கம் அவளை படுத்த… விடுதி மெஸ்ஸுக்கு செல்லாமல் உணவையும் உண்ணாமல் அழுதே கரைந்தாள்… தன் தாய் தன்னருகில் இருந்திருந்தால் அவளது மடியில் தலைவைத்து படுத்திருப்பாள்… எதற்கும் கொடுத்து வைக்காத தனது நிலை அவளை என்னன்னவோ எண்ண வைத்தது.
“என்னடி… முகம் எல்லாம் இப்படி வீங்கி போயிருக்கு? அழுதியா நந்தினி…?”
இருண்டிருந்த அறையில் டியுப்லைட்டை ஆன் செய்து விட்டு வகுப்பு தோழியும் இப்போது அறை தோழியுமாகி விட்ட பார்கவி நந்தினியை உலுக்கி எழுப்ப… வெளிச்சம் கண்களை கூச முயன்று இமைகளை பிரித்தாள் நந்தினி.
“இல்ல…” மூக்கை உறிஞ்சி கொண்டே அவள் கூறுவதை வைத்தே அவளது அழுமூஞ்சித்தனத்தை கண்டுகொண்ட பார்கவி.
“ஏன் நந்தினி… பேரன்ட்ஸ் ஞாபகம் வந்துடுச்சா?” நந்தினியின் திருமணம் பற்றி பார்கவி அரசல் புரசலாக கேள்வியுற்று இருந்தாலும் அவளாக வாய் திறந்து கூறியதில்லை… அதன் காரணமாக பெரிய அளவில் யாருக்கும் நந்தினியின் திருமணத்தின் உள்காரணங்கள் தெரியாமல் இருந்தது… பார்கவி கேட்ட கேள்வியில் கசப்பாக புன்னகைத்தாள்.
“அப்படியெல்லாம் இல்ல பார்கவி…”
“பின்ன… ஏன் இப்படி அழுதுட்டு இருக்க? சக்திண்ணா நினைப்பா நந்து?” தயங்கியவாறே கேட்க… கண்கள் கலங்கியது நந்தினிக்கு.
“வேணாம் கவி… என்னை தனியா இருக்க விடு… ப்ளீஸ்…” பரிதாபமாக கூறியவளை பாவமாக பார்த்தாள் பார்கவி.
“சரி… சாப்பிட்டுட்டு வந்து படுத்துக்கோ… நேரமாகிடுச்சுன்னா அந்த இட்லிய சுத்தி வெச்சுதான் உடைக்கணும்… வாடி…” சிரிக்காமல் அந்த விடுதி உணவை கிண்டலடித்தவளின் தோரணையில் சட்டென்று சிரிப்பு வந்தது நந்தினிக்கு… அழுது வீங்கிய முகத்தோடு சிரித்தவளை பார்த்து.
“குட் கேர்ள்… வா போய் சாப்பிடலாம்…” இழுத்து கொண்டு சென்று… சாப்பிட வைத்துத்தான் விட்டாள் பார்கவி… உணவை உண்டுவிட்டு பார்கவியையும் சமாளித்து விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தபோது மனம் சோர்வாக இருந்தது.
அவசரம் என்றால் தொடர்பு கொள்ள கைபேசி ஒன்றை அவளுக்கு வாங்கி கொடுத்திருந்தான்… விடுதியில் கைபேசிக்கு அனுமதியில்லாததால் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்ததை இரவு நேரங்களில் எடுத்து பார்த்து கொண்டே இருப்பாள் நந்தினி… சக்தி அவளை அழைக்கிறானா என்ற அவளது ஏக்கம் விடுதிக்கு வந்து இரண்டு வாரமாகியும் நிறைவேறவில்லை.
சமயத்தில் தன்னை நினைத்து அவளுக்கே தாழ்வாகவும் தோன்றும்… தன் நினைவே இல்லாதவனிடம் அன்பை எதிர்பார்க்கிறாயே என்று அவளது மனது அவளை சாடும்… ஆனால் அடுத்த மனமோ அது தெரிந்து தானே அவனை நீ திருமணமும் புரிந்து கொண்டாய் என்று ஆறுதல்படுத்தும்… படிக்கும் வேளைகளில் நினைவுக்கு வராத அவளது கணவன், உறங்குவதற்காக கண்களை மூடினால் இமைகளில் நர்த்தனமாடினான்.
