SY6

சரி © 6

மறுநாள் மாலை நண்பர்கள் இருவரும் ஒன்றாக, சம்யுக்தா மொபைலில் இருந்து அனுப்பியிருந்த லொக்கேசன்ஐப் பார்த்து வந்து சேர்ந்தனர்.

 

அது சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்த ஒரு தனியார் பள்ளிக்கூடம். அவளுக்குத் தெரிந்த அலுவலக தோழியின் அறிமுகத்தால், அங்கிருந்த அரங்கத்தை அன்று மாலை மட்டும் பயன்படுத்திக்கொள்ள பள்ளியின் தாளாளர் அனுமதித்திருந்தார்.

 

அவள் வேலையில் சேர்ந்து முதல் முறையாக வரும் பிறந்தநாள் என்பதால், அவள் கல்லூரித் தோழிகள் முதல், அலுவலகத் தோழிகள் வரை, சிறிய அளவிலாவது கொண்டாட வேண்டும் என்று, அவளை வற்புறுத்தி  ஏற்பாடும் செய்தாயிற்று.

 

ஆனால் நண்பர்கள் இருவரும் சிறிய அளவில் பத்து பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்து வந்திறங்கினர். ஆனால், அங்கு குறைந்தது நூறு நபர்களாவது வந்திருப்பார்கள் என்று தெரிந்தது.

 

அந்த பள்ளியில் அமைந்திருந்த சிறிய அரங்கின் அலங்காரத்தை வியந்தவாறு, என்னடா இது கோலாகலமா இருக்கு?, என்றான் யோகி.

 

நல்லா வசதியுள்ளவங்க இந்த மாதிரியெல்லாம் கொண்டாடுறது இங்கல்லாம் சாதாரணம்டா!, சித்து.

 

பேசிக்கொண்டே உள்ளே நுழைந்து, சிறிய சிறிய வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கைகளில், எங்கு அமரலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

 

ஆனால் அவர்களுக்கு மிக அருகாமையில் யாஷிகாவின் குரல் கேட்டது, என்ன இவ்வளவு நேரமாச்சு? உங்களுக்காகத்தான் சம்யு காத்துட்டு இருக்கா! வாங்க போகலாம்,  என்று அந்த அரங்கின் மற்றொரு வாயிலின் அருகில் தேவதைபோல் நின்று கொண்டிருந்த சம்யுவை நோக்கி இருவரையும் அழைத்துச் சென்றாள்.

 

தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு தேவதைபோல் சம்யு தெரிந்தாலும், அவர்களை அழைத்துக்கொண்டு செல்லும் யாஷிகாவும் ஒரு தேவதைபோல்தான் அவர்களுக்குத் தெரிந்தாள்.

 

தோழிகள் இருவரைவிட ஒரு படி மேல் என்பது போல் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தாள் ரிது. இதென்ன தேவலோகமா? என்று வியந்து, எதுவும் பேசாமல் சம்யுவை நோக்கி ரிது, யாஷிகாவுடன் நடந்தனர் இரு நண்பர்களும்.

 

ஹாய் கைஸ்! கம்மான்!, என்றாள் சம்யு உற்சாகமாக.

 

அருகில் அவளது தாயார் அனுசியா நின்றுகொண்டிருந்தார். அம்மா, ஹீ இஸ் சித்தார்த், அன் ஹிஸ் ஃப்ரண்ட் யோகி, என்று இருவரையும் அறிமுகம் செய்தாள் சம்யு.

 

வணக்கம்மா, யோகி.

 

வணக்கம்மா, சித்து.

 

என்னப்பா சித்து, நல்லாருக்கியா? கால் சரியாயிடுச்சா?, ரொம்ப பயந்துட்டியோ?, என்று தாய் அனுசிய இருவருடனும் முதல் சந்திப்பிலேயே நன்கு பேச ஆரம்பித்துவிட்டார்.

 

தோழிகள் இருவரும் மேசை விரிப்பை சரிசெய்து அதன் மேல் பிறந்தநாள் கேக்கை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாம் சரியாக வைத்துவிட்டதை உறுதிப்படுத்திவிட்டு, அனைவரையும் அழைத்தனர்.

