t6

t6

தொடுவானம் 6

 உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே…

அதிகாலையிலேயே கண்விழித்து காலைக் கடமைகளையும்  உடற்பயிற்சியையும் முடித்தவன், மருத்துவமனை செல்ல ஆயத்தமாகி வந்தான்.

அவனுக்கு முன் தயாராக இருந்த தாயைப் பார்த்ததும், “ நீங்களும் கிளம்பிட்டீங்களா ம்மா,  நான் போயிட்டு உங்களுக்கு கார் அனுப்பலாம்னு நினைத்தேன்” என்றான்.

“நானும் கிளம்பிட்டேன் தம்பி. மருமகளை பார்க்க போறோம்ன்னதும் நைட் சரியா தூக்கமே  இல்ல. அவளை இங்க வீட்டுக்கு கூட்டிட்டு  வந்தாதான் எனக்கு தூக்கமே வரும்”

அப்போது அங்கு தூங்கி எழுந்து வந்த அபி, “ என்ன மருமக? யாருக்கு மருமக? என்னம்மா உளறிகிட்டு இருக்கீங்க?“

அவளை முறைத்துப் பார்த்தவரைப் பார்த்து, “ அண்ணா, ஒழுங்கா  காலா காலத்துல  கல்யாணம் பண்ணிக்க  இல்லைன்னா  அம்மா புலம்பிப் புலம்பியே ஒரு வழியாகிடுவாங்க, பாரு காலைலயே இல்லாத மருமகள  கூப்பிடப் போறேன்னு கிளம்பி நிக்கறத”

சிரிப்புடன் கூறியவளின்  தலையில் செல்லமாகக் கொட்டியவர், “ அடியே நான் ஒன்னும்  புலம்பல ,  நிஜமாவே நம்ம வீட்டு மருமகள  கூட்டிட்டு  வரத்தான் நானும் உங்க அண்ணனும் போறோம்” என்றார்.

“என்னம்மா சொல்ற ??? பொண்ணு பார்க்க போறோமா? நேத்தே சொல்லியிருந்தா காலேஜுக்கு லீவ் போட்டிருப்பேன்ல . இவ்வளவு காலையிலயே போனா பொண்ண காட்டுவாங்களா?” படபடவென பொறிந்தவளை, அமைதிப்படுத்தியவர். அவளது அண்ணனின் ஆசையைக் கூறினார்.

ஆச்சர்யம் விலகாத முகத்துடன் தன் அண்ணனைக் கண்டவள் துள்ளிக் குதித்தபடி, ” அண்ணா… நீயாடா? ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு இத்தனை வருஷமா எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்ட இல்ல?  இரு அண்ணி மட்டும் வீட்டுக்கு வரட்டும் , இரண்டு பேரும் சேர்ந்து உன்னை வச்சி செய்யறோம்.

அம்மா,  ம்மா ப்ளீஸ் அண்ணிய பார்க்க நானும் வரேன்மா. ப்ளீஸ்… ப்ளீஸ்”  என்று கெஞ்சியவளை தோளோடு அணைத்தவன்,

 

“ நீ இல்லாமையா? போ சீக்கிரம் கிளம்புடா.  அபி… எனக்கு மட்டும்தான் அவ மேல விருப்பம் இருக்கு , இது எதுவும் அவளுக்குத் தெரியாதுடா.  அவ முதல்ல  நார்மலா ஆகட்டும், அவ மனசுல இருக்கற கஷ்டத்திலிருந்து அவ வெளிய வரனும் அப்புறம்தான் என்னோட அன்பை புரிய வைக்கனும்.  அதுவரைக்கும் எதையும் வெளிக்காட்டிக்க வேணாம்டா.”

“ ஆமா அபி, அண்ணன் சொல்றதுதான் சரி, நீ அண்ணின்னு கூப்பிட்டு அவன மாட்டி விட்றாத சரியா?”

“ ம்ம்… யோசிக்கறேன்… ஆனா அதுவா ப்ளோல வந்தா என்ன குத்தம் சொல்லக்கூடாது.  அதனால நீ என்ன பண்ற,   எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னோட லவ்வ சொல்லி அவங்கள  கல்யாணம் பண்ற ஓகே”.

