Thagam 13

தாகம் – 13

 அழகான காலைப் பொழுது…
 மழை சாரலின் தாக்கம் இருந்தது…
 குளிர் கற்று ஜன்னல் வழியாக நுழைந்து
 அவள் ஸ்பரிசத்தை தொட்டது..
 கண் விழித்தாள் திவ்யா.
“ஜீன்ஸ் போடாத… மழை நேரத்துல காயாது…” என்று அவள் தாயின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.
“இப்ப தான் முழிச்சேன் … அதுக்குள்ளே இந்த அம்மாக்கு எப்படி தான் தெரிஞ்சிதோ…?” என்று தன்னை தானே நொந்துக் கொண்டு கிளம்பினாள்..
 பச்சை நிறத்தில் லெக்கிங் , சிவப்பு நிற பச்சை எம்பிராய்டரி போட்ட டாப்ஸ் அணிந்து கொண்டு தலை முடியை தூக்கி வாரியபடி வெளியே வந்தாள்.
“என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்று மொபைலை நோண்டியவாறே வினவினான் ரமேஷ்.
“கொஞ்சம் வேலை இருக்கு…” என்று கூறிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் திவ்யா..
சோபாவில் அமர்ந்து டிவி நியூஸ் பார்த்து கொண்டிருந்த ஷண்முகம் , “நீ இன்னக்கி போக வேண்டாம்.. ரெஸ்ட் எடு…” என்று அறிவுறுத்தினார்.
“இல்லை மாமா… முக்கியமான வேலை இருக்கு.. நான் கண்டிப்பா போகணும்…” என்று கூறிக் கொண்டு வேகமாக உணவை கொறித்து விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் திவ்யா.
அங்கு நவீன் , மனோஜ் , ஸ்வாதி இவளுக்காக காத்திருக்க திவ்யாவும் அவர்களோடு இணைந்தாள்.
“ஜாலியா படத்தை பார்த்துட்டு ரிவியூ எழுதிருக்கலாம்..” என்று ஸ்வாதி கூற, “டூர் ஸ்பெஷல் பண்ணிருந்தா ஊரைச் சுத்தி பாத்துருக்கலாம் “ என்று நவீன் கூற, “நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணனும்” என்று மனோஜ் கூறினான்.
“மனோஜ் இஸ் ரைட்..” என்று திவ்யா கூற.., “இவள் இத்தனை நல்லவளா ?” என்று மற்ற இருவரும் பார்த்தனர்.
“கூவ நதிக்கரை ஓரம் …..” அப்படினா நாம இதுல என்ன பண்ணப் போறோம் ?” என்று வினவினாள் ஸ்வாதி.
” அவங்க வாழ்க்கை முறை.. அவங்க படுற கஷ்டம்.. இதெல்லாம் வெளி உலகத்திற்கு கொண்டு வரணும்…” என்று மனோஜ் கூற, “பணக்கார்கள் செய்யற சதியால் அவர்களுக்கு ஏற்படற பாதிப்பு… இப்படி பல..” என்று திவ்யா மனோஜின் கருத்துக்கு மேலும் பலம் சேர்த்தாள்.
“இப்படி ரிஸ்க்கான வேலையை நாம செய்யணுமா?” என்று நவீன் கூற.,
“ஆம் “ என்று தலை அசைத்த படி “நீ தான் கேமரா ஒர்க் “ என்று கூறினாள் திவ்யா.
“இப்ப எப்படி அவங்க ஏரியாக்குள்ள போறது? நம்ம கிட்ட பேசுவார்களா..?” என்று ஸ்வாதி வினவ “போய் பாப்போம் “ என்று திவ்யா கூறினாள்.
“கூவம் நதிக்கரை எந்த ஏரியா பக்கம் வரும் ?” என்று நவீன் வினவ.. திவ்யாவோ “நான் கூட்டிட்டு போறேன்” என்று கூறினாள்.
 அவர்கள் நால்வரும் வண்டி எடுத்துக் கொண்டு திவ்யாவை பின் தொடர்ந்தனர் .
திவ்யா, நேற்று பாக்கியம் தேன்மிட்டாய் வாங்கிய டீக்கடை அருகே வண்டியை நிறுத்தினாள். விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி எதிர் பக்கத்தில் அவள் கண்களுக்கு பிரமாண்டமாக காட்சி அளித்தது.
விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியை பார்த்தபடியே,
“விக்ரம் சார் இன்டெர்வியூ தருவாரா..?” என்று ஸ்வாதி வினவ, “இப்ப தானே தொடக்க விழாக்கு இன்டெர்வியூ கொடுத்தாரு” என்று கூறினாள் திவ்யா.
