T9

தொடுவானம் 9

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே…

சுபாஷ் ஆர்த்தி இருவரும் தங்களின் மகள் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து ஊருக்குச் சென்றிருந்தனர். விழாவுக்கு வந்திருந்த நந்தகுமாரின் பெற்றோர், அபிக்கும் நந்துவுக்கும் எளிமையாக நிச்சயம் செய்யலாம் என்றும் அபி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்யலாம் என்றும் பேசி முடிவு செய்திருந்தனர். நல்ல நாள் பார்த்துச் சொல்கிறோம் என்று கூறி விட்டு சென்றவர்கள், போன் செய்து ஒரு வாரம் கழித்து வரும் முகூர்த்தம் அருமையாக இருப்பதாகவும், அன்று நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருந்தனர்.
அபியும் நந்துவும் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்கள் போதவில்லை அவர்களுக்கு. போனும் கையுமாக அலையும் அபியைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது கங்காவுக்கு. அபியை கிண்டல் செய்து முகம் சிவக்க வைத்து ரசிப்பதில் கங்காவுக்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது. அபி நந்து நிச்சயதார்த்தத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்ததால், வீட்டை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அன்று காலையில் ஆகாஷ் அவனது ஸ்டெதஸ்கோப்பைக் காணவில்லை என்று வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தான். அபிக்கும் அன்று கல்லூரி விடுமுறையாதலால் இருவரும் பேசிச் சிரித்தபடியே வீட்டை ஒட்டடை அடித்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர்.
“பரம சிவன் கழுத்துல இருக்கற பாம்பு மாதிரி கழுத்துலயே மாட்டிகிட்டு திரிவான். எங்க வச்சான்னே தெரியலயே இந்த ஸடெதஸ்கோப்பை”
“ஹாஸ்பிடல்லயே வச்சிட்டு வந்துட்டாரோ என்னவோ? இங்க இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்கலையே.” பேசிக் கொண்டே வேலையை முடித்தனர்.
“மச்சி, இங்க கீழ ஹால்ல க்ளீன் பண்ணி முடிச்சிட்டோம், அடுத்து மாடிக்கு க்ளீன் பண்ண போகலாம். நீங்க ராதாம்மாவ கூப்பிட்டு கீழ பெருக்கித் துடைக்க சொல்லுங்க. நான் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.”
வீட்டில் வேலை செய்யும் ராதாம்மாவை அழைக்க சென்றாள் கங்கா. அங்கே தோட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றி கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஞ்சுளா அங்கிருந்து அவற்றை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

ஹோம் விரிவாக்கம் செய்யும் போது, கட்டிடக் கழிவுகள் , செங்கல், ஜல்லி அனைத்தும் பின்புறம் ஓரமாக குவிக்கப் பட்டிருந்தது. அவற்றையும் ஆகாஷ் ஆட்களை வர வைத்து அப்புறப் படுத்தச் சொல்லியிருந்தான். அந்த வேலையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வேலையாளை அழைத்து வீட்டைப் பெருக்கித் துடைக்கச் சொல்லி அனுப்பியவள், அங்கு வேலை செய்பவர்களுக்கு அபி எடுத்து வந்த டீ யை கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கிருந்த மரக்கிளை ஒன்றிலிருந்து சிறிய அணில் குஞ்சு ஒன்று கீழே விழுந்தது. அதைக் கண்டு அங்கிருந்த பூனை ஒன்று, அதனைக் கவ்விக் கடிக்கப் பாய்ந்தது.