“நான்  சீக்கிரம் குளிச்சு கிளம்பி வர்ரேன்.  அம்மா  நீங்க டிபன் எடுத்து வைங்க”.

அவள் செல்வதை சிரிப்புடன் பார்த்திருந்தவர், “எல்லாம் நல்லபடியா நடக்கும் பா கவலைப் படாத”.என்றார்.

மௌனமாக கேட்டுக் கொண்டான்.

அபி கிளம்பி வந்ததும் , காலை உணவை முடித்துக் கொண்டு  கங்காவைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர்.

இவர்கள், கங்கா தங்கியுள்ள அறையினுள் நுழைந்த போது,  சோக சித்திரமாக அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்த கங்காவைக் கண்டு ஆகாஷ்,

“கங்கா…”

தலையைத் திருப்பியவள்,  அவனருகே நிற்பவர்களைப்  பார்த்து கேள்வியாக அவனை ஏறிட்டாள்.

“ இவங்க என் அம்மா மஞ்சுளா, இது என் தங்கை அபி.” எனறான்

அவள் முகத்தில் சற்று மலர்ச்சியோடு கூடிய புன்னகை வந்தமர்ந்தது.

“ எப்படிம்மா இருக்கு உடம்பு , நைட் நல்லா தூங்குனியா?” என்றவன்,  அவளது உடலைப் பரிசோதித்து பின் ,”இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க “ என்று அருகில் நின்ற டாக்டர் திவ்யாவிடம் கூறினான்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த அவனது தாய்,  கங்காவின் அருகே வந்து தலைக் கோத, அபி அவளது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.  இருவருக்குமே கங்காவின் தோற்றத்தைப் பார்த்து சற்று அதிர்ச்சிதான். அவளது இயல்பான பழைய அழகு அவர்களுக்குத் தெரியாதல்லவா?

என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள் என்றே எண்ணினர் . ஆனால் அவள் முகத்திலிருந்த அளவுகடந்த சோகம், அவர்களின் மனதை வாட்டியது.

டிஸ்சார்ஜ் செய்தவுடன் எங்கே போவது ஊட்டியில் முன்பு இருந்த ஹோம்க்கு இனி போக முடியாது. ஸிஸ்டர் சாண்ட்ரா  இருந்த வரைத் தன்னைக் குழந்தை போல பாவித்து கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்.  அவர் இறந்த பின் அங்கே இருக்க முடியாமல் வெளியே வந்துதான் , தன்னை அவர்கள் துரத்தியதும், தான் இங்கு வந்த நிகழ்வும் நடந்தது.

அடுத்து எங்கு செல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்தவள், ஆகாஷின் தாயைக் கண்டதும்  மெதுவாக, “மேடம்… சார என்னை ஏதாவது நல்ல ஹோம் ல சேர்த்துவிட சொல்றீங்களா?” என்றாள்.

வாஞ்சையாக அவளது தலையைத் தடவியவர், “ ஹோம் எதுக்குமா? நீ நம்ம வீட்டுக்கு வந்திடேன். நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன். உனக்கு பழகறதுக்கு அபியும் இருக்கா, என்னம்மா சொல்ற?”

பதட்டமாக தலையை அசைத்து மறுத்தவள், “ வீட்டுக்கெல்லாம் வேண்டாம் மேடம்,  ஏதாவது ஹோம் இருந்தால் சேர்ந்துக்கிறேன். அங்க இருக்கறவங்களுக்கு தேவையான உதவிய செஞ்சிட்டு அங்கேயே இருந்துப்பேன்.”

அவளது பதட்டத்தையும் பயத்தையும் கண்டவன், “ ஓகே ஓகே… ரிலாக்ஸ் கங்கா… எங்க அப்பா பேர்ல ஆரம்பிச்ச ட்ரஸட் இருக்கு நீ அங்க வந்து இரும்மா. அங்க நாற்பது பேர் இருக்காங்க,  அவங்களோட நீயும் தங்கிக்கலாம் சரியா?”என்றான்.