“அது என்ன பெரிய இன்டெர்வியூ… எல்லாரும் இருந்தாங்க..”நமக்கு ஒரு எஸ்க்ளுசிவ் இன்டெர்வியூ கொடுக்கலாம்ல ?” என்று ஸ்வாதி கூற, “நமக்கா..? உனக்கா? “ என்று வினவினான் நவீன்.
ஸ்வாதி அவனை முறைத்துப் பார்த்தாள்.
“இங்க யாரையாவது தெரியுமா..?” மனோஜ் வினவ , திவ்யா பதில் ஏதும் கூறாமல் சிந்தித்து கொண்டிருந்தாள்.
என்ன செய்யலாம் ?, என்று யோசனையோடு திவ்யா அங்குள்ள அம்மன் கோவிலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கிருந்த சாலை வழியாக, சென்ற காரிலிருந்து இரு கண்கள் அவளை பார்த்தது. அவன் உதட்டோரம் மெலிதாக வளைந்து, புன்னகை பூத்தது.
” திவ்யா இங்க என்ன பன்றா? அந்த பாட்டியை தேடி வந்திருப்பாளோ? இவள் எப்படி அந்த பாட்டியை தேடி கண்டுபிடிப்பாள் ? அந்த ஏரியாக்குள் அவளால் நுழைய கூட முடியாது..” என்று ஒற்றை புருவம் உயர்த்தி யோசித்தான்.
 “அன்றைய விபத்தின் மூலமாக தன்னால் தான் அவளுக்கு உள்ளே நுழையும் பாதை அமைய போகிறது “ என்றறியாமல் சிரித்துக் கொண்டே காரை ஓட்டினான் விக்ரம்.
அங்கிருந்த அம்மன் கோவிலை நவீன் படம் பிடிக்க , மனோஜ் டீக்கடைக்கு சென்று பேச்சு கொடுத்தான்.
கடையிலிருந்து திரும்பி வந்த மனோஜ் தேன்மிட்டாய் கொடுக்க, திவ்யாவும் நவீனும் அதை வாங்கி வாயில் போட்டனர். ஸ்வாதியோ , ” இதெல்லாம் ஹைஜீனிக்கா இருக்காது ஒன்லி க்வார்ட் சாக்லட்ஸ்.. “ என்று கூறினாள்.
“இதை சாப்டா , அதிக பட்சம் வயிறு வலி தான் வரும்.. அதுக்கு கான்செர் கூட வரலாம் “ என்று நவீன் நக்கல் அடித்தான்.
அப்பொழுது பள்ளி உடையோடு தீபா வெளியே வர, “இவளை எங்கு பார்த்தோம் “ என்ற திவ்யாவின் யோசனையை கலைக்கும் விதமாக, “அக்கா நல்லா இருக்கீங்களா..? நேத்து பட்ட அடி சரி ஆகிருச்சா..?” என்று தீபா வினவினாள்.
அனைவரின் கவனமும் தீபாவிடம் திரும்பியது.
“இவள் தான் நேற்று எனக்கு தண்ணீர் கொடுத்த அந்த சின்ன பொண்ணு” என்று திவ்யாவுக்கு நினைவு வர…
“சாரி மா.. நேத்து பாதி மயக்கத்துல இருந்ததால.. எனக்கு டக்குனு ஞாபகம் வரல “ என்று கூறினாள் திவ்யா.
“பரவால்ல அக்கா “ என்று தீபா கூற, “அந்த சின்ன பையன் எங்க? எப்படி இருக்கான் ?” என்று திவ்யா நலம் விசாரித்தாள் .
“அவன் என் தம்பி தான் அக்கா.. நல்லா இருக்கான்… சின்ன காயத்துக்கு லீவு போட்டுட்டான்.. நீங்க பெரிய காயத்தை வச்சிக்கிட்டே வண்டில்லாம் ஓட்டிட்டு வந்துடீங்க….” என்று வெள்ளந்தியாக கூறினாள் தீபா.
சிரித்து கொண்டாள் திவ்யா.
“இவள் தான் சரியான ஆள் “ என்று திவ்யா நினைக்க தீபாவிடம் மேலும் பேச்சை வளர்த்தாள்.
“உன் பெயர் என்ன?” என்று தன்மையாக வினவினாள் திவ்யா.
“தீபா” என்று கூறும் பொழுது , அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவளை மதித்து , திவ்யா பேசியது தீபாவுக்கு சந்தோஷத்தை அளித்தது.
“நீங்க இங்க என்ன பண்றீங்க ?” என்று கேட்டாள் தீபா.
