Anima – 36
Anima – 36
மாமியின் வீட்டில் மலர் இருக்கும் சமயம், அவளை கைப்பேசியில் அழைத்த ஈஸ்வர், தான் அவளுக்காக வெளியில் காத்திருப்பதாகச் சொல்லவும், மாமியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினாள் அவள்.
அவளுடைய எண்ணம் முழுவதும் சோமய்யாவையும், சங்கரையும் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.
காரில் ஏறியது முதல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய திருமதியை, ஈஸ்வர் ஒரு புரியாத பார்வை பார்க்க, அவளுடைய கண்கள் அந்த காரின் டாஷ்போர்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த விநாயகப்பெருமானையே வெறித்தவாறு இருந்தது.
ஆனால் அவளுடைய சிந்தனை வேறு எங்கோ இருப்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
அவளுடைய என்ன ஓட்டத்தைக் கணிக்க முடியாமல், “என்ன ஹானிமா! உன் மண்டைக்குள்ள என்ன குடையுது?
அதுதான் நீ சொன்ன மாதிரி, சோமய்யாவோட ட்ரீட்மெண்ட்க்கு ஏற்பாடு பண்ணிட்டோமே?
இன்னும் என்ன பிரச்சினை?” என்று ஈஸ்வர் கேட்க,
“இல்ல ஹீரோ! அவரை குணப்படுத்துறது எவ்வளவு முக்கியமோ… அவ்வளவு முக்கியம் நாம டிப்புவை கண்டு பிடிப்பதும்!” என்றவள்,
“மாமி வீட்டுக்கு எதிரில், சங்கரய்யான்னு ஒருத்தன் குடியிருக்கான் ஹீரோ!
அவனுக்கு ஒரு முப்பது வயசு இருக்கும்!” என மலர் சொல்லிக்கொண்டிருக்க, அந்த பெயரைக் கேட்டதும், ஒரு நொடி திடுக்கிட்டுப்போனான் ஈஸ்வர்.
இருந்தாலும் குறுக்கே பேசாமல், அவள் பேசுவதைத் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தாள் மலர். “அவன் தரமணில எங்கேயோ வேலை செய்யறான்னு கேள்விப்பட்டேன்.
சுபா அண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்த சமயம் நான் அவங்க கூட அங்கேயே தங்கி இருந்தேன்.
மாமியும் மாமாவும்தான் ஜீவனை பார்த்துக்கிட்டாங்க.
அப்ப ஒரு நாள் ஈவினிங் அவனை ரொம்ப நேரமா காணாம, பயந்துபோய் மாமி எனக்கு போன் பண்ணாங்க.
பிறகு பதறி அடிச்சிட்டு, அங்க வந்து ஒவ்வொரு பிளட்டா போய் நான் அவனைத் தேடினேன்.
அப்ப, அந்த சங்கர் பிளாட்லதான் இருந்தான் ஜீவன். அங்கே அவன் தன்னை மறந்து தூங்கிட்டு இருந்தான்.
பிறகு அவனை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தேன்.
அந்த சங்கர் ரொம்ப வேடிக்கையா பேசறதல, அவன் வீட்டுக்கு அங்கே இருக்கிற பிள்ளைங்க எல்லாருமே சகஜமா போவாங்க.
ஜீவனை கொஞ்சம் கண்டிச்சு வெக்கறதால, எப்பயாவது எங்களுக்கு தெரியாம நைசா அங்கே போயிடுவான். அதனால அன்னைக்கு நான் அதை வித்தியாசமா எடுத்துக்கல.
யூசுவலா அவன் அந்த நேரத்துல தூங்க மாட்டான். அம்மாவைப் பிரிந்து இருக்கும் ஏக்கத்தாலதான் அப்படி ஸ்ட்ரேஞ்சா பிஹேவ் பண்ணறான்னு மாமியும் சொன்னாங்க.
ஸோ… அதுக்கு பிறகு அவனுடனேயே நிறைய நேரம் செலவு செய்ய ஆரம்பிச்சேன்!” என்று சொன்னவள்,ஈஸ்வருடைய முகத்தை திரும்பி பார்த்து, “ஜீவனை கடத்திட்டு போனதுக்கும், அவனுக்கும் எதோ பெரிய தொடர்பு இருக்குமோனு எனக்கு டவுட்டா இருக்கு!
“ஏன்னா, சுபா அண்ணிக்கு உடம்பு சரியில்லாததால, கோபாலன் மாமாதான் ஜீவனை கவனிச்சிக்கிட்டாங்க!
அவங்க காலில் பிராக்ச்சர் ஆனதால,அவன் பின்னாலேயே அவரால ஓடிட்டு இருக்க முடியல!