 

நண்பர்களும், தாயார் அனுசியாவும் அங்கு வந்தார்கள். கல்லூரித் தோழிகள், அலுவலக தோழிகள் என அனைவரும் சூழ்ந்து நிற்க சம்யுக்தா மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு பிறந்தநாள் கேக்கை வெட்டினாள்.

 

ஹேப்பி பாத்டே டூ யூ, ஹேப்பி பாத்டே டூ யூ, ஹேப்பி பாத்டே டூ சம்யு,  என்று கோரசாக அனைவரும் பாடி கைதட்ட அன்னையின் வாயில் சம்யு கேக்குத் துண்டை ஊட்டினாள். தாயும் மகளுக்கு ஊட்டி, கையில் ஒரு பரிசுப் பொருளையும் கொடுத்து ஆசீர்வதித்தார்.

 

அடுத்து ஒவ்வொருவருக்கும் கேக்கை ரிது மற்றும் யாஷிகாவின் உதவிடன் அனைவருக்கும் சம்யு வழங்கினாள். சிறிது நேரத்தில் கல்லூரித் தோழிகளில் சிலர் கேக்கின் மீதிருந்த க்ரீமை கையிலெடுத்து சம்யுக்தாவின் முகத்தில் தேய்க்க வந்தனர்.

 

அவர்களை நாசுக்காக தடுத்து நிறுத்தி, வேண்டாமே ப்ளீஸ், என்று சம்யு மறுத்துவிட்டாள். அவளின் செயல்களில் அதிக அக்கரை(!) கொண்டவனாக சித்து சம்யுக்தாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

யோகி அவனை அழைத்துக்கொண்டு, அந்த அரங்கின் ஒரு ஓரத்தைத் தேர்ந்தெடுத்து அமரச்செய்தான். அவர்கள் அமரும் வரை காத்திருந்ததுபோல் அங்கு யாஷிகாவும், ரிதுவும் வந்தனர்.

 

இந்தாங்க சாப்பிடுங்க!, என்று யாஷிகா தன்னிடம் இருந்த இரண்டு இனிப்பு மற்றும் கார வகைகளை இருவருக்கும் கொடுத்தாள்.

 

ரிது தன்னிடம் இருந்த இரண்டு தட்டுகளில் ஒன்றை யாஷிகாவிடம் கொடுத்துவிட்டு நண்பர்களின் அருகில் அமர்ந்தாள். யாஷிகாவும் தட்டை வாங்கிக்கொண்டு அமர்ந்தாள்.

 

என்ன, கிஃப்ட்ட கொடுக்கலையா?, என்றாள் ரிது.

 

கொஞ்சம் கூட்டங் கொறையட்டும், யோகி.

 

என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?, யாஷிகா.

 

அது சஸ்பன்ஸ்!, சித்து.

 

என்ன ப்ரதர், அவ்ளோ த்ரில்லா என்ன கிஃப்ட்?, என்று ரிது உறவு முறை சொல்லி அழைத்துக் கேட்டது, சித்துவுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது.

 

அது என்னன்னு சொல்றதவிட அந்த கிஃப்ட்டத்தான் வாங்கனும்னு நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சதுதான் ஹைலைட்!, யோகி குறுக்கிட்டான்.

 

அப்ப இது?, என்று யாஷிகா யோகியின் கையில் இருந்த பரிசுப் பொருளை தொட்டுக் கேட்டாள்.

 

அப்பறம் நா வேற ஒன்ன ச்சூஸ் பண்ணி வாங்கிட்டு வந்துட்டேன். தங்கச்சி முக்கியமில்ல?, என்றான் யோகி தங்கச்சியை கொஞ்சம் அழுத்தி.

 

ஆமா, அப்புறம் அவ ஏங்கிப் போயிருவால்ல?, யாஷிகா.

 

நாங்க வாங்கியிருக்க கிஃப்ட்டெல்லாம் டல்லாயிரும் போலயே!, என்றான் சித்து கவலையாக.