“எனக்கு உங்க ஏரியாவை போட்டோ எடுக்கணும்” என்று கூறினாள் திவ்யா.”அப்படியே ஒரு பேட்டி எடுக்கணும் “ என்று கூறினாள்.
“பேட்டினா, அக்கா டிவி, பேப்பர்ல எல்லாம் வருமா..?” என்று ஆனந்தமாக கேட்டாள் தீபா..
திவ்யா “ஆம்” என்று தலை அசைத்தாள் .
“அக்கா இப்ப ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. சாயங்கலாமா வரீங்களா..?. நானே உங்கள எல்லா கடைக்கும் கூட்டிட்டு போறேன்.. எல்லார் வீட்டுக்கும் கூட்டிட்டு போகிறேன் “ என்று ஆர்வமாக கூறினாள் தீபா.
“கூவம் நதிக்கரையை காட்டுறேன் “ என்று பெருமையாக கூறினாள் தீபா.
“சரி” என்று திவ்யா தலை அசைக்க , தன் கைகளை அசைத்துக் கொண்டு கிளம்பினாள் தீபா.
அவள் சென்ற பின், “சாயங்காலமா?” , என்று ஸ்வாதி கேட்க.. ,
“சின்ன புள்ளைங்க நிறைய விஷயம் சொல்லுவாங்க…” என்று நவீன் கூறினான்.
“அந்த பொண்ணு என்னவோ டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி பில்டப் குடுத்துட்டு போகுது…” என்று சலித்துக் கொண்டாள் ஸ்வாதி.
“அன்று பார்த்த மூதாட்டி எங்காவது இருக்காங்களா?” என்று அங்கும் இங்கும் பார்த்தாள்.
 வேலைக்கு செல்லும் அனைவரும் இவர்களை கடந்து சென்றனர். அவர்களுள் , நேற்று விக்ரம் இண்டஸ்ட்ரியில் பார்த்த பெண்மணி பாக்கியமும் செல்வதை திவ்யா பார்த்தாள்.
“பாக்கியத்திடம் பேசுவோமா..?” என்று திவ்யா யோசித்து முடிவு எடுப்பதற்குள் சாலையை கடந்து சென்று விட்டாள்.
பாக்கியம் விக்ரம் இண்டஸ்ட்ரிக்குள் நுழைவதைப் பார்த்தாள்.
“மாலையில். இந்த அம்மா கிட்ட பேசலாம்” என்று மனதுக்குள் குறித்துக் கொண்டாள் திவ்யா.
“மற்ற வேலைகளை முடித்துவிட்டு , பள்ளி முடியும் நேரம் இங்கு வருவோம்” என்று முடிவு எடுத்து அவர்கள் வேலையை பார்க்கச் சென்றனர் .
சரியாக நான்கு மணி: இடம் : விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி
“ரமேஷ், நான் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண போறேன். எதாவது அர்ஜெண்ட்னா கால் மீ “ என்று கைகளில் கார் சாவியை சுழட்டியபடி கூறிவிட்டு கிளம்பினான் விக்ரம்.
அவன் காரில் ஏதோ மாற்றம் தெரிய காரை ஓரங் கட்டினான் .
காரை அங்கிருந்த அம்மன் கோவில் முன் நிறுத்தினான்.
ரமேஷிற்கு கால் செய்த விக்ரம், ” ரமேஷ் டையர் பஞ்சர் மாதிரி தெரியுது. வேற கார் அனுப்பனும்” என்று கூறி மொபைலில் தன் பேச்சை முடித்தான்.
நேரத்தை போக்க அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்தான் விக்ரம்.
அப்பொழுது அவன் கண் வளையத்தில் திவ்யா விழுந்தாள்.
“இவள் இங்கே தனியாக என்ன செய்கிறாள்?” என்று யோசித்தவனாக, அவள் நிற்கும் இடம் நோக்கி நடந்தான்.
அவள் யாரோடோ பேசுவது இவனுக்கு தெளிவாக கேட்டது.
“நீங்க மூணு பேரும் வர நேரமாகுமா..?
“……”
“சரி.. சரி.. அந்த பொண்ணு வர நேரம் ஆகிருச்சு . நான் அவளோட உள்ள போறேன்.. நீங்க எனக்கு கால் பண்ணுங்க” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.
திவ்யா நிமிர்ந்து பார்க்க ,அவளருகில் விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
“எப்படி இருக்கீங்க? காயம் சரி ஆகிருச்சா?” என்று விக்ரம் நலன் விசாரிக்க , “ஆம் “ என்று தலை அசைத்தாள் திவ்யா.