அந்தப் பூனையை விரட்ட அபி குனிந்து கல்லை எடுப்பதற்குள், அந்த அணில் குஞ்சை ஓடிச் சென்று தூக்கியிருந்தாள் கங்கா.
“ ஹேய்… ப்ளீஸ் மியாவ்… இது ரொம்ப குட்டி அணில். பாவம்ல… விட்டுடு பா… உனக்கு நான் நிறைய பால் வைக்குறேன்”
அந்தப் பூனை தனது இரையைத் தவற விட்டக் கடுப்பில் சீறிக் கொண்டிருந்தது. பூனையைக் கல்லால் விரட்ட வந்த அபியைத் தடுத்தவளைக் கண்டு வியந்த அபி,
“மச்சி… நீங்க என்ன , பூனையக் கல்லக் கொண்டு அடிச்சி விரட்டறத விட்டுட்டு, அது கூட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க?”
“ஹையோ… பூனையும் பாவம் பா… அதுக்கு பசி. அதனால தான இந்த அணில சாப்பிட வந்துச்சி. நாம பால் வச்சா சமத்தா குடிச்சிட்டு போய்டும் பாரேன். நீ இந்த அணில் குட்டிய பிடி. நான் போய் பால் எடுத்துட்டு வரேன்”
பாலை சிறு கிண்ணத்தில் கொண்டு வந்து வைத்ததும், அழகாக அதனைக் குடித்து விட்டு ஓடிச் சென்றது பூனை.
“ மச்சி, நீங்க நிஜமாவே வித்தியாசமான ஆளுதான். இந்த அணில் குட்டிய நாமே வளர்க்கலாமா?”
“ம்ம்ம்… வளர்க்கலாம் ஆசையாதான் இருக்கு. ஆனா அதோட அம்மா அணில் பாவம்ல . அது குட்டிய தேடுமே.”
அந்த அணில் அவள் கைகளில் வாகாகச் சுருண்டிருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சியில் சற்று நடுங்கிக் கொண்டிருந்தது.
“ பாருங்க மச்சி, இது ரொம்ப நடுங்குது. இப்ப இத மரத்துல விட்டாலும் திரும்ப விழுந்திடும். அப்புறம் பூனையோ காக்காவோ தின்னுடும். அதனால நாம கொஞ்ச நாள் வளர்க்கலாம். அப்புறம் அது பெருசானதும் மரத்துல விட்டுடலாம் சரியா?”
சிறு அட்டைப் பெட்டியில் மெத்தென்று துணிகளை விரித்தவர்கள், அந்த அணிலைத் தூங்க வைத்து விட்டு. அதற்கு என்ன உணவு தரலாம் என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டனர்.
மாடியில் உள்ள அறைகளையும் சுத்தம் செய்தவர்கள், அன்று முழுவதும் அணிலுடனே பொழுதைக் கழித்தனர்.