மாமியாலயும்… மாமா, சுபா அண்ணி ரெண்டு போரையும் கவனிச்சிக்கிட்டு, ஜீவனையும் பார்த்துக்க முடியல!
காமன் ஏரியாலதான விளையாடிட்டு இருக்கான்னு விட்டுட்டாங்க!
நம்ம கல்யாண பிஸில என்னாலயும் அங்கே போக முடியல!
அப்படிப்பட்ட சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கிட்டுதான், அவனை ஈஸியா கடத்தி இருகாங்க!” என்று மலர் சொல்லிக்கொண்டே போக, அவனது கட்டுப்பாட்டை இழந்து, கார் ஒரு நொடி அதிர்ந்து, பின்பு நேரானது.
“என்ன ஆச்சு ஹீரோ?” என்று மலர் பதறவும், “இல்ல மலர், நீ நினைக்கிற மாதிரி, மாமாவுக்கு காலில் அடிபட்டது எதேச்சையாக நடந்த மாதிரி தெரியல!
பக்காவா பிளான் பண்ணி எல்லாத்தையம் செஞ்சிருக்காங்க! ஓ மை காட்!” என்று ஆத்திரத்தில் ஸ்டியரிங்கை குத்தினான் ஈஸ்வர்!
“ஐயோ! என்ன சொல்றீங்க ஹீரோ!” என மலர் பதறிய அதேநேரம், அவனுடைய செய்கையினால் எழுந்த ஹாரன் ஒலியில் அருகில் சென்ற வாகனங்களிலிருந்த சிலர் எரிச்சலுடன் ஈஸ்வரைப் பார்க்க, அவனை அடையாளம் கண்டுகொண்ட ஓரிருவரின் பார்வையில் வியப்பு கூடியது.
உடனே தன்னிலை உணர்ந்து, சாலையில் கவனத்தைச் செலுத்தியவாறு, “ப்ச்! பிளான் பண்ணித்தான் மாமாவின் காலை உடைச்சிருக்காங்க மலர்! இது உனக்கு புரியலையா?!” என்றான் ஈஸ்வர், எரிச்சலுடன்.
சிந்தனை வயப்பட்டவளாக,”ஓ! அப்படி நடந்திருக்கவும் சான்ஸ் இருக்கு இல்ல?” என்றவள், “பேசாம ஜெய் கிட்ட அவனைப் பற்றிச் சொல்லிடலாம் ஹீரோ! அவனை பிடிச்சி விசாரிச்சாங்கன்னா எதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு!” எனக் கேட்டாள் மலர்.
“ப்ச்! அவசரப்படாதம்மா. கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் பார்த்துக்கறேன்!” என்றான் ஈஸ்வர், மல்லிகார்ஜுனை மனதில் வைத்து.
“ஐயோ! அந்த சங்கரைப் பற்றி மாமிகிட்ட கேட்டேன். அவன் முன்ன மாதிரி அடிக்கடி கண்ணிலேயே படலன்னு மாமி சொன்னாங்க. எப்பவாவதுதான் அங்க வாரான் போல இருக்கு. தப்பிச்சிட்டான்னா அவனை கண்டிபிடிப்பது கஷ்டம்!” என்றாள் மலர்.
அந்த நேரம் சங்கரய்யாவை பற்றி அனைத்தையும் அவளிடம் விளக்கமாகச் சொல்ல விரும்பாதவனாக, “நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன் இல்ல! ஜெய் மேல இருக்கற நம்பிக்கை உனக்கு என் மேல இல்லையா மலர்!” என ஈஸ்வர் காட்டமாகக் கேட்கவும், அதில் பதறியவளாக, “ஐயோ! அப்படிலாம் இல்ல… எதோ எனக்கு தோணினத சொன்னேன் அவ்வளவுதான். சாரி!” என்றாள் மலர் உள்ளே போன குரலில்.
“பரவாயில்ல விடு! இத்தோட இதைப் பற்றி எதுவும் யார்கிட்டேயும், ஈவன் மாமிகிட்ட கூட பேசாதே!” என அவளை எச்சரிக்கும் விதமாகச் சொன்னான் ஈஸ்வர்.
பேசிக்கொண்டே அவர்கள் வீடு வந்து சேர்ந்துவிட, வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.
அங்கே சாருமதியிடம் கதை கேட்டுக்கொண்டிருந்த ஜீவன், மாமனைக் கண்ட மாத்திரத்தில்,”ஹீரோ!” எனக் கூவிக்கொண்டே அவனை நோக்கி ஓடி வந்து அவன் மீது தாவி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
அதன் பின் அவர்களுடைய நேரம் அவனால் களவாடப்பட்டது.