அன்று இரவு பதினொன்றாகியும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க… அழுது ஒய்ந்த கண்கள் எரிந்தது. வெகு நேரமாக அவனது கைபேசிக்கு அழைக்கலாமா என்ற அவளது எண்ணம்கடிகார பெண்டுலம் போல ஆடி கடைசியில் அவனை ஒருவாறு அழைத்து நின்றது… அழைத்து விட்டாளே ஒழிய அவன் எடுக்கும் வரை மனம் தடதடக்க… ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் துணைக்கழைத்து கொண்டிருந்தாள்.
“என்னம்மா… ஏதாவது பிரச்சனையா?” பதட்டமாக அவன் கேட்க… தயங்கி பதிலுரைத்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… ஏன் அப்படி கேட்கறீங்க…”
“இந்த நேரத்துல கால் பண்ணதால கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்…” எங்கோ பயணித்து கொண்டு அவன் பேச.
“டிரைவ் பண்ணிட்டு இருக்கீங்களா?” ஏக்கமாக ஒலித்த அவளது குரலின் தன்மை அவனுக்கு புரியாமலில்லை.
“ம்ம்ம் ஆமா… சரக்கு ஏத்திட்டு சென்னைக்கு போயிட்டு இருக்கேன்… என்னம்மா விஷயம்…” நேராக அவன் கேட்க… ஏதாவது விஷயத்தோடு தான் உன்னிடம் பேச வேண்டுமா? இல்லையென்றால் கூடாதா என்று மனம் கொடி பிடிக்க.
“ஏன் விஷயம் இல்லைன்னா பேச கூடாதா?” கடுப்பாக அவள் கேட்க.
“சரி உனக்கு ஏதாவது புக்ஸ் வேணுமா சென்னைலருந்து…?” பேச்சை அவன் மாற்றமுயல்வதை உணர்ந்து.
“வெச்சுடுன்னு நீங்க சொன்னா வெச்சுடறேன்… அதுக்காக இப்படி பேச்சை மாத்தாதீங்க…” அவளும் நேரடியாக தாக்க… ஒரு வினாடி தடுமாறினான்… நான்கு வழி சாலையில் ஓடி கொண்டிருந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு.
“சரி… சொல்லு…” உணர்வுகள் எதையும் காட்டாத குரலில் அவன் கேட்க… என்னவென்று அவனை கேட்பது என்று புரியாமல் விழித்தாள் நந்தினி… அவனை காதலிப்பதாக கூறிவிட்டாளே தவிர… எந்த உரிமையுனர்வும் இதுவரை அவளுக்கும் தோன்றவில்லை… அவனும் அதை பற்றி கவலைப்படவுமில்லை… இப்படி இருக்கும் போது என்னவென்று அவனிடம் கேட்பது என்பது புரியாமல்.
“சாப்பிட்டீங்களா?”
அந்த கேள்வி அவனை ஏதோ ஒரு வகையில் தாலாட்டியது… வெற்றியோ, செந்திலோ தன் மேல் அன்பு வைத்திருந்தாலும் அவனது உணவை பற்றி கவலைப்பட்டதில்லை… ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை… தெய்வா வீட்டிற்கு செல்லும் போது கண்டிப்பாக வயிற்றை நிறைத்துதான் அனுப்புவாள்… ஆனால் சாப்பிட்டுவிட்டாயா என்று யாரும் கேட்டதில்லை அதுவரை… நந்தினி கேட்டது அவனுக்கு உண்மையில் சந்தோஷமாக இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை.
“ம்ம்ம் ஆச்சும்மா… நீ சாப்பிட்டியா?”
உண்மையில் அப்போது உண்டிருக்கவில்லை… விழுப்புரத்தை நெருங்கி கொண்டிருந்தவன் மேம்பால நைட் கடையில் சிக்கன் குருமாவோடு புரோட்டாவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று சென்று கொண்டிருந்தான்.
“ம்ம்ம் ஆச்சு…”
“அப்புறம்…”
“உங்களை பார்க்கணும்…” வேறு சொல்ல தோன்றாமல் நேரடியாக கேட்டிருந்தாள்!