“ஊட்டில எங்க தங்கியிருந்த? உன்னோட பேரண்ட்ஸ் க்கு என்ன ஆச்சு கங்கா?” மஞ்சுளா கேட்டதும்,

சற்று நேர அமைதி அந்த அறையை நிறைத்தது . தன் கைவிரல் நகங்களையே பார்த்திருந்த கங்கா மெதுவாக, “நாங்க எல்லாரும் குடும்பத்தோட வேன்ல போகும் போது ஆக்ஸிடன்ட் ஆகி எல்லாரும் இறந்துட்டாங்க. நான் பின் சீட்ல  படுத்திருந்ததால தலையில கொஞ்சம் அடிபட்டதோட தப்பிச்சிட்டேன்.

இந்த மோசமான உலகத்துல என்னை மட்டும் தனியா விட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்க” என்று கூறியவள் முகத்தை மூடிக் கதறி அழுதாள்.

கண்களில் நீர் கோர்க்க அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் அபி. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட கங்கா,

“ அங்க பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல தான் அடிபட்டிருந்த எனக்கு ட்ரீட்மண்ட் நடந்துச்சி. அங்க இருந்த ரோசிங்கற நர்ஸ்தான்  ஊட்டில இருந்த ஸாண்ட்ரா  சிஸ்டர் ஹோம்க்கு என்னை அனுப்பி வச்சாங்க. இரண்டு வருஷம் அங்க தான் இருந்தேன். போன வாரம் ஸாண்ட்ரா சிஸ்டர் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் அங்க இருக்கப் பிடிக்காம வெளிய வந்தேன்.” என்று கூறி முடித்தாள்.

அவளது குடும்பத்தினர் இறந்துவிட்டனர்  என்று அவள் கூறக்கேட்டதும், அவளின் துயரத்தைப் போக்கி தன் கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ளத் தோன்றியது.

இருப்பினும்  அவள் கூறியதைக் கேட்ட ஆகாஷின் உள்ளத்தில் ஏகப்பட்ட குழப்ப முடிச்சுகள். ‘இரண்டு வருஷத்துக்கு முன்னாடி  திடீர்னு ஊரை காலி பண்ணிட்டு படிப்பைக் கூட டிஸ்கண்டினியு பண்ணிட்டு எதுக்காக இவங்க போனாங்க?  இத எப்படி இவகிட்ட கேட்கறது.

இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டா,  என்ன பதில் சொல்றது?’  என்று மனதினுள் எண்ணியவன், சரி இதையெல்லாம் பிறகு விசாரித்துக் கொள்ளலாம் முதலில் இவளை நம் வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான்.

ஆறுதலாக அவளை அணைத்திருந்த அபியும், “அழாதிங்க… உங்களுக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க நாங்க இருக்கோம்.” என்றாள்.

ஒரு வழியாக அவளைச் சமாதானப்படுத்தி , உணவு உண்ண வைத்து, அவளை மருத்துவமனையில் இருந்து டிஸசார்ஜ் செய்து அழைத்துக் கொண்டு வந்தனர்.

வரும்வழியில் அவளுக்குத் தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டவர்கள் அவர்களது வீட்டை அடைந்தனர்.

அவள்தான் வீட்டு மருமகள் என்று முடிவான பின்பு அவளை ஹோமில் விட யாருக்கும் மனதில்லாத போதும், அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவளை ஹோமிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

வீடும் ஹோமும் அருகருகே இருந்ததால் அவள் உறங்கும் நேரம் தவிர யாரேனும் ஒருவர் அவளருகே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஆனால் என்ன முயன்றும் அவளது கூட்டிலிருந்து அவளை வெளிக்கொணர்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது அவர்களுக்கு.

அபி மட்டும் அவளை ‘மச்சி’  என்றழைத்துக் கொண்டும், அவளைச் சீண்டிச் சிரிக்க வைத்துக் கொண்டும் சற்று நெருங்கியிருந்தாள்.

ஆகாஷ் அபியிடம், “ ரொம்ப பிரண்ட்ஸ் ஆகிட்டீங்க போல அவள மச்சின்னு கூப்பிடுற?”