 

அப்படியெல்லாம் இல்ல ப்ரதர். கிஃப்ட்டெல்லாம் அளவ வச்சோ, மதிப்ப வச்சோ பெரிசா நெனக்கிறதில்ல. யார் யாருக்குக் கொடுக்கிறாங்கன்றதப் பொருத்துதான் அதுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கப்படும், என்றாள் ரிது சித்துவை ஆறுதல்படுத்த.

 

ஆனால் சித்து கவலைப்படும் அளவிற்குத்தான் இருந்தன, அங்கு சம்யுக்தாவிற்கு வந்து குவிந்த பரிசுப் பொருள்கள். சில அலுவலக நண்பர்கள் தங்கத்திலும் பரிசளித்தனர், மற்றவர்களுக்கு தெரியும்வண்ணம்.

 

ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சித்தார்த்தின் பேச்சு மட்டுமே இவர்களுடன் இருந்தது. ஆனால், பார்வை முழுவதும் சம்யுவிடமே இருந்ததை மற்றவர்கள் நன்கு அறிந்தனர்.

 

அப்போது அங்கு வந்த சம்யுக்தாவின் தாய் நண்பர்கள் இருவரையும் பார்த்து,கட்டாயம் சாப்பிட்டுட்டுத்தான் போகனும், என்றார்.

 

பரவால்ல நாங்க பாத்துக்கறோம்மா, என்றான் யோகி.

 

ஹாஸ்டல்ல தான இருக்கீங்க?, என்றார் அனு.

 

ஆமா, ஆனா…”, என்று சித்துவும் இழுத்தான்.

 

வெளியிலதான சாப்பிடுறீங்க?, அனு.

 

இல்லம்மா நாங்களே சமைச்சுக்குவோம், என்றான் யோகி.

 

இந்தக்காலத்துல இப்புடி ஒரு புள்ளைகளா?, கேட்டுக்கோங்கடி!, என்று ரிதுவையும், யாஷிகாவையும் பார்த்துச் சொன்ன அனு, மேலும், ஒனக்கு ஒங்க வீட்ல கிச்சன் எந்தப் பக்கம் இருக்குன்னாவது தெரியுமா ரிது?, என்றார்.

 

பாத்துக்கலாம் ஆன்ட்டி, என்றாள் கெத்தாக ரிது.

 

எனித்திங் ஸ்பெஷல் வீக்கென்ட்?, என்றாள் அருகில் அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த யாஷிகா.

 

ஸ்பெஷல் எல்லாம் ஒன்னுமில்ல. பட் சாப்பிடும் மைன்ட் செட்ல வரல!, என்றான் யோகி சற்று தனிவான குரலில்.

 

மைன்ட் செட் பண்ணிருவோம், என்றாள் ரிது.

 

இவர்களின் பேச்சை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு அங்கு ஒரு மனமும், இங்கு ஒரு மனமுமாக இருந்த சம்யுக்தா, அவர்கள் பக்கமாக கையை அசைத்து அருகில் வரச் சொன்னாள்.

 

வாங்க, சம்யு வரச் சொல்றா,  என்றாள் யாஷிகா.

 

எல்லோரும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா? இல்ல அதுக்கும் மைன்ட் செட்டோட வரலையா?, என்றாள் புன்னகைத்துக்கொண்டே ரிது.

 

சங்கடப்படாம வாங்கப்பா!, என்று அனுசியாவும் இருவரையும் பார்த்து அழைத்துவிட்டு, சம்யுக்தாவை நோக்கி நடந்தார். மற்ற அனைவரும் பின்தொடர்ந்தனர்.

 

அனுசியாவின் அம்மா ஒருபுறம் சித்து, யோகியுடன் நிற்க, மற்ற இரண்டு தோழிகளும் மறுபுறம் இருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டாள் சம்யு. நண்பர்கள் இருவரும் கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை கொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள்.

 

பின்பு ரிதுவும், யாஷிகாவும் தங்கள் கல்லூரி தோழிகளுடன் கதைக்கக் கிளம்பிவிட்டனர். அனுசியா மட்டும் சித்து, யோகியுடன் பேச ஆரம்பித்தார். இருவரின் பேச்சிலிருந்து அவர்களின் பழக்கவழக்கங்கள், குடும்ப சூழல் பற்றிய தகவல்கள் அனுசியாவிற்குக் கிடைத்தன.