“எதுக்கு?”
“எதுக்குன்னா? நான் உங்க ஒய்ப்… அந்த ஞாபகம் இருக்கா மிஸ்டர் சக்திவேல் உங்களுக்கு?”
“நல்லாவே இருக்கு மிசஸ் சக்திவேல்… அதுக்காக இப்போ என்ன பண்ண சொல்றீங்க?”
“எதுவும் பண்ண சொல்லலை… சும்மா பார்க்கனும்ன்னு தான் சொல்றேன்…” அவளது நக்கல் புரியாதவனா சக்தி?
“சும்மா பார்க்கணுமோ சுமந்துகிட்டு பார்க்கணுமோ? நான் வெட்டியா உட்கார்ந்துட்டு இல்ல… இப்போ ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பாரு… இப்போதைக்கு கரூர் வர்ற ஐடியா இல்ல எனக்கு…” கறாராக முடித்தவனை நினைக்கும் போது கோபத்தோடு எரிச்சலும் போட்டி போட்டது.
“என் வேலைய நான் சரியாத்தான் செஞ்சுட்டு இருக்கேன்… நீங்கத்தான் என்கிட்டே ஒண்ணுமே சொல்றதில்ல பேசறதும் இல்லை… இன்னைக்கு செந்தில் சொல்லி தான் தெரியும் நீங்க கரூர்ல இல்லைன்னு… அப்புறம்…” பொரிந்து கொண்டிருந்தவள் சற்று இடைவெளி விட்டு…” புதுசா லாரி வாங்கியிருக்கீங்கன்னு… ஏன்சொல்லலை?”
“உன்கிட்ட எதுக்கும்மா சொல்லணும்? எனக்கு எத்தனையோ வேலை இருக்கும்… வேலைக்காக ஏதாவது வாங்க வேண்டியிருக்கும்… அத்தனையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா?”
அவனுக்கு புரிபடவே இல்லை… எதற்காக சொல்ல வேண்டுமென்று… இதுவரை சொல்வதற்கு யாருமில்லாமல் பழகி கொண்டவன்… அதுவே இப்போதும் தொடர்கிறது என்பதை அவனையும் அறியாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்… அதை கேட்ட நந்தினிக்கு மனம் வலித்தது… ஆனாலும் அவனது இயல்பையும் சூழ்நிலையும் கவனத்தில் கொண்டு அவனது வார்த்தைகளை ஜீரணிக்க முயன்றாள்.
“நான் உங்க ஒய்ப்ன்னு ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு நியாபகப்படுத்தனும் போல இருக்கு…” கம்மிய குரலில் அவள் கூற.
“அப்படீன்னா என்கிட்டே நீ சொன்னதெல்லாம் பொய்யா?” தலையுமில்லாமல் வாலுமில்லாமல் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியவில்லை.
“புரியல…”
“எனக்கு கலெக்டராகனும் அதாகனும் இதாகனும்ன்னு அளந்து விட்டியே… அதெல்லாம் சும்மாவா? படிக்கனும்ன்னு அழுத? இப்போ கல்யாணம் பண்ணிகிட்டா உடனே குடும்பம் நடத்த ஆரம்பிக்கனும்ன்னு நினைக்கறியா? இதுதான் உன்னோட தேவையா நந்தினி?” நின்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக கூற… நந்தினி கண்கள் கலங்க வார்த்தைகளுக்கு தடுமாறினாள்.
“சக்தி… ஏன் இப்படி…” வார்த்தைகள் வெளியே வராமல் தடுமாறி கம்மியது அவளுக்கு.
“பின்ன… அதுதான் உன்னோட தேவையா இருந்தா உங்க அப்பா பார்த்த பையனையே கட்டி இருந்திருக்கலாம்ல… எந்த பிரச்னையும் இல்லாம…”
“நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நான் நினைக்கவே இல்ல… இப்படியெல்லாம் தப்பு தப்பா பேசாதீங்க?”