“இங்க என்ன பண்றீங்க?” என்று விக்ரம் வினவ,
“இதை நான் கேட்கணும் “ என்று பதிலளித்தாள் திவ்யா. அவன் பதிலளிக்க நேரம் கொடுக்காமல், “என்னை கண் காணிக்குறீங்களா..?” என்று கோபமாக கேட்டாள்.
“ஆமா.. நீங்க அழகு ராணி… உங்கள நான் பாலோவ் பண்றேன்” என்று கடுப்பாக கூறினான் விக்ரம் .
” என்னை பொறுத்தவரை அழகு முகத்தில இல்லை .. அழகு மனசுல இருக்கு.. அழகு யோசிக்கிற அறிவுல இருக்கு … அழகு நான் செய்ற செயல்ல இருக்கு.. அதனால நான் அழகு ராணி தான்…” என்று கர்வமாக கூறினாள் திவ்யா.
“அழகு உன் முகத்திலும் இருக்கு “ என்று விக்ரமின் மூளை சொன்னாலும், அதை வெளியே சொல்லும் தைரியம் விக்ரமின் உதடுகளுக்கு இல்லை.
“சரி அழகு ராணி… உன்னை நான் ஏன் கண் காணிக்கணும்?” என்று கேட்டான் விக்ரம்.
“அதை தான் நானும் கேட்கிறேன்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் திவ்யா.
இவளிடம் இப்படி பேசினால் , வேலைக்காகாது, என்று உணர்ந்து,
“ஏன் இங்கு தனியாக நிற்கிறாய்?” என்று வினவினான்.
“என் டீம் இப்ப வந்துருவாங்க “ என்று இவள் கூற தீபா அங்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.
“அக்கா உள்ள வரீங்களா..?” என்று தீபா வினவினாள்.
“சரி” என்று தலை அசைத்து, அவளுடன் கிளம்ப திவ்யா எத்தனித்தாள். திவ்யாவின் வழியை மறித்து நின்றான் விக்ரம்.
“தனியா அங்கெல்லாம் போகாத” என்று விக்ரம் கூற,
“இதை சொல்ல நீங்க யார்?” என்று திவ்யா கேள்வி எழுப்பினாள்.
விக்ரமின் கோபம் அதிகமாக அவன் பேசும் விதம் ஒருமைக்கு மாறி இருந்தது.
“நான் ரமேஷிர்க்காக உன்கிட்ட இவ்வளவு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன் “ என்று கூறினான் விக்ரம்.
” அவசியமில்லை.. நீங்க ரமேஷுக்கு தான் பாஸ் … எனக்கில்லை “ என்று தெனாவட்டாக பதில் அளித்தாள் திவ்யா.
விக்ரம் மௌனம் காக்க , ” என்ன உண்மையை கண்டுபிடிச்சிருவேன்னு பயமா இருக்கா?” என்று திவ்யா வினவினாள்.
“தேவை இல்லாமல் நான் தான் இவளை சீண்டி விட்டுவிட்டேனோ ?” என்று விக்ரம் சிந்திக்க..
“பை” என்று கூறிக் கொண்டு தீபாவுடன் திவ்யா கூவ நதிக்கரை மக்களை சந்திக்க உள்ளே சென்றாள்.
அவளை தடுக்க முடியாமல், கடுங் கோபத்தில் இருந்தான் விக்ரம்.
“அவள் எப்படி போனால் , எனக்கென்ன ?” என்று கடும் கோபத்தில் விக்ரம் முகம் சிடுசிடுக்க , அவனுக்கு வேறு ஒரு கார் வரவும் நேரம் சரியா இருந்தது.
விக்ரம் மீட்டிங் சென்றாலும் நினைவெல்லாம் திவ்யாவை சுற்றி தான் இருந்தது. “என்ன திமிர்?” என்று நினைத்துக் கொண்டான்.
மணி சரியாக பத்து ,
ரமேஷ் விக்ரமிற்கு போன் செய்தான் ,
” விக்ரம் , திவ்யா இன்னும் வீட்டிற்கு வரலை. வழக்கமா , எனக்கு போன் பண்ணிருவா… இன்னக்கி எனக்கும் போன் பண்ணலை . மொபைல் சுவிட்ச் ஆப்னு வருது..” என்று ரமேஷ் பதட்டமாக கூறினான்.
திவ்யாவின் மேல் இருந்த கோபமெல்லாம் மறைந்து விக்ரமிற்கு அவள் எங்கு சென்றிருப்பாள் என்ற சிந்தனை மேலோங்கியது.
 திவ்யாவின் தேடல் அவளை எங்கு அழைத்துச் சென்றது..?
 சில தேடல்
 சில முடிவுகளுக்கு வழி வகுத்திடுமோ…?
 தாகம் தொடரும்…….