 

ஆனால் இரு நண்பர்களும் இயல்பாக இல்லை என்பதை அனுசியாவும், மூன்று தோழிகளும் கவனித்தனர்.

 

தம்பி திலீபன் தன் நண்பர்களுடன் உள்ளே வந்தான். தன் சகோதரி சம்யுக்தாவை அவனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, பரிசுப் பொருள்களை ஒவ்வொருவராகக் கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். செல்ஃபிகளும் எடுக்கப்பட்டன.

 

ச்சே, இந்த யோசன நமக்கு வராமப் போச்சே என்று சித்து நினைத்துக்கொண்டான்.

 

தாயைத் தேடி நண்பர்களுடன் வந்த திலீபன், புதியவர்கள் இருவர் அருகில் நின்று சரளமாகப் பேசிக்கொண்டிருப்பதை கண்டான். அப்பொழுது சித்துவையும், யோகியையும் தாயார் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

திலீபனும் பலநாள் பழகியது போல் அவர்களுடன் பேச ஆரம்பித்தான். தாயார் அவர்களை அழைத்துக்கொண்டு சாப்பிடப் போகுமாறு திலீபனிடம் சொன்னாள்.

 

வழியில் பேசிக்கொண்டே போனார்கள் மூவரும்.

 

அப்பா வரலையா திலீப்?, யோகி.

 

அவர் செம பிஸிண்ணா. வேல வெளியூர்ல, திலீப்.

 

எங்க, என்ன வேல பாக்குறாரு?, சித்து இடையே அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான்.

 

இப்போ திருவாடானைல டெப்டி தாசில்தாரா இருக்காரு, ஆனா சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் ஆகிருவாரு, திலீப்.

 

அப்ப வீட்டுக்கு எப்ப வருவாரு?, யோகி.

 

அடிக்கடி வந்துருவாரு. அவருக்கு வேல மட்டும்தான் வெளியூர்ல. ஆனா, அவரோட எண்ணமெல்லாம் எங்கமேலதாண்ணா. எப்பவுமே எங்ககூட இருக்க மாதிரிதான் இருக்கும், திலீப்.

 

அப்ப, அக்கா பர்த்டேக்கு வரலையா?, சித்து.

 

வரேன்னுதான் சொன்னாரு. திடீர்னு ஒரு அவசர வேல வந்திருச்சாம். ஆனா லேட் நைட்லயாவது வந்துருவாரு. அவருக்கு சம்யுனா ரொம்பப் புடிக்கும்ண்ணா, திலீப்.

 

இந்த அண்ணாவ கொஞ்சம் கட் பண்ணா என்னாவாம்?, என்று சித்து மனதுக்குள் கேட்டுக்கொண்டான்.

 

©©¨©©

 

யோகியும், சித்துவும் தாங்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினர். இரவு சாப்பிட்டுவிட்டதால் வேறு வேலை ஏதும் அந்த இரவில் இல்லை. அதனால் உடைமாற்றி கட்டிலில் ஓய்வாக படுத்துக்கொண்டே பேச ஆரம்பித்தனர்.

 

என்ன மச்சி, நீ மூட் அவுட் ஆன மாதிரியே இருந்தியே?, யோகிதான் ஆரம்பித்தான்.

 

நீ மட்டும் ரொம்ப கலகலப்பா இருந்த மாதிரில்ல என்னக் கேக்குற!, என்றான் சித்து சிரித்துக்கொண்டே.

 

நா ஏதாவது ஸ்டடி பண்ணிட்டிருந்திருப்பேன், சமாளித்தான் யோகி.

 

ஏதாவதையா, இல்ல யாரையாவதையா?, கொஞ்சம் நக்கல் அதிகரித்தது சித்துவிடம்.

 

டே மச்சி, என்ன உடு. நீ சம்யுவையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டிருந்தத நாங்க எல்லாருமே பாத்துகிட்டிருந்தோம்னு ஒனக்குத் தெரியுமா?, யோகி.