“ பொறாமைப்படாத ண்ணா… அவங்க இப்போதைக்கு என்கிட்டதான் கொஞ்சம் பேசறாங்க. என்னை விட பெரியவங்க பேர் சொல்லி எப்படி கூப்பிடறது? அண்ணின்னும் கூப்பிட முடியாது. அக்கான்னு கூப்பிட்டா நீ அடிப்ப…  அதான் மச்சின்னு கூப்பிடறேன்” என்றாள்.

உண்மையில் கங்காவும், மஞ்சுளா மற்றும் ஆகாஷிடம் வெறும் புன்னகை மட்டுமே , அவளிடம் ஏதேனும் கேட்டாலும் ஒரு சிறு தலையசைப்பு அல்லது அமாம், இல்லை என்ற ஒற்றை பதில் மட்டுமே… அபியிடம் மட்டும்  சற்று தயக்கமின்றி பழகினாள்.

ஆகாஷும் அவளிடம் தன் நேசத்தை சொல்ல தருணத்தை  எதிர்பார்த்திருந்தான்.  அவளின் மனக்காயம் சற்றே ஆறட்டும் என்று காத்திருந்தான்

மஞ்சுளாவின் முழுநேர வேலையே கங்காவை வேளாவேளைக்கு சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதே. ஹோமில் இருப்பவர்கள் அனைவரிடமும் உறவினர்கள் போலவே அவர் பழகுவதால் அவளுக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதையும்  பாசமும் இருந்தது.

அவளும் தன்னால் முடிந்த உதவிகளை  ஹோமில் இருப்பவர்களுக்குச் செய்து , தன் சோகத்திலிருந்தும் தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்தும் மெல்ல வெளிவரத் துவங்கினாள்.

மேட்டுப்பாளையம்…

அந்த ஊருக்கு ஒதுக்குப் புறமான ரிசார்ட்டில்,  அப்பெரியவரின் வார்த்தைக்காக  அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தவாறு  நின்றிருந்தனர் அவரது மகன்கள். நெற்றியில் சுருக்கம் விழுமாறு சிந்தித்துக் கொண்டிருந்தவர்  அவர்களை ஏறிட்டுப் பார்த்து , “ அந்த டாக்டருக்கும் அவளுக்கும் ஏதாச்சும் சம்பந்தமிருக்கா? இல்ல… வெறும் பரிதாபத்துல கூட்டிட்டு போய் அவன் வீட்ல வச்சிருக்கானா?”

“ இல்லீங்க ஐயா , அவன் ஏதோ அனாதை இல்லம் மாதிரி வச்சி நடத்துறான், அங்கதான் கூட்டிட்டு போய் வுட்ருக்கான்.  நம்ம பயலுக கோயமுத்தூர் பூராவும் அவளத் தேடி அங்க போறதுக்குள்ள அவ அங்க போயி அடைக்கலமாயிட்டா.

இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க?  அவள அங்க உள்ள புகுந்து தூக்கறதா? இல்ல அவ வெளிய  வர்றப்ப பார்த்துக்கலாமா?”

சற்று நேரம் சிந்தித்தவர், “ நீ என்ன பண்ற நம்ம ஆளுங்க அஞ்சாறு பேர ரெடி பண்ணி நைட் அங்க திருடப் போற மாதிரி போய் அவள் போட்டுத் தள்ளச் சொல்லு. அங்க இருக்கறவங்க பூரா பொம்பளைங்களும் கிழவனுங்களுந்தான எதிர்த்து யாரு வந்தாலும் வெட்ட சொல்லு. சத்தம் கேட்டு அவனுங்க வர்றதுக்குள்ள போன வேலையை முடிச்சிட்டு தப்பி வரச் சொல்லு. ஜாக்கிரதை எவனும் மாட்டிக்கிடக் கூடாது. அப்படியே மாட்டிக்கிட்டாலும் நம்ம பேரு வெளியே வரக்கூடாது” என்றவர் ‘போ’ என்பது போலத் தலையசைத்தார்.

__ தொடுவோம்.

 

 

 

 

 

 

error: Content is protected !!