இரவு உணவின் போது அன்றைய தினம் நிகழ்ந்ததை ஆகாஷிடம் கூறிக் கொண்டிருந்தாள் அபி, “அண்ணா… அண்ணிக்கு இரக்க குணம் அதிகம் ண்ணா. அந்தப் பூனைய அடிக்கவே விடலையே. அணில் குட்டியையும் நைட் நான் பார்த்துக்கறேன்னு சொல்லி தூக்கிட்டு போயிட்டாங்க.”
“அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச பாம்பையே அவ அடிக்க விடல, இந்தப் பூனையவா அடிக்க விடுவா?”
“என்ன ண்ணா , சொல்ற… பாம்ப அடிக்க விடலையா?”
“ ஆமா, நாங்க வேலூர்ல இருந்தப்ப அவங்க வீட்டுக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திடுச்சி. வீட்ல இருந்தவங்க எல்லாரும் பயந்து வெளியே வந்துட்டாங்க. நான்,சுபாஷ், அவ அண்ணனுங்க ரெண்டு பேரு எல்லாரும் அந்த பாம்ப அடிக்கலாம்னு கழி, கம்பெல்லாம் எடுத்துட்டு போனால்… வாசல்ல நின்னுட்டு யாரையும் உள்ள விடமாட்டேன்னுட்டா.”
“ செல்லம், வழிய விடுடா… பெரிய பாம்பு, கடிச்சிட போகுது… போடா… அம்மாகிட்ட போய் நில்லுடா.” கெஞ்சிக் கொண்டிருந்தான் அவளது அண்ணன்.
“முடியாது ண்ணா, அது பாவம் ண்ணா… வழி தெரியாம நம்ம வீட்டுக்குள்ள வந்திடுச்சி. அத அடிச்சி கொல்ல நான் விட மாட்டேன்”
கடுப்பான அவளது அம்மா, “ பாப்பா, என்னடா இது? இப்படி பண்ற. அது நம்மள கடிச்சிருந்தா என்ன செய்யறது? அத வெளியவாது விரட்ட வேணாமா? யாரையும் உள்ள விட மாட்டேன்னா என்ன அர்த்தம். நகரு பாப்பா.” என்றார்.
“முடியாது, இவங்க உள்ள போனால், அது பயத்துல சீறும் இவங்க அத கண்டிப்பா அடிச்சிடுவாங்க.”
“பிரபா… நேத்து நியூஸ் பேப்பர்ல வனவிலங்கு ஆர்வலர் போன் நம்பர் போட்டிருந்தாங்க. அந்த நம்பருக்கு போன் பண்ணி வரச் சொல்லுடா” என்றாள்.
பிரபா அந்த தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து தகவல் சொன்னதும் விரைந்து வந்த வனவிலங்கு ஆர்வலர், அந்தப் பாம்பைப் பிடித்து காட்டினுள் விட ஏற்பாடு செய்தார். மேலும் கங்காவையும் பாராட்டிவிட்டுச் சென்றார்.
கங்காவைப் பற்றிப் பேசியதில் தன் அண்ணன் முகத்தில் தென்பட்ட காதலைக் கண்ட அபிக்கு மனம் வெகுவாக நிறைந்திருந்தது. இவ்வளவு காதலை வைத்துள்ள தன் அண்ணனுக்கு ஏற்ற துணைதான் கங்கா என்று எண்ணிக் கொண்டாள்.
“ அவங்க கிட்ட உன் லவ்வ சொல்லு ண்ணா. கண்டிப்பா அவங்க மறுத்துப் பேச மாட்டாங்க. அவங்களுக்கும் உன்னைப் பிடிக்கும்னு தான் நினைக்கிறேன்.”
கேள்வியாகப் பார்த்தவனிடம், “இன்னைக்கு மாடியில உன்னோட ரூம் சுத்தம் பண்ண போனோம். அங்க இருந்த உன்னுடைய போட்டோ ஆல்பத்தை அவ்வளவு ஆசையா பார்த்தாங்க. அதுவும் நீ குழந்தையா இருந்தப்ப எடுத்த போட்டோவ அப்படி ரசித்து பார்த்திட்டு இருந்தாங்க.
உங்க காலேஜ் போட்டோவும் அதுல இருந்துச்சி. அது நீ ஏதோ டூர் போனப்ப எடுத்த போட்டோன்னு நினைக்கிறேன். அதுல உன்கூட நிக்கற பொண்ணுங்களை எல்லாம் யார்னு கேட்டுக் கிட்டு இருந்தாங்க. அப்ப அவங்க முகத்தை பார்க்கனுமே, அவ்வளவு கடுப்பு அவங்களுக்கு.”
கேலியாக சிரித்தவளின் தலையில் செல்லமாக தட்டிய ஆகாஷ், “ நாளைக்கு நான் தானே அவள ஸ்கூல் கூட்டிட்டு போகனும், இனி என் மனசுல இருக்கறத கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு புரிய வைக்கிறேன் அபி.
அவ இப்ப யாருமே இல்லாம இருக்கறா அபி. இப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டால், ஒருவேளை, அவள யாரும் இல்லாத இந்த சூழ்நிலையில, வற்புறுத்தறதா நினைச்சிட்டா என்ன பண்றது. ஒரு நண்பனா அவளுக்கு என்னைப் பிடிக்கும். ஆனா ஒரு காதலனா அவ மனசுல பதிய கொஞ்சம் டைம் வேணாமா அபி?”
“இல்ல ண்ணா நீ பயப்படறதுல அர்த்தமே இல்லை. அவங்க உன்னை கண்டிப்பா வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.
உன்ன சின்ன வயசிலேயே பார்த்து பழகியிருக்காங்க. இப்பவும் அவங்களுக்கு வந்த ஆபத்திலிருந்து நீ தான் காப்பாத்தியிருக்க. நம்ம வீட்டுக்கு வந்தப்ப எப்படி யார்கூடவும் பேசாம ஒடுங்கி போய் இருந்தாங்க? இப்ப அப்படியா இருக்காங்க? எவ்வளவு இயல்பா எல்லார் கூடவும் ஒன்றி பழகுறாங்க? அவங்களுக்கு நம்ம அம்மாவையும் என்னையும் உன்னையும் ரொம்ப பிடிக்கும் ண்ணா. நீ கல்யாணம் பண்ணிக்க கேட்டா சரின்னுதான் சொல்லுவாங்க.”
“ஒழுங்கா சீக்கிரம் அவங்க கிட்ட சொல்ற. என் கல்யாணத்தை நீங்க ரெண்டு பேரும் ஜோடியா நின்னு நடத்தறீங்க புரியுதா.”என்று கூறியவள் படுக்கைக்குச் சென்றாள்.