 

பாத்துட்டீங்களா, எல்லாருமே பாத்துட்டீங்களா? என்றான் சித்து காஞ்சனா பட ராகவா லாரன்ஸ் மாதிரி.

 

டேய், விளையாடாமச் சொல்லு. ஒனக்கு சம்யுவ ரொம்பப் புடுச்சுருக்குதான!, யோகி விடாமல் நேராக விசயத்திற்கு வந்துவிட்டான்.

 

அதெல்லாம் இல்லையே, அவ இன்னக்கி பர்த்டே ட்ரஸ்ல அழகா தெரிஞ்சா! அதனாலப் பாத்தேன், சித்து.

 

அப்ப ஹார்ட்டோட இருந்த அந்த ஸ்டேச்சு(Statue) கிஃப்ட்தான் வேணும்னு அடம்புடிச்சி வாங்கினியே!, யோகி.

 

பாக்க அழகா இருந்துச்சுல்ல மச்சி

 

எனக்கு கூடத்தான்டா மச்சி சம்யு அழகா தெரிஞ்சா, நீ எடுத்த அதே கிஃப்ட் எனக்கும் புடிச்சுது. ஆனா நா ஈசியா காம்ப்ரமைஸ் ஆகிட்டேனே!, யோகி.

 

ஆனா இந்த ஒரு விசயத்துல என்னால காம்ப்ரமைஸ் ஆக முடியலயே மச்சி!, சித்து.

 

அது ஒனக்கு அவ மேல ஏற்ப்பட்ட இன்ஃபேக்சுவேசன்னு ஒத்துக்கிறியா?, யோகி.

 

ஒத்துக்கிறேன் மச்சி! ஆனா, இதையே வேற யாராவது கேட்டா நிச்சயம் உண்மையச் சொல்ல மாட்டேன்டா மச்சி!, சித்து.

 

ஆனா நேத்து இருந்த அந்த இன்ஃபேக்சுவேசன் இன்னைக்கு லவ்வா டெவலப் ஆகி இருக்கு மச்சி, படிப்படியாக சித்துவின் மனமாற்றத்தை கூறினான் யோகி.

 

“…”, சித்து சற்று அமைதி காத்தான்.

 

இருக்கா? இல்லையா?, யோகி.

 

இருக்கு மச்சி, இறுதியில் யோகியிடம் முழுவதும் ஒத்துக்கொண்டான் சித்து.

 

சரி, அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்னு உத்தேசம்?, யோகி.

 

அவ பக்கம் நெனச்சாத்தான் ஒரே அல்லா இருக்கு மச்சி!, உண்மையில் பயம் வந்தாற்போல் பேசினான் சித்து.

 

நீயே ஒரு அல்லு! அல்லுக்கு அல்லா?, என்று அவனுக்கு சற்று தைரியம் கொடுப்பதுபோல் பேசினான் யோகி.

 

என்னதான் இருந்தாலும், அவ ரேஞ்சே தனியா இருக்கே மச்சி!, சித்து.

 

இப்பச் சொல்லு, அதுதான ஒன்னோட மூட் அவுட்டுக்குக் காரணம்?, யோகி.

 

மறுபடியும் மொதல்ல இருந்தேவா?, என்றான் சித்து.

 

சற்றே சிரித்த யோகி, சரி, சரி, இதுக்குமேல இந்த டாப்பிக்கப் பத்தி பேசாம விட்டுட்டு, நைட்டெல்லாம் ரெண்டுபேரும் தனித்தனியா யோசிப்போம். ஓக்கே? என்றான்.

 

இந்த விசயத்துல நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா மச்சி?, சித்து.

 

பாத்துக்கலாம்டா!, யோகி.

 

இருவரும் உறங்க ஆயத்தமானார்கள். ஆனால் சித்து மட்டும் சம்யுவின் நினைவோடு நெகிழ்ந்திருந்தான்.