“நான் தப்பா பேசல… உன் நினைப்பு தப்பா இருக்கு… படிக்கற வயசுல இதெல்லாம் தேவையே கிடையாது…”
“என் நினைப்பு தப்பால்லாம் இல்ல… உங்களை லவ் பண்றேன்… அதுக்காக என்னோட லட்சியத்தை விட்டு கொடுத்துடுவேன்னு எல்லாம் நினைக்க தேவையில்லை… ஆனா உங்களுக்கு லவ்னா என்னன்னே தெரியல… காட்டுமிராண்டித்தனமா உங்க நினைப்புத்தான் தப்பா போகுது…”
“ஆமா காட்டுமிராண்டிதான்… தெரிஞ்சு தானே கட்டிகிட்ட?”
அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மௌனமாகினாள்… அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை… சக்திவேலுக்கு அவள் தனது மனைவி என்ற நினைவு இருந்தாலும் அவளை அந்த நிலையில் வைத்து பார்க்கவும் முடியவில்லை… அவளை காதலிக்கவும் முயற்சிக்கவில்லை… காதலென்ன கடையில் வாங்குகின்ற பொருளா? நினைத்தவுடன் வாங்கி கொள்ள என்று நினைத்துக்கொண்டாள்.
“சாரி சக்தி… சத்தியமா உங்க கிட்ட பேசற ஆசைலதான் உங்களுக்கு போன் பண்ணினேன்… வேற எந்த எண்ணமும் இல்ல…” என்று படபடத்தவள்… சற்று இடைவெளி விட்டு… “உடம்பை பார்த்துகங்க… நேரத்துக்கு சாப்பிடுங்க… நேரத்துக்கு தூங்குங்க… வெச்சிடறேன்… இனிமே நான் உங்களுக்கு கூப்பிட மாட்டேன்…” என்று கைபேசியை அணைத்து வைத்தாள்.
அவள் வைத்துவிட்டாலும் கைபேசியையே பார்த்து கொண்டிருந்தான் சக்திவேல்… சற்று அதிகமாகத்தான் பேசி விட்டேனோ? அவளும் யாருமில்லாமல் தான் இருக்கிறாள் என்பது அப்போதுதான் அவனுக்கும் உரைத்தது… அந்த சிறு பெண்ணிடம் போய் உன்னுடைய கோபத்தை காட்டுவதா? என்று அவனது மனம் அவனை சாட… அவளது எண்ணிற்கு அழைத்தான்… அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வர… மனமே இல்லாமல் லாரியை கிளப்பினான்.
******
அடுத்த நாள் எழுந்தபோதே தலைவலித்தது நந்தினிக்கு… சோர்வாக இருந்தது… இரவு அவளது கணவனிடம் செய்த தர்க்கமும் அவனது வார்த்தைகளும் அவளை வெகுவாக காயப்படுத்தியிருக்க… இனி அவனை தானாக அழைக்க போவதில்லை என்ற அவளது தீர்மானமும் அவளது கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது.
அன்று முழு நாளும் பரிசோதனை கூடத்தில் இருக்க வேண்டி இருக்கும்… ஐந்து மணி நேர செய்முறை வேறு அவளை மிரட்டியது… ஓய்வுக்காகவும் வெளியே வர முடியாது… முடிவை காட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையே பார்க்க வேண்டியிருக்கும்.
சலசலத்து கொண்டிருந்த பார்கவிக்கு பதிலை கூறிக்கொண்டே கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தவளை… மைதிலி அவசரமாக அழைத்தாள்.
“நந்து…” சப்தமாக அழைத்து கொண்டே வந்தவளை கேள்வியாக நந்தினி பார்க்க.
“ஏன்டி எருமை இப்படி கத்திகிட்டே வர?” பார்கவி மைதிலியை திட்ட
“ஏய் லூசு… ஒரு நிமிஷம் இரு… மூச்சை வாங்கிக்கறேன்…” என்றவாறு ஆசுவாசப்படுத்தி கொண்ட மைதிலி… இருவரையும் பார்த்து.
“சித்ரா வந்திருக்காடி…”
அவளது அந்த ஒற்றை வரி பார்கவிக்கு முகத்தை மலர வைக்க… நந்தினிக்கு பேய் ஒன்று வந்து முகத்தில் அறைந்தது போலிருந்தது.