***
மாம்பலத்தில்… அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகிலேயே அவனது ஆட்களை நிறுத்தி வைத்து,சங்கரைய்யாவிற்காக கட்டம் கட்டிக் காத்திருந்தான் ஈஸ்வர்.
இரண்டு தினங்கள் கடந்து, நள்ளிரவு நேரத்தில், சாலையிலேயே ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு இறங்கிய சங்கர்,பதுங்கியபடி உள்ளே செல்ல எத்தனிக்க,அவர்களிடம் வகையாகச் சிக்கினான்.
அவன் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் மயக்கமடையச் செய்து, அவனை பட்டிபுலம் கொண்டுவந்தனர் ஈஸ்வர் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை ஆட்கள்.
அங்கே ஈஸ்வருக்குச் சொந்தமான பங்களாவின் கார் ஷெட்டில், அவன் மீது ஓர் சிறு கீறல் கூட விழாமல், அவனைத் தலை கீழாகக் கட்டி தொங்கவிட்டிருந்தனர்.
அவன் மயக்கமாக இருக்கும் போதே அவனைக் கொண்டுவந்து அப்படி அவனைத் தொங்கவிட்டுவிட்டு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிடவே,சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவன் கண் விழிக்க, எதுவுமே புரியவில்லை அவனுக்கு.
மிகப்பெரிய எம்.யூ.வி வகை கார்கள் நான்கு முதல் ஐந்து வரை நிறுத்த வசதியாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த ஷெட்.
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, அதன் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு ‘குவாலிஸ்‘ தவிர ஒரு ஈ காக்கைகூட இல்லை அந்த இடத்தில்.
அவனுடைய அசைவிற்கு ஏற்ப சுழன்று கொண்டு இருந்தது அவனைப் பிணைத்திருந்த கயிறு.
அது எந்த இடம் என்பதுகூட புரியவில்லை அவனுக்கு.
வெகு நேரமாய் அவன் எழுப்பிக்கொண்டிருந்த ஓலத்திற்கு, கண்டிப்பா யாரேனும் வந்திருக்க வேண்டும்.
அப்படி நடக்காத காரணத்தால், சுற்றுப்புறத்தில் யாருமே குடியிருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டான் அவன்.
அவனுடைய ஓலம், அனற்றலாக மாறி, அதிகாலை வரை அப்படியே சென்றது.
பொறுத்த பட்டிருந்த கூரை தகடுகளிலிருந்த சிறிய இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஆதவனின் வெளிச்ச கீற்றுகள், உள்ளே நுழையத் தொடங்க, அந்த ஷெட்டின் ‘ஷட்டர்‘ திறக்கப்படும் ஓசையில், அவன் உடல் ஒரு நொடி அதிர்ந்தது. அதில் அந்த கயிறு சுற்றத்தொடங்கவும், பளீர் என்று உள்ளே நுழைத்த வெளிச்சம் அவன் கண்களைக் கூசச்செய்ய, அவன் பார்வை தெளிவாகத் தெரியவே சில நிமிடங்கள் பிடித்தது.
அதற்குள், அவன் அருகிலேயே வந்திருந்தனர் ஈஸ்வர் மற்றும் மல்லிக் இருவரும்.
மல்லிக்கை அவனுக்கு தெரியாமல் இருந்தாலும், ஈஸ்வரை அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
அவனுடைய அச்சம் எக்கச்சக்கமாக எகிற, “சார்! அந்த பையன் உங்க மருமகன்னு தெரியாம கடத்திட்டேன், முன்னாலேயே தெரிஞ்சிருந்தா அவர் இருந்த திசை பக்கமே தலை வெச்சிருக்க மாட்டேன்! என்னை மன்னிச்சி விட்ருங்க!” என்று அலறினான் அந்த சங்கரய்யா.
“ஏண்டா நாயே! கோடீஸ்வரன் வீட்டு பையன்னா மட்டும் உனக்கு இவ்வளவு பயமா? அப்படினா, பணம் இல்லாதவங்க வீட்டு பிள்ளைங்கள உன்னைப்போல பண வெறி பிடிச்ச ஓநாய்ங்களுக்கு நேந்து விட பெத்துப்போட்டு வெச்சிருக்காங்கனு நினைப்பா உனக்கு?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் ஈஸ்வர்.
விட்டால் அவனை அங்கேயே கொன்றுபோட்டிருப்பான் மல்லிக். அவ்வளவு வெறி இருந்த பொழுதிலும் ஈஸ்வரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுதனது கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான் அவன்.