தனது அறைக்கு வந்தவனது எண்ணத்தில் கங்காவின் நினைவுகள். ‘எனக்கு மட்டும் ஆசையில்லயா? அவளைப் பார்த்ததிலிருந்து அவளிடம் தன் நேசத்தைக் கூற மனம் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தானே தெரியும். இனியும் காலம் கடத்தாமல் சொல்லி விட வேண்டும்’ என்று எண்ணியவன் அவளின் நினைவுகளோடு உறங்கிப் போனான்.

மறுநாள் காலையில் பள்ளிக்குச் சென்று அவளை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அவளுக்கு அரை வேளை மட்டுமே வேலை நேரம், ஆகவே அவளை மதியம் வந்து அழைத்துக் கொள்வதாக கூறிச் சென்றான்.
காரில் சென்று வரும் இருவருக்குமான அந்த தனித்த பொழுதுகளை கங்காவும் ஆகாஷும் பெரிதும் விரும்பினர். இருவருக்கும் பிடித்தது பிடிக்காதது, பள்ளி நாட்களில் நடந்த பழைய கதைகள் ஆகியவற்றை பேசிக் கொண்டு வருவதில் ஆகாஷுக்கும் கங்காவுக்கும் அந்த பத்து நிமிட பயண நேரம் பல வருடங்கள் பழகிய உணர்வைத் தந்தது.

இடையே அபி நிச்சயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் அடிக்கடி வெளியே சென்று வந்தனர். கங்காவின் உள்ளுணர்வுக்கு யாரோ தன்னை பின் தொடர்வது போலத் தோன்றவும், கூர்ந்து கவனிக்கலானாள். இரண்டு மூன்று நாட்களாக, தான் வெளியே வருவதிலிருந்து மீண்டும் வீட்டுக்கு வரும் வரை, ஒரு காரில் இருவர் பின்தொடர்வதை கவனித்தாள்.
அவ்விருவரையும் ஏற்கனவே பார்த்தது போலத் தோன்றினாலும் யார் என்று தெரியவில்லை அவளுக்கு. அவள் பள்ளியில் இருக்கும் போதும் இருவரும் உள்ளே நுழைய முயற்சி செய்ததும் அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கும் அவர்களிடம் சென்று தன்னை பின் தொடரக் காரணம் என்ன? என்று கேட்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களைப் பார்த்து சற்று பயமும் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், அபியும் ஆகாஷும் அவளைத் தனித்து வெளியே விடுவதில்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்தன. நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் அபி தனது நிச்சய புடவையின் பிளவுஸ் தைக்க கொடுத்ததை வாங்க கல்லூரியில் இருந்து நேராகச் சென்றிருந்தாள். அது கொஞ்சம் பரபரப்பான ரோடு. நான்கு புறமும் பிரியும் சாலையும் நடுவில் ரவுண்டானாவும் இருக்கும்.
அந்த மாலை வேளையிலும் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அபி தனது வேலையை முடித்துக் கொண்டு ஆட்டோ ஏறலாம் என்று வந்தவள், அந்த சாலையின் எதிர் புறம் அவசர அவசரமாக பஸ் நிறுத்தத்தை நோக்கி செல்லும் கங்காவைப் பார்த்தாள்.
கங்கா இருந்த திசையில் அரசு மருத்துவமனை தவிர எதுவும் இல்லை. அவள் மருத்துவமனைக்குதான் சென்றிருக்க வேண்டும். அவளைப் பார்த்த அபி இந்த பகுதியில் கங்காவுக்கு என்ன வேலை என்று மிகவும் குழம்பி போனாள். கவனமாக சாலையைக் கடந்த அபி, கங்காவை எட்டிப் பிடித்ததும், யாரோ என்று பயத்தில் அரண்டு ‘அம்மா…’ என்று கத்தியபடி திரும்பினாள் கங்கா.
நெஞ்சில் கை வைத்து தடவி ஆசுவாசப் படுத்திக் கொண்டே, “ அபி நீ எங்க இங்க?”
“அத நான் கேட்கனும் மச்சி, நீங்க எங்க இந்த பக்கம்?” என்று ஜிஹெச் ஐ பார்த்தபடி வினவினாள்.
“அ…அ…அது, சு…சும்மா… உன்னோட பங்சனுக்கு ஏதாவது கிப்ட் வாங்கலாம்னு வந்தேன்” அபியை பார்த்த பயத்தில் வாய்க்கு வந்ததை சொன்னாள். அதற்குள் பயத்தில் வேர்த்து விட்டிருந்தது.
அவளை விசித்திரமாகப் பார்த்த அபி, “ கிப்ட் வாங்கவா? அதுக்கு ஏன் இந்த பக்கம் வந்தீங்க?” அவள் கைகளை ஆராய்ந்தவாறு, “ வாங்கிட்டீங்களா?” என்றாள். கங்காவிடம் சிறு கைப்பை தவிர வேறொன்றும் இல்லை.
“இல்ல அபி, எனக்கு ஒன்னும் பிடிக்கல அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்.”
“ஓ… சரி வாங்க மச்சி, ரொம்ப வெயிலா இருக்கு ஏதாவது ஜூஸ் குடிச்சிட்டு ஆட்டோல போய்டலாம்.”
சரி என்று தலையாட்டிய படி திரும்பிய கங்கா, சாலையின் எதிர்ப்புறம் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய சுந்தரம், சுகுமாரன் இருவரும் அவளை நோக்கி வருவதைப் பார்த்தாள். பயத்தில் உடல் தடதடத்தது.
அபி வேறு உடனிருக்கிறாள். எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை, அபியை உடனடியாக கூட்டிச் செல்ல வேண்டும் என்று உள்ளம் பட படக்க, அவளருகே வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி அவசரமாக அபியை உள்ளே திணித்து தானும் ஏறிக்கொண்டாள்.

“என்ன மச்சி? என்ன ஆச்சு?… தாகமா இருக்கு ஏதாவது குடிச்சிட்டு போலாம்னு சொன்னேன். ஏன்? இப்படி அவசரமா இழுத்துட்டு வரீங்க.”
ஆட்டோகாரர் போக வேண்டிய அட்ரஸ் கேட்கவும், “ஒன்னும் இல்ல அபி. ஆட்டோகாரர் அட்ரஸ் கேட்கரார் பாரு. அவர்ட்ட வழி சொல்லு” என்றவள் பதட்டமாக திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தாள்.
கங்கா சட்டென்று ஆட்டோவில் ஏறுவாள் என்று எதிர்பார்க்காத இருவரும் காரை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தனர். ஆனால் ட்ராபிக் காரணமாக அவர்களால் தொடர்ந்து வர முடியவில்லை.

சிறிது நேரம் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தவள், அவர்கள் தொடர்ந்து வரவில்லை என்றதும் சற்று ஆசுவாசமாக அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள். அவளையே வித்தியாசமாக பார்த்திருந்த அபி, “என்னாச்சி மச்சி? ஏன் பதட்டமாவே இருக்கீங்க? யாரத் திரும்பி திரும்பி பார்த்துட்டே வர்றீங்க?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அபி, சும்மாதான்… யாரோ தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது. அதான் பார்த்தேன்.”
அப்பொழுது அபியின் அலைபேசி ஒலித்தது. ‘அம்மா தான்’ என்று கூறியபடி ஆன் செய்து காதில் வைத்தாள்.
எதிர்புறம் மஞ்சுளா பதட்டத்துடன், “அபி, கங்காவ இன்னும் காணோம் டா. மதியம் கொஞ்சம் கண் அசந்து படுத்திருந்தேன். என்கிட்ட எதுவும் சொல்லாம வெளியே போயிருக்கா. வீர் தான் ஆட்டோ பிடிச்சி குடுத்திருக்கான்” என்றார்.
“அம்மா… பதட்டப் படாதீங்க. மச்சி என் கூடதான் இருக்காங்க. நாங்க வீட்டுக்குதான் வந்துகிட்டு இருக்கிறோம்” என்று தாயை சமாதானப் படுத்தியவள் கேள்வியாக கங்காவை நோக்கினாள்.
“அம்மாட்ட சொல்லிட்டு வரலயா மச்சி? அவங்க நீங்க இன்னும் வரலன்னு பயந்துகிட்டு இருக்காங்க. மத்யானமே வந்திருக்கீங்க இவ்வளவு நேரம் ஷாப்பிங் பண்ணீங்களா?”
“சும்மா பக்கத்துல தானேன்னு அப்படியே கிளம்பிட்டேன். சஸ்பென்ஸா இருக்கட்டும்னு யார்கிட்டயும் சொல்லல. ஆனா இவ்வளவு நேரம் தேடியும் ஒன்னும் மனசுக்கு பிடிக்கல அதான் வாங்கல” எங்கே தான் கூறும் பொய்யை, அபி கண்டுபிடித்து விடுவாளோ என்று, பார்வையை அவள் முகத்தில் பதிக்காமல் கூறி முடித்தாள்.
அதன் பின் அபியும் ஒன்றும் கேட்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் மஞ்சுளாவிடம் சொல்லாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டவள் ஹோமில் தனது அறைக்குள் சென்று முடங்கி விட்டாள். உடல் முழுவதும் கொதிப்பது போல இருந்தது. உணவும் வேண்டாம் என்று மறுத்தவள் சோர்வுடன் படுத்திருந்தாள்.

அன்றிரவு, வீட்டிற்குள் வரும்போதே “கங்கா எங்கே அபி?” என்று கேட்டவாறே வந்தான் ஆகாஷ்.
“ஏன் ண்ணா? அவங்க ஹோம்ல இருக்காங்க. என்னன்னு தெரியல சீக்கிரம் படுக்க போறேன்னு போயிட்டாங்க”
“கூப்பிடு அபி. நான் இப்ப சாப்பிட்டு திரும்ப ஹாஸ்பிடல் போறேன். நைட் ஒரு ஆபரேஷன் இருக்கு. மேஜர் ஆபரேஷன். எட்டு வயசு பையனுக்கு. அவன் ப்ளட் குரூப் ரேர் குரூப். கங்காவுக்கும் அதே குரூப் தான். ஏற்கனவே ப்ளட் குடுக்க ரெண்டு பேர் ரெடி பண்ணியாச்சு. இருந்தாலும் ஏதாவது எமர்ஜென்சி சிட்சுவேஷன்னா தேவைப் படலாம். அதான் அவள கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”
“சரி ண்ணா…” என்றவள் கங்காவை அழைத்து வந்தாள்.
வெகுவாக சோர்ந்து போன தோற்றத்துடன் வந்தவளைப் பார்த்தவனின் புருவங்கள் மேலேறின. “ என்னாச்சு, உடம்பு சரியில்லயா?”
“மதியம் ஷாப்பிங் போறேன்னு கடைக்கு போன பிள்ளை , சாயங்காலம் வரை அலைஞ்சு திரிஞ்சிட்டு வந்திருக்கு. அதான் சோர்ந்து போயிட்டா” என்றார் மஞ்சுளா.
“கங்கா… இப்ப சாப்பிட்டு என் கூட ஹாஸ்பிடல் வா. ஒரு எமர்ஜன்சி ஆபரேஷன் நைட்டு. உன்னோட ப்ளட் தேவைப்பட்டாலும் தேவைப்படும். அங்க எனக்கு ரூம் இருக்கு நீ அங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம். ப்ளட் தேவைப்பட்டா உன்னை கூப்பிட்டுக்கறேன்.”
அவன் கூறியதைக் கேட்டதும் பதற்றமானவள், “இல்ல சார்… நான் வரல. எனக்கு ஊசி ன்னா பயம்”
“நீ என்ன சின்ன பிள்ளயா? ஊசிக்கு பயப்பட. சின்ன வயசுல அவ்வளவு ஆர்வமா இருப்ப இரத்தம் குடுக்கனும்னு. இப்ப என்னாச்சு?”
“இல்ல சார் … நான் வரல. ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதீங்க” சொல்லும் போதே கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்தது அவளுக்கு.
“டேய்… அவளுக்கு விருப்பமில்லைன்னா விடு. ஏற்கனவே சத்தே இல்லாம இருக்கறா. இவ எங்க இரத்தம் குடுக்க முடியும்.” மஞ்சுளாவும் கங்காவுக்கு சப்போர்ட் பண்ணவும் கடுப்பானவன்.
இரத்தம் கொடுக்க மேலும் ஒருவர் கிடைத்து விட்டதாக தகவல் வரவும், கங்காவை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு மருத்துவ மனைக்கு கிளம்பினான்.
செய்வதறியாது அவன் போன திசையை பார்த்தபடி நின்றாள் கங்கா.

_____ தொடுவோம்.