 

©©¨©©

 

சம்யுவின் வீட்டில் அனைத்து பரிசுப் பொருள்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து சித்து கொடுத்திருந்த அந்த பரிசுப் பொருளை மட்டும் தேடி எடுத்தாள்.

 

என்ன, சின்ன மேடம், எப்பவும் இல்லாத அளவுக்கு இந்த பர்த்டேல கலக்கிட்டீங்க?, கேட்டுக்கொண்டே திலீபன் உள்ளே வந்தான்.

 

திடீரென திலீபனின் குரல் கேட்டவுடன் கையில் இருந்ததை வைத்துவிட்டு மற்றொன்றை பார்ப்பதுபோல் எடுத்து பிரிக்க ஆரம்பித்தாள் சம்யு.

 

என்ன கலக்குனாக?, சம்யு.

 

என்னவா, ஃபோட்டோஸ்லாம் பாத்தேன் செம. அப்படியே என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் பார்ட்டி குடுக்க நமக்கு கொஞ்சம் வெட்றது, என்று சகோதரன் சாதுர்யமாக அவளின் சந்தோஷ தருணத்தை பயன்படுத்திக்கொண்டான்.

 

எல்லாமே செலவாயிருச்சுடா குட்டாளு!, என்று செல்லமாக மறுத்தாள்.

 

இப்டி தெரிஞ்சிருந்த கொஞ்சம் அட்வான்ஸா கேட்ருப்பேனே!, திலீப்.

 

நீ என்ன லேட் நைட்ல வந்து பார்ட்டி, அது இதுன்ற?, சட்டென கேள்விக்குத் தாவினாள்.

 

இப்பக் கேட்டா, நாளைக்கு சண்டேதான? டே டைம்ல வப்பேன்!, என்றான் சுதாரித்தவனாக.

 

உண்மையச் சொல்லு, ட்ரிங்ஸ் பார்ட்டி அரேஞ்ச் பண்றியா?

 

அய்யோ, அதெல்லாம் இல்லக்கா!, என்றான் திடீர் மரியாதையுடன்.

 

பொய் சொல்லாத!

 

ப்ராமிஸ்!

 

அது யாரு இன்னொரு மிஸ்?, அவளையறியாமல் அந்தக் கேள்வி அவள் வாயில் வந்தது.

 

இது யோகியோட டயலாக்காச்சே, ச்சே! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். அவர்களின் எண்ணங்களே அவளைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பது ஊர்ஜிதமாயிற்று அவளுக்கு.

 

சரி இரு அம்மாட்டச் சொல்லி, கொஞ்சம் வாங்கித் தரேன், சம்யு.

 

பெரிய மேடம் ஷேங்ஸன் பண்ணுவாங்களா?, திலீப்.

 

ரெக்கமண்ட் பண்றேன்டா! போடா, போய் நிம்மதியா தூங்கு. சாப்டியா?, என்று ஒப்புக்குக் கேட்டு, தம்பியை அங்கிருந்து விரட்டினாள்.

 

ம், ஆச்சு!

 

அதற்குமேல் அங்கு நின்றால், அவளை தொந்தரவு செய்வதாக இருக்கும் போல என்று எண்ணிய தம்பியும், தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.

 

தாயாரை வெகு நேரமாகக் காணவில்லை.  இன்றைக்கு எல்லாரையும் கவனித்து, சிறப்பாக செயல்பட்டதில் அம்மாவுக்கு கொஞ்சம் அலுப்பாக இருக்கும் என்று சம்யுக்தா நினைத்துக் கொண்டே மீண்டும் அந்தப் பரிசை கையில் எடுத்தாள்.

 

வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது, காரில் இருந்து தந்தை தாமோதரன் இறங்கிக்கொண்டிருந்தார். கார் சப்தம் கேட்டதும் தாயும் அறைக் கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள். கையில் எடுத்ததை மீண்டும் வைத்துவிட்டாள் சம்யுக்தா.

 

ஹேப்பீ பர்த்டே மைடியர் சைல்ட்!, என்று தந்தை வாசலிலிருந்தே சந்தோசமாக வந்தார்.

 

சம்யுக்தாவிற்கும் சந்தோஷம்! …?

©© | ©©