“இல்ல… பணத்துக்காக இப்படியெல்லாம் செஞ்சிட்டேன். தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க… இந்த தொழிலையே விட்டுட்டு நான் எங்கேயாவது போயிடுறேன்!” என கெஞ்சத்தொடங்கினான் சங்கரய்யா.
“உனக்கு தெரிஞ்ச உண்மையெல்லாம் சொல்லிட்டு, நான் சொல்றத அப்படியே செய்யறதா இருந்தால், உன்னை இறக்கி விட சொல்றேன்!
முடியாதுன்னா சொல்லிடு! நாங்க இங்கிருந்து இப்படியே கிளம்பறோம்! அதுக்கு பிறகு இந்த பக்கம் ஒரு காக்கா குருவி கூட வராது! இப்படியே கிடந்தது இங்கேயே சாகவேண்டியதுதான்!” என்று மிரட்டலாகவே சொல்லி முடித்தான் ஈஸ்வர்.
அவன் சொற்படி கேட்டு நடப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது தெளிவாகப் புரியவே, மறுப்பின்றி அதற்கு ஒப்புக்கொண்டான் சங்கர்.
அதன் பிறகு அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த குவாலிஸில், ஈஸ்வரின் அடியாட்கள் மூலம் ஏற்றப்பட்டவன், அங்கிருந்து வேறு எங்கோ அழைத்துச்செல்லப்பட்டான்.
ஈஸ்வர் அவனது காரில், மல்லிக்குடன் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அந்த வாகனம் எதோ ஒரு இடத்தில் நிற்க, ஆளரவமற்ற அந்த இடத்தில், ஒதுக்குப்புறமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவனுடைய காரை பார்த்து அதிர்ந்த சங்கர், அமைதியாகப் போய் அதில் ஏறினான்.
அதன் பிறகு ஈஸ்வர் ஜாடை செய்யவும், அந்தக் காரிலிருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்து, சில படங்கள் மற்றும் சில கோப்புகளைப் பற்றி அவனிடம் விவரித்தவன், ஈஸ்வரின் கட்டளைப் படி, ஒரு காணொளியை, அந்த காரிலேயே இருந்த அவனது கைப்பேசியில் பதிவு செய்து, தொடர்ந்து ஈஸ்வர் சொன்ன சில மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பியவன், அதன்பின் அதிலேயே பத்திரமாக அனைத்தையும் வைத்துவிட்டு, அந்த காரிலிருந்து இறங்கினான்.
அப்பொழுது, அங்கே நடக்கும் ஒவ்வொன்றையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மல்லிக்கை பார்த்து, “நீ இவனை என்ன செய்யணும்னு நினைச்சியோ… இப்ப்ப்ப்ப்….ப அதைத் தாராளமா செஞ்சிக்கோ!
பட் இதுவே கடைசியா இருக்கணும் ரைட்!” என்றவன் தொடர்ந்து, இதுக்கு பிறகு நீ எந்த காரணத்தைக் கொண்டும் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது!
நம்ம டிப்புவை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லைன்னு உனக்கு இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!
ஆனாலும் அவனைப் பத்திரமா கண்டுபிடிச்சி உங்க கிட்ட சேர்க்க வேண்டியது இனிமேல் என்னோட பொறுப்பு!
அதுவரை நீ உன் பிழைப்பை கவனிச்சிட்டு, சோமய்யாவையும் உங்க அண்ணியையும் பக்கத்துல இருந்து ஆறுதலா பார்த்துக்கோ! அது போதும்! புரிஞ்சிதா?” என்றான் ஈஸ்வர் கண்டிப்பான குரலில்.
“தப்புகுண்டா அண்ணய்யா! நீங்க என்ன சொன்னாலும் அட்டனே சேஸ்தானு!” என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு,
பிள்ளைகளை உயிருடன் இழந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் பல தாய்மார்களின் சாபங்கள் அனைத்தும் உயிர்பெற்று வந்ததைப் போன்று தோற்றம் அளித்த மல்லிக், சங்கரை வெறியுடன் நெருங்கினான்…
உயிர் பயத்தில் தன்னை நோக்கி அவன் கெஞ்சிய கெஞ்சல்களுக்கெல்லாம், “சாரி சங்கரய்யா! ஐ காண்ட் ஹெல்ப் யூ! யூ ஹவ் டு பே ஃபார் வாட் யூ ஹவ் டன்!” என்று கொஞ்சமும் இளக்கமின்றி சொல்லிவிட்டு, அடுத்த நொடியே அவனது வானகத்தில் ஏறிப் பறந்தே போனான் ஈஸ